211 views

அத்தியாயம் 19

“ஹலோ காஜல்!” என்று நெடுநாட்களாக அவளுடன் பேசியது போல், உரிமையாகப் பெயர் சொல்லி அழைத்தான் தன்வந்த்.

“என் நம்பரை நீங்க சேவ் பண்ணி இருக்கீங்க தானே? இவ்ளோ நாளாக கால் – யே பண்ணலை?” என்று வினவினாள்.

இதை அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை.

“ஆமாம் என்கிட்ட இருக்கு. ஆனால் டைம்யே கிடைக்கல காஜல். இப்போ தான் நீயே கால் பண்ணிட்டியே! என்ன விஷயம் சொல்லு?” என்று சாதாரணமாக கேட்டான்.

“சரி விடுங்க. நான் இப்போ கால் பண்ணதுக்கு காரணம்!” என்று ஆரம்பித்தவளை இடைமறித்து,

“என்ன இந்தக் கல்யாணத்தை நிறுத்தனுமா?” என்றான் தன்வந்த்.

அவனுடைய இந்த அதிரடியைக் கேட்டு அதிர்ந்தவள்,

“இல்லை ங்க! நம்ம கல்யாணத்தில் எனக்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது. எல்லாமே உங்க இஷ்டம். உங்க வீட்டில் இருக்கிறவங்க விருப்பம் தான். ஆனால், நம்மளோட கல்யாணத்தை எந்த சமூக வலைதளத்திலும் வெளிப்படுத்தக் கூடாது!” என்று தடாலடியாக கூறினாள் காஜல்.

“ஏன்? நான் ஒரு பெரிய பிஸினஸ்மேன் மா! இப்படியெல்லாம் நிபந்தனை போட்டால், சரி வராதே!”

“இது ஒன்னு தான் எனக்கு இருக்கிற ஒரே ஒரு விருப்பம் தன்வந்த்!” என்று உறுதியாக கூறி விட்டாள்.

திருமணத்திற்குப் பிறகு அவளைக் கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அவனுக்குமே பிரித்வியின் கல்யாணத்திற்குப் பிறகு அடுத்து தன்னுடையது நிகழப் போவதால்  பத்தோடு பதினொன்றாகப் போய் விடும் என நினைத்தான் தன்வந்த்.

“இது எனக்கு ஓகே தான் காஜல்!” என்று சம்மதித்து விட்டான்.

“வேறெதுவும் இல்லை” என்று அவனிடம் பேசி விட்டுப் பெற்றோரிடம் சென்றாள்.

“அவர் என்னோட கண்டிஷனுக்கு சரின்னு சொல்லிட்டார் ப்பா!”

அது என்ன நிபந்தனை என்பதையும் அவர்கள் இருவரிடமும் சொன்னாள் காஜல்.

“அதெப்படி முடியும் டா! உங்க கல்யாணத்துக்குப் பெரிய ,  பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க. வீடியோ கவரேஜ் எல்லாம் இருக்குமே? அதையெல்லாம் வேண்டாம்னு நம்மாலேயே சொல்ல முடியாதே!” என்று  ஆதங்கப்பட்டார் மாதுரி.

காசிநாதனுமே, “ஆமாம் காஜல்! நீ மாப்பிள்ளை கிட்டயும் அப்படி சொல்லியிருக்க கூடாது.அவரால் இதுக்கு எப்படி ஒத்துக்க முடிஞ்சது?” என்று மகளிடம் கேட்டார்.

“அவர் உடனே சரின்னுட்டார் ப்பா! நீங்களும் ஓகே சொல்லுங்க ப்ளீஸ்!” என்று பெற்றோரிடம் கெஞ்சினாள்.

“நாங்க மாப்பிள்ளைக் கிட்ட பேசிட்டு சொல்றோம்” என்று தன்வந்த்திடம் செல்பேசியில் பேசப் போனார் காசிநாதன்.

சிறிய உரையாடலுக்குப் பிறகு, திரும்பி வந்தவர்,

“அவரும் அதைத் தான் சொல்றார் மாது” என்று மனைவியிடம் வருத்தத்துடன் கூறினார்.

“அப்போ சமுதாயத்தில் முக்கியமானவங்களை எப்படி கூப்பிட்றதுங்க?” என்றார் மாதுரி.

“யாரையுமே கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டார்”

“என்னங்க இது? அவரும் இவளோட இஷ்டத்துக்கே பேசறார்!”

“ஒன்னும் பண்ண முடியாது மாது! நாம பொண்ணுகிட்ட எதையுமே சொல்லாமல் தான, அவர் தான் மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணோம். அது போல, இவங்களும் இப்படி நடந்துக்கிறாங்க! அவ்ளோ தான்! கவலையை விடு ம்மா” என்றார் காசிநாதன்.

பிரித்வியின் திருமணத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பிறகும், திருமணத்திற்கு மறுப்பு சொல்லாத மகளின் இந்த ஆசையை மட்டும் நிறைவேற்ற முடிவெடுத்தனர் காஜலின் தாயும், தந்தையும்.

இங்கு தன்வந்த்தின் வீட்டில்,

சதாசிவம், “ஹேய் தன்வந்த்! உன்னோட கல்யாணத்துக்குத் தான் எல்லா பெரிய மனுஷர்களையும் கூப்பிட்டு என்னோட பிஸினஸை அடுத்த அடிக்கு எடுத்துட்டுப் போகலாம்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன்.நீயும் , அந்தப் பொண்ணும் சேர்ந்துக்கிட்டு, அதைக் கலைச்சு விட்ருவீங்க போலயே?” என்று மகனைக் கடிந்து கொண்டார்.

“அதுக்கு நான் உங்களுக்கு வேற வழி சொல்றேன் ப்பா! ஆனால் என் கல்யாணம் நான் சொன்னா மாதிரி தான் நடக்கனும்!” என்று முடிவாக கூறி விட்டான் தன்வந்த்.

“அவன் தான் சொல் பேச்சுக் கேட்கவே மாட்டானே ங்க! அப்படியே செய்வோம்” என்றார் அவரது துணைவி வானதி.

“இல்லை வானு! பெரிய சிக்கல் வரும். உனக்கே தெரியும்ல?” என்று அர்த்தத்துடன் கூறினார் சதாசிவம்.

“அப்பா! அவங்களை எல்லாம் நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க யார் கிட்டயும் விளக்கம் சொல்லனும்னு தேவையில்லை” என்று அனைத்தையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான் அவர்களுடைய மகன்.

அதிரூபா தன்னிடம் கூட இன்னும் பேசவில்லையே! அவளுக்கு என்ன தான் ஆயிற்று? இந்த நேரத்தில் அவளைப் பார்க்க வீட்டிற்குப் போகலாமா? காஜலுடைய திருமணத்தைப் பற்றி மட்டும் அதிரூபாவிற்குப் புலனத்தில் தெரிவித்து விடுவோம் என்று அதைச் செயல்படுத்தினாள் யாஷிகா.

அதற்குள் அவளுடைய குடும்பத்தில் திடீரென்று ஒரு சில பிரச்சனைகள் முளைத்து விட்டதால், இறுதி வரை அதிரூபாவையும் , பிரித்வியையும் சந்திப்பதற்கான வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவே இல்லை.

காஜலுடைய திருமணம் உறுதி செய்யப்பட்டதை தோழி யாஷிகாவின் மூலம் அறிந்து கொண்ட அதிரூபாவிற்கு நிம்மதியாகத் தான் இருந்தது. இனி அவள் பிரித்வியை நினைத்து வருந்த மாட்டாள் என்று சிந்தித்தாள்.

🌸🌸🌸

திருமணம் ஆன பிறகு தான், அவளிடம் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டதற்கான காரணத்தைக் கூறினான் தன்வந்த்.

தன்னுடைய தொழில் உலக எதிரியான பிரித்வியைப் பற்றியும் மனைவியிடம் கூறினான். காஜலின் ஒரு தலைக் காதலைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது.

அதற்குப் பிறகு தான் ஒரு நாள் தன்னையறியாமல், கல்லூரிக் காலத்தில்   தனக்கு இருந்த காதலைப் பற்றிக் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள் காஜல்.

அதைக் கேட்டதும்,தன்வந்த்திற்கு மனைவி மீது தற்போது எந்த கோபமும் ஏற்படவில்லை.அந்தக் காதல் பிரித்வியின் மேல் எழுந்தது என்பதையும் அறிந்து கொண்டவன், அவளிடம் மூச்சு விடவில்லை.

அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது மட்டுமே முக்கியமான கவலையாக இருந்தது.

இதற்கிடையில் தான் பிரித்வியின் மீது அதீதமான துவேஷத்தை வளர்த்துக் கொண்டான் தன்வந்த்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால் கூட கணவனுடைய துவேஷம், கோபம் எல்லாம் குறையும் என்பதற்காகவே சிகிச்சை எடுத்துக் கொண்டு  இருக்கிறாள் காஜல்.

🌸🌸🌸

“சார்! உங்களுக்கும் உடம்பு சரி ஆயிடுச்சு. அந்த தன்வந்ததைத் நம்ம இடத்துக்குத் தூக்கிடலாமா?” என்று கேட்டான் பாரத்.

“நான் அவனை நேரடியாக சந்திச்சுப் பேசனும் பாரத். அதுக்கு ஏற்பாடு பண்ணு. ஓகே சொல்லலைன்னா, நானே கால் செய்து கேட்கிறேன்” என்றான் பிரித்வி.

“நானே கேட்டுட்டு, உங்களுக்குக் கூப்பிடறேன் சார்!” என்று தன் முதலாளியின் முன்னாலேயே தன்வந்த்திற்கு அழைத்தான் பாரத்.

“ஹலோ” என்ற குரலைக் கேட்டதும் ,

“சார்! நான் பிரித்வி சாரோட உதவியாள். என் பேர் பாரத்” என்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஓஹ்! உங்க சார் சொல்லி தான எனக்குக் கால் செய்து இருக்க? விஷயத்துக்கு வா” என்று அலட்சியமாக கூறினான் தன்வந்த்.

“சார் உங்களை சந்திக்க நினைக்கிறார். எப்போ அரேன்ட்ஜ் பண்ணலாம்னு கேட்க சொன்னார்”

“மிஸ்டர்.பாரத்! நானும் சமுதாயத்தில் ரொம்ப பிரபலமானவன் தான். உங்க சாரையே எனக்குக் கால் பண்ண சொல்லுங்க. இடத்தை நான் அவர்கிட்ட தான் சொல்வேன்” என்று இவன் கூறவும்,

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரித்வியோ நக்கலாகப் புன்னகைத்தான். அத்துடன் அவனிடம் சரி என்று சொல்லுமாறு கூறினான்.

“ஓகே சார்.கூடிய சீக்கிரம் பிரித்வி சாரே உங்களுக்குக் கால் பண்ணுவார். தாங்க்யூ” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் பாரத்.

“நமக்குத் தோதான இடமாகப் பார்த்துச் சொல்லு பாரத்! அவனை எல்லாம் நம்ப முடியாது.எதுக்கும் எப்பவும் உஷாராக இருங்க” என்று அவனுக்கு ஆணையிட்டுக் கிளம்பி விட்டான் பிரித்வி.

🌸🌸🌸

“அப்படி காஜலைப் பொறாமைப்பட வைக்கனுங்கிறதுக்காக காதலைச் சொல்லல. அதே மாதிரி, அந்த சூழ்நிலையையும் உபயோகம் செய்யலை. அப்போ நான் தான் தப்பாகப் புரிஞ்சுக்கிட்டேனோ?” என்று இந்தக் கோணங்களிலும் யோசித்துப் பார்த்தாள் அதிரூபா.

ஒரேயடியாக கணவனைக் குற்றம் சாட்டாமல், அவன் கூறியதையும் செவிமடுத்து இருக்கலாம் என்று இப்போது அதிரூபாவிற்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.

காஜலின் திருமணம் தன்வந்த்துடன் நிகழ்ந்ததைப் பற்றி தன்னிடம் மறைத்தது மட்டும்  இலேசாக அவளுக்கு  வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதே சமயம், இல்லத்திற்குச் செல்லும் முன், பாரத் தனக்குப் புலனத்தில் அனுப்பிய இடத்தின் பெயரைப் பார்த்தான் பிரித்வி.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்