573 views

 

கோபம் ஆத்திரமாக மாறியது தொடர்ந்து ரகுவரன் கேலி செய்வதால். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் சமையலறை சென்று விட்டாள். புற முதுகு காட்டி ஓடும் மனைவியை இன்னும் அடிமையாக்க நினைத்தவன் பிள்ளைகளை அங்கு விரட்டினான்.

வசமாக சிக்கிக் கொண்டவள் தன் நிலையை எண்ணி அமைதிக்காக்க, ஆரவாரத்தை மட்டும் கைவிடவில்லை ரகுவரன். பிள்ளைகள் மூவரும் அவனை நைசாக கழட்டி விட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். உணர்ந்துக் கொண்டவன் மனைவியிடம் சிக்காமல் இருக்கவே கண்ணாமூச்சி விளையாட கூட்டு சேர்ந்தான்.

மான்குட்டி  கண்ணை மூடிக்கொண்டு எண்களை எண்ணிக் கொண்டிருக்க, மூன்று ஆண் சிங்கங்களும் ஓடி மறைந்தது. இளசுகள் இரண்டும் அளவிற்கு ஏத்த இடத்தில் மறைந்து கொள்ள, பெரிய உருவம் மறைய சிரமப்பட்டது. வேறு இடத்திற்கு தாவுவதற்குள் மகள் பத்து எண்களையும் எண்ணி முடித்துவிட்டு விழி திறந்து விட்டாள்.

பதறி அடித்து துள்ளியவன் அவசரத்திற்கு சமையலறையின் பால்கனி பக்கம் ஒதுங்கி விட்டான். துணிகளை துவைப்பதற்காக பால்கனி கதவை மகிழினி திறக்க, மகள் தான் கண்டுபிடித்து விட்டாளோ என்று அலறினான் ரகுவரன்.

அவன்  அலறளில்  பயந்து வெளியே ஓடியவள் வேகமாக கதவை மூடிவிட்டாள். இருவரும் கதவில் நிம்மதி பெருமூச்சு விட சில நொடிகள் கழித்து தான் உண்மை நிலவரம் புரிந்தது. மனைவி முன்பு அசிங்கப்பட்டதை நினைத்து ரகுவரன் தலையில் அடித்துக் கொள்ள, மனைவியின் உதட்டில் மர்ம புன்னகை.

ஏளன சிரிப்பை தனக்குத்தானே வெளிப்படுத்திக் கொண்டவள் மகளை நோட்டமிட்டாள். அவளோ தீவிரமாக மூவரையும் தேடிக் கொண்டிருக்க, கதவு பொறுமையாக திறக்கப்பட்டது. அதில் சாய்ந்திருந்தவன் தடுமாறி நிற்க, இன்னும் ஏளன சிரிப்பு கணவனின் செய்கையில்.

அச்சிரிப்பை கண்டு கொண்டவன் முறைக்க, பார்வையால் கீழிருந்து மேல்வரை கேலி செய்தாள் மகிழினி. என்னவோ திட்டம் தீட்டி விட்டாள் என்பதை மட்டும் அறிந்து கொண்டான் ரகுவரன். சுதாரித்து அங்கிருந்து நழுவுவதற்குள் அருகில் நெருங்கியவள் அவனை உரசாமல் கைகளால் அணை கட்டினாள்.

“ஏய்!” என்றவன் அடுத்த வார்த்தை பேசவில்லை, “மானு” என மனைவி அழைத்ததால்.

மாட்டிக்கொள்ளக் கூடாது என உடனே அவளின் வாயை பொத்தியவன் ‘சொல்லாதே’ என்று சைகை செய்ய, கைகளை எடுத்துவிட்டு நக்கல் செய்தால் இவ்வளவு நேரம் அவன் செய்தது போல்.

மான்குட்டி மூவரையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. அதனால் மூவரையும் அழைத்துக் கொண்டே தேட, மகள் அழைக்கும் ஓசையில்  வெளியேற நினைத்து நகர்ந்தான். அணைக்கட்டி இருந்த கைகள் இன்னும் இறுக்கமாக அவனை சிறை பிடிக்க, புருவம் உயர்த்தினான் சுவற்றில் சாய்ந்துக் கொண்டு.

“உன் பொண்ணு உன்ன தேடிட்டு இருக்கா போலடா ரகுவரா…. அப்படியே உன்ன கூப்பிட்டதும் உடம்பெல்லாம் சிலிர்க்குமே இப்போ.” பேசிக்கொண்டே ஒரு விரலால் முகத்தை தடவினாள்.

“என்னடா கொழுப்பு உனக்கு… நேரம் பார்த்து நான் செய்வன்னு தெரிஞ்சும் இவ்ளோ ஆடுறியே தப்பு இல்ல…” மனைவி பேசிக் கொண்டிருக்கும் நேரம் மகள் மூன்று முறை அழைத்து விட்டாள்.

அதிகம் அலைய வைக்க நினைக்காதவன் மனைவியிடம் கோரிக்கை வைக்க வாயை திறக்க, அதற்குள் கீழ் உதட்டை இருவிரலால் தனதாக்கிக் கொண்டவள், “இப்போ உனக்கு பேசுற உரிமை இல்லடா ரகுவரா…” என அதில் முத்தம் ஒன்று வைத்தாள்.

கண்கள் விரிந்து திறந்திருக்கும் கதவு வழியாக மகள் எங்கே இருக்கிறாள் என்று ஆராய்ந்தான். “உன் பொண்ணு பார்த்துடுவானு பயமா இருக்கா.” என்றதும் ரகுவரன் வேகமாக தலையசைக்க,

“இந்த அறிவு எல்லாம் என்னை நக்கல் பண்ணும் போது இருந்திருக்கணும். என் முகத்தைப் பார்த்தா உனக்கு புடிக்கலையா. அதுவும் மூணு முடிச்சு போட்டு முட்டாள் ஆகிட்டீங்க…. அப்படி தானடா … ரகுவரா.” பேசிக் கொண்டிருக்கும் பொழுதே முழுவதும் முற்றுகையிட்டாள் தனக்கு சொந்தமான உடலை.

கதவையாவது சாற்றும் படி கண்களால் கோரிக்கை வைக்க, சட்டென்று நிராகரிக்கப்பட்டது விழியை மூடிக்கொண்டு  முத்தமிடும் மனைவியின் செய்கையில். அதில் மயங்காமல் சுதாரிப்போடு நின்று கொண்டிருந்தான் மகளுக்காக. உடல் அசையாமல் இருப்பதை வைத்து கணவனின் எண்ணத்தை உள்வாங்கியவள் இம்சித்தாள் ஆடைக்குள் கை நுழைத்து.

உணர்வுகள் அவனையும் அறியாமல் மனைவி வசம் செல்ல, கட்டியவள் அவன் வசம் ஆனாள். போட்டியை மறந்தவர்கள் இதழ் சுவைக்குள் நீச்சல் அடிக்க, அவர்களுக்குள் இருந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது. விழிகள் இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, உடல்கள் எண்ணத்தை பிரதிபலித்தது காதலோடு.

வெளியில் இருந்த மான்குட்டி ஒரு வழியாக கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் இளசுகளை கண்டுபிடித்து கூச்சலிட்டது. அந்த சத்தத்தில் உணர்வுகளை மீட்டுக் கொண்டவன் உதட்டையும் மீட்டுக் கொள்ள போராட, கட்டியவள் கை காரியத்தால் முடியாமல் போனது. சற்று நகர்ந்தாலும் உதட்டை இழுத்து நோகடிக்கும் மனைவிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடியவன் சுவர் இருக்கும் இடத்தில் அவளை இடம் மாற்றி விட்டு கதவை அடைத்தான் சாமர்த்தியமாக.

கள்வனின் சாமர்த்தியம் அவளுக்குள் இருந்த மோகத்தை விரட்டியடிக்க, விடாமல் அடிக்க துவங்கினாள். மகளுக்கு சத்தம் கேட்கக் கூடாது என்பதால் ரகுவரன் அமைதியாக அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

“பொண்டாட்டி போண்டாடீ’ னு  கிட்ட வாடா இருக்கு உனக்கு.” மகளுக்கு மட்டும் நல்லவனாக இருக்கும் கணவன் மீது எரிச்சல் உற்றவள் இதற்கு மேல் அவன் பக்கம் செல்லக்கூடாது என்ற முடிவோடு நகர்ந்து விட்டாள்.

“அப்பா மான்குட்டி தம்பிய கண்டுபிடிச்சிடுச்சி.” வெற்றி பெற்ற மிதப்பில் ஆர்ப்பரிக்கும் மகளோடு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தவன் விழியில் வீட்டை பெருக்கும் மனைவி விழ, கொடுத்த முத்தம் ஞாபகத்திற்கு வந்தது.

பேச்சுக்கள் மட்டும் பிள்ளைகளிடம் இருக்க, பார்வை சொக்கி போனது அவனுக்கு சொந்தமான துணைவியின் அழகை ரசித்து. என்றும் இல்லாத புதுவித அழகு தென்பட்டது அவள் வேலை செய்யும் அழகில். விளையாடிக்கொண்டே சீண்டல்களை கையாண்டான்.

கோபத்தில் இருந்தவள் உண்மையான கோபத்தோடு கையில் கிடைப்பதை தூக்கி அடிக்க, தீவிரத்தை உணர்ந்துக் கொண்டவன் செய்வதறியாது பின் வாங்கினான். “மானு விளையாடுனது போதும் அமைதியா உட்கார்ந்து டிவி பாருங்க, அம்மா குளிச்சிட்டு வந்துடுறேன்.” அன்னையின் வார்த்தையை கேட்ட பிள்ளைகள் சமத்தாக தொலைக்காட்சி பெட்டி முன் அமர, வெகு நேரம் கழித்து அதில் இருக்கும் சூட்சமத்தை உணர்ந்தான் ரகுவரன்.

தனக்கான நேரத்தை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் தடுமாறியவனுக்கு தெய்வம் போல் உதவ வந்தார் சாந்தி. பாட்டி சாப்பிட அழைத்ததும் ஆதவ், மான்குட்டி இருவரும் உடனே செல்ல, குட்டி ரகுவரன் டிவி பார்க்கும் குஷியில் வர மறுத்தான். மகனை உள்ளுக்குள் வசை பாடியவன் பல சாதனைகளை நிகழ்த்தி அனுப்பி வைத்தான்.

சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு காலரை பின் நகர்த்தியவன் வசியம் செய்ய குளியலறை கதவில் கை வைக்க, அது திறந்தே தான் இருந்தது. வெட்ட புன்னகை ஆணவன் முகத்தில் குடியேற, அதை கட்டுப்படுத்த தெரியாமல் தனக்காக காத்திருக்கும் மனைவியிடம் கொட்டி விட்டான்.

குளிப்பதாக சொல்லிவிட்டு வந்தவள் குளியலறை மூளையில் சாய்ந்து நின்று புருவம் உயர்த்த, “என் பொண்டாட்டி குளிக்கிறதா கேள்விப்பட்டேன். அதான் உதவி பண்ணலாம்னு வந்தேன்.” சொல்லும் பொழுதே வெட்கப்பட்டான்.

“உங்க பொண்டாட்டிக்கு குளிக்க தெரியாதாக்கும்.”

“ம்ஹூம்”

“அவ சொன்னாளா குளிக்க தெரியாதுன்னு.”

“சொல்லலங்க பொண்டாட்டி மேடம்…. காலைல குளிச்சிட்டு கட்டுன ஈரத்துண்டோட திரும்பவும் குளிக்க போறதா சொல்லிட்டு வந்ததை பார்த்து நானே கண்டுபிடிச்சேன்.”

இருவரின் பார்வையும் மாறி தாக்கிக் கொள்ள, கடமைக்கு என்று பேச்சுக்கள் இருந்தது. அதையும் முடிவுக்கு கொண்டு வந்தான் இரு இரவு தனியாக படுத்த விரதத்தை முடித்து. முத்தம் மென்மையாக குளியலறையை வெட்கப்பட செய்ய, பெண்ணவள் வெட்கத்தைத் துறந்து ஐக்கியமானாள் அவனோடு.

ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த முத்தம் இணைப்பிரியாமல் ஒட்டிக்கொள்ள ஆசைப்பட்டது. பார்வையால் மனைவியிடம் உத்தரவு கேட்டவன் உதட்டை தடவிக் கொண்டிருந்தான் ஒத்திகைக்கு முன் ஒத்திகை பார்க்க.

தாமதிக்கும் கணவனால் செல்லக் கோபம் கொண்டவள் தன்னருகில் இழுத்துக்கொள்ள இருவரின் உதடுகளும் மெல்ல நெருங்கியது. இன்னும் இடைவெளி இல்லாத உரசல்கள் மட்டுமே பாக்கி இருக்க, இருவரின் விழிகளும் மூடிக்கொண்டது. அடுத்து என்ன முத்தம் தானே என்று அவர்களின் மனம் கேலி செய்ய, புன்னகையோடு ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்கும் நொடியே முற்றுப்புள்ளி வந்துவிட்டது கதவு தட்டும் ஓசையில்.

கனவில் மிதந்து கொண்டிருக்கும் ரகுவரனுக்கு நிகழ்கால கதவு தட்டும் ஓசை கேட்காமல் போனது. “மருமகனே…” என்ற அழகுசுந்தரத்தின் பெரும் ஓசையில் தான் நடப்பிற்கு வந்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த கை காய்ந்து போயிருக்க, ‘எங்கிருக்கிறோம்’ என சுற்று முற்றும் அலசி ஆராய்ந்தான். ரேகாவின் வீடு தான் நிஜம் என்று மூளை உணர்த்த, கதவு தட்டும் ஓசை உடலை எழ வைத்தது. கைகளை கழுவி வந்தவன் அழகுசுந்தரம் என்று எண்ணி கதவை திறக்க, வேறொரு புதிய நபர் நின்றிருந்தார்.

புதிய நபரைக் கண்டவன் யோசனையோடு புருவம் சுருக்க, “ரகுவரன்?” கேட்டார் புதியவர்.

‘ஆமாம்’ என்று தலையசைத்ததும், “ஹலோ ரகுவரன்! ஐ அம் கிருஷ்ணன் பக்கத்து ப்ளாக்ல இருக்கேன்.” தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் ரகுவரன் கேட்கும் முன்னர், “அழகுசுந்தரம் சார் வீட்டுக்கு தான் போனேன் உங்களை தேடி. அவர்தான் நீங்க இங்க இருக்கிறதா அனுப்பி வச்சாரு.” என்றதும் இன்னும் அதிக யோசனை அவனுக்குள்.

“என்ன விஷயம்”

“அது ஒன்னும் இல்ல மிஸ்டர். ரகுவரன்… நீங்க ஏதோ கதை சொல்லிட்டு இருந்தீங்களாமே என் மனைவி கேட்டு இருக்கா. பாதில உங்க மனைவி வந்ததால கேட்க முடியாம வீட்டுக்கு வந்து ஒரே புலம்பல். அதான் என் மனைவி புலம்பல் தாங்க முடியாம மீதி கதைய கேட்கலாம்னு வந்திருக்கேன்.” என்றதும் துள்ளென்ற காட்டுத்தீ ரகுவரன் உடம்பில் பாய்ந்தது.

தாடை நரம்புகள் புடைக்க பார்வையை சுழற்றினான் இவரை அனுப்பி வைத்த அழகுசுந்தரத்தை தேடி. வீட்டு வாசல் முன்பு மறைந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர் வேகமாக தலையை உள் இழுத்துக் கொண்டார். அதைக் கண்டு கொண்ட ரகுவரன் பற்களை கடிக்க,

“இந்த மாசம் கதை கிடைக்கலன்னு ரொம்ப வருத்தத்துல இருந்தோம். நல்ல வேலையா அழகுசுந்தரம் சார் எங்க எல்லாரையும் ஏமாத்தாம உங்களை கொண்டு வந்துட்டாரு.” கோபத்திற்கு நடுவில் முகத்தை புரியாமல் வைத்து “ஙே” என்று முழித்தான்.

“என்ன சார் இப்படி முழிக்கிறீங்க? சட்டுன்னு விஷயத்தை சொன்னீங்கன்னா எல்லார் கிட்டயும் சொல்ல வசதியா இருக்கும்.”

“எல்லார் கிட்டயுமா?”

“ஆமா சார்! வாட்ஸ்அப் குருப்ல அப்டேட் பண்ணி விட்டா எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க” என்றவரிடம் விளக்கம் கேட்டான் ரகுவரன்.

“சார் இந்த அப்பார்ட்மெண்டோட என்ஜாய்மென்ட் அழகுசுந்தரம் சார் தான். அவருக்கு எங்க இருந்து தான் இந்த மாதிரி விஷயம் எல்லாம் கிடைக்கும்னு தெரியாது. மாசத்துக்கு ஒரு குடும்ப கதைய எடுத்துட்டு வந்துருவாரு. இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்க எல்லார்கிட்டயும் அழகுசுந்தரம் சாரோட நம்பர் இருக்கு. அதுல அப்டேட் பண்ணிடுவாரு சிக்குறவங்க கதையை. அதோட முடிவு என்னன்னு தெரியுற வரைக்கும் இங்க என்னை மாதிரி பல ஆண்கள் நாயா பேயா அழகுசுந்தரம்‌ சாரோட வீட்டுக் கதவ தட்டனும்.” எனும் பொழுது நெஞ்சு அடைத்தது ரகுவரனுக்கு.

கேட்டது புரியாததால் குழப்பத்தோடு அழகுசுந்தரத்தின் வரலாற்றை கேட்க, “அவர் பசங்க எல்லாம் பாரின்ல இருக்காங்க சார். அவரும் அவர் மனைவியும் தான் இந்த அபார்ட்மெண்ட்ல இருக்காங்க. பொழுது போகாம அடுத்த வீட்டு கதைய பேசுறேன்னு ஆரம்பிச்சு இப்போ இந்த மொத்த அப்பார்ட்மெண்டையும் அவர மாதிரியே ஆக்கி வைச்சிட்டாரு. போன வாரம் கூட இவர கண்டிச்சி இந்த அப்பார்ட்மெண்ட்ல ஒரு மீட்டிங் நடத்துனாங்க ‌.” என்றிட,

“எதுக்கு சார்” கேட்டான் ரகுவரன்.

“எதுக்கா…? பொறுப்பே இல்லாம இந்த மாசம் பாதி கடந்ததுக்கு அப்புறமும் ஒரு கதைய கூட சொல்லாம இருக்காருன்னு சார்.” என்றதும் மயங்கி சரியாத குறையாக நின்றிருந்தான் ரகுவரன்.

“எங்க வீட்டுக்காரம்மா ராத்திரி எல்லாம் சரியா தூங்குறதே இல்லை சார்.” ‌என்றவரிடம் முகபாவனை காட்டும் அளவிற்கு ரகுவரனின் நிலை இல்லாததால் திக் பிரம்மை பிடித்தவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என் கதைய கூட வாட்ஸ்அப்ல சொன்னாரா?”

“ஆமா சார், என் மனைவி நேத்து புதுக்கதை கிடைச்சிருக்குன்னு எனக்கு ட்ரீட் கொடுத்தா.” என்றதும் வெறிக்கொண்டு அழகுசுந்தரத்தை தேடி போனான்.

அவனை செல்ல விடாத கிருஷ்ணன், “சார் அவர்கிட்ட அப்புறம் பேசிக்கலாம் மீதி கதைய என்னன்னு சொல்லிட்டு போங்க.” தடுத்தார்.

“யோவ்! நீ எல்லாம் பெரிய மனுஷனாயா. அவர்தான் கேனத்தனமா பண்றாருன்னா நீ அதுக்கு மேல இருக்க. உன் வீட்டுக்கார அம்மாக்கு பொழுது போகலன்னா எங்கயாவது மல மேல இருந்து உருள சொல்லு. என் கதை எல்லாம் சொல்ல முடியாது ப்பே…” அடித்து விரட்டாத குறையாக துரத்தி விட்டான்.

தாக்க வருவதற்கு முன் சரணடைந்த அழகுசுந்தரம், “மருமகனே நீ நினைக்கிற மாதிரி நான் மோசமானவன் இல்லை. நீங்க பண்ண அப்படி இப்படி விஷயத்தை எல்லாம் சொல்லாம சுமுகமா நாசுக்கா சொல்லி இருக்கேன்.” என்றிட, பெரியவர் என்றும் பார்க்காது கழுத்தை பிடித்து விட்டான் ரகுவரன்.

“மருமகனே என் பொண்டாட்டிக்கு நான் ஒரே புருஷன்.”

“யோவ்…யோவ்… வாய மூடுயா ஏதாச்சும் சொல்லிட போறேன். நாங்க மட்டும் என்ன எங்க பொண்டாட்டிக்கு பத்து புருஷனையா கட்டி வைச்சிருக்றோம். யார்யா நீ ஆஹான்…யாரு நீ? என் கதைய ஊரு ஃபுல்லா சொல்லி வச்சிருக்க. உன்ன ஒரு பெரிய மனுஷனு மதிச்சு சொன்ன பாரு எம்புத்திய நானே செருப்பால அடிச்சுக்கணும்.”

“மருமகனே வயசுக்கு மரியாதை…” என்று அழகுசுந்தரம் எடுத்ததும் இன்னும் வெறி ஆகியவன்,

“பெரிய மனுஷன் பண்ற காரியத்தையா பண்ணி வச்சிருக்க. எனக்கு வர கோபத்துக்கு தலைகீழ தொங்க போட்டு பொரணியிலயே அடிச்சி கொன்னுடுவேன்.” கொதித்தான் கொடூரமாக.

“இருப்பா இருப்பா கொஞ்ச நேரம் நான் சொல்றதை கேக்கவாது அமைதியா இருப்பா.”

“நீ இதுவரைக்கும் சொல்லி கிழிச்சதெல்லாம் போதும். இந்த ரகுவரன் பத்தி தெரியாம ஆடிட்ட இத்தோட நிறுத்திக்க.”

“கொஞ்ச நேரம் அமைதியா இருப்பா.”

“யோவ்! நீ என்ன காரியம் பண்றன்னு உனக்கு புரியுதா, இல்லையா? எப்படியா சும்மா இருக்க முடியும்.”

“அப்படி என்னப்பா நான் பண்ணிட்டேன்?”

“என் கதைய ஊரு முழுக்க சொல்லி வச்சிருக்கியே உனக்கு யாருய்யா அந்த உரிமைய கொடுத்தது?

“கொஞ்ச நேரம் இருப்பா.”

“பெரிய மனுஷன்னு மதிச்சு பேசிட்டு இருக்கேன். என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.” என ரகுவரன் பேசிக்கொண்டே இருக்க,

“அட! சும்மா இருப்பான்னு சொல்லிட்டு இருக்கேன் பேசிட்டே இருக்க. என்ன…!, நான் பேசமாட்டேங்குற  தைரியமா? போனபோது என் பொண்ணு வாழ்க்கைனு மதிச்சு  அமைதியா போனா ஓவரா குதிக்கிற. இந்த மாதிரி எல்லாம் பண்ண என் பொண்ண விவாகரத்து பண்ண சொல்லிடுவேன்.” என்று கத்த ஆரம்பித்தார்.

அவர் குரல் உயர்த்தியதும் ரகுவரன் பேச்சை நிறுத்திவிட்டு வாயை பிளந்து பார்க்க, கண்டுகொள்ளாதவர் கைபேசியில் என்னவோ செய்து கொண்டிருந்தார். தன் பாவனைகளை மாற்றிக் கொண்டவன் அவர் அருகில் சென்று பார்க்க, பற்கள் கருங்கற்கள் உடைக்கும் மெஷினில் மாட்டியது போல் நரநரத்தது.

அதைக் கூட உணராமல் அழகுசுந்தரம் கைபேசியில், “இதுக்கு மேல கதைய அப்டேட் செய்ய முடியல. ஓல்ட் ஏஞ்சல்ஸ் அனைவரும் மன்னிக்கவும். நாளைக்கு எப்படியாவது மீதி கதைய கேட்டு அனுப்பி வைக்கிறேன். இல்லன்னா நேரம் இருந்தா அன்னைக்கு மாதிரி லைவ்வா கேட்கலாம்.” குறுஞ்செய்தி அனுப்பி கொண்டு இருந்தார்.

சிங்கம் கூட இந்த அளவுக்கு உருமி இருக்காது போல. விடாமல் அழகுசுந்தரத்தின் காதோரம் உஷ்ண மூச்சுகளை விட்டுக் கொண்டே இருந்தவன் பார்வையில், “தனிமரமான ரகுவரன்.” என்ற  புலனம் குழுவின் தலைப்பை பார்த்ததும் அழகுசுந்தரத்தை இருக்கையில் தள்ளி கொலை செய்ய துணிந்தான்.

வயதில் பெரியவர் என்ற எண்ணமெல்லாம் அவனிடமிருந்து காணாமல் போனது. கொடூரமாக அவர் மேல் அமர்ந்தவன் இரக்கம் பார்க்காமல் கழுத்தை நெறித்தான். தன்னால் முடிந்தவரை அழகுசுந்தரம் சத்தம் போட, கோபத்தில் இருந்தவன் அந்த சத்தத்தை நிறுத்தினான் வாயில் தலையணையை அமுக்கி.

எமதர்மன் கண்ணுக்கு தெரிந்தார் அழகுசுந்தரத்திற்கு. தன்னை விட்டுச் சென்ற மனைவி வரும் வரையாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர் அவசரமாக போராட, “யாருடா தனிமரம்? இந்த ரகுவரன் அவ்ளோ வேலைக்கு ஆகாதவன்னு நினைச்சியா. என்ன கண்டா எத்தனை பேர் அலறி ஓடுவாங்கன்னு தெரியுமாடா?

கிழட்டு குரங்கு நீ என்னை கலாய்க்கிற. இன்னையோட உன் கதை முடிஞ்சுது. அது என்னடா கிழட்டு குரங்கு ஊரு கதை’னா உனக்கு அவ்ளோ ருசியா இருக்கா. கண்ணு, காது, மூக்கு எல்லாம் நல்லா இருந்தா தான அடுத்தவன் குடும்பத்தை வச்சி பொழப்பை ஓட்டுவ. இன்னையோட உன் கதை முடிஞ்சுதுடா.” அதன்பின் பேசும் வேலையை செய்யாமல் உயிரை எடுக்கும் வேலையை மட்டும் செய்தான் ரகுவரன்.

அவ்வளவுதான் தன் வாழ்வின் இறுதி நாள் என்று அழகுசுந்தரம் எண்ணும் அளவிற்கு பயத்தை கொடுத்தவன் தன் செயலை மட்டும் நிறுத்தவில்லை. யார் நல்ல நேரமோ வீட்டிற்கு வந்த ரேகா இதை பார்த்து ஓடி வந்தார். ரகுவரன் செய்து கொண்டிருக்கும் செயலை கண்டு அதிர்ந்தவர் தடுக்க முயற்சிக்க, விடுவதாக இல்லை அவன்.

பத்து நிமிட போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக தடுத்துவிட்டார் ரகுவரன் கொலை குற்றவாளி ஆவதிலிருந்து. உயிரைக் காப்பாற்றிய ரேகாவை கூட கண்டுகொள்ளாமல் பலமான மூச்சை இழுத்து விட்டு சொர்க்கத்தில் மிதந்தார் அழகு.

“என்ன ரகு, இவரோட என்ன பிரச்சனை உங்களுக்கு?” கேட்டும் ரகுவரனிடமிருந்து பதில் இல்லை.

அழகுசுந்தரத்திடம் இந்தக் கேள்வியை இடம் மாற்றினார் ரேகா. அவர் எப்போதும் போல கண்டுகொள்ளாத பேச்சில் கையாள, அடிக்கப் பாய்ந்தான் ரகுவரன். இருவரையும் இரு வேறு திசைக்கு நிறுத்த பெரும் பாடுபட்டுவிட்டார் ரேகா.

“ரகு அவர் வயசானவரு கொஞ்சம் பார்த்து பொறுமையா ஹேண்டில் பண்ணுங்க.”

“யாரு அவனா வயசானவன்? அவன் பண்ண வேலை என்னன்னு தெரியுமா உங்களுக்கு?”

“என்ன பண்ணாரு?”

“எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பிரச்சனைன்னு இவர்கிட்ட சொன்னதை இங்க இருக்க எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்காரு.” வெறிக்கொண்ட வேங்கை கர்ஜிக்க, “இதானா!” என்று மேலும் அவனை திகில் அடைய வைத்தார் ரேகா.

“இதானாவா? அப்போ உங்களுக்கு விஷயம் முன்னாடியே தெரியுமா?”

“இவருக்கு இங்க இதான் வேலை ரகு. இவங்க வாட்ஸ்அப்ல மட்டும் இல்ல இன்ஸ்டாகிராம்ல கூட இந்த வேலைய தான் பார்த்துட்டு இருக்காங்க. இவரை விட இவரோட ஃபேன்ஸ்’னு சொல்லிட்டு இங்க இருக்க பொம்பளைங்க பண்ற கூத்த பார்க்கணுமே அப்பப்பா…” தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

“என்ன நடக்குது இங்க?”

“இவர் கூட சேரும்போதே நினைச்சேன் உன் கதைய வச்சுத்தான் இந்த மாச பொழப்ப ஓட்டிட்டு இருக்காருன்னு.”

“என்னத்த நினைச்சீங்க முன்னாடியே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.”

“உங்க கோபத்தை பத்தி தெரிஞ்சா அத்தோட இந்த வேலைய வேற யாருக்கும் பார்க்க மாட்டாருன்னு நம்பி அமைதியா விட்டுட்டேன்.” என்று ரகுவரனிடம் முறைப்பை வாங்கிக் கொண்டார் ரேகா.

இருவரும் அழகுசுந்தரத்தின் பஞ்சாயத்து உருட்டுகளை பேசிக் கொண்டிருக்க, தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. கடுப்பான ரகுவரன் அவரிடமிருந்து கைப்பேசியை‌ பிடிங்கி பார்க்க,

“ஹாய் அழகு! என்ன நீங்களே இப்படி சொல்லலாமா?”

“சீக்கிரம் ரகுவரன் மகிழினி எதுக்காக பிரிஞ்சாங்கன்னு கேட்டு சொல்லுங்க அழகு.”

“ஆமா சார் சீக்கிரம் சொல்லுங்க. அன்னைக்கு பண்ண மாதிரி அடுத்த தடவை ரகுவரன் கிட்ட பேசும் போது ரெக்கார்ட் பண்ணிடுங்க சார்.”

“ரெக்கார்ட் எல்லாம் வேஸ்ட் அழகு பேசாம லைவ் கால் பண்ணிடுங்க.”

“அதுவும் கரெக்டு தான் மேடம். நம்ம எல்லாரும் சேர்ந்து கதை கேட்கலாம்.”

“இவங்க ரெண்டு பசங்க என்ன பண்றாங்க அழகு சார்?”

“பசங்கள விட்டுட்டு அப்பா அம்மா ரெண்டு பேரும் எப்படித்தான் இருக்காங்களோ?”

“இந்த காலத்து பசங்களுக்கு அவ்ளோ தான் பொறுப்பு மேடம்.”

“பொறுப்பா இருந்திருந்தா சண்ட போட்டு எதுக்காக இவ்ளோ தூரம் வரப் போறாங்க மேடம்.”

“கரெக்டா சொன்னீங்க மேடம். எந்த பிரச்சினையா இருந்தாலும் அதை ரெண்டு பேருக்குள்ள முடிக்காம இப்படி அழகு சார் கிட்ட வந்து கெஞ்சுறாங்களே.”

“பாவம் அழகு சார் மட்டும் என்ன பண்ணுவாரு மேடம். இரக்க  குணத்தோட எல்லாரோட பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறார்.”

“இவரோட சேவை மனப்பான்மைய பாராட்டி விழா ஒன்னு நடத்தணும் மேடம்.”

“சூப்பர் ஐடியா மேடம்! இந்த பிரச்சனை முடியட்டும் அழகு சாருக்கு பெருசா விழா ஒன்னு ஏற்பாடு பண்ணிடலாம்.”

“முதல்ல இந்த பிரச்சனை என்னென்ன முழுசா தெரிஞ்சாதான் தூங்க முடியும்.”

“இந்த ரகுவரன் என்ன மேடம்….வந்த கதை போன கதை எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். மெயின் விஷயத்துக்கு வராம.”

“அதான் எனக்கு ஒன்னும் புரியல மேடம். இவன் எப்போ சொல்லி முடிக்கிறது. அழகு சார் எப்போ இவங்களை சேர்த்து வைக்கிறது.” என தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியாமல் திண்டாடிப் போனான் ரகுவரன். அதே திண்டாட்டத்தோடு, “யோவ் யாருய்யா நீங்க எல்லாம்? என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சு பண்றீங்களா புரியாம பண்றீங்களா. இதுக்காகவா வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் எல்லாத்தையும் உருவாக்கி வச்சிருக்காங்க.” நொந்து கொண்டு நியாயம் கேட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்