198 views

அத்தியாயம் 18

” என்னென்னவோ சொல்றியே டா? எல்லாம் உண்மையானு நம்பவே முடியல! “

இளந்தளிர் தான் அவனுக்கு வீட்டில் பார்த்தப் பெண் என்ற செய்தியை, அவனிடத்தில் சொல்லியிருக்க ஹரீஷூக்குமே எதிர்பாராத அதிர்ச்சி நிலை தான்! 

” ம்ம்..! ஃபோட்டோ பார்க்கிற வரைக்கும்

நானுமே நம்பல ஹரீஷா! பேர் கேட்டதுமே ஃபோட்டோவைக் கேட்டேன். வாங்கிப் பார்த்ததும், திணறிப் போய்ட்டேன். என்னடா இது ! நிஜம் தானா ன்னு! “

கோவர்த்தனனின் முகத்தில் தெரிந்த பரவசத்தைக் கண்டு கொண்ட ஹரீஷ், 

” அவங்களுக்கு உன்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டா என்னப் பண்ணுவ? “

” டேய் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணப் போறதில்லையே! பெத்தவங்களே பார்த்து வச்சிருக்காங்க.அதே மாதிரி தளிரோட விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது. ” என்றான் கோவர்த்தனன். 

 ” ஆமா அவங்க கிட்ட உன் ஃபோட்டோவைத் தரகர் எப்படி கரெக்டா குடுத்திருப்பாரு? ” 

” ஒருவேளை அவங்க வீட்ல என்னோட ப்ரொஃபைல் மாதிரி எக்ஸ்பெக்ட் செய்துருப்பாங்க போல, அதான் தற்காலிகமா ஓகே சொல்லி இருக்காங்க. இன்னும் நேர்ல போய் பார்த்தா தான மத்த விஷயங்களைப் பேச முடியும்! “

 அவளைச் சந்திக்கப் பெரும் ஆவல் கொண்டவனுக்கு, உள்ளூர அவள் தன்னை  விரும்பி தான் ஏற்றுக் கொண்டாளா? என்ற  ஐயம் தோன்றிக் கொண்டே தான் இருந்தது. 

அதையும் அன்றைக்கே கேட்டு விடலாம் என சமாதானம் செய்து மனதை அடக்கியபடியே நாட்கள் நகரத் தொடங்க, 

பெண் பார்க்கும் படலத்திறகான தேதியும் இரு வீட்டாருக்கும் கூறப்பட்டிருக்க, 

பேசி வைத்தது போல், 

ரோகினியிடம் தேதியைக் கூறி, 

” நான் உங்கள் வீட்டுக்கு ஆட்டோவுல வந்து  கூட்டிட்டுப் போறேன் ரோகினி “

 என்று சுமதி கேட்க, 

” சரிங்க க்கா. வாங்க ” 

என்று அவரும் கூற, 

 ஹரீஷிடமும் , 

”  சுமதி அக்கா வரேன் னு சொல்லி இருக்காங்க. நான் அவங்க கூட போய்ட்டு வந்துடறேன் ” என்று மகன் மற்றும் மகளிடம் கூறி விட்டு , 

” நீ காலேஜூக்குப் போனதும் மெசேஜ் அனுப்பி விடு ” என்று மைதிலியிடம் தெரிவித்தார். 

ஹரீஷ் நண்பனுக்குக் கால் செய்து,

“நண்பா! நல்லதே நினைச்சுட்டுப் போடா” 

என்று பேசி வைத்தான். 

கோவர்த்தனனுக்குள்  உற்சாகம் பீறிட்டது என்றால், 

இளந்தளிருக்கோ அவனை நான்கு முறை சந்தித்து இருந்தாலும், இந்த முறை பெண் பார்க்க என்று வருவதால், அவனை எதிர்கொள்வதை நினைத்துக் கொண்டு இருக்க, 

” அக்கா! ரெடி ஆகிட்ட தான? “என்று உள்ளே வந்தாள் சுபாஷினி. 

” சுபா இங்க வாயேன் ” தங்கையை அருகே அழைத்து, 

அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு ,  கண்களை மூடி , ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மெதுவாக விழிப்படலங்களைத் திறந்தாள். 

சுபாஷினி என்ன, ஏது? என்று கேட்பதற்குள் சிவசங்கரி உள்ளே நுழைந்திட்டார். 

” பதட்டமாகாத,மாப்பிள்ளை வந்ததும், உன்னோட முடிவைத் தெளிவா சொல்ல முடியாது இளா ! தண்ணிக் குடிச்சுட்டு, உட்காரு ” என்று மகளது நெற்றியில் குங்குமத்தைப் பூசி விட்டுச் சென்றார். 

துணைக்கு சுபாஷினி அமர்ந்திருந்தாள். 

தெரிந்த நபர் தானே வருகிறான்! அதற்கு ஏன் இத்தனை களேபரங்களை நான் நிகழ்த்துகிறேன்? என்னைப் பார்த்தால் அவன் தான் தடுமாறப் போகிறான்! அந்த நேரத்தில் நானும் அவ்வாறு நடந்து கொண்டால், அவனுக்கு அது சாதகமாக இருந்து விடக் கூடும் ! 

” தண்ணிக் குடிக்கிறியா க்கா? ” 

வாட்டர் பாட்டிலில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தாள் தங்கை. 

“குடு சுபா ” அதனை வாங்கிப் பருகினாள். 

‘ அவனுக்கும் இந்தப் பதட்டம் ஏற்பட சாத்தியமோ? ‘ அவள் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். 

சுமதியும், ரோகினியும் ஆட்டோவில் இளந்தளிரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். 

கோவர்த்தனனும் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து, அவ்வீட்டை அடைந்தனர். 

“வாங்க வாங்க! ” இன்முகம் கொண்டு வரவேற்றார் சிவசங்கரி. 

சுமதியும், ரோகினியும் தங்களது வதனங்களிலும் புன்னகை பொங்க, 

அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளே வந்தனர். 

அவர்களுக்கு அடுத்து வந்த கோவர்த்தனனை, 

” வாங்க மாப்பிள்ளை ” என்று வரவேற்றவர், 

அவர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டி  பார்த்துக் கொண்டு இருந்த தன் சின்ன மகள் சுபாஷினியை அழைத்து அவர்களிடம் சுட்டிக் காட்டி, 

” இவ தான் என் இரண்டாவது பொண்ணு. பேரு சுபாஷினி ” என்று அவர்களிடம் கூறினார். 

 தன்னைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கும் சுபாஷினியைக் கண்டு கோவர்த்தனனும் குறும்புச் சிரிப்பு சிரித்தான். 

” நீ போய் அவங்க வந்துட்டாங்க – ன்னு இளா கிட்ட சொல்லு. அப்பறம் நான் சொல்றப்போ காஃபி ட்ரே – யைக் கொடுத்து கூட்டிட்டு வா “

விரைவாகச் சொல்லி அவளை அனுப்பி ,

இவர்களிடம் பேச ஆரம்பித்தார் சிவசங்கரி. 

” எங்களைப் பற்றி தரகர் சொல்லி இருப்பாரு.இவங்க என்னோட தங்கச்சி மாதிரி. இவங்களோட பையனும், என்னோட பையனும் ஃப்ரண்ட்ஸ். ” 

என்று ரோகினியை அறிமுகம் செய்து வைத்தார். 

” நல்லது ங்க. பையனோட ஃபோட்டோவும் டீடெய்ல்ஸ் யும் தரகர் சொன்னாரு. இந்த இடம் ஒத்து வரும்னு தோணுச்சு அதான்.” என்று அவர் முடித்திருக்க , 

”  எங்களுக்கும் இந்த இடம் சரியா வரும்ன்னு தோனுச்சு அதான் வந்துட்டோம் ” என்று சரளமாக

 அவர்களிடத்தில் சிறிது நேரம் அளவளாவ,  

கோவர்த்தனன் , அவள் தன்னிடம்

 ‘ பாரா முகம் காட்டினால்? ‘ என்ற சிந்தனையும் வலம் வந்த வண்ணமே இருந்தது. 

🌺🌺🌺🌺

” அக்கா ! அவங்க வந்தாச்சு. அம்மா  காஃபி ட்ரே கொடுத்து விட்றேன் – னு சொன்னாங்க ” 

அறிவித்து விட்டு, அங்கேயே அமர்ந்து கொண்டாள். 

‘ வந்து விட்டார்கள் ‘ என்றதும், இவள்  ஐந்து வினாடிகளில், தன் மனதைச் சரியான நிலைப்பாட்டில் வைத்துத் தயாராகினாள். 

சிவசங்கரி கொட்டை வடி நீர் அடங்கிய கோப்பைகளைத் தட்டில் அடுக்கி வைத்துக் கொடுத்தனுப்பியிருக்க, சுபாஷினி அதை அக்காவின் கைகளில் திணித்தாள். 

” நானும் வர்றேன் தான க்கா! டோன்ட் வொர்ரி ” என்று அவளுடன் நடந்தாள். 

கோவர்த்தனனின் விலோசனங்கள் இரண்டும் இளந்தளிரின் நடைச் சத்தத்தில், விலுக்கென்று அவள் புறம் திரும்பிற்று. 

அவனது ஆர்வப் பார்வை இளந்தளிரின் விழிகளை சமீபித்ததும் பதட்டம் சூழ் பார்வையாக மாறி விட, அவள் தன்னருகே வரவும், கோவர்த்தனனுக்குப் பதட்டத்தையும் தாண்டி, அவளைப் பார்க்கத் துடித்துக் காத்திருந்த நயனங்களை அவளது வதனத்தை நோக்கி நகர்த்தினான். 

 தன் அக்கா காஃபியை ஒவ்வொருவருக்கும் கொடுத்து விட்டு வரக் காத்திருந்து தாயின் அருகிலேயே தேங்கி நின்று கொண்டாள். 

சுமதி அவள் உபசரிப்பிற்காகக் கொடுத்த காஃபியை ட்ரேயில் இருந்து எடுத்துக் கொண்டு, கனிவுடன் அவளைப் பார்த்தார். 

அதுபோல, ரோகினியும் தனக்கான கோப்பையைப்  பெற்றுக் கொண்டு, சுமதியைப் பார்க்க, இருவரும் திருப்தியாக தலையசைத்துக் கொண்டனர். 

கோவர்த்தனனிடம் காஃபி ட்ரேயைக் கொண்டு சென்ற இளந்தளிர் அவன் கைகள் பதற்றம் காரணமாக துடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளுக்குள், 

‘ பயப்பட்றா மாதிரியே நடிக்கிற பாரேன்’  என்று அவனைப் பார்த்தாள்,

 இவனோ யாசிக்கும் பார்வையை வீச , 

ட்ரேயில் இருந்தக் கோப்பை அவன் கரத்தில் இடம் பெற,அவளைப் பார்த்து ரசனையாகப் புன்னகை புரிந்தான். 

அந்தப் புன்னகையில் புருவம் உயர்த்த, 

அதில் வெட்கம் கொண்டு தலை குனிந்து கொண்டான் கோவர்த்தனன். 

சுமதி ” இங்க வந்து உட்காரும்மா ” என்று இளந்தளிரைத் தனக்குப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். 

” இவங்க கோவர்த்தனனோட ஃப்ரண்ட் ஹரீஷோட அம்மா ம்மா ” என்று ரோகினியை அவளுக்குக் காண்பிக்க, 

” வணக்கம் ங்க ” என்று இதழ் விரித்துப் புன்னகைத்தாள். 

ரோகினி ” வணக்கம் ம்மா ” 

‘ ஹரீஷ் ‘ என்றதுமே, 

ஞாயிற்றுக்கிழமை தனது வண்டியின் முன்னால் திடுமென வந்து கலவரப்படுத்தி ,

தன்னை‘ சிஸ்டர் ‘ என்று விளித்தவன் தான் என்பது விளங்கி விட, 

கோவர்த்தனன் தளிரைப் பார்க்க, இவளும் அதே புருவ உயர்த்தலுடன் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

” என் பையனோட ஃபோட்டோவைப் பாத்துருப்ப, நேர்லயும் பாத்தாச்சு.தனியாப் பேசி, தயக்கம் இல்லாமல், முடிவைச் சொன்னாலும் சரி தான் ” சுமதி சொன்னதும், 

இருவரும் ஒரே நேரத்தில், 

” பேசிடறோம் ” என்றிட, 

இவர்கள் முகத்தில் அரும்பிய புன்னகையுடன், கோவர்த்தனனையும், இளந்தளிரையும் தனியே பேச அனுப்பி வைத்தனர். 

  • தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *