தெம்மாங்கு 19
நள்ளிரவு சரியாக மூன்று முப்பது. மனதை எங்கோ தொலைத்து விட்டுப் பொடி நடையாக மலைக்குச்சி கிராமத்திற்குள் நுழைந்தான் குமரவேலன். ஊருக்குள் வந்ததும் நண்பனின் நினைவு வெகுவாக வாட்டியது. அவனுடனான நினைவுகளை அழிக்கமுடியாத அளவிற்குக் கோடிக்கணக்கான பேரானந்தங்கள் ஒவ்வொரு கால் தடத்திலும் நிறைந்திருந்தது.
ஐந்து வயதுப் பாலகனின் பாதம், முப்பது வயதைத் தொட்டும் தனியாக நடந்ததில்லை. இதுதான் முதல் முறை, அவன் இல்லாமல் இப்படியான தருணம் இவனுக்கு. பெருமூச்சு விட்டபடி தன் இல்லத்தின் முன்பு நிற்க, தந்தையானவன் முகம் தான் முதலில் வந்தது.
தான் செய்து கொண்டிருக்கும் பாவம், மகன் தலையில் விழப் போகிறது என்பது தெரியாமல் அனைத்தையும் நிகழ்த்தி விட்டார் பேச்சியப்பன். பெற்ற மகனைப் பிரிக்க நினைத்து, முழுவதுமாக அன்புக்கரசனிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். இனி அவரே நினைத்தாலும் கூட குமரவேலனை நெருங்க முடியாது.
இதில் அநியாயமாகச் சிக்கிக் கொண்டது இந்திரா மட்டுமே. அன்னை மீது துளியும் கோபம் இல்லை என்றாலும், அவரை வைத்துக் கூட தந்தையானவனை நெருங்கக் கூடாது என்பதற்காகத்தான், மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒதுக்கி வைத்திருக்கிறான். நண்பனுக்கு, ‘நண்பன்’ என்ற கடமை தலைக்கு மேல் இருப்பதால், தாய்க்குப் ‘பிள்ளை’ என்ற கடமை கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது.
இந்தக் கதையில் எத்தனையோ மனிதர்களின் உணர்வுகள் மறைந்தது போல இந்திராவின் உணர்வும் மறைந்து விட்டது. அவர் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் கண்ணீரும் கஷ்டங்களும் ஏராளம்.
மனம் நோக அங்கிருந்து மெல்ல நகர்ந்தவன், பத்து நிமிடத்தில் சந்தானம் வீட்டு முன்பு நிற்க, அந்தத் திண்ணை காலியாக இருந்தது.
விரக்தியான புன்னகையோடு அன்புக்கரசன் வீட்டிற்குள் நுழைந்தான். கல் வீடு, கதவைச் சாற்றாமல் திறந்து இருக்க எட்டிப் பார்த்தான். அமர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி. மீண்டும் ஒரு முறை பெருமூச்சு விட்டவன், அவள் தூக்கம் கலையாதவாறு மெல்லக் கதவைச் சாற்றி விட்டான்.
குடிசை வீட்டிற்குள் நுழைந்தவன் தாத்தாவின் பக்கத்தில் படுக்க, “எங்க ராசா போன?” விழி திறக்காமல் கேட்டார் மாணிக்கம்.
“தூங்கலயா தாத்தா?”
“எப்படி ராசா தூக்கம் வரும்?”
“உங்க உடம்பு இருக்க நிலைக்கு, இவ்ளோ நேரம் தூங்காம இருக்குறது ரொம்பத் தப்பு தாத்தா. பிரச்சனையைப் பார்க்கப் போறோம்னு முடிவாகிடுச்சு. அப்புறம் எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு. மனசுல இருக்க குப்பையைத் தூக்கி அடிச்சிட்டு நிம்மதியா தூங்குங்க தாத்தா.”
“நிம்மதியா தூங்கிடனும்னு தான் நினைக்கிறேன்.”
“தாத்தா…” என எழுந்தமர்ந்தவனை விழி திறந்து பார்க்காது,
“ஒன்னு கேட்டா மறைக்காம உண்மையச் சொல்லுவியா?” கேட்டார்.
“உங்ககிட்ட நான் எப்போ பொய் சொல்லி இருக்கேன் தாத்தா.”
“இப்பச் சொல்லுவியோன்னு பயமா இருக்கு ராசா.”
“என்னாச்சு தாத்தா உங்களுக்கு? எதுக்கு ஏதோ மாதிரிப் பேசுறீங்க.”
“மனசுல என்னென்னமோ ஓடுது ராசா. என் பேரன் என்னை விட்டுப் போனதை விட, உனக்கு நான் செஞ்ச பாவத்தை ஜீரணிக்க முடியல.” என்றவர் விழி திறந்து,
“என்னை மன்னிப்பியாய்யா…” என்றவர் குரல் வேதனைக்கு உள்ளாகியிருந்தது.
“நானும் பார்த்துட்டே இருக்கன், யாரோ மாதிரிப் பேசுறீங்க. உங்க மேல எப்படித் தாத்தா நான் கோபப்படுவேன். என்னை நீங்க புரிஞ்சு வச்சுக்கிட்டது அவ்ளோ தானா? வாய்க்கு வாய் பேரன்னு சொன்னதெல்லாம் பொய்யா?”
“எதுக்குய்யா கோபப்படுற?” என எழுந்தமர்ந்தவர், “என் தங்கமான பேரன், ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழாம போனதுக்கு நான் தான் காரணம் என்றதை எப்படி ஜீரணிக்க முடியும்.” என்றவரின் பேச்சுப் புரியவில்லை.
பேரன் முகத்தில் தோன்றும் கேள்விகளைப் புரிந்து கொண்டவர், “ஏதோ ஒரு வேகத்துல தாலியக் கட்டுன்னு சொல்லிட்டேன். நேரம் போக யோசிக்கும்போது தான், உன் அத்தை பொண்ணைக் கட்டிக்க ஆசைப்பட்டது இந்தக் கிழவன் நியாபகத்துக்கு வந்துச்சு. நான் அவசரப்பட்டதுல இன்னொரு பொண்ணோட வாழ்க்கை பலியாகிடுச்சே.” என்றார்.
எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தான் குமரவேலன். பேரனின் அமைதிக்குப் பின்னால் இருக்கும் உண்மை அவரைச் சுட்டது. அவசரப்பட்டு, எந்தப் பாவமும் செய்யாத தெய்வானை வாழ்க்கையைக் கெடுத்த குற்ற உணர்வு முள்ளாய் குத்தியது.
“நீயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.”
“சொல்ற நிலைமையில அங்க நான் இல்ல தாத்தா.”
“மன்னிச்சிடுயா… அந்தப் பிள்ள கிட்டயும் மனசார மன்னிப்புக் கேட்கணும்.”
மாணிக்கத்தின் கையைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடியவன், “இப்படி ஒரு விஷயம் உங்க மூலமா நடக்கணும்னு இருக்கு தாத்தா. அதை யார் தடுத்து இருந்தாலும் நடந்திருக்கும். விதிய நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாது.” என்றான்.
“தேனிசை ரொம்ப நல்ல பொண்ணு. தனக்கு நடந்ததை ஏத்துக்க முடியாம, எல்லாத்தையும் உன்கிட்டக் காட்டுது. அந்தப் பிள்ளை என்ன பேசினாலும் எனக்காகப் பொறுத்துக்கப்பா. இந்தக் கிழவன் இல்லனா கூட அந்தப் பொண்ணக் கை விட்டுடாத.”
“குழந்தையைப் பத்தி யோசிச்ச என் புத்தி, அந்தப் புள்ளையைப் பத்தி யோசிக்கல தாத்தா. ஊருக்கு முன்னாடி கொடுக்கக் கூடாத ஒரு களங்கத்தைக் கொடுத்துட்டேன். அந்த நேரம் எதுவுமே புரியல தாத்தா. இப்ப யோசிக்கும் போது தான் பண்ண பாவத்தோட வீரியம் புரியுது. நான் பண்ண பாவம், எந்தக் கோவில் குளம் ஏறி இறங்கினாலும் கழியாது.”
அவன் தலையை வருடிவிட்டவர், “விதியை நம்மளால ஒன்னும் பண்ண முடியாதுன்னு இப்பதான ராசா சொன்ன…” என்றவர் அவன் தலை மீது கை வைத்து,
“எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு ராசா. இந்தக் கஷ்டமெல்லாம் விலகி, சந்தோஷமா சிரிக்கப் போற நாள் வரும் பாரு. அன்னைக்கு உன் நண்பன் ஆத்மா மனசாரச் சிரிச்சி இந்த பூமியை விட்டுப் போகும். அதுவரைக்கும், கண்ணுக்குத் தெரியாம அவன் உன் பக்கத்துலயே இருப்பான். கூட இல்லன்னு வருத்தப்படாம அவனுக்கும் சேர்த்து நீ வாழு ராசா. நீ அப்படி வாழுற வாழ்க்கை தான் இந்தக் கிழவனுக்குப் போடுற மன்னிப்பு.” என்றவர், கன்னத்தைப் பதமாகத் தட்டி,
“நல்லா இருப்ப ராசா.” என்றார்.
பாரமாக இருக்கும் இதயத்தை வெளிக் காட்டாது, “சரி தாத்தா. பேசுனது போதும், கொஞ்ச நேரம் தூங்குங்க. காலைல எந்திரிச்சு சமைக்க வேணாம். நான் கடையில மூணு பேத்துக்கும் இட்லி வாங்கிட்டு வந்துடுறேன்.” என்றவன் அவரைப் படுக்க வைத்து விட்டு, வெகு நேரம் கழித்துக் கண் மூடினான்.
***
ஒரே நிலையில் கை கால்களைக் குறுக்கிப் படுத்திருந்தவள், இடுப்பு எலும்பு உடைந்து போகும் அளவிற்கு வலி எடுத்தது. அந்தத் தொந்தரவு தூக்கத்தை நிறுத்த, கண் திறந்தவளுக்கு முன்னால் அன்புக்கரசனின் புகைப்படம் சிரித்துக் கொண்டிருந்தது. இமைக்காது சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு வலி அதிகரிக்க எழுந்து நின்றாள்.
கடிகாரத்தின் முள்களைப் பார்த்திட, ‘விடிஞ்சு இவ்ளோ நேரமா ஆகுது.’ எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கதவைத் திறந்தாள்.
தாத்தாவைத் தேடிச்சென்றவள், குமரவேலன் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு அப்படியே திரும்ப, அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவன் கண் திறந்தான். மணியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவன்,
“என்னம்மா…” என அனுசரணையாகக் கேட்க, முகம் பார்க்காமல் உள்ளே சென்று விட்டாள்.
முகம் கை கால்களைக் கழுவித் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டவன், “தாத்தா நைட்டு தூங்க ரொம்ப லேட் ஆயிடுச்சு. நல்லாத் தூங்கட்டும், எழுப்பிடாதம்மா. முக்குக் கடையில போய் டிபன் வாங்கிட்டு வந்துடுறேன்.” எனத் தன்னைப் பார்க்காதவளிடம் உரைத்து விட்டுச் சென்றான்.
எப்போது விடியும் என்று காத்திருந்து தங்கள் வேலையைக் கவனிக்க ஆரம்பித்த ஊர் மக்கள், அவன் வருவதைக் கண்டு விசித்திரமாகப் பார்த்தார்கள். ஒவ்வொருவரின் பார்வையையும் கடந்து வந்தவன், சந்தானத்தைக் கடக்க முடியாமல் நிற்க, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேடியோவைத் தடவிக் கொண்டிருந்தார்.
நகர மறுத்த கால்களைக் கட்டாயப்படுத்தி நகர்த்தியவனைக் கண்டும் காணாமலும் சந்தானம் நகர, மூவருக்கும் காலை உணவை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அவன் வருவதற்குள் குளித்து முடித்து அமர்ந்திருந்தாள் தேனிசை தேவி. அவளுக்குத் தேவையான தட்டு, தண்ணீரைக் கொண்டு வந்து வைத்து, “சாப்பிடும்மா” என்றான்.
அவளோ அங்கிருந்து வெளியேறப் பார்க்க, “ம்மா… நான் போறேன். அன்புக்குப் பசிக்கும், சாப்பிடும்மா.” வெளியேறினான்.
குடிசை வீட்டிற்குள் வந்தவன் மாணிக்கத்தைத் தொந்தரவு செய்யாது ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். ஒரு மணி நேரம் கடந்ததும் அவளிடம் சென்றவன், சாப்பிடாமல் இருக்கும் உணவைப் பார்த்து, “என் மேல இருக்க கோபத்தை குழந்தைகிட்டக் காட்டாதம்மா. அது பாவம், பசிக்குதுன்னு சொல்ல முடியாம உனக்குள்ள துடிச்சுக்கிட்டு இருக்கும். எந்தத் தாயும் தன் பிள்ளை பசியில துடிக்குறதைப் பொறுத்துக்க மாட்டா…” என்று விட்டு வெளியே வந்தான்.
அவன் சென்றதும், தன் பிள்ளைக்காகச் சாப்பிட்டவள் தட்டை எடுத்துக் கொண்டு எழும் நேரம், “குடும்மா, நான் எடுத்துட்டுப் போறேன்.” என அதை வாங்கிக் கொண்டான்.
நேரம் பத்தைக் கடந்தது. அதுவரை நல்ல உறக்கத்தில் இருந்த மாணிக்கத்தை எழுப்பச் சென்றான். எப்படிப் படுத்து இருந்தாரோ, அப்படியே அசையாது படுத்திருந்தார். நின்று குனிந்தவாறு உசுப்பியவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எழுப்ப முடியாது, “தாத்தா…” எனப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு குரல் கொடுத்தான்.
குரலுக்குப் பதில் கொடுக்காமல் படுத்திருந்தவரை, நான்கைந்து முறை எழுப்பிப் புருவங்கள் முடிச்சிட, “தாத்தா…” வேகமாக உசுப்பினான்.
“தாத்தா…தாத்தாதா….” என்றவனின் சத்தம் கேட்டு அங்கு வந்த தேனிசை தேவி, “என்னாச்சு?” கேட்க,
“தாத்தாவை எழுப்பிக்கிட்டு இருக்கன், எந்திரிக்க மாட்டேங்குறாரு.” என்றான்.
“தாத்தா…”
“தாத்தா…”
இருவரும் அழைத்தும் அவரிடம் மாற்றம் இல்லை. அவரைத் தாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு, “ஒழுங்கா எந்திரிங்க.” என்றவனின் மனதிற்கு மெல்லப் புரிய ஆரம்பித்தது, மாணிக்கத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று.
அதை நம்ப மறுத்தவன் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்தவளுக்குப் புரிந்து போனதால் அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள். தேனிசை தேவியின் அழுகைக்குப் பின் தான், அவரை எழுப்புவதை நிறுத்தினான். அவளின் ஒப்பாரிக் குரலில் அக்கம் பக்கத்தினர் கூடினார்கள்.
மாணிக்கத்தின் இறப்புச் செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. விஷயம் அறிந்து வந்த சந்தானத்தின் விழிகள் பனிக்க, இந்திரா ஓடி வந்தார். கௌரவ நண்பர்களுக்கும் செய்தி பறந்தது. பேச்சியப்பனுக்குச் சிறு வருத்தம் இருந்தாலும், காட்டிக் கொள்ளவில்லை. பவானி இன்னும் மிச்சம் என்ன இருக்கிறது என்று கதி கலங்கி அழ,
“எதுக்கு இப்போ ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க. நம்ம வீட்லயா எழவு விழுந்துடுச்சு?” கல் நெஞ்சம் படைத்தவனாகக் கூறினான் கருப்பன்.
அதில் வெகுண்டெழுந்த பவானி, “எந்தப் பிள்ளையும் பெத்தவகிட்ட மட்டும் சாபம் வாங்கக் கூடாது. இருந்தாலும் சொல்றன், நல்லாக் கேட்டுக்கடா. நீ பண்ண பாவத்துக்குக் கொடிய வேதனையை அனுபவிப்ப. ஒரு குடும்பத்தையே செதச்சிட்டியே படுபாவி…” என்றவரைப் பார்த்து நக்கலாகப் புன்னகைத்தான், தாய் சாபம் பலித்தால் எந்த அளவிற்குத் தாக்கப்படுவோம் என்பது அறியாது.
***
நண்பனை நெருங்காமல் ஒதுங்கி அமர்ந்திருந்தவன், இந்த முறை அந்த முதியவரை ஒட்டியே அமர்ந்திருந்தான். தேனிசை தேவி என்ற ஒருத்தி ஒரு சொந்தத்தையே உருவாக்கி இருந்தாள். ஆயிரம் பேர் கூடி அழுதால், எம்மாதிரியான உணர்வுகள் அங்கு ஆட்கொள்ளுமோ, அதைத் தனி ஒருத்தியாக அந்த முதியவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் பழகியது சிறிது காலம் தான் என்றாலும், அலாதி அன்பைப் பெற்றுவிட்டார் மாணிக்கம். மனதில் குற்ற உணர்ச்சி அளவில்லாமல் மேலெழுந்து கொண்டிருந்தது. ஒருவேளை, அன்புவின் வாழ்வில் தான் வராமல் இருந்திருந்தால், இந்த இரு உயிர்களும் மலைக்குச்சி கிராமத்தில் அநியாயமாகப் போயிருக்காது என்பதை மட்டும் தான் சொல்லிக் கொண்டு அழுதாள்.
மாணிக்கத்தால் இனித் தாக்குப் பிடிக்க முடியாது. போதும் என்றவரை நொந்தவர், கடைசியாக நேற்று நடந்த பஞ்சாயத்தில் முழுவதும் உடைந்து விட்டார். இனி அவரை என்ன செய்தும் தேற்ற முடியாது என்று அறிந்த கடவுள், நிரந்தரமாக ஓய்வு கொடுக்க அழைத்துக் கொண்டார். யாருக்கு இந்த மரணம் எப்படியோ, அவருக்குப் பெரும் வரம் தான். பல இழப்புகளைப் பார்த்து, தள்ளாத வயதில் நாள்களை எண்ணிக் கொண்டிருந்தவருக்குத் துயரங்கள் ஏராளம். நாளுக்கு நாள் கண்ணீர் சிந்திக் கஷ்டப்படுவதற்குப் பதில் இறைவனின் மடியில் துயில் கொள்வதே அவருக்கான விடுதலை.
தள்ளி நின்று அழுது கொண்டிருந்தார் இந்திரா. அவரோடு முத்துமாரியும் நின்றிருக்க, பவானியை அனுப்பவில்லை அந்த இரு அரக்கர்கள். தனி ஒரு ஆளாக, நடக்க வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் சந்தானம். உடல் இளைத்துத் தோல் சுருங்கி, முடி நரைத்துக் காணப்பட்ட மாணிக்கத்திற்குக் கடைசி அலங்காரங்கள் நடைபெற்றது.
அனைத்தையும் எடுத்துச் செய்தான் குமரவேலன். குழந்தையைக் காரணம் காட்டி சந்தானம் மறுக்க, “எனக்குச் சோறு போட்ட உசுரு இது. இதுக்கு நான் செய்யலன்னா, நல்லாவே இருக்க மாட்டேன்.” என்றவன் தன் தாத்தாவிற்கு என்ன செய்வானோ, அதை முழுதாகச் செய்தான்.
கடைசியாக அவரை வழியனுப்பி வைத்தாள் தேனிசை தேவி. அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுற்றி நின்று தேற்ற, தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார் குமரவேலனின் தாய். இவளைச் சிறுவயதில் இருந்தே தெரியும் அவருக்கு. வளர்ந்த பின் தான் இவளுடனான பேச்சு வார்த்தை சற்றுக் குறைந்தது.
அன்புக்கரசன் பக்கத்தில் பதமாகப் படுக்க வைத்து விட்டு, ‘ரெண்டு பேருக்கும் எப்படி மனசு வந்துச்சு. கடைசில ரத்த பந்தம் தான் சேரும்னு சொல்லாம சொல்லிட்டீங்கல்ல. என் தலையில இவ்ளோ பெரிய பாரத்தைப் போட்டுட்டு, அமைதியா வந்து படுத்துக்கிட்டீங்க. இந்தக் குமரன் எப்படித் தாக்குப் பிடிப்பான்னு யோசிச்சீங்களா? என்னைக்கா இருந்தாலும், இந்தக் கேள்வியைக் கேட்க நான் வருவேன். எனக்காகக் காத்திருங்க…’ என மனதில் பேசிக் கொண்டிருந்தான்.
***
ஆடி அடங்கிய அந்தப் பகல் பொழுது, இரவை நிம்மதியாக விட்டுவிட்டுச் சென்றிருக்க, அந்த வீட்டில் இருவர் மட்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. வெகு நேரமாக ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருந்தார்கள். அவள் கல் வீட்டிலும், இவன் குடிசை வீட்டிலும் அன்றைய இரவைக் கழித்தார்கள். விடியற்காலை நெருங்கும் நேரம் தண்ணீரின் சலசலப்புக் காதில் விழுந்தது, உள்ளே இருந்தவளுக்கு. தொடர்ந்து தொந்தரவு செய்யும் அந்தச் சத்தத்தில், விழிகளைக் கசக்கியவள் கதவைத் திறந்து வெளியில் வர, குளித்துக் கொண்டிருந்தான் குமரவேலன்.
அவன் செயலில் புருவங்களைச் சுருக்கினாள். வாளியில் நிறைந்திருந்த தண்ணீரை அப்படியே எடுத்துத் தலையில் ஊற்றிக் கொண்டிருந்தான். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை தண்ணீரையும் தலையில் ஊற்றி வீணாக்கியவன், “பனி அதிகமா இருக்கு, உள்ள போம்மா…” என்று விட்டுக் குடிசை வீட்டுக்குள் புகுந்து கொண்டான்.
‘அடிக்கும் குளிரில், ஒரு வாளித் தண்ணீருக்கே உடல் தாங்காது. இவன் எதற்கு இத்தனைத் தண்ணீரை உடலில் ஊற்றினான்?’ என்ற சிந்தனையில் அப்படியே நின்றிருக்க, சிறிது நேரத்தில் வெளியில் வந்தான். அவன் வருவதற்குள் ஓரளவிற்கு வெளிச்சம் வந்துவிட்டது. வந்தவனை வெகு நாள்கள் கழித்து ஏறெடுத்துப் பார்த்தாள் தேனிசை.
சவரம் செய்து சுத்தமாக வைத்திருந்தான் முகத்தை. பளிச்சென்ற ஆடையை உடுத்தி இருந்தான். கடைசியாக மலைக் கோவிலில் அவனை இப்படிப் பார்த்தது. அலங்கோலமான நிலையில் சுற்றித் திரிந்தவனின் தோற்றம் பழைய நிலைக்கு மாறி இருக்க, இன்னும் அவளுக்குள் கேள்வியைக் கொடுத்தது.
“பனியில உட்கார்ந்தா நோவு வரும்மா...” என்று அந்த எண்ணத்தைக் கலைத்தான்.
குமரவேலன் வந்து நிற்கும் தோரணையில் யோசனைக்கு ஆளானவள், அவனின் தெளிவான பேச்சில் சந்தேகக் கண்ணைத் திறந்தாள். அதை அறியாதவன், அவளை உள்ளே அனுப்புவதில் குறியாக இருந்தான்.
“ஒன்னுக்கு ரெண்டு சாவு இந்த வீட்ல விழுந்து இருக்கு, இப்படி வந்து நிக்கிற. எப்பவுமே நீ ஒரு சுயநலவாதின்னு காட்டிக்கிட்டே இருக்க. எல்லாம் முடிஞ்சு போச்சு. உனக்கும் எனக்கும் சம்பந்தமான ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்ல. இதுக்கு மேலயும் நீ இந்த வீட்ல இருக்க வேண்டாம். தயவு செஞ்சு கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன், இங்க இருந்து போயிடு.”
“ஏம்மா காலைலயே…”
“சும்மா இந்த வாம்மா, போம்மான்னு நடிக்காத. உனக்கெல்லாம் குற்ற உணர்ச்சியே இருக்காதா? எப்படி இந்த மாதிரி மினிக்கிட்டு வந்து நிக்க முடியுது. ராத்திரியெல்லாம் உன்கூடப் படுத்திருந்த மனுஷன் இன்னைக்கு இல்ல. அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம நிக்குற. உன்ன மாதிரி ஒருத்தனை எப்படித்தான் நம்பி சோறு போட்டாங்களோ?”
அவளுக்குப் பதில் சொல்ல விரும்பாதவன், அன்புக்கரசன் உபயோகித்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் செயல் உச்சகட்ட எரிச்சலைக் கொடுத்தது தேனிசைக்கு. எப்படியாவது அவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
அன்பு இல்லாது தனியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவனைக் கண்டு எழுந்து நின்றார் சந்தானம். குமரனின் புதுப்பொலிவு, சற்றுப் புருவம் சுருக்க வைத்தது அவரை. எழுந்து நின்றவரைப் பார்த்தும், பார்க்காதது போல் கடந்து சென்றவன் என்ன நினைத்தானோ, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து வந்தான்.
தன்னை நோக்கி தான் வருகிறான் என்பதைக் கண்டு கொண்டவர், “என்னப்பா?” என வினவ, அவரைக் கடந்து சென்றவன், பலமுறை உடைத்தும் வாங்கி வைத்து மினிக்கிய அந்த ரேடியோவை ஆன் செய்தான்.
“கர்ணன் போலே கடமைய மதிச்சு…
தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்…
பாட்டுக்காரன் பாரதி சொன்ன…
கண்ணனப் போலவே எனக்கிங்கு பொறந்தவன்…
கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா…
என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய…
நன்றிக் கடன் தீர்க்க என்ன கொடுப்பேன்…
உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்…
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா… டேய்…
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்டா…
ரோஷம் அதிகம்டா…
அத விட பாசம் அதிகம்டா…
அவர்களுக்காக இருந்த பாடல், இனி அவனுக்காக அவனுடன் இருந்தவனுக்கும், சேர்த்து ஒலிபரப்பாகும் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டு, அங்கிருந்து நடையைக் கட்டினான்.
போகும் முன் சந்தானத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்ல, அவன் உருவம் மறையும் வரை பலத்த யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார் சந்தானம். குமரவேலனின் இந்தச் செயலுக்குப் பின் இருக்கும் காரணத்தை யூகிக்க முடியவில்லை அவரால். இவ்வளவு எளிதாக மீண்டு வருவான் என்று நம்பிக்கை கொள்ளாதவர், இதன் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை அறிய முயன்று தோற்றுப் போனார்.
குமரவேலனின் சூட்சம புத்திக்குப் பின் சிதையப் போகும் அரக்கன் யாரோ?
***
வெளியில் சென்றவன் ஏழு மணி போல் வீட்டிற்கு வந்தான். மலைக்குச்சி கிராமத்தில் ஏழு மணிக்கு மேல் தான் குழாய்களில் தண்ணீர் வரும். இருந்த மொத்தத் தண்ணீரையும் வீணடித்து விட்டுச் சென்றவனை, வசைபாடிக் கொண்டே குழாயில் குடத்தை வைக்க, அதில் கை வைத்தான் குமரவேலன்.
தேனிசை தேவி நிமிர்ந்து பார்க்க, “நான் பிடிக்கிறன், உள்ள போம்மா…” என்றவன் பேச்சைக் கேட்க விரும்பாது தண்ணீர் பிடித்தாள்.
“சொல்றன்லம்மா… அங்க போய் உட்காரு, நான் பார்த்துக்கிறேன். இந்த வேலை எல்லாம் இப்ப நீ செய்யக்கூடாது.” வம்படியாக வாங்கித் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான்.
அந்த வீட்டைக் கடந்த சில பேர், இந்தக் காட்சிகளைக் கண்டு விமர்சனம் செய்ய, கண்டு கொள்ளாமல் காலியான அனைத்திலும் தண்ணீரை நிரப்பி வைத்தான். வரும்பொழுது பால் வாங்கி வந்தவன் அடுப்பை எரிய வைத்துப் பால் காய்ச்சினான்.
சமைக்க உள்ளே வந்தவள், “உன்னப் போன்னு சொன்னதுக்கு அப்புறமும் வம்படியா எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க. உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று கத்தினாள்.
“கத்தாதம்மா, குழந்தைக்கு வலிக்கப் போகுது.”
“என்னை வெறுப்பேத்திப் பார்த்துட்டு இருக்கியா. உனக்கு இங்க என்ன வேலை இருக்கு? யாரும் இல்லன்னு ஆட்டம் போட நினைக்காத. நீ நினைக்கிறது ஒருநாளும் நடக்காது.”
“நீ போய் உட்காரும்மா. சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன்.” என்றவன் கொதித்த பாலை அவள் கையில் கொடுக்க, தூக்கி அடித்தாள் வாசலுக்கு. அது பறந்து சென்றது.
***
இதுவரை சமையலறைப் பக்கம் கூடச் செல்லாதவன், மாணிக்கம் செய்வதைப் பக்கத்தில் இருந்து பார்த்ததால், பால் காய்ச்சினான். சமையல் எல்லாம் எட்டாத தூரம். தேனிசை தேவியைச் சமைக்க வைக்கவும் முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தவன், தோசை ஊற்ற அடுப்பில் கல் வைத்தான். அவை சூடேறும் முன் ஊற்றிய மாவு வீணாய் போய்விட, அதை எடுக்கப் போய் கரண்டி எல்லாம் மாவானது. அடுப்பை நிறுத்தியவன் கல்லில் கை வைக்க, “அம்மா!” என்று அலறித் துடித்து நகர்ந்தான்.
அந்தச் சத்தம் கேட்டும் எட்டிப் பார்க்கவில்லை தேனிசை. துள்ளி நகர்ந்தவன் கையை ஊதி எரிச்சலைக் குறைக்க முயன்றான். அதுவோ குறைய மாட்டேன் என்றது. குறையாத எரிச்சலை ஓரம் ஒதுக்கி வைத்தவன், துணியைக் கொண்டு அந்தக் கல்லை வெளியில் எடுத்துச் சென்று சுத்தமாகக் கழுவி வந்தான்.
சூடு பட்ட கை, இந்த முறை எச்சரிக்கையாகத் தோசை ஊற்றியது. சுவையில்லாத ஒரு சட்னியை அரைத்தவன், அவளிடம் கொண்டு போய்
கொடுக்க, அவன் மீது தட்டி விட்டாள். அனைத்தும் அவன் ஆடையில் பட்டுக் கீழே சிந்தியது. இதற்காவது பதிலளிப்பான் என்று தேனிசை முறைக்க, சிறு சலனமும் இன்றி அனைத்தையும் சுத்தம் செய்தான்.
தெம்மாங்கு ஒலிக்கும்…