Loading

      மதியம் கதிரோடு உணவு உண்டுவிட்டு உறங்கிய அழகி உறக்கம் கலைந்து எழுந்தபொழுது வெளியே இருள் கவிந்திருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தவள் அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள். விசாலமான அறை ஆனால் ஆடம்பரமாக இல்லை. அறைக்கு அழகு சேர்க்க சுவற்றில் பெரிய சித்திரம் ஒன்று மட்டுமே மாற்றப் பட்டிருந்தது. அழகியின் விழிகள் அச்சித்திரத்திலேயே நிலைத்து விட்டன. வெண்ணை உண்ட கண்ணனை அதட்டும் யசோதையை காண்கையில் அவள் உள்ளம் நெகிழ்ந்தது. அவ்விடத்தில் தன்னையும் அதிரனையும் பொருத்தி பார்த்து நகைத்துக் கொண்டாள். 

 

      அதிரன் என்ன செய்கிறானோ என்று தோன்றவே மெல்ல கட்டிலை விட்டு அவள் எழவும் அவளை தேடிக்கொண்டு அதிரன் அங்கு வரவும் சரியாக இருக்கவே, அழகி மென்னகையோடு கைகள் விரித்து அவனை அழைக்க, அதிரனும் ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டான்.

 

   “அம்மா! இப்போ எப்படி இருக்க? ஃபீவர் சரியாகிடுச்சா?”

 

    “ஒன்னும் இல்லை தங்கம். நான் நல்லாருக்கேன். காய்ச்சல் இப்ப சுத்தமா இல்லை. நீயே தொட்டு பாரேன்.”

 

    அதிரனும் அவளது கழுத்தில் கை வைத்து பார்த்துவிட்டு புன்னகைத்தான்.

 

    “ஆமா இல்லை. அழகி இனிமே உடம்பு சரியில்லைனா என்கிட்ட சொல்லு. நான் உன்னை பத்திரமா பார்த்துக்குறேன். அதைவிட்டுட்டு எதுவுமே சொல்லாம எழுப்ப எழுப்ப தூங்காத சரியா? காலைல ரொம்ப பயமாயிருந்துச்சு தெரியுமா?!” என்றவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

 

    “சாரி செல்லம். இனிமே அப்படி பண்ண மாட்டேன். உடம்பு சரியில்லைனா இனிமே உன்கிட்ட சொல்றேன். நீ என்னை பார்த்துக்கோ.” என்றவளை கண்டு புன்னகைத்த அதிரன் அவளது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

   “என்ன வேணும் அதி குட்டிக்கு? ஏன் அப்படி பார்க்குறீங்க?” 

 

   “அழகி! நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன். நீ கோவப்படக் கூடாது சரியா?”

 

  “அப்படியா!” என்று சிரித்தவள், “சரி கோவப்படல. கேளுங்க.” என்றாள்.

 

   “ஹீரோவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா? இல்லைனா நாம ஹீரோ கூட இங்கயே இருக்கலாமா?”, என்று அதிரன் கேட்பான் என்று எதிர்பாராத அழகி திடுக்கிட்டாள். 

 

     அவள் உள்ளத்தில் பலநூறு எண்ணங்கள் புயலாக வீசி அவளை அலைக்கழிக்க, அவனுக்கு பதில் சொல்ல முடியாது திணறினாள். அவளுக்கு அவன்முன் அழுது விடுவோமோ என்றிருந்தது. அழகியின் முகம் நொடிக்கு நொடி பலவித உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

 

    அவளிடமிருந்து பதில் வராததால் அவள் கோபித்துக் கொண்டாளோ என்று எண்ணம் கொண்ட அதிரன் அவளின் கையை இறுக்க பிடித்துக்கொண்டு,

 

  “அழகி! கோவப்படாத. இன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா. ஹீரோ வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு பயம் போச்சு. ஹீரோ கூட இருந்தா ஹேப்பியா இருக்கு. எனக்கு தெரியும் ஹீரோ உன்னை லவ் பண்றாரு தானே. அவரை நீ கல்யாணம் பண்ணிக்கோ அழகி. நீயும் ஹீரோவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஹீரோ வேற வீட்ல இருக்க மாட்டாருல்ல. நாம எல்லாரும் ஒன்னா ஜாலியா இருப்போம்ல. ப்ளீஸ் அழகி.” என்று கூறி அழகியை அதிர வைத்து மேலும் திணற வைத்தான்.

 

    அனிச்சையாக அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதிரனுக்கு கதிரவனை பிடிக்கும் தான் ஆனால் அவன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை. அதிரனின் மனம் என்னவென்று தெரிந்த பிறகு தான் அவள் மனம் அதிகம் தடுமாறியது. அவளுக்கு அவனிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்ன முடிவெடுப்பதென்றும் புரியவில்லை. திடீரென்று தான் மட்டும் இவ்வுலகில் தனித்து விடப்பட்டது போன்றதொரு மாயை.

 

    “அழாத அழகி! நான் இனிமே கேட்க மாட்டேன். நீ அழுதா எனக்கும் அழுக வருது.” என்று அதிரன் அவளது கண்ணீரை துடைத்தப்பொழுது தான் அவன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதையே உணர்ந்தாள்.

 

   சட்டென்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, “நான் அழல அதி! நீ கவி பாப்பாக்கூட போய் விளையாடு. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. நான் தூங்கறேன் ஓகே வா.” என்றாள்.

 

   அவளது முகத்தையே பார்த்தவன், “என் மேல கோவமா அழகி?” என்றான் உதட்டை பிதுக்கிக் கொண்டு, “ச்ச ச்ச இல்லை டா. உன் மேல எனக்கு எப்படி கோவம் வரும்.” என்று அவனை அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள்.

 

    பின் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அவனது கன்னங்கள் பற்றி, “உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லை. நீ கேட்டதுக்கு இப்ப என்கிட்ட பதில் இல்லை. சீக்கிரமே நீ கேட்டதுக்கு பதில் சொல்றேன். ஓகே வா.” என்றவள் கேட்க, 

    

   மெலிதாக புன்னகைத்து வேக வேகமாக தலையை ஆட்டிய அதிரன் அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “சரி அழகி! நீ தூங்கு. நான் சாப்பிடும் போது வந்து எழுப்பறேன்.” என்றுவிட்டு அவன் அறையிலிருந்து வெளியேற திரும்ப, வாயிலில் கதிர் கைக்கட்டி கொண்டு நிற்பதைக் கண்டான்.

   

     அழகியும் அப்பொழுதுதான் அவன் நிற்பதைக் கவனித்தாள். கதிரை காண முடியாது சங்கடத்தில் அவள் தலைக் குனிந்துக் கொள்ள, அதிரனோ இயல்பான புன்னகையோடு கதிரை கடந்துச் சென்றான்.

 

     அதிரன் சென்றதும் அவ்வறையில் கணத்த மௌனம் நிலவியது. கதிர் உள்ளே வராது அங்கு நின்று கொண்டே அழகியை பார்த்திருக்க, அவளோ அவனை பார்க்க முடியாது தவித்து, தலைக் குனிந்தே அமர்ந்திருந்தாள்.

 

   “அதிரன் அவன் விருப்பத்தை சொல்லிட்டான். நீ எப்போ அழகி சொல்லப் போற?” என்று அழுத்தமாக கேட்ட அவனின் குரலில் நிமிர்ந்த அவள் நொடியில் தலைத்தாழ்த்திக் கொண்டாள்.

 

    அவளின் கண்ணீர் அணை உடைத்து வெளியேறத் துவங்கியது. அவன் உள்ளே வந்து அவளருகில் அமர்வதை உணர்ந்தாலும் அப்படியே அமர்ந்திருந்தாள். 

 

    அவன் அவளது தாடை பிடித்து தன்புறம் திருப்ப, அவள் அப்பொழுதும் அவனை பாராது இருக்க, இரு கன்னங்களையும் கைகளில் ஏந்தி அவளது முகம் நிமிர்த்தி அவளை தன்னைப் பார்க்க வைத்தான். அவனது முகத்தை இரு நொடிகள் பார்த்தவள் அவனை அணைத்துக் கொண்டு சத்தமிட்டு அழத் தொடங்கினாள். முதலில் அவளது கண்ணீரில் பதறியவன் பின் அவள் அழட்டுமென்று ஆறுதலாக அவளது தலையை வருடத் தொடங்கினான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்