Loading

கை கால்களில் ஏற்பட்ட சிராய்ப்புடன், நகர்ந்து அவன் இடித்த மரத்தின் மீதே சாய்ந்து, பின்னந்தலையை ‘நங் நங்’கென்று முட்டினான் ஆரவ்.

‘ஏன் டி? ஏன்டி என் முன்னாடி இப்படி வந்து நிக்கிற. ஏதாவது ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணி நல்லா இருந்துருக்கலாம்லடி. அட்லீஸ்ட் நீயாவது நல்லாருந்துருக்கலாம்ல கண்ணம்மா. நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணிருக்கலாம்ல. உன்மேல அப்போ இருந்த ஃபீல் துளி கூட மாறல கண்ணம்மா. ஆனா, இப்போ இப்போ… என்னை ஏண்டி கில்டியா ஃபீல் பண்ண வைக்கிற.’ என ரோட்டில் அமர்ந்து கத்தியவன் இன்னும் முட்டுவதை நிறுத்தவில்லை.

“இவன் எங்க போனான்னு தெரியலையே…” என புலம்பியபடி காரை ஓட்டிய கவினை தட்டிய லயா தான், “கவி கவி. கார நிறுத்து டா அங்க பாரு அவன…” என எதிரில் ரத்தக்களரியுடன் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்தவனைக் காட்ட ஒன்றுமே ஓடவில்லை இருவருக்கும்.

அவசரமாக இருவரும் அவனருகில் சென்று, ஆளுக்கொரு பக்கம் அவனைப் பிடிக்க, அவனோ இன்னும் சுயநினைவிற்கு வராமல் கத்தி தீர்த்தான்.

“டேய். என்னடா ஆச்சு உனக்கு. முதல்ல முட்டுறதை நிறுத்து” என்ற லயா, அவனின் பின்னந்தலையை மரத்தில் மோதாமல் கையை வைத்துப் பிடிக்க, கவின் அவசரமாக அவனின் கரங்களில் ஏற்பட்ட சிராய்ப்பை கர்சீப் கொண்டுப் பற்றி, தன்னிச்சையாய் அவனின் நிலை கண்டு கலங்கிய விழிகளுடன்,

“மச்சான் என்னடா ஆச்சு? ஏண்டா இப்படி இருக்க?” என அவனை உலுக்கினான்.

அவனைக் கண்டதும், அழுத்தம் தாளாமல் கவின் மீதே சாய்ந்து, “மச்சான். நான் அவளை விட்டுருக்க கூடாதுல மச்சான். எனக்கு குடும்பம் இல்லைன்னு சொல்லிருந்தாலும், அவங்க அளவு வசதி இல்லைன்னு சொல்லிருந்தாலும், ஏன் என்னை பொம்பள பொறுக்கின்னு சொல்லிருந்தாலும் அவளை விட்டுருக்க கூடாதுல. என்னால தான மச்சான் அவள் வாழ்க்கையே மாறிடுச்சு. என் வாழ்க்கை தான் சாபக்கேடு. என் கண்ணம்மா என்ன பண்ணுனா? அவளுக்கு ஏன் இந்த வலி…?” என இன்னும் இன்னும் அவளின் வலிதனை எண்ணி துடித்தான்.

அவளை அலுவலகத்தில் கண்டபோது, அவனுக்கு சுருக்கென வலித்தது. தன்னை முதன் முதலில் பார்க்கையில், எப்படி எல்லாம் அவள் முன் நிற்கவேண்டும் என கனவு கண்டிருந்தானே. ‘இப்படி ஒரு நிலையில் நான் இருக்கையில் ஏண்டி என் முன்னாடி வந்து நிக்கிற…’ என்று தான் அவளை அலுவலகத்தில் பார்த்த போது தன்னை நொந்தான்.

அதன் பிறகு, அவளுக்கு விவாகரத்து ஆனதை கேள்விப்பட்டதும் உயிரணுக்கள் மொத்தமும் வலித்தது. கவின் அவளை உதாசீனப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாமல் தான், அப்போதும் அவளுக்கு அரணாக இருந்தான். அவளுக்கு குழந்தை என்றால் பிடிக்கும் என்று அறிந்தே, இஷாந்தையும் அவளிடம் கொடுத்தான். வெகுவாய் காயப்பட்டிருப்பாள் என்று தெரியும் தான். ஆனால் இந்த அளவு அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவே அவனை உயிருடன் கொன்றது.

இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவன் யாரை கண்ணம்மாவென்று அழைக்கிறான் என்றும் புரியவில்லை. மிருணாவை நினைத்து வருந்துகிறானோ என்று தான் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

லயா “யாருடா அந்த கண்ணம்மா. உன்னை யாரு அப்படி எல்லாம் சொன்னது? என்ன ஆச்சுன்னு சொல்லு ஆரவ்?” எனத் தவிப்பாக கேட்க, அவனும் மன பாரத்தை கொட்டி இருந்தான்.

லயா மிருணாவை எண்ணி அருவருத்தும், வான்மதியின் மேல் அவன் கொண்டிருந்த நேசம் கண்டு வியந்தும், இறுதியில் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பம் அறிந்து வருத்தமும் எழ, கவினோ வெகுவாய் அதிர்ந்து விட்டான்.

ஒன்றுமே யோசிக்க தோன்றவில்லை அவனுக்கு. ஏனோ மனம் மரத்துப் போனதொரு உணர்வு.

உறைந்த நிலையில் இருந்தவனையும் உலுக்கி, ஆரவையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் லயாவிற்கு தான் பெரும்பாடாக இருந்தது.

“ஏன் முகில்… ஏன் முகில்… உங்களுக்கு இப்படி ஆகணும். நீங்களாச்சு ஹேப்பியா இருந்து இருக்கலாம்ல. உங்களை மாதிரி ஒரு ஹஸ்பண்ட் எவளுக்கு கிடைப்பா.

ஆனா, நான் இப்படி ஒரு நிலமைல இருக்கும் போதா எனக்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்பீங்க. என்மேல இவ்ளோ அக்கறையா இருப்பீங்க… குற்ற உணர்ச்சியா இருக்கு முகில்.

அன்னைக்கே அப்பாகிட்ட சண்டை போட்டு உங்களை கல்யாணம் பண்ணிருந்தா, நீங்க இவ்ளோ காயப்பட்டு இருக்க மாட்டீங்கள்ல” என அழுது கரைந்தவள், அவனின் வலிகள் நினைவு வரும் போதெல்லாம் நீருக்குள் மூச்சை இழுத்துப் பிடித்தாள். அப்படியே மூச்சும் நின்று விடாதா என்றே நெஞ்சம் புழுவாகத் துடித்தது.

முதல் பார்வையிலேயே அவனை வீழ்த்தவேண்டும் என்ற அவளின் ஒரு நாள் கனவு, அவனை அலுவலகத்தில் காணும் போது நினைவு வந்து வாட்டியது.

அவளுக்கு மற்றவர்களின் முகம் எதுவும் அந்த அளவு நினைவில் இல்லை. அது அவனின் அலுவலகம் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், அவன் முன் ஜென்மத்திற்கும் சென்றிருக்க மாட்டாள்.

அதிலும் கையில் குழந்தையுடன் இருந்தவனைக் கண்டு அவளுக்கு வலி தோன்றவில்லை. மாறாக கண்கள் மின்னியது. ‘நம்ம வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சு ஆனா, இவரு பேபி, பேமிலினு செட்டில் ஆகிட்டாரு போல’ என மகிழவே செய்தாள்.

அவனைப் பிடிக்கும் என்றதால் தான், அவனின் குழந்தையையும் ஆர்வத்துடன் பார்த்தாள். என்ன இருந்தாலும் அவளுக்கு பிடித்தவனின் குழந்தையாகிற்றே. அதனாலேயே இஷாந்தை கையில் அள்ளி கொஞ்ச வேண்டும் போல இருந்தது.

அதன் பிறகு, அவனின் விவாகரத்து பற்றி அறிந்ததும் அவளுக்கு கடும் வருத்தம் தான். குடும்பமும் இல்லையே தனியாக குழந்தையை எப்படி வளர்க்கிறான் என்ற பரிதவிப்பு தோன்றவே தான், அவன் கேட்காமலேயே குழந்தையைப் பார்த்துக் கொண்டாள்.

ஆனாலும் அவன் திருமணம் பற்றி கேட்பான் என எதிர்பார்க்கவில்லை. அதிலும், வாழ்க்கை தன்னை அடித்து கீழே தள்ளி மிதித்து, வெறும் நடைபிணமாக வாழும் போது, இப்படி கேட்பான் என அவள் கனவிலும் எண்ணவில்லை.

கோபத்தை விட அழுகை மட்டுமே வந்தது பெண்ணவளுக்கு. ஆனாலும் நிச்சயம் அவனுடன் தன்னால் வாழ இயலாது என்று அவனுக்கு உணர்த்தியபிறகே, நிலையில்லா உறவு தான், ஆனாலும் என் முகிலின் அருகாமையில் சில நாட்களை கடத்த வேண்டும் என்றெண்ணி அவனை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள்.

ஆரவிற்கு மருத்துவமனையில் காயம் பட்ட இடத்தில் கட்டிட்டு கொண்டிருக்க, அவன் எதற்கும் எவ்வித உணர்வையும் காட்டவில்லை.

அவனையே பார்த்திருந்த கவினுக்கு தான், அதற்கு மேலும் அங்கு நிற்க இயலாமல் வெளியில் வந்து சேரில் அமர்ந்தான், கையை நெற்றிக்கு கொடுத்து.

அவன் பின் வந்த லயா, அவனுக்கு அருகில் அமர்ந்து “என்னடா ஆச்சு?” என வினவ, அவனோ கண்ணைத் திறவாமல்,

“இவ்ளோ நாள் அவனுக்கு எல்லாமா நான் இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தேன் லயா. ஆனா, இப்போ தான் தெரியுது. அவனோட உணர்வுகளை கூட புருஞ்சுக்காத ஒர்ஸ்ட் பிரெண்ட் ஆ இருந்துருக்கேன்னு.

பல தடவை சொன்னான். மிருணா மேல எனக்கு எந்த பீலிங்ஸ்ஸும் வரலைன்னு. அவனை நிறைய தடவை புரிய வைக்க ட்ரை பண்ணான். ஆனா நான் புருஞ்சுக்கவே இல்ல. சில நேரம் அவனை வார்த்தையால காயப்படுத்தி இருக்கேன். ஏன், அவன் மதியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னப்போ கூட.

அதுவும் அவன் முன்னாடியே மதியை ஹர்ட் பண்ணப்போ அவனுக்கு எவ்ளோ வலிச்சுருக்கும்ல. அப்போ கூட, அவளுக்கு சப்போர்ட் பண்ணானே தவிர, என்னை எதுவுமே சொல்லல லயா. ஐ ஆம் ஜஸ்ட் வொர்ஸ்ட் ப்ரெண்ட்டி.” என்றவனுக்கு கண்ணீர் கன்னங்களை நனைத்தது.

அவளுக்குமே கண்ணீர் முட்டினாலும், அடுத்து என்ன என்று சிந்தித்தவள், “இது ரொம்ப சென்சிட்டிவ் டா. அவள் ஓடிப்போவான்னு நமக்கு என்ன முன்னாடியே தெரியுமா. இதுல நீ என்ன பண்ண முடியும் விடு கவி.” என அவனின் தோளை அழுத்தி ஆறுதல் அளிக்க,

“அவன் முட்டாள் லயா. அவனை அவ்ளோ லவ் பண்ண நீ இருக்கும் போது, அவனும் உன்ன லவ் பண்ணிருக்கலாம்ல. கல்யாணம் பண்ணிருக்கலாம்ல. அவன் லைஃப்ல இந்த சிக்கல் எதுவுமே இல்லாம நல்லா இருந்துருப்பான்ல. ஏன் லயா, அவன் லைஃபை இப்படி காம்ப்ளிகேட் பண்ணிக்கிட்டான்.” என உதட்டை அழுத்தி கண்ணீரை அடக்கிட, அவள் தான் சில கணம் உறைந்தாள்.

கல்லூரிக்கு சேர்ந்த புதிதில், ஆரவை விரட்டி விரட்டி காதலித்தாள் தான். ஆனால், அவன் மனதில் அவள் இல்லை என்று தெரிந்ததுமே, அவ்வுணர்வை அழித்துக் கொண்டாள்.

ஆனாலும், தன் அத்தை மகன்களிடம் விளையாட்டாக பேசுவது போல அவனிடம் வம்பிழுக்க மிகவும் பிடிக்கும் அவளுக்கு. அதனாலேயே எப்போதும் அவனிடம் காதல், கல்யாணம் என பேசி அவனின் முறைப்பையும் திட்டையும் வாங்கி கொள்வாள்.

கவினுக்கு ஆரம்பித்தில் இருந்தே இவள் மீது காதல் மட்டும் தான். ஆரவை அவள் விரும்புவது தெரிந்ததும் அக்காதலை மனதினுள் புதைத்தவன், ஆரவிற்கு திருமணம் ஆன பிறகே, மனதை திறந்து அவளிடம் காதலை உரைத்தான்.

ஆனால், அவள் மறுத்து விட்டாள். அவன் மீது நட்பை தாண்டி வேறு எதையும் அவள் யோசித்தது இல்லை. இப்போதோ, கவினின் கூற்றில் அவளுக்கு சற்றே இதயம் ஆட்டம் கண்டது.

‘என்ன தான் நண்பன் என்றாலும், தான் காதலிக்கும் பெண்ணை விட்டுக்கொடுக்க எப்படி இயலும்?’ எனத் திகைத்தவள், அமைதியாக இருக்க, அவள் ஆரவை எண்ணி தான் வருத்தமாக இருக்கிறாள் என்றெண்ணியவன், மறுபேச்சின்றி ஆரவின் அறைக்கு சென்றான்.

இருட்டியபிறகே, குளியலறை விட்டு வெளியில் வந்த வான்மதி, இன்னும் இஷாந்தை அழைத்துக் கொண்டு ஆரவ் வராததை எண்ணி சற்றே கலவரமானாள்.

உடனே அவனுக்கு அழைக்க, அதுவோ கீழே விழுந்த அதிர்வில் அணைந்திருந்தது.

தற்போது தான், முயன்று தன்னிலைக்கு வந்த ஆரவ், கவினைக் கண்டதும் அவசரமாக “உன் போன குடு” என்றான்.

அவனும் “ஏன் டா?” என கேட்கும் போதே, “மதி இவளோ நேரம் வரலைன்னு பயந்து போயிருப்பா. இஷுவை தன்விக்கிட்ட சொல்லி, வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவகிட்ட குடுக்க சொல்லு. இப்போ என்னை பார்த்தா வருத்தப்படுவா. நான் மார்னிங் வீட்டுக்கு போறேன்” என்றவன், வான்மதிக்கு அழைக்க, அவள் புது எண்ணில் இருந்து வந்ததில் ஒரு வித பதற்றத்துடன் தான் அழைப்பை ஏற்றாள்.

ஆனால், அவன் பேசுவதற்காக குரலை கணைத்ததுமே, “ஆரவ்? எங்க போனீங்க? உங்கள காணோம்ன்னு நான் பயந்தே போய்ட்டேன்.” என அவள் படபடவென பேச, பேசும் முன்னே தன்னை கண்டுகொண்டவளை எண்ணி மெலிதாய் முறுவலித்தவன், “என்னை காணோம்ன்னு போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்து இருக்கலாம்ல மதி…” என அவளை வார,

“இப்போ நீங்க போன் பண்ணாம இருந்திருந்தா அதை தான் செஞ்சுருப்பேன்.” என்றாள் முறுக்கிக் கொண்டு.

அதில் அவன் இதழ்கள் இன்னும் விரிய, “எப்போ வருவீங்க ஆரவ்? இஷு பேபி என்ன பண்றான்…? வீட்டுக்கு வாங்க ஆரவ்.” என தவிப்புடன் கூறியதில், இத்தனை நேரம் பேசியதை மறந்து, “10 மினிட்ஸ்ல வந்துடுறேன் கண்ணம்மா.” என்றான் மென்மையாக.

அவள் சற்று அமைதியாகி, “ஆ ஆரவ்… ப்ளீஸ்…! என்னை அப்படி கூப்பிடாதீங்க.” என்னும் போதே, குரல் உடைந்திருக்க, அவன் பதில் பேசாமல் போனை வைத்து விட்டான்.

கவினுக்கு தான் அங்கு நிற்கவே மூச்சு முட்டியது. ஏனோ ஆரவைக் காண இயலாமல், முகத்தை மறு புறம் திருப்பியவன், “வீட்டுக்கு போலாம்டா.” என்றிட, அவனும் சட்டையின் கைப்பகுதியையும், பேண்டின் கால் பகுதியையும் கொண்டு காயத்தை மறைத்து விட்டு, முன் நெற்றி முடி கொண்டு நெற்றியில் ஏற்பட்ட காயத்தையும் லேசாக மறைத்தான்.

“மதிகிட்ட எதுவும் சொல்ல வேணாம்” என உத்தரவிட்டவன், அலுவலகம் சென்று இஷாந்தை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு செல்ல, அவனைக் கண்டதுமே நெற்றியில் ஏற்பட்ட காயத்தை எண்ணி பதறியவள், “என்ன ஆச்சு ஆரவ். என்ன காயம்?” எனக் கேட்டாள்.

“அது… வண்டில இருந்து ஸ்கிட் ஆகிட்டேன் மதி.” என்றவன், “இஷு இன்னைக்கு நல்ல பையனா தூங்கிட்டே இருக்கான்.” என சமாளித்தபடி அவனறைக்கு சென்று அவனை தொட்டிலில் கிடத்தி அழுத்தமாய் ஒரு முத்தமும் வைக்க, ஆரவின் காயம் கண்டு நிலை கொள்ளாமல் அவளும் அவனறைக்கு சென்றாள்.

“உங்ககிட்ட தான் வண்டியே இல்லையே. அப்பறம் எப்படி விழுந்தீங்க?” என சரியாக கேள்வி கேட்க, அதில் ஒரு கண்ணை மூடி திறந்தவன், “கவி பைக்கை எடுத்துட்டு போனேன். அது சடனா பிரேக் பிடிக்கல.” என பொய்யுரைத்தவன், “உனக்கு பெயின் பரவாயில்லையா மதி.” எனக் கேட்டான்.

அவள் அதற்கு பதில் கூறாமல், “வண்டி எடுக்கும் போது பிரேக் சரியா இருக்கான்னு பார்க்க மாட்டீங்களா? வண்டி வைச்சுருக்குறவரு அதை கூட பார்க்க மாட்டாரா?” என கவினை திட்டியவள், “வேற எங்கயும் அடி பட்டுச்சா?” எனக் கேட்க,

“இல்லடி. லைட்டா நெத்தியில இடிச்சுருச்சு அவ்ளோ தான். செம்ம டயர்ட், தூக்கம் வருது மதி.” என அவளை அனுப்பி விட வராத தூக்கத்தை வரவழைத்தான்.

‘அப்படியே என்னை அனுப்பிட்டு தூங்குற மாதிரி தான். பீரும் கையுமா தான் உட்காந்துருக்க போறீங்க’ என முணுமுணுத்து விட்டு நகர போக, நீரில் மணிக்கணக்கில் அமிழ்ந்ததில் ‘ஹட்ச்’ என தும்மினாள்.

சரமாரியாக பல முறை தும்மியவளை புருவம் சுருக்கி பார்த்தவன், “என்ன ஆச்சு?” எனக் கேட்க,

“அது… அது… ஜலதோஷம் பிடிச்சுருச்சு.” என்றவள் மெல்ல அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவனோ “ஈவினிங் வரை நல்லா தான இருந்த. எப்படி திடீர்னு இவ்ளோ ஜலதோஷம்.” எனக் கேட்டவன், அவள் நெற்றியில் கை வைத்தான்.

“லேசா ஜுரம் அடிக்கற மாதிரி இருக்கு.” என்றவன், “ஏய்… என்னடி முடி இவ்ளோ ஈரமா இருக்கு.” என தலையில் கை வைக்க, அவள் தான் அவனை தட்டியும் விட முடியாமல், பதிலும் கூற முடியாமல் தவித்தாள்.

“இல்ல. தலைக்கு குளிச்சேன். அதான்…”

“பைத்தியமா நீ. நைட்டு நேரத்துல எதுக்குடி குளிச்ச?” என அதட்டியவன் அவனின் துவாலையை எடுத்து, அவளுக்கு துவட்டி விட அருகில் வர, “நான் ரூம்ல போய் துவட்டிக்கிறேன்.” என்றாள் பின்னால் நகர்ந்து.

அதில் சற்று இறுகியவன், “ம்ம். ஈரத்தோட தூங்கிடாத.” அவளைப் பாராமல் கூறி விட்டு, கையில் எடுத்த துவாலையை ஏக்கத்துடன் கட்டிலில் விளாசி விட்டு, குளியலறைக்குள் புகுந்து விட, அவளுக்குத் தான், அவனின் முக மாற்றம் கண்டு உள்ளுக்குள் குத்தியது.

ஆனாலும் அவளால் என்ன செய்திட முடியும்… என தன்னை நொந்து அறைக்கு சென்றவளுக்கு, ஏனோ உறக்கமும் வரவில்லை. அவனின் வாடிய முகம் மட்டுமே கண்ணில் நிற்க, மனம் கேளாமல் அவன் அறைக்கு சென்று பார்த்தாள்.

அங்கு இஷாந்த் மட்டுமே உறங்கி கொண்டிருக்க, ஆரவைக் காணவில்லை.

எப்போதும் போல, பால்கனியில் அமர்ந்து மதுவின் பிடியில் எங்கோ வெறித்திருந்தான்.

அவனைக் கண்டதும் இன்னும் மனம் பாரமாக, “ஆரவ்… போதும் குடிச்சது. போய் தூங்குங்க” எனக் கட்டளையாக கூற, அப்போது தான் வான்மதியை நிமிர்ந்து பார்த்தவன், “ஐ நீட் திஸ் கண்ணம்மா. ப்ளீஸ்.” என்றான் கெஞ்சலாக.

“குடிச்சா எல்லாம் சரி ஆகிடுமா?” ஆதங்கத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு, “ம்ம். சரியாகிடும்.” என்றான் வேகமாக.

அவளோ முறைத்து, “எதுவும் சரியாகாது. போதை தெளிஞ்சா அதே காயம் அதே விரக்தி அதே வலி அப்படியே தான் இருக்கும்.” எனக் கோபமாக பார்க்க, அவன் சிறிதாய் புன்னகைத்து விட்டு, “அட்லீஸ்ட் போதை தெளியிற வரை எல்லாத்தையும் மறக்கலாம்ல.” என்றான் தலையை சரித்து.

“இப்போ எதை மறக்க நீங்க குடிக்கிறீங்க. மிருணாவையா?” எனக் கேட்டவள் அவளை எண்ணி தான் தவிக்கிறான் என்றே நினைத்தாள்.

“என்னை பொறுத்தவரை அப்படி ஒரு ஜீவன் என் வாழ்க்கைக்குள்ள வரவே இல்ல. அப்படி இருக்கும் போது, அவளை நான் ஏன் மறக்க குடிக்கணும்?” என தோளைக் குலுக்கினான்.

அதில் அவள் குழம்பி, “அப்போ ஏன் இப்படி குடிக்கிறீங்க ஆரவ்?” எனக் கேட்டாள்.

அவனோ அவளை ஒரு நொடி அழுத்தமாக பார்த்து, “சொன்னா என்னை கேவலமா நினைப்ப கண்ணம்மா. டைம் குடு. நானே ஸ்டாப் பண்ணிடுறேன்.” என்றான் அவளை பாராமல் தவிர்த்து.

“நான் அப்படிலாம் நினைக்க மாட்டேன். சொல்லுங்க.” என அவள் பிடிவாதம் பிடிக்க, “ப்ளீஸ்டி. போய் தூங்கு. யூ காண்ட் அண்டர்ஸ்டேண்ட்.” என்றான் அவனும் பிடிவாதமாக.

“நான் புருஞ்சுக்குவேன் ஆரவ். மிருணாவை பத்தியும், அவள் கூட இருந்த லைஃப் பத்தியும் நான் புருஞ்சுக்கிட்டேன்ல” அவள் முறைப்புடன் கேட்க, “அது வேற கண்ணம்மா. இது வேற. உனக்கு புரியாது. நல்ல பொண்ணா ரூம்க்கு போய் தூங்கு.” என்றான் பொறுமையாக.

அவன் சொல்லாமல் விட்டிருந்தால் கூட, அவளுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. ஆனால், தனக்கு அவனை புரியாது என்றது தான் அவளுக்கு கோபமாக வந்தது.

“உங்களை புரிஞ்சுக்க மாட்டேன்னு நீங்க எப்படி சொல்லலாம். அப்போ நீங்களும் என்னை புருஞ்சுக்கல தான.” என குரல் கமற அவள் கேட்டு வைக்க,

அதில் பெருமூச்சு விட்டவன், “ஐ நீட் செக்ஸ்.” என்று கூறி விட, அவள் தான் ஒரு கணம் மூச்சடக்கி திகைத்து நின்று விட்டாள்.

அவளின் பாவனை கண்டு அவனுக்கு புன்னகை தோன்றினாலும், ஒரு வித வலியும் தோன்ற, “நான் தான் சொன்னேன்ல. நீ என்னை கேவலமா நினைப்பன்னு.” என்றவன், மீண்டும் அவளை கிளப்ப, அவளோ தலையை தாழ்த்தியபடி,

“நான் தான் ஏற்கனவே சொன்னேனே. நீங்க வேற ரிலேஷன்ஷிப் வச்சுக்கோங்கன்னு. எனக்கு ப்ராப்ளம் இல்ல.” என்றாள் திக்கி திணறி.

அவனோ, பீர் பாட்டிலை தூக்கி சுவற்றில் எறிந்து, அவளைப் பார்வையால் சுட்டபடி, “வெறும் செக்ஸ் மட்டும் தான் வேணும்ன்னா, நான் ஏன் இப்படி குடிச்சுட்டு இருக்க போறேன். இந்நேரம் டெய்லி ஒருத்தி கூட போக தெரியாதா எனக்கு. இல்ல பொண்ணுங்க தான் இல்லையா?” எனக் கர்ஜிக்க, அவளோ அவன் கத்தலில் இன்னும் மிரண்டு நின்றிருந்தாள்.

தேன் தூவும்…!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
62
+1
200
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!