Loading

தெம்மாங்கு 18

 

“ஏன்டா இப்படிப் பண்ண? எதுக்குடா இப்படிப் பண்ண? என் வாழ்க்கையை ஏன்டா நாசமாக்குன? நண்பனோட பொண்டாட்டிய உன் பொண்டாட்டியா ஆக்கிக்க எப்படிடா மனசு வந்துச்சு? இப்படி ஒருத்தன் கூடவா என் புருஷன் சுத்திக்கிட்டு இருந்தான்?” எனக் குமரவேலனை விடாமல் அடித்துக் கொண்டிருந்த தேனிசை தேவி,

 

“என்னை ஊருக்கு முன்னாடி வேசியா காட்டுன, அப்பக் கூட இவ்ளோ வலிக்கலடா. என் புருஷனுக்குத் துரோகம் பண்ண வச்சிட்டியே, நீ நல்லா இருப்பியா… சத்தியமா சொல்றேன், நாசமாப் போயிடுவ. எனக்கும், என் புருஷனுக்கும் செஞ்ச துரோகத்துக்குப் புழு பூத்துத் தான்டா சாவ… உன் வம்சம் மொத்தமும் அழிஞ்சி நாசமாப் போயிடும்.” சாபம் விட்டுக் கொண்டிருந்தாள்.

 

அவள் கொடுக்கும் சாபங்களையும், அடிகளையும் கல்லாக நின்று வாங்கிக் கொண்டிருந்தான். மனம் பொறுக்க முடியாமல் அவளைத் தடுத்த மாணிக்கம் பேச வருவதற்குள்,

 

“தயவு செஞ்சு ஒரு வார்த்தை பேசிடாதீங்க. உங்க மேல எவ்ளோ மரியாதை வச்சிருந்தேன். அது எல்லாத்தையும் ஒரு நொடியில சரிச்சிட்டிங்க. எப்படி இப்படி ஒரு பாவத்தைப் பண்ண மனசு வந்துச்சு? உங்க வீட்டுப் பொண்ணா இருந்திருந்தா, ஏன்டா இப்படிச் சொன்னன்னு சட்டையப் பிடிச்சு அடிச்சிருப்பீங்க. யாரோ ஒருத்தன் பொண்ணா இருக்குறதால தான், இப்படி ஒரு பாவத்தைப் பண்ணி வாழ்க்கை முழுக்க நிம்மதி இல்லாம ஆக்கிட்டீங்க.” என்றாள்.

 

“நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளும்மா…”

 

“கேட்டதெல்லாம் போதும். உங்களால நான் பட்ட அசிங்கம் எல்லாம் போதும். தயவு செஞ்சு என் முன்னாடி வராதீங்க. என் அன்புக்குத் துரோகம் பண்ண வச்சிட்டீங்க. இப்ப அவன், ஏன்டி இப்படிப் பண்ணன்னு கேட்பான். எந்த முகத்தை வச்சு அவன்கிட்ட மன்னிப்புக் கேட்பேன். அவன் என்னை மன்னிக்கவே மாட்டான்… சத்தியமா மன்னிக்க மாட்டான்.” 

 

மண்டியிட்டுத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். துளியும் உணர்வின்றி அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான் குமரவேலன். அமைதியாக நடப்பதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சந்தானம்,

 

“உன் வாழ்க்கைக்காகத் தானம்மா இப்படி ஒரு வேலையச் செஞ்சாரு.” என மாணிக்கத்திற்காகப் பேச,

 

“இவன் தாலி கட்டிட்டா, என் வாழ்க்கை நல்லா ஆகிடுமா? நல்லா நாக்கப் புடுங்குற மாதிரி தான கேட்டாங்க… தாலிய ஒருத்தனுக்கு, பிள்ளைய ஒருத்தனுக்கான்னு… அதை ஆமான்னு சொல்ல வச்சிருக்கு இவர் பண்ண காரியம். காலம் முழுக்க என் அன்புவை மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்து இருப்பேன். இப்போ அதுக்குத் தகுதி இல்லாதவளா ஆக்கிட்டீங்க.” என்ற அவளின் அழுகை அடங்கிய பாடில்லை.

 

“எதுக்கு இதைப் பண்ணன்னு இப்ப உனக்குப் புரியாதும்மா. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இந்தக் கிழவன் உனக்கு நல்லது தான் பண்ணி இருக்கான்னு புரியும்.”

 

“அப்படி ஒரு நல்லது வேணாம்னு சொல்றேன். இனி என் வாழ்க்கையில என்ன இருக்கு நல்லது நடக்க… எல்லாம் முடிஞ்சு நாசமாப் போயிடுச்சு. இப்ப இவன் தாலி கட்டினதால புருஷன், அப்படித் தான… அன்புவக் காதலிச்சு, அவனுக்காக வீட்டை எதிர்த்துத் தாலிய அறுத்துட்டு நின்ன எனக்கு என்ன மரியாதை? 

 

அவனுங்க சொன்ன மாதிரி அன்புக்குத் துரோகம் பண்ணிட்டு, இவன் கூட வாழ்ந்தனா? சொல்லுங்க, இவன் கூட வாழ்ந்தனா? என் புருஷனுக்குத் துரோகம் பண்ணிட்டு, இவனுக்குப் பிள்ளையைப் பெத்துக்கப் போறனா. எல்லாரும் சேர்ந்து என்னை இப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளிட்டீங்களே… என்ன பாவம் பண்ணன்னு தெரியல, இவ்ளோ அசிங்கத்துக்கு மத்திலயும் உயிரோட இருக்குறன்.” 

 

“நடந்தது நடந்து போச்சுமா. சரியோ தப்போ உன் கழுத்துல திரும்பவும் தாலி ஏறிடுச்சு. நடந்ததை ஏத்துக்கப் பாரு.”

 

“முடியாது!” என உச்சக் குரலில் கத்தியவள், “ஏத்துக்க முடியாது. என் புருஷன் இடத்துல, அவனக் கொன்ன இந்தப் பச்சத் துரோகியை வைக்க முடியாது. என் காதலை என்னாலே அசிங்கப்படுத்த முடியாது.” பைத்தியம் பிடித்தவள் போல் தொண்டை கிழியக் கத்தினாள். 

 

வயிற்றில் வளரும் குழந்தைக்காக, மாணிக்கம் பொறுமை காக்கக் கூற, காதில் வாங்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் சிறு அசைவு கூட இல்லை அவனிடம். சமாதானம் செய்ய முடியாமல் ஓய்ந்து போன முதியவர், 

 

“நீயாது பேசிப் புரிய வை, ராசா” என அவர் வெளியேறப் பார்த்தார்.

 

மாணிக்கம் செயலில் அளவு கடந்த கோபத்திற்குச் சென்றவள், குமரனின் சட்டையைப் பிடித்துத் தரதரவென்று வாசலுக்கு இழுத்து வந்தாள். அந்தத் திடமான தேகம், அவள் கை வளைவுக்கு ஏற்றவாறு நகர்ந்து வர, 

 

“ச்சீ… என் அன்பு வாழ்ந்த இந்த வீட்ல உன் கால் தடம் படுறதே அசிங்கம். ஜென்மத்துக்கும் இந்த வீட்டுப் பக்கம் வராத.” என வெளியே தள்ளினாள்.

 

தடுமாறித் தரையில் விழுந்தவனைத் தாங்கிப் பிடித்தார் மாணிக்கம். பேரன் நிலை கண்டு கதறி அழுதவர், “அடிபட்டுடுச்சா ராசா…” எனக் கை கால்களை ஆராய்ந்தார்.

 

அவருக்குப் பதில் சொல்லாதவன் மௌனமாக எழுந்து நிற்க, “இங்கப் பாரு தாயி, நீ பண்ற எல்லாத்தையும் பார்த்துட்டு அமைதியா இருக்க மாட்டேன். யாரைப் பிடிச்சு வெளிய தள்ளுற? வாய் கிழியக் கத்துறியே என் புருஷன்னு. அவன் மட்டும் இதைப் பார்த்திருந்தா, அவன் வாழ்க்கையை விட்டே மொத்தமாப் போயிருப்ப. இவன் என்ன தப்புப் பண்ணிட்டான்னு இவ்ளோ பேச்சுப் பேசுற.” என வளர்ப்புப் பேரனைத் திண்ணையில் அமர வைத்தார்.

 

“தப்புப் பண்ணது நீ…” என அவளைப் பார்த்துக் கைகாட்டியவர், “தப்புப் பண்ணது நான்…” என்றவர் புகைப்படத்தில் இருப்பவனையும் கைகாட்டி அவனையும் தவறு என்றார். 

 

“நம்ம எல்லாரும் பண்ண தப்புக்கு இவன் குற்றவாளியா நிக்கிறான். நண்பன் ஆசைப்பட்டான்னு ஊர எதிர்த்துக் கல்யாணம் பண்ணி வச்சான். அவன் போயிட்டான்னு பைத்தியக்காரனா சுத்திட்டு இருந்தான். அவன் பிள்ளை இருக்கற விஷயம் தெரிஞ்சதும், இந்த வீட்ல நாயா நின்னான். ஊருக்கு மத்தியில அந்த உசுரக் காப்பாத்தப் பழிய தன் மேல போட்டான். இந்தக் கேடு கெட்டவன் சொன்ன வார்த்தைக்காக, உன் கழுத்துல தாலி கட்டி அவன் வாழ்க்கையை அவனே அழிச்சிக்கிட்டான்.” என்றவருக்குப் பலமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.

 

“உன்ன விட இவன் பாவம் தாயி. உன்ன இவன் கூட வாழச் சொல்லல. இவன் உடம்ப விட்டு உயிர் போற வரைக்கும், உங்க ரெண்டு பேத்துக்கும் காவலா நிப்பான். இவனுக்குச் செஞ்சி தான் பழக்கம். வாங்கிப் பழக்கம் இல்லை. உன்கிட்ட இருந்து எதையும் வாங்க மாட்டான்.” என்றவர் பேச முடியாமல் நெஞ்சில் கை வைக்க, நிலை புரிந்து அவரை அமைதிப்படுத்த முயற்சித்தார் சந்தானம்.

 

அப்போதுதான் தலை உயர்த்திப் பார்த்தான் மாணிக்கத்தை. பெரிய மூச்சுகளை இழுத்து விட்டுக் கண்கள் சோர்ந்து போகும் அவர் நிலையைக் கண்டு பதறியவன், “தாத்தா!” என ஓடி வந்து நெஞ்சை நீவி விட்டான்.

 

நின்றிருந்த தேனிசை தேவிக்குக் கூட பயம் தொற்றிக் கொண்டது. தண்ணீர் எடுத்து வந்தவன் வேகமாக அவருக்குப் புகட்டி, “வேணாம் தாத்தா, கொஞ்ச நேரம் அமைதியா உட்காருங்க. அந்தப் புள்ள கோபம் நியாயமானது. அது இடத்துல இருந்து பார்த்தா தான் நமக்குப் புரியும். என்னைத் தான பேசுது, பேசிட்டுப் போகட்டும். நீங்க உடம்பக் கெடுத்துக்காதீங்க.” என்றான்.

 

“அந்தப் புள்ள பண்ணதுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் ராசா.” 

 

“விட்ட வார்த்தையால தான் இப்படி ஒரு சூழ்நிலை. இதுக்கு முழுக்க முழுக்க நான் மட்டும்தான் காரணம். நான் பண்ண தப்புக்கான தண்டனையா, நீங்க சொன்ன மாதிரி இந்த வீட்டுக்குக் காவலா இருப்பேன். என் அன்பு ஆத்மா என்னை மன்னிக்கிற வரைக்கும், இந்தப் பூமியில இவங்களுக்காக உழைப்பேன்‌.” 

 

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள் அமைதியாக உள்ளே சென்று விட, மாணிக்கத்தின் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு மீண்டது. தன் எதிரில் இருக்கும் அன்புக்கரசன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் எண்ணத்தில் அவனுடனான நினைவுகள். மாணிக்கத்திற்குத் தைரியம் சொன்ன சந்தானம் அங்கிருந்து விடைபெற, முதியவரைக் குடிசை வீட்டிற்குள் படுக்க வைத்தவன் அன்புவைத் தேடி ஓடினான்.

 

***

 

அனைத்துக் கலவரங்களுக்கும் அஸ்திவாரமான அன்புக்கரசனின் உயிர், அமைதியாகக் கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. நண்பன் குடியிருக்கும் இடத்திற்கு வந்ததும் கால்கள் தோய்ந்து போனது. மனம் தளர்ந்து நடை தளர்ந்து அவன் காலடியில் அமர்ந்தவன், 

 

“அன்பே…” என்றழைக்க அமைதியாக இருந்தான்.

 

“உன் குமரன் மேல கோபமா இருக்கியா. இந்த வார்த்தையைக் கேட்கக் கூட அருகதை இல்லை. இருந்தாலும் கேட்கிறன் அன்பே… என்னை மன்னிப்பியா? உன் மேல சத்தியமா எந்தத் தப்பான எண்ணமும் இல்லடா எனக்கு. இதை நான் யாருக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பன்னு தெரியல. என்னை யாரு தப்பா நினைச்சாலும் கவலை இல்லை. என் அன்பு, நீ என்னைத் தப்பா நினைப்பியோன்னு பயமா இருக்கு. ஒரே ஒரு வார்த்தை அப்படி இல்லடான்னு சொல்லுடா அன்பே…” என்றவன் அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்தான் அன்புக்கரசன்.

 

ஆத்மா அவன் கண்ணிற்குத் தெரியாததால், மனதில் இருப்பதை எல்லாம் புலம்பலாகக் கொட்டிக் கொண்டிருந்தான். உயிர் பிரிந்ததே தவிர, நண்பனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று ஆத்மாவை, அவனைச் சுற்றி அலைய வைத்துக் கொண்டிருப்பவன் அவன் அருகில் அமர்ந்தான். நண்பனின் கண்ணீர் மனதைச் சுட்டது. 

 

தன் சமாதியில் தலை கவிழ்ந்து இருக்கும் நண்பனின் தலையை, வருடி விட்டவன் கண்ணிலும் கண்ணீர். நண்பனின் ஆத்மா தன் அருகில் இருப்பதை அறியாது அழுது ஓய்ந்தவன் தன்னை மறந்து கண் அயர்ந்தான். 

 

மகன் துடிப்பை அருகில் இருந்து பார்க்கவில்லை என்றாலும், கதறித் துடித்துக் கொண்டிருந்தார் இந்திரா. பெற்ற அன்னைக்கு அழுவதைத் தவிர வேறு எந்த சுதந்திரமும் இல்லை அங்கு. மகன் பிள்ளையை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தார் முத்துமாரி. இதுவரை நண்பனுக்கு மட்டுமே நடந்த அவமானத்தைக் கண்டு கொதித்தவர், தனக்கு நடந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் முகம் சிவந்து அமர்ந்திருக்கிறார்.

 

என்னதான் நண்பனாக இருப்பினும், வேறு ஒருவனை மணந்த நண்பனின் மகளைத் தன் மருமகளாக்க விருப்பமில்லை அவருக்கு. உடனிருந்து செய்த செயலே, தனக்கு வினையானதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார். 

 

***

 

அனல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது பவானியின் வீட்டில். பெற்ற தாய் மட்டும் பிள்ளையை நினைத்துக் கண்ணீர் வடிக்க, மற்ற இருவருக்கும் கொதிப்பு அடங்கவில்லை. அதிலும் கருப்பனுக்கு, குமரவேலன் இந்த வீட்டின் மருமகன் ஆனது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இவர்கள் உரிமையாகச் சொல்லவில்லை என்றாலும், இனி ஊரார் அப்படித்தானே அழைப்பார்கள்.

 

அதுபோன்ற ஒரு வார்த்தையைக் கேட்கக் கூட அருவருப்பாக இருந்தது அவனுக்கு. ஆத்திரமடங்காது நடந்து கொண்டிருந்த மகனைப் பார்த்துக் கோபம் கொண்ட பொன்ராசு,

 

“எல்லாம் உன்னால தான்டா வந்துச்சு…” என்றிடத் தந்தையிடம் மல்லுக்கு நின்றான்.

 

“நான் என்ன சொன்னன், நீ என்ன பண்ண? உன்னோட அவசர புத்தியால எங்கெங்கயோ போயி எங்க வந்து நிக்குதுன்னு பாரு. இப்பப் பொன்ராசு மானங்கெட்டவனா ஆகிட்டான்.”

 

“இப்படி நடக்கும்னு எனக்கு என்ன தெரியும்?”

 

“ஏடாகூடமா எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தான், அப்பவே உன்னைத் தடுத்து நிறுத்துனேன்.”

 

“ஒருத்தன் என் வீட்ல வேலை செய்யறவங்களுக்கு முன்னாடி என்னை அடிச்சு அசிங்கப்படுத்துவான், அவனை நான் சும்மா விடனுமா? நாளைக்கு என்கிட்ட வேலை பார்க்குறவங்க என்னை மதிப்பாங்களா?”

 

“அதுக்காக அவனைக் கொலை பண்ணப் போவியா? அவன் பேச்சியப்பனோட மகன், தெரியுமா தெரியாதா?”

 

“அவர் உங்களுக்கு தான் ஃப்ரெண்டே தவிர எனக்கு இல்லை. என்னை அசிங்கப்படுத்தினவன் உயிரோடு இருக்குறதே எனக்குப் பிடிக்கல இதுல உங்க கேடுகெட்ட பொண்ணு கழுத்துல வேற தாலி கட்டி இருக்கான்.”

 

“அப்படி ஒரு நிலைக்குத் தள்ளுனதே உன்னோட வாய் தான்டா. அவன் சொன்ன வார்த்தைல ஆடிப் போயி பேச மறந்துட்டேன். அப்படியே கமுக்கமா வந்திருந்தா கூட இது நடந்திருக்காது. அவன ஜெயிச்சிட்டதா பேசப் போய் உன் மூக்கை உடைச்சு அனுப்பி இருக்கான்.” 

 

“அங்கதான் நான் தப்புப் பண்ணிட்டேன். அவ கழுத்துல தாலி கட்டப் போன அந்தக் கைய உடைச்சு நொண்டியா நடமாட விட்டு இருக்கணும்.”

 

“ஆஹான்… பேச்சியப்பன் உன்னைச் சும்மா விட்டு இருப்பான்னு நினைக்கிறியா? இப்ப வரைக்கும் விஷயம் தெரியாம உன்னைக் காப்பாத்திட்டு இருக்கான். அவனுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சுது, ஒத்தப் புள்ளையக் கொலை பண்ணப் பார்த்த உன்ன என்ன செய்யவும் துணிவான்.”

 

“என்னப்பா, பயம் காட்டுறீங்களா? அவரையும் சரி, அவரோட மகனையும் சரி. சமாளிக்கிற தெம்பு எனக்கு இருக்கு. நான் வச்ச குறி தப்பாகி, அந்தப் பொறம்போக்கு போய் சேர்ந்ததால வந்த ரோதனை இது.” என்றவர்கள் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பவானி திகைத்தார்.

 

நேற்று வரை சந்தேகமாக இருந்தது உறுதியானது. தன் மகன்தான் கொலை செய்ய அனுப்பி இருக்கிறான் என்பதை அறிந்து உள்ளம் கொதித்தவர், அதில் மகளின் வாழ்க்கை பாழாய் போனதில் நொந்து விட்டார். பெற்றவர்களின் பாவத்தைப் பிள்ளை சுமந்து விட்டது என எண்ணி வாயை மூடிக் கொண்டார்.

 

***

 

உடல்நிலை சரியில்லாமல் சோர்ந்து படுத்திருந்தவர், தன்னை நம்பி இருக்கும் இரு உயிர்களுக்காக எழுந்து சமைக்க ஆரம்பித்தார். சமையலுக்கு நடுவில் கல் வீட்டை எட்டிப் பார்க்க, அது முழு இருட்டில் இருந்தது. எல்லாம் முடிந்த பின் கணவன் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்தவள், அதே நிலையில் காட்சியளித்தாள் மாணிக்கத்திற்கு.

 

தேனிசை தேவியின் வேதனை புரியாமல் இல்லை இவருக்கு. அதேநேரம் குமரவேலனின் வலி மட்டும் குறைவா? ஒருவன் இழப்பினால் பாதிக்கப்பட்டது இருவருமே. ஒருவர் தப்பித்து ஒருவரை மட்டும் குற்றம் சாட்டுவதைப் பொறுக்க முடியாமல் பேசி விட்டார். பேசிவிட்டாரே தவிர, தனிமையில் அவளுக்காக அதிகம் அழுது தீர்த்தார். அவளின் கற்பைக் கேள்விக்குறியாக்கிய தன்னை மன்னிக்கத் தயாராக இல்லை இவர் மனம்.

 

வீட்டில் இருப்பதை வைத்துச் சமைத்து முடித்தவர், கல் வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் போட, சுவரில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி. அவள் தோளைத் தொட்டு உசுப்பியவர், 

 

“சாப்பிட வா தாயி…” என்றழைக்க, பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“ஏதோ ஒரு கோவத்துல பேசிட்டம்மா. மனசுல வச்சுக்காம வந்து ஒரு வாய் சாப்பிடு. மதியத்துல இருந்து எதுவும் சாப்பிடல.”

 

“பசிக்கல, கொஞ்சம் தனியா விடுங்க.”

 

“உனக்குப் பசிக்காம இருக்கலாம், உள்ள இருக்க அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குப் பசிக்காம இருக்குமா தாயி. இவ்ளோ போராட்டம், அந்தப் பிறக்காத உசுருக்காக தான… கோபத்தை விட்டுச் சாப்பிடும்மா.” 

 

அவள் தன் முடிவில் உறுதியாக இருக்க, “எனக்குப் பசிக்குது தாயி” என உடலோடு ஒட்டி இருக்கும் வயிற்றைத் தடவிக் காண்பித்தார்.

 

அப்போதுதான் அவர் முகத்தைப் பார்த்தாள் தேனிசை தேவி. சோர்வில் முகம் தெளிவில்லாமல் இருந்தது. என்றும் அவர் முகம் இப்படி இருந்ததில்லை. அந்த முதியவரின் முகத்தைப் பார்த்த பின் கோபம் மறைந்து விட, அவரோடு சாப்பிட அமர்ந்தாள். 

 

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே” 

 

“இன்னைக்கு நடந்ததைப் பத்திப் பேசுற மாதிரி இருந்தா பேசாதீங்க.”

 

“பேசணும்னு மனசு சொல்லுது.” என்றவருக்கு அவள் மௌனத்தைப் பதிலாகக் கொடுக்க, 

 

“குமரவேலனைப் பத்தி உனக்குத் தெரிஞ்சதை விட எனக்கு நல்லாத் தெரியும். எந்தச் சூழ்நிலை வந்தாலும், அவனை மீறி நடக்காத. அவன் தான் இனி உங்க ரெண்டு பேருக்கும் காவல்.” என்றார்.

 

“புருஷன் இல்லன்னா, பிள்ளைய வச்சுக்கிட்டு ஒரு பொண்ணால வாழவே முடியாதா?”

 

“ஒரு ஆம்பளையால கூட வாழ முடியாம போகலாம். ஒரு பொம்பள நினைச்சா எப்படியும் தன் பிள்ளையை வளர்த்துக் காட்டிடுவா…”

 

“அப்புறம் எதுக்காக இப்படிப் பண்ணிங்க?”

 

“என் பேரன் ஒதுங்கின மாதிரி, அவன் புள்ள இந்த ஊர்ல இருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது.”

 

“புரியல.”

 

“காலம் உனக்கு உணர்த்தும்.” என்றதோடு தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

 

***

 

மாமனைப் பார்க்க வந்தவள், இனித் தனக்கு அவன் சொந்தமில்லை என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், மீண்டும் வீட்டிற்கே ஓடி வந்து விட்டாள். தன் அறையில் நுழைந்தவள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு காதல் தோல்வியைக் கண்ணீரில் பறை சாற்றினாள்.

 

சில மணிப் பொழுதுகளுக்கு முன்னர் வரை குமரவேலன், இவளுக்கானவன். இவளுக்கு மட்டுமே சொந்தமானவன், வேறு ஒருத்திக்குச் சொந்தமானதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வீட்டில் யாரும் இல்லாதது பெரும் வசதியாகிப் போனது தெய்வானைக்கு. சத்தமிட்டு அழுவதில் முழு உரிமை கிடைத்துவிட, அந்த வீடு உடைந்து விடும் அளவிற்குக் கூக்குரல் இட்டாள்.

 

கட்டி வைத்த கனவுக் கோட்டை உடைந்தால் கூட மனம் தேறி இருக்கும். கோட்டையே கட்டவில்லை என்று கடவுள் இவளை நம்ப வைத்தது போன்று உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியாத விதியைக் குத்திக் கிழிக்கும் அளவிற்குக் கோபம் உண்டானது. இப்படியான சூழ்நிலைக்குத் தன்னைத் தள்ளிய கடவுளை முற்றிலும் வெறுத்தாள்.

 

நேராக பூஜை அறைக்குச் சென்றவள், அங்கு இருந்த அனைத்து தெய்வப் படங்களையும் தூக்கி அடித்துச் சிதறவிட்டாள். தன்னிலை ஓயும் வரை அழுது தீர்த்தவள், தன் கண் முன்னால் நடந்ததை மாற்றி விட முடியுமா எனப் பரிதவித்துச் சோர்ந்து போனாள்.

 

பெற்ற மகளின் நிலை தெரியாது வீட்டிற்கு வந்த அவள் அன்னை செண்பகம், உடைந்த சாமி படங்களைக் கண்டு கத்த, அறைக்குள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவருக்கு இன்னும் குமரவேலனின் செய்தி தெரியாது. மகளின் அறைக் கதவைத் தட்டியவருக்குக் கை வலி மட்டுமே மிச்சம்.

 

கணவன் வந்த பின்பு தான், மகளின் ஆக்ரோஷ செயலுக்குக் காரணம் புரிந்தது அவருக்கு. இப்படி ஆனதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அண்ணனைத் தொடர்பு கொண்டவர் தொடர்பை முற்றிலும் முறித்து விட்டார். தெய்வானையின் தந்தைக்குச் சாதகமான செயல்தான் நடந்திருப்பதால் அமைதியாக இருந்து கொண்டார். 

 

மகளை நினைத்துக் கண்ணீர் வடித்த தெய்வானையின் தாய், இரவு சாப்பிடவாவது வெளியில் வர அழைக்க, எதற்கும் செவி மடுக்காமல் அமர்ந்திருந்தாள். 

 

***

 

நண்பனுக்காக எழுப்பிய மண் கோட்டை மீது, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் சற்றுக் கலைந்தது. விழி திறந்து பார்த்தவனுக்கு எங்கும் இருட்டு. பிரிந்த இமைகள் நடந்ததைக் காட்சிப்படுத்த, மாமன் மகளின் நினைவு வெகுவாகத் தாக்கியது.

 

இன்று அவனுக்கு ஒரு வலி மட்டுமல்ல, இரு வலி! ஒன்றுக்கே மொத்தமாக நொந்து போக இரண்டிற்குச் செயலற்றுப் போனான். அதுவும் அவள் கண் முன்னால் நடந்தேறிய திருமணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படி எல்லாம் அவளோடு வாழ நினைத்தோம்? என்ற வாழ்க்கை கண் முன்னால் ஓடியது. 

 

அத்தனையும் இனிக் கனவாக மட்டுமே இருக்கும் என்ற நிலையைத் தாங்க முடியாது, அங்கிருந்து எழுந்தவன் நடக்க ஆரம்பித்தான். கால்கள் அத்தை மகளைப் பார்க்க நடந்தது. அந்த இருட்டில் அவன் கால் தடம் ஒவ்வொன்றும், அழியாத அச்சாகப் பதிவாக, இனி என்றைக்கும் இந்தப் பதிவுகள் அத்தை மகளுக்காக இருக்கப் போவதில்லை.

 

தன் விதியை நொந்து கொண்டு அமர்ந்திருந்தவளுக்குத் தெரியாது, நள்ளிரவு ஒரு மணி என்று. இவ்வளவு நேரமும் தூங்காமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நிலை புரியாது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போதுதான் நினைவு திரும்பினாள் தெய்வானை. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அதே நிலையில் இருக்கப் பத்து நிமிடத்தில் மின்சாரம் வந்தது. வந்த மின்சாரம் இருமுறை ஒளிர்ந்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.

 

அப்படியே வருவதும் போவதுமாக இருக்க, சுவிட்சை நிறுத்தி வைக்க எழுந்தவள், ஜன்னல் ஓரத்தில் நின்றிருந்த உருவத்தைக் கண்டு அப்படியே நின்றாள். கடைசியாக அத்தை மகளின் முகம் பார்க்கவே மின்சாரம் பாய்ந்தது. ஒரு நொடி அவள் முகத்தை மிக அருகில் இருந்து பார்த்தவன் விழிகள், இருட்டானது துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால்.

 

கண் முன்னால் நடந்து கொண்டிருப்பதை நம்ப முடியாது, அறையை விட்டு வெளி வந்தவள் மெல்ல நகர்ந்து பின்பக்கம் செல்ல, அவளைப் பார்த்த மகிழ்வில் கிளம்பினான் குமரவேலன். மாமனைக் கண்டதும் உணர்வுகள் பெருக்கெடுத்து, 

 

“மாமா…” என்றழைக்க, அதன் கனத்தைத் தாங்க முடியாமல், அவளைப் பார்க்கத் திரும்பியவன் மனம் நொந்து மண்டியிட்டு, கையெடுத்துக் கும்பிட்டான் தெய்வானையை.

 

அழைத்த வாய் அப்படியே பசை போல் ஒட்டிக்கொண்டது. அவள் கண்ணில் இருந்த நீர் ஒவ்வொரு சொட்டாக வெளியேறி ஆடையைத் தொட்டு நிலத்தில் விழ, மண்டியிட்டவன் கண்ணீர் நேரடியாக மண்ணில் விழுந்தது. தலை குனிந்து வெகு நாள்களுக்குப் பிறகு குலுங்கி அழுதான். தன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவளுக்குச் செய்த துரோகத்தை முழு மனதோடு ஒத்துக் கொண்டவன், அவள் முகம் பார்க்காமல் எழுந்து சென்று விட்டான். 

 

இத்தோடு அனைத்தும் முடிந்து விட்டதாக எண்ணிக் கொண்டு நடந்தவனுக்கு, மறுநாள் காத்துக் கொண்டிருந்தது அடுத்த துயரம்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்