1,394 views

சொன்னது போலவே அரை மணி நேரத்தில் வந்துவிட்ட அக்னி ஃபோன் செய்து “எப்ப முடியும்” என அன்பினியை கேட்க,

“முடிஞ்சிருச்சு  பில் போட லைன்ல நின்னுட்டு இருக்கேன்” என்றவளிடம் சீக்கிரம் வர சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.

நீண்ட வரிசையில் நின்றவள்  தன் முறை வந்ததும் பணத்தை செலுத்த பர்சில் இருக்கும் கிரெடிட் கார்ட்டை எடுக்க அது  இல்லை. பதறிவள் மற்றொரு கார்ட்டை தேட, அதுவும் இல்லாமல் போனது. அங்கிருக்கும் சேல்ஸ்மேன் மணி ஆவதை உணர்த்த, தனக்கு அடுத்தாக நிற்பவரை பணம் செலுத்த அனுப்பி விட்டு தனியாக வந்து  தன் பர்ஸை சோதித்து பார்த்தாள். அப்போதும் அவள் கைகளுக்கு கிடைக்கவில்லை.

கார்ட் கையில் இருப்பதால் எப்போதும் பணம் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை அன்பினிக்கு.  ஐபோன் வாங்க வந்தவள் இது ஒரு பன்னாட்டு பொருளகமாக இருப்பதால் ஃபோனோடு சேர்த்து தனக்குத் தேவையான ஆடைகளையும், ஒப்பனை பொருட்களையும் வாங்கி குவித்து விட்டாள் . அவள் அருகில் வந்த சேல்ஸ்மேன்,

“மேடம் இந்த பொருள் எல்லாம் பில் போடணுமா இல்ல ரிட்டன் பண்றீங்களா.” என்று கேட்க,
” ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க என் ஹஸ்பெண்ட்டை கூட்டிட்டு வரேன்.” என்றவள் நேராக அக்னியிடம் வந்து,

  “அக்னி கிரேடிட் கார்ட் பர்ஸ்ல தான் வைச்சிருந்தேன் இப்போ எங்கன்னு தெரியல. உன்னோட கார்டு கொடு நான் வீட்டுக்கு வந்ததும் அமௌன்ட் கொடுக்கிறேன்.” என்றவளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் தன் கார்டை கொடுத்தான்.

“பொண்டாட்டி கேட்டதும் கொடுத்துட்ட சோ ஸ்வீட் புருஷன் அக்னி நீ.”என்று  பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு உற்சாகமாக பணம் செலுத்த சென்றாள்.

அவள் சென்றதும் மௌனமாக சிரித்தவன் கண்களை மூடி இருக்கையில் சாய நினைவுகள் அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்றது. வீட்டில் அவள் கர்வமாக உன்னுடைய பணம் வேண்டாம் என்று உரைத்ததுமே முடிவு செய்து விட்டான் அதற்கான தண்டனையை தர வேண்டும் என்று.   அவள் அசந்த நேரம் பர்சில் இருந்த அனைத்தையும் எடுத்து விட்டான். அரை மணி நேரம்  கழித்து வருவதாக சாக்கு சொன்னவன் நேராக சென்றது செல்வகுமார் வீட்டிற்கு தான்.

வந்தவன் யாரையும் கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர, மருமகனைப் பார்த்த நந்தினி வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்தார். அதிகாரத் தோரணையாக அமர்ந்திருந்த அக்னியை கண்டவர் கொதித்தெழ,

“போதும் ரொம்ப ஓவரா நடிக்காதீங்க . என் பொண்ணே இல்லன்னு சொல்லிட்டு அவ கையில இந்த கார்டுலாம் கொடுத்துவிட்டு இருக்கீங்க எதுக்கு இந்த ரெட்டை வேஷம். குடும்பத்தோட சேர்ந்து சினிமால நடிக்க போங்க. நல்லா கல்லா கட்டும்.” என்றவனிடம்,

“டேய்! ரொம்ப ஓவரா பேசுற‌ நீ.”  என்று சண்டைக்கு பாயந்தான் விக்ரம்.

அவனை தடுத்த அன்னபூரணி,
“விக்ரம் என்ன இருந்தாலும் அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை. அடிக்க கை ஓங்குறது தப்பு. தன்னோட பொண்டாட்டிக்கு எதுவா இருந்தாலும் தன் காசுல செய்யணும்னு நினைக்கிறாரு. இதுல தப்பு ஒன்னும் இல்லையே.” என்றவர் அக்னியின்,

“இதெல்லாம் அவ இங்க இருந்து போகும்போது எடுத்துட்டு போனது. நாங்க எதுவும் கொடுத்து விடல. அதெல்லாம் இங்க வச்சிட்டு உன் பொண்டாட்டிக்கு என்ன பண்ணனுமோ அதை உன் காசுல பண்ணு.” என்ற வார்த்தையில் சத்தமிட்டு சிரித்த அக்னி,

“இந்த வீட்டுலயே உங்களுக்கு மட்டும் தான் கொஞ்சம் அறிவு இருக்கு. ஆனா, ஒரு சின்ன திருத்தம் அவ என்னோட பொண்டாட்டி இல்ல. என் பின்னாடி ஓடி வந்தவள். அவளுக்காக என் காச செலவு பண்ண மாட்டேன். வேணும்னா மூணு வேளை சோறு போட்டு போனா போகுதுன்னு தண்டமா வளர்க்கிறேன்‌.” என்று அங்கிருந்து  கிளம்ப, வீட்டிற்குள் வந்தான் மகேஷ்.

***
பணம் செலுத்த சென்ற அன்பினி  கிரெடிட் கார்ட்டை  கொடுக்க, அதை வாங்கிய சேல்ஸ்மேன் சில நொடியிலேயே “மேடம் கார்ட்  டிக்லைன்னு வருது.” என்றார்.

உடனே கணவனுக்கு அழைத்தாள்.
அவள் உள்ளே சென்றதும் அழைப்பாள் என்று அறிந்த அக்னி ஜீவாவிற்கு கால் செய்து லைனில் இருக்கும்படி உத்தரவிட்டிருக்க,  போன் செய்து கொண்டிருக்கும் அன்பினிக்கு கால் வெயிட்டிங்கில் வரத் தொடங்கியது.

பலமுறை முயற்சித்தும் தொடர்ந்து கால் எடுக்கப் படாமல் இருக்க, நேரமும் அரை மணியை கடந்தது. மீண்டும் அங்கிருந்தவர்களிடம் உத்தரவு கேட்டவள் அக்னியை பார்க்க வந்தாள். அவன் காரில் இல்லாமல் போக யோசனையோடு அழைத்துக் கொண்டே மீண்டும் பில் போடும் இடத்திற்கு வந்தாள்.

இருபது தடவைக்கு மேலாக அழைத்தும் எடுக்காதவனை மனதில் திட்டியவள் அங்கிருந்தவர்களை பார்க்க,  வாடிக்கையாளர் முதல் விற்பனையாளர்கள் வரை எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஒரு மாதிரியாக.

பணம் செலுத்தும் இடத்தில் வேலை பார்க்கும் நபர் அன்பினியிடம், “மேடம் பேமெண்ட் பண்றீங்களா இல்லையா. ரொம்ப நேரமா உங்க பொருள் எல்லாம் டேபிள் மேலேயே இருக்கு. சேல்ஸ் மேனேஜர் வேற இரண்டு தடவைக்கு மேல வந்து கேட்டுட்டாரு.” என்றவருக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக ஒருமுறை அக்னிக்கு அழைக்க,
இந்தமுறை அழைப்பை ஏற்றான்.

“அக்னி ஒரு நிமிஷம் எடுத்து பேசினா என்ன. இங்க நீ கொடுத்த கார்ட்ல பேமெண்ட் பண்ண முடியல. கொஞ்சம் மேல வரியா.” என்றவளின் வார்த்தையில் முதல் முறையாக அவமான சாயல் இருப்பதாக உணர்ந்தவன்,

“இரு நான்  வர்றேன்.”என்றுவிட்டு ஃபோனில் கேம் விளையாட தொடங்கினான்.

அன்பினி தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பணியாளரிடம் பத்து நிமிடம் டைம் கேட்டு இருந்தாள். அவள் கேட்ட நேரமும் சென்றிருக்க, அக்னி வந்தபாடில்லை. அப்படி இப்படி என ஒரு மணி நேரம் கழிந்திருக்க, “சாரி மேடம் ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியாது நாங்க ப்ராடக்ட்ட எடுத்து வைக்கிறோம்.” என்றவர்கள் ட்ராலியை வாங்கினார்கள்.

 

கேட்ட பொருளை கேட்ட நிமிடத்தில் வாங்கி பழக்கப்பட்டவள் இந்த அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாமல் மீண்டுமொருமுறை அவனிற்கு அழைக்க,

எடுத்தவன்,”எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க.” என்றான் கூலாக.

“டிஸ்டர்ப் பண்றனா?  வரன்னு சொல்லிட்டு இன்னும் என்ன பண்ற.”ஆத்திரமாக பேசினாள்.

 

“அச்சோ! மேல வர சொன்னல மறந்தே போயிட்டேன் அன்பினி சித்திரை. ஃபோன்ல ஒரு புது கேம் விளையாட ஆரம்பச்சனா அப்படியே ஆர்வமாகி நீ சொன்ன விஷயத்தை மறந்தே போயிட்டேன். நான் ரொம்ப ஸ்வீட் புருஷன் தான. வேணும்னா இப்ப வரவா அன்பினிசித்திரை.”என்றவனின் வார்த்தையில் கண்கள் கலங்க இவை அனைத்தும்  அவன் வேலை என்பதை புரிந்து கொண்டாள்.

காட்சி பொருளாக மாறியவள் வாழ்வில் பார்க்காத அவமானத்தை உணர ஆரம்பித்தாள். எதுவும் பேசாமல் அவனது அழைப்பை துண்டித்து, அங்கு இருப்பவரிடம் மன்னிப்பு கேட்க, அவர்களோ அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தனர். அதை உணர்ந்து மேலும் கூனிக்குறுகியவள் யாரையும் பார்க்காமல் வெளியேற, “அன்பினி” என்ற அழைப்பில் நின்றாள்.

“இங்க நடந்ததை நானும் பார்த்துட்டு தான் இருந்தேன். காசு எடுத்துட்டு வரலையா.  செல்வகுமார் பொண்ணுக்கு இந்த நிலைமையா. நான் வேணும்னா உனக்கு காசு தரவா. என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் முன்பு சிரித்த முகமாக நின்றிருந்தான் மகேஷ்.

“அன்னைக்கு அவனுக்காக அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்துன இன்னைக்கு பாரு அவன் பல பேருக்கு முன்னாடி உன்னை அவமானப்படுத்திட்டான். இந்த பொண்ணுங்களுக்கு தன் பின்னாடி வரவனை விட இந்த மாதிரி அசிங்கப்படுத்துறவன தான் ரொம்ப பிடிக்குது என்ன பண்ண.” என்றவனுக்கு பதில் சொல்லும் நிலைமையில் இல்லாத அன்பினி மௌனமாக அவனை கடந்து, கார் நிற்கும் இடத்திற்கு வந்தாள்.

உள்ளே அமர்ந்தவள்  “போலாம் ” என்றாள் தலை கவிழ்ந்து .

“என்ன அன்பினிசித்திரை நிறைய பொருள் வாங்கிட்டு வரீங்க போல. இப்படி தூக்க முடியாம தூக்கிட்டு வரீங்க. சொல்லி இருந்தா நான் உதவிக்கு வந்து இருப்பனே .”  பேச்சில் இருக்கும் நக்கலை அறிந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“இதுதான் உனக்கு கடைசி. இன்னொரு தடவை என் வழியில  வந்த இதைவிட மோசமான அவமானத்தை பார்க்க வேண்டிவரும். என் வாழ்க்கையில எப்படி வந்தியோ அதே மாதிரி திரும்பி போயிடு. இல்லனா  தினம் தினம் இந்த அவமானத்தை தான் நீ சந்திக்கணும்.” என்று விட்டு காரை எடுத்தான்.

அக்னியின் வார்த்தை ஒவ்வொன்றும் கசப்பாய் அவள் நெஞ்சினில் இறங்க ஆரம்பித்தது. .

பக்கத்தில் இருப்பவளின் மௌனத்தில் மகிழ்ந்தவனுக்கு கிளம்பும் போது இருந்த இறுக்கம் மாறி மனதில் சொல்ல முடியாத நிம்மதி பிறந்தது. அவை அவன் இயக்கும் மகிழுந்து வேகத்திலேயே தெரிய ஆரம்பித்தது அன்பினி சித்திரைக்கு.

வீட்டிற்கு வந்த அக்னி தன் அறைக்கு செல்ல படியேற, “அக்னி ஒரு நிமிஷம்.” என்றாள் அன்பினிசித்திரை. அவன் அவள் பேச்சைக் கேட்காமல் படியேறிக் கொண்டிருக்க,

“மாமியாரே!” என்று  அந்த வீடு அதிரும்படி கத்தினாள். அதில் சென்றவன்  கால்கள் திரும்பிப் படியிறங்க, வீட்டிலிருந்து அனைவரும் வந்தார்கள்.

“எதுக்குமா இப்படி கத்துற.இது என்ன வீடா இல்ல சந்தை கடையா.” என்னவரை பரமேஸ்வரி அடக்கினார்.

அவருக்கு பதில் சொல்லாதவள் அக்னி அருகில் சென்றாள். அவன் முறைத்துக் கொண்டு நிற்க, கண்டுகொள்ளாதவள் பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்தாள்.

“எதுக்குடி என் ஃபோன் எடுக்குற.” என்ற அடுத்த நொடி அதை தரையில் வீசி அடித்தாள் வேகமாக. அடித்த வேகத்தில் உள்ளிருந்த உட்பொருட்கள் அனைத்தும் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடியது.

உடைந்த போனை பார்க்காதவன் தூக்கி அடித்தவள் கழுத்தை பிடித்து, “எதுக்கு இப்ப என் ஃபோன தூக்கி அடிச்ச.” என்றான்.

அந்த கையை தட்டி விட்ட அன்பினிசித்திரை, “நாளைக்கு உனக்கு ஒரு ஃபோன் வாங்க போவல அப்போ எனக்கும் ஒரு போன் வாங்கிட்டு வா இல்லன்னா அந்த போனையும் எப்படி தான் தூக்கி அடிப்பேன்.” என்றவள் யாரையும் கண்டு கொள்ளாமல் படியேறினாள்.

“பரமு அந்த பொண்ணு கிட்ட சொல்லி வை இதெல்லாம் குடும்பத்துக்கு நல்லது இல்ல.”என்ற மணிவண்ணன் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார்.

“இந்த வீட்டுல என்ன நடக்குதுனே தெரியல. பேசாம ரெண்டு பேரும் தனியா போய்டுங்க.” என்று கணவன் பின்னே சென்றார் பரமேஸ்வரி.

அறைக்கு சென்றவன் அவளைத் தேட,குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. கதவை ஓங்கி அடித்தவன், “வெளிய வாடி.” என்றான்.

பதில் கிடைக்காமல் போக தன் கோபம் முழுவதையும் குளியலறை கதவில் காட்டினான். உள்ளே இருந்த அன்பினி ஒரு வார்த்தை பேசவில்லை. அக்னி கொடுத்த அவமானத்தில் கோபம் மட்டுமே இருந்தது.    மனதில் இருக்கும் கோபத்திற்கு இப்போது பேசினால் இன்னும் உறவில் விரிசல் ஏற்படும் என்பதால் தன் மனதை குளிர்விக்க ஷவரின் உதவியை நாடினாள்.

தன்மேல் கொட்டும் ஒவ்வொரு துளிக்கும் அவளின் கோப அளவு குறைய ஆரம்பித்தது. தன்னவளின் நிலை புரியாது  கொழுந்து எரியும் கோபத்தோடு கதவை அடித்து நொறுக்கினான் அக்னி. எட்டி உதைத்த வேகத்தில் கதவு பட்டென்று திறந்து விட, தலை குனிந்த படி தண்ணீரில் நனைந்து கொண்டிருந்த அன்பினி காட்சி அளித்தாள்‌.

வேகமாக அவளை நெருங்கியவன் இழுத்து பிடித்து, “சதிகாரி என் குடும்பத்தை என்கிட்ட இருந்து பிரிக்க தான் இவ்ளோ வேலை பார்க்கிறியா. ஏற்கனவே என் அம்மா என்கிட்ட பேசுறது இல்லை. இப்போ நீ பண்ண வேலையால என்னை தனியா போக சொல்றாங்க. நான் எதுக்குடி போகணும் இந்த வீட்டுக்கு சொந்தம் இல்லாதவ நீதான். நீ போ வெளிய” என்று தள்ளினான்.

மேலே கேட்கும் சத்தத்தில் உள்ளே சென்ற பெற்றோர்கள் இருவரும் அவனின் அறை வாசல் முன்பு நிற்க, சரியாக அன்பினி தரையில் விழுந்தாள். விழுந்தவள் மனம் அடங்க  மறுத்து வாதம் புரிய வர,

“அக்னீனீ!” என்று மகனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார் பரமேஸ்வரி.

அன்னையைப் பார்த்ததும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சுவற்றைப் பார்த்து நின்றான். அன்பினியை பார்த்தவர் எழ உதவி செய்ய, அதை மறுத்தவள் எழுந்து நின்றாள்.

“இந்த பிரச்சனைய ரெண்டு பேரும் இத்தோட விடுங்க. இனி எந்த சத்தமும் உங்க ரூம்ல இருந்து வரக்கூடாது.” பொதுவாக சொன்னவர் மருமகளை பார்த்து, “ஈரத்தோட நிக்காத டிரஸ் மாத்திட்டு சாப்பிட வா.” என்றழைத்தார் மகனை அழைக்காமல்.

வீட்டின் பெரியவர்கள் சென்ற பின் இருவரும் எதுவும் பேசாமல் அவரவர் இடத்தில் அமைதியாக நின்று இருந்தார்கள். அன்பினி நின்றிருந்த இடத்தை சுற்றி நீர் சொட்டிக் கொண்டிருக்க,  அவை நகர்ந்து அக்னியின் பாதத்தை தொட்டது.

ஈரம் பட்டதும் திரும்பியவன் அவளைப் பார்க்க, தலை குனிந்து கொண்டு நின்றிருந்தாள். மனம் அதைப் பார்த்து சங்கடப்பட்டாலும் கோபம் கண்ணை மறைத்ததால் வெளியேறினான். ஹாலில் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அமைதியாக அமர்ந்தான்.

திவ்யா அன்னையைப் பார்த்துவிட்டு  அண்ணனை பார்த்தாள். அவர் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, தட்டை எடுத்தவள் சாப்பாட்டை வைக்கும் நேரம்…
“சாப்பிடற வேலைய மட்டும் பாரு.” என்றார் பரமேஸ்வரி.

அண்ணனை பாவமாக பார்த்தவள் சாப்பிட மனம் இல்லாமல் அதை பிசைந்து கொண்டிருக்க, “உன் பொண்டாட்டி சாப்பிடாம இனி நீ சாப்பிட கூடாது.” கண்டிப்புடன் கூறிவிட்டார் பரமேஸ்வரி.

எதுவும் பேச முடியாதவனாக மீண்டும் அறைக்கு சென்றான். செல்வதற்கு முன் அன்பினி எப்படி நின்று இருந்தாளோ அதே நிலை மாறாமல் நின்றிருந்தாள். முன்பு இருந்ததை விட தரையில் ஈரம் அதிகமாக இருந்தது. கண்டுகொள்ளாமல் பால்கனியில் நின்றான்.

வீசும் காற்று இதமாக மனதை வருடி அமைதி ஆக்கியது அவனை. பெருமூச்சு விட்டவன் திரும்பி அன்பினியை பார்த்தான். வெகு நேரமாக ஈரத்துடன் இருப்பதால் லேசாக உடல் உதற ஆரம்பித்தது. கவிழ்ந்த தலை அப்படியே இருக்க, நடுங்கும் உடலை கட்டுப்படுத்திக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்தாள்.

இறங்கி செல்ல மனம் வரவில்லை அக்னிக்கு. திரும்பி நின்றவன் மனம் அன்பினியை பார்க்கச் சொல்லி கட்டளை இட, நொடிக்கு ஒரு முறை திரும்பி பார்த்தான். அவள் நிலை மாறாமல் இருக்க,

“எவ்ளோ நேரம்  இப்படியே இருப்ப டிரஸ் மாத்து.” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

காதில் கேட்காதது போல் அவ்வளவு பிடிவாதம் அவளிடம். ஈரத்தை துடைக்குமாறு நான்கு ஐந்து முறை சொல்லி விட்டான். எதற்கும் அசையாமல் மனதில் இருக்கும் கோபத்தால் சிலையாக நின்றாள். காதலுக்காக தன்மானத்தை இழந்து விட்டதாக அவள் மனம் குற்றம் சாட்ட தனக்குத்தானே தண்டனை கொடுக்க நின்றிருக்கிறாள்.

பலமுறை சொல்லியும் அதே நிலையில் இருக்கும் அன்பினி மீது கோபம் வர, “என்னடி இப்போ உனக்கு சீன் போட்டு நின்னுட்டு இருக்க. டிரஸ்ஸ மாத்துன்னு சொல்றேன்ல.” என்று அவளைப் பிடித்து உலுக்கினான்.

உடல் அசைந்ததே தவிர கவிழ்ந்திருந்த தலை திரும்ப வில்லை. “இவ்ளோ திமிர் தனமா இருக்காத. உங்க அப்பன் மாதிரி ஒன்னும் இல்லாம தான் நிற்ப.” என்று வேகமாக முகத்தை திருப்பியவன் அவள் முகத்தில் தெரியும் வேதனையை பார்த்து அடங்கிவிட்டான்.

அன்பினி முகத்தை பார்க்காமல் தடுமாறியவன் மாற்று உடை எடுத்து வந்து அவள் முன்பு நீட்டினான். வாங்காதவள் அமைதி காக்க, “போதும்டி ரொம்ப நேரமா நிக்கிற மாத்து.” என்றான்.

பிடிவாதம் அதை வாங்க மறுக்க, இறங்கி வந்தவன் ஈரமான அவள் தலையை துடைக்க துவங்கினான். உடனே அவள் கை அதை தட்டி விட, முறைத்தவன் துடைக்கும் வேளையில் இறங்கினான்.

“ப்ச்!” என்ற சத்தத்தோடு மீண்டும் தள்ளிவிட, இப்போது பிடிவாதம் பிடிப்பது அக்னியின் முறையானது. அவமான கோபம் அவனிடம் அடங்கி செல்ல மறுக்காமல் துண்டை தடுத்து தூக்கி எறிந்தாள்.

பற்களை கடித்தவன் அதை எடுத்து வந்து துடைக்க, இடம் கொடுக்கவில்லை அன்பினி. கைகளைப் பிடித்து ஒரு கையில்  அடக்கி கொண்டவன் மறுக்கையால் துடைக்க ஆரம்பித்தான். சீரும் காளையாக அவள் அடங்காமல் திமிரிக்கொண்டிருக்க, கோபம் கொண்டவன் முகத்தைப் பற்றி,

“உனக்கு என் மேல தான கோபம் அதை என்கிட்ட காட்டு. எதுக்கு உன்னை நீயே கஷ்டப்படுத்துற.” என்று முறைக்க,

“அதனால உனக்கு என்ன பிரச்சனை. நான் எப்படியோ போற விடு. நீதான் வேணும்னு எல்லாத்தையும் விட்டுட்டு உன் வீட்டுக்கு வந்தா நாய் மாதிரி ட்ரீட் பண்ற. இதையே நான் பண்ணி இருந்தா சும்மா இருப்பியா. எனக்கு இதெல்லாம் பிடிக்கல அக்னி கோவ கோவமா வருது. இந்த கோபத்துல ஏதாவது ரியாக் பண்ணிடுவேன்னு தான் பேசாம ஒதுங்கி போறேன் விடு.” என்று கத்தியவள் அவனை விட்டு நகர்ந்தாள்.

மனம் வலித்தது அக்னிக்கு. கோபத்தால் தவறிழைத்து விட்டதை   உணர்ந்து சங்கடத்தோடு அவளைப் பார்த்தான். பால்கனியில் நின்றிருந்தவள் உடல் இன்னும் நடுங்க ஆரம்பித்தது இரவு நேர காற்றால். இந்த தண்டனையை அவள் விரும்பியே ஏற்க, பார்ப்பவன் மனம் குற்றம் சுமத்தியது.

பின்னால் நின்றவன், “சாரி” என்றான்.

திரும்பாமல் நிலவு தேவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பினிசித்திரை. காற்று லேசாக கூந்தலை அசைக்க, அதைவிட வேகமாக அசைந்தது குளிரால் அவள் உடல். மெத்தையில் இருக்கும் போர்வையை எடுத்து வந்தவன் போர்த்தி விட, தட்டிவிட்டாள்.

ஓவராக செல்வதாய் உணர்ந்தவன், “போதும் நான் தான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடு. இப்படியே நின்னா ஜுரம் வரும் டிரெஸ்ஸ மாத்திட்டு வந்து உன் கோபத்தை காட்டு ப்ளீஸ்.”  என்றான் அவளை தன்னை பார்க்குமாறு திருப்பி.

முகம் பார்க்காமல் குனிந்திருந்தாள். ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் அமைதியாக அவள் நின்றிருக்க, “அன்பு!” என்றழைத்தான்.

அவள் நகர பார்க்க, கைப்பிடித்து தடுத்தவன், “என்னை பாரு அன்பு.” என்றான் தாழ்ந்த குரலில்.

இறங்கும் மனதை தடுத்தவள் திருப்பிக் கொள்ள, இடுப்பில் கைகோர்த்து தன் உடலோடு சேர்த்தவன் மற்றொரு கையால் தாடையை பற்றினான் தன்னை பார்க்குமாறு. முகம் நேராக இருக்க, பார்க்காமல் இருக்க விழி மூடிக்கொண்டாள்.

தன்மேல் மோதிக் கொண்டு நிற்கும் உடல் நடுங்குவதை நன்றாக உணர்ந்தான் அக்னிசந்திரன். பிடிவாதம் பிடிக்கும் அவள் முகத்தை பார்த்து, “இதுக்கு நீ என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன் ப்ளீஸ் டிரஸ மட்டும் மாத்து.” என்ற பின்னும் கண்மூடி அமைதியான நிலையிலேயே நின்றிருந்தாள்.

இமை சிமிட்டாமல் அவள் முகத்தைப் பார்க்க, மூடிக் கொண்டிருக்கும் கருவிழிகள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. தன்னிடம் வரும் மனதை கடினப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அக்னி. லேசாக உதட்டில் சிரிப்பு மின்ன, முதல் முதலாக அதுவும் ஆசையாக இனிமையான முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தவன் இப்பொழுது அந்த கண்களை சுவாரஸ்யமாக காண, இரண்டு கண்ணிலும் ஒரு சொட்டு கண்ணீர் துளிகள் உருண்டது.

வலது புறம் இறங்கும் கண்ணீர் துளிக்கு இரண்டாவது முத்தத்தை தானமாக கொடுத்து விட்டான். அவை சரியாக இதழின் ஓரத்தில் பட்டது. அக்னியின் முத்த தாக்கத்தால் இரண்டாவது கண்ணில் இரண்டு சொட்டு நீர் சிந்த, “அன்பு கண்ண திற” என்றான்.

அவள் மறுப்பாக தலையசைக்க, சிரித்தவன்… இடதுபுற கன்னத்தில் வர தயாராக இருக்கும் கண்ணீரை தன் உதட்டில் பூசிக் கொண்டான் சாயமாக. அன்பினியின் உதடுகள் ஏதோ முணுமுணுக்க, கேட்க விருப்பம் இல்லாதவன் தன்னை பார்க்காமல் அடம் பிடிக்கும் கண்ணிற்கு மாற்றி மாற்றி இரு முறை முத்தமிட சிற்பியில் இருக்கும் முத்து திறந்து கொண்டது.

விழிகளில் காதலை விட வலி அதிகமாக இருந்தது. பார்த்தவன் செய்த தவறுக்கு தண்டனையாக மீண்டும் ஒரு முறை மீசை முடிகளை அவள் கண் இமைகளோடு உறவாட விட்டான். கனம் கொண்ட இதயம் லேசானது போல் உணர்ந்தாள் அன்பினி.

அதன் பலனாக கைகள் கணவனின் சட்டையை பிடித்துக் கொண்டது. ஆடையில் இருக்கும் கையை அக்னி எடுத்து விட, அப்போது தான் அவளின் கண்கள் முழுமையாக அவன் கண்ணை சந்தித்தது. எப்போதும் அவனை கண்டால் பிரகாசிக்கும் கண்கள் கலங்கி இருக்க,

 

“நிஜமா சாரி அன்பு. என் மேல கோபம் இருந்தா காட்டிடு. உன்ன நீயே வருத்திக்காத.” என்றவன் கன்னத்தில் கை வைத்து முத்தம் கொடுக்க சென்றான்.

அதை தடுத்தவள், “வேணா அக்னி தள்ளி போ!” என்றிட,

“சாரி!” அக்னியின் குரல் தளர்ந்தது.

“உனக்காக எல்லாத்தையும் விட்டு தர தயார். அதுக்காக என் சுய கௌரவத்தை விட்டு தருவேன்னு நினைக்காத. இன்னொரு தடவை இப்படி நடந்தா என்னைக்கும் உன் அன்பு உனக்கு கிடைக்க மாட்டா.” என்றாள் உறுதியோடு.

“சரி  ஈரத்தோட நிக்கிற டிரஸ்ஸ மட்டும் மாத்து ப்ளீஸ்டா.” என்றவனை விட்டு அவள் விலக, தடுத்து தன்னோடு சேர்த்தவன்,

“அன்பு வேணும்னா நான் ஈரத்தோட நிக்கிறேன் உன் கோபம் போற வரைக்கும். டிரஸ்ஸ மாத்து.” என்று அவளிடம் கெஞ்ச, அக்னி மீது இருந்த பார்வை நகரவில்லை அவளுக்கு.

இருவரின் விழிகளும் கதை பேச துவங்கியது. மீண்டும் சட்டையை பிடிக்க அன்பினி கைகள் போராட, தடுத்தவன்  அவள் முகத்தை நெஞ்சில் புதைத்துக் கொண்டான். அடுத்த நொடி அவன் உடல் முழுவதையும் அன்பினி கைகள் தாங்கிக் கொண்டது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த உடலை போர்வை போல் அவன் கரங்கள் தாங்கிக் கொள்ள,

“இனி ஒரு தடவை இந்த மாதிரி பண்ணாத அக்னி. ரொம்ப அசிங்கமா இருக்கு. நமக்குள்ள எது நடந்தாலும் அது இங்கயே இருக்கட்டும். யாரு முன்னாடியும் என்னை விட்டுக் கொடுக்காத ப்ளீஸ்.” என்று அவன் முகத்தைப் பார்க்க விலக, விடாமல் இறுக்கி அணைத்துக் கொண்டு,

“சாரி அன்பு” என்று தடைக்கு கீழ் இருக்கும் உச்சந்தலையில் முத்தமிட்ட அக்னி சந்திரன் அறியா பக்கம் விரைவில் நடக்க போகிறது… அவனின் அன்பினியால்‌

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
39
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *