Loading

குழந்தை பிறக்கும் வரையிலும் மீண்டும் வீடு திரும்பும் எண்ணமில்லை தீரஜிற்கு. அவள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சில முறை வேண்டுமானாலும் கோபத்தை அடக்கலாம். ஆனால், அவனை மீறி அவளைக் காயப்படுத்தி விட்டால்… என்ற பயமே அவளிடம் இருந்து அவனை தூர நிறுத்தியது.

மனைவியுடனும், அவள் தாங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையுடனும் கொஞ்சி கெஞ்சி நேரம் செலவழிக்கத் தான் உடலில் உள்ள அத்தனை அணுவும் ஏங்கியது. அதற்கு அவளல்லவா இடம் கொடுக்க வேண்டும்!

மடிக்கணினி வழியே தன்னவளைப் பார்த்து ரசித்தபடியே நாட்களைக் கடத்தியவனை நிக்கோலஸ் தான் போன் செய்து திட்டி தீர்த்தான்.

“என்ன இருந்தாலும் நீ செய்றது சரி இல்ல மச்சி. இந்த நேரத்துல நீ தான அவ கூட இருக்கணும். இப்படி அங்க போய் உட்காந்துகிட்டா என்ன அர்த்தம்?” என்றிட, அவனருகில் ‘கீ’ கொடுத்தபடி நின்றிருந்த தேவிகா, அவனிடம் இருந்து போனைப் பிடுங்கி,

“பாவம் தீரஜ் அவ. இப்போல்லாம் அவ உன்னை தான் தேடுறா. உன் மேல கோபம் இருந்தாலும், நீ பேசலைன்னு வருத்தப்படுறது அவள் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கு. யாராச்சு காலிங் பெல் அடிச்சா கூட நீ தான் வந்துட்டியோன்னு ஆர்வமா போய் பாக்குறா. என்ன, இதை எல்லாம் நம்ம போய் கேட்டா, நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லைன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணுவா. பட், ஷீ நீட்ஸ் யூ. அட்லீஸ்ட் அவள்கிட்ட சொல்லிட்டாச்சு போயிருக்கலாம்…” என்று குறைவாக கூறியவள், எப்போதோ அவனுக்கும் தோழியாகி இருந்தாள்.

சஹஸ்ராவுடன் அவள் இருக்க வேண்டும் என்றே, அவளது தந்தையை காசிக்கு ‘பேக்’ செய்து அனுப்பிய பெருமை தீரஜையே சாரும்.

இருவரின் கூற்றையும் அமைதியாக கேட்டவன், பதில் கூறாமல் போனை அணைத்து விட, அது தெரியாமல் தேவிகா தான் மேலும் தோழிக்காக பரிந்து பேசிக் கொண்டிருந்தாள்.

தன் நண்பனை நன்கு அறிந்த நிக்கோலஸ், “ஹெலோ மேடம் போன் கட் ஆகி அரை மணி நேரம் ஆகுது…” என்று தலையில் அடித்துக் கொள்ள, ‘அடப்பாவி’ என்று போனை பரிதாபமாகப் பார்த்தாள்.

அதன் பிறகு தீரஜிற்கும் இருப்பு கொள்ளவில்லை. ஒரு முறை வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்து விட்டு மீண்டும் சிங்கப்பூர் கிளம்பும் எண்ணத்துடன் வந்தவன், அதனை யாருக்கும் தெரிவிக்கவும் இல்லை.

அன்று, சஹஸ்ரா அலுவலகத்திற்கு வரவில்லை என்றறிந்து, நேராக வீட்டிற்கே சென்றவன், அவளைக் காணாமல் வீடு முழுக்க தேடினான்.

நெஞ்சம் படபடவெனத் துடிக்க, “சஹி… எங்கடி இருக்க?” எனத் தோட்டத்திலும் ஒரு பார்வை பார்த்தவனுக்கு அவள் எங்கும் இல்லை என்றதும் பயப்பந்து உருண்டது.

அதன் பிறகே, ஒருவேளை தீரனின் அறையில் இருப்பாளோ என்ற சந்தேகத்துடன் உள்ளே வந்து பார்த்தவன், சரியாக அவள் மயங்கி விழப் போவது அறிந்து, பதற்றத்துடன் அவளை பிடித்துக் கொண்டான்.

“சஹி! என்னடி ஆச்சு? இங்க பாரு!” என்று அவளின் கன்னம் தட்டியவனின் இறுகிய கரங்களும் நடுக்கம் கொண்டது.

ஏன் மயங்கி விழுந்தாள் என்ற காரணமும் புரியவில்லை அவனுக்கு. அதன் பிறகே, அவள் கரங்களில் இருந்து நழுவிய பைலை பார்த்தவனுக்கு, விஷயம் புலப்பட, தொண்டை அடைத்தது.

அவளைத் தூக்கிக்கொண்டு தன்னறைக்கு வந்தவன், கட்டிலில் படுக்க வைத்து, நீரால் முகத்தை துடைத்து விட, சில நிமிடங்களில் மெல்ல மயக்கம் தெளிந்தாள்.

அவளுக்கும் என்ன நடந்தது என்று முதலில் புரியவே இல்லை. அதிலும் எதிரில் தீரஜைக் கண்டதும், விழிகள் வியப்பில் விரிய, “நீ எப்ப வந்த?” எனக் கேட்டாள் ஆச்சர்யக் குரலில்.

அவள் வியப்பை உணராதவன், “அறிவில்ல. வீட்ல தனியா இருக்கும் போது இப்படி தான் கேர்லெஸ் – ஆ இருப்பியா? கீழ விழுந்து அடி பட்டுருந்தா என்ன ஆகி இருக்கும். நீ வீட்ல இருக்க போறன்னா, உன் ஃப்ரெண்டை உன் கூட இருக்க வச்சுருக்க வேண்டியது தான. எதையும் யோசிச்சு முடிவெடுக்குற பழக்கம் உனக்கு எப்பவுமே இருக்காதுல?” சற்றே கடுமையுடனே அவன் வார்த்தைகள் வெளிவர, கண்ணில் நீர் முட்டி நின்றது அவளுக்கு.

அவன் கூறியது போல, மயங்கி விழுந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற பயத்துடன் குழந்தையை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டவளுக்கு, தீரனை எண்ணிக் கோபம் ஒரு புறம் எழுந்தது.

“ஆமா, யோசிக்கிற அறிவு எனக்கு இல்ல தான். அதான் எனக்கும் சேர்த்து அண்ணனும் தம்பி நல்லா யோசிக்கிறீங்களே! உங்க ரெண்டு பேருக்கும் நான் என்னடா பாவம் பண்ணுனேன். அவன் என்னன்னா அக்ரிமெண்ட் மேரேஜ்ன்னு சொல்லி, ஏதோ ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கி கல்யாணமே நடக்காம என்னை முட்டாள் ஆக்கி இருக்கான். நீ என்னனா, நான் உன் பொண்டாட்டியே இல்லைன்னு தெரிஞ்சும் என் கூட குடும்பமே நடத்திருக்க. என்ன தாண்டா வேணும் உங்க ரெண்டு பேருக்கும். ஏண்டா என்னை இப்படி பைத்தியக்காரி ஆக்குறீங்க.” என்று அவன் சட்டையைக் கொத்தாக பற்றினாள்.

அதனை இலகுவாக எடுத்து விட்டவன், “அக்ரிமெண்ட் மேரேஜ்ன்னு தெரிஞ்சும் நீ ஏன் அதை பண்ணிக்கிட்ட? என்னைக்காவது ஒரு நாள் அவன் மனசு மாறுவான்னா? என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அவள் முறைத்தாள்.

இப்போதும் அவள் மனதில் தீரன் தான் இருக்கிறான் என்ற உண்மை அவனைக் கூறு போட்டது. அவன் மேல் பிடித்தம் இல்லாமல், நிச்சயமாக இத்திருமணத்தை செய்திருக்க மாட்டாள் என்று ஆணித்தரமாக அவன் மனது நம்பவும் செய்தது.

‘உன்னால தான்டா என் வாழ்க்கையே இப்படி திசை மாறிடுச்சு…’ எனக் கத்த வேண்டும் போல இருக்க, அதனை விடுத்து, “அவன் எதுக்கு இப்படி போலியா என்னை கல்யாணம் பண்ணுனான்?” என்றாள் கேள்வியாக.

“என்னை கேட்டா? என்கிட்ட கேட்டா கல்யாணம் பண்ண போனீங்க?” என்று அசட்டையாக பதில் கூறியவனின் கன்னத்தில் பட்டென அடித்தாள்.

“உனக்கு தெரியும். உண்மையை சொல்லு. ரெண்டு பேரும் இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுக்க பிளான் பண்ணுனீங்க. அன்னைக்கு என்னை கொலை பண்ண பார்த்தானே தீரனோட ஃப்ரெண்டு அவன் யாரு?” என்றவளின் குரலில் எனக்கு தெரிந்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் வழிந்தோடியது.

கன்னத்தை தடவிக் கொண்டவன், “இப்போ தெரிஞ்சு என்ன பண்ண போற? எப்படினாலும் என்னை விட்டு போக தான போற…” எனக் கேட்டவனின் கண்கள், ‘போய்டுவியாடி?’ என்ற ஏக்கத்தை சுமந்திருந்தது.

‘போக சொல்லிடுவியாடா!’ என்பது போல பார்த்து வைத்தவள், பதில் கூறாமல் அமைதி காக்க, அவள் கண்களில் என்ன கண்டானோ நெற்றியை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“உன்னையும் என்னையும் அட்டேக் பண்ண வந்தவன் பேர் ஆண்ட்ரூஸ். தீரனோட ஃப்ரெண்ட்.” என்று நிறுத்திட,

“ரொம்ப பெரிய ரகசியம் இது. அதான் அந்த லூசுப்பையன் தீரனோட ஃப்ரெண்டுன்னு எனக்கே தெரியுமே…” என்றாள் கடுப்பாக.

அவளை அழுத்தத்துடன் ஏறிட்டவன், “ஐ மீன்… வெறும் ஃப்ரெண்ட் இல்ல பாய் ஃப்ரெண்ட்.” எனப் பூடகமாக கூறியதில், “ப்ச்… ஆமா, அவன் பாய் தான அப்போ பாய் ஃப்ரெண்டா தான் இருக்க முடியும்! சொல்ல இஷ்டம் இல்லைன்னா விட்டுடு. அதை விட்டுட்டு என்னை இன்னும் கொஞ்சம் பைத்தியக்காரி ஆக்காத” என்றவளுக்கு கோபத்தில் மூக்கு நுனி சிவந்தது.

ஒரு கணம் அதையும் விடாமல் ரசித்தவன், “நீ ஏற்கனவே பைத்தியம் தாண்டி பைத்தியம். நான் சொல்றதை சரியா புரிஞ்சுக்க. ஆதுவுக்கு பொண்ணுங்க மேல இன்டரஸ்ட் இல்ல.” என அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில் கூற,

“அது என்னமோ உண்மை தான். அவன் ஒன்னும் உன்னை மாதிரி பொறுக்கி இல்ல” என்று முணுமுணுத்தாள்.

அவ்வார்த்தை முடியும் முன்னே, அவளிதழ்கள் அவனிதழ்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. “ம்ம்…” என ரீங்காரமிட்டு, விலகிட எத்தனித்தவளால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. தீரஜின் புஜங்களை மென்கரங்களால் அடித்து தடுக்க, அவனோ அக்கரங்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

ஏற்கனவே அவனின்றி ஏக்கம் கொண்டவளுக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் தடுக்க இயலாது போக, கண்ணை மூடி அம்முத்ததில் மூழ்கத் தொடங்கினாள். அவள் இசைந்ததை உணர்ந்ததும், சட்டென விலகியவன், நக்கலாக பார்க்க, அவன் விட்டதை உணராமல் இன்னும் கண்களை மூடி அந்த இனிய உணர்வில் இருந்து விடுபட இயலாமல் தவித்தாள்.

‘நல்லா தவிடி. இத்தனை மாசமா என்னை தவிக்க விட்டீல…’ என நமுட்டு சிரிப்பு சிரித்தவன், “பொறுக்கின்னு அப்போ அப்போ ப்ரூவ் பண்ணணும்ல” என்றான் அமர்த்தலாக.

அதில் தான் சுயநினைவுக்கு வந்த சஹஸ்ரா, அவனைக் காண இயலாமல் தடுமாறிப் பின், “மனுஷக்குரங்கு” என்று குனிந்து உதட்டை மட்டும் அசைத்தாள்.

அதையும் கண்டுகொண்ட ஆடவனோ, “ஐ காட் யூ! எஸ். மனுஷக்குரங்கு தான்” என்றதில், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளின் அதரங்கள் மீண்டும் சிறைசெய்யப்பட்டது.

இம்முறை, நிமிடங்கள் கடந்து நீண்ட முத்தம், இருவரின் இத்தனை மாத பிரிவிற்கும் ஆறுதலாக அமைய, சஹஸ்ராவிற்கு தான் ஏற்றுக்கொள்ளவும் இயலாமல், அவனை விட்டு விலகவும் இயலாமல் நொந்தாள்.

பொறுமையாக அவளிதழிற்கு விடுதலை அளித்தவன், “எனக்கு வேற ஏதாவது பேர் வச்சு இருக்கியா?” என அர்த்தப்பார்வைப் பார்க்க, சிவந்து காயமான இதழ்களை அழுந்தத் துடைத்தபடி உர்ரென்ற முகத்துடன் மறுப்பாக தலையாட்டினாள்.

“ம்ம். நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்.” என்று தெரியாதவன் போல தாடையில் கை வைத்து கேட்க, “தீரனுக்கு பொண்ணுங்க மேல இன்டரஸ்ட் இல்லன்னு சொன்ன.” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“ஹ்ம்ம்” என்னும் போதே பெருமூச்சு ஒன்று வெளியாக, “ஹி இஸ் அ ஹோமோசெக்ஸுவல் (homosexual). அண்ட் ஹி லவ்ட் ஆண்ட்ரூஸ்.” என்று பெரிய குண்டை தூக்கி போட, அவளோ திருதிருவென விழித்தாள்.

“என்னது?” எனக் கத்தியே விட்டவள், “நீ சீரியஸா தான் பேசுறியா?” என்றாள் சந்தேகமாக.

அவளின் நம்பாத பார்வையில் அடிபட்டவன், “இந்த டேஷுக்கு தான் இவ்ளோ நாள் நான் உங்கிட்ட சொல்லல. அவன் ஆண்ட்ரூஸ தான் லவ் பண்ணுனான். ரெண்டு பேரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தாங்க” என சினத்துடன் எடுத்துரைக்க அவள் இன்னுமாக விழித்தாள்.

“என்ன இன்னும் நம்பலையா?” என்று கோபத்துடன் பார்த்தவன், போனை எடுத்து ‘கூகிள் ட்ரைவில்’ தீரன் சேமித்து வைத்த புகைப்படங்களை அவளிடம் காட்டினான்.

அதில், தீரனும் ஆண்ட்ரூஸும் நெருக்கத்துடன் பல விதமான போஸ்களை கொடுத்திருந்ததோடு, இதழ் முத்தம் கொடுத்துக் கொள்வது போல புகைப்படமும் இருக்க, சஹஸ்ராவின் முகம் அஷ்டகோணலாகியது.

பதட்டத்துடன் போனை தள்ளி வைத்தவள், “என்ன கருமம் இது! சே!” என்றாள் எரிச்சலாக.

இன்னும் கூட அவளால் நம்ப இயலவில்லை. இதுவரை ஓரினசேர்க்கை பற்றி படித்து தான் இருக்கிறாள், ஆனால் இப்போது நேரில் காணும் போது அசூசையாக இருந்தது.

சஹஸ்ராவின் முகச் சுளிப்பை கண்ட தீரஜிற்கு கோபம் வலுப்பெற, “ஸ்டாப் திஸ். அவன் பெர்சனலை விமர்சனம் பண்ற உரிமை உனக்கு இல்லை சஹஸ்ரா. அது அவன் லைஃப். சம் ஹார்மோன் ப்ராபளம்னால, ஹீ காண்ட் மேக் லவ் வித் கேர்ள். இன்னொரு தடவை முகத்தை அப்படி வச்ச அறைஞ்சுடுவேன்.” ஆழ்ந்த குரலில் அவளை அதட்டினான்.

அவளில்லை, இதற்கு முன்னும் யார் அவனை தவறாக பேசினாலும், ஏன் எண்ணினாலும் கூட சண்டைக்கு சென்று விடுவான். அது அவன் வாழ்க்கை. அதைப் பற்றி கருத்து கூறும் உரிமை யாருக்கும் இல்லை என்று அவனுக்காக வாதிடுபவன்.

தீரஜின் கோபத்தைக் கண்டு தன் முகத்தை சீராக்கிக் கொண்டவள், “அது அவன் லைஃப் என்னமோ பண்ணிட்டு போறான். தேவை இல்லாம என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க கேட்டான். எதுக்கு இவ்ளோ டிராமா?” என்றாள் புரியாமல்.

“எல்லாம் உன் அப்பாவால தான். உன் அப்பா மேலயும் உன் மேலயும் இருக்குற கோபத்துல அந்த இடியட் இவ்ளோ வேலை பார்த்து இருக்கான்…” என சகோதரனைக் கண்டித்தவனுக்கு ஆற்றாமையாக இருந்தது.

கண்கள் கலங்கி இருக்க, அதனை அவளுக்கு காட்டாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சஹஸ்ராவிற்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை. “என்ன சொல்ற? என் அப்பா மேலயும் என் மேலயும் கோபமா? நாங்க என்ன பண்ணுனோம்? இதுக்கு முன்னாடி நான் உங்க ரெண்டு பேரையும் பார்த்தது கூட இல்ல. அதிலயும் என் அப்பா மத்தவங்க கோபப்படுற மாதிரி நடந்துக்க கூட மாட்டாரு.” என்றாள் குழம்பி.

“யாரு… உன் அப்பா? அதை நீ தான் நம்பிக்கணும். மத்தவங்ககிட்ட எப்படியோ, ஆனா, ஆதுகிட்ட அவரு நடந்துக்கிட்ட விதம் கொஞ்சம் கூட சரி இல்ல. அவரோட பிஸினஸ்ல பார்ட்னரா வர்றதுக்காக அவருகிட்ட டீலிங் பேசுனா, ஒன்னு சரின்னு சொல்லணும் இல்லைன்னா வேணாம்ன்னு சொல்லணும். அதை விட்டுட்டு அவனோட லிவ் – இன் ரிலேஷன்ஷிப் பத்தி தப்பா பேசி இருக்காரு. அந்த ரைட்ஸ யாரு அவருக்கு குடுத்தது. அவரு மட்டும் இல்ல, அவரோட சேர்ந்து நீயும் தான் பேசி இருக்க…” என்றதில், அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.

“ஐயோ… நான் தான் சொல்றேனே. இதுக்கு முன்னாடி நான் உங்க ரெண்டு பேரையும் பார்த்தது கூட இல்லன்னு. அப்பறம் எப்படி நான் தப்பா பேச முடியும். என் அப்பாவும் அப்படி பேசுற ஆள் இல்ல.” என்றாள் முறுக்கிக் கொண்டு.

“உன் அப்பா பேசி இருக்காரு. நீ அவன்கிட்ட நேரடியா இல்லைனாலும், நீயும் உன் அப்பாவும் அவனை பத்தி தனியா அசிங்கமா பேசி இருக்கீங்க.” என அவன் உறுதியாக கூறி முறைக்க,

“உளறாத தீரா. சத்தியமா எனக்கு இந்த மாதிரி யாரை பத்தியும் பேசுன ஞாபகமே இல்ல.” என்று நெற்றியை நீவிக் கொண்டவள், சிறிது நேரம் சிந்தித்து விட்டு, “தீரன் என் வீட்டுக்கு வந்துருக்கானா?” எனக் கேட்டாள்.

“ம்ம். ஏதோ டீலிங் பேசுறதுக்கு உன் அப்பா உன் வீட்டுக்கு தான் அவனை வர வச்சு இருக்காரு…” என்றதில், சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வினை சிந்தித்தாள்.

அப்போது தான் சஹஸ்ராவின் தந்தை விஸ்வநாதனுக்கு உடல்நிலை சரியத் தொடங்கிய நேரம். அதனால் முழு மூச்சாக அலுவலகம் செல்லாமல், சில டீலிங்கை வீட்டிலேயே நடத்தினார். அன்றும், தீரனுடன் மீட்டிங் இருப்பதனால், வீட்டுத் தோட்டத்திலேயே மீட்டிங் ஸ்பேஸ் அமைத்து, தீரனுடன் தான் பேசிக் கொண்டிருந்தார்.

அறை பால்கனி வழியே அவர்கள் பேசுவது தெரிந்தாலும், தீரனின் முதுகுப் புறம் மட்டுமே சஹஸ்ராவிற்கு தெரிந்தது.

மரியாதை நிமித்தம், தீரனும் விஸ்வநாதனும் வியாபாரத்தை பற்றி விவாதிக்க, அவருக்கும் தீரனின் வியாபார நுணுக்கம் பிடித்தே இருந்தது. அப்போது அவனைப் பற்றி அவருக்கும் முழுதாக தெரியவில்லை. அந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே, அவரின் பி. ஏ தீரனைப் பற்றி காதில் ஓத, அதில் தான் அவரின் நெற்றியில் சிந்தனை முடிச்சு விழுந்தது.

வியாபாரத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்விலும் ஒழுக்க நெறிகளை எதிர்பார்ப்பவர் விஸ்வநாதன். அப்படிப்பட்டவருக்கு அவனின் ஹார்மோன் பிரச்சனை எல்லாம் புரியாமல் போக, அவனை எப்படி தவிர்ப்பது என்று சிந்திக்கலானார்.

“ஒரு நிமிஷம். காபி குடுச்சுட்டு இருங்க.” என்று கூறி விட்டு யோசனையுடன் வீட்டிற்குள் சென்றவரை வினோதினி, “என்னப்பா… பயங்கர யோசனைல இருக்கீங்க.” எனக் கேட்டாள்.

எப்போதும் வியாபார சம்பந்தமாக சஹஸ்ராவே அவரிடம் பேசுவாள். அன்று வினோதினி ஆர்வமாகக் கேட்டதும், இதனைப் பற்றி பேசினாலாவது அவளுக்கும் தொழில் பற்றிய சிந்தனை வரும் என எண்ணி, “அது ஒன்னும் இல்லம்மா, தீரன்னு நல்ல பிசினெஸ் மேன் தான். நம்மகிட்ட பார்ட்னர்ஷிப் வச்சுக்குறதை பத்தி பேசுனாரு.” என்று நிறுத்தினார்.

“சரி. நல்ல பிசினஸ் மேன் தான அப்பறம் என்னப்பா யோசனை?” என்றவளுக்கோ, வெளியில் செல்ல தந்தையிடம் பணம் கேட்க வேண்டி அவசரம். ஆகவே அவர் போக்கிலேயே பேச்சு கொடுத்தாள்.

“நல்லா தொழில் பண்ற பையன் தான். ஆனா, கேரக்டர் சரி இல்லயே” என்றதில், “நீங்க என்ன பொண்ணையா குடுக்க போறீங்க” என்றாள் நக்கலாக.

“என்னமா நீ இப்படி சொல்லிட்ட. எனக்கு என் தொழில் இன்னொரு குடும்பம்ன்னு உனக்கு தெரியாதா. மாப்பிள்ளை பாக்குறதை விட, ரொம்ப சிரத்தை எடுத்து தான் என் பிஸினஸுக்கான பார்ட்னர்ஸ செலக்ட் பண்ணுவேன். அப்படி இருக்கும் போது, முறை தவறி கண்ட மேனிக்கு இருக்குற பையன்கிட்ட என் பொண்ணை குடுக்குறதும் பிசினஸை குடுக்குறதும் ஒன்னு தான்.” என ஆர்ப்பரிக்க,

“அதுவும் சரி தான்ப்பா. அப்பறம், நம்ம ஆபிஸ் முழுக்க ஆம்பளையும் ஆம்பளையும் லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. எதுக்கும் நீங்களும் அவன்கிட்ட இருந்து தள்ளி இருந்துக்கங்க, மேல பாஞ்சுற போறான்.” என்று சிரித்திட, அவரோ மகளை முறைத்தார்.

ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வீட்டு வாசல் வரை வந்த தீரன், அவர்களின் உரையாடலைக் கேட்டு கொதிநிலைக்கு சென்று விட்டான். அப்போதும் அவர் யாருடன் உரையாடினான் என்று பார்க்கவில்லை. இறுகிய முகத்துடன் மீண்டும் அதே இருக்கையில் சென்று அமர்ந்து விட்டவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சினம் பொங்கியது.

அவர்களின் பேச்சைக் காதில் வாங்கியபடியே, “யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். யாருப்பா உங்க மேல பாயப்போறா?” என்று கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த சஹஸ்ரா அவர்கள் அருகில் வர,

“அதுவா, அது ஒரு ரெண்டுங்கெட்டான். அப்பா, நம்ம ஆபிஸை ‘கே’ கிட்ட குடுத்து, ‘கே’ ஆபிஸா மாத்த போறாராம்” என்று வினோதினி சலிப்பாக உரைத்தாள்.

அப்போதும் புரியாமல் இருவரையும் பார்த்தவள், நேரம் செல்வதை உணர்ந்து அவள் பேசியதன் உட்பொருளை உணராமல், “எதையாவது உளறாதக்கா. எனக்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன்.” என்று வெளியில் செல்ல, அவளுடன் விஸ்வநாதனும் வெளியில் வந்தார்.

இருவரும் ஒன்றாக வருவதைக் கண்டவன், இத்தனை நேரமும் தன்னைப் பற்றி பேசியது சஹஸ்ரா தான் எனத் தவறாக எண்ணி, அவள் மீது வஞ்சத்தை வளர்த்தான். அப்போதும் அவள் தீரன் புறம் திரும்பவே இல்லை.

‘உங்களுக்கு பிஸினஸும் பொண்ணும் ஒன்னு தானா. அப்போ கடைசிவரை உங்க பிஸினஸும் என்கூட தான் இருக்கும் உங்க பொண்ணும் என் கூட தான் இருப்பா. வாழாவெட்டியா…’ என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டவனை மேலும் எரிய வைக்கும் பொருட்டு,

அவனிடமே, “எனக்கு ஒழுக்கம் தான் முக்கியம். அதனால இந்த டீலிங் வேண்டாம்” என்று கூறி விட, அத்தனை பழி உணர்வையும் மனதில் அடக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான் தீரன் ஆத்ரேயன்.

“என் அப்பா அக்காகிட்ட பெருசா பிசினஸ் பத்தி எல்லாம் பேசுனது இல்ல. அன்னைக்கு தான் சீரியஸா பேசிக்கிட்டாங்க. அப்போ கூட இந்த மாதிரி தான் பேச்சு அடிபட்டுச்சு. ஒருவேளை அன்னைக்கு வந்தது தீரனா தான் இருக்குமோ. அப்பாவும் வினோ அக்காவும் அவனைப் பத்தி தான் பேசி இருப்பாங்களோ!” என்று சந்தேகமாக கேட்டிட, தீரஜிற்கு தான் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“முட்டாள்… முட்டாள்…” என்று எங்கோ பார்த்துத் திட்டியவனை கண்டு மிரண்டவள்,

“எனக்கு அந்த ஒரு இன்ஸிடண்ட் தான் ஞாபகம் இருக்கு தீரா. நிஜமா நான் யாரை பத்தியும் தப்பா பேசல” என்றவளுக்கு கண்ணில் நீர் தேங்கி நின்றது.

அதன் பிறகே அவள் புறம் திரும்பியவன் மெல்ல கனிந்து, “நான் உன்னை சொல்லல சஹி. அவனை சொன்னேன். வினோதினி பேசுனதை நீ பேசுனன்னு நினைச்சு பழி வாங்குறேன் மண்ணாங்கட்டின்னு… ஊஃப்… இப்ப என்கூட இல்லாமலேயே போய்ட்டான். ஹீ வாஸ் மை சோல்மேட். யூ நோ! கடைசில என்னாலேயே அவன் செத்துட்டான்.” இறுதி வரிகளை கூறும் போதே, அவன் குரல் வேதனைகளை உமிழ்ந்தது. கண்ணீர் அவன் சொல் மீறி கன்னங்களின் வழி பயணிக்க, சஹஸ்ராவிற்கு தான் என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

என்ன இருந்தாலும், தந்தையும் தமைக்கையும் அப்படி பேசி இருக்க வேண்டாம். என எண்ணினாலும், பழி வாங்குகிறேன் பேர்வழி என்று எதற்காக திருமணம் செய்தான்… என்றே புரியவில்லை.

அதற்கு முன், தீரஜை சமன்செய்யும் பொருட்டு, “அது ஒரு ஆக்சிடென்ட் அவ்ளோ தான். நீ கூட இருந்தாலும் இல்லைன்னாலும் அது நடக்கணும்ன்னா நடந்துருக்கும் தீரா.” என்றாள் மென்மையாக.

மறுப்பாக தலையசைத்தவன், “இல்லடி. முழுக்க முழுக்க என்னால தான். நான் தான் காரணம்.” என்று மொத்த பழியை தன் மேல் போட்டுக் கொண்டவனை பரிவாகப் பார்த்தவள், “அதெப்படி நீ காரணமாக முடியும். நீ என்ன வேணும்ன்னா, அவன் கூட அந்த நேரத்துல சண்டை போட்ட…” என்றவள் நினைவு வந்தவளாக,

“ஆமா, அவன் ஏன் அப்போ குடிச்சுருந்தான். நீ ஏன் அவனை அடிச்ச?” எனக் கேட்டாள் வினவளாக.

ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், “உனக்காக தான்!” என்று முடித்து விட, அவளுக்கு மீண்டும் மயக்கம் வருவது போல இருந்தது.

“எ… எனக்காகவா?” எனத் தடுமாறியவள், பின் தன்னை மீட்டு, “ஏன், நீ ஒன் – டே ஸ்டே பண்ண கூப்பிட்ட பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டதுனாளயா?” என்றாள் எகத்தாளமாக.

அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன், “நான் ஒன் – டே ஸ்டே தான் கேட்டேன். நீ தான் லவ் மேரேஜ்ன்னு சொல்லி, நிறைய நைட் ஸ்டே பண்ணிட்ட…!” என அழுத்தம் திருத்தமாக அவளது வயிற்றை ஒரு நொடி ஊடுருவிட, கண்ணை சுருக்கி அவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.

சரியாக அக்கேள்வியை கேட்கும் நேரம், நிக்கோலஸும் தேவிகாவும் அங்கு வர, அவர்களும் தீரஜை எதிர்பார்க்கவில்லை. அத்துடன் நிக்கோலஸ் வேறு மரண பயத்தில் விழித்து, நைசாக நழுவப் பார்க்க, அவனைக் கண்டு விட்ட தீரஜ், “டேய்… உன் தொங்கச்சி ஏதோ கேட்குறால்ல வந்து பதில் சொல்லுடா…” என உறுத்து விழித்தான்.

“ஹி ஹி… எதுக்கு மச்சி புருஷன் பொண்டாட்டி பிரச்சனைல நான் புகுந்துகிட்டு… நீயே பார்த்துக்க…! எடக்கு மடக்கா பேசுனது நீ தான.” என்றிட,

“அப்படி பேச வச்சது நீ தானடா! நாயே… ஒழுங்கா உள்ள வா!” என்று எழுந்து அவன் புறம் செல்ல, “இல்ல மச்சி பரவாயில்ல நான் இங்க இருந்தே பேசிக்கிறேன்.” என்று மெதுவாக பின்னால் நகர்ந்திட, தேவிகா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

சஹஸ்ராவோ குழப்பத்துடன் “இங்க என்ன நடக்குது?” என்று பார்க்க,

தேவிகா தான், “சஹா… உன் புருஷன் நம்ம ஆபிஸ்க்கு ஏன் பொண்ணோட வந்தான்னு நீயே கேட்டு தெரிஞ்சுக்க. மறக்காம சொல்லிடு தீரஜ்.” என நக்கலாக சிரித்தவள், தீரஜின் சினப் பார்வையில், “மறக்காம கேட்டு தெரிஞ்சுக்க சஹா.” என்று மீண்டும் கூறி விட்டு நிக்கியுடன் ஜகா வாங்கினாள்.

‘இதென்ன சிதம்பர ரகசியமா… பொண்ணோட எதுக்கு வந்துருப்பான். அவ கூட கூத்தடிக்க தான்…’ என தனக்குள் பேசிக் கொண்டவள், இருந்தும் தேவிகா கூறியதற்காக, விடை தெரியும் பொருட்டு அவனைப் பார்த்தாள்.

தானாக கேட்காமல் சொல்ல மாட்டான் என்றுணர்ந்தவள், எதுக்கு பொண்ணோட வந்த… எனக் கேட்டாள் அவனைப் பாராமல்.

இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தவன், “என்னை அடிச்சு, அன்னைக்கு நடக்க வேண்டிய பெண் பார்க்கும் படலத்தை கெடுத்து விட்டுட்டு, இப்ப வந்து கேள்வி கேக்குறியாடி. உன்னால ரோசியை மிஸ் பண்ணிட்டேன்.” என உதட்டைப் பிதுக்கி பாவம் போல கூறியவனை பே வெனப் பார்த்தாள் பாவை.

யாரோ இவள் (ன்)
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
81
+1
4
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்