ஆரவின் கோபநிலை கண்டு வான்மதிக்கு இதயம் தாறுமாறாகத் துடிக்க, அந்நிலையிலும் அவன் கூறியதற்கான உட்பொருளை அறியத் துடித்தவள், அப்படியே நின்றாள்.
“இப்ப நீ போக போறியா இல்லையாடி.” அவன் கிட்டத்தட்ட உறும,
“கத்தாதீங்க. பேபி எந்திரிச்சுற போறான்” என்றாள் மெல்லிய குரலில்.
“எனக்கு தெரியும். நீ மூடிட்டு போ!” என இன்னும் எரிச்சலைக் கொட்ட, அவளுக்கு கண்கள் கலங்கி நின்றது.
“முழுசா சொல்லி முடிச்சுடுங்க.” அவள் நகராமல் மேலும் கேள்வி கேட்க, அவளின் கலங்கிய நிலை கண்டு ஆரவிற்கு தான் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
சில நொடிகள் அவளை அமைதியாகப் பார்த்தவன், “ஃப்ரிட்ஜ்ல பியர் பாட்டில் இருக்கு. எடுத்துட்டு வா” என்றான்.
அதில் அவள் சட்டென நிமிர்ந்து, “முடியாது” என தலையை ஆட்ட,
“உன்னால தான இதை உடைச்சேன். போய் எடுத்துட்டு வாடி” என்று அவன் கத்தியும், “ம்ம்ஹும்…” என்றாள் பிடிவாதமாக.
“ஓகே. நானே போறேன்” என அவன் எழும்ப போக, அவனை வழி மறித்து நின்றவள், “வேணாம் முகில் ப்ளீஸ்… எனக்காக! அது… இஷுக்காக…” என தொண்டை அடைக்கக் கூற, அவளின் ‘முகில்’ என்ற அழைப்பிலேயே அவனுக்கு இருந்த மொத்த கோபமும் இறங்கியது.
வான்மதி தான் இப்படி முகிலென அழைத்து விட்டோமே என நாக்கைக் கடிக்க, அதனைக் கவனித்தாலும் அதனைப் பற்றி கேட்கவில்லை அவன்.
நடந்து முடிந்து கடந்த போன திருமணத்தின் விளைவால், வான்மதியை தாம்பத்யம் என்றாலே பயப்பட வைத்தது. அவனுக்கோ, எதிர்பதமாய் ஆனது.
உடல்ரீதியாக, மிருணா பழக்கி விட்டுப் போன தாம்பத்தியத்திற்கு அவன் மனம் பழகவில்லை என்றாலும் அவனின் உடல் பழகி இருந்தது. ஆனால், அவள் ஏமாற்றியதில், அவளுடன் இணைந்ததை எண்ணியே மனம் அருவருக்க, கூடவே திடீரென எழுப்பப்பட்டு இப்போது அடக்கப்பட்ட உணர்வுகள் அவனை ‘டாமினேட்’ செய்யத் தொடங்கியது.
உடலோ உணர்வுகளைக் கேட்க, மனமோ நிஜ காதல் கூடலைக் கேட்டது. இரண்டையும் கட்டுப்படுத்த இயலாமல் திணறியவன், ஒரு கட்டத்தில் வேறொரு பெண்ணிடமாவது சென்று விடலாம் என நினைக்க கூட செய்தான்.
ஆனால், அவனுக்குத் தான் எந்த பெண்ணிடமும் எந்தவித உணர்வும் எழாமல் போக, தற்போது தனக்கு என்ன தான் வேண்டும் என மொத்தமும் புரியாமல், கௌன்சிலிங்கும் சென்று பார்த்தான்.
எதற்குமே அவன் உடலும் மனமும் அவன் பேச்சைக் கேட்காது போக, இறுதியில் குடியின் பிடியில் உணர்வுகளை அழிக்கத் தொடங்கினான்.
எப்போது மிருணாவை திருமணம் செய்தானோ, அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டி இருந்த வான்மதியின் நினைவை முற்றிலும் மறந்து விட்டான். மறந்து விட்டான் என்பதை விட கவனமாக மறக்க வைத்துக் கொண்டான்.
அதன் பிறகு, அவளை அலுவலகத்தில் சந்திக்கும் வர, அவளை பற்றி நினைக்கவே இல்லை அவன். ஆனால், அவளை சந்தித்தபிறகு தான் உணர்ந்து கொண்டான், அவள் மட்டுமே தன் இன்மருந்து என.
இதில், வான்மதி பற்றிய தகவலைத் தவிர, மற்றவற்றை அவளிடம் கூறியவன், அவளை எதிர்கொள்ள இயலாமல் தரையில் அமர்ந்து தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
“நான் உனக்கு சாடிஸ்ட் மாதிரி தெரியுறேன்ல… பட் ஐ நீட் ரியல் லவ் மேக் கண்ணம்மா. ஆனா எவகிட்டயும் போக முடியாது. எனக்கு அது பிடிக்கல.” இன்னும் தலையை நிமிர்த்தாமல் கூறியவனை, பரிதாபமாக பார்த்தவள்,
“ரிலேஷன்ஷிப் வேணாம்ன்னு சொல்ல எனக்கு உரிமை இருக்கும் போது… வேணும்ன்னு சொல்றது ஒன்னும் பெரிய தப்பு இல்ல ஆரவ்.” என தலையை சாய்த்து கூறியவளை மெல்ல விழி நிமிர்த்தி பார்த்தான்.
“நான் ஒன்னு கேக்கட்டா?” என அவள் மென்மையாக கேட்க, “ம்ம்…” என்றான்.
“உங்களுக்கு ரியல் லவ் தான வேணும். அப்பறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. லயா… லயா உங்களை விரும்புறாங்க தான. அவங்ககிட்ட நீங்க கேக்குற ரியல் லவ் இருக்கும் தான. அது போக இஷுவை நல்லா பாத்துக்குறாங்க…” என்றவள், அவனின் பார்வை சற்றே அழுத்தமாக தன் மீது படிவது கண்டு,
“இல்ல இல்ல. உங்க ப்ரெண்ட்ஷிப்ப நான் தப்பா சொல்லல. ஆனா, அவங்க உங்களை லவ் பண்ணது உண்மைதான… அதான்…” என்றவள், இறுதியில் “தப்பா கேட்டுருந்தா சாரி.” என்றாள் மெதுவாக.
அதற்கு மெலிதாய் புன்னகைத்தவன், “லவ்க்கும் க்ரஷ்க்கும் நூலளவு தான் வித்தியாசம் மதி. இன்ஃபாக்ட் அந்த இடைப்பட்ட நிலையில சிக்கிட்டு, அதை வெளிய சொல்லவே முடியாம போன நிறைய பேர் இருக்காங்க” என்னும் போதே, அவளின் விழிகளை அவன் ஏக்கத்துடன் பார்க்க, அவளும் அந்நேரம் அவனைத் தான் பார்த்தாள்.
ஒரு கணம் இரு விழிகளும் தவிப்புடன் ஒன்றை ஒன்று ஏறிட்டுக் கொள்ள, சட்டென இருவருமே பார்வையை திருப்பிக் கொண்டனர்.
“அவளுக்கு என் மேல இருக்குறது லவ் இல்ல க்ரஷ் தான். அப்படியே அது லவ்வா இருந்தா கூட, என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியாது. அவள் இல்ல, அன்பையும், காதலையும், காமத்தையும் கொட்டி உலகத்துல வேற எந்த பொண்ணு வந்தாலும் எனக்கு ஃபீலிங்ஸ் வராது.
என் உடம்பு பொண்டாட்டின்ற ஒரே காரணத்துக்காக மிருணாகிட்ட என் பேச்சை கேட்காம போயிருக்கலாம். ஆனா என் மனசு எவள்கிட்டயும் போகாது. என் கண்ணு எவளையும் ரசிக்காது.” என வார்த்தைகளில் அத்தனை அழுத்தம் கூட்டி கூறியவனை அவள் தான் வியந்து பார்த்திருந்தாள்.
அவளை ஒரு நொடி நிறுத்தி ஆழ்ந்து நோக்கியவன், “என் கண்ணம்மாவை தவிர…” என்று முடித்திருக்க, அவளோ சிலையாகி விட்டாள்.
கால்கள் வலுவின்றி தொய்வது போல இருக்க, பால்கனி கம்பியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
‘கட்டுன புருஷனே, என்னை விட்டுட்டு வேற ஒருத்தி கூட தான் போனான். ஆனா நீங்க ஏன் முகில் இப்படி ஒரு வார்த்தை சொன்னீங்க…’ என உள்ளுக்குள் மருகியவளோ, எப்படி அவனுள் தன் மீது இத்தகைய ஆழம் என்று புரியாது குழம்பினாள்.
இப்போது அதை எண்ணக் கூட, அவள் மூளை ஈடு கொடுக்காது, அவன் பேசிய வார்த்தைகளின் வீரியத்திலேயே உழன்றிருந்தாள்.
‘உங்களுக்கு நீங்க கேக்குற எல்லாமே குடுக்கணும்ன்னு பேராசை தான் முகில். ஆனா, என்னால என்ன குடுக்க முடியும்? குடுக்க தகுதி இருந்தப்போ, என் முன்னாடி வராம போயிட்டீங்க. இப்போ எந்த தகுதியும் இல்லாதப்போ, என்கிட்ட இருக்குற மொத்தத்தையும் கேக்குறீங்களே. நான் என்ன குடுப்பேன்…!’ மொத்தமாக உடைந்திருந்தாள்.
அவளின் முகத்தையே ஆராய்ந்தவன், “இதை சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்குன்னு யோசிக்கிறியா மதி?” என கேட்டிட, சட்டென நிமிர்ந்தவள் தற்போது தான் நினைத்ததையே அவனும் கேட்டதை எண்ணி ஒரு நொடி திகைத்து,
பின், “தகுதின்னு எதை சொல்றீங்க ஆரவ்? ஒரு பொண்ணோட உணர்வுகளை புருஞ்சுக்காம, அதை சாகடிச்சு, செத்த உணர்வுகளை திரும்ப திரும்ப கொன்னு, இன்னொருத்திட்ட போறவனுக்கே எல்லா தகுதியும் இருக்குன்னா… உங்களுக்கு அதை விட ஆயிரம் மடங்கு இருக்கு.” என்றாள் அழுத்தத்துடன்.
“ம்ம். இப்போ நீயும் அதே தகுதி பத்தி தான நினைச்ச? அப்போ எனக்கு இருக்குற ஆயிரம் மடங்கு தகுதி, உனக்கும் இருக்கு…” அவன் இடக்காய் அவளை மடக்கி இருக்க,
அதில் அதிர்ந்தவள், ‘எப்ப பாரு மைண்ட் ரீட் செய்றதே வேலையா போச்சு’ என மனதினுள் வஞ்சித்துக் கொண்டாலும், அவனின் பேச்சில் மெலிதாய் புன்னகை தோன்றியது.
அதில் தகுதி என்ற ஒன்றை மனதில் இருந்து அழித்து விட்டாள்.
“ஆனா, என்னால முடியாது ஆரவ். எனக்கு இன்டரஸ்ட் இல்ல. இன்டெரெஸ்ட் வருமான்னு தெரியல…” என இதழ்களை அழுந்தக் கடித்தபடி கூறியவளை முறைத்தவன்,
“நான் இப்போ உங்கிட்ட எதுவுமே கேட்கலையே. நீ கேட்டதுக்கு தான் நான் பதில் சொன்னேன். பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்க்காக மட்டுமே நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கல கண்ணம்மா. அதை மட்டும் புருஞ்சுக்கோ. உனக்கு எப்போ இன்டரஸ்ட் வருதோ அது வரை வெய்ட் பண்ணுவேன்.” என்றான்.
“எனக்கு எப்பவுமே இன்டரஸ்ட் வராம போய்ட்டா?” அவள் தவிப்புடன் வினவ,
சிறிதாய் இதழ் விரித்தவன், “ஒரு கிஸ் மட்டும் அலோ பண்றியா? லைஃப் ஃபுல்லா அது மட்டும் போதும்…” என சிறுவன் போல கெஞ்சலாய் கேட்டவனை, மீண்டுமொரு திகைப்புடன் விழித்தவள், ஒன்றை மட்டும் புரிந்து கொண்டாள்.
பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வேண்டுமென்று அவன் குடிக்கவில்லை. அப்படி அவனை அவனே தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு வேண்டியது அன்பாய் ஒரு அரவணைப்பும், நேசமாய் ஒரு முத்தமும் தான்.
மனதின் தேடல் நின்று விட்டாலே, அவனின் இப்பழக்கமும் தானாய் நின்று விடும் என அவனை சரியாக கணித்தவளுக்கு, இதனை மறுக்கத் தோன்றவில்லை.
அலுவலகம் செல்லும் போதும், வீடு திரும்பிய போதும் இஷாந்திற்கு அவனளிக்கும் ஆசை முத்தங்களை தான் கண்டிருக்கிறாளே. ஒரு கணம், அம்முத்தத்திற்கு அவள் மனதும் ஏங்கும் தான். ஆனால், கவனமாக அதனை கண்ணில் கூட காட்டாமல் தவிர்த்து விடுவாள். ஆனால், அவனுக்கு தெரியும். இஷாந்தை முத்தமிடும் போது ஒரு நொடி தன் மீது படியும் அவளின் ஏக்கப்பார்வை.
முத்தம் ஒன்றும் காமத்தின் தொடக்கம் அல்லவே. அது நேசத்தின் இணக்கம் தான் என இருவருமே அச்சிறு நேசத் தூறலுக்கு ஏங்கி இருந்தனர்.
ஆனால், ஏனோ அவன் நேரடியாகக் கேட்கும் போது, சிறு பதற்றமும் சிறு வெட்கமும் சூழ, “ம்ம். கொஞ்சம் டைம் குடுங்க.” என்றாள் முகத்தை அவனுக்கு காட்டாமல்.
அதில் அடக்கப்பட்ட புன்னகையுடன், “கிஸ்க்கு டைமா? டூ மச் மதி…” என்று மூக்கை சுருக்கிட,
“நீங்க மட்டும் ட்ரிங்க் பண்றதை நிறுத்த டைம் கேட்டீங்க? நான் கேட்க கூடாதா?” அவள் பால்கனி கம்பியை சுரண்டியபடி அவனை வார, இருவருக்கும் புது வித புன்னகை ஒன்று இதழ்களில் உதயமானது.
மறுநாளில் இருந்து, மீண்டும் கடைக்கும் அலுவலகத்திற்கும் செல்லத் தொடங்கினாள் வான்மதி, அவன் ஓய்வு எடுக்கக் கூறியும்…!
இஷாந்திற்கு வான்மதி உணவு கொடுத்து, கிளப்பி இருக்க, ஆரவ் அவனை இடது கையால் தூக்கிக் கொண்டு, “போலாமா” என லேசாக காலை ஊண்டி நடந்தான்.
“நேத்து கீழ விழுந்ததுல வேற எங்கயும் அடி பட்டுச்சா ஆரவ்?” அவள் சந்தேகமாக வினவ, “இல்லடி.” என்றான் வேகமாக.
“பொய் சொல்லாதீங்க ஆரவ். காலை காட்டுங்க.” என முறைக்க, “லைட்டா தான் காயம் கண்ணம்மா.” என கண்ணை சுருக்கினான்.
அவளோ அசையாமல் நிற்க, வேறு வழியற்று உண்மையை ஒப்புக்கொண்டவனை இன்னுமாக முறைத்து வைத்தவள்,
அலுவலகம் சென்ற உடனேயே, கவனின் முன் தான் நின்றாள். அவனோ அவளைக் காணவே குற்ற உணர்ச்சியாய் இருக்க, தலையை தொங்க போட்டு இருந்தான்.
“இனிமே வண்டில பிரேக் இருக்கான்னு பார்த்துட்டு அவருகிட்ட வண்டியை குடுங்க சார்.” என சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு, அவள் இருக்கையில் சென்று அமர, அவன் தான் பேந்த பேந்த விழித்தான்.
‘எது? இனிமே எங்க வண்டியை குடுக்க… என் வண்டி தான் மரத்துல மோதி சல்லி சல்லியா நொறுங்கி இருக்கே.’ என நொந்தவன், தலையை சொரிந்தபடி நிற்க,
தன்விக் தான், “என்னடா. நேத்து உன் பைக்க குப்பை லாரி அள்ளிட்டு இருந்துச்சுன்னு கேள்வி பட்டேன்.” என்றான் நக்கலாக.
இன்னும் அவனிடமும் ஹேமாவிடமும் நடந்ததை உரைக்கவில்லை அவன். தெரியும் போது தெரியட்டும் என அமைதியாக இருந்து விட்டான்.
அவனின் கூற்றில் கடுப்பான கவின், “அதே குப்பை லாரி இங்கயும் வருதாம். உன்னை அள்ளுறதுக்கு” என முறைப்புடன் கூற, இவர்களின் சம்பாஷணையை கேட்டபடி அங்கு வந்த ஹேமா, “ஏண்டா நேத்து அவன் அப்படி இருந்தானாம்.” எனக் கேட்டிட, கவின் அதற்கு சமாளிக்கும் முன்பு சுதாகர் அவர்களை நெருங்கி இருந்தான்.
முதலில் ஹேமாவை தான் பார்த்தவன், “ஹாய் ஹேமா…” எனக் கையை ஆட்ட, அவளோ அவனைப் புரியாமல் பார்த்து, “சாரி. நீங்க யாரு?” எனக் கேட்டாள்.
அவனோ திகைத்து நிற்க, அவள் தான், கவினிடம் “யாருடா இவரு?” என வினவினாள். பழி வாங்குகிறாள் என்று உணர்ந்த அவனும், “மதியோட அண்ணன் ஹேமா. அன்னைக்கு கூட ஹோட்டலுக்கு வந்துருந்தாரே” என நினைவு படுத்த முயல,
“ஓ! ஆமா ஆமா. சரியா ஞாபகம் இல்ல.” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சுதாகரை வார, அவன் தான் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தான்.
அதனை கண்டுகொள்ளாமல், ஹேமா அவளின் அறைக்கு சென்று விட, தன்விக் “தன் வினை தன்னைச் சுடும்ன்னு கேள்வி பட்டு இருக்கேன். பட் இவ்ளோ கேவலமா சுடும்ன்னு எதிர்பார்க்கல.” என்றான் நக்கலாக.
அதில் அவனையும் முறைத்தவன், ‘ஒன்னு சேர்ந்தா கலாய்க்கிறீங்க. பாத்துக்குறேன்டா உங்களை…’ என வாய்க்குள் திட்டிக் கொண்டு, ஆரவைப் பார்க்க சென்றான்.
வான்மதியை திருமணம் செய்ததுமே, அவ்வப்பொழுது சுதாகர் அலுவலகம் வந்து அவனை பார்த்து விட்டு செல்வான். வீட்டிற்கு வான்மதியும் இதுவரை அழைக்காது போக, அவனும் அவளை சங்கட நிலைக்கு தள்ள விரும்பாமல் எட்டியே நின்று கொண்டான். அதன்மூலம் இருவரும் நல்ல நண்பர்களாகவே பேசிக்கொண்டனர்.
அவனிடம் பேசும் போது தான், சுதாகருக்கு இருக்கும் வேலைப்பளு புரிய, வான்மதியையும் சிறிது பொறுப்பை எடுக்கக் கூறி அவளை கடைக்கு அனுப்பினான்.
தன்னறைக்குள் நுழைந்த சுதாகரைக் கண்டதும் ஆரவ், “என்ன பிசிமேன். அதிசயமா இந்த பக்கம்?” என தாடையை தடவியபடி கேட்க, சுதாகர் தான் ‘என்ன இன்னைக்கு இவனும் கலாய்க்கிறான்’ என்று புரியாமல், “ஏன் நான் இந்த பக்கம் வந்ததே இல்லையா?” என்று பார்த்தான்.
“ம்ம். தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வர முடியாத அளவு பிசியாச்சே. இப்ப என்ன இங்கன்னு கேட்டேன்.” என ரோலிங் சேரை சுற்றியபடி அவனை குட்ட, சுதாகருக்கு ஒரு நொடி வலித்தது.
“மதி… எல்லாத்தையும் சொன்னாளா? அவள் பாஸ்ட் பத்தி…?” எனத் தயக்கத்துடன் கேட்க, ஆரவ் அமைதி காத்தான்.
அவனுக்கு ஏனோ முகம் வாடி விட, “அப்பாவும் சித்தப்பாவும் நல்ல பையனை தான் பார்த்துருப்பாங்கன்ற நம்பிக்கைல தான் நானும் எதுவும் விசாரிக்கல.” என்றவனின் மீது ஆரவின் தீப்பார்வை தொடர,
“தப்பு தான் விசாரிச்சுருக்கணும். ஊர்ல இருந்திருந்தா கண்டிப்பா விசாரிச்சுருப்பேன்.” என முணுமுணுத்தவனை இன்னுமாக சுட்டவன், “அட்லீஸ்ட் என்னை பத்தியாவது விசாரிச்சியா?” என்றான் விழி உயர்த்தி.
அதில் நிமிர்ந்து அவனைப் பார்த்த சுதாகர், “விசாரிச்சேன்.” என்றான் அழுத்தமாக.
“என்ன விசாரிச்ச?” ஆரவ் கூர்மையாக வினவ, “நீ எதை இதுவரை என்கிட்ட சொல்லலையோ அதை…” என்றவனை சற்றே மெச்சுதலாகப் பார்த்தவனிடம், “நீ நினைக்கிற அளவு மோசமான அண்ணனா நான் இல்லைன்னு நம்புறேன் ஆரவ்.” என குரல் உடைய கூறி விட்டு விருட்டென வெளியில் சென்று விட்டான்.
சுதாகர் வாங்கிய பல்பை பற்றி கிசுகிசுத்து, கவின் மற்றும் தன்விக்கிடம் ஹேமா சிரித்துக் கொண்டிருக்க, ஆரவின் அறையில் இருந்து வந்த சுதாகரை, ஹேமா “ஹெலோ சுதாகர்…” என நக்கலுடன் அழைக்க, அவன் யாரையும் நிமிர்ந்து பாராமல் முகம் இறுக கடந்து விட்டான்.
ஹேமா தான் ‘என்ன ஆச்சு இவனுக்கு?’ எனப் புரியாமல் விழிக்க,
தன்விக், “என்னடி உன் சைட்டு லைட்டா கலாய்ச்சாலே மூஞ்ச தூக்கி வைச்சுக்குறான். இவன் எல்லாம் எப்படி நம்ம கூட குடும்பம் நடத்த போறான்?” எனத் தீவிரமாக சிந்திக்க,
கவினோ, “அனேகமா, நம்ம ப்ரெண்ட்ஷிப்ப தான் முதல்ல கட் பண்ணுவான் போல. நீ வேற ஆளை பாத்துக்க ஹேமா.” என்றான் கிண்டலாக.
இது எதுவும் அவள் காதில் தான் விழவில்லை. மனம் முழுதும் சுதாகரின் வாடிய முகம் மட்டுமே நிரம்பி இருந்தது.
மதியம் எப்போதும் போல் வேலை முடிந்ததும், ஆரவின் அறைக்கு சென்ற வான்மதி உர்ரென்ற முகத்துடனே, “நான் இஷுவை கடைக்கு தூக்கிட்டு போறேன். நீங்க ஒர்க் முடிச்சுட்டு வீட்டுக்கு வாங்க. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க.” எனக் கூறி விட்டு, சற்று தள்ளி கீழே மேட்டில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த இஷாந்தை தூக்கியவள்,
“இஷு பேபி. நம்ம டாட்டா போலாமா?” எனக் கேட்டபடி எழும்ப, ஆரவ் அவளின் சிறுபிள்ளை கோபத்தை எண்ணி சிரிப்புடன் அவள் பின் வந்து நின்றான்.
“மேடம் ரொம்ப கோபமா இருக்கீங்க போல.” என அதரத்தை மடித்து வினவ, அவள் பதில் பேசாமல் நின்றாள்.
“பெரிய காயம்லாம் இல்ல கண்ணம்மா…! சொன்னா ஃபீல் பண்ணுவன்னு தான்…” என அவன் பேசும் முன்னே, “என்னை அப்படி கூப்பிடாதீங்க சார்” என்றாள் கோபத்துடனே.
“இப்படி போய் விழுந்துட்டு வந்துருக்கீங்க. கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லல. இனிமே பைக்க எடுத்தீங்க. நான் பேசவே மாட்டேன்.” என உதட்டை சுளித்துக் கொண்டு பேசியவளைக் கண்டு சிரிப்பை அடக்கியவன், “இனிமே பைக்ல போக மாட்டேன் கண்ணம்மா ஓகே வா…?” என்றான் அவளுயரத்திற்கு குனிந்து.
“ம்ம். சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க.” என்றவள், அவன் பதிலை எதிர்பாராமல் கிளம்பி விட்டாள்.
கடைக்கு சென்றும் அவனை மனதினுள் வறுத்து எடுத்தாள். ‘கை, கால் எல்லாம் எப்படி சிராய்ச்சுருக்கு. கொஞ்சம் விட்டுருந்தா உள்ள இருக்க எலும்பே தெரியும் போல. கார் இருக்கும் போது இவரை யாரு வண்டில போக சொன்னதாம்…’ எனப் புலம்பித் தள்ளியவளுக்கு, இன்னும் மனம் ஆறவில்லை.
அதோடு, இஷாந்தை உறங்க வைத்து அவளறையில் அவனுக்கு என ஏற்பாடு செய்திருக்கும் தொட்டியிலேயே கிடத்தியவள், வேலையைத் தொடர, சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி அவளைத் தழுவியது ஆரவிடம் இருந்து, “இன்னும் திட்டிட்டு தான் இருக்கியாடி…” என்று.
“மீட்டிங்ல பேச முடியாமல் புரை ஏறிக்கிட்டே இருக்குடி. கொஞ்ச நேரம் திட்டாம இரு.” என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வர, அதில் பக்கென சிரித்து விட்டாள்.
‘கஷ்டமா இருக்கு ஆரவ்.’ என டைப் செய்ய வந்து அதனை அழித்து விட்டவளுக்கு அதன் பிறகே, அவனிடம் அதிகமாக உரிமை எடுத்துக் கொள்கிறோமோ என்றே தயங்கினாள்.
அவனோ அவளின் தடுமாற்றத்தை கண்டுகொண்டு, “கண்ணம்மா?” என குறுஞ்செய்தி அனுப்பி அழைக்க, “ம்ம்.” என்று பதிலளித்தாள்.
“ஒரு கிஸ் கிடைக்குமா?” அவன் குறும்புடன் கேட்டிருக்க, வான்மதிக்கு நொடியில் கன்னங்கள் சிவப்பேறி இருந்தது.
போனைப் பார்த்தபடி லேசாக புன்னகைத்தவளுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
“கொஞ்சம் நிமிர்ந்து ஸ்மைல் பண்ணுனா, நானும் ரசிப்பேன்ல…” என்று.
அதில் அவளின் விழிகள் அங்கும் இங்கும் உருள, உதட்டைக் கடித்தபடி மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு, பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து, சுவற்றில் சாய்ந்து அவளை குறுகுறுவென பார்த்தபடி ஆரவ் நின்றிருக்க, பெண்ணவள் தான் திணறி விட்டாள்.
அவனை நேர்கொள்ள இயலாமல், விழிகளை தாழ்த்திக் கொண்டு, “என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க” என்றாள் மென்குரலில்.
“அதுவா மேடம். கிஸ் பண்ணலாம்ன்னு தான்…” என தலையை சரித்து குறும்பாக அவன் பார்த்ததில், அவள் நிமிரவே இல்லையே.
அவனோ அவளை நோக்கி நடக்க, வான்மதிக்கு தான் கைகள் உதறல் எடுக்கத் தொடங்கியது. ஆரவ் அதனை கண்டுகொள்ளாமல், நேராக இஷாந்திற்கு முத்தம் கொடுக்க, அவள் திருதிருவென விழித்தாள்.
“நீ பாட்டுக்கு சட்டுன்னு இவனை கூட்டிட்டு வந்துட்ட. நான் இவனை கிஸ் பண்ணவே இல்லையா அதான் வந்தேன்.” என்று பாதி உண்மையை கூறியவன் கண் சிமிட்டி விட்டு, “பை…” என்று கையசைத்து விட்டு வெளியில் செல்ல, அவளுக்குத் தான் ஒரு மாதிரி ஏமாற்றமாக இருந்தது.
‘அவரு பேபியை பார்க்க வந்துருக்காரு. அவ்ளோ தான்…’ எனத் தன்னை அடக்கிக்கொண்டவளின் அருகில் நிழலாட, ஆரவ் தான், “வேணும்ன்னு ஒத்துக்குறதுல என்னடி ஈகோ உனக்கு.” என்றான் விழி உயர்த்தி.
“ஸ்ஸ்ஸ்…” என கண்ணை மூடி திறந்து தவித்தவள், “இ இல்லையே…” என சாதாரணமாகக் கூற வர, அவனோ மெல்ல அவள் காதோரம் குனிந்து “ஒன் பட்டர்ஃபிளை கிஸ்?” எனக் கேட்டான் கிசுகிசுப்பாக.
வான்மதி தான் குழம்பி, “அப்டின்னா?” எனக் கேட்க, “ஓகேவா இல்லையான்னு சொல்லு. அப்போ தான் சொல்லி தருவேன்.” என தோளைக் குலுக்கிக் கூறி விட்டு, அவளின் தவிப்பை ரசித்திருந்தான் ஆரவ்.
தேன் தூவும்…!
மேகா!
Next ud on Saturday 🙃
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.