514 views

ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியாமல் திண்டாடிப் போனான் ரகுவரன். அதே திண்டாட்டத்தோடு, “யோவ்… யாருய்யா நீங்க எல்லாம்? என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சு பண்றீங்களா, புரியாம பண்றீங்களா. இதுக்காகவா வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் எல்லாத்தையும் உருவாக்கி வச்சிருக்காங்க.” நொந்து கொண்டு நியாயம் கேட்டான்.

ஒன்றும் அறியாத பிள்ளை போல் முகத்தை வைத்த பெரியவர், “எல்லாரையும் ஒன்னு சேர்க்கிற இடம் அதுதான மருமகனே” என்றார்.

“நீ ஒன்னு சேர்த்து கும்மாளம் அடிக்க என் குடும்ப கதை தான் கிடைச்சுதா.” என அடிக்க பாய்ந்தவன் தன் செயலை நிறுத்தி விட்டு, “ஆமா, அது என்ன அன்னைக்கு மாதிரி லைவ் கால்?” சந்தேகம் கேட்டான்.

குழைந்து வளைந்து நின்ற அழகுசுந்தரம் மருமகனின் முறைப்பை உணர்ந்து, “அது ஒன்னும் இல்லப்பா நீ முதல் முதல்ல இங்க வந்த இன்னைக்கு இப்படி ஒருத்தன் வந்து இருக்கான்னு மெசேஜ் போட்டேன். அதுல இருந்து விடாம குடைஞ்சு எடுத்துட்டாங்க உன்ன பத்தி கேட்டு. எல்லாரையும் சமாளிக்க முடியாம ஒரு நாள் நீ பேசும் போது லைவ் கால்ல கனெக்ட் பண்ணி விட்டேன். உன் காதலையும் சண்டையும் கேட்டு மெய்சிலிர்த்து போயிட்டாங்க எல்லாரும்.” என்றவரை இந்த முறை உண்மையாகவே கொலை செய்ய பார்த்தான் ரகுவரன்.

தடுக்க முடியாமல் தன் செயலை பின் வாங்கி விட்டார் ரேகா. அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் வேலை, “அழகு சார்” என்று குரல் கேட்டது.

அடிப்பதை நிறுத்தியவன் குரல் வரும் திசையை நோக்க, “என்ன சார் எல்லாரும் மெசேஜ் பண்ணிட்டு இருக்கும் போதே காணாம போயிட்டீங்க.” என்றவாறு உள்ளே வந்தார் அங்கு வசிக்கும் நபர் ஒருவர்.

வாங்கிய அத்தனை அடிகளையும் தூசி தட்டிய அந்த கொடைக்கானலின் ஹீரோ அழகுசுந்தரம், “அது விஷயமா தான் பேசிட்டு இருக்கேன் சார்.” என்றார் பந்தாவாக.

அழகின் வார்த்தையை கேட்டதும் ரகுவரன் பற்களை கடிக்க, அவனைக் கண்டு கொள்ளாதவர் வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “தம்பி உங்க மனசுல என்ன இருக்கோ எல்லாத்தையும் அழகு சார் கிட்ட மறைக்காம சொல்லுங்க. அவர் உங்கள மாதிரி நிறைய பேர சேர்த்து வச்சிருக்கார். போன மாசம் கூட நாலாவது ப்ளாக்ல இருக்க ஒரு குடும்பத்தை சேர்த்து வைச்சாரு. இப்ப பாருங்க அவங்களுக்கு இன்னும் ஒன்பது மாசத்துல குழந்தை பிறக்க போகுது. உங்க வாழ்க்கைலயும் ஒளி ஏத்தி வைப்பாரு அழகு சார்.” என்றதும் உள்ளுக்குள் கடவுளை வேண்டினார் அழகுசுந்தரம்.

“நீங்க யாரு சார்?”

“நான் வாட்ஸ்அப் குழு செயலாளர்.”

“எதுஉஊஊ…!” அதிர்ச்சி தாங்காமல் இருக்கையில் அமர்ந்து விட்டான் ரகுவரன்.

“ஆமாம் தம்பி. எங்க குரூப்புக்கு தலைவர் அழகு சார், நான் பொருளாளர், இன்னொருத்தர் துணைத் தலைவர். குழு உறுப்பினர்கள் நிறைய பேர் இந்த
பதவிக்கு போட்டி போட்டுட்டு வேற இருக்காங்க.” அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்க ஆடிப் போய்விட்டான் வில்லன்.

“சார் நம்ம குழு திட்டம் பத்தி எல்லாம் இப்படி பொது வெளியில பேசக்கூடாது. நீங்க போயிட்டு குழு கிட்ட நான் அப்புறம் பேசுறன்னு சொல்லுங்க. குழு பணிகள் நிறைய இருக்கு அதனால மகிழ்வா உக்காந்து பேச முடியல.” சற்றும் பந்தா குறையவில்லை அழகுசுந்தரத்தின் பேச்சில்.

அவர் போனதும் நொந்து போன ரகுவரன் அழகுசுந்தரத்திடம் ‘ஏன்?’ என்று சைகையால் கேள்வி கேட்க, “நம்ம உலகம் ரொம்ப மாறிட்டே வருது மருமகனே. முன்னாடியெல்லாம் அக்கம் பக்கத்துல பேசி நம்ம குடும்ப கதை அடுத்த குடும்பம் கதை’னு ஊரு வம்ப வளர்ப்போம். இப்ப அப்பார்ட்மெண்ட்’ன்ற பேர்ல கதவை சாத்திக்கிட்டு தனி உலகத்துல வாழ்றாங்க.

இந்த சூழல மாத்தணும்னு முடிவு பண்ணி பல போராட்டங்கள் செஞ்சேன். எதுக்குமே பலன் கிடைக்கல இது ஒன்ன தவிர. அடுத்த வீட்டு குடும்ப விஷயத்தை வீட்டு தலைவிங்க காதுல போட்டதும் தீயா பரவுச்சு. ஆளாளுக்கு சார்’னு தூக்கி வச்சு கொண்டாட ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு ஆரம்பிச்ச என்னோட சோசியல் சர்வீஸ் இந்த வருஷத்தோட பத்து ஆண்ட நிறைவு செய்யப்போது.” என்றார் நீண்ட உரையாக.

“இதுக்கு பேரு சோஷியல் சர்வீஸா”

“இல்லையா பின்ன மருமகனே. இந்த மாதிரி பிரச்சினைய சொல்லும்போது அவங்க மூளை எதனாலன்னு கேள்வி கேட்கும். அது கொடுக்குற பிரஷர்ல இவங்க வீட்டை விட்டு வெளிய வருவாங்க. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க கிட்ட அப்படியாமேன்னு சொல்லி உறவ வளர்ப்பாங்க. அந்த உறவு சிரிப்ப கொடுக்கும். சிரிப்பு நீண்ட ஆயுளை கொடுக்கும். மத்தவங்களோட ஆயுளை வளர்க்குறது சோசியல் சர்வீஸ் தான.” என்றதும் சிரித்து விட்டார் ரேகா.

ஒருத்தன் நொந்து கொண்டிருக்கிறான் என்பதை கூட மறந்தவர் வயிறு வலிக்க சிரிக்க, ரகுவரன் நிலைமை மோசமானது. இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, “எங்கள நீ தான் சேர்த்து வைக்க போறியா?” கேட்டான் ஊர் முழுக்க பரப்பி வைத்திருக்கும் பொய்யை.

“அந்த மாதிரி நம்பிக்கை கொடுத்தா நீ தைரியமா உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்துவன்னு ஒரு சின்ன நம்பிக்கை.”

“யாருக்கு அந்த சின்ன நம்பிக்கை?”

“எனக்குத்தான்” என்றார் வயதான பற்களை விரித்து  காட்டி.

“யோவ் உன்ன திட்ட கூட வார்த்தை வர மாட்டேங்குது.”

“சும்மா டென்ஷன் ஆகிட்டே இருக்காத மருமகனே. உனக்கு இங்க என்னென்ன சேவை கிடைக்குதுன்னு தெரியுமா?” என்றதும் குழம்பிப் பார்க்க,

“ரெண்டு நாளா வீட்ல இருக்கியே எப்படி சாப்பாடு வந்துச்சுன்னு யோசிச்சியா. என் பொண்டாட்டி வீட்ல இல்ல, எனக்கும் சமைக்க தெரியாது. நம்ம ரெண்டு பேரும் உயிர் வாழ தேவையான உணவு எங்கிருந்து வந்துச்சு?” எனக் கேள்வி கேட்டவர் பதிலையும் கூறினார்,

“நான் செஞ்ச சோசியல் சர்வீஸ்ல மகிழ்ந்த இங்க இருக்க இல்லத்தரசிகள் எல்லாரும் சாப்பாடு, டீ, காபி, ஸ்னாக்ஸ் எல்லாத்தையும் அன்பா கொடுத்து விடுறாங்க. நேத்து கூட நீ போட்ட டிரஸ்ஸ ஒரு மேடம் வாஷ் பண்ணி கொடுத்தாங்க. நாளைக்கு நமக்காக ஒரு வீட்ல பிரியாணி ரெடி ஆகுது. இந்த மாதிரி இன்னும் பல சேலுகைகள் இங்க உனக்கு கிடைக்கும் மருமகனே.” உச்சகட்ட சோகத்திற்கு ஆளான ரகுவரன் பேசும் சக்தி இல்லாமல் அங்கிருந்து நடையை கட்டினான்.

எதிரில் வந்த பெண்மணி ஒருவர் அவனை புன்னகையோடு நலம் விசாரிக்க, பாவமான முகத்தோடு பதில் கூறினான். மின் தூக்கி வழியாக பார்க்குக்கு செல்ல நினைத்தவன் அந்த இடத்திற்கு வர, “ஹாய் ரகுவரன்” என்ற ஆண் ஒருவர் அவனோடு மின்தூக்கியில் பயணித்தார்.

இறங்கி செல்லும் வரை பல கதைகள் பேசி விட்டார் அவன் மனம் இன்னும் பலம் இழக்கிறது என்பதை அறியாது. அப்பார்ட்மெண்ட் கீழ் வந்ததும் பார்வை நான்கு புறமும் சுழன்றது. யார் யாரோ முகம் தெரியாதவர் கூட அவனைப் பார்ப்பது போன்ற பிரம்மை. அதுவும் காவலாளிகள் நால்வரும் அவனைக் கண்டதும் சுதந்திரம் அடைந்து விட்ட மகிழ்வை விட அதிகமாக மகிழ்ந்தார்கள்.

அப்போதுதான் கடந்த இரண்டு நாட்களாக தன்னை சுற்றி நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். முதல் நாள் காவலாளிகள் கதை கேட்கும் பொழுது அழகுசுந்தரத்தின் போன் மிக நெருக்கமாக இருந்ததையும், இன்று பதார்த்தங்களோடு கதை கேட்கும் பொழுது அவர்களை சுற்றி இன்னும் நிறைய நபர்கள் அமர்ந்து இருந்ததையும் நினைத்து வெட்கிப் போனான்.

கடந்த கால ரகுவரனின் வரலாற்றை ஒரு முறை அவனே திருப்பிப் பார்த்து காரி துப்பி கொண்டான் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பதை அறிந்து. வெளி உலகிற்கு இவை தெரிந்தால் ரகுவரனின் வரலாறு என்னாவது என்ற பெரும் பயமும் அவனுக்குள் உருவானது.

***

வேலை முடித்து வந்த மகிழினி காதில் இவை அனைத்தும் விழ, சிரித்தே மயங்கி சரிந்தாள் மெத்தையில். போதும் என்ற வரை சிரித்து ஓய்ந்தவள் கோப முகமூடியை போட்டுக்கொண்டு கணவனை அழைத்தாள்.

“என்னை பத்தி ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்குறது தான் உன்னோட வேலையா? யாரு என்னன்னு கூட தெரியாம எல்லார்கிட்டயும் கதை சொல்லிட்டு இருக்க. இதுக்கு தான் அப்பவே சொன்னேன் ஊர பார்த்து கிளம்புனு. இப்போ உன்னால என்னையும் இங்க இருக்க எல்லாரும் கோமாளி மாதிரி பார்க்கிறாங்க. நாளைக்கு காலைல நான் உன்ன இங்க பார்க்க கூடாது.” அடை மழை போல் அடித்து ஓய்ந்தவள் துண்டித்து விட்டாள்.

மனைவி பேசிய வார்த்தையில் உள்ளம் கொதித்தவன் கோபத்தோடு அழகுசுந்தரத்தின் வீட்டு கதவை தட்ட, “இப்பதான் மருமகனே உன்னை நினைச்சேன்” என அலும்பு பண்ணினார் அழகு சுந்தரம்.

ரகுவரன் தன் கோபத்தை காட்டுவதற்குள், “நான் சொன்னதை நீ கொஞ்சமாச்சும் நம்புனியா? இப்ப பாரு… நம்ம பக்கத்து வீட்டு கிரிஜா ஆன்ட்டி உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு நாட்டுக்கோழி குழம்பு வைச்சி கொடுத்திருக்காங்க. வா ரெண்டு பேரும் ஒரு பிடி பிடிக்கலாம்.” என்றதோடு கூட நிறுத்தாமல் இருக்கும் உணவுகளை திறந்து காட்டி வக்கனை செய்தார்.

கோபத்தோடு உள்ளே வந்தவன் இவர் செய்யும் அலும்பை பார்த்து சிரித்து விட்டான் சத்தமிட்டு. உள்ளுக்குள் பயம் இருந்தாலும் இவனை சிரிக்க வைப்பதற்குள் பெரும்பாடு பட்ட அழகுசுந்தரம், “அப்பாடா இந்த புன்னகை மன்னனோட புன்னகைய பார்த்துட்டேன்.” என்று சாப்பிட அமர வைத்தார்.

இருக்கும் அத்தனை கோபமும் சிரிப்பாக மாறியது அழகுசுந்தரத்தின் செய்கையில். தன்னையே அறியாமல் தன்னை சுற்றி சிலந்தி வலை பின்னிய முதியவரின் மூளையில் மயங்கி போனவன் அனைத்தையும் மறந்து சகஜமானன்.

வயிற்றுக்கு சாப்பாட்டை அள்ளிக் கொடுத்தவர் நைசாக பேச்சை ஆரம்பித்தார். உடனே சிரிப்பு நின்று விட்டது நாயகனின் முகத்தில். அதை அறிந்தவர் பாவமான முகத்தை வைத்து,

“மருமகனே நீ இப்படி தனியா ஒக்காந்து சாப்டுறதை பார்க்க என் மனசு வலிக்குதுப்பா. என் பொண்ணு, நீ, பேரபுள்ளைங்கன்னு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுற அழகை பாரக்கணும்னு இந்த வயசானவன் மனசு கதறுது. அதனாலதான் உன் மனசு காயப்பட்டாலும் பரவாயில்லன்னு கேட்கிறேன்.” என்று சிவாஜிக்கே நடிப்பை சொல்லித்தரும் அளவிற்கு நடித்தவர் செய்கையில் வந்த கோபம் புஸ் என்றானது.

இரவு நேர உணவிற்கு நடுவில் பேச்சை ஆரம்பித்தான், “எல்லா பிரச்சனையும் ஒரு நாள் ரெண்டு நாள்ல போயிடும். ஆனா ஒரு பிரச்சனை வந்து எங்க ரெண்டு பேரையும் மொத்தமா பிரிச்சிடுச்சு. அந்த நாளை என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன். ஒவ்வொரு வருஷமும் என் பெண்ணோட பிறந்த நாளை கோலாகலமா கொண்டாடுவோம். ரகசியமா எங்களோட திருமண நாளையும் செலப்ரேட் பண்ணுவோம். அது இரண்டையும் சேர்த்து சிதைச்சிடுச்சு அந்த நாள்.” என்று.

****

பௌர்ணமி நிலவு உச்சி வானில் வெள்ளி நிற அழகில் மின்னிக் கொண்டிருக்க, அந்த அழகையும் தோற்கடித்து வான்தேவதை போல் படுத்திருந்தாள் மான்விழி. இந்த நாளை அறியாத மகிழ்வரன் ஆழ்ந்த நித்திரையில் குடியிருக்க, அவனைப் போல் அக்காளும் நித்ராதேவியிடம் தன்னை ஒப்படைத்திருந்தாள்.

மகிழினி மகளின் தலையை தடவிக் கொண்டு கணவன் செய்யும் செயலை ரசிக்க, அவன் ரசித்துக் கொண்டிருந்தான் மகளுக்கு மருதாணி வைக்கும் அழகை. இன்னும் சில நொடிகளில் மான்விழி பிறந்த புனித நாள் வரப்போகிறது.

இதே நாள் தான் தம்பதிகள் இருவரும் சேர்ந்த நாள். இதற்காகவே காத்திருந்து தந்திரத்தோடு மணம் முடித்தான் மனைவியை. தேவதையின் பிறந்த நாளுக்கு முடிந்தவரை பரிசுகளை அள்ளிக் குவித்தவன் மருதாணி வைத்து அவளையும் அழகும் பார்க்கிறான். மருதாணி குளிர்ச்சியை தாங்க முடியாது மான்விழி சிணுங்க, கண்கள் விரிய… பயந்து பார்த்தான் மகள் எழுந்து விட்டாளோ என்று.

கணவனின் முகபாவனையை இன்னும் ஆழ்ந்து ரசித்து, “போதும் ரகு அவளுக்கு குளிருது போல விட்டுடு.” சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்தாள் மகிழினி.

“அவ்ளோ தான் பொண்டாட்டி முடிஞ்சுது.” என்றவன் தான் வைத்த மருதாணியை ஒரு முறை ரசித்தான்.

போர்வைக்குள் இருக்கும் தங்க தந்தம் இரண்டையும் மடி மீது வைத்தவன் துடைத்து விட்டு அங்கும் வர்ணம் பூச ஆரம்பித்தான். சிணுங்கும் மகளை தட்டிக்கொடுத்து தன்னுள் தாய் வைத்துக் கொள்ள, இரண்டு காலையும் அலங்கரித்து முடித்து மனைவியிடம் காட்டியவன் திரும்பினான் கதவு தட்டு ஓசை கேட்டு.

யார் வருவான் என்பதை அறிந்து தான் சாற்றாமல் வைத்திருந்தார்கள் தம்பதிகள். “வந்துட்டான் வேலை கெட்டவன்.” என மச்சானை புகழ்ந்ததும் மனைவி முறைக்க, “என்னடி லுக்கு? என் பொண்ணு தூங்கிட்டு இருக்கா ரெண்டு பேரும் விஷ் பண்றன்னு எழுப்பி விட்டுடாதீங்க. நல்லா தூங்கினா தான் காலைல அழகா இருக்கும் என் தங்கம்.” என்ற குரலுக்கு இடையில் இரண்டு முறை லேசாக கதவை தட்டினான் ஆகாஷ்.

கணவனை முறைத்துக் கொண்டு கதவை திறக்க, அவன் பார்வை மருமகள் மீது மட்டும்தான் இருந்தது. முழித்திருந்த மூவரும் மணியை பார்க்க, இதோ தேவதையின் பிறந்தநாள் பிறந்து விட்டது. முதலில் தாயானவள் நெற்றியில் முத்தமிட்டு,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மான்குட்டி. குட்டியா கண்ண கூட திறக்காம என் கையில இருந்த ஞாபகம் தான் இப்ப கூட இருக்கு. அதுக்குள்ள இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்ட. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் என் பொண்ணு தனி அடையாளத்தோட நிக்கப் போறான்னு வருத்தமாவும் இருக்கு. என் பொண்ணு என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும். அவ வாழ்க்கைல என்ன ஆசைப்பட்டாலும் அது எல்லாம் கிடைக்கணும். எப்பவும் என் பொண்ணோட முகத்துல சிரிப்ப மட்டுமே நான் பார்க்கணும்.” அன்பொழுக வாழ்த்தை தெரிவித்தவள் நெற்றியில் மீண்டும் முத்தமிட்டு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா என் தங்க பொண்ணு.” என்றாள்.

ஆண்கள் இருவரும் தாயின் பாசத்தை கண்டு மகிழ, விலகி அமர்ந்தாள் தமையனுக்கு இடம் கொடுத்து. அருகில் அமர்ந்தவன் வாழ்த்தை தெரிவிக்காமல் பார்க்க ஆரம்பித்தான் கண் சிமிட்டாமல். என்ன தெரிந்ததோ மருமகளை பார்த்து சிரித்தவன்,

“குட்டிமா பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் குட்டிமா இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டான்னு நினைக்கவே பிரமிப்பா இருக்கு. கூடவே தாய் மாமனா பொறுப்பு இன்னும் அதிகமாகிடுச்சுன்னு உணர்வுகள் சொல்லுது. என் குட்டிமா எப்பவும் சந்தோஷமா இருக்க என்ன தேவையோ அது எல்லாத்தையும் நான் பண்ணுவேன். என் மருமக என்னை விட ஒசரமா வளர்ந்து நிற்கிற அழக தூரமா நின்னு ரசிச்சுக்கிட்டே இருப்பேன்.

இப்ப எல்லாம் உன் கூட நிக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு குட்டிமா. உன்ன பார்த்து தான் மணாலி மேல இருக்க அன்பும் பாசமும் அதிகமாகுது. நீ என் வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய வரம். இந்த வரத்தை நெஞ்சில சுமக்கிற பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுக்கணும்.” என்றவன் பேச்சை விட அதிக அன்பை தேக்கி நெற்றியில் முத்தமிட்டான்.

மூவரும் சத்தம் வராமல் மான்விழியின் பிறந்த வரலாறு முதல் இப்போது இருக்கும் நொடி வரை கலந்துரையாடினார்கள். நேரம் ஒன்றைக் கடந்ததும் ஆகாஷ் மீண்டும் ஒருமுறை மருமகளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு விடைபெற்றான்.

“உன் பொண்ணுக்கு நீ விஷ் பண்ணலையா?”

பதில் சொல்ல தயாராக இருக்கும் ரகுவரனின் பார்வை மகள் மீது செல்ல, “இப்ப விஷ் பண்ணா என் தங்கத்துக்கு தெரியாது. என் தங்கம் நான் விஷ் பண்ணதும் பளிச்சுன்னு சிரிக்கணும். அந்த அழகை இதோ” என்றவன் நெஞ்சில் கை வைத்து, “இந்த இடத்துல பத்திரமா சேமிச்சு வைக்கணும்.” என்று மருதாணி இட்ட பாதங்களில் முத்தமிட்டான்.

“ஏன் ரகு மானுவ உனக்கு இவ்ளோ பிடிச்சிருக்கு?” பல வருடங்களாக அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வியை கேட்க, “சாமிய பிடிக்காதுன்னு யாராவது சொல்லுவாங்களா! என் தங்கம் எனக்கு சாமி. எத்தனை பேர் என்னை குறை சொன்னாலும் என் அப்பா ஹீரோன்னு சொல்ற  அந்த ஒரு வார்த்தைய கேட்கும் போது பிறவி பலன் கிடைச்சிடுது.” பெருமூச்சுவிட்டு பேச்சை முடித்தான்.

சில நொடி இருவரும் பேசிக் கொள்ளாமல் இருக்க, “சில நேரம் தோணும் பொண்டாட்டி ஒருவேளை என் பொண்ணு என்கிட்ட காட்டுற பாசத்தை போதும்னு குறைச்சிடுவாளோன்னு. அப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வரவே கூடாது. நான் சாகுற கடைசி நொடி வரைக்கும் என் பொண்ணு என் பக்கத்திலேயே தான் இருக்கணும்.

அப்பா அப்பான்னு வாய் நிறைய கூப்பிடனும். கொஞ்ச நேரம் நான் பிரிஞ்சு போறதை கூட தாங்கிக்க முடியாம துடிக்கிற அந்த கண்ண பார்த்துட்டே தான் என் வாழ்க்கை முடியனும். நிறைய கனவு கண்டுட்டு இருக்கேன் என் தங்கத்தை வைச்சு. அது எல்லாத்தையும் நிறைவேத்தி சிரிக்கிற வரைக்கும் ஆயுல கொடுக்கணும் எனக்கு கடவுள்.” என்றவனை தட்டிக் கொடுத்து சாதாரண மனநிலைக்கு மாற்றினாள்.

இரண்டு மணியை தாண்டியதும் தூக்கம் அவர்களை தொந்தரவு செய்ய, மகளை அணைத்துக் கொண்டனர் விதி அறியாமல். காலம் ரகுவரனின் உயிரை அவனிடம் இருந்து வருங்காலத்தில் பிரிக்கப் போகிறது என்பதை அறியாமல் விடியலை வரவேற்க உறக்கம் கொண்டான்.

****

சூரிய ஒளி பட்டு பூ எப்போது மலரும் என காத்துக் கொண்டிருந்தான் ரகுவரன். ஒருவழியாக அவன் எதிர்பார்த்த தருணத்தை மகள் கொடுத்து விட, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்” சோம்பல் முறிக்கும் மகளை அணைத்துக் கொண்டு வாழ்த்தை தெரிவித்தான்.

அவன் எதிர்பார்த்தது போல் புன்னகை வைரம் போல் ஜொலிக்க, “அழகு தங்கமே… அப்பா கண்ணே பட்டு போயிடுச்சு.” திருஷ்டி கழித்தான்.

தந்தைக்கு அடுத்ததாக தாயும் கட்டியணைத்து வாழ்த்தை தெரிவிக்க, இருவரையும் சரிசமமாக கட்டிக்கொண்ட பிள்ளை தன்னுடைய நாளை வரவேற்றது ஆனந்தமாக. போன ஆண்டு சரியாக உச்சரிக்காத மகிழ்வரன் இந்த ஆண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த கையோடு கையில் ஒன்றை கொடுத்தான்.

தம்பியின் முதல் பரிசில் ஆர்ப்பரித்த குட்டி இளவரசி பிரித்து பார்க்க, அக்காவிடம் ஒரு நாள் சண்டை போட்டு வாங்கிய மினி மைக்ரான் பொம்மை ஒன்று இருந்தது. பழைய பொம்மை தான் அவன் கொடுத்தது. நேற்றிலிருந்து வீட்டில் இருக்கும் அனைவரும் அக்காவிற்காக பரிசுகளை வாங்கி குவிக்க, என்ன கொடுப்பது என்று தெரியாமல் முழித்தவன் ஆசையாக அக்கா வாங்கிய பொம்மையை கொடுத்து விட்டான் அவளிடமே.

நண்பன் பரிசு கொடுப்பதை பார்த்த ஆதவ் தன் பங்கிற்கு ஒரு பொம்மையை சேர்த்துக் கொடுத்தான். கைவிட்டுப் போன பொருள் தன்னிடம் வந்த மகிழ்வில் துள்ளி குதித்த பெண்ணை தயார்படுத்தி அழைத்துச் சென்றார்கள் கோவிலுக்கு. எப்பொழுதும் செல்லும் அதே ராமர் கோவிலுக்கு குடும்பமே சென்றது. அங்கு கால் வைத்ததும் தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் திருமண நாளை எண்ணி.

பிள்ளைகள் அறியாது ஓரமாக ஒதுங்கியவர்கள் சாமி சன்னிதானத்தின் முன் நிற்க, “திருமணநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி. உன்னை நான் நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன். உனக்கு விருப்பம் இல்லாத நிறைய விஷயங்களை கட்டாயப்படுத்தி இருக்கேன். வழக்கம்போல எல்லாத்தையும் மன்னிச்சு புருஷனை காதலி. என்ன சண்டை போட்டாலும் நீ என்னோட உயிரிடி. எப்பவும் இந்த ரகுவரனுக்கு துணையா அவனை நேசிச்சிட்டே இரு.” காதலை வெளிப்படுத்தியவன் கண்ணாடி வளையல்களை பரிசளித்தான்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாள் அன்று மறக்காமல் ரகுவரன் செய்யும் செயல் இது. மகிழினிக்கு கண்ணாடி வளையல் மீது அதிக விருப்பம். அவை திருமணம் ஆனபின் இன்னும் அதிகரிக்க, பேச்சுவார்த்தையில் தெரிந்து கொண்டவன் வாங்கி கொடுப்பான் திருமண நாளன்று. கூடவே அவனுக்கு பிடித்த மல்லிகை பூவையும் சேர்த்து கொடுத்தான். விலை மதிப்பில்லாத இரண்டு பரிசுகளையும் ஏற்றுக் கொண்டவள் கை நீட்ட, உடையாமல் வளையல்களை போட்டு விட்டான்.

தங்கள் மகிழ்வை மறைவாக நிறைவேற்றியவர்கள் கடவுளின் முன்பு வணங்க, அனைவரும் அவர்களை சுற்றி. விழா நாயகி பெயரில் அர்ச்சனை நடைபெற்றது. கடவுளின் பாதம் பணிந்த திருநீற்றை மகளுக்கு வைத்தவன் ரசிக்க, வளர்ந்த குழந்தையின் சிரிப்பை குடும்பமே ரசித்தது.

கோவிலை மூன்று முறை சுற்றி வந்தவர்கள் கிளம்புவதற்கு முன் சன்னதியில் அமர்ந்தார்கள். இரு பாட்டிகளின் பேச்சு பிள்ளையின் வருங்காலத்தை சுற்றி இருந்தது. பெற்றோர்கள் அதை நினைத்து பூரிப்பதை விட தாய்மாமன் ஆகாஷ், சதீஷ் இருவரும் அந்த நாளை எண்ணி கனவு கண்டனர். தோள் மீது சுமந்து ஊர்வலம் கூட்டிச் செல்லும் நாளில் என்ன செய்வது முதல் கொண்டு பேசி தீர்த்தனர்.

போதும் என்ற அளவு பேச்சுக்களை முடித்தவர்கள் கோவிலை விட்டு வெளியேற, மூன்று கார்களையும் எடுத்து வர ஆண்கள் மூவரும் புறப்பட்டார்கள். கோவில் வாசலில் இருக்கும் பொம்மைகளை பார்த்து சிறு வண்டுகள் அடம் பிடிக்க, தாய்மார்கள் அங்கு விரைந்தார்கள்.

அத்தைகள் இருவரும் மருமகளுக்கு பிடித்ததை அங்கும் வாங்கி கொடுத்து மகிழ்விக்க, பரம ஆனந்தத்தோடு தந்தையின் காரை வரவேற்க நின்றாள். முதலில் வந்த சதீஷின் காரில் அவனது குடும்பம், இனியா ஏறிக்கொள்ள, ஆகாஷ் வாகனத்தில் பெரியவர்களும் சிறுசுகளும் ஏறிக்கொண்டது.

“ரகு எங்க?”

“எங்க பின்னாடி தான் வந்துட்டு இருந்தான்.” என்றவர்கள் திரும்பிப் பார்க்க, அவனது வாகனம் தென்பட்டது.

காரை தேவதை நிற்கும் இடத்தில் நிறுத்தியவன் இறங்கி வந்து கார் கதவை திறந்து விட, பட்டுப்பாவாடையை பிடித்துக் கொண்டு ஏற முயன்ற மான்குட்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி சென்றது வெள்ளை நிற கார் ஒன்று.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்