Loading

18

வழக்கம் போல் கேன்டீனில் தன் தோழி உமையாளிடம் வழவழத்துக் கொண்டிருந்தாள் நறுமுகை.

ரகுநந்தனும் சிரஞ்சீவியும் அடிக்கடி நறுமுகையிடம் பேசுவதைக் கண்ட அவள் கல்லூரி மாணவிகள் இப்பொழுது அவளைத் தான் வண்டாய் மொய்க்கத் தொடங்கினர்.

காரணம், இருவருமே பெண்களிடம் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை பேசாதவர்கள். சிரஞ்சீவியாவது வகுப்பில் சிறிது புன்னகை முகமாய் இருப்பான்.

ஆனால் ரகுநந்தனோ, கஞ்சி போட்ட கதர் சட்டை தான். எப்பொழுதும் விறைப்பாய் சுற்றுவான். துறை தலைவர் என்பதால் மாணவர்களுக்கு அவனைக் கண்டு மதிப்பும், கூடவே பயமும் ஒட்டிக் கொண்டிருக்கும்.

இப்பொழுது இருவரும் நறுமுகையிடம் பேசுவதைக் கண்டு, அவளிடம் வந்து “நந்தா சார் உனக்கு ரிலேஷனா?”

“சிரஞ்சீவி சாரும் உனக்கு ரிலேஷனா? எங்ககிட்டலாம் விறைப்பா பேசறவங்க, உன்கூட கேன்டீன்ல உட்கார்ந்து சாப்பிடறாங்களாமே! ரொம்ப நெருங்கிய ரிலேஷனா?” என்றும்,

இன்னும் சிலரோ அவளுடன் நெருங்கி நட்பு பாராட்டவும் நினைத்தனர்.

“ரெண்டு பேரும் எங்க பேமிலி ப்ரண்ட்” என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொள்வாள் நறுமுகை.

ஆனால் அவர்களோ, அவளிடம் ரகுநந்தனைப் பற்றியும் சிரஞ்சீவியை பற்றியும் கேள்விகளால் துளைத்தெடுப்பர்.

“இவளுங்க எல்லாம் எதுக்கு காலேஜ் வர்றாளுங்க. வந்தோனே சார்ர சைட் அடிக்கிற வேலைய மட்டும் கன கச்சிதமா செய்றாளுங்க” என பொறுமிக் கொண்டிருந்தாள் நறுமுகை.

இன்றும் வழக்கம் போல், அவள் கேன்டீனில் அமர்ந்திருப்பதைக் கண்ட மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி ஒருத்தி அவள் அருகில் வந்து அமர,

நறுமுகையோ உமையாளிடம் கண்ஜாடை காட்டினாள். ‘இந்த அக்காவ என்ன பாடுபடுத்த போறாளோ!’ என அவள் நினைத்துக் கொண்டு மர்ம புன்னகையைச் சிந்தினாள்.

“ஹாய் முகி” என அவள் அருகில் அமர்ந்தவள் கூற,

“ஹாய் ரேவதி அக்கா. என்ன இந்த பக்கம்?” என்றாள் நறுமுகை.

“ஒன்னுமில்ல, சும்மா தான்…” என்றவள் கையில் பேருக்காக கொறிக்க வாங்கிய திண்பண்டத்தை, “உங்களுக்கு” என நீட்ட,

“இல்ல க்கா. நீங்களே சாப்பிடுங்க, நான் இப்போ தான் நிறைய சாப்பிட்டேன்” என்றவள், அமைதியாக அமர்ந்திருக்க ரேவதி மெதுவாக ஆரம்பித்தாள்.

“முகி, ஜீவி சார்ர உனக்கு நல்லா தெரியும்ல!” என அடித்தளமிட,

“ஜீவி சார்ரா! யார் க்கா அது?” என வந்த சிரிப்பை இதழுக்குள் மறைத்துக் கொண்டு வினவ,

“நம்ம சிரஞ்சீவி சார்…” என அவள் இழுத்தாள். “ஓ… சிரஞ்சீவி சார்ரா!… சொல்லுங்க க்கா” என்றாள் நறுமுகை.

உமையாளோ நடப்பனவற்றை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இல்ல, அதுவந்து…” என அவள் தயங்க, “சொல்லுங்க க்கா… ஏன் இவ்ளோ நெர்வெஸ்ஸா ஃபீல் பண்றீங்க?” என்றாள் நறுமுகை.

“அதுவந்து முகி, சார்ரோட பேமிலி பத்தி ஏதும் தெரியுமா?” என தயங்கியவாறே வினவ,

‘ஆமா, இங்க எனக்கு மாமனா வர போறவ பத்தியே எனக்கு பாதி தெரியல. இதுல அவரோட ப்ரண்ட் பத்தி வேற நான் தெரிஞ்சுக்கணுமா!’ என மனதினுள் நொந்தவள்,

“அவ்ளோலாம் தெரியாது க்கா. பேமிலி எல்லாம் சென்னைல இருக்காங்க, சார் இங்க நந்தா சார் கூட எங்க ப்ளாட்ல தான் தங்கி இருக்காரு” என அடக்கப்பட்ட கோபத்துடன் கூற,

“ஓ… இல்ல, சார்கிட்ட ஒன்னு சொல்லணும்” என ரேவதி தயங்க,

‘சொல்லடியம்மா… போன வாரம் இப்படி தான் வந்து நான் நந்தா சார்ர காதலிக்கிறேன்னு ஒருத்தி சொன்னா. அத என் அக்காகிட்ட போய் ஒப்பிச்சதுக்கு அவ நல்லா முறைச்சுட்டு போய்ட்டா. அதுவே இன்னும் தீரல, இதுல இவ வேற!’ என நினைத்தவள்,

“என்ன விசயமா க்கா…” என்றாள் நறுமுகை.

“யார்கிட்டயும் சொல்ல மாட்டியே! ப்ராமிஸ்” என சத்தியம் வாங்கியவள், ஒரு டைரியை அவளிடம் கொடுத்து, “இதுல நான் என் மனசுல உள்ளத எழுதிருக்கேன். ப்ளீஸ், இத மட்டும் அவர்க்கிட்ட கொடுத்துறியா” என ஒருவாறாக விசயத்திற்கு வர,

‘வாடி என் சக்கரவள்ளி கிழங்கே! இதான் மேட்டரா! நான் என்ன இங்க மாமா வேலை பார்க்கப்படும்னு போர்ட்டா வச்சுருக்கிறேன். ஆளாளுக்கு வந்து இத நந்தா சார்கிட்ட கொடுத்துரு, இத ஜீவி சார்கிட்ட குடுத்துருனு வர்றீங்க!’ என அவள் மனதினுள் பொருமியவாறே,

“கொடுங்க” என அதனை வாங்கி வைத்துக் கொண்டாள் நறுமுகை.

அவளோ, வந்த வேலை முடிந்தது என நிம்மதியாக கிளம்பி செல்ல, “ஏன் டி, ஏதாவது சாக்லேட் வாங்கி கொடுத்தா பரவாயில்ல. நம்ம ஶ்ரீதிவ்யா மாதிரி அத சாப்பிடவாவது செய்வோம். இப்படி மொக்கையா ஏதாவது கிறுக்கி கொண்டு வந்து தர்றாங்களே, இவங்களாம் எந்த காலத்துல இருக்காங்க” என உமையாள் ஒருபக்கம் வருத்தப்பட,

“அவஅவ என்னை மாமா வேலை பார்க்க வைக்கிறானு கடுப்புல இருக்கேன். நீ வேற ஏன்டி வெறுப்பேத்தற” என நொந்தவள்,

“நீ சொல்றதும் சரி தான். இவளுங்க எல்லாம் எந்த காலத்துல இருக்காளுங்க. வேஸ்ட் பெல்லோஸ், சாக்லேட் கொடுத்துக் கூட ப்ரப்போஸ் பண்ணத் தெரியல. ஏதோ அதாவது நமக்கு கிடைச்சுதேனு சந்தோசப்பட்டுருக்கலாம்” என்ற நறுமுகை,

“இன்னிக்கு ஈவ்னிங் இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்றவள்,

அதன்பின் வகுப்புகள் இருக்க தங்கள் வகுப்பிற்கு சென்றனர்.

சிரஞ்சீவியின் வகுப்புக்கள் தான் அடுத்திருந்ததால் ஏற்கெனவே இருந்த கோபத்தில், அவன் வேறு வந்து புன்னகை முகத்துடன் பாடம் எடுக்க இன்னும் கோபமானாள் நறுமுகை.

‘இவருலாம் ஒரு ஆளுனு எப்படி தான் இந்த லூசுங்க பின்னாடி சுத்துங்களோ!’ என நினைத்தவள், அவனை அளவெடுத்தாள்.

பார்மல் உடையில், அலைஅலையான கேசம், கண்டிப்பாக அந்த கேசத்தில் தன் விரல் புதைத்து விளையாட எந்த பெண்ணிற்கும் ஆசை வரும் என அதனை மனதில் நினைத்துக் கொண்டே அவனைப் பார்க்க, மாநிறம் தான் என்றாலும் கோபியரை மயக்கும் கண்ணனாக தான் இருந்தான்.

அவள் பார்வை அவனை எடை போடுவதை அவனும் கண்டு கொண்டான் தான்.

வகுப்பில் முன்னால் நின்று பாடம் எடுப்பவனுக்கு அந்த அறை முழுவதும் நடப்பவைகள் அவன் கண்ணில் சிக்காமல் இருக்காது.

அதுவும் முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவனை பச்சையாக சைட் அடித்தால் (சாரி சாரி, அவள் பார்க்க மட்டுமே செய்தாள்) அவன் கண்ணில் சிக்காமலா இருப்பாள்.

பாடம் எடுத்தவாறே அவர்களின் பெஞ்சின் முன் நின்றவன், “இப்ப நடத்துனதுல ஏதாவது டவுட்ஸ் இருந்தா கேட்கலாம்” என்றவன், நறுமுகையிடம் “உனக்கு ஏதாவது புரியலையா நறுமுகை?” என்றான்.

அவனின் திடீர் கேள்வியில் அவள் தடுமாறி, பின் நிதானித்து ‘இல்லை’ என தலையசைக்க,

“அடுத்த இன்டர்வல்ல என்னை வந்து டிப்பார்ட்மெண்ட்ல பாரு” என்றுவிட்டு அடுத்த பாடத்தை எடுக்கத் துவங்கினான் சிரஞ்சீவி.

‘இப்போ இவரு எதுக்கு நம்மள டிப்பார்ட்மெண்ட் வர சொல்றாரு! ஒருவேளை நம்ம அவர பார்த்தது தெரிஞ்சுருக்குமோ. இல்லயே, அப்படி பச்சையாவா சைட் அடிச்சேன், இல்ல இல்ல’ என தனக்கு தானே கூறிக் கொண்டாள் நறுமுகை.

வகுப்பு முடிந்தப்பின் உமையாளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு சென்றாள் நறுமுகை.

தனக்கான இருக்கையில் அமர்ந்து, சிரஞ்சீவியோ ரெக்கார்ட் நோட் திருத்திக் கொண்டிருக்க, அவன்முன் போய் நின்றாள் நறுமுகை.

அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு, “நீ கிளாஸ்க்கு போ உமையாள்” என்றவன் அதன்பின் பழைய படியே நோட்டை திருத்த ஆரம்பித்திருக்க, அவனின் உத்தரவுக்கு இணங்கி உமையாள் கிளம்ப நறுமுகையோ அவளை பாவமாக பார்த்து வைத்தாள்.

அவள் சென்ற பின்னும் எதுவும் பேசாமல் அவன் அமைதியாக அவன் வேலையை தொடர்ந்து கொண்டிருக்க ஐந்து நிமிடம் நின்று பார்த்தவள், பொறுமை இழந்து “சார்ர்ர்…” என இழுத்தாள்.

“சொல்லுங்க நறுமுகை” என அவன் கூறியவாறே இன்னும் நோட்டிலே கண்களைப் பதித்திருக்க,

“நீங்க தான் இங்க வந்து உங்கள பார்க்க சொன்னீங்கல்ல சார். அதான் வந்தேன், ஏன் சார் வர சொன்னீங்க?” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“நீங்க கிளாஸ்ல என்னைப் பார்க்க ரொம்ப கஷ்டப்பட்ட மாதிரி இருந்துச்சா, அதான் இங்க வந்து பார்க்க சொன்னேன்” என்றவன் மீண்டும் தன் பணியைத் தொடர,

“நான் ஒன்னும் உங்கள பார்க்கல” என்றாள் நறுமுகை லேசான முறைப்போடு.

“ஓ… உங்க கண்ணு தான் பார்த்துச்சோ! சரி, எவ்ளோ மார்க் போட்ட எனக்கு?” என்ற கேள்வியில் அவள் முகம் கோபப்பழமாய் சிவக்க,

எதிரே இருந்தவனோ முகத்தில் கடுமையை ஏற்றி, “இங்க பாரு முகி, உன்கிட்ட ஜாலியா பேசறதுக்காக ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது. நான் இங்க ஸ்டாப், நீ ஸ்டூடண்ட். அவ்ளோ தான், ஸ்டாப்ப எப்படி பார்க்கணுமோ அப்படி தான் பார்க்கணும், மனச அலைப்பாய விடக் கூடாது” என்றவன்,

“இப்போ கிளம்பலாம்” என்று மீண்டும் தன் திருத்தும் பணியைத் தொடர தன் பற்களை கோபத்தில் நறநறவென கடித்தாள் நறுமுகை.

‘ஆமா, இவரு பெரிய மன்மதரு. இவர நான் சைட் அடிச்சனாக்கும், அட்வைஸ் பண்ண வந்துட்டாரு. இவர் பின்னாடி லவ்ங்கிற பேருல சுத்துங்க பாரு, அதுங்கனால வந்தது. ச்சே’ தன்னை தானே திட்டிக் கொண்டு அந்த இடத்தை காலி செய்தாள்.

சிரஞ்சீவியின் முகம் இன்னும் கடுகடுப்பை ஏற்றி இருந்தது. நறுமுகையின் பார்வை அவனை ஏதோ செய்தது. அதனால் தான் அவளை அழைத்து, இப்படி கூறினான்.

தான் விளையாட்டாக அவளிடம் பேசுவதை அவள் தவறாக எண்ணக் கூடாது என நினைத்து அவன் கூற, ‘பாவம் அவ, பச்சை மிளகா என்ன பண்ணானு இப்போ நீ இப்படி கோபப்பட்ட. உன்னை மத்த பிள்ளைங்க பார்த்த மாதிரியா அவ பார்த்தா, ஓவரு டா இதெல்லாம்’ என அவனின் மனசாட்சி கூற,

“அவ சின்னப்பொண்ணு. அவ எப்படி பார்த்திருந்தாலும் பரவாயில்ல, இப்போ இப்டி திட்டுனதுக்காகவாவது என்கிட்ட அதிகம் பேச மாட்டா. பார்த்துக்கலாம்” என்றான் சிரஞ்சீவி.

இவர்கள் இருவரும் இப்படி இருக்க, பாவம் ரகுநந்தனின் நிலை தான் மோசமாக இருந்தது.

மிதிலாவின் கோபம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே சென்றது.

அவள் மனதில் இவன் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்திருக்க அதனை ராமனாக மாற்ற படாதபாடு பட்டான்.

கல்லூரியில் அவளிடம் பேச சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அவள் விலகியே செல்ல, பிளாட்டிற்கு வந்தப்பின்னும் அவளுடன் பேச முயற்சிக்க அதுவும் தோல்வியையே தழுவியது.

அன்று மாலை கல்லூரி முடிந்து தங்கள் பிளாட்டிற்கு வந்தவன், “மாமா…” என்ற அழைப்பில் திரும்பி பார்த்தான்.

ஊர்மிளாவின் கரங்களை பிடித்து தொங்கி கொண்டே வந்த தர்ஷினி தான் தன் மாமனை அழைத்திருந்தாள்.

தன் தங்கையின் மேல் உள்ள கோபத்தை எவ்வாறு சிறு பிள்ளையிடம் காண்பிப்பது என எண்ணியவன், “தர்ஷூ குட்டி…” என இருகரங்களையும் விரிக்க அவளோ ஓடிவந்து தன் மாமனின் கைகளில் அடைக்கலமானாள்.

“எப்போ மாமா நீ இங்க வந்த? ஏன் என்னை பார்க்கவே வரல” என அவள் அழுகுரலில் கேட்க,

“மாமாவுக்கு கொஞ்சம் வேல டா தங்கம். அதான் வர முடியல” என அவளை சமாதானப்படுத்த, ஊர்மிளாவோ இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன’ என்ற பார்வையில் அவன் பார்த்து வைக்க, “இல்ல, தர்ஷூ பொறந்தப்ப தான் நீங்க வீட்ட விட்டு வந்துட்டீங்க. ஆனா அவ உங்கள தெரிஞ்ச மாதிரி பேசறா, அதான்” என அவள் தயங்க,

“துகி பாப்பாகூட இருக்கும் போதெல்லாம் விடீயோ கால் பண்ணி அவக்கிட்ட பேச வைப்பான்” என்றவன்,

“அவ கொஞ்சம் நேரம் என்கூட இருக்கட்டும்” என்றவன் தங்கள் பிளாட்டிற்குள் நுழைந்தான் தர்ஷினியுடன்.

என்ன தான் தன் அண்ணனிடம் நித்திலவள்ளி பேசவில்லை என்றாலும் தன் மகளுக்கு அவளின் மாமனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ரகுநந்தனின் புகைப்படத்தைக் காண்பித்து, பழக்கப்படுத்தி இருந்தாள்.

அதே நேரம், துகிலனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தர்ஷினி உடன் தன் அண்ணனை பேச வைத்திருந்தான்.

நித்திலவள்ளி இந்த பிளாட்டிற்கு வந்து சில வாரங்கள் தான் ஆன நிலையில், சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த ஊர்மிளாவும் விடுமுறையில் தன் அண்ணிக்கு உதவியாக இருக்க இங்கே வந்திருந்தாள்.

நித்திலவள்ளியின் கணவனின் தங்கை தான் ஊர்மிளா.

தன் தங்கை மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ரகுநந்தன், அழைப்பு மணி கேட்டு கதவை திறந்தான்.

அங்கு மிதிலா நின்றிருக்க அவளை எதிர்பாராத அவன், “உள்ள வா ஜானு…” என அழைத்தான்.

அவளோ, அங்கேயே நின்றவள் “இல்ல பரவாயில்ல, அப்பா உங்ககிட்ட கொடுத்த புக்க கேட்டாரு. அதான் வாங்க வந்தேன், கொடுத்தா கிளம்பிருவேன்” என அவள் கிளம்புவதிலே குறியாய் இருக்க,

அதற்குள் “மாமா” என்ற அழைப்புடன் வந்த தர்ஷினி மிதிலாவை கண்டு, “மிது கா…” என்றாள் மழலை மொழியில்.

அவளை அங்கு எதிர்ப்பாராத மிதிலா, “ஹே, தர்ஷூ குட்டி” என அவளைத் தூக்க,

“உனக்கு தர்ஷூவ முன்னமே தெரியுமா?” என்றான் ரகுநந்தன் ஆச்சரியத்துடன்.

“ம்… இவ அத்தை கூட பூங்காவுக்கு வருவா, அது மூலமா பழக்கம்” என்றவள்,

“புக்…” என ஞாபகப்படுத்த, “உள்ள வா ஜானு… எடுத்து தரேன்” என்க, மறுக்க தோன்றாமல் உள்ளே வந்தாள் மிதிலா தர்ஷினியை தூக்கியவாறு.

“உட்காரு ஜானு. குடிக்க காஃபி போடட்டுமா” என அவளை ஆர்வ கோளாறில் வரவேற்பு அளிக்க,

“இல்ல வேண்டாம்…” என்றவள், “அப்பா வெய்ட் பண்ணுவாங்க. புக் கொடுத்தா நல்லா இருக்கும், படிச்சுட்டீங்களா!” என்றாள் மிதிலா.

அவளை தினமும் பார்க்க ஏதாவது ஒரு சாக்கிட்டு அவளது இல்லத்திற்கு செல்லத் தொடங்கி இருந்தான் ரகுநந்தன்.

அவள் தந்தையிடம் உள்ள புத்தகங்களை படிப்பதற்காக வாங்க ஒரு முறை சென்றால் அதனை திரும்ப கொடுப்பதற்காக ஒருமுறை செல்வான்.

அவனின் நோக்கத்தையும் அவளும் அறிவாள். கண்டும் காணாதது போல் இருந்து விடுவாள் மிதிலா.

இன்று அவளின் தந்தையே அந்த புத்தகம் அவசரமாக வேண்டும் என்பதால் வாங்கி வர இவளை அனுப்ப முதலில் தயங்கியவள், பின் தந்தையிடம் என்ன சொல்லி மறுப்பது எனத் தெரியாமல் ரகுநந்தனின் பிளாட்டிற்கு வந்திருந்தாள் மிதிலா.

“ப்ளீஸ், எனக்காக ஒரு கப் காஃபி” என அவன் இறைஞ்ச, அவளாலும் மறுக்க முடியாமல் “ம்…” என தலையாட்டியவள் தர்ஷினியை கொஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் மடியில் இருந்த தர்ஷினி இறங்கி கிட்சனில் இருந்த தன் மாமனிடம் ஓட, அதன்பின் அவளால் அங்கேயே உட்கார முடியாமல் எழுந்து அந்த இல்லத்தை பார்க்க தொடங்கினாள்.

ஹால், கிட்சன், இரு படுக்கையறைகள் கொண்ட பிளாட்.

கிட்சனுக்குள் அவள் நுழைய, தர்ஷினி அவனிடம் வழவழத்துக் கொண்டிருந்தாள்.

அவளை தன் கையில் தூக்கி வைத்த வண்ணம் அடுப்பில் காஃபி போட்டுக் கொண்டிருந்தான்.

“தர்ஷூ குட்டி” என அவள் அழைக்க, மாமனும் மருமகளும் ஒருசேர அவளைப் பார்த்தனர்.

“மாமாவ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். வா நம்ம வெளிய இருப்போம்” என அவளை அழைக்க, தன் மாமனின் முகத்தைப் பார்த்துவிட்டு அவள் அவனிடமிருந்து இறங்கி கொண்டாள்.

அவளை ஹாலில் அமர வைத்து அங்கிருந்த டீவியை ஆன் செய்தவள், சின்சான் நிகழ்ச்சியை ஒளிர விட தர்ஷினி அதில் மூழ்கிப் போனாள்.

மிதிலாவின் கண்கள் அந்த இல்லத்தை அளவெடுத்துக் கொண்டிருந்தது.

அது ஆண்கள் இருவரும் பயன்படுத்தும் வீடு என யாராலும் கூற முடியாத அளவு சுத்தமாக வைத்திருந்தனர்.

அவள் கால்கள் ரகுநந்தனின் அறை வாசலில் நின்றது. அவள் ஏற்கெனவே அங்கு வந்திருந்தாலும் அன்று இரவில் இருந்த மனநிலையில் இதனை எல்லாம் அவள் சரிவர பார்த்திருக்கவில்லை.

அவள் கால்கள் தன்னால் அந்த அறையில் முன்னேற அங்கு இருந்த சுவற்றில் பெரிய சைஸில் லேமினேட் செய்யப்பட்ட புகைப்படத்தை கண்டு அதிர்ந்தது.

அதன் அருகில் சென்றவளின் கரங்கள் அந்த புகைப்படத்தை வருட ஆரம்பித்தது.

காஃபி கலக்கியவன் கொண்டு வந்து கொடுக்க ஹாலிற்கு வர அங்கு தர்ஷினி மட்டும் அமர்ந்து டீவி பார்ப்பதைக் கண்டவன், ‘எங்க போனா ஜானு’ என நினைத்தவன், அங்கும் இங்கும் தேடியவனின் கண்ணில் அவன் அறையில் இருந்த மிதிலா பட்டாள்.

காஃபியை அங்கிருந்த டைனிங் டேபிளில் வைத்தவன், அவனின் அறைக்குள் அவனும் சென்றான்.

அவள் கரங்கள் அவர்கள் இருவரும் சிறுவயதில் எடுத்த ராமர் – சீதா வேடமணிந்த புகைப்படத்தை வருடி கொடுத்துக் கொண்டிருந்தது.

அதனை தன் அறையில் இவ்வளவு பெரிதாக மாட்டி இருக்கிறான் என்பதை அவளால் இன்னும் நினைக்க முடியவில்லை.

அதனை காதலுடன் வருடியவளைக் கண்டு காதலோடு அவளை நெருங்கினான் ரகுநந்தன்.

அவள் முகத்தில் இருந்த அந்த காதல் அவனை நிலைகுலைக்க வைத்தது.

அவன் கண்களில் அப்பொழுது ஜானு மட்டுமே தெரிய அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

அவள் இடையில் அவன் கரங்கள் தழுவதைக் கண்டவளால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

அவள் கரங்கள் அந்த புகைப்படத்தில் இருந்த ராமனை வருடியது. அவள் இதழ்கள் ‘ராம்…’ என முணுமுணுத்தது.

அவனோ, அவளுள் ஒன்றி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருக்க, ‘டங்…’ என ஏதோ கீழே பொருள் விழுந்த சத்தத்தில் இருவரும் அவசரமாக விலகி வெளியே பார்த்தனர்.

அவர்கள் இருவரையும் எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்