Loading

 

ஜீவா அஷ்வினை உடன் பிறந்த தம்பி என்று சொன்னதும், அதிர்ந்து அவனை பார்த்தவள், “உங்க தம்பியா…?” என்று விழித்து,

“அப்போ அவரு அம்மான்னு சொன்னது?” என்று புரியாமல் கேட்டாள்.

ஜீவா “என் அம்மாவை தான்” என்று கூறியதில், மேலும் அதிர்ந்தவள், “என்ன சொல்றீங்க… உங்க அம்மாவையே கொன்னுட்டீங்கன்னு எதுக்கு உங்க தம்பி சொல்லணும்” என்று கேட்டவளுக்கு  இன்று அஸ்வினை பார்த்தது நினைவிற்கு வந்தது.

காலையில் சென்ற ஜீவா மதிய சாப்பாட்டிற்கு வரவில்லை என்றதும், கயலே சாப்பாடை எடுத்துக் கொண்டு, அவனைப் பார்க்க எஸ்டேட்டிற்கு சென்றாள்.

அவள் சென்ற கார் திடீரென சடன் பிரேக் போட்டு நிற்க, அதில் அவள் ஓட்டுநரிடம், “என்ன ஆச்சு அண்ணா” என்று கேட்க,

அவர் “யாரோ ஒருத்தன் வண்டியை உள்ள விட்டுட்டான் மா” என்றார்.

அங்கு ஒருவன், பைக்கில் இருந்து விழுந்து, மீண்டும் பைக்கை தூக்கி கொண்டே, “யோவ் பார்த்து வரமாட்டியா கார் வச்சிருந்தா இஷ்டத்துக்கு ஓட்டுவியா?” என்று கண்டமேனிக்கு கத்தினான்.

கயல், இறங்கி சென்று பார்க்க, அங்கு அஸ்வின் நிற்பதைக் கண்டு திகைத்தாள்.

அவன் இவளை பார்த்து விட்டு “ஓ! mrs. கயல்விழி வாசுதேவன் அம்மையார் தான் கார்ல இருந்தீங்களா…? என்ன உங்க புருஷன் என்னை போட்டு தள்ள சொல்லி உங்களை அனுப்புனாரா…” என்று நக்கலாகவும் அதே சமயம் வெறுப்புடனும் கேட்க,

அதில் மேலும் திகைத்த கயல், “என்ன உளறுறீங்க… அவர் ஏன் அப்படி சொல்லணும்? நீங்க தான் ரோட்டை பார்த்து வந்துருக்கணும்” என்றாள் சற்று முறைப்பாக.

“ஏய்… என்ன வேணும்னே வந்து இடிச்சுட்டு நாடகம் ஆடுறியா…” என்றவன், 

“உன் புருஷன் ஏற்கனவே என் அம்மாவை கொலை பண்ணதுக்கும் இப்போ நீ என்னை கொலை பண்ண பார்த்ததுக்கும்  சேர்த்து, ரெண்டு பேரையும் கூடிய சீக்கிரம் உள்ள தள்ளுறேன்” என்று கடுங்கோபத்தில் பேசிவிட்டு சென்றவனையே குழப்பமாக பார்த்தவள், நிச்சயம் ஜீவா அவ்வாறு செய்திருக்க மாட்டான் என உறுதியாக நம்பினாள்.

ஆனாலும், அவளுக்கு அந்த அஸ்வின் யாரென்று தெரிய வேண்டும் என்று மனது அடித்துக் கொள்ள, அப்படியே வீட்டிற்கு வந்து விட்டாள்.

இப்போது ஜீவா அமைதியாக இருக்கவும், “சொல்லுங்க ஜீவா… உங்க தம்பியே உங்க மேல ஏன் இவ்ளோ பகையோட இருக்காரு.” என்று கேட்க, ஜீவா, பெருமூச்சு விட்டு அவனின் சிறு வயது நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தான்.

ஜீவாவின் பெற்றோர் நிர்மலா – அசோகன். இருவருக்கும் இரண்டு செல்வங்களாய் ஐந்து வயதில் ஜீவா வாசுதேவனும், இரண்டு வயதில் அஷ்வினும் இருந்தனர்.

அசோகன் படிப்பறிவில்லாதவர் தான். ஆனால் அவருக்கு நிறைய சொத்து பத்துக்கள் இருந்தது. கூடவே, எஸ்டேட் தொழிலும் நன்றாக போக, நிர்மலாவின் ஒன்று விட்ட அத்தை மகன் சீனிவாசன், அவ்வப்பொழுது அவருக்கு உதவியாக அவரின் எஸ்டேட்டிலேயே வேலை பார்த்தார்.

ஆனால் அவருக்கு தான் கை  சுத்தமில்லை. கணக்கு வழக்கு நன்கு தெரிந்த சீனிவாசன் பொய் கணக்கு சொல்லி, நிறைய கையாடல்கள் செய்தார்.

இது அசோகனுக்கு தெரியவில்லை. தன் மனைவியின் சொந்தம் என்றதால் அவரை மிகவும் நம்பினார்.

நிர்மலாவும் படித்தவர்தான். படித்த பெண் என்று அவருக்கு நிறையவே சுதந்திரம் கொடுத்திருந்தார். ஜீவாவிற்கு அசோகன்  வைத்த வாசுதேவன் என்ற பெயர் பிடிக்கவில்லை என்று ஜீவா என்று பெயர் வைத்து தான் அழைப்பார்.

மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாது அசோகனும் அதனை கண்டு கொள்ளவில்லை.

இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள கூட, ஆட்கள் வைத்து, மனைவிக்கென்று பணத்தை தண்ணீராக செலவளிக்க, அவருக்கே தெரியாமல் அவரின் சொத்துக்கள் கரைந்து கொண்டிருந்தது.

நிலைமை கை மீறி போன பிறகே, அதனை உணர்ந்தவர், அனாவசிய செலவுகளை குறைத்துக் கொண்டதுடன், நிர்மலாவையும் சிறிது கட்டுப்படுத்த ஆரம்பித்தார்.

ஆனால் அவருக்கு தான் அவரை கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை. அதுபோக, திடீரென குழந்தையை பார்த்துக்கொள்ளும் செவிலியர் ஒரு வாரம் விடுமுறை எடுத்து விட, அவர்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அவரிடமே வந்தது. இதில் அஸ்வின் சிறு குழந்தை என்பதால், சாப்பிட, தூங்கிட என்று தொந்தரவு செய்யாமல் இருந்து விடுவான்.

ஆனால் ஜீவா பொதுவாகவே நிர்மலாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தான் அவர் பின்னே அலைவான்.

அவரும் வீட்டில் இருக்கும் சமயம் குழந்தைகளுக்கு தேவையானதை ஆட்கள் மூலம் ஏவி விட்டு செய்ய, அது ஒரு பெரிய வேலையாக தெரியவில்லை. ஆனால் இப்பொழுது, மொத்தமாக அவனைப் பார்த்து கொள்வது சிறிது கடினமாகவே இருந்தது.

இரண்டு நாள் கூட பொறுக்க முடியாமல், நிர்மலா கணவரிடம் வேறு ஆட்களை நியமிக்கும் படி சொல்ல, அவர், “குழந்தைங்களை ஒரு வாரம் கூட நீ பார்த்துக்க மாட்டியா? இனிமே ஆள்லாம் வரமாட்டாங்க நீதான் பார்த்துக்கணும்” என்று சொல்ல அவருக்கு திடீரென ஏதோ சிறையில் அடைத்த உணர்வு தான். அதற்கேற்றாற் போல், ஜீவாவும், அவரை மிகவும் படுத்த ஆரம்பித்தான்.

அம்மா கூடவே இருப்பது அவனுக்கு குஷியாகிவிட, சிறுவனுக்கு உரிய விதத்தில் சேட்டை செய்ய ஆரம்பித்தான். நிர்மலா போனில் அவரின் தோழியுடன் பேசிக்கொண்டிருக்க, இவன் பேசுவதை கவனிக்கவில்லை என்று அவர் போனை பிடுங்கி தூக்கி எறிந்தான். அதில் கோபமானவர், அவனை அடித்து விட்டார்.

அப்பொழுது தான் உள்ளே நுழைந்த அசோகன் நிர்மலா மகனை அடிப்பதைப் பார்த்து, “வாசுவை ஏன் அடிச்ச” என்று கோபத்துடன், பளாரென அறைந்து விட, சிறு பிரச்சனையாய் ஆரம்பித்தது,

ஜீவா மேலும் அன்னை அடித்ததில் அழுது கொண்டே இருந்ததில், பேசி பேசி பிரச்சனை பெருசாகியது. அதன்பிறகு நிர்மலாவை அவர் மிகவும் கட்டுப்படுத்த அதில், அவருக்கு அங்கிருக்க பிடிக்காமல் இருக்கையில் தான் சீனிவாசன் மேலும் அங்கு விளையாட ஆரம்பித்தார்.

அசோகனின் பணத்தை சுரண்டியவரின் கையில் பணம் புரள நிர்மலாவிடம், “அசோகன் இப்படித்தான் நிர்மலா. அவருக்கு அடங்கி இருக்கணும்ன்னு நினைக்கிறாரு. இதுல, சொத்தெல்லாம் சரியா பார்த்துக்க தெரியாமல் எல்லாத்தையும் விட்டுட்டாரு” என்று அவ்வப்பொழுது ஏற்றி விட, தம்பதியருக்குள் பெரிய வாக்குவாதங்கள் வந்து, இறுதியில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நிர்மலா விடாப்பிடியாக நின்னார். ஜீவாவிடமும் எரிந்து விழுக, அவன் தான் மிகவும் தவித்துப் போனான்.

“நம்ம அம்மாவுக்கு நம்மளை பிடிக்கலையோ” என்று அவரிடம் சென்று, “மா மா… சாரி மா… போனை உடைக்க மாட்டேன்…மா” என்று சிறு குரலில் கெஞ்ச,

நிர்மலாவின்  கோபமும் ஆங்காரமும் அவருக்கு அந்த பிஞ்சின் குரலை மனதில் ஏற்ற மறுத்தது.

இறுதியில் சீனிவாசன் தான் குள்ளநரித்தனம் செய்கிறார்  என்று உணர்ந்த அசோகன், அவரை வெளியில் துரத்தி விட, நிர்மலா அதற்கும் கணவருடன் சண்டை இட்டு, விவாகரத்துடன் ஜீவனாம்சம் கேட்டு சண்டை இட்டார்.

இறுதியில் அஸ்வின் மட்டும் 5 வயதிற்குட்பட்டு இருப்பதால், அவன் தாயிடம் தான் இருக்கவேண்டும் என்று கோர்ட் சொல்லிவிட, அதற்கும் சேர்த்து, அசோகனிடம் சில சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு சென்றார்.

இதில் ஜீவா தான் “மா நானும் வரேன் மா” என்று அவரை பிடித்துக் கொண்டு அழுக, அவரோ “உன்னாலதான் இவ்ளோ பிரச்சனையும் என் வாழ்க்கையே போச்சு…” என்று அவனை தள்ளி விட்டு கோபமாக சென்றவருக்கு அந்த பச்சைக் குழந்தையின் தவிப்பு புரியவே இல்லை. இறுதியில் அவர் சீனிவாசனையே மணந்து கொண்ட விவரம் அறிந்து, ஜீவாதான் தவித்துப் போனான்.

பின், ஒருவாறாக தன் அம்மா திரும்பி வரமாட்டார் என்று உணர்ந்த ஜீவாவிற்கு அவர் சொன்ன வார்த்தை மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

கொஞ்ச நாளில் உறவுகள் தொந்தரவில் தான், அசோகன் வாசுகியை இரண்டாம் மணம் செய்து கொண்டார்.

அன்பே உருவான வாசுகியும் ஜீவாவை நன்கு பார்த்து கொண்டார். ஆனால் ஜீவா தான், அவரிடம் ஒட்டவில்லை. தனித்தே இருந்தான். 

அதன் பிறகே, கார்த்தி பிறந்தான். ஜீவாவிற்கு 13 வயதாய் இருக்கும் போது உடல் நலக் குறைவால், வாசுகி இறந்து விட, கார்த்தி தான் தாயின் அரவணைப்பு இல்லாமல், தவித்தான்.

ஏனோ ஜீவாவிற்கு அவனைப்  பார்க்கையில், தன் தம்பியின் நினைவு வர, அவனுக்கு தாயாகவே  மாறி விட்டான்.

ஆனால் வாசுகியின் சொந்தங்கள், கார்த்தியை அவர்களுடனே வைத்து கொள்ள அழைக்க, இப்போது ஜீவா அவனை அனுப்ப மறுத்து விட்டான்.

அசோகனுக்கும், எஸ்டேட்டில் சுத்தமாக வேலை நடக்காததால், கையில் பணமும் இல்லை. எனவே கார்த்தியை அவர்களுடன் அனுப்பி விட்டு, அவர் இருந்த வீட்டை விற்று, ஜீவாவை ஏதாவது ஹோமில் சேர்த்து விடாமல் என்று நினைத்திருக்க, ஜீவா தான் கார்த்தியை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று முரண்டு பிடித்தான்.

அசோகனும், கொஞ்ச நாள் சென்றதும், அவனுக்கு புரியவைக்கலாம் என்று அமைதி காக்க, ஜீவாவின் பிடிவாதமும் எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணமும் வளர்ந்து கொண்டே தான் போனது.

ஆனால், அவனும் சிறுவன் தானே. ஒரு முறை கார்த்தியை கவனிக்காத நேரம், அவன் படியில் இருந்து விழுந்து விட, சிறிது நேரம் அவனுக்கு பேச்சு மூச்சே இல்லை.

அதில் பயந்த ஜீவா, அவனை எழுப்ப, அப்போது அசோகனும் வந்து பார்த்து திகைத்து அவசரமாக அவனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

ஜீவாவும் அவர் பின்னே வர, கோபமான அசோகன் “உன்னால தான் அவன் சாக கிடக்கிறான். இப்போ நிம்மதியா உனக்கு. அவனை உன்னால பார்த்துக்க முடியாதுன்னு நான் தான் சொன்னேன்ல” என்று திட்டி விட்டு செல்ல, ஜீவா அரண்டு விட்டான்.

ஆனால் கார்த்தி பயத்தில் தான் மயங்கி விட்டான் என்றும், அவனுக்கு எதுவும் இல்லை என்றும் மருத்துவர் சொல்லி விட, அதன் பின், ஜீவா அவனிடம் இருந்தும், விலகினான்.

ஆனால் அப்பொழுதும் அவனுக்கு தேவையானதை அமைதியாய் செய்யத் தவறவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் அசோகன் மாரடைப்பில் திடீரென காலமாகி விட, அவரின் வீடும் நிலமும் கடனில் மூழ்கி விட்டது. கடன் சுமை அதிகமாகி விட்டதால், இரு பையன்களையும் பொறுப்பேற்க எந்த சொந்தமும் வரவில்லை.

ஆனால் அசோகன்  இருவர் பேரிலும், சிறிது பணம் சேர்த்து வைத்திருந்தார். அவனின் குடும்ப வக்கீல் அதனை ஜீவாவிடம் தர ஏற்பாடு செய்ய, அவரின் உதவியோடு, இருக்கும் பணத்தைக் கொண்டு, கொஞ்சம் கடனை அடைத்து, அவனின் எஸ்டேட்டில் அவனே வேலை பார்த்தான்.

அப்போது அவனுக்கு 15 வயது தான். முதலில் வக்கீல், அவனால் இந்த கடனை எல்லாம் அடைக்க முடியாது நீயே சிறுவன் என்று மறுக்க, பின், அவனின் பிடிவாதத்தினால், அவரும் அவனுக்கு உதவி செய்தார்.

அதில் அவனுக்கு நல்ல பலனும் கிடைத்தது. அப்படியே படிப்படியாக வளர்ந்தவன், அவனின் எஸ்டேட்டையும், வீட்டையும் மீட்டு, நல்ல நிலைமைக்கு வந்தான். என்று அவன் சொல்லி முடிக்க, கயலுக்கு தான், ஜீவாவை பார்க்க கஷ்டமாக இருந்தது.

சிறு வயதில் ஏற்பட்ட காயத்தினாலும், கஷ்டத்தினாலுமே தன்னைக் கடினமாக மாற்றிக் கொண்ட அவனைக் கண்டு, தாயின் பாசத்திற்காக ஏங்கிய அவனின் ஏக்கத்தை கண்டு, அவளுக்கு மனது வலிக்க, அவனின் தாயின் மேல் கோபம் கோபமாக வந்தது.

ஜீவா, “என் அம்மாவுக்கே என்னை பிடிக்கலைன்னு என்னை நானே எல்லார்கிட்ட இருந்தும்  தனிமை படுத்திக்கிட்டேன். என்னால என் கோபத்தையும், பிடிவாதத்தையும் கண்ட்ரோல் பண்ண முடியல. என்னை வேணாம்னு யாரும் அவாய்ட் பண்ண முடியாத அளவுக்கு உழைச்சு முன்னேறினேன்.

என் முன்னாடி பேச கூட மத்தவங்க பயப்படணும்னு நினைச்சு… எல்லார்கிட்டயும் கோபமாவே நடந்துக்கிட்டேன். ஏன் கார்த்தி கிட்ட கூட…

அவனும் என்னை வெறுத்துடக் கூடாதுனு அவன் கிட்ட இருந்து தள்ளியே தான் இருந்தேன். அதுக்கு அப்பறம் நான் பண்ணணுன தொழில் எல்லாத்துலயும் சக்சஸ் மட்டும் தான். என்னை யாரும் தோற்கடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் அது உண்மை இல்ல. நான் தோத்துட்டேன் கயல். உன்கிட்ட நான் தோத்துட்டேன்…” என்றவன் அவளைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தான்.

அவனின் பேச்சில் வந்த அழுகையை அடக்கியவளுக்கு, இதில் அஸ்வின் எங்கு வந்தான் என்று புரியவில்லை.

அவனிடம் மேலும் கேட்க வாயை திறக்க, அவன், “உன் வாழ்க்கையையும் நானே கெடுத்துட்டேன்ல கயல்… என் கோபத்துனால…”என்று தவிப்பாக கேட்க, கயல் அவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு, “ஆமா” என்றாள்.

அதில் அவனுக்கு வருத்தமும் கூடவே எப்போதும் போல் கோபமும் வர, “ஆமா நான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்தான். ஆனால் உனக்கு வேற சாய்ஸ் இல்ல. பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் என்கூட தான் நீ இருக்கணும்…” என்றான் கடுப்பாக.

கயலோ, “இருக்க முடியாது என்ன பண்ணுவீங்க” என்று சற்று எகத்தாளமாக கேட்க, அதில் “கயல்” என்று பல்லைக்கடித்தவனை நிறுத்தி,

“சும்மா கத்தாதீங்க… இனிமே நீங்க வாழ்க்கையை கெடுத்துட்டேனா வாழைக்காயை கெடுத்துட்டேனான்னு கேட்டா, நான் இப்படி தான் பதில் சொல்லுவேன். உங்க அம்மாவுக்கு, குழந்தைங்களோட அருமை தெரியல. உங்களோட பாசம் தெரியல. அவங்களுக்கு அவங்க சந்தோசம் முக்கியமா போய்ட்டனால, அவங்க உங்களை விட்டுட்டு போறதுக்கு உங்களையே காரணமாக்கிட்டாங்க. அவ்ளோ தான்.

இதுல உங்க மேல எந்த தப்பும் இல்ல. அப்பறம் சின்ன பசங்கன்னா மாடில இருந்து விழுகுறது, அடி படுறதுன்னு எதாவது சாகசம் பண்ணிட்டு தான் இருப்பாங்க. கார்த்தி கீழ விழுந்ததுல ஒரு கோபத்துல உங்க அப்பா அப்படி சொல்லிருப்பாங்க.

நீங்க கூட தான் என்னை என்னென்னமோ சொன்னீங்க. அதுக்கு என்ன பண்ண முடியும்” என்று சத்தமாக ஆரம்பித்து முணுமுணுப்பாக முடிக்க, கயல் அவனுக்கு ஆதரவாய் பேசியதே அவனுக்கு மனபாரம் எல்லாம் குறைந்தது போல் இருந்தது.

இறுதியில் தானும் அவளை இதே மாதிரி தானே வருத்தி இருக்கிறோம் என்று நொந்தவன், “சாரி கயல்… கார்த்தி தான் எனக்கு எல்லாமே, அவன்… அவன் இல்லைன்னு என்னால ஒத்துக்கவே முடியல.

நான் இன்னும் உயிர்ப்போட இருக்கேன்னா அதுக்கு அவன் தான் காரணம். அவனை விட்டு நான் விலகி போனாலும், அண்ணா அண்ணான்னு என்னை தான் சுத்தி வருவான். அவன் மேல இருக்குற பாசத்துல, அவன் இறந்த கோபத்துல, நான் என்ன பண்றேன்னு தெரியாம அப்படி…” என்று பேச வர,

கயல், “சாரி சொன்னா சரியா போச்சா… “என்றாள் முணுமுணுப்பாக.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சரி நான் என்ன பண்ணுனா உன் கோபம் போகும்ன்னு சொல்லு. பண்றேன்…” என்றான்.

அவள், சிறிது யோசித்து விட்டு, “அது உங்களுக்கு தான் தெரியணும். கஷ்டப்படுத்த மட்டும் தெரியுதுல அதை சரி பண்ண தெரியலையா” என்று அவனை நேருக்கு நேராய் பார்த்து கேட்க, ஜீவாவுக்கு தான் எப்படி சரி பண்ணுவது என்று புரியவே இல்லை.

ஆனால் அவனிடம் சரிக்கு சரியாய் பேசும் கயலை இன்னும் இன்னும் வெகுவாக காதலித்தான். அவளுடன் அப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்க, கயல் அவனின் வாடிய  முகத்தைப் பார்த்து விட்டு, “ரொம்ப டைம் ஆகிடுச்சு. நீங்க தூங்குங்க மீதியை நாளைக்கு பேசிக்கலாம்.” என்றாள்.

அவன் அப்படியே அமர்ந்திருக்கவும், கடுப்பானவள், அவனைப் பிடித்து மடியில் போட்டு “உங்களை தான் சொன்னேன் தூங்குங்க” என்று அதட்டலாக சொல்ல, அதில் விழி விரித்து அவளை பார்த்தவனுக்கு, இப்ப கோபமா இருக்காளா, இல்ல பாசமா சொல்றாளா என்றே புரியவில்லை.

கயல் ‘இப்படி தான நீங்க கோபப்படுறப்பவும் எனக்கு இருக்கும்… நல்லா அனுபவிங்க” என்று நினைத்துக் கொண்டு, அவனைப் பார்க்க, ஜீவா அவளின் முகத்தை மட்டுமே பார்த்தபடி, அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

இதுவரை இப்படி ஒரு நிம்மதியான உறக்கத்தை அவன் உறங்கியது கிடையாது. அவள் மடியில் படுத்தது, ஏதோ ஒரு நிம்மதியையும், பாதுகாப்பையும் கொடுக்க, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.

அவனையே பார்த்திருந்த கயல், ‘ஆயிரம் தடவை சாரி கேட்குறீங்களே ஒரு தடவையாவது, உன்னை நான் லவ் பண்றேன். உங்கிட்ட நான் நடிக்கலைன்னு சொல்றீங்களா. அவ்ளோ ஈகோ…’ என்று அவன் கன்னத்தை குத்தியவள்,

‘எனக்கு தெரியாம முத்தம் குடுக்குறீங்களா… இப்போ நான் கொடுக்குறேன்’ என்று அவன் நெற்றியிலும் கன்னத்திலும் முத்திரையை பதித்தவள், அவனின் இதழையும் வெட்கத்துடன் முற்றுகை இட்டாள்.

நேசம் தொடரும்…
-மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
53
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்