அத்தியாயம் 18
மாடி வீட்டிற்கு தேவையான, சோபா, ஏசி, கட்டில் மெத்தை, பாத்திரம் என பொருட்களை அடுக்கினாள் மஞ்சுளா.
அவளை வினோதமாக பார்த்த தஷ்வந்த், “மஞ்சு இதெல்லாம் தேவையா?” எனக் கேட்க,
“ப்ளீஸ்…” என்று கெஞ்சி, கொஞ்சி, அவனுடன் அவ்வீட்டை இரவோடு இரவாக தயார் செய்தாள்.
வசீகரன் எப்போதும் நடு இரவு தாண்டி தான் வீட்டிற்கு வருவான். அதனால் அவன் வருவதற்கு முன், வேலைகளை முடித்தவள், அவளறையில் கட்டிலில் சாய்ந்தாள்.
இது தெரிந்தால், வசீகரன் தன்னை திட்டுவானோ… என்ற தயக்கமும் எழுந்தாலும், மனதில் ஏதோ இனம்புரியா மகிழ்ச்சி. சில உணர்வுகள் சொல்லிப் புரிவதில்லையே!
கணவனின் வரவிற்காக எப்போதும் போல உறங்காமல் காத்திருந்தவள், அன்று ஏற்பட்ட அலுப்பில் பின்னால் சாய்ந்தபடி கண்ணயர்ந்து விட்டாள்.
தனக்காக, தன் மனைவி நேரம் கடந்து உறங்குவது தெரிந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல், அவள் விழித்திருந்தாலும் அவள் புறம் திரும்பாமல், படுத்துக் கொள்வான் வசீகரன்.
அன்றும், அறைக்குள் நுழைந்து, அவளைக் காணாமல் குளியலறைக்குள் நுழைந்து, சிறு குளியலை போட்டு விட்டு வெளியில் வந்தவன், அப்போது தான் அவள் அமர்ந்த படி உறங்குவதைக் கண்டான்.
முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தாலும், அதையும் மீறி, இதழ்களில் சிறு முறுவல் தங்கி இருந்தது.
தன் உயிரானவளின் முகத்தை ஆற அமர ரசித்து கூட ஆறு ஆண்டுகள் கடந்து விட்டதே. ‘தன்னை மட்டும் வாழ்க்கை ஏன் இப்படி நிந்திக்க வேண்டும்…’ என்றும் போல் இன்றும் ஆதங்கம் கொண்டான்.
பெற்றோரை எதிர்த்து தன்னை மட்டுமே நம்பி வந்தவள். இப்போது, தினம் தினம் வலியில் துவளும் வேதனை அவனை அரித்தாலும், அனைத்தையும் கடந்து வந்து தானே ஆக வேண்டும். அந்த நிதர்சனம் தன்னவளுக்குப் புரியும் முன், வாழ்க்கையே முடிந்து விடுமோ என்ற பயமும் வசீகரனை ஆட்கொள்ள, விழியோரம் நீர் துளிர்த்தது.
மஞ்சுளாவை நேராக படுக்க வைக்க எத்தனித்து அருகில் வந்தவன், பின் அதனை செய்யாமல், மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான். இப்போதெல்லாம் அவளிடம் பேசக் கூட பயமாக இருந்தது. பேசினால் தான், விவாகரத்து கேட்கிறாளே! அவர்களின் கணவன் மனைவி உறவு துண்டிக்கப்பட்டு, இத்தனை வருடம் கடந்தும் கூட, காதல் மறையவில்லையே அவனுக்கு. அவளின் அருகாமையிலாவது வாழ்ந்து விட எண்ணும் கணவனின் ஆழ்ந்த காதலை, அவளுணரும் நேரம் வெகு தூரம் இல்லை.
“ரொம்ப யோசிக்காத மந்த்ரா. நீயும் அம்மாவும் மட்டும் ஹைத்ரபாத்ல இருந்து என்ன செய்ய போறீங்க? அங்க தனியா இருக்க இருக்க, அம்மாவுக்கும் கஷ்டம், உனக்கு வருத்தம். ஒழுங்கா ரெண்டு பேரும் திருச்சிக்கு வாங்க. இல்லன்னா, வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போ. உனக்கும் சேஞ்ச் – ஆ இருக்கும்.” அலைபேசியின் வழியே மாதவ் மந்த்ராவை அதட்டினான்.
சில மாதங்களுக்கு முன்பு தான், மந்த்ராவின் தந்தை தவறி இருந்தார். அதே நினைப்பில் உழன்ற தாயை சரி செய்யும் வழி தெரியாமல் அவள் திணறிக் கொண்டிருக்க, “ம்ம்…!” என ஏதோ யோசனையில் இருந்தாள்.
“நீ எத்தனை தடவை அந்த பஸ் ஸ்டாப்ல போய் நின்னாலும், யாரும் வர போறது இல்ல மந்த்ரா. இந்த முட்டாள்தனத்தை விட்டுட்டு, அம்மாவுக்காக யோசி.” தன்னை அறிந்து கொண்டு கடிந்த நண்பனை எண்ணி சிறிதாய் புன்னகைத்தவள்,
“நான் எந்த பஸ் ஸ்டாப்க்கும் போகவே இல்லையே…” என்றான் முணுமுணுப்பாக.
“நம்பிட்டேன்.” என அவனும் நக்கலடிக்க,
“நிஜமா மாதவ். நான் ஏற்கனவே சென்னைல ஜாப் பார்த்து வச்சுட்டேன். ரெண்டு நாள்ல அங்க தான் போக போறேன். அதை உங்கிட்ட சொல்றதுக்குள்ள, நீ அவசரப்பட்டுட்ட.” என்று சிரித்தாள்.
“ஓ… அப்டிங்களா மேடம். சென்னைக்கு போறதுக்கு முன்னாடி, அந்த பஸ் ஸ்டாப்க்கு போகாம கிளம்புங்க. நான் நம்புறேன்” எனக் கேலியாய் கூற, அவளிடம் பதில் இல்லை.
அதனைத் தவிர்த்து, “தஷு சென்னைல தான இருக்கான். போய் பார்க்கவா?” எனப் பேச்சை மாற்றினாள்.
மாதவும் பெருமூச்சுடன், “இத்தனை வருஷமா அவன் நம்மகிட்ட பேசவே இல்ல மந்த்ரா. ‘எனக்கு மனசு சரி ஆனதும் நானே பாக்க வரேன்’னு சொல்லிட்டான். அப்படியும் அவனுக்கு மெஸேஜ் மெய்ல்ன்னு நானும் அடிக்கடி அனுப்பிட்டு தான் இருக்கேன். எதுக்குமே ரிப்ளை இல்ல. கொஞ்ச நாள் போகட்டும்…” என்றிட,
“இன்னும் எத்தனை நாள் மாதவ். இன்னும் எத்தனை வருஷம் ஆச்சுன்னா, அவன் பேசுவான்” சற்றே கடுப்படித்தாள் மந்த்ரா.
“அவள் செஞ்ச தப்புக்கு நம்ம என்ன பண்ணுனோம். ஏன் நம்மளையும் அவாய்ட் பண்ணனும்.” என்று அவள் ஆற்றாமையுடன் கேட்க,
“எனக்கும் அதே கடுப்பு இருக்கு தான். ஆனாலும், உனக்கே தெரியும்ல என்ன ஆச்சுன்னு. அவன் இன்னும் நார்மல் ஆகல மந்த்ரா. அது புரிஞ்சுதுனால தான் நானும் அவனை டிஸ்டர்ப் பண்ணல. இல்லன்னா, நேரா போய் சண்டை போட்டுருக்க மாட்டேன்.” என்றான்.
அதில் தணிந்தவள், “ம்ம். உண்மை தான் மாதவ்.” என அவளும் ஒப்புக்கொண்டதில், “அடுத்த மாசம் நானும் ஒரு வேலையா சென்னைக்கு வரேன். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தே போய் அவனை கும்மலாம்.” என்று அவளையும் சரி கட்டினான்.
“சே, ஒருத்தன் சிங்கிளா இருந்தால், எல்லாருக்கும் பதில் சொல்லியே ஓஞ்சுருவோம் போல” என நொந்து கொண்ட மாதவ், இப்போது இருதயநோய் நிபுணர். மந்த்ரா, மகப்பேறு மருத்துவர்.
இந்த இடைப்பட்ட வருடங்களில் மாதவின் மூலம் மந்த்ரா ஓரளவு தமிழ் பேசக் கற்றுக்கொண்டாள். மாதவிற்கும் தட்டு தடுமாறி தெலுங்கு புரிபடத் தொடங்கியது.
அன்றோடு, மஹாபத்ராவும் நிதினும், மஞ்சுளாவின் மாடி வீட்டில் குடி வந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது.
முதலில் அவ்வீட்டைக் கண்டு திகைத்த மஹாபத்ரா, மஞ்சுளாவைப் புரியாமல் பார்த்தாள்.
அவள் பதில் கூறும் முன்னே, “வாவ்… வீட்ல எல்லாமே வந்துருச்சு.” என்றபடி சோஃபாவில் ஏறி குதித்த நிதின், “கர்டைன்ஸ் என் ஃபேவரைட் கலர்ல இருக்கு ஆண்ட்டி. சூப்பர்.” என ஆகாய நீல ஜன்னல் திரையை புகழ்ந்தான்.
அதனைக் கண்டதும், பாவையின் நினைவுகள், பழையவை நோக்கி பயணம் செய்தது. இந்த ஆகாய நீல வண்ண ஜன்னல் திரையை, அபார்ட்மெண்டில் தஷ்வந்தின் அறையில் போட சொன்னதும், அங்கு வேறு வண்ணம் இருந்ததில், தான் கோபப்பட்டதும், அவன் பயந்ததும்… இன்னும் அவனின் பயந்து தயங்கிய விழிகள் அவளுள் பொக்கிஷமாய் இருக்க, அதனைத் தவிர்த்து, “எதுக்கு இதெல்லாம்?” என மஞ்சுளாவை அமைதியாகப் பார்த்தாள்.
அவளுக்கோ முதலில் பதில் கூறத் தெரியவில்லை. “குட்டிக்கு பிடிச்சுருக்குல… அதான்!” என்றவாறு நிதினைப் பார்க்க,
“நான் எல்லாத்துக்கும் ‘பே’ பண்ணிடுறேன். எவ்ளோ ஆச்சுன்னு சொல்லிடுங்க.” என்றாள் கட் அண்ட் ரைட்டாக.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்…” மஞ்சுளா தடுத்ததும், அவளை பார்வையால் சுட்டாள்.
நிதின் இருந்ததால், தன்னை அடக்கிக்கொண்டவள், “நான் பே பண்றேன்னு சொன்னேன்!” என்று மீண்டுமொரு முறை பல்லைக்கடித்துக்கொண்டு கூற, அதில் மஞ்சுளாவிற்கு முகம் வெளிறி விட்டது.
தலையை ஆட்டிய மஞ்சுளா, சுருங்கிய முகத்துடன் கீழே சென்று விட, ‘வாட் இஸ் திஸ் லேடி?’ என வாய்க்குள் முணுமுணுத்தவள், நிதினுடன் ஐக்கியம் ஆனாள்.
எழும்பியல் நிபுணரான மஹாபத்ரா, இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு தான் சென்னைக்கு வந்திருந்தாள். ஆனாலும், அவள் என்ன வேலையாக வந்தாலோ, அந்த வேலைகள் தலைக்கு மேலே இருந்தது.
அதே நினைவுடன், உறங்கி எழுந்தவளின் முன், “டாலுமா. ஹங்க்ரி.” என நின்றான் நிதின்.
“இதோ…” என புன்சிரிப்புடன் அடுக்களைக்கு சென்றவள், அங்கு பாத்திரம் இருந்ததோடு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை சாமான் முதற்கொண்டு இருந்ததில், அப்போதும் மஞ்சுளாவை திட்டிக்கொண்டாள்.
‘இந்த பொண்ணுக்கு என்ன தான் வேணுமாம்!’ என எரிச்சல் பட்டுக்கொண்டே, சமைக்க எத்தனிக்க, அதன்பிறகே தனக்கு சமைக்க வராது என்ற உண்மையே உறைத்தது பாவம்.
யூகேவில் இருந்த வரை, சமைக்க ஆள் வைத்திருந்தாள். அவள் மருத்துவமனைக்கும், நிதின் பள்ளிக்கும் செல்லும் முன்னர், அவர்களுக்கு காலை உணவும், மதிய உணவும் தயாராக இருக்கும். இங்கு வந்ததில் இருந்து ஹோட்டலில் தங்கியதால், சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லை. இப்போது சமையல் வேலைக்கு யாரைத் தேடுவது… என நொந்தபடி, யூ – டியூப் பார்த்து ஏதோ முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்த நிதின், “டாலுமா. உனக்கு தான் குக் பண்ணவே தெரியாதே, என்ன பண்ணுற?” எனக் கேட்க,
“ட்ரை பண்றேன் அமுலு” என்று அசடு வழிந்தாள். அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவன், “நல்லா வருமா?” என்று எச்சிலை விழுங்கி கொண்டு கேட்க, “நம்பிக்கை அதானே எல்லாம்…” என்று நகைக்கடை விளம்பரம் போல பேசியவளைக் கண்டு சிரித்தான்.
மகனிடம் பேசியபடி, கடினப்பட்டு உப்புமா செய்தவளுக்கு, அது சட்டியை விட்டு வரவே இல்லை. அதனை எட்டிப் பார்த்த நிதின், “இதை பேன் (pan) ஓட சாப்பிடணுமா?” எனக் கேட்டு குட்டி விழிகளை உருட்டி முறைத்தான்.
அவனைக் கண்டு அசட்டு சிரிப்பை உதித்தவள், “இதோ, பிரெட் இருக்கே. அட ஜாம் கூட இருக்கு அமுலு…” என்று பல்லைக்காட்ட, அதனை வெடுக்கென பிடுங்கியவன், “இதை முதல்லயே குடுத்து இருக்கலாம்.” என சிலுப்பிக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றான்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் பின்னே சென்றவள், “குடு. நான் ஜாம் அப்ளை பண்ணி தரேன்” என சமத்தாக கேட்க,
“இது ரொம்ப கஷ்டம் பாரு. நானே பண்ணிக்கிறேன்.” என மேலும் முறைத்து விட்டு, “முதல்ல நல்லா சமைக்க தெரிஞ்ச அப்பாவா பார்க்கணும்.” என்றான் முணுமுணுப்புடன்.
“ஏன், நல்லா சமைக்க தெரிஞ்ச அம்மாவும் பாரேன்…” என்று கண்ணை சுருக்க, “அதுவும் தான் பார்த்துட்டு இருக்கேன்” என்றான் குறும்பாக.
அதில் அவனை முறைத்த மஹாபத்ரா, உர்ரென்று அமர்ந்திருக்க, ப்ரெட்டில் ஜாமை தடவி ஒரு கடி கடித்தவன், அவளை ஓரக்கண்ணில் பார்த்தான்.
அவளோ, அவனைப் பாராமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டதில், “டாலுமா…” என்றழைத்தவன், அவளுக்கும் ஜாமை ப்ரெட்டில் தடவி நீட்டினான்.
“ஒன்னும் தேவை இல்ல.” என அவளும் முறுக்கிக் கொண்டதில், அதனை தட்டில் வைத்து விட்டு, மஹாபத்ராவை கட்டிக்கொண்ட நிதின், அவள் கன்னத்தில் முத்தம் வைத்து, “சமைக்க தெரியலைன்னாலும், என் பெஸ்ட் மாம் நீ தான் டாலுமா. உன் கியூட் அமுல் பேபி நான் தான்.” என மீண்டும் முத்தமிட,
“ஐஸ் வைக்காதடா?” என்றாள் மனம் நெகிழ்ந்து.
“நான் ஐஸ் வைக்கல. நீ வேணும்ன்னா ஐஸ் வாங்கிக்குடு.” என்று நிதின் கேட்டதில், “அடுத்து எதுக்கு அடி போடுறன்னு தெரியுது. ஒழுங்கா சாப்பிட்டு எந்திரி. ஏற்கனவே, உனக்கு சைனஸ் ப்ராப்லம் இருக்கு.” என்று கண்டித்து விட்டு, அவனது முறைப்பையும் பரிசாக வாங்கிக் கொண்டாள்.
பின், இருவரும் அவ்வப்பொழுது சண்டை இடுவதும், மல்லுக்கு நிற்பதும், பின் கொஞ்சி விளையாடுவதுமாக நேரத்தைக் கடத்தி விட்டு, மெரினா பீச்சிற்கு சென்றனர்.
கடல் அலைகளில் இருவரும் குழந்தையாக விளையாடிவிட்டு, மூச்சு வாங்கி, மணலில் அமர்ந்தனர்.
“டாலுமா, பீச்ல ரொம்ப கூட்டம்ல.” என்று கேட்க,
“ம்ம் ஆமா அமுல் பேபி. நம்ம பீச் ஹவுஸ் ரெடி ஆகி இருந்தா, எந்த டிஸ்டர்பன்ஸ்ஸும் இல்லாம, விளையாடி இருக்கலாம்.” என்று அவளும் சிறு பிள்ளையாக உதட்டைப் பிதுக்கினாள்.
“ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு மா.” என தலையை ஆட்டிக் கொண்டவன், பின் நினைவு வந்தவனாக, “ம்மா… அன்னைக்கு மால்ல ஒரு அங்கிள் என்னை டாலுன்னு கூப்பிட்டாங்க தெரியுமா. உன்கிட்ட சொல்லவே மறந்துட்டேன்” என்றான் வேகமாக.
எப்போதும், சிறு விஷயம் என்றாலும் அவளுக்கு தெரியப்படுத்தி விடுவான் நிதின். அதில் அவளது முகம் உணர்வுகளை சிறிது சிறிதாக இழக்க, “ஓ!” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் கடல் அலையை வெறித்துக்கொண்டிருந்தவளின் மனம், அந்த அலைகளை விட அதிகமாக சீறிப் பாய்ந்தது. நேரம் கடந்த பின்னே, தாயின் அமைதியை உணர்ந்த நிதின், “ஆர் யூ ஓகே டாலுமா? டயர்டா இருக்கா?” என பரிகாசமாக கேட்டு வைக்க, ஏனோ அவளுக்கு கண் கலங்கியது.
அதனை அடக்கிக்கொண்டு, சிறு புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்தவள், “இன்னொரு தடவை தண்ணிக்குள்ள போகலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள் மூக்கை சுருக்கி.
“ஹை… வா வா…” என்று குதித்த நிதினுடன், மீண்டும் உருண்டு பிரண்டு ஆட்டம் போட தொடங்கினாள்.
உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
எறும்போடெறும்பாய் சில நாள்
பூனை நாயாய் சில நாள்
மனிதன் ஆனேன்
உன்னாலே…
குறும்பா ஆஆ என்
உலகே நீதான்டா குறும்பா
ஆஆ என் உயிரே நீதான் டா…!
குறும்பா ஆஆ
என் உதிரம் நீதான் டா
குறும்பா ஆஆ என் விடியல்
நீதான் டா…
இருவரும் விளையாடி களைத்து, உணவகத்தில் சாப்பாடை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். அப்பொழுதே மணி எட்டைக் கடந்திருக்க, கீழே மஞ்சுளாவின் வீட்டுக் கதவு திறந்தே இருந்தது.
நிதினை மாடிக்கு அனுப்பியவள், “எக்ஸ்கியூஸ் மீ!” என அழைத்தாள்.
அதில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த மஞ்சுளா, கையை முந்தானையால் துடைத்தபடி, “வாங்க மஹா.” என்று அழைக்க, “இட்ஸ் ஓகே. ஒரு சின்ன ஃபேவர். இங்க சமைக்க ஆள் கிடைப்பாங்களா?” என்று கேட்டாள்.
“எனக்கு தெரியல மஹா. நான் இங்க வந்த நாள் வரை, நானே எல்லா வேலையும் செஞ்சுப்பேன். சோ எனக்கு ஐடியா இல்ல. அக்கம் பக்கத்துல கேட்டு நாளைக்கு சொல்லட்டா?” எனத் தீவிரத்துடன் கூறியவளைக் கண்டு சிறு முறுவல் பூத்தவள்,
“நோ ரஷ். பொறுமையா சொல்லுங்க.” என்றவள், அவளது வீட்டை அளந்தாள். நான்கு படுக்கையறை கொண்டு விலாசமான வீடு தான்.
அதில், “சீரியஸ்லி, வீட்ல மெய்டு யாருமே இல்லையா? பட் வீடு ரொம்ப நீட்டா இருக்கு சிஸ்டர்…” என பாராட்டிய மஹாபத்ராவிடம், “என் பேர் மஞ்சுளா. அப்படியே கூப்பிடுங்க.” என்றவள், “நான் காலைல இருந்து வீட்லயே தான இருக்கேன். அதனால, வீட்டை பாத்துக்குறதையே முழு நேர வேலையா பாக்குறேன்.” என்று புன்னகைத்தாள்.
அதற்கு பதிலாக புன்னகைத்த மஹாபத்ரா, “குட் நைட்…” என்று விட்டு நகர, “ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? நான் சாப்பாடு செஞ்சுட்டேன். உங்களுக்கு கொண்டு வரவா?” எனக் கேட்டவளை அப்போதும் விசித்திரமாக பார்த்தவள், “ஹோட்டல்ல வாங்கியாச்சு. தேங்க்ஸ்.” என்று விட்டு வீட்டிற்கு சென்றாள்.
அடுத்த நாள் காலையில் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்த மஹாபத்ரா, “நிதி, நான் வர லேட் ஆனாலும் ஆகலாம். வீட்டை லாக் பண்ணிக்கோ. தேவை இல்லாம வீட்டை விட்டு வெளியே வராத. காட் இட்.” என்று உத்தரவிட்டு, வெளியில் சென்று விட்டாள்.
தொலைக்காட்சி பார்த்து சலித்து போன நிதின், பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க, கீழே மஞ்சுளா பின் பக்கம் துணி காயப்போடுவது தெரிந்தது.
அதில், “ஹெலோ ஆண்ட்டி!” என அவளை அழைத்ததும், சட்டென மேலே பார்த்த மஞ்சுளா முகம் மலர்ந்தாள்.
“ஹாய் குட்டி. என்ன பண்றீங்க?” எனக் கேட்க, “ப்ச். செம்ம போர். சும்மா தான் இருக்கேன்.” என்றான் பாவமாக.
“கீழ வர்றியா? நம்ம பேசிட்டு இருக்கலாம்” என அழைத்ததும், சிறிது யோசித்தவன், தலையை ஆட்டி விட்டு, அவள் வீட்டிற்கு சென்றான்.
அப்போது தான், இரவு முழுக்க மருத்துவமனையில் நைட் ஷிஃப்ட் பார்த்து விட்டு, உறங்கி எழுந்து வெளியில் வந்தான் தஷ்வந்த்.
வந்தவன், மஞ்சுளாவுடன் பேசிக் கொண்டிருந்த நிதினைக் கண்டதும், “ஹே டாலு. நீ இங்க என்ன பண்ற?” என வியப்பாக கேட்க,
அவனும் அதே வியப்புடன், “நாங்க மாடில தான் இருக்கோம். நீங்க இங்க தான் இருக்கீங்களா?” எனக் கேட்டான் பெரிய மனித தோரணையுடன்.
அதில் சிரித்த மஞ்சுளா, “அவன் என் தம்பி குட்டி” என்றிட, “ஓ…” என உதட்டைக் குவித்தான்.
அவன் பாவனையில் தஷ்வந்தும் நன்றாக சிரித்து விட, நிதின் தான், “உங்க கன்னத்துல அழகா குழி விழுது அங்கிள்.” என்றான் விழி விரித்து.
சட்டென சிரிப்பை நிறுத்தியவனுக்குள், அவளது நினைவுகள் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. “உன் கன்னத்து குழி அழகா அமுலு. ஆனா நீ தான் என்னை பார்த்து சிரிக்கவே மாட்டேங்குற.” என குறைபடும் அவளது செல்லக் கொஞ்சல்கள், அவனைத் தடுமாற வைக்க, சில நொடிகளில் முகத்தை சீராக்கிக் கொண்டான்.
அதற்குள், மஞ்சுளாவும் நிதினும், கதை பேசியபடி உணவு அருந்தினர். “உன் கன்னத்துலயும் கியூட்டா குழி விழுது குட்டி…” என நிதினை கொஞ்சிய மஞ்சுளாவிடம், “ஆனா உங்க தம்பிக்கு இன்னும் அழகா இருக்கு…” என்றான்.
மஞ்சுளாவின் இதழ்களில் குடி கொண்டிருக்கும் சிரிப்பைப் பார்த்த தஷ்வந்த்திற்கு, அவள் எதற்காக மாடி வீட்டில் பொருட்களை அடுக்கினாள் என்ற காரணமும் புரிந்து தொண்டை அடைத்தது.
அதற்கு மேலும் அங்கிருக்க மூச்சு முட்டுவது போல இருக்க, மருத்துவமனைக்கு கிளம்பி சென்றான்.
அவனின் பெற்றோர் செங்கல்பட்டில் இருக்க, தூரம் காரணமாக மருத்துவமனைக்கு அருகிலேயே வீடு எடுத்து தாங்கிக்கொண்டான். அவனுக்கு தனிமை தேவைப்பட்ட காரணத்தாலும் தான்.
மஞ்சுளா வீட்டிற்கும், அவன் வேலை செய்யும் மருத்துவமனைக்கும் கூட தூரம் அதிகம் தான். ஆனால், தற்போது மூளை நரம்பு சம்பந்தமாக அவன் செய்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், மற்றொரு மருத்துவமனையில் இரு வார கான்ஃபரன்ஸ் நடந்து கொண்டிருந்தது. அதற்காக தான், மஞ்சுளாவின் வீட்டிற்கே வந்தான்.
சில மாதங்களுக்கு முன்பு தான், பல வருடமாக கோமாவில் இருந்த நோயாளியை கண் விழிக்க செய்திருந்தான். அதிலேயே அவனுக்கு பெரும் பேரும் புகழும் கிட்டி இருந்தது. அதன் மூலம், இன்னுமாக பல கோமா நோயாளிகளுக்கு அவன் சிகிச்சை செய்து கொண்டிருக்க, சிலரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இங்கு, மஞ்சுளாவின் உணவை உட்கொண்ட நிதின், “வாவ்… நீங்க சூப்பரா சமைச்சு இருக்கீங்க ஆண்ட்டி. அப்படியே என் அம்மாவுக்கு இதெல்லாம் சொல்லிக்குடுங்க.” என்றதில், அவன் ரசித்து சாப்பிடும் அழகை, உண்ணாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா.
சிறிது நேரத்தில், “அம்மா வந்தாலும் வந்துடுவாங்க. அப்பறம் என்னை திட்டுவாங்க. அதனால நான் மாடிக்கு போறேன். பை ஆண்ட்டி.” என நல்ல பையனாக வெளியில் வந்தவன், அப்போது தான் உள்ளே நுழைந்த வசீகரன் மீது மோதிக் கொண்டான்.
அங்கு சிறுவனை எதிர்பாராத வசீகரன் முதலில் திகைத்து, பின் விழித்தான்.
கணவனை அந்நேரத்தில் எதிர்பாராமல் தடுமாறிய மஞ்சுளா, “மாடி வீட்ல குடி வந்துருக்காங்க வசீ.” என விளக்கம் கொடுக்க,
நிதினோ, அவனை நிமிர்ந்து பார்த்து, “இவரு யாரு ஆண்ட்டி?” என வினவினான்.
அவன் கேட்ட தோரணையே ரசிக்க வைத்தது வசீகரனுக்கு.
“நான் யாரா இருந்தா, சார் பேசுவீங்க?” எனக் கிண்டலாக கேட்க, நிதின் பதில் கூற தெரியாமல் நின்றான்.
மஞ்சுளா தான், “என் ஹஸ்பண்ட் குட்டி” என்றிட, “ஓஹோ! நீங்க எப்படி இவ்ளோ ஹைட்டா இருக்கீங்க?” என யோசனையுடன் கேட்டான்.
அதில் பக்கென சிரித்த வசீகரன், “அதுவா… நான் காம்பிளான் அதிகமா குடிப்பேன்.” என்று குறும்புடன் கூற,
“நானும் தான் குடிக்கிறேன். ஆனா வளரவே இல்லையே…” என அவன் தோள்பட்டையை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
“இப்ப வளர்ந்துட்டா போச்சு.” என அவனை கையில் அள்ளியவன், தன் தோளுக்கு மேல் அமர வைக்க, நிதினுக்கு குஷியாகி விட்டது.
“ஹை… செம்ம ஜாலியா இருக்கு அங்கிள்” என்று குதூகலிக்க, மஞ்சுளா மெல்ல சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள். ஏனோ அவளால் இயல்பாக இருக்க இயலவில்லை.
நிதினின் குறும்பிலும் சிரிப்பிலும் தன்னை அறியாமல், தனது மனம் உருகுவதை உணர்ந்தாலும், மனைவியின் மீதும் ஒரு கண் வைத்திருந்தான் வசீகரன்.
அவள் உள்ளே சென்றதும், பெருமூச்சு விட்டவன், பின் நிதின் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறத் தொடங்க, அப்போது சரியாக மஹாபத்ராவும் வந்து விட்டாள்.
வந்தவள், ஏதோ ஒரு ஆடவனின் தோள் மீது நிதின் அமர்ந்திருப்பதைக் கண்டு இருவரையுமே அனல் கக்க பார்த்தாள். அவளுக்கு இத்தனை வருடத்தில் வசீகரனின் முகம் மறந்தே விட்டிருந்தது.
அத்தியாயம் 19
“இறங்கு!” அடிக்குரலில் நிதினை அதட்ட, அவள் யாரென தெரியாமல் விழித்த வசீகரனிடம், “அம்மா…” என கிசுகிசுத்தான்.
அதில் அவனை இறக்கி விட்டவன், “நான் மஞ்சுளாவோட ஹஸ்பண்ட்.” என்று விளக்கம் கொடுக்க, அதற்குள் நிதினும், “அம்மா, இந்த அங்கிளும் ரொம்ப ஸ்வீட்…” என்று தாயின் கோபத்தை கண்டு, கொஞ்சினான்.
அப்போதும் முறைப்பை நிறுத்தாதவள், நிதினை தூக்கிக்கொண்டு மேலே சென்று, “திஸ் இஸ் த லிமிட் நிதின். யாரை கேட்டு நீ கீழ போன.” என்று கோபத்தைக் கொட்டினாள்.
முகம் சுருங்கிய நிதின், “போர் அடிச்சுது அதான்…” என்றதில்,
“போர் அடிச்சா? யார் வீட்டுலையாவது போய் உட்காந்துக்குவியா? யூகே – லையும் நம்ம தனியா தான் இருந்தோம். அங்க எல்லாம் ஒழுங்கா இருந்த தான” என மேலும் கோபமுற்றாள்.
“அங்க எனக்கு யாரையும் பிடிக்கல. இங்க மஞ்சு ஆண்ட்டி, வசீ அங்கிள், அப்பறம் கன்னத்துல குழி விழுகுற அங்கிள் எல்லாரையும் பிடிச்சு இருக்கே…” என தன் போக்கில் கூறியவன் “ஸ்ஸ், அந்த அங்கிள் பேர் கேட்க மறந்துட்டேன்” என்று தலையில் கை வைத்தான்.
‘கன்னத்துக் குழி’ என்றதுமே அவளுக்கு மொத்த கோபமும் தொலைந்து போனது. அதில் மேலும் பேச இயலாமல், அறைக்குள் சென்றவள், நேரம் கடந்தும் வெளியில் வரவில்லை.
நிதினுக்கு தான் தாயின் பாராமுகம் வருத்தமாக இருந்தது. “டாலுமா… இனிமே நான் கீழ போக மாட்டேன். சாரி. கதவை திற” என்று கதவை தட்டியபிறகே, தான் செய்த முட்டாள்தனம் உறைக்க, பட்டென கதவை திறந்தவள், “இல்ல அமுலு. அம்மா உன்மேல கோபமாவே இல்ல.” என்றாள் வேகமாக.
அதில் கண் மிளிர, “அப்போ நாளைக்கும் நான் மஞ்சு ஆண்ட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணவா?” என ஆர்வமாக கேட்டான்.
அவளோ முறைத்து வைக்க, “சரி வேணாம்.” என்று அவனே உம்மென அமர்ந்து கொண்டான்.
அதற்கு மேலும் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க இயலாமல், “புருஞ்சுக்கோ அமுலு. இவங்கல்லாம் யாருன்னே தெரியாது நமக்கு. நல்லவங்களா கெட்டவங்களா எதுவுமே தெரியாது. கண்ணுக்கு தெரிஞ்சவங்களே நமக்கு உண்மையா இருக்குறது இல்ல அமுலு.” என்றவளிடம், “ஆனா, மஞ்சு ஆண்ட்டி அப்படி இல்லமா.” என்றான் அவசரமாக.
அதற்கு மேலும் அவனது ஆர்வத்தை அடக்க விரும்பாமல், “உன் இஷ்டம்.” என்று முடித்து விட்டாள்.
மறுநாளில் இருந்து மஹாபத்ரா வெளியில் சென்றதும், மஞ்சுளாவிடம் அடைக்கலமாகி விடுவான். சில நேரம் தஷ்வந்துடனும், நிதினுக்காகவே மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வரும் வசீகரனுடனுமே நன்றாக பழகி விட்டான். அடுத்த ஒரு வாரமும் அப்படியே நகன்றது.
ஆனால், மகனின் ஆர்வத்தில் அணை கட்டும் விதமாக, “அமுலு நீ நாளைல இருந்து ஸ்கூலுக்கு போற. இங்க உனக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு” என்றதில், அவன் விழித்தான்.
“ஸ்கூலா? அப்போ யூகேல இருக்குற ஸ்கூல்” என்று கேட்டதில், “அதை போறப்ப பார்த்துக்கலாம். இப்ப ஸ்கூலுக்கு போ!” என்று முடிவாக கூறியதில், அவன் தான் சுணங்கினான்.
பின் வேறு வழியற்று பள்ளிக்கு சென்று விட, வீட்டினர் மூவருக்குமே ஒவ்வொரு விதத்தில் எதையோ இழந்த வலி. அவன் உடன் இருந்த ஒரு வாரமும், அவர்களின் காயங்கள் கூட மறந்து போனதே!
அப்படியும், அவன் பள்ளி விட்டு வரும் நேரம் மஞ்சுளா வாசலிலேயே நின்று, அவனுடன் சிறிது நேரம் பேசி விட்டே அனுப்புவாள்.
முதலில் தடுக்க நினைத்தாலும், ஏனோ மஹாபத்ராவால், அவளை உதாசீனப்படுத்த இயலவில்லை. அத்தனை நாட்களிலும், ஒரு முறை கூட தஷ்வந்த் இருக்கும் போது அவள் வீட்டிற்கு வந்ததே இல்லை. அவனும் அவளைப் பார்க்கவே இல்லை.
நாள் செல்ல செல்ல, விடுமுறை நாளிலும் நிதின் மஞ்சுளாவின் வீட்டிலேயே தான் பொழுதைக் கழிப்பான். இப்போதெல்லாம், மஹாபத்ராவும் அதனை இயல்பாக்கிக்கொள்ள, அவளிடம் பார்த்துக் கொள்ள கூறி வெளியில் செல்லும் அளவுக்கு அவளும் இறங்கி வந்து விட்டாள்.
இரு வாரங்கள் கடந்திருக்க, அன்று ஒரு வேலையில் மாட்டிக்கொண்ட மஹாபத்ராவால், பள்ளி விடும் நேரம் மகனை அழைக்க இயலவில்லை. நேரம் சென்றும் இருவரும் வராதிருந்ததைக் கண்டு பதறிய மஞ்சுளா, மஹாவிற்கு போன் செய்தாள்.
“மஹா ரெண்டு பேரும் ஓகே தான. என்னாச்சு இவ்ளோ லேட்?” என உரிமையாகக் கேட்டு வைத்தாள்.
ஒரு நொடி அமைதி காத்த மஹாபத்ரா, நிலைமையை விளக்க, “அவ்ளோ தான. நீ வேலையை பாரு. நான் குட்டியை பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றதில், அதற்கும் முதலில் அமைதியே தந்தாள். பின், “பத்திரம்” என்று விட்டு போனை வைத்தவளுக்கு, ‘சே… இருந்தாலும் நான் இவங்களுக்கு ரொம்ப இடம் கொடுக்குறேன்’ என தன்னையே திட்டிக்கொண்டாள்.
குஷியாக, நிதினின் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில் கிளம்பிய மஞ்சுளா, அவனை அழைத்துக்கொள்ள, வண்டியைக் கண்டதும் அவனும் குதித்தான்.
“வாவ்… நான் இதுவரை வண்டில போனதே இல்ல ஆண்ட்டி. ஜாலி…” என்று குதூகலமாக ஏறிக் கொண்டவனை, மேலும் இரண்டு தெருக்களை சுற்றி தான் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
வாசலிலேயே தஷ்வந்த் நிற்க, “ஹாய் அங்கிள். இன்னைக்கு வண்டில வந்தேனே. செம்ம ஜாலி” என்றவன், அவனே பதிலாக, “அம்மா எப்பவும் என்னை கார்ல தான் கூட்டிட்டு போவாங்க” என்றான்.
“ம்ம். உன் அப்பா என்ன பண்றாங்க” என அவன் கேட்டு வைக்க, “எனக்கு அது யாருன்னே தெரியாதே. நானும் அவங்களை தான் தேடிட்டு இருக்கேன்” என இயல்பாகக் கூறியதில், இருவருக்கும் சங்கடமாகி விட்டது.
அன்று காலையில் பள்ளிக்கு கிளம்பாமல், போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த நிதினை அதட்டிய மஹாபத்ரா,
“நிதி… லேட் ஆச்சுடா கிளம்பு” என்றிட, “ம்மா ம்மா… லாஸ்ட் ஸ்டேஜ் ப்ளீஸ் என் செல்ல டாலுமால” எனக் கொஞ்சினான்.
“எனக்கு தெரியாது. நான் குளிச்சுட்டு வரும் போது நீ கிளம்பி இருக்கணும்” எனக் கூறி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
விளையாட்டு மும்முரத்தில், மஞ்சுளாவின் வீட்டினுள் வந்து, எப்போதும் போல சோஃபாவில் அமர்ந்து அவன் விளையாட்டைத் தொடர, வசீகரன் தான், “டேய் நீ ஸ்கூலுக்கு கிளம்பாம விளையாடிட்டு இருக்கியா?” என்றான் போலி அதட்டலுடன்.
“நீ ரொம்ப கேம் விளையாடுற டாலு…!” செல்லமாகக் கடிந்து கொண்ட தஷ்வந்திடம்,
“டூ மினிட்ஸ்… டூ மினிட்ஸ்…” என்று கண்ணை சுருக்கினான்.
அதனைக் கண்டு சிரித்த மஞ்சுளா, “நீ இப்ப உன் அம்மாகிட்ட திட்டு தான் வாங்க போற குட்டி. போனை வச்சுட்டு போ.” என்னும் போதே, மஹா நிதினை அழைக்கும் சப்தம் கேட்க, “அய்யயோ” என்றபடி போனை சோபாவிலேயே போட்டவன், திடுதிடுவென மாடிக்கு செல்ல எத்தனிக்கும் போதே, அவள் மஞ்சுளா வீட்டினுள் வந்து அவனைக் காட்டமாக பார்த்தாள். அவனோ நழுவி மாடிக்கு சென்று விட,
“இவனை நீயாவது அதட்டக் கூடாதா மஞ்சு…” என நிமிர்ந்தவளுக்கு ஒரு நொடி உலகமே தலைகீழாக சுழல்வது போல இருந்தது.
அவளது ‘அமுல் பேபி’ அவளை அங்கு சிறிதும் எதிர்பாராத அதிர்ச்சியைக் கூட முகத்தில் காட்டாமல், பாறையாக இறுகி இருந்தான்.
அவளோ, கண்ணைக் கூட சிமிட்டாமல், அவனைப் பார்த்திருக்க, கோபத்தின் பிடியில் இருந்தவன், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த கண்ணாடி கிளாஸை, விரலின் அழுத்தம் கொண்டு உடைத்திருந்தான்.
உள்ளங்கையில் இருந்து இரத்தம் குபுகுபுவென வழிய, அவனைக் கண்டு பதறிய வசீகரன் “தஷு… ரத்தம்டா.” என்றது கூட அவன் காதில் கேட்கவில்லை.
அவளும் அவனது இரத்தம் கண்டு செய்வதறியாமல் நிற்க, ஒரு பக்கம் மஞ்சுளா மஹாபத்ராவின் போனை கையில் எடுத்து அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.
“வசீ… வசீ…” என வசீகரனின் பெயரை மட்டும் கூறியவளுக்கு மூச்சு வாங்கியது. அவளைக் கண்டு மேலும் அதிர்ந்த வசீகரன், அவளிடம் சென்று “என்ன ஆச்சு மஞ்சுமா? ஏன் இப்படி மூச்சு வாங்குது?” எனப் பதறினான், இத்தனை நாள் கொண்ட கோபத்தை மறந்து.
“வசீ… நம்ம… நம்ம…” என்னும் போதே உதடுகள் அழுகையில் வெடிக்க, “நம்ம பையன் வசீ. இது… இது…” என ஏங்கியபடி, மஹாபத்ராவின் முகப்புப் படத்தில் இருந்த ஆறு மாதக் குழந்தையை சுட்டிக் காட்டினாள்.
அப்போது தான் நிகழ்வுணர்ந்து தஷ்வந்த் பார்வையை மஞ்சுளா மீது திருப்ப, மஹாபத்ராவுமே மஞ்சுளாவின் கூற்றில் அதிர்ந்தாள்.
அது நிதினின் ஆறு மாத வயது புகைப்படம். ஆறு மாத குழந்தையை தொலைத்த தாயின் கதறல் அவளது.
“நம்ம குழந்தை வசீ… இது இந்த போட்டோ… இந்த போட்டோ… யாரோடது” எனக் கேட்டு மஹாபத்ராவை கண்ணில் நீர் தளும்ப பார்க்க, அவள் உறைந்திருந்தாள்.
“சொல்லு மஹா…” எனக் கேவியவள், சட்டென நிறுத்தி, “நிதி… நிதினோடதா?” எனக் கேட்க, தலையை மட்டும் ஆட்டினாள் மஹாபத்ரா.
அதில் மேலும் கத்தி அழுத மஞ்சுளா, “என் பையன் என்கூடவே இருந்துருக்கான் வசீ. எனக்கு தெரியவே இல்ல. இந்த அளவு மோசமான அம்மாவா நான் இருந்துருக்கவே கூடாது…” என்று வேதனையில் கரைந்தாள்.
வசீகரனுக்கோ நம்பவே இயலவில்லை. பிறந்ததில் இருந்து குழந்தை முகத்தை கூட அவன் பார்த்ததில்லை. அவள் கருவுற்றிருக்கும் போது தான் வெளிநாடு சென்றிருந்தான். குழந்தை பிறக்கும் சமயம் வந்து விடுவதாக கூறியவனால், அத்தனை சீக்கிரம் வேலையை முடித்து இந்தியாவிற்கு திரும்ப இயலவில்லை.
வீடியோ கால் பேசும் போது கூட, குழந்தையை பார்த்தால், இங்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியா இருக்க இயலாதென்று, “ப்ளீஸ் மஞ்சுமா. நான் நேரா வந்து நம்ம குட்டியை பாக்குறேன். அவனை பார்த்துட்டா, என்னால சுத்தமா முடியாது. இப்பவே இங்க இருக்கவே முடியல, ஏண்டா வந்தோம்னு இருக்கு” எனக் கலங்கிய குரலில் பேசும் கணவனை அவளும் வற்புறுத்தவில்லை.
ஆனால், நிதினுக்கு ஆறு மாதம் இருக்கையில், வசீகரன் ஹைதராபாத் வந்திறங்கி அங்கிருந்து சென்னை வருவதாக இருந்தது. அதுவரையிலும் பொறுக்க இயலாத மஞ்சுளா, கணவனிடம் குழந்தையை காட்டியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில், தன்னந்தனியாக கைக்குழந்தையுடன் ரயில் ஏறி இருந்தாள்.
ஆனால், ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இறங்கி வெகு நேரம் ஆகியும் தஷ்வந்த், அவளை அழைத்துக்கொள்ள வரவில்லை. மொழி தெரியாத ஊரில் நிற்பதே அவளுக்கு கிலி ஏற்படுத்த, அந்நேரம் ஒருவன் அவளை நோக்கி வந்தான்.
அதில், அவளுக்கு மேலும் பயம் எழ, பின்னால் திரும்பி நடக்க எத்தனித்தவளின் காலில் எதுவோ குத்தியது.
“ஆ…” என சற்றே தளர்ந்து குழந்தையை ஒரு கையால் பிடித்திருந்தவளிடம் இருந்து குழந்தையைப் பறிக்க அவனுக்கு வெகு சிரமமாக இருக்கவில்லை.
முதலில் திகைத்தவள், பின் “யாருடா நீ. என் குழந்தையை குடு.” என அவன் பின்னால் பதறி ஓட, அவனோ அப்போதே ஓட்டம் பிடித்திருந்தான். அப்போது தான், தலையில் இருந்து குருதி வழிய தஷ்வந்த் அங்கு வந்தான்.
தம்பியைக் கண்டு அதிர்ந்தாலும் அந்நிலையில் குழந்தையை தவிர வேறு எதுவும் அவள் மனதில் ஓடவில்லை. “தஷு… அவன் குட்டியை தூக்கிட்டு ஓடுறாண்டா என் குழந்தை…” என தவித்திட, அவனோ அதிர்ந்து, நிலையை உணர்ந்து வேகமாக அவனை துரத்தினான்.
அவனோ, சர்க்கஸ் காட்டுபவன் போல, மின்னல் வேகத்தில் ஓடி எதிர்புற டிராக்கை கடந்து விட, இன்னும் முழுதாய் மயக்கம் தெளியாத தஷ்வந்திற்கு அனைத்தும் இரண்டாக தெரிந்தது. குழந்தை கண் முன் இருந்தும் அவனைக் காப்பாற்ற இயலவில்லை என்று புரிந்தபடி அங்கேயே மூர்ச்சையாகி விட்டான்.
அதன் பிறகு எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. தஷ்வந்தோ தமக்கையின் ஒவ்வொரு துளி கண்ணீரிலும் செத்துப் பிழைத்தான்.
அவனால் தானே. அவன் மட்டும் சரியான நேரத்திற்கு சென்றிருந்தால், அவள் வாழ்க்கையில் இத்தகைய துன்பம் நிகழ்ந்திருக்காதே. இவள் மட்டும் என் வாழ்க்கையில் வராமல் போய் இருந்தால் தனக்கும் இத்தனை துன்பம் இருந்திருக்காதே என விரக்தியின் உச்சத்திற்கு சென்றான்.
இப்போதோ, வசீகரன் நடுங்கும் கரத்துடன் அந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்து, “மஞ்சுமா… உனக்கு கரெக்ட்டா தெரியுமா… இது நம்ம பையனா?” என மீண்டும் கேட்டதில்,
அவனை நிமிர்ந்து ஆயாசமாக பார்த்தவள், “என் குழந்தை முகம் நான் செத்தாலும் மறக்காது வசீ.” என்றாள் வெடித்து அழுதபடி.
இன்னும் மஹாபத்ராவால் நம்ப இயலவில்லை. அப்படியே திகைத்து நின்றிருந்தவளின் முன் தீப்பிழம்புடன் நின்றான் தஷ்வந்த்.
அதே கோபத்துடன், பளாரென அவளை ஒரு அறை விட்டான். அவளோ ஏற்பட்ட அதிர்ச்சிகளின் தாக்கத்தில் நிலைகுலைந்திருந்தாள்.
அவன் அடித்த கன்னம் எரிந்தாலும், அதில் கையை கூட வைக்கவில்லை அவள். இவனா அடித்தான். உண்மையில் இவன் தான் தன்னை அடித்தானா? என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமல் சிலையாகி இருந்தாள்.
“இந்த அடியை நான் எப்பவோ குடுத்து இருந்தா, இன்னைக்கு எனக்கும் என் குடும்பத்துக்கும் இவ்ளோ கஷ்டம் வந்துருக்காதுடி. உனக்கு நான் என்னடி பாவம் பண்ணுனேன். என் வாழ்க்கையை கெடுத்த சரி… என் அக்கா என்னடி பண்ணுனா உனக்கு?”
என கர்ஜனையுடன் தன் முன் நின்றிருந்தவன், உண்மையில் தான் பார்த்து ரசித்த தஷ்வந்த் தானா என்றே சந்தேகம் எழுந்தது மஹாபத்ராவிற்கு.
அவனுக்கு கோபம் கொள்ள தெரியாதே. கோபம் கொண்டாலும் அந்த அழகு முகத்தில் வெளிப்படுத்த தெரியாதே!
வசீகரனும் மஞ்சுளாவும் தான் குழம்பி நின்றனர்.
வசீகரன், “தஷு என்ன பேசுற? உனக்கு மஹாவை முன்னடியே தெரியுமா?” எனக் கேட்க,
“ஏன் தெரியாது? நல்லா தெரியுமே. இவளால தான் நான் அன்னைக்கு லேட்டா வந்தேன். இவள் அப்பா அடிச்சு தான், அன்னைக்கு மயங்கி விழுந்தேன். இல்லன்னா… இல்லன்னா… நான் அன்னைக்கு கண்ணு முன்னாடி இருந்த என் மருமகனை தொலைச்சு இருப்பேனா… இத்தனை வருஷமா மஞ்சுவோட கண்ணீரை பார்த்து பார்த்து செத்துக்கிட்டு இருந்துருப்பேனா. குற்ற உணர்ச்சில வெந்துட்டு இருந்துருப்பேனா. எல்லாமே இவளால.
இல்ல… என்னால… இவளை பத்தி தெரிஞ்சும் இவளை காதலிச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. இவள் என்னை யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்ட மாதிரி நானும் யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுருக்கணும். அதை சீரியஸா எடுத்துக்கிட்டது தான் நான் செஞ்ச பெரிய தப்பு.” என உட்சபட்ச கோபத்திலும் வேதனையிலும் குற்ற உணர்விலும் காதல் வலியிலும் கொந்தளித்தான்.
அவளோ அப்போதும் அசையவே இல்லை. அவன் கொடுத்த அடியில் எழுந்த வலியால் தானாக கண்கள் கலங்கி இருந்தது.
அவளை உலுக்கிய தஷ்வந்த், “இப்ப யார் வாழ்க்கையை கெடுக்க இங்க வந்துருக்கடி. நீயும் உன் அப்பனும், குழந்தை கடத்தல் வேலையும் சேர்த்து பாக்குறீங்களா? எவ்ளோ தைரியம் இருந்தா, அடுத்தவன் குழந்தையை என்னமோ நீ பெத்த மாதிரி சீன் போடுவ. உனக்குலாம் மனசாட்சியே இல்ல. ஹும்… சே… உங்கிட்ட போய் மனசு, மனசாட்சின்னு பேசிக்கிட்டு… உனக்கு தான் அப்படிபட்ட எதுவுமே இல்லையே.” ஒவ்வொரு வார்த்தையையும் அவளைக் காயப்படுத்தும் நோக்கத்திலேயே வீசினான்.
அப்போதும் அவள் அசையவில்லை.
“பதில் சொல்லுடி. என் அக்கா குழந்தை உங்கிட்ட எப்படிடி வந்தான்?” என்று எரிமலையாக வெடிக்க, அந்நேரம், “ம்மா நான் ரெடி…” என்றபடி அங்கு வந்தான் நிதின்.
அவன் வரவை உணர்ந்த மஹாபத்ரா, கலங்கிய முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
“ம்மா. டைம் ஆச்சு போலாம்” என நிதின் கூறிட, அவனைக் கண்டதும் தம்பதியர் இருவருக்கும் அழுகை பொங்கியது.
எத்தனை வருட வளர்ப்பை இழந்திருக்கிறோம். இப்போது தாங்கள் அவனது தாய் தந்தை எனக் கூறினாலும் ஒப்புக்கொள்வானா? அல்லது, தங்களை வெறுத்து ஒதுக்குவானா… என்றே புரியாமல் இருவரும் உடைந்திருந்தனர்.
ஆனால், மஹாபத்ரா தான் “நிதின்! உன் அம்மா அப்பா யாருன்னு தெரிஞ்சுடுச்சு. இவங்க தான். உன் மஞ்சு ஆண்ட்டியும், வசீ அங்கிளும் தான் உன் அம்மா அப்பா.” என்று இயல்பாக கூறிட, நிதின் ஒரு கணம் விழித்து, பின் வியப்பில் துள்ளிக் குதித்தான்.
“வாவ்… டாலுமா… நீ நேத்து கூட இன்னும் கண்டுபிடிக்கலன்னு சொன்னியே. எப்படிம்மா தெரியும்?” எனக் கேட்க, “எப்படியோ தெரியும். உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல தொலைச்சுட்டாங்களாம்.” என்றாள் உணர்வற்ற குரலில்.
அவனோ, வேகமாக மஞ்சுளாவிடம் ஓடி வந்து, “இனிமே ட்ரைன்ல எல்லாம் போகாதீங்க ஆண்ட்டி” எனக் கூற வந்தவன் மாற்றி, “மஞ்சுமா… டாலுமா கிட்ட சொன்னா பிளைட் டிக்கட் போட்டு குடுத்துவாங்க. சோ, என்னை தொலைக்காம வச்சுக்கோங்க.” என்று தலையை ஆட்டி கூறிட, மொத்தமாக உடைந்த மஞ்சுளா, தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டாள்.
“தொலைக்க மாட்டேன் குட்டிமா. அம்மா இனிமே உன்னை தொலைக்கவே மாட்டேன். சாரிடா. சாரி…” எனக் கேவி கேவி அழுது தீர்த்தவளை, சமாதானம் செய்ய தெரியாமல் வசீகரனை பார்க்க, அவனும் முகத்தை மூடி கண்ணீரில் கரைந்தான்.
இதனை இயல்புடன் வேடிக்கை பார்த்தாலும், பாவையின் வதனத்தில் ஒரு வித வலி இழையோடியதை ஆடவனும் கண்டுகொண்டான்.
இத்தனை சாதாரணமாக, நிதின் அவர்களை ஏற்றுக்கொண்டது அவனுக்கும் பெரும் ஆச்சர்யம் தான். ஆனால் அதனை முகத்தில் காட்டாமல், எதிரில் இருந்த பெண்ணவளின் புது வலியை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தஷ்வந்த்.
காயம் ஆறும்!
மேகா.