226 views
அத்தியாயம் 18
கணவன் சென்றதும், வேறெந்த சிந்தனையும் இன்றி, தங்களது திருமணம் எவ்வாறு நடந்தது? என்பதை யோசிக்க ஆரம்பித்து விட்டாள் அதிரூபா.
காஜல் ஒரு வாரமாக கல்லூரிக்கு வரவில்லை என்பதை பிரித்வி கவனிக்கவும் இல்லை, அதிரூபாவும் அதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்தடுத்து நடந்த தேர்வுகள் அவர்களை உள்ளிழுத்துக் கொண்டது.
அந்த தேர்வுகளுக்கு மட்டும் கல்லூரிக்கு வந்த காஜலோ, யாரையும் பார்க்க விரும்பாதவள் போல, அந்த நாட்களில் தன் பரீட்சையை மட்டும் எழுதி விட்டு சென்றாள்.
பிரித்வியின் நிராகரிப்பு , காஜலை நிலைகுலைய வைத்திருந்தது என்றால், தந்தையின் கட்டுப்பாடுகள் இன்னும் வலியைக் கொடுத்தது.
மற்ற இருவரும் அவளைக் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால், பரீட்சை முடிந்த பிறகு, அதிரூபாவிற்கு உச்சபட்ச அதிர்ச்சியை வாரி வழங்கி இருந்தான் பிரித்வி.
தன் பெற்றோரிடம்,”நான் இந்தப் பொண்ணை லவ் பண்றேன் அப்பா! அம்மா!” என்று அதிரூபாவின் புகைப்படத்தைத் தன் செல்பேசியில் காண்பித்தான்.
அந்த நேரம் லயாவும் அங்கே இருந்ததால்,”ஹேய் அண்ணா! கொடு” என்று அண்ணனிடம் இருந்து செல்பேசியை வேகமாகப் பறித்தாள்.
அவள் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில்,
“உங்களுக்கு என்ன தோணுது?” என்று நேரடியாக தன் தந்தை, தாயிடம் வினவினான் பிரித்வி.
“பொண்ணுப் பார்க்க லட்சணமாக இருக்கா! உன் கூட படிச்ச பொண்ணா பிரித்வி?” என்று கேட்டார் சகுந்தலா.
“ஆமாம் அம்மா” என்றான் மகன்.
“கூட படிச்சேன்னு சொல்ற! இந்தப் பொண்ணைப் பத்தி எங்ககிட்ட நீ எதுவுமே சொன்னது இல்லை? வீட்டுக்குக் கூட கூப்பிட்டு வந்தது இல்லையே?” – மகேஸ்வரன்.
“நானும், இவளும் ஃப்ரண்ட்ஸ் இல்லை ப்பா! கிளாஸில் அவ்வளவாக பேசினது கூட இல்லை” என்றவன் தங்கள் இருவருக்குள்ளும் காதல் துளிர்த்த தருணத்தை , வார்த்தையாக மாற்றி பெற்றோரிடம் பகிர்ந்தான் பிரித்வி.
அவனது காதல் கதையைக் கேட்டதும் ,
“கலக்குறடா! அண்ணியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” என்று தன் சம்மதத்தை அண்ணனிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள் லயா.
“எங்களுக்கும் பொண்ணைப் பிடிச்சிருக்கு பிரித்வி.ஆனால் பொண்ணுக் கேட்டுப் போகும் போது, பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்னப் பண்றது?” என்றார் சகுந்தலா.
வீடு தேடிப் போய் அவமானப்பட அவருக்கு இஷ்டம் இல்லை.
“முதல்ல என் ஃபோட்டோவையும், ஜாதகத்தையும் அவங்களுக்கு அனுப்பி வைங்க ம்மா! அப்பறம் நான் அவங்க அப்பாவைத் தனியாகப் பார்த்துப் பேசிக்கிறேன்” என்ற யோசனையைக் கூறினான் பிரித்வி.
“அதிரூபா கோவிச்சுக்கப் போறா டா?”
“ம்மா! அவகிட்ட நான் பேசிக்கிறேன். நீங்களே அவளுக்கு ஐடியாஸ் கொடுப்பீங்க போலவே!” என்று சலித்துக் கொண்டான் தனயன்.
“அது என்னவோ கண்டிப்பாக நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன் மகனே!” என்று கிண்டல் செய்தார் மகேஸ்வரன்.
“ஏன் ப்பா! இப்படி சொல்றீங்க? நான் எப்படியாவது அவளைக் கன்வின்ஸ் செய்துக்கிறேன்” என்று அவரது கிண்டல் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான் பிரித்வி.
“அதெல்லாம் அண்ணா பாத்துக்குவான் ப்பா! எனக்கு ட்ரீட் வைக்க மட்டும் மறந்துடாதடா!” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினாள் லயா.
“எல்லாம் சக்ஸஸ் ஆனா தான் உனக்கு ட்ரீட் கொடுப்பேன் வாலு!!” என்று கூறவும்,
“போங்கு! கல்யாணத்துக்கே ப்ளானைப் போட்டுட்ட, இனி அவங்க வீட்டில் பேசினாலே போதும்! அண்ணியைச் சமாளிச்சிடுவ! அப்பறம் என்ன உனக்கு இன்னும் சக்ஸஸ் ஆகனும்?”என்று தமையனிடம் கேட்டாள் லயா.
” உன்னோட அண்ணி ரொம்ப ஸ்மார்ட். அவளை ஏமாத்தவே முடியாது ம்மா! உண்மையைச் சொல்லி தான் கன்வின்ஸ் பண்ணனும். அதை நினைச்சா தான் பயங்கர, பயமாக இருக்கு” என்று தவிப்புடன் கூறினான் பிரித்வி.
“பயப்படாதே அண்ணா! வெற்றி நமதே!” என்றாள் லயா.
அதேபோல், அதிரூபாவிற்காக வரன் பார்க்க ஆரம்பித்திருந்த அவர்கள் பெற்றோரிடம் தன்னுடைய புகைப்படத்தையும், ஜாதகத்தையும் தாயின் மூலம் அனுப்பி வைத்திருந்தான் பிரித்வி.
“இந்த பையன் ஃபோட்டோவைப் பாரு கிருஷ்ணவேணி!” என்று தரகர் தன் செல்பேசிக்கு அனுப்பி வைத்திருந்த பிரித்வியின் புகைப்படத்தை மனைவிக்குக் காட்டினார் தீனதயாளன்.
கிருஷ்ணவேணி, “ம்ம்! பையன் பார்க்க நல்லா இருக்கான் ங்க! படிப்பு, மத்ததெல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டார்.
“மாப்பிள்ளைக்குச் சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அப்பறம் சாஃப்ட்வேர் கம்பெனிஸ் இருக்கு வேணி. கூடப் பிறந்த தங்கச்சி ஒருத்தவங்க இருக்காங்க” என்றார் தீனதயாளன்.
“நல்லா விசாரிச்சு தான் அனுப்பி இருக்காரா ங்க?” என்று கேட்ட மனைவியிடம்,
“விசாரிச்சு எந்தக் குளறுபடியும் இல்லாத , சுத்தமான ஜாதகம் தான்னு தரகர் சொன்னார் ம்மா!” என்று கூறினார் கணவன்.
“அப்போ நம்மப் பொண்ணோட ஃபோட்டோவை அனுப்பி வைக்க சொல்லுங்க” என்று தரகரிடம் மேலும் சில விவரங்களை மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்லுமாறு கூறினார் கிருஷ்ணவேணி.
மணமகனுடைய புகைப்படத்தைப் பார்த்ததும், “பிரித்வி!!” என்று பல்லைக் கடித்துக் கொண்டே அவனுக்குக் கால் செய்தாள் அதிரூபா.
“ஹலோ!” என்று உற்சாகமாக கூறினான்.
“உங்களை நான் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறேன் பிரித்வி” என்று இறுகிய குரலில் கூறி விட்டு காலைக் கட் செய்து விட்டாள் அதிரூபா.
அவளுடைய குரலிலிருந்த பேதத்தைப் புரிந்து கொண்டான் பிரித்வி.
செல்பேசி மூலம் இரு வீட்டாரும் கலந்து பேசிக் கொண்டனர்.
இதில் லயா வேறு, “ஹேய்!! சாதிச்சுட்டியே அண்ணா! இப்போ நீ எனக்கு ட்ரீட் கொடுக்கலாம்” என்றாள்.
பிரித்வி, “வா போகலாம்” என்று அவளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று தங்கையின் விருப்ப உணவுகளையும், பனிக்கூழ்களையும் வாங்கிக் கொடுத்தான்.
அதிரூபா மற்றும் பிரித்வியின் திருமண வேலைகள் படபடவென்று ஆரம்பித்து விட்டது.
பூ வைக்கும் போதும், நிச்சயத்தின் போதும் அதிரூபாவின் முகமே சரியில்லை. அதைக் கவனித்தப் பிரித்வியோ தன் தவறை உணராமல், திருமணத்திற்கு ஆயத்தம் செய்யுங்கள் என்று கூறி விட்டான்.
அவனுடைய மாபெரும் தவறு அதுவே ஆகும்!
“மோதிரத்தின் அளவு சரியாக இருக்கா?, கல்யாணப் புடவை பிடிச்சிருக்கா?” என்றெல்லாம் சமாதானமாகப் பேசிப் பார்த்து விட்டான் பிரித்வி. இவற்றிற்கு எல்லாம் அவள் அசையவே இல்லை.
போகப் போக சரியாகி விடுவாள் என்ற எண்ணத்தில் இருந்தான். அவர்களது திருமண நாளும் வந்தது.
அதிரூபாவின் முகத்தில் கடைசி ஒப்பனையை முடித்தார் அழகுக் கலை நிபுணர்.
“டென்ஷன் ஆகாதீங்க மேம்! வியர்வையால் மேக்கப் கலையுது!” என்று ஆங்காங்கே துடைத்து விட்டார்.
இவளுக்குத் தாலி கட்ட வேண்டியவனோ, மாப்பிள்ளை அறையில் புத்துணர்வுடன் தயாராகிக் கொண்டிருந்தான்.
“ரெடியாகிட்டீங்களா அண்ணா? மணமேடைக்குப் போகலாமா?” என்று லயா வந்து கேட்டதும்,
“ம்ம்! ஆச்சு லயா!” என்று அவன் தெரிவிக்கவும், அவனை மேடைக்கு அழைத்துக் கொண்டு போனாள் லயா.
ஹோம குண்டத்திற்கு முன்னால் அமர்ந்தான் பிரித்வி.
“மாலையை எடுத்து கழுத்தில் போட்டுக்கோங்கோ! நான் சொல்ற மந்திரங்களை காதில் வாங்கிண்டு அப்படியே சொல்லுங்கோ” என்று ஐயரின் வார்த்தைகளுக்கு இணங்கி மந்திரங்களை உச்சரித்தான்.
“ரொம்ப சென்சிடிவ் ஆக இருக்கீங்க!” என்று கூறிக் கொண்டே தன்னால் முடிந்த அளவிற்கு அதிரூபாவிற்கு மேற்படி ஒப்பனைகளை முடித்திருந்தார் ஒப்பனையாளர்.
‘நான் சென்சிடிவ் ஆ? என்னை அப்படி ஆக்கிட்டான்!’ என்று நினைத்து நொந்து போனாள் அதிரூபா.
“லயா! போய் அண்ணியைக் கூப்பிட்டு வா” என்று மகளை அனுப்பி வைத்தார் சகுந்தலா.
“அண்ணி! பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க!” என்று அவளுக்குத் தன் பாராட்டைத் தெரிவித்து விட்டு, தன்னுடன் அழைத்துச் சென்றாள் பிரித்வியின் தங்கை.
மகிழ்ச்சியின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான் பிரித்வி. அவனைப் பார்த்துக் கொண்டே தன் இடத்தில் அமர்ந்தாள் அதிரூபா.
“ஹாய் அதி!” என்று அருகிலிருப்பவளிடம்
முணுமுணுத்தான்.
அதற்கு மறுமொழி கூறாமல் அமைதியாக இருந்தாள் பெண்ணவள்.
அவளுடைய அருகாமை மட்டும் போதும் என்று தன் கையில் கொடுத்தப் பொன்னிறமாக ஜொலிக்கும் தாலியை தன்னவளின் சங்குக் கழுத்தில் கட்டினான்.
(அதற்குப் பிறகு நடந்தவைகளைத் தான் முதல் அத்தியாயத்தில் வாசித்து இருப்பீர்கள் நண்பர்களே!)
இப்படித் தான் தன் திருமணத்தை அதிரூபாவுடன் நடத்திக் கொண்டான் பிரித்வி. அவளது கோபம் நியாயமானது தானே!
🌸🌸🌸
காஜல் மற்றும் தன்வந்த்தின் திருமணமும் ஒரு கடினமான
சூழ்நிலையில் தான் நடந்தேறியது.
காசிநாதன், “இவங்க வீட்டில் நம்மளோட பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க மாது” என்று தன் மனையாளிடம் கூறினார்.
“அப்போ முடிச்சிடலாம்ங்க” என்று அவரிடம் தன் முடிவைக் கூறினார் மாதுரி.
காஜலுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. கல்லூரி தேர்வுகள் முடிந்ததுமே மகளுக்குத் திருமணம் செய்விக்க நினைத்தப் பெற்றோரிடம் தன்னுடைய மறுப்பைக் கூற அவளுக்கு ஐயமாக இருந்தது.
அந்த நேரத்தில் கூடுதல் தகவலாக,
“சீக்கிரம் இவளோட கல்யாணத்தை நடத்தனும் ங்க! அந்தப் பிரித்வி அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்” என்று ஆற்றாமையுடன் கூறினார் மாதுரி.
“ஆமாம் மாது!” என்று மகளை உடன் வைத்துக் கொண்டே வேண்டுமென்றே இவ்விஷயத்தைப் பற்றிப் பேசினர் தந்தையும், தாயும்.
“அதிரூபாவா அம்மா?” என்று நம்ப மாட்டாமல் வினவினாள் மகள்.
“அவளே தான்! நீ தான் இருக்கிறதிலேயே மோசமான முட்டாள் காஜல்” என்று மகளைக் கடிந்து கொண்டார் மாதுரி.
பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்து எறிந்தவள்,
“தன்வந்த்துக்கும், எனக்கும் மேரேஜ்ஜை ஃபிக்ஸ் பண்ணுங்க அப்பா! ” என வலுவிழந்த குரலில் கூறி விட்டுச் சென்றாள் காஜல்.
“கேட்டீங்கள்ல. அப்பறம் என்ன? அவங்க கிட்ட பேசி, நேரடியாக கல்யாணத்தை வச்சிடலாம்” என்று முடிவெடுத்தார் மாதுரி.
🌸🌸🌸
“ஹலோ யாஷிகா!”
“என் நம்பர் எல்லாம் உங்கிட்ட இருக்கா காஜல்?” என்று கிண்டலடித்தாள் யாஷிகா.
அவள் அதிரூபாவின் தோழி. தன்னிடம் எப்போதும் அளவாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
தற்போது அவளுக்குத் தான் கால் செய்து இருந்தாள் காஜல்.
“ப்ளீஸ் யாஷ்!” என்று இவள் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும்,
“சொல்லு?” என சீரியஸாக கேட்டாள் யாஷிகா.
“அதிரூபாவுக்கும், பிரித்விக்கும் எப்போ மேரேஜ் ஆச்சு?” என்று விரக்தியாக கேட்டாள்.
“அவங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆயிடுச்சே காஜல். இப்போ கேட்கிற? எனக்கு லாஸ்ட் ஒன் வீக் முன்னாடி தான் இன்விடேஷன் அனுப்பினா! அந்த டைமில் என்னால் போக முடியல. வீட்டுக்குப் போய் தான் பார்க்கனும்னு நினைச்சேன்” என்று கூறினாள் யாஷிகா.
“எந்த சோஷியல் மீடியாலயும் அவங்களோட கல்யாணத்தைப் பத்தி அப்டேட் வரவே இல்லையே?”
“அவங்க ரொம்ப பிஸியாக இருக்காங்களாம் காஜல்.அதனால் இனிமேல் தான் எல்லாத்துலயும் அப்டேட் பண்ணனும்னு சொன்னா. உன்னை இன்வைட் பண்ணலையா?”
“ம்ஹூம் இல்லை யாஷ்!” என்று தொண்டை அடைக்க கூறினாள் காஜல்.
“அதிரூபாவை நேரில் பார்க்கும் போது உன்னைக் கூப்பிட்டுப் போறேன். நாலு வார்த்தை நல்லாக் கேட்டு விடு” என்றாள்.
“வேண்டாம் யாஷ். எனக்குக் கூடிய சீக்கிரத்தில் கல்யாணம். இதை மட்டும் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிடு. தாங்க்ஸ்டி” என்று ஃபோன் காலைத் துண்டித்து விட்டு, தன்வந்த்தின் எண்களை அழுத்தினாள் காஜல்.
– தொடரும்