2,260 views

தன் நெஞ்சிலேயே மயங்கி விட்டவளின் கேசத்தை வருடி விட்ட ஜிஷ்ணு தர்மன் அவளின் மணிக்கட்டில் போடப்பட்டிருந்த கட்டையே வெறித்தான்.

கட்டிட்டு முடித்த மருத்துவர், “அவங்க வலில மயங்கி இருப்பாங்க சார். கொஞ்ச நேரத்துல கான்ஷியஸ்க்கு வந்துடுவாங்க. ரொம்ப வீக் – ஆ இருக்காங்கன்னு ஃபீல் பண்ணா, ஒரு ட்ரிப்ஸ் கூட போட்டுக்கலாம்.” என்று கூறி விட்டு சென்ற பின்னும், அவளை விலக்கும் எண்ணம் இல்லை அவனுக்கு.

காயப்பட்ட கரத்தை மென்மையாய் எடுத்து தடவி விட்டவன், அவ்வப்பொழுது அவள் நெற்றியில் மென் முத்தம் பதிப்பிக்க, மற்றவர்கள் தான் நிற்பதா செல்வதா என்று புரியாது நெளிந்தனர்.

குமரனுக்கு தான் வருத்தமாகி போய் விட்டது.

“சாரி மாப்ள. இவள் இப்படி நடந்துப்பான்னு எதிர்பார்க்கல. உண்மையை மறைக்க மறைக்க இன்னும் பிரச்சனை பெருசாகிட்டே போச்சு. அதான்…” என தயங்கியபடி கூற, நிமிர்ந்து அவனை பார்வையாலேயே வதம் செய்த ஜிஷ்ணு,

“அதுக்கு எல்லாத்தையும் சொல்லுவியா?” என்று கடிந்தான்.

அதில் அவன் முகம் வாடி விட, “மூணு பேருக்கும் வெளிய போற ஐடியா இருக்கா? இல்ல… இன்னும் கொஞ்ச நேரம் ஃபிரீ ஷோ பார்க்கணுமா?” புருவம் உயர்த்தி ஜிஷ்ணு கேட்ட அடுத்த நொடியில் மூவரும் படக்கென வெளியில்  சென்றிருந்தனர்.

‘பிடிவாதம் பிடிச்சவ… கோபத்துல அவள் கையைவே உடைச்சுட்டு இருக்கா! ராட்சசி. விட்டுட்டு போய் தொலையவும் முடியல. கூட இருக்கவும் பிடிக்கல.’ என வாய்க்குள்ளேயே முனங்கிக் கொண்டிருந்த ஜிஷ்ணுவிற்கு எரிச்சலாக இருந்தது.

‘அதான், இவ சங்காத்தமே வேணாம்ன்னு அப்பவே தலை முழுகியாச்சுல. அப்பறம் என்ன இதுக்கு இந்த கரிசனம்.’ என தன்னைத் தானே கடிந்து கொண்டவன், அவளை வீம்பாக படுக்கையில் கிடத்தி விட்டு எழுந்து கொள்ள, அவனிடம் இருந்து விலகியதுமே மயக்கம் தெளிந்தது அவளுக்கு.

வலியில் முகத்தை சுருக்கி கண்ணைத் திறந்தவளுக்கு, எதிரில் தன்னை பார்த்தபடி நின்றிருந்த ஜிஷ்ணு தர்மனின் முகமே தெரிய, அடி படாத மற்றொரு கையை ஊன்றி எழ முயன்றாள்.

ஏனோ, முந்தைய நாள் அலைச்சலும், ஏற்பட்ட அதிர்ச்சியும் அவள் தேகத்தை வெகுவாய் சோர்வாக்க, முதலில் எழ முடியாமல் மீண்டும் சரிந்து விட்டாள்.

அதனை கையை கட்டிக்கொண்டு சாவகாசமாக வேடிக்கை பார்த்த ஜிஷ்ணு, லேசாக கூட தூக்கி விட முனையவில்லை. அவளும் அவனைக் காணாமல், மறுமுறை எழ முயற்சி செய்து எழுந்து அமர்ந்து கொண்டாள்.

மணிக்கட்டில் இருந்து உள்ளங்கை முழுக்க கட்டு போட்டிருக்க, மெல்ல கையைத் தூக்கி பார்த்தவள், பெருமூச்சு விட்டு, “யாரு அவனுங்க?” என்றாள் எங்கோ வெறித்தபடி.

“யாரு?” என்பது போல ஜிஷ்ணு பார்க்க, அவனை நோக்கி திரும்பியவள், கண்ணில் வெறுமையை ஏற்றி, “ராதியை ரேப் பண்ண அந்த நாலு பேர் யாரு?” எனக் கேட்டாள்.

சற்றே இறுக்கத்தை தளர்த்தியவன், “ரெண்டு பேரு ஊர்க்காரனுங்க. எதிர்கட்சில ஆளுங்க தான்…” என்று கூறி முடிக்கும் முன்பே, “எங்க அவனுங்க?” என்றாள் வேகமாக.

“ஆள் தெரிஞ்சும், இத்தனை வருசமா உயிரோடையா விட்டு வச்சுருப்பேன். கொன்னுட்டேன்.” எனத் தோளை குலுக்கினான் ஆடவன்.

“மீதி ரெண்டு பேரு?” அவள் புருவம் சுருக்கி வினவ, அவன் முகத்திலோ ரௌத்திரம் தாண்டவமாடியது.

“தெரியல. எந்த நாய்ங்கன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல…” என்றான் பல்லைக்கடித்து.

“என்ன சொல்ற? நீ புடிச்ச அந்த ரெண்டு பேரை கேட்டு இருக்கலாமே?” வசுந்தரா குழம்பினாள்.

பேசும் ஆர்வத்தில், மீண்டும் கட்டிலில் அமர்ந்து விட்டவன், “அன்னைக்கு ராதி சொன்னதை வச்சு, அந்த குறிப்பிட்ட நேரத்துல மினிஸ்டர் யாருக்கு போன் பண்ணாருன்னு விசாரிச்சேன். அப்ப தான், அவனுங்க சிக்குனானுங்க.” என யோசித்தபடி பேசியவனின் முகம் சிவந்து ஜொலித்தது.

“தெருப்பொறுக்கி நாயே! எவ்ளோ தைரியம் இருந்தா பொண்ணு மேல கை வச்சுருப்பீங்க.” என்று வெறி கொண்டு உறுமியவன், அவ்விருவரையும் இரத்தம் தாறுமாறாக வெளியேறும் அளவு அடித்திருந்தான்.

“தர்மா வேணாம் தர்மா. அடிக்காத தர்மா. குடி போதைல தெரியாம பண்ணிட்டோம்” என்று அவர்கள் கெஞ்ச, சிறிதும் நிதானமின்றி பேயடி அடித்த ஜிஷ்ணு, இருவரின் காலின் மீது ஏறி நின்று, “யாரு உங்க கூட்டாளிங்க. உங்க கூட இருந்த மீதி ரெண்டு பேரு யாரு?” எனக் கேட்க,

இருவரும் ஒரு நொடி தடுமாறி விட்டு, “எங்களுக்கு தெரியல தர்மா. வைன் சாப்ல ஒண்ணா சேர்ந்து குடிச்சோம். அப்படியே பேசிட்டே தோப்புக்கு வந்தோம்… அங்க தான் அந்த புள்ளைய…” என்ற வாசகம் முடியும் முன், வாயிலேயே குத்தினான்.

“பொய்யி! பொய்யி! சாக போற நேரத்துலயும் பொய்யி” என கர்ஜித்தவன், முகமே சிதையும் அளவு இருவரின் முகத்திலும் குத்தி இருந்தான்.

மேலும் வெறி அடங்காமல், இடுப்பிற்கு கீழே பாவமே பார்க்காமல் ஏறி மிதித்திட, இருவரும் வலியில் துடித்தனர்.

“ஒழுங்கா உண்மைய சொல்லு. உடனே சாகடிக்கிறேன். இல்ல… ரொம்ப வலிச்சு சாகனும்” என்று எச்சரித்த ஜிஷ்ணுவிடம் இருந்து விடுபட இயலாமல் ஊசலாடியது இரு உயிரும்.

அந்நேரம் தான், அமைச்சர் நீலகண்டன் அங்கு வந்தவர், அவ்விருவர் நெஞ்சிலும் காலால் எட்டி மிதித்து, “குடிச்சுட்டு, ஒரு பொண்ணோட வாழ்க்கையைவே நாசம் பண்ணிருக்கானுங்க. இவனுங்களை கொன்னு போடு தர்மா!” என்றார் சினத்துடன்.

அதற்குள் அவர்கள் இருவருமே பேச்சு மூச்சற்று இருக்க, அடியாள் ஒருவன் ஓடி வந்து அவர்களை சோதித்து விட்டு, “தர்மா செத்துட்டானுங்க…” என்றதில், அவனுக்கோ மற்ற இருவரும் யாராய் இருக்கும் என்ற எண்ணமே சிந்தையில் ஓடியது.

“விடு தர்மா. அந்த பொண்ணுக்கு நடத்த அசம்பாவிதம் யாருக்கும் தெரிய வராது. நான் பாத்துக்குறேன்…” என அவர் கூறியதில், அவனோ “எனக்கு மீதி ரெண்டு பேரு யாருன்னு தெரியணும்.” என்றான் பிடிவாதமாக.

அவனை சாந்தப்படுத்திய நீலகண்டன், “முதல்ல அமைதியா இரு. சீக்கிரமே அவனுங்க யாருன்னு கண்டுபிடிச்சு, வெட்டி போடலாம். இப்போதைக்கு இதை இப்படியே விடு” என்றதில், அவன் கடினமானான்.

அவரைக் கூர்மையாக பார்த்தவன், “இந்த பொறுக்கிங்க ரெண்டு பேரும் எதிர்க்கட்சி ஆளுங்க தான தலைவரே. இவனுங்களுக்கு நீங்க ஏன் போன் பண்ணீங்க?” என்று அழுத்தமாகக் கேட்டதில் அவரிடம் ஒரு பதற்றம்.

“அது… அது… எலக்ஷன் ஆரம்பிக்க போகுதுன்னு உனக்கு தெரியும்ல தர்மா. இந்த தடவை வெள்ளைப்பாளையத்துல நம்ம கட்சி தோத்துச்சுன்னா, அப்பறம் எப்பவும் இங்க நம்ம பருப்பு வேகாது. ஓரளவு சில தொகுதில நம்ம வெற்றிக்கான வேலைய பார்த்தாச்சு. ஆனா, வெள்ளைப்பாளையம் தான் இருக்குறதுலயே ரொம்ப முக்கியமான தொகுதி. போன எலக்ஷன் மாதிரி இது கைய விட்டு போச்சுன்னா, ஆட்சியே மாறினாலும் மாறும். அதான், இவனுங்க ரெண்டு பேரையும் செட் பண்ணி, எதிர்கட்சில சேர சொல்லி, அங்க நடக்குறதை நோட்டம் விட சொன்னேன்.” என்றவர் எரிச்சலாக,

“இவனுங்க என்னன்னா இவ்ளோ பெரிய பிரச்சனைய இழுத்துட்டு வந்து இருக்கானுங்க” என்று முன்னெற்றி வழுக்கையை சொரிந்தார்.

“அது போகட்டும். எனக்கு அந்த ரெண்டு பேரும் வேணும். இப்பவே!” அவன் நிலையாய் நிற்க,

“உண்மையை சொல்ல வேண்டியவனுங்க செத்துட்டானுங்க. உடனே எப்படி கண்டுபிடிப்ப தர்மா. கொஞ்சம் பொறு. எலக்ஷன் எல்லாம் முடியட்டும், அப்பறம் நானே…” என அவர் பேசத் தொடங்க, “எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்றான் வம்படியாக.

நீலகண்டனுக்கோ கடுப்பாக இருந்தது. இவனை வைத்து ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று அவர் ஒரு கணக்கிட்டால், இப்போதோ அவர் இவனுக்கு இறங்கிப் போக வேண்டியதாக இருக்கிறதே… என நொந்தவர், அங்கு வந்த விஷயமே வேறு.

“நான் தான் சொல்றேன்ல. இதை இப்போதைக்கு விடு தர்மா? எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும். இந்த தடவை ஆட்சி நம்ம கைக்கு வந்ததும், கன்னிமனூர்ல சில மாற்றம் செய்யணும். இந்த ஊரை பேரூராட்சியா அறிவிக்கணும். இங்க நீ எல்லாருக்கும் பரிட்சயம். நீ சொன்னா பயலுக எல்லாரும் எந்த வேலையா இருந்தாலும் பார்ப்பாங்க. நீ தான் உன் ஊருக்காக இறங்கி வேலை பார்க்கணும். அதை விட்டுட்டு, இப்போதைக்கு எந்த பிரச்சனையிலயும் தலைய குடுக்காத.” அவரின் குரலில் மிரட்டில் தொனி இருக்க, அதில் சுதாரித்தவன்,

“தலைவரே… நான் அவனுங்களை தேடுறது உங்களுக்காகவும் தான்.” என்று பேச்சை திசை திருப்பி இருக்க, அவரோ புரியாமல் பார்த்தார்.

“ராதி, அங்க என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொன்ன வாக்குமூலம் என்கிட்ட தான் இருக்கு. அதுல உங்க பேரும் அடிபட்டுருக்கு.” என நாசுக்காக அவரை மாட்டி விட முனைந்ததில் அவர் அதிர்ந்தார்.

“என்னது? என்ன சொல்ற?” அவர் பதறிட, “அட! ஆமா தலைவரே… அவள் பேசும்போதே நான் எல்லாத்தையும்  போன்ல ரெக்கார்ட் பண்ணேன். அதுல உங்க பேர் அடிபடும்ன்னு தெரியாம போச்சு.” என ஏகத்துக்கும் கேலியை ஏந்தி அவரை விழி பிதுங்க வைத்தான்.

“இங்க பாரு தர்மா. இந்த நேரத்துல சின்னதா ஒரு பிரச்சனைன்னாலும் தலைவர் என்னை பதவியை விட்டே தூக்கிடுவாரு.” பயத்தில் அவர் உண்மையை வேறு உளறி இருக்க,

‘அது தான எனக்கும் வேணும்’ எனக் கறுவியவன், “அதான் நானும் சொல்றேன் தலைவரே. இதுல தேவை இல்லாம உங்க பேர் அடிபட கூடாது, கன்னிமனூர்க்கு நீங்க பண்ண போற நல்ல விஷயத்துக்கு நான் துணை நிக்கணும். எனக்கும் ராதியை ரேப் பண்ணவங்க யாருன்னு தெரியணும். இதெல்லாம் உங்களுக்கு வேணும்ன்னா, நான் சொல்றத நீங்க பண்ணனும்.” கிட்டத்தட்ட மிரட்டவே செய்தான்.

“என்னடா மிரட்டுறியா? பொடிப்பையன் நீ.” என்று எகிற, “என்கிட்ட தான் உங்க குடுமியே இருக்கு தலைவரே. நான் உங்களை மிரட்டல. ஆனா, எனக்கு இப்ப வேற வழி தெரியல.” என்றான் அசட்டையாக.

“உன்ன இங்கயே கொன்னு போட்டுட்டு போனா, எலும்பு கூட தேறாது தர்மா.” நீலகண்டன் உறுத்து விழிக்க, அவனோ வாய் விட்டே சிரித்து, “என்னை கொன்னா, அடுத்த செகண்ட் அந்த வாக்குமூலம் ஊர் முழுக்க பரவிடும் தலைவரே.” என்றதில் அவர் திகைத்தார்.

அவனோ தன்னை நிதானப்படுத்தி, “உங்களை கார்னர் பண்றது என் எண்ணம் இல்ல தலைவரே. இப்ப கூட உங்க நல்லதுக்கு தான் நான் இவ்ளோ பேசுறேன்.” என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

அவர் என்னவென்று பார்க்க, “உங்களுக்கு இந்த எலக்ஷன்ல இந்த தொகுதில நம்ம கட்சி ஜெயிக்கணும். அதான முதல் கவலை. நம்ம கட்சி தான் ஜெயிக்கும். அதுக்கு நான் பொறுப்பு” என உறுதியாக கூறியதில்,
“எப்படி?” என அவர் கேள்வியெழுப்பினார்.

“பெருசா ஒன்னும் இல்ல. இந்த தடவை எம். எல். ஏ சீட்ட எனக்கு குடுங்க.” என கூலாக கூறியதில் அவருக்கு தலை வலித்தது.

“என்ன உளறுற? நீ கட்சில தொண்டன் கூட கிடையாது. திடுதிப்புன்னு அவ்ளோ முன்னாள் ‘எம். எல். ஏ’ க்கள வச்சுட்டு, நான் எப்படி உன்ன நிறுத்த முடியும். இந்த சீட்டுக்கு எவ்ளோ காசுன்னு தெரியுமா உனக்கு?” என்றே எரிச்சலடைந்தார்.

“ப்ச்… உங்களுக்கு தான் புரியல. இப்ப எம். எல். ஏ வா நிக்க வைக்க காசு முக்கியமா? இல்ல கட்சி ஜெயிக்கிறது முக்கியமா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க தான சொன்னீங்க. இங்க இருக்குற பசங்க எல்லாம் நான் சொன்னா என் பின்னாடி நிப்பாங்கன்னு. எங்க… உங்களோட முன்னாள் எம். எல். ஏ கூப்பிட்டு யாராவது வருவானுங்களான்னு பாருங்க. இவ்ளோ ஏன், இங்க நிக்கிற நம்ம அடியாளுங்கள்ள பாதி பேர் கன்னிமனூர்க்காரனுங்க தான்.” என்று அங்கு நின்றிருந்த அடியாட்களை கை காட்டியவன்,

“இங்க எத்தனை பேருடா எனக்கு ஓட்டு போடுவீங்க?” என அவர்களிடம் முறைப்பாக கேட்க, அவன் முறைப்பிற்காகவா அல்லது ஓட்டு போட முடியாது என்று சொன்னால், அதன் பிறகு வந்து அடிக்கப்போகும் அடிக்காகவா எனத் தெரியாது அங்கிருந்த முக்கால்வாசி பேர் கை தூக்கி இருந்தனர்.

அதில் ஒருவன், “நீ நிக்கிறன்னா நான் ரெண்டு ஓட்டு கூட போடுவேன் தர்மா” என்று பல்லைக்காட்டினான்.

“ம்ம்… பார்த்தீங்களா. இங்க இருக்குற பதினஞ்சு பேர்ல 10 பேர் கண்டிப்பா ஓட்டு போடுவானுங்க. அப்போ ஊர்ல?” என நிறுத்தியவன், “வெள்ளைப்பாளயத்துல ஜாதி சங்க தலைவரு ராஜசேகரோட ஜாதி ஆளுங்க கண்டிப்பா ஓட்டு போட மாட்டாங்க. அந்த ஜாதி ஓட்டை தவிர்த்து, சுத்தி இருக்குற கிராமத்துல இருந்து எனக்கு நிறையவே வரும். இதெல்லாம் விட, நம்ம கட்சில இளைஞருக்கு வாய்ப்பு குடுத்ததுக்காக ஒரு நல்ல எண்ணம் வரும். நான் லா படிக்கிறேன். படிச்சிருக்கேன். அரசியல்ல ஒரு மாற்றம்ன்னு ட்ரோல் பண்ணி, எல்லாரோட கவனத்தையும் இங்க திருப்பலாம். இன்னும் நிறைய இருக்கு தலைவரே. எனக்கு சீட் குடுங்க. எல்லாத்தையும், எல்லாரையும் நான் பாத்துக்குறேன்…” எனப் பேசி முடித்தவன், கடைசி இரு வார்த்தையை கோபத்தை அடக்கியபடி கூறினான்.

அதன் வேறுபாட்டை உணராத நீலகண்டன், சிந்திக்கத் தொடங்கினார்.

மேலும், தன் பேச்சு திறமையால் அவரை கரைத்த ஜிஷ்ணுவிற்கு, ராதிகாவே இந்த ஊரில் ஜாதி வெறியால் இறக்கும் இறுதி பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதியாகப் படர்ந்தது.

குமரனுக்கும் ஆபத்து நேராமல் இருக்க வேண்டும் என்றால், கட்சிக்குள் நுழைவதைத் தவிர அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. இல்லையென்றால், நீலகண்டனையும் ஜாதி ஆட்கள் விலைக்கு வாங்கி, குமரனை பழி கொடுத்து விடுவதோடு, ஊருக்குள் பெரும் பிரளயத்தை உண்டு செய்வர். பல விதத்தில் கணக்கிட்டு, அவன் காய் நகர்த்த, அனைத்தும் அவன் எண்ணியது போலவே அரங்கேறியது, வசுந்தராவின் பிரிவைத் தவிர.

ராதிகாவை கற்பழித்த இருவரின் கொலையை பற்றி நீலகண்டன் பேசும் போது தான் வசுந்தரா அதனை கேட்டு தவறாக எண்ணியது.

அவளை பற்றிய வாக்கியங்களை கூறாது, நடந்ததை சொல்லி முடித்த ஜிஷ்ணு, “ஆனா, எவ்ளோவோ முயற்சி செஞ்சும், ராதியை ரேப் பண்ண அந்த ரெண்டு பேரை கண்டுபிடிக்க முடியல.

அது மட்டும் இல்ல. அவளை கிணத்துல தள்ளி விடும் போது, செங்கமலமும் அறிவழகனும் மட்டும் அங்க இல்ல. இன்னும் ரெண்டு மூணு பேர் இருந்தாங்க. ஆனா, இருட்டுக்குள்ள ஒண்ணும் தெரியல. அங்க உன் அப்பா குரலும் கேட்ட மாதிரி இருந்துச்சு. அவரும் இதுக்கு காரணம்ன்னு நினைச்சு தான், கொலை பண்ண நினைச்சேன். ஆனா, அவரே ராதிய அநியாயமா கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னப்ப தான் அவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு புரிஞ்சுது.” என்றான் பெருமூச்சுடன்.

ராதிகாவிற்காக அவன் செய்த கொலையை, ராதிகாவின் கொலையுடன் இணைத்து புரிந்து கொண்ட தன் முட்டாள்தனம் அப்போது தான் புரிய, வசுந்தரா விழி தாழ்த்தி உதட்டைக் கடித்து அமர்ந்திருந்தாள்.

அவனும் சற்று பொறுமையாக பேசி இருக்கலாமே. நடந்ததை கூறி இருக்கலாமே! என்ற எண்ணமும் வராமல் இல்லை தான். தற்போது அதனை ஒதுக்கி விட்டு நிமிர்ந்தவள், ஜிஷ்ணுவைப் பார்க்க, அவன் அவளை அலட்சியம் செய்வது போல திரும்பிக் கொண்டான். அவளும் அதற்காக அவனிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. கெஞ்சவும் இல்லை.

சில நொடிகள் ஏதோ சிந்தித்தவள், “எனக்கு… ஏதோ ஒரு லிங்க் மிஸ் ஆகுற மாதிரியே தோணுதுடா அடியாளு.” என்று குழம்பியபடி நிமிர அவன் முறைத்தான்.

‘அடியாளு’ என்று அழைத்ததற்கான முறைப்பு தான் என்று புரிந்தாலும் அதனை கண்டுகொள்ளாதவள், தன் குழப்பத்தை கூறினாள்.

“எனக்கு என்ன டவுட்ன்னா… அந்த நேரத்துல மினிஸ்டர்க்கு அவரோட கட்சி ஜெயிக்கணும். அந்த ரெண்டு பேரும் அப்போதைக்கு எதிர் கட்சில தான் இருந்தானுங்க. இந்த விசயத்தை பெரிசாக்கி எதிர் கட்சியை அப்பவே அசிங்கப்படுத்த முடிஞ்சுருக்கும் தான? அதை ஏன் அவரு பண்ணல?”

“ஏய்… அதை பண்ணா, அவரும் தானடி மாட்டுவாரு.” என்று ஜிஷ்ணு கூறியதில், “அது ஓகே டா. ஆனா, நீ சொன்னதுக்கு உடனே ஒத்துக்கிட்டது தான் இடிக்குது.” என்றாள் சிந்தனையுடன்.

“ம்ம்… கன்னிமனூர் அவனுங்களுக்கு வேணும் வக்கீலு. அங்க தான் அவனுங்களோட ட்ரீம் பிராஜக்ட், பிளா பிளான்னு நிறய பிளான் பண்ணி இருக்கானுங்க.” என்றதில்,

“அங்க என்ன தான் நடக்குது?” என்றாள் புரியாமல்.

“புதையல் இருக்கு. அதான் தோண்டி எடுக்குறோம்” அவன் நக்கலாக கூற, அதில் அவனை முறைத்தவள், “ஆமா, கன்னிமனூர் என்ன கோலார் தங்க சுரங்கமா?” என முணுமுணுத்தாள்.

அசட்டையுடன் தோளைக் குலுக்கி கொண்டவன், அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்ற ரீதியில் எழுந்து கொள்ள, “நான் இன்னும் பேசி முடிக்கல” என்றாள் அழுத்தமாக.

“இதுக்கு மேல பேச எதுவும் இல்ல” அவனும் அழுத்தமாகவே பதில் கூறி விட்டு, விறுவிறுவென வெளியேறி விட்டான்.

வெளியே குமரன் தான், சோகத்தில் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தான்.

அன்று மட்டும் ராதிகாவிடம் தான் பேசாது இருந்திருந்தால், அவளின் தந்தை சிறிதாவது அவளது பேச்சை கேட்டிருப்பார். தன்னை காப்பாற்ற முயற்சி செய்து ஜிஷ்ணுவும் அவன் காதலை இழந்து இருக்க மாட்டான்… என்ற பல்வேறு குற்ற உணர்வுகள் அவனை அரிக்க, அர்ச்சனா அவனையே தான் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள்.

பரத்திற்கோ, ‘இப்ப அடுத்த கட்ட நடவடிக்கையா இவ யார்ட்ட நம்மள அடி வாங்க வைக்க போறாளோ…’ என்ற பயப்பந்து உருள, ஜிஷ்ணுவைக் கண்டதும் அட்டென்ஷனில் எழுந்து நின்றான்.

அவனை ஒரு முறை முறைத்து விட்டு, குமரனை அழைத்துக் கொண்டு அவன் சென்று விட, இருவரும் வேகமாக வசுந்தராவின் அறைக்கு சென்றனர்.

தீவிர சிந்தனையில் புதைந்திருந்த வசுந்தரா, பரத்தைக் கண்டதும், “அப்பாவை அட்டாக் பண்ணுன கோவில் வாசல்ல சிசிடிவி ஃபுட் ஏஜ் கிடைக்குதான்னு செக் பண்ணுங்க.” என உத்தரவிட்டவளின் பரபரப்பை உணர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில், ஃபுட் ஏஜ் – உடன் வந்திருந்தான்.

“கோவில் வாசல்ல சிசிடிவி இல்ல தாரா. அதுக்கு எதிர் பக்க கடைல இருந்த சிசிடிவி ஃபுட் ஏஜ் தான் இருக்கு…” என்றபடி அவளிடம் கொடுக்க, அதனை புருவ முடிச்சுடன் பார்த்தவளுக்கு எந்த வித பலனும் கிடைக்கவில்லை.

ஏனெனில், ஜிஷ்ணு கூறியது போல அவனிடம் ராஜசேகர் பேசியது உண்மை தான். அப்போதும் கேமரா அவர் பக்கம் இருந்ததால், அவரின் முகம் மட்டுமே தெரிந்தது. ஜிஷ்ணு நகர்ந்ததும், ராஜசேகரை வெட்ட வந்தவனின் முதுகு மட்டுமே நன்றாக தெரிந்தது.

“ப்ச்… எவன்னே தெரியல.” என சலித்த வசுந்தரா, தந்தையை காண செல்ல, அவரோ சுயநினைவற்று படுத்திருந்தார். பெண்ணவளின் விழிகள் நீரை சுரக்க ஆயத்தமாக, “அப்பா…” என அழைத்தவளின் குரலும் கரகரத்தது. ஆனால், அவரிடம் தான் எந்தவொரு மாற்றமும் இல்லை.

ராதிகாவை இழந்தது போல, தந்தையை இழந்து விடக் கூடாது என்ற ஆதங்கம் மனதினுள் ஆழமாக உருவாக, வெகுநேரம் மருத்துவமனை வாசலிலேயே எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

சில மணி நேரம் கடந்தே, ராஜசேகரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட, அவள் மனதிலும் சிறு நம்பிக்கை உருவானது.

அடுத்து அவள் சென்றது ஜிஷ்ணுவிடம் தான். அவனோ அங்கு கௌரவிடம் காட்டு கத்தாக கத்திக் கொண்டிருந்தான்.

விழிகள் கோபத்தில் சிவந்திருக்க, “வீட்டுக்குள்ள ஆள் வந்து லாக்கர்ல இருந்த டாக்குமெண்ட்ஸ எடுத்துட்டு போற வரை என்ன பண்ணிட்டு இருந்த? அறிவு கெட்டவனே! இன்னும் ஒரு மணி நேரத்துல டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எந்த சேதாரமும் இல்லாம என் கைக்கு வரணும். இல்லை… உனக்கு சேதாரம் அதிகமா இருக்கும்” என கர்ஜித்தான்.

கௌரவ், ஜிஷ்ணுவின் கோபத்தில் வெலவெலத்து நொந்திருந்தான். வீட்டினுள் அவன் வைத்திருந்த சிசிடிவி கேமராவை ‘கிராஷ்’ செய்து தான், ஆட்கள் முக்கியமான கோப்புகளை எடுத்து சென்றிருக்கின்றனர். அதனைக் கூறினால் இன்னும் பேயாட்டம் ஆடுவானே என மிரண்டவன், செய்வதறியாமல் நின்றான்.

அந்நேரம், “சேதாரம் செய்கூலி எல்லாம் போட, உன் பி.ஏ என்ன கோல்ட் ஜூவல்லரியா அடியாளு?” என்று எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல எகத்தாளமாக வெளிவந்தது வசுந்தராவின் குரல்.

நிமிர்ந்து அவளை முறைத்து வைத்தவன், “நீ எதுக்கு இங்க வந்த?” என்றான் பல்லைக்கடித்து.

“ஆமா, இது என் மாமியார் வீடு பாரு. அடிக்கடி வந்துட்டு போறதுக்கு… எனக்கு என் அப்பாவை யாரு இப்படி பண்ணதுன்னு தெரியணும்.” அவள் அதிகாரமாக கூற,

“அதுக்கு ஏன் இங்க வந்து இருக்க. போய் போலீஸ்ல கம்பளைண்ட் குடுடி…” என ஜிஷ்ணு தோளைக் குலுக்கினான்.

“ப்ச்! ப்ச்!” என்று மறுப்பாக தலையாட்டியவள், “என் அப்பாவை வெட்டுனவன் எப்படியும் ஒரு அடியாளா தான் இருப்பான். ஒரு அடியாள பத்தி இன்னொரு அடியாளுக்கு தான தெரியும் அடியாளே! சோ, நீயே கண்டுபிடிச்சு குடு.” அவளும் அசட்டையாக தோளைக் குலுக்கினாள்.

வார்த்தைக்கு வார்த்தை, அவளுரைத்த ‘அடியாளு’ என்ற வார்த்தை அவனை சினப்படுத்த, “நீயாச்சு உன் அப்பனாச்சு. போடி முதல்ல இங்க இருந்து” என்று அவளை அடிக்காத குறையாக விரட்டினான்.

“அப்படி எல்லாம் உன்னால விட முடியாது அடியாளு. உன் குடுமி என் கைல…!” என நக்கல் நகையுடன் கூறியவளைக் கண்டு அவன் புருவம் சுருக்க,

“புரியலையா? உன் காணாம போன டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட தான் பத்திரமா இருக்கு. நீ மட்டும் தான் என்கிட்ட இருக்குற ஆதாரத்தை ஆட்டைய போடுவியா? மவனே, அந்த மினிஸ்டர் சொத்து சம்பந்தமான பைல்ஸ் அது இதுன்னு எல்லாமே என்கிட்ட தான் இருக்கு. நீ நான் சொல்றத கேட்கல… இப்பவே மினிஸ்டர்கிட்ட உன்ன போட்டு குடுத்து, போட்டு தள்ள வச்சுடுவேன். எப்படி வசதி?” இரு புருவத்தையும் உயர்த்தி, அவள் திணக்கமாக கேட்க, ஜிஷ்ணுவின் பற்கள் அரைபடும் சத்தம் வெளியில் கேட்டது.

‘என் அப்பாவை வைச்சு என்னை லாக் பண்ணுனல்ல… பாத்துடுவோம். நீயா நானான்னு!’ என வீம்பாக அவள் நிற்க, ‘ஒட்டிக்கிட்டாலும் இம்ச. ஒதுங்குனாலும் இம்ச!’ என்ற எரிச்சலுடன் அவளை உறுத்து விழித்தான் ஜிஷ்ணு தர்மன்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
56
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்