1,750 views

(நேத்து யாருக்கும் ரெஸ்பான்ஸ் பண்ண முடியல மன்னுச்சு. தொடர்ந்து வீட்ல ஒரே விசேஷமா வந்துட்டே இருக்குங்க. நேத்து எல்லாம் போன கையில எடுக்க கூட முடியல. லைக் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் ❤️❤️❤️❤️❤️)

அலுவலகம் வந்திருந்தவன் அன்றைய பணிகளை கவனித்துக் கொண்டிருக்க இப்பொழுதெல்லாம் மதிய நேரம் கை கால்கள் நடுங்குவதில்லை. மாறாக மாலை வேலை மட்டுமே லேசாக திணற ஆரம்பிப்பான். அந்த நேரம் சரியாக மனைவியின் தரிசனம் கிடைத்துவிட, தடுமாற்றம் சரியாகும் வரை அவளே மருந்து.

மனதில் இருக்கும் அத்தனை துயரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மனைவியிடம் சேர்த்தவன் மனதை சுத்தமாக்கி கொண்டான். இவ்வளவு சீக்கிரமாக அதிலிருந்து மீள்வோம் என்று எதிர்பார்க்காதவன் தன்னைத்தானே அதிசயத்தோடு பார்க்கிறான் சில நாட்களாக.

“என்னங்க தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்றவாறு உள்ளே வந்தவள் திருநீற்றை வைத்தாள் அவன் நெற்றியில்.

“ஒன்னும் இல்ல லயா சும்மா முன்னாடி நடந்ததெல்லாம் யோசிச்சு பார்த்துட்டு இருந்தேன்.”

“தேவையில்லாத விஷயங்களை யோசிக்கிறது நல்லது இல்லங்க.”

“அதையெல்லாம் இனி எப்பவும் நினைக்க மாட்டேன் லயா. நீ வந்ததுல இருந்து என்னென்ன மாற்றம் வந்து இருக்குன்னு யோசிச்சு பார்த்தேன் வேற ஒன்னும் இல்ல.”

“அப்படி என்ன மாற்றம் வந்துடுச்சாம்.” என்றவள் இருக்கையில் அமர, தடுத்தவன் சுவற்றோடு தள்ளி தரையில் அமர வைத்தான்.

புன்னகையோடு மடி கொடுத்தவளிடம் தன்னைக் கொடுத்தவன் கண்மூடி படுத்துக்கொண்டான். தலை வருடிக் கொண்டிருந்தவள், “உங்கள ரொம்ப கட்டாயப்படுத்துறனா?” என்றாள் மெதுவாக.

“அப்படி பண்ணாலும் தப்பு இல்ல லயா.”

“தப்புதாங்க! உங்களோட விருப்பம் இல்லாம உங்கள மாத்தணும்னு நினைக்கிறது ரொம்ப பெரிய தப்பு தான்.”

“என் விருப்பு வெறுப்பு எல்லாமே உன் வசம்.”

“நல்லா பேச கத்துக்கிட்டீங்க.” என்றவள் முகத்தை படுத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து, “உண்மையா லயா. இனி நான் தனிப்பட்டு எதையும் செய்யப் போறது இல்ல செய்யவும் மாட்டேன். போதும் நானே முடிவெடுத்து நானே சிக்கிக்கிட்டது.” என்றான் கடந்த காலத்தை மனதில் வைத்து.

“உங்க வாழ்க்கைக்கான முடிவ நீங்கதாங்க எடுக்கணும். ஒரு தடவை அது தப்பா போயிடுச்சுன்னு பின் வாங்க கூடாது. உங்க தப்ப நீங்களே சரி பண்ணிட்டு முன்னேற பாருங்க.” என்றவளுக்கு அவனும் புன்னகையாக சம்மதம் சொல்ல,

“ஒரு இடத்துக்கு போகணும் என்னை கூட்டிட்டு போறீங்களா?” கேட்டாள்.

“அது என்ன லயா போறீங்களா? கூட்டிட்டு போங்கன்னு சொல்லு.”

அவன் சொன்னது போல் உத்தரவு போட்டவள் அவனோடு பயணப்பட்டாள் ஒரு இடத்திற்கு. பள்ளி முன்பு வாகனம் நின்றது. எதற்கு இங்கு என்று அவன் கேள்வியோடு பார்க்க, “உள்ள போனா நீங்களே தெரிஞ்சுப்பீங்க.” என்று அழைத்துச் சென்றாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!” உத்தரவு பெற்று கணவனுடன் உள்ளே சென்றவள் தலைமை ஆசிரியரிடம் அறிமுகம் செய்து வைத்தாள் அவனை.

“ஹலோ மிஸ்டர் தரணீஸ்வரன்!” என தலைமை ஆசிரியர் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, இன்னும் ஒன்றும் புரியாத மன நிலையில் அமர்ந்திருந்தான்.

“பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சொல்லித் தரணும்னு நினைச்சதே பெரிய விஷயம் மிஸ்டர் தரணீஸ்வரன். உங்கள மாதிரி சில பேர் மட்டும் தான் பொது நலமா யோசிப்பாங்க. உங்க மூலமா இங்க  படிக்கிற ஏதாவது ஒரு மாணவராது நல்ல நிலைமைக்கு வந்துட்டா போதும். அடுத்தடுத்து வர குழந்தைகளுக்கு அது ஒரு பெரிய உத்வேகமா இருக்கும்.” என மனமார வாழ்த்தினார்.

எல்லாம் தெரிந்தவன் போல் அவரிடம் புன்னகைத்தவன் திரும்பி மனைவியை ரகசியமாக பார்க்க, “உங்கள தான் பாராட்டணும் மேடம். நான் வந்து கேட்டதும் உடனே சம்மதம் சொன்னதுக்கு.” என்றாள்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு? உங்க கணவரோட சர்டிபிகேட் எல்லாத்தையும் பார்த்ததுக்கு அப்புறமும் சந்தேகப்பட முடியுமா. அதுவும் காசு எதுவும் வாங்காம இலவசமா சொல்லி தரன்னு சொல்லும்போது எப்படி வரும்?” என்றவர் புன்னகைக்க,

“என்னை இருந்தாலும் இவரு இப்போ ஈட்டி எறிதலை விட்டு ரொம்ப வருஷம் ஆகுது. இவர் மேல முழு நம்பிக்கை வச்சு உங்க பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர சம்மதம் சொன்னதுக்கு திரும்பவும் ஒரு தடவை நன்றி சொல்லிக்கிறேன். நீங்க கொடுத்த வாய்ப்ப நாங்க சரியா பயன்படுத்திப்போம். ஒருத்தர் இல்ல என் புருஷன் மாதிரி நிறைய பேர் உருவாகுவாங்க.” என்ற வீட்டுக்காரியின் வார்த்தையில் திகைத்தவன் உணர்வுகளை கொட்டாமல் அமர்ந்திருந்தான்.

அதை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தவள் தலைமை ஆசிரியர் அறியாமல் கணவனின் கையோடு கைகோர்த்துக்கொண்டு தைரியம் கொடுத்தாள். கண்ணில் நீர் கோர்த்தாலும் அதை மற்றவர்களுக்கு காட்டாமல் சாமர்த்தியமாக நடித்தான் தரணீஸ்வரன்.

அவளின் தம்பி அருண் படிக்கும் மேல்நிலைப் பள்ளி அது. அவளுக்கு அங்கு நன்கு பழக்கமான ஆசிரியர்கள் இருக்க கணவனுக்காக வாய்ப்பு கேட்டு நின்றாள். முதலில் யோசித்தவர்கள் தரணீஸ்வரனின் திறமையை பார்த்து சம்மதித்தார்கள். கம்பெனியை மாமியாரின் உதவியோடு பார்த்துக் கொள்ள முடிவெடுத்தவள் கணவனை அவன் ஆசைப்பட்ட கனவை நிறைவேற்றிக் கொள்ள அனுப்பி வைக்க முடிவெடுத்தாள்.

பல வருட இடைவெளி என்பதால் முயன்று தன்னை நிரூபித்துக் கொள்ள காலதாமதம் எடுக்கும். அதுவரை அவன் மனம் சோர்ந்து போகாமல் இருக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாள். குழந்தைகளின் உத்வேகத்தில் அவனையும் அறியாமல் மாறுவான் என்ற நம்பிக்கையோடு. மொத்தமாக பேசி முடித்தவர்கள் பள்ளியை சுற்றி வந்தார்கள். 

“அத்தை அடிக்கடி சொல்லுவாங்க நீங்க ஈட்டி தூக்கிட்டு போகும் போது கண்ணுல அப்படி ஒரு நெருப்பு இருக்கும்னு. ஒரு தடவை கூட அதை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல. பார்க்கணும்னு ஆசையா இருக்கு. முடிஞ்சா உங்கள மாதிரி இங்க இருக்க அத்தனை பேரையும் மாத்தி காட்டுங்க. தரணி ஒருத்தனை பார்க்க முடியாத ஏக்கத்தை பல பேர் கண்ணுல பார்த்து தீர்த்துக்கணும்.” என்ற மனைவிக்கு பதில் கொடுக்கும் நிலையில் இல்லாதவன் கார் இருக்கும் இடத்திற்கு ஓடிவிட்டான்.

அவனின் மனநிலையை புரிந்து கொண்டவள் பின்னால் வர, கார் பயணப்பட்டது கடற்கரையை நோக்கி. மாலை இருட்டில் கடல் அன்னை முன்பு அமர்ந்தவன், “இவ்ளோ அன்பை கொடுக்காத லயா எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.” என்றவனை அழைத்துச் சென்றாள் நீரிடம்.

இருவரின் கைகளும் இணைந்து கொள்ள, கடல் அன்னை கால் நனைத்து சென்றது. சில்லென்ற காற்று பாதம் வழியாக மேனியில் ஊற, பாரம் குறைந்தது அவனுக்கு. விளையாடி ஓய்ந்தவள்,

“எதுக்குங்க குற்ற உணர்ச்சி? என் புருஷனுக்கு இதெல்லாம் செய்ய வேண்டிய கடமையும் உரிமையும் எனக்கு இருக்கு. உங்களோட கடந்த கால வாழ்க்கை எனக்கு ஒரு கரும்புள்ளி தான். ஆனா, உங்க காதல் அதை மாத்தும்னு நம்புறேன். கூடவே என் காதல் வாழ்க்கை முழுக்க என்னை மட்டுமே நினைக்க வைக்கும்னு  நம்புறேன். பழைய காலம் இனிமே நமக்குள்ள வராம இருக்குறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்று பேசும்பொழுது அவளுக்குள் லேசாக வலி உண்டாகத்தான் செய்தது.

கடவுள் கொடுத்த வாழ்க்கை இது. கிடைக்கும் முன் ஆயிரம் போராட்டங்கள் செய்து விடுவது நன்று. கிடைத்த பின் வேண்டாம் என்று ஒதுக்குவதை விட தனக்கென்று வந்ததை தனக்காக வைத்துக் கொள்வது சாமர்த்தியம் என்று தீர்க்கமான முடிவை எடுத்து விட்டாள். அத்தோடு தரணியின் காதலுக்கு தான் மட்டுமே சொந்தக்காரி ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்குள் உருவாக, கடந்த கால எண்ணத்தை முழுவதுமாக வாழ்க்கையில் இருந்து அகற்ற முடிவு செய்தாள்.

பொழுதை கழித்தவர்கள் மனநிறைவாக வீடு வந்து சேர்ந்தார்கள். ஜீபூம்பாவோடு சேட்டை செய்தவன் அறைக்குள் நுழைய, மனைவி காத்திருந்தாள் தன்னோடு சேர்த்துக் கொள்ள. வந்தவன் புன்னகையை மட்டுமே சிந்திக் கொண்டு அவளோடு படுக்க, நேற்றும், பகல் பொழுதில் ஆரம்பித்த காதலும் விட்ட…குறையாக இருக்கிறது என்ற எண்ணம் இருவருக்குள்ளும்.

தயக்கத்தோடு முதல் அடியை எடுத்து வைத்தான் தரணீஸ்வரன். நெஞ்சோடு தன்னை நுழைத்துக் கொண்டவன் கைகள் மட்டும் காதலுக்காக ஏங்கியது. காலையில் விட்ட கூச்சம் பெண்ணுக்குள் மீண்டும் பிறப்பெடுக்க, இரவு நேரம் அதற்கு வலு சேர்த்தது. இரண்டாம் அடியை அவனே எடுத்து வைக்க… முழு ஒத்துழைப்பு கொடுத்தாள் அகல்யா. வெட்கத்தை மறந்து இருவரும் முத்தத்தில் வேகம் எடுக்க, திணறி போன மூச்சுக்காற்று செத்து மடிந்தது இருவருக்குள்ளும்.

மனைவியை தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தவன் முழு வேகத்தை கையில் எடுக்க, உடல் முழுவதும் அவனின் மூச்சுக்காற்று  ஆடையாக மாறியது. அவளின் மூச்சுக்காற்று தன் மேனிக்கு வேண்டுமென்று முடிவெடுத்தவன் ஆடையை தூக்கி எறிய, காதல் களம் இருவரையும் வரவேற்றது.

மனைவியின் வெட்கம் பெரும் தொந்தரவாக இருக்க, கன்னம் கடித்து விரட்டி விட்டவன் தனக்கான தேடுதலை நெற்றியில் இருந்து ஆரம்பித்தான். இதழுக்கு வந்தவன் ஒருமுறை அவளை பார்க்க… காதல் தெரியும் கண்ணில் மோகம் ஊர்ந்தது.

தானும் அதே மோகத்தை சிந்தி போதை ஏற்றியவன் உடல் உரசி காதல் வானில் சிறகடிக்க செய்தான் அவளை. காதல் அதிகரிக்க இதழின் முத்தத்தை அவளே கையில் எடுத்தாள். மனைவியின் முத்தத்தில் திணறியவன் முழு ஒத்துழைப்பு கொடுக்க, திடீரென்று ஜீபூம்பா குரைக்கும் ஓசை கேட்டது.

அலறி அடித்து எழுந்தவன் அவன் இருக்கிறானா என்று தேட, ஈருயிர் ஓருடலாய் மாறும் நேரம் கணவன் விலகியதை ஏற்க முடியாமல் முகம் சுருங்கினாள். அறைக்குள் இல்லாத செல்லப்பிராணியை ஒரு முறை பார்த்து விட்டு வந்தவன் கடுப்போடு படுக்க, இனியும் நம்பினால் காலை பொழுது வரை கண் முழிக்க வேண்டும் என்று அலுத்துக் கொண்டவள் அவனை மெத்தையில் தள்ளி ஆள துவங்கினாள்.

காதலும் மோகமும் ஆணுக்கு மட்டுமா சொந்தம்! பெண் இல்லாமல் அவை உருவாக ஆணுக்கு வழி ஏது! கணவன் தொடுகையில் உடல் சிலிர்த்தவள் தன் தொடுகையால் அவனை தோற்கடிக்க ஆரம்பித்தாள். ஆடவனிடம் வரும் வெட்கம் புதிதாக இருக்க, அவனின் தேவையையும் சேர்த்து தீர்த்து வைத்தாள்.

திருமணத்தால் வாழ்வை இழந்தவனும் திருமணத்தால் தன் வாழ்வே இழந்து விட்டது என்று வருந்தியவளும் தங்களுக்கான வாழ்க்கையை துவங்க, இரவெல்லாம் கண் முழித்தார்கள் நேற்று போல் அல்லாமல் காதல் தொந்தரவால்.

“லயா” என்றவனுக்கு பதில் கொடுக்கும் நிலையில் பெண் இல்லாததால் இருக்கும் நெருக்கத்தை இன்னும் அதிகரித்து பதில் கொடுக்க, “லவ் யூ” என்றான்.

தலை உயர்த்தியவள் காதலோடு ” லவ் யூ ஈஷ்வா” என்றிட, தன்னை வசப்படுத்திய மனைவியை வசப்படுத்தினான் முத்தத்தால். அவள் எடுக்கும் பொழுது உண்டாகாத கூச்சம் அவன் கொடுக்கும் பொழுது ஏற்பட, நாணம் என்ற சொல் அவளுடைய அர்த்தமானது. இல்லற வாழ்க்கை வெகு சிரமங்களுக்கு பிறகு இருவரின் சம்மதத்தோடு அமைய, கடவுளின் சித்து விளையாட்டு ஆரம்பமானது.

***

“இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போறீங்க?” காதல் பாடத்தை இரவெல்லாம் கற்ற பின்னும் எழ மனமில்லாமல் மனைவி நெஞ்சோடு படுத்திருந்தவன் அவளின் ஒவ்வொரு விரல்களையும் பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்.

“இதுக்கு மேல படுத்துட்டு இருந்தா அவ்ளோ தான்… எந்திரிங்க!”

அவள் பேச்சை கண்டு கொள்ளாதவன் மனைவியின் விரல்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதை முறைத்துக் கொண்டே தூரம் நகர்த்தியவள்,

“என்னங்க இது விளையாட்டு! முதல்  நாளே ஸ்கூலுக்கு லேட்டா போன நல்லா இருக்காது. இன்னும் நீங்க ட்ரைனிங் கொடுக்கப் போறதை அத்தை மாமா கிட்ட வேற சொல்லாம இருக்கோம். என்ன நினைப்பாங்கன்னு  எனக்கு  ரொம்ப யோசனையா இருக்கு. இதுல நீங்க வேற சேட்டை பண்ணிட்டு இருக்கீங்க.” என்ற மனைவியின் கோப வார்த்தையை கேட்டவன் அலட்டிக் கொள்ளாமல் தூரமாக இருந்த அவள் கைகளை பற்றி ஒவ்வொரு விரலாக முத்தமிட்டான்.

“ஈஷ்வா!” என அவள் பல்லை கடிக்க,

“மனுசன தொல்லை பண்ணாம இருடி. நானே சீக்கிரமா விடிஞ்சிடுச்சுன்னு கவலையில இருக்கேன் நீ வேற.” என்ற தரணீஷ்வரன் அவள் மீது படுத்து கொண்டு,

“இன்னைக்கு டே நல்லா இல்லயாம் லயா. அதனால எல்லா வேலையும் நாளைக்கு பார்த்துப்போமா.” என்றான் கொஞ்சலோடு.

வேகமாக தள்ளிவிட்டவள் பற்களை கடித்துக் கொண்டு, “யாரு சொன்னா நல்லா இல்லைன்னு.” கேட்டாள்.

“நீ தான் லயா…”

“நானா?”

“ம்ம்!” என்றவனை அவள் குழப்பமாக பார்க்க, கொஞ்சிக் குலாவிக்  கொண்டு மனைவி மீது மீண்டும் படுத்தவன், “நேத்து ராத்திரி  ஈஷ்வா நாளைக்கு நாள் நல்லா இல்ல என் கூடவே இருங்கன்னு சொன்னல லயா.” என்றவன் பேச்சு நம்பும் படியாக இல்லை.

அவனை விட்டு விலகி படுத்தவள், “எனக்கு சொன்ன மாதிரி ஞாபகம் இல்லையே!” சந்தேக கண்ணை திறக்க,

“ப்ச்! என்ன லயா நீ…” என குரல் குலாவியது. வெட்கமே இல்லாமல் மீண்டும் அவள் மேல் படுத்தவன், “நேத்து நம்ம அது… பண்ணும் போது சொன்னியே ஞாபகம் இல்ல.” என்றிட, முறைப்பு அதிகமானது அவளிடம்.

வெட்கம் இல்லாதவன் அதையெல்லாம் உதாசினம் செய்து அவளின் காதோரம், “நான் கூட நீ சொல்லும் போது இந்த இடத்துல இப்படி கிஸ் பண்ணிட்டு இருந்தனே ஞாபகம் இல்ல…” என்றவன் ஞாபகப்படுத்துவதாக செய்து காட்டினான் இதழை நோகடித்து.

இப்போதுதான் அவனின் திட்டம் புரிய சிக்கிக்கொண்ட புள்ளி மானாய் துள்ளி குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டாள். எழுந்தவள் அவன் கைக்கு சிக்காமல் அடித்துக் கொண்டிருக்க, “ஏற்கனவே நீ பண்ணதால ரொம்ப டயர்டா இருக்கேன் லயா அடிக்காத.” என்று கண் அடித்தான்.

“பொறுக்கி!”  என்ற மனைவிக்கு அவன் உதடு குவித்து உம்மா கொடுக்க,

” குடிகார!” என்றாள்.

“ராத்திரி அடிச்ச சரக்கு தான் இன்னும் தெளியாம இருக்கு.” குறும்பு பேச்சுக்களை ஏடாகூடமாக வீச,

“சைக்கோ!” என்றவள் நகர்ந்தாள்.

பாய்ந்து சென்று பிடித்துக் கொண்டவன், “லயா ஒரே ஒரு ரவுண்டு .” என முத்தமிட செல்ல, வாயில் ஒரு அடி வைத்தாள்.

கோபித்துக் கொண்டவன், “இப்ப மட்டும் நீ தரல நான் எங்கயும் போக மாட்டேன்.” என வீஞ்சிக்கொண்டான்.

கண்டுகொள்ளாமல் குளியலறை சென்றவள் பின்னே ரோஷத்தை விட்டு சென்றவன், “சேர்ந்து குளிக்கலாமா லயா.” என்று நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.

அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன், “குளிச்சிட்டு  ப்ரெஷா ஸ்டார்ட் பண்ண போறமா.” என்று சிரிக்க, கேவலமான பிறவியை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.

இவ்வளவு சாமர்த்திய தந்திர பேச்சுக்களை கொடுத்த பின்னும் மசியாத மனைவியை திட்டிக் கொண்டே அறையை விட்டு வந்தவன் பெற்றோர்களின் அறைக்குள் நுழைந்தான். மகனைப் பார்த்த தயாளன் புன்னகையோடு காலை வணக்கத்தை தெரிவிக்க, வெளியேற பார்த்தார் ஆதிலட்சுமி.

“மாம்!” அவரை நகர விடாமல் தடுத்தவன், “இனிமே நான் கம்பெனிக்கு அதிக நேரம் வரமாட்டேன்.” என்றான்.

“ரொம்ப நல்லது.” என்று விட்டார் உடனே.

அன்னையை முறைப்பதற்கு பதில் தந்தையை முறைத்தவன், “என்னவாம் இப்ப இவங்களுக்கு? அடிபட்ட நீங்களே நல்லா சிரிக்கிறீங்க. இவங்க என்னமோ சீரியல் வில்லி மாதிரி மூஞ்ச திருப்பிட்டு போறாங்க. ஞாயமா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இவங்க பேசுன பேச்சுக்கு நான் தான் மூஞ்சிய திருப்பிட்டு போகணும்.” என்றான் முறைப்பை விடாமல்.

மனைவி பேசியது தெரியாது என்பதால் தயாளன் விவரம் கேட்க, “எங்கயாது போய் சாவுன்னு சொன்னாங்க.” என்றான் அந்த நாளை நினைத்து வருத்தத்தோடு.

கசங்கிய மனதோடு ஆதிலட்சுமி தன் மகனை பார்க்க, மனைவியை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தார் தயாளன். தன்னை அந்த நிலைமையில் பார்த்தவன் மனம் ஏற்கனவே நொந்து போய் இருக்க மனைவியின் பேச்சு எப்படி இருந்திருக்கும் என்பதை நன்கு உணர்ந்தார் மகன் முகத்தில் தெரியும் வருத்தத்தை வைத்து.

அன்று ஏதோ ஒரு சூழ்நிலையில் பேசியவர் இன்று அதற்காக வருத்தப்பட, “லயா மட்டும் இல்லன்னா உங்க மகன் இன்னைக்கு உங்க முன்னாடி நின்னு இருக்க மாட்டான்…நான் என்ன தப்பு செஞ்சாலும் தாங்கி நிற்கிற நீங்களே என்னை சாவுன்னு சொன்னதுக்கு அப்புறம். நான் இத்தனை வருஷமா உங்களுக்கு செஞ்ச கஷ்டத்துக்கு சேர்த்து வைச்சு ஒரே வார்த்தையில பழி வாங்கிட்டிங்க.” என்றான்.

மகனின் வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாத ஆதிலட்சுமி அவனை அணைத்துக் கொள்ள, “இப்ப மட்டும் எதுக்கு வரீங்க? போங்க…” என்று தள்ளி நின்றான்.

அழுது கொண்டிருந்தவர் மகனின் செயலில் லேசாக சிரிக்க, “சிரிங்க! இந்த தரணிய பார்த்து நல்லா சிரிங்க. இவன் இனிமே மீண்டு வரமாட்டான்னு நினைச்சு தான இத்தனை நாள் பேசாம இருந்தீங்க. ஐயா நிலைமையே இப்ப வேற.” என்றான் பனியனின் கழுத்து பகுதியை தூக்கிவிட்டு.

பெற்றோர்கள் இருவரும் பிள்ளையின் பேச்சை புரியாமல் கேட்டுக் கொண்டிருக்க, “என்ன அப்படி பார்க்குறீங்க? நான் இன்னைல இருந்து உங்க ஓட்ட கம்பெனிக்கு வரமாட்டேன் ஸ்கூலுக்கு போறேன்.” என்ற தரணீஸ்வரன் அன்னையின் முன்பு கெத்தாக நின்று,

“எதுக்கு தெரியுமா? ட்ரைனிங் கொடுக்க. இந்த தரணி மாதிரி அடுத்த தலைமுறைய உருவாக்க.” என்றவன் முகத்தில் தெரியும் கம்பீரத்தை பார்த்து வருடங்கள் ஆகிவிட்டது இருவருக்கும்.

“அந்த ஓட்ட கம்பெனிய தான் உன் பொண்டாட்டி பேருக்கு மாத்தி கொடுங்கன்னு கெஞ்சிட்டு இருந்த மறந்துடாத.” மன மகிழ்வில் மகனை வாரினார் ஆதிலட்சுமி.

அன்னையை முறைத்தவன், “சொல்லி வைங்க அப்பா இந்த மாதிரி எல்லாம் நக்கல் பண்ண கூடாதுன்னு. என் பொண்டாட்டி மட்டும் அங்க வேலை பார்க்கலைன்னா உங்க கம்பெனிக்கு என்னைக்கோ பால் ஊத்தி இருப்பீங்க. போனா போகுதுன்னு உங்க கௌரவத்தை காப்பாத்த அவளை அனுப்பி வைக்கிறேன்.” நேற்று வரை எப்படி இருந்தோம் என்பதை மறந்து அவன் சவடால் பேசினான்.

பெற்றோர்கள் இருவரும் அவனை முறைத்து பஸ்பம் ஆக்கினார்கள். கவலை கொள்ளாதவன், “உங்க கிட்ட பேசிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல. என் பொண்டாட்டி எனக்காக வெயிட்டிங் பாய்ய்ய்” புன்னகையோடு விடை பெற்றான். பெரும் நிம்மதி இருவருக்கும். எப்படி தன் மகனை பார்க்க ஆசைப்பட்டார்களோ அப்படியே அவன் இருக்க, மருமகளை மனதில் வைத்து கொண்டாடினார்கள்.

***

“அத்தை!” மருமகளின் வார்த்தை தேனாக காதில் பாய்ந்தது மாமியாருக்கு. சந்தோஷத்தை தனக்குள் அடக்கி கொண்டவர் எதுவும் இல்லாதது போல் பார்க்க, “உங்க பையன் எல்லாத்தையும் சொல்லிட்டாதா சொன்னாங்க. முதல் நாள் வேலைக்கு போக போறாங்க நீங்க கூட வந்தா நல்லா இருக்கும்.” என்றாள் தயக்கத்தோடு.

இதைத்தான் கேட்க வந்தான் தரணீஸ்வரன். அதற்குள் பேச்சு நகைப்பு கலந்த சங்கடப் பேச்சாக மாறிவிட ஆசை பட்டதை கேட்காமல் சென்று விட்டான். அறைக்கு வந்தவனின் முக மாறுதல்களை கவனித்தவள் என்னவென்று விசாரிக்க, அவனின் ரகசிய பக்கம் மனைவி என்பதால் அனைத்தையும் மறைக்காமல் ஒப்புவித்தான்.

“இதுக்கு எதுக்குங்க மூஞ்சி இப்படி இருக்கு? எனக்கு பிடிக்கவே இல்ல.” என இரண்டு கன்னத்தையும் இழுத்து சிரிப்பது போல் வைத்தவள்,

“வாங்கன்னு உத்தரவு போடுங்க. வரலன்னா தூக்கிட்டு போங்க. உங்க கிட்ட அவங்க வீம்பு எடுபடாது.” என தைரியம் கொடுத்தாள்.

“வேணாம் லயா ஏற்கனவே நிறைய கஷ்டப்படுத்திட்டேன். அவங்களே மனசு மாறி வந்தா வரட்டும்.” மனமே இல்லாமல் கிளம்பிக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் மகிழ்வை பார்க்க எண்ணியவள் மாமியார் இடத்தில் தன் எண்ணத்தை வைக்க, “புருஷனுக்கு நல்லா ஒத்து ஊத ஆரம்பிச்சிட்ட. இப்படியே போனா அவன் ஏறி உன் தலைக்கு மேல உக்காந்துடுவான். புருஷன முந்தானைல முடிஞ்சிக்கிற வழிய பாரு.” சம்பந்தமே இல்லாமல் பேசியவர் நகர பார்த்தார்.

“அதுக்காக தான் உங்கள கூப்பிட்டு அவரை வசியப்படுத்த பார்க்கிறேன்.” என்று விட்டாள் பட்டென்று.

வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருந்தார் அசையாமல் மருமகளை. அவளும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, ‘சிங்கமும் சிறுத்தையும் ஒரே வீட்ல இருக்கு போலயே!’ இவர்களின் சம்பாசனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த தயாளன் மனதில் நினைத்துக் கொண்டார்.

கிளம்பி வந்தவன் முகம் சோர்வாக இருந்தது. அதை கவனித்த ஆதிலட்சுமி கணவருக்கு செய்கை செய்துவிட்டு மகனுக்கு முன்னால் நின்றார் பள்ளியில். அதை அறியாதவன் தந்தையிடம் மட்டும் சொல்லிக் கொண்டு மனைவியோடு கிளம்ப, “சிரிங்க” என்றாள்.

“ஒருமாதிரி இருக்கு லயா. அம்மா என்னை நம்பல அதான் இப்படி எல்லாம் பண்றாங்க. இழக்க கூடாத அன்ப இழந்துட்டேன்.” என்றவன் இன்னும் சோர்வாக ஆரம்பித்தான்.

காரை தொந்தரவு இல்லாத இடத்தில் நிறுத்த சொல்லியவள்… “என் ஈஷ்வா கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன் இந்த மாதிரி தலை குனிய கூடாதுன்னு. உங்க அம்மா கால பிடிக்க கூட தயங்க கூடாதுங்க. உங்களால அவ்ளோ கஷ்டப்பட்ட அப்ப கூட விட்டுக் கொடுக்காதவங்க இப்ப கொடுத்துடுவாங்கன்னு எப்படி நம்புறீங்க.

இப்படியே விலகி இருந்தா மகனோட மாற்றம் இன்னும் நல்லா இருக்கும்னு அவங்களையும் ஏமாத்தி உங்களையும் ஏமாத்துறாங்க. இது தெரிஞ்சும் வருத்தப்படுறது நியாயம் இல்லங்க. இவ்ளோ வருத்தப்பட்டு முதல் நாள் வேலைக்கு போனா நல்லா இருக்காது. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க ஸ்கூல்ல நான் பேசுகிறேன்.” என்றவளுக்கு உடனே மறுப்பு தெரிவித்தான்.

அவள் தைரியம் கொடுத்து நாளை போகச் சொல்ல, “அம்மா வராதது ரொம்ப வருத்தம் தான் லயா அதுக்காக எல்லாம் பின் வாங்கிட மாட்டேன். அவங்களுக்கு என்னை ஸ்போர்ட்ஸ்ல பார்க்க ரொம்ப பிடிக்கும். அம்மாவ சந்தோஷப்படுத்த இது எனக்கு நல்ல வாய்ப்பு. சோ மிஸ் பண்ண மாட்டேன்.” என்று புன்னகைக்க,

“இதான் ஈஷ்வா” எனக் கொஞ்சினாள் கன்னம் கிள்ளி முத்தமிட்டு.

அவளுக்காக புன்னகை முகமாக பள்ளி முன்பு நின்றவன் மனம் எல்லாம் சிரிக்க ஆரம்பித்தது அன்னையைப் பார்த்து. ஓடி சென்று கட்டிக் கொண்டவன் “லவ் யூ மாம்!” என்றிட,

“உன்னை இந்த மாதிரி பார்க்கணும்னு பல நாள் கனவு தரணி. அம்மாவ இந்த தடவை ஏமாத்தாம இரு.” என்றதோடு அவரின் வாழ்த்தையும் தெரிவிக்க, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் சிரித்த முகத்தோடு விடை கொடுத்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
80
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *