Loading

சில வருடங்களுக்கு பிறகு…

கடற்கரையின் மறுகோடியின் அடியிலிருந்து மெல்ல மெல்ல கதிரவன் உதயமாகும் அதிகாலை வேளை. பச்சை நிற ஷிஃபான் புடவை மேனியைத் தழுவ, கூந்தலில் முடிந்திருந்த துவாலையையும் மீறி நீர் சொட்டிக்கொண்டிருந்தது மஞ்சுளாவிற்கு.

அதனைப் பொருட்படுத்தாமல், புள்ளிகளை இணைத்து சிரத்தையாக கோலமிட்டுக்கொண்டிருந்தவளின் பின்புறம் நின்றிருந்தார் திலகா.

“ஏன்மா மஞ்சு. உனக்கு எத்தனை முறை சொல்றது, தலையை துவட்டிட்டு கோலம் போடுன்னு.” மருமகளை வாஞ்சையுடன் அவர் அதட்ட, திரும்பி மெதுவாக முறுவலித்தவள், “கோலம் போட்டு முடிக்கிறதுக்குள்ள அதுவே காஞ்சுடும் அத்த.” என்று விட்டு, மீண்டும் கோலத்தில் புதைந்தாள்.

திலகாவோ, “இன்னைக்கு உன் தம்பி வர்றான்னு சொன்ன? எப்போ வர்றான்?” என விசாரிக்க,

“மதியம் ஆகும்ன்னு சொன்னான் அத்தை. இங்க ஒரு கான்ஃபரன்ஸ்க்காக வர்றானாம். ரெண்டு வாரம் இங்க தான் தங்க போறதா சொன்னான்.” அவளும் மென்மையாக பதிலளித்தாள்.

பெருமூச்சு விட்ட திலகா, “ஹ்ம்ம். நீயாவது உன் தம்பிக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்ல கூடாது. எல்லாம் காலா காலத்துல நடக்கணும்.” என்றதில், “நானும் சொல்லிட்டேன் அத்தை. அவனுக்கு தெரியாம பொண்ணு கூட பார்த்து வச்சுருக்கேன். இன்னைக்கு வரட்டும் ஒரே பிடியா பிடிச்சுடுறேன்.” என்றாள் கண்சிமிட்டி.

அவரும் அதில் புன்னகைத்து, “வீட்ல நல்லது நடந்து ரொம்ப வருஷமாவுது மஞ்சு. இப்போதைக்கு அவனுக்கு ஒரு விஷேஷம் வச்சாவாவது மனசு ஆறுதல் அடையும்” என எதார்த்தமாக பொருமியவர், “சரி நீ சீக்கிரம் கோலத்தை போட்டு முடி. நான் போய் சமைக்கிறேன்.” என்று அடுக்களைக்குள் நுழைய, மஞ்சுளாவின் விழிகள் ஒரு துளி நீரை கோலத்தின் மீது பரப்பியது.

மறுநொடியே, “ம்மா! இப்போ இங்க என்ன நல்லது நடக்கணும்?” என்ற கர்ஜனையுடன் நின்றான் வசீகரன். கணவன் எழுந்து விட்டதை அறிந்த மஞ்சுளா அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்திட, அதற்குள் திலகாவும் விழுந்தடித்து வெளியில் வந்து புரியாமல் நின்றார்.

அவனோ இன்னும் கோபம் தீராமல், “சொல்லுங்கம்மா. இப்போ என்ன நல்லது நடக்கணும் உங்களுக்கு. பேசும் போது யோசிச்சு பேச மாட்டீங்களா? இதுக்கு தான் உங்களை நான் வரவேணாம்ன்னு சொன்னேன்.” என்னும் போதே பதறிய மஞ்சுளா, “அத்தை நார்மலா தான் சொன்னாங்க. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க…?” என்றாள் தவிப்புடன்.

அவள் விழிகள் கலங்கி இருந்ததை ஒரு நொடி அழுத்தமாக ஊடுருவியவன், “நான் என் அம்மா கூட சண்டை போட்டுட்டு இருக்கேன். அதுல மத்தவங்க தலையிட வேணாம். ஏன், உங்ககிட்ட நான் சண்டை போட கூடாதா?” என திலகாவிடம் வம்புக்கு நிற்க, அவருக்கோ வாயை விட்டு இப்போது சமாளிக்க இயலாத நிலை தான்.

“உனக்கு இல்லாத உரிமையாப்பா. ஏதோ ஆதங்கத்துல சொல்லிட்டேன்.” அவரும் பாவமாக கூற, “அப்போ, நானும் ஆதங்கத்துல என்ன வேணாலும் பேசட்டுமா?” என்று மூச்சிரைத்தவன், மஞ்சுளாவை ஒரு முறை விழிகளால் எரிக்கவும் தவறவில்லை. அதில், திலகாவின் முகம் தான் வாடி விட்டது.

மஞ்சுளாவோ அவனை எதிர்கொள்ள இயலாமல், “இதை விடுங்க வசீ ப்ளீஸ்…” என மென்குரலில் கூறி விட்டு, திலகாவிடமும் பேசி சரி செய்து அப்பிரச்சனைக்கு அப்போதைக்கு ஒரு முடிவு கட்டினாள்.

ஆனால், இணையாத புள்ளிகள் போன்றே, வாழ்வில் தீர்க்க இயலாத காயங்களை சரி செய்யும் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறாள் பாவை.

எக்ஸ்பிரஸ் அவெனியூ மாலினுள், தனது கிளான்சா மகிழுந்தை பார்க் செய்தான் தஷ்வந்த். தற்போது, புகழ்பெற்று வரும் நரம்பியல் மருத்துவர்.  வானொலி பண்பலையில் ஆர். ஜே வின் குரல் ஓடிக் கொண்டிருக்க, எப்போதும் போல அவனது எண்ணங்கள் வேறு எங்கோ தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

இதோ, ஆகிற்று… தன் வாழ்வில் காதல் அத்தியாயம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள். அவனை சுற்றி எவ்வளவோ மாற்றங்கள். அவனும் தான் மாறி விட்டான். ஆனால், அவனது வலிகளும், தீராத கோபங்களும் மட்டும் அப்படியே மீதம் இருந்தது. அதனைக் கொட்டித் தீர்க்கும் வழி தெரியாமல், உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்து மடிந்து மீண்டும் குடும்பத்திற்காக உயிர்த்தெழுந்து உதட்டில் எப்போதும் நிலை கொண்டிருக்கும் போலிப் புன்னகையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறான்.

சட்டென பெருமூச்சுடன் நிகழ்விற்கு வந்தவன், காரை அணைக்கும் போது, வானொலியில் பாடல் அலறியது.

சிறு சிறு
உறவுகள் பிரிவுகள்
என் நினைவுக்குள் ஓ…
வர வர கசக்குது கசக்குது
என் இளமையும் ஹேய்…
நினைத்தது நடந்தது முடிந்தது
என் கனவுக்குள் ஹான்!
என்னாச்சோ தெரியலையே…

சில நொடிகள் அசைவற்று அப்படியே அமர்ந்திருந்தவன், உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்த வேதனையை வெளிக்காட்டாமல், இயல்பாக இறங்கி மாலினுள் நுழைந்தான்.

சில மணித்துளிகள் செலவழித்து, தமைக்காக சில பொருட்கள் வாங்கியவன், எஸ்கலேட்டரில் இறங்க முற்பட, ஒரு சிறுவன் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கும் பொருட்டு, அதில் காலை வைப்பதும் பின் பயந்து காலை எடுத்துக்கொள்வதுமாக நின்றிருந்தான்.

அவனைப் பார்த்து சிறிதாய் புன்னகைத்தபடியே அவனருகில் செல்லும் போதே, மீண்டும் படியில் கால் வைத்து தடுமாற தெரிந்த சிறுவனின் கையை பற்றிக் கொண்டான் தஷ்வந்த்.

“ஹே! டாலு பார்த்து விழுந்துடாத…” சட்டென மஹாபத்ராவின் நினைவில், ‘டாலு’ என அழைத்து விட்டவனின் முகம் கடுமையானது.

அதில் நிமிர்ந்து தனது கையைப் பிடித்த ஆடவனை புருவம் சுருங்க முறைத்து வைத்தது அந்த சில்வண்டு.

லேசான மிரட்சி விழிகளில் தெறித்தாலும், சிவந்த குட்டி இதழ்களை சுளித்தான் சிறுவன். 

“நான் ஒன்னும் விழ மாட்டேன். நீங்க விழாம போங்க!” அவனின் கையை வெடுக்கென உதறினான்.

ஆனால், வழுக்கிக் கொண்டு சென்ற எஸ்கலேட்டர், அடிவயிற்றில் நழுவலை ஏற்படுத்தியதில், இப்போது உதறிய கரங்களை அவனே பிடித்துக் கொண்டான்.

தஷ்வந்திற்கு சிரிப்பு பீறிட்டாலும், வெளிக்காட்டாமல் “ஓ! நான் கீழ விழுந்துடுவேன்னு கைய பிடிச்சு இருக்கீங்களா மிஸ்டர் டாலு…” எனக் குறும்புடன் கேட்க,

அதற்கு பதிலளிக்கத் தெரியாமல், அகன்ற கருவிழிகளை அங்கும் இங்கும் உருட்டியவன், “ஆமா” என்றான் தலையை மேலிருந்து கீழாக ஆட்டி.

கூடவே, அசட்டுச் சிரிப்பு ஒன்றை கொடுத்த நிதின் கெத்து குறையாமல் மறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டதில், ஆடவன் மேலும் கன்னக்குழி கன்னத்தில் ஆழம் பதிக்க, அழகாய் புன்னகைத்தான்.

மனதின் சிறு ஓரத்தில், அவளின் நினைவும் நதி போல் ஓடியது.

சலசலக்கும் நதிகள் 
சமுத்திரத்தில்
சங்கமிப்பது போல…

செந்தேன் பாவையின்
செங்குருதி நினைவுகள்
செந்தீயில் கருகிப் போகும் நாளும் என்றோ…?

அதற்குள் அவர்களை தாங்கிய எஸ்கலேட்டர், கீழ்த் தளத்தில் மக்களை உமிழ்ந்து விட்டுப் போக, அப்போது தான் தஷ்வந்த்தின் கரங்களை விட்டான் நிதின்.

அவ்விலகலில் நிகழ்வுக்கு வந்தவன், ஒரு காலை முட்டியிட்டு நிதின் உயரத்திற்கு குனிந்து, “உன் கூட யாரு வந்தா டாலு? தனியா மால்ல என்ன செஞ்சிட்டு இருக்க…” எனக் கேட்டான்.

அந்நேரம், செல்பேசி அழைக்க, “ஒன் செக் டாலு…” என இரு விழியோரங்களும் சுருங்க சற்றே கெஞ்சும் பாவனையில் கூறிய தஷ்வந்த், போனை காதில் வைத்தபடி எழுந்து திரும்பி நின்றான்.

“ஹலோ… தஷ்வந்த் ஹியர்…” என வினவலாகக் கேட்டவனுக்கு எதிர்முனையில் கேட்ட பெண்குரல் சற்றே சலிப்பைத் தந்தது.

“ஹாய். ஐ ஆம் மனிஷா. மாட்ரிமோனில உங்க புரொஃபையில் பார்த்தோம். உங்க அக்காட்ட என் பேரண்ட்ஸ் பேசுனாங்க. அவங்களுக்கும் ஓகே தான். என் நம்பர உங்ககிட்ட குடுத்து பேச சொல்றதா உங்க அக்கா சொன்னாங்க. ஆனா ரெண்டு நாள் ஆகியும் கால் வரல. அதான் நானே கால் பண்ணிட்டேன்” என அப்பெண் மடமடவென பேச, தஷ்வந்த் அவனின் தமக்கையை மனதினுள்ளேயே திட்டிக்கொண்டான்.

“சாரிமா. யாரோ என் அவேர் இல்லாம என் நேம் அண்ட் போட்டோ யூஸ் பண்ணிருக்காங்க. அண்ட் சோ நீங்க சொல்ற மாதிரி எனக்கு ஒரு அக்கா இருக்காங்க தான். ஆனா, அவங்க மனநிலை சரியில்லாதவங்க. நீங்க பேசும் போதே கண்டுபிடிக்கலையாமா…” என அம்பை அவள் புறம் திருப்ப அவளோ திகைத்தாள்.

உடனடியாக போனும் அணைந்து விட, நமுட்டு சிரிப்புடன் நிதின் புறம் திரும்பிப் பார்க்க அங்கு அவன் இல்லை.

“அம்மா… அம்மா… விடுமா. பிளீஸ் மா…” என நிதின் கெஞ்சிக்கொண்டே வர, அதனைக் காதில் வாங்காமல் அவனை தரதரவென இழுத்துச் சென்றாள் மஹாபத்ரா.

செவிமடல்கள் சிவக்க, “உன்ன என் கூட லிஃப்ட்ல தான நிதி வரசொன்னேன். எதுக்கு எஸ்கலேட்டர்ல வந்த? அதும் கரெக்ட் – ஆ லிஃப்ட் மூடும் போது வெளிய ஓடிட்ட… என்னால சட்டுன்னு வெளியவும் வர முடியல. எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா…” என்று சில நிமிடங்கள் அவனைக் காணாததால் ஏற்பட்ட கோபத்தையும் பதற்றத்தையும் வெளிப்படையாகக் காட்டினாள்.

“அய்யோமா…! உனக்கு எஸ்கலேட்டர்ல போக பயமா இருந்தா என்னையும் ஏன்மா போக விட மாட்டுற…” என முறைப்புடன் கேட்டவனின் காதை திருகியவள், “அப்போ சாருக்கு பயமே இல்ல…? அப்படி தான…” என நக்கலாகப் பார்த்தாள் கையைக் கட்டிக்கொண்டு.

“மம்ஹும்” உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கிய மகனின் செய்கை பக்கென்ற சிரிப்பைக் கொடுத்தது அவளுக்கு.

இலவச இணைப்பாக அவனின் எண்ணங்களும் முட்டி மோதி வெளிவரத் துடித்தது.

எண்ண அலைகளை
எரித்திடத் தான்
எத்தனிக்கிறேன்…

எத்தனை முறை
எறிந்து எரிப்பாய்?
என்ற என்னவனின்
ஏக்கக்குரலில்
எரிந்தபடி…

நிதினை காணாமல் சில கணம் சுற்றும் முற்றும் தேடிய தஷ்வந்த், பின் அவன் குடும்பாத்தாரை பார்த்திருப்பான் என்ற நம்பிக்கையில் வெளியில் செல்லப் போக மீண்டும் செல்பேசி அழைத்தது.

கருமீசை மறைத்த இதழ்கடையோரம் குறுநகை ஒன்று உதயமாக போனை எடுத்து காதில் வைத்தான். எதிர்முனையில் அவனின் தமக்கை மஞ்சுளா காட்டுக் கத்தாகக் கத்தினாள்.

“பன்னாட பரதேசி… நான் மனநிலை சரியில்லாதவளாடா? பொண்ணு வீட்ல என்ன பைத்தியம் மாதிரி பாக்குறாங்கடா பக்கிப்பயலே…” என பெருமூச்சு வாங்க அவனை வஞ்சிக்க,

தஷ்வந்தோ, போனை மறைத்துக் கொண்டு வாய்விட்டு சிரித்திருந்தான்.

“சிரிக்காதடா!” அவள் பற்களை கடிப்பது இங்கு வரை கேட்டது.

“உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது மஞ்சு. இந்த ப்ரோக்கர் வேலையெல்லாம் பார்க்காதன்னு… ஒரு பக்கம் அம்மா டார்ச்சர் பண்றாங்கன்னா, ஒரு பக்கம் உன் இம்சை. எனக்கு என்ன அறுபது வயசா ஆகுது. கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?” அவள் மனம் சுணங்காதபடி, மென்மையாகவே கேட்டான்.

“ஓ! சார் வேற எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கீங்க?” மஞ்சுளா கடுப்புடன் கேட்க, “அதை நேர்ல வந்து சொல்றேன். வை…” என்று போனை அணைத்து காரில் ஏறினான்.

நேராக மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றவன், அவள் முறைப்பதைக் கண்டுகொள்ளாமல், திலகாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

“நீங்க எப்ப அத்தை வந்தீங்க?” எனக் கேட்டபடி அவர் கொடுத்த காபியை விழுங்கிட, “ரெண்டு நாளைக்கு நிர்மலாவும் மாப்பிள்ளையும் பிள்ளைகளை கூட்டிட்டு வெளியூர் போகலாம்ன்னு இருந்தாங்க தம்பி. என்னையும் கூப்பிட்டாங்க. என்னால எல்லாம் அலைய முடியாதுன்னு இங்க வந்துட்டேன்.” என்று பதில் கூறி விட்டு, அவர் அறைக்குள் சென்றடைந்தார்.

திலகாவின் கணவர், சில வருடங்களுக்கு முன்பு தவறி இருக்க, அவர்களுக்கு இரு பிள்ளைகள். வசீகரனின் தங்கை தான் நிர்மலா. நிர்மலாவும் பொறியியல் படித்து விட்டு, கணவருடன் வேலைக்கு செல்ல, தனது இரட்டை செல்வங்களை பார்த்துக் கொள்வதற்காகவும், தமையனுக்கும் அண்ணிக்கும் தனிமை தரும் பொருட்டும், தாயை தன்னுடனே வைத்துக் கொண்டாள். 

அவ்வப்பொழுது வந்து மகனையும் மருமகளையும் பார்த்து விட்டு செல்பவருக்கு ஏனோ, அவர்களின் வாழ்க்கையில் எந்த வித வித்தியாசமும் தோன்றாது போக, ஒவ்வொரு முறையும் வந்து மனம் வருந்திப் போவார்.

மீண்டும் ஒரு முறை, தம்பியிடம் சண்டை இட்டு ஓய்ந்த மஞ்சுளாவிடம், பேசி சிரிக்க வைத்து, சமாதானம் செய்தவன், “மாம்ஸ் லன்சுக்கு வருவாரா?” எனக் கேட்டான்.

‘தெரியவில்லை’ என்று அவனிடம் எப்படி கூறுவது…? என எச்சிலை விழுங்கியவள், “நீயே போன் செஞ்சு கேளேன்…” என முயன்று முறுவலித்து விட்டு, அடுக்களைக்கு செல்ல, தஷ்வந்த் அவளை அழுத்தமாக ஏறிட்டான்.

அவர்களுக்குள் எதுவும் சரி இல்லை என்று தெரியும் தான்… ஆனால், என்ன தான் தம்பியாக இருந்தாலும் அவர்களின் அந்தரங்கத்தில் தலையிட இயலாமல் தவித்துப் போனான். அவர்களின் இந்நிலைக்கு அவனும் அல்லவா ஒரு காரணம்! கூடவே அவளும்! பல்லைக்கடித்து அவள் மீது எப்போதும் போல எழுந்த சீறலை அடக்கியவன், வசீகரனுக்கு போன் செய்தான்.

அலுவலகத்தில் வேலையாக இருந்த வசீகரன், தஷ்வந்தின் எண்ணைக் கண்டதும், மெலிதாய் புன்னகைத்தான். வசீகரன் போனை எடுத்ததும், “என்ன மாம்ஸ், இப்போல்லாம் உங்ககிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டு தான் பேசணும் போலயே. தொழிலதிபர் ரொம்ப பிசி போல…” என நக்கலடித்தான்.

“அதை நீங்க சொல்லாதீங்க டாக்டர் சார். உங்ககிட்ட அப்பாயின்மென்ட் வாங்க கூட பத்து நாள் வெய்ட் பண்ணணுமாமே! சார்… அவ்ளோ பிசியோ பிசி.” என்று அவன் பங்கிற்கு வாரினான்.

அதில் சிரித்து விட்ட தஷ்வந்த், “செம பசி மாம்ஸ். சாப்பிட வாங்க.” என்று அழைக்க, ஒரு நொடி தயங்கியவன், பின் “வரேன்” என்றான்.

கணவருக்கும் தம்பிக்கும் உணவை பரிமாறிய மஞ்சுளாவிற்கு, வெகு நாள் கழித்து வசீகரன் வீட்டில் உண்ணுவது மகிழ்ச்சியாகவே இருந்தது. அவனது, ஒதுக்கத்திற்கும் தான் தானே காரணம் என தன் மீதே கழிவிரக்கம் கொண்டவளுக்கு, வேதனை நெஞ்சை வெடிக்க வைத்தாலும், தம்பியை போன்றே நடிக்கக் கற்றிருந்தாள்.

தனியாக பேச சென்றால், வசீகரன் நிச்சயம் பேச மாட்டான் என்றுணர்ந்து, மஞ்சுளாவே ஆரம்பித்தாள்.

“வசீ, மேல் போர்ஷன் ரொம்ப நாளா சும்மாவே தான இருக்கு. வாடகைக்கு விடலாமே!” என்று கேட்க, அவன் பதில் ஏதும் கூறவில்லை.

முட்டி மோதி, தொழிலில் இறங்கி இப்போது தான் முன்னேறிக் கொண்டிருக்கிறான் வசீகரன். இதுவும் அவன் சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடு தான். சில மாதங்களுக்கு முன்பு தான், மேல் மாடியையும் எடுத்துக் கட்டி இருந்தான்.

அவன் பதில் சொல்லப் போவதில்லை என்று தெரிந்த தஷ்வந்த், “எதுக்குக்கா?” எனக் கேட்க,

“இல்ல, இவ்ளோ பெரிய வீட்ல நான் மட்டும் தான இருக்கேன். மேலயும் தூசி படிஞ்சே இருக்கு. யாராவது ஆளுங்க வந்தா, வீடும் மெயின்டெய்ன் ஆகும்ல அதான்…” என்றபடி கணவனைப் பார்த்தாள்.

“ம்ம்!” மட்டும் கொட்டியவன், தஷ்வந்திடம் வேறு ஏதோ பேசிட, இருவருக்கும் சங்கடமாக இருந்தது.

கலங்கிய கண்களை அரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டவள், அவர்கள் இருவரும் வெளியில் சென்றதும், மாடி வீட்டை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் விளம்பரம் கொடுத்திருந்தாள்.

“டேய்… முதல்ல வந்து சாப்பிட்டுட்டு அப்பறம் கேம் விளையாடு” மகனை அதட்டிக் கொண்டிருந்தாள் மஹாபத்ரா.

“நோ மா. ஃபர்ஸ்ட் கேம். அப்பறம் ஃபுட்” என்று கெஞ்சும் தொனியில் கூறியவனின் காதை பிடித்தாள்.

“அடி வாங்குவ நிதி. எனக்கு நிறைய வேலை இருக்கு. டென்ஷன் பண்ணாம சாப்பிடு.” என்றிட, “ம்ம்ஹும் முடியாது” என்று முரண்டு பிடித்தான் நிதின்.

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?” மஹாபத்ரா கேட்டதில், “நம்ம யூகேல இருந்து வந்து ஒரு வாரம் ஆகுது. இன்னும் ஹோட்டல் ரூம்ல தான் தங்கி இருக்கோம். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலமா. எவ்ளோ நேரம் ரூம்லயே அடைஞ்சு இருக்குறது?” எனக் குறைபட்டுக் கொண்டான்.

அதில் உதட்டை மடித்து புன்னகைத்தவள், “நான் என்ன வேணும்ன்னா ஹோட்டல்ல இருக்க வச்சுருக்கேன் அமுலு. உனக்காக பீச் ஹவுஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு தான் வந்தேன். ஆனா, தட் இடியட் கான்டராக்டர் இன்னும் இன்டீரியர் வேலையை முடிக்காம வச்சு இருக்கான். அதுல இருக்குற பெண்டிங் வேலையை பார்த்தா, அது முடிய இன்னும் ரெண்டு மாசம் ஆகும் போல…” எனக் கடுப்படித்தாள்.

“ஐயோ… அவ்ளோ நாள், நம்ம இதே ரூமுக்குள்ள இருக்கணுமா… ம்ஹும் என்னால முடியாது. ப்ளீஸ் டாலுமா. நம்ம கொஞ்ச நாள் வேற வீட்ல இருந்துட்டு, அப்பறம் கூட பீச் ஹௌஸ் போகலாம்.” என்றான் கெஞ்சலாக.

“ப்ச், கொஞ்ச நாள் ரெண்ட் ஹௌஸ் பார்க்கலாம்ன்னா, வெறும் ரெண்டு மாசத்துக்கு வீடு கிடைக்கலடா அமுல் பேபி.” அவளும் கொஞ்சிட,

“நீ கேட்டுமா டாலுமா வீடு கிடைக்கல?” அவனோ விழி விரித்துக் கேட்க, “டேய்…!” என்று முறைத்தாள் அவள்.

அதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவன், “அப்போ நம்ம அமி அங்கிள் வீட்டுக்கு போகலாம்” என்றான் வேகமாக.

பின், அவளின் முறைப்பில் தலையை தட்டிக் கொண்டு, “ஸ்ஸ்… நம்ம இங்க வந்தது யாருக்கும் தெரியக் கூடாதுல!” எனக் கண்களை உருட்டி வாயில் ஒரு விரலை வைத்து ஹஸ்கி குரலில் பேசி, அவளை சிரிக்க வைத்தான்.

“ம்ம். மேக்சிமம் அமி கூட வீடியோ கால் அவாய்ட் பண்ணிடு அமுலு. நம்ம இங்க வந்தது யாருக்கும் தெரிய கூடாது. டீல்?” என்று கட்டை விரலை தூக்கி காட்ட, “டீல். ஆனா, கண்டிப்பா நீ வேற வீடு பார்க்கணும்.” என்றான் உதட்டைக் குவித்து.

“ஐ ட்ரை மை லெவல் பெஸ்ட்… முதல்ல போனை வச்சுட்டு சாப்பிடு. எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டு…” என்று அதட்டி உண்ண வைத்தாள்.

அடுத்த இரு நாட்களில், இணையதளம் மூலம் அவளும் பல வீடுகளை பார்த்து விட்டாள். வீடு பிடித்தாலும் இரண்டு மாதத்தில் காலி செய்ய யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

இறுதியில், மஞ்சுளா அனுப்பிய புகைப்படத்தை பார்த்தவள், ‘வீடு சுமார் தான். எதுக்கும் ட்ரை பண்ணுவோம்.’ என்று அவளுக்கு போன் செய்தாள். அந்த முகவரி அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே இருந்ததில், நேரில் வந்து பார்ப்பதாக முடித்துக் கொண்டாள்.

“நிதி… நான் வெளிய போறேன். டோர் லாக் பண்ணிக்கோ.” எனக் கைப்பையை எடுத்தவளிடம், தானும் வருவதாக அடம்பிடித்து, அவளுடனே பயணப்பட்டான் நிதின்.

“வர வர நீ சொல்லுப்பேச்சே கேட்குறது இல்ல அமுலு.” அவள் போலியாய் கோபம் கொள்ள, “நீயும் தான் சொல்லு பேச்சே கேட்குறது இல்ல டாலுமா.” என்று அவனும் முறுக்கிக் கொண்டான்.

அவளோ குழம்பி, “நான் என்னடா கேட்கல?” எனப் பார்க்க,

“யூகேல நம்ம பக்கத்து பிளாட் அங்கிள், உன்னை மேரேஜ் பண்ணிக்க கேட்டப்போ, நானும் உன்னை எவ்ளோ கன்வின்ஸ் பண்ணுனேன். நீ தான் கேட்கவே இல்ல.” என இதழ்களை சுளிக்க, அவன் தலையை முடியை பற்றி ஆட்டிய மஹாபத்ரா, “வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடா… டொமேட்டோ!” என அவனுடன் சண்டையிடும் போதே, மஞ்சுளாவின் வீடு வந்திருந்தது.

அவர்கள் வந்த கேபை வெயிட்டிங் வைத்து விட்டு, காலிங் பெல்லை அழுத்தினாள்.

வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து, மடிக்கணினியில் புதைந்திருந்த தஷ்வந்த், கதவை திறக்க எழும் போதே, ஏதோ கால் வர,

“மஞ்சு… யாரோ பெல் அடிக்கிறாங்க. யாருன்னு பாரு. ஒரு முக்கியமான வீடியோ கான்ஃபரன்ஸ். ரூம்ல இருக்கேன். என்னை கூப்பிடாத…” என்று அவளின் அறைக்கதவை தட்டி சொல்லி விட்டு, அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

அவளும், அவசரமாக வந்து கதவை திறக்க, எதிரில் ஒரு பெண்ணும், அவளுடன் சிறுவனும் நிற்பதைக் கண்டு யாரெனப் பார்த்தாள்.

கூடவே, அச்சிறுவனின் மீதும் அவளது பார்வை அதிகமாகவே நிலைத்தது.

“ஹலோ… வீடு ரெண்ட் கேட்டு கால் பண்ணிருந்தேன்.” என்று மஹாபத்ரா கூறியதும், நிகழ்விற்கு வந்தவள், “ஓ… ஆமா… உள்ள வாங்க” என்று அழைத்தாள்.

“இல்ல பரவாயில்ல. வீடு பார்க்கலாமா?” எனக் கேட்டதில், “ஒரு நிமிஷம்!” என்று சாவியை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

வீடும் ஓரளவு பிடித்திருக்க, தாங்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், இரண்டு மாதத்திற்கு மட்டும் வீடு தேவைப்படுவதாகவும் கூறி இருந்தாள்.

அதற்கிடையில், மஞ்சுளாவின் முந்தானையை பற்றி இழுத்த நிதின், “ஆண்ட்டி, வீட்ல எதுவுமே இல்ல. எப்ப சோபா, ஏசி, பெட் எல்லாம் வாங்குவீங்க?” எனக் கேட்டு வைக்க, மஞ்சுளா தான் விழித்தாள்.

“ப்ச்… அமுலு! சும்மா இரு.” என்ற மஹாபத்ரா, “அவன் சர்வீஸ் அபார்ட்மெண்ட் மாதிரி நினைச்சு கேட்குறான் சிஸ்டர்…” என தலையில் அடித்துக் கொண்டாள்.

அதில் பக்கென சிரித்த மஞ்சுளா, நிதினை கண் சிமிட்டாமல் பார்த்தபடி, அவன் முன்னே அமர்ந்து, “நீ எப்ப இங்க வர்றன்னு சொல்லு. நான் எல்லாமே வாங்கி வச்சுடுறேன். ம்ம்?” என்றாள் ஆர்வமாக.

“நீங்க ஓகே சொன்னா, நாளைக்கே நாங்க வந்துடுறோம். இதுக்கு மேலயும் என்னால ஹோட்டல் ரூம்ல இருக்க முடியாது. ஏற்கனவே பத்து நாளாச்சு.” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டான்.

அதில் அவனை அள்ளி அணைத்துக் கொள்ள துடித்தக் கரங்களை அடக்கிய மஞ்சுளா, “அடக்கடவுளே! பத்து நாளாவா ஹோட்டல்ல இருந்தீங்க. நீங்க நாளைக்கே குட்டியை கூட்டிட்டு வந்துடுங்க மஹா. அக்ரீமெண்ட் எதுவும் வேணாம். எப்ப வீடு ரெடி ஆகுதோ அப்போ போய்க்கலாம்.” என்றவள், “ஓகே தான குட்டி?” என நிதினிடம் அபிப்ராயம் கேட்க, “யூ ஆர் சோ ஸ்வீட்!” என்று அவளின் கன்னம் கிள்ளி வைத்தான் நிதின்.

அவளை விசித்திரமாக பார்த்து வைத்த மஹாபத்ரா தான், மேலும் சில விவரங்களை பேசி விட்டு, ஹோட்டலுக்கு வந்தாள்.

இங்கோ, தஷ்வந்த் எப்போது அறையை விட்டு வெளியில் வருவான் என்று எதிர்பார்த்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் மஞ்சுளா.

கதவை தட்ட வேண்டாம் என்று வேறு கூறி விட்டானே… என பரபரத்தவள், அதற்கு மேலும் முடியாமல் கதவை தட்ட போகையிலேயே அவன் திறந்து விட்டான்.

“ஹப்பாடா… வந்துட்டியா? எனக்கு ஒரு ஹெல்ப்டா தம்பூ” மூக்கை சுருக்கி அவள் கேட்டதில், “என்ன மஞ்சு?” என்றான் புரியாமல்.

“நம்ம இப்பவே கடைக்கு போய் மாடி வீட்டுக்கு தேவையான, திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாமா?” என்றதும், குழம்பினான்.

“ஏய்… லூசு. வாடகைக்கு வர்றவங்களே திங்க்ஸ் கொண்டு வருவாங்க தான.” என்றவன், அப்போது தான் அவள் முகத்தில் தெரிந்த பரவசத்தை கவனித்தான்.

பலவருடம் கழித்து, அவள் முகம் தெளிவாக இருந்தது. கூடவே சிறு மகிழ்ச்சியும்.

“அது எனக்கு தெரியாதா தம்பூ. ப்ளீஸ் கேள்வி கேட்காம வாயேன். எனக்காக…” எனக் கெஞ்சலாக கேட்டதில், அவன் அடுத்த கேள்வி எதுவுமே கேட்கவில்லை.

இதே மகிழ்ச்சி அவள் முகத்தில் நிலையாக இருக்க, அவன் இறக்க கூட தயார் தானே! ஆனால், அவனது கோபத்திற்கு வடிகாலாய், மீண்டும் அவனவளை சந்திக்கப் போவதை அறியாமல், மஞ்சுளாவுடன் இணைந்து, மாடி வீட்டில் பொருட்களை நிரப்பினான் தஷ்வந்த். 

காயம் ஆறும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
39
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்