Loading

 

 

ஜீவாவின் சட்டையைப் பிடித்த, அஷ்வினை தீயாக முறைத்த ஜீவா, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவன் கையை எடுத்து விட்டு, உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து நிலைமையை விளக்கினான்.

அவரும் அஷ்வினிடம் அந்த பாடியை அப்புறப்படுத்தி, அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் படி கூறி விட்டு, இந்த வேலையை யார் செய்தது என விசாரிக்க சொன்னார்.

அஸ்வின் “சார் இது…” என்று பேச வரும் முன், “நான் சொன்னதை செய்ங்க மிஸ்டர் அஸ்வின்” என்று அவர் போனை வைத்து விட, அஸ்வின் தான், அவனை கைது செய்ய தான் போட்ட சதி திட்டம் இப்படி பாழடைந்து விட்டதை நினைத்து கடுங்கோபத்திற்கு ஆளானான்.

ஜீவா அஸ்வின் சொன்னதையே நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வர, ஜீவாவின் முகத்தைக் கண்டு என்னவோ சரி இல்லை என்று தோன்றியதில் அவனின் பின்னே அறைக்கு வந்த கயல், பின் எதுவும் கேட்காமல், “சாப்பாடு ரெடி… சாப்பிட வர்றீங்களா?” என்று கேட்டாள்.

ஜீவா வேணாம் என்று தலையாட்டி விட்டு, பால்கனியில் சென்று அமர, கயலுக்குத் தான் அவனை அப்படியே  விட்டுப் போகவும் மனமில்லை..

பின், கார்த்திக்கு சாப்பாடு கொடுக்க, டைனிங் ஹால் வந்தவள், அவனுக்கும் பூவரசிக்கும் சாப்பாடை எடுத்து வைத்து விட்டு, மாடியையே பார்க்க,

கார்த்தி, “அண்ணா எங்க கயலு” என்று கேட்டான்.

“ரூம்ல தான் இருக்காரு கார்த்தி, சாப்பிட கூப்பிட்டேன் வேணாம்னு சொல்லிட்டாரு”

“அண்ணா எப்பவுமே அப்படிதான். அவர்க்கு எப்போ தோணுதோ அப்போ தான் வருவாரு. நீ உட்காந்து சாப்பிடு”

“இல்ல நான் அவர் வரவும் சாப்ட்டுக்குறேன்…”  என்றவளுக்கு இன்று அவனுக்கு பிடித்த உணவுகளை ஆசையாய் சமைத்ததுடன், அவன் மன்னிப்பு கேட்டது வேறு மனதில் குடைந்தது.

கார்த்தி தான், “ஓ வீட்டுக்காரர் இல்லாம சாப்பிட மாட்டிங்களாக்கும்” என்று நக்கலடிக்க, கயல் அவனை முறைத்து, “பேசாம சாப்பிடு” என்று விட்டு, மீண்டும் ஜீவாவைப் பார்க்க சென்றாள்.

ஆனால் அவன் தான் பால்கனியை விட்டு வரவே இல்லை. அவளுக்கு அவனை அழைக்க ஈகோ தடுத்தது.

இப்படியாக மாலையே ஆகி விட, ஜீவா வெகு நேரம் கழித்து, கீழே இறங்கி வர, கார்த்தி அப்பொழுது தான் பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் நடக்கப் பழகினான். இது தினமும் நடக்கும் ஒன்று தான்.

கார்த்தி நடந்து கொண்டே, “அண்ணா சாப்டீங்களா?” என்று கேட்க, அவன் வேணாம் என்று மட்டும் சொல்லி விட்டு வெளியே போகையில்,

“அண்ணா இன்னும் கயல்” என்று  ஆரம்பித்து, “அது…. அண்ணியும் சாப்பிடல நீங்க வரவும் சாப்பிட்டுக்குறேன்னு” என்று சொல்லிமுடிக்கையிலேயே,

ஜீவா “ப்ச், அவள் ஏன் இன்னும் சாப்பிடல. நீ கூட தான இருந்த சாப்பிட வைக்காம என்ன பண்ணிட்டு இருந்த… எங்க அவள்?” என்றான் கோபமாக.

கார்த்தி தான் ‘அய்யோயோ தேவை இல்லாம அண்ணாவை கோபப்படுத்திட்டோமோ…’ என்று மிரள,

பூவரசி ‘உனக்கு எதுக்குய்யா இந்த தேவை இல்லாத வேலை…’ என்று முறைத்தாள்.

கயல், மாலை சிற்றுண்டி செய்ய, அடுக்களையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அங்கு சென்ற ஜீவா,

“எத்தனை தடவை சொன்னாலும் கேட்கவே கேட்காத. எப்போ பாரு கிட்சன்க்குள்ளேயே குடும்பம் நடத்து. தெரியாம உன்கிட்ட இதான் உன் ரூம்ன்னு சொல்லிட்டேன். அதுக்காக என்னை இப்படி சாவடிக்காத.

கோபத்துல, தெரியாம சொன்ன எல்லாத்தையும் நம்புன, இப்போ தெரிஞ்சு  சாரி கேட்டு நீதான் என் பொண்டாட்டின்னு சொல்றேன் அதை நம்ப மாட்டேங்குற…” என்று அடுப்பு மேடையில் இருந்த கண்ணாடி ஜக்கை தூக்கி எறிந்தவன்,

“ஏன் சாப்பிடல? ஹான் பட்னி கிடந்தது சாக போறியா. ஹான் சொல்லு…” என்று ஆத்திரத்தில் கத்தினான்.

மேலும், “எல்லாரும் உன்னையும் நான்தான் கொன்னேன்னு சொல்லனுமா… அப்படின்னா சொல்லு. வா… ரெண்டு பேரும் சேர்ந்தே செத்து போலாம்” என்று கை பிடித்து அழைக்க, அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் பேசியதில் உதட்டைக் கடித்து கொண்டு அழுக, கார்த்தி தான் இதனைக் கேட்டு சிலையாகி விட்டான். என்ன நடந்துருக்கும் இவங்க ரெண்டு பேருக்குள்ள என்று குழம்பிப் போனவனுக்கு நிச்சயமாய் எதுவும் சரியாக நடக்கவில்லை என்று மட்டும் புரிந்தது.

கயலின் கண்ணீர் வேறு அவனுக்கு வருத்தமளிக்க, “அண்ணா” என்றவனை எல்லாம் கண்டு கொள்ளாமல், கயலை தரதரவென இழுத்து டைனிங் டேபிளில் அமர வைத்து, தட்டில் சாப்பாட்டை போட்டு சாப்பிட சொன்னான்.

அவளுக்கோ கண்ணீர் தான் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது. 

ஜீவா “உன்னை தான் சொன்னேன் சாப்பிடு” என்று சொல்ல, அவள் அழுது கொண்டே வேறு  வழி இல்லாமல் சாப்பிட்டு  முடிக்க, ஜீவா அவளை முறைத்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

அவன் சென்றதும் கயலும் யாரையும் பார்க்காமல் அறைக்கு சென்று விட, கார்த்திக்கு இப்பொழுது இங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தே ஆகவேண்டும் போல் இருக்க, வேகமாக அவளின் அறைக்கு சென்றான்.

அங்கு அழுது கொண்டிருந்தவள் கார்த்தியை  பார்த்ததும், கண்ணைத் துடைத்து கொண்டு எழுந்து அமர, கார்த்தி, “உனக்கும் அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை கயல்…” என்று கூர்மையாக கேட்டான்.

கயல், “அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று கமறிய குரலில் சொன்னதும்,

“கயல் இதை நான் உன் ஹஸ்பண்ட் ஓட தம்பியா கேட்கல, உன் ஃப்ரெண்ட் கார்த்தியா கேட்குறேன் சொல்லு என்ன பிரச்சனை உனக்கும் அண்ணாவுக்கும்…” என்று அழுத்தி கேட்க, அவள் சொல்லாமல் மறுத்தும், இவன் அசையவே இல்லை.

பின் நொந்து கார்த்தியிடம் நடந்த அனைத்தையும் சொல்ல, கார்த்தி அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.

அவனால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும் தன் தோழியை தன் அண்ணனே காதல் என்ற பெயரில் ஏமாற்றி இருப்பதை, தன்னாலேயே அவளின் வாழ்க்கை கேள்விக் குறியாய் ஆகி இருப்பதை நம்பவே முடியவில்லை. உச்ச கட்ட அதிர்ச்சியில் அறையை விட்டு வெளியில் வர, அவர்கள் பேசியதை பூவரசியும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

கார்த்தி வேறு ஒரு பெண்ணை காதலித்ததை கேட்டவளுக்கு மனமெல்லாம் ஏதோ மாதிரி பாரமாக இருக்க, அவளால் இனம் காண முடியாமல், அவன் முகத்தில் இருந்த சோகத்தை கண்டு அவனின் பின்னால் சென்றாள்.

கார்த்தி ‘தன்னால் தானா… எல்லாமே தன்னால் தான் நடந்ததா’ என்று தன்னையே நொந்தவன், ‘தனக்காக அண்ணா ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டாரே…’ என்று மருகிக் கொண்டிருந்தான்.

அப்போது, ” கார்த்தி…” என்று அழைத்தாள் பூவரசி.

அவனோ ‘என்னால தான் என்னால தான் இவ்வளவு பிரச்சனை. என் முட்டாள்தனத்துனால என் கயலோட வாழ்க்கையே போச்சு…’ என்று புலம்ப,

பூவரசி, “யோவ் என்னய்யா வாழ்க்கை போச்சு… அன்னைக்கு நீ இப்படி பேசுனதுக்கு தான, ரெண்டு பேரும் உன்கிட்ட கோவப்பட்டாக… உன் அண்ணாரு பண்ணது தப்பு தான். ஆனால் அதான் தப்பை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுட்டாகளே…” என்று சொல்ல,

“ப்ச். மன்னிப்பு கேட்டு என்ன பண்ண! அவள் எவ்ளோ ஆசையா காதலிச்சுருக்கா… அதுலயும், அவளுக்கு கோபப்படுறவங்களை பிடிக்கவே பிடிக்காது. அதையும் மீறி அண்ணாவை காதலிச்சுருக்கா ஆனால் அண்ணா இப்படி” என்று தலையை அழுந்தக் கோத, பூவரசி ஏதோ பேசிவரும் முன்,

“நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்…”என்றதில், அவள் தான், தன் மனது ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது என்று புரியாமலேயே அங்கிருந்து சென்றாள்.

அன்று இரவு, கண்ணைக் கசக்கிக் கொண்டு தள்ளாடியபடியே வீட்டிற்கு வந்த ஜீவா, வீடே அமைதியாய் இருப்பதைக் கண்டு, சுற்றி  முற்றி பார்த்தான்.

எப்பொழுதும், பூவரசிக்கு கார்த்தியும் கயலும் சேர்ந்து ஆங்கிலம் சொல்லி கொடுத்தபடி, மூவரும் எதாவது பேசிக்கொண்டு இருப்பார்கள். இன்று யாரும் ஹாலில் இல்லாததை கண்டு கார்த்தியை பார்க்கச் சென்றான்.

கார்த்தி, எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, ஜீவா “கார்த்தி… உனக்கு எப்படி இருக்கு இப்போ? நடக்க முடியுதா…” என்று கேட்டான் தள்ளாடியபடி.

அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “உன்னை தான் கேக்குறேன்” என்று அழுத்திக் கேட்டிட,

  “ஏன் அண்ணா கயலை ஏமாத்துனீங்க…?” என்ற கார்த்தியின் கேள்வியில் திகைத்து விட்டான்.

பிறகே கயல் அவனிடம் அனைத்தையும் கூறி விட்டாள் என்று உணர்ந்தவன், அமைதியாய் நிற்க,

“அவளை போய் ஏமாத்த உங்களுக்கு எப்படி அண்ணா  வந்துச்சு… அதுவும் நான் போய் கயலை லவ்…” என்று சொல்ல முடியாமல் நிறுத்த, ஜீவா தலையை குனிந்து கொண்டு “சாரி” என்றான்.

அவன் சொன்ன சாரியில் ஜீவாவை பார்த்த கார்த்தி, அப்பொழுது தான் அவன் குடித்திருக்கிறான் என்றே உணர்ந்தான்.

அதில் மேலும் நொந்தவன், “அண்ணா… அவள் என் அண்ணியா வரணும்னு நான் தான் ஆசைப்பட்டேன். அவள் என்னை எவ்ளோ நல்லா பார்த்துப்பாள் தெரியுமா? அதே மாதிரி அவள் உங்களையும் பார்த்துக்கிட்டா நீங்களும் தனியா இருக்க மாடீட்ங்கன்னு தோணுச்சு. எனக்கு  கிடைச்ச பாசம் உங்களுக்கும் கிடைக்கணும்னு நினைச்சேன். ஆனால் இப்படி அவளோட மொத்த சந்தோஷமும் அழியிறதுக்கு நானே காரணமா இருப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல. ஆனால் அவளை நீங்க இப்படி ஏமாத்தி…” என்று சொல்லிமுடிக்கும் முன்,

ஜீவா குடி போதையில் கண் சிவக்க, “என்னடா ஏமாத்துனேன் என்ன ஏமாத்துனேன்? ஏமாத்துனேன்னு ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு இருக்கீங்க…” என்று அங்கிருந்த மருந்து பாட்டிலை எல்லாம் தள்ளி விட்டவன்,

“நீயும் ஏன்டா அவளை மாதிரியே பேசுற. உனக்கு தெரியுமா நான்… நான் அவளை எவ்ளோ லவ் பண்றேன்னு? அவள் தான் என் உயிரு. அவள் இல்லாம… அவள் இல்லாம… எனக்கு ஒண்ணுமே இல்லடா.

ஆமா நான் ஏமாத்துனேன் தான். நீ சாகுறதுக்கு அவள் தான் காரணம்னு நினைச்சு தான், அப்படி பண்ணேன். ஏதோ கோபத்துல பண்ணுனேன்.

என் மனசுல ஆழமா பதிஞ்சு, என்னை தினமும் டிஸ்டர்ப் பண்ண பொண்ணு என் தம்பியை காதலிச்சு ஏமாத்திருக்காள்ன்றதை என்னால நம்ப முடியல… அண்ட் ஐ காண்ட் அக்செப்ட் இட்…

அவ்ளோ கோபத்துலயும், நான் நான் அவளை அவ்ளோ லவ் பண்ணுனேன். அவளை கஷ்டப்படுத்தும் போது உள்ளுக்குள்ள எனக்கு எப்படி வலிக்கும் தெரியுமா” என்றவன்,

அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து, “எனக்கு தெரியுது நான் அவளை பயமுறுத்துறேன். அவள் மேல ரொம்ப கோபப்படுறேன்னு. ஆனால் அவள் என்னை பார்த்து பயப்படும் போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமாடா. ஏன்டா வாழுறோம்னு இருக்கும்.

அவள் சாப்பிடாம இருந்தா எனக்கு எனக்கு அவ்ளோ கோபம் வருது… மே பி  ஐ டோன்ட் நோ ஹொவ் டு எக்ஸ்பிரஸ் மை லவ்.. பட் ஐ லவ் ஹெர். ஐ லவ் ஹெர் அ லாட். அது அவளுக்கும் என்னைக்கும் புரிய போறது இல்லை… உனக்கும் புரிய போறது இல்ல…” என தன்னை மீறி புலம்பியவன், அப்படியே போதையில் எழுந்தவன், மீண்டும் அங்கேயே சோபாவில் விழுந்து,

“ஐ லவ் யு கயல்… ஐ லவ் யு சோ மச் டி. ஏண்டி என்னை புரிஞ்சுக்க மாட்டுற” என்று அப்படியே புலம்பிக் கொண்டு உறங்கி விட்டான்.

கார்த்தி ஜீவாவையே கண்ணீருடன் பார்க்க, அங்கு கயலும் அவனை தான் கண்ணில் வழிந்த நீருடன் பார்த்து கொண்டிருந்தாள். அவனின் கார் சத்தம் கேட்கும் போதே, கீழிறங்கி வந்திருந்தவள் கார்த்தியிடம் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டாள்.

கார்த்தியோ, ஜீவா கயலை காதலிக்கிறேன் என்று சொன்னதில் நிம்மதி ஆகி கயலைப் பார்க்க, அவளோ எதையும் யோசிக்க கூட முடியாமல் பிரம்மை பிடித்தவள் போல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

‘அவர் என்னை காதலிக்கிறாரா…? என்னை பார்க்கறதுக்கு முன்னாடியே காதலிச்சாரா? எப்படி…?’ என்று வெகுவாய் குழம்பி, விடிய விடிய உறங்காமல் யோசித்தவள், விடிந்த பின்னே ஒரு முடிவோடு உறங்கிப் போனாள்.

காலையில் வெயில் தன் மேல் சுள்ளென்று அடிப்பதை உணர்ந்த பிறகே கண் விழித்த ஜீவா, ‘என்ன இது நம்ம ரூம் மாதிரியே இல்ல…’ என்று புரியாமல், சுற்றி முற்றி பார்க்க, அதன் பிறகே கார்த்தி அறையில் படுத்திருக்கிறோம் என்று உணர்ந்தவனுக்கு, எஸ்டேட்டில் அமர்ந்து மூச்சு முட்ட குடித்தது மட்டும் தான் நினைவில் இருக்கிறது.

கோபமோ, இயலாமையோ எது வந்தாலும் குடிப்பதை பழக்கப்படுத்தி இருந்தவன், தனி அறையில் தான் குடிப்பான். இதுவரை கார்த்திக்கு கூட அவன் குடிப்பது தெரியாது.

ஆனால் இன்று குடித்து விட்டு கார்த்தியின் அறையிலேயே படுத்திருக்கிறோமே என்று நொந்தவன், தலைவலியில் தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

கார்த்தி அப்போது தான் நடைப்பயிற்சி முடித்து விட்டு, உள்ளே வர, ஜீவா “நான் எப்படி இங்க வந்தேன்…?” என்று கேட்டான் நிமிராமல்.

கார்த்தி “நைட் நீங்க என்கிட்ட பேசிகிட்டு இருந்தீங்கண்ணா அப்படியே இங்க தூங்கிட்டீங்க” என்று சொல்ல,

“என்ன பேசுனேன்” என்று சந்தேகமாய் கேட்டவன் எதையும் உளறி விட்டோமோ என்று குழம்பினான்.

கார்த்தி அவனை குறுகுறுவெனப் பார்த்து, “சும்மா தான் அண்ணா, நாட்டோட நிதி நிலைமையை பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்…” என்று நக்கலாக கூற,

ஜீவா அவனை முறைக்கையிலேயே, கயல் அங்கு வந்தவள், “கார்த்தி சாப்பிட வா… “என்று விட்டு, கையில் வைத்திருந்த லெமன் ஜூஸ் கிளாசை ஜீவாவின் முன் டொம்மென்று வைத்து விட்டு, வெளியில் செல்ல. அவள் வைத்த வேகத்தில் ஜூஸே அவன் மேலே லேசாக சிதறியது.

ஜீவா தான், ‘ம்ம்ஹும் நம்ம அம்மணியே  சூடா இருக்குன்னா நம்ம ஏதோ பெருசா பண்ணிருக்கோம். ஆனால் கார்த்தி ரூம்ல தான இருந்தோம், இங்க இருந்துகிட்டு அவளை என்ன பண்ணிருப்போம்’ என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே ஞாபகம் வரவில்லை.

அப்படியே அவன் அமர்ந்திருக்க, கயல் அடுக்களையில் இருந்து “கார்த்தி, உன்னை தான் சாப்பிட கூப்பிட்டேன். எல்லாரையும் தனி தனியா கூப்பிட முடியாது.” என்று சத்தம் கொடுக்க, கார்த்தி, வேகமாக வெளியில் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

பின் ஜீவாவும், அவன் அறைக்கு சென்று கிளம்பி கீழே வர, கார்த்தி, “அண்ணா சாப்பிட வாங்க” என்றதும், கயலை பார்த்துக் கொண்டே அங்கு சென்று அமர்ந்தான்.

கயலோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. ஜீவாவோ நம்மளை ஏதாவது கேட்டுடுவாளோ என்று நினைத்து, போனை பார்த்து கொண்டே சாப்பிட, கார்த்தியும், அப்போது தான் போனை எடுக்க போனான்.

அதில் அவனிடம் இருந்து போனை வாங்கிய கயல், “சாப்பிடும் போது என்ன செல்போன் வேண்டியது இருக்கு. தட்டை பார்த்து சாப்பிடணும்…” என்று முறைக்க, ஜீவா தன்னிச்சையாக போனை கீழே வைத்திருந்தான்.

கார்த்தி ஜீவாவை ஓரக்கண்ணால் பார்த்து, ‘உங்களுக்கு சோதனை காலம் ஆரம்புச்சுடுச்சு போல அண்ணா…’ என்று சிரித்துக் கொள்ள, ஜீவா சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து வெளியவே ஓடி விட்டான்.

அவன் ஓடியதைக் கண்டு மெலிதாய் சிரித்த கயல், ‘எங்க ஓடுனாலும் திரும்ப வீட்டுக்கு தான வந்தாகணும் வாங்க பார்த்துக்கறேன்…’ என்று மனதில் திட்டி கொண்டாள்.

ஜீவா, எஸ்டேட்டில் நடந்த அந்த டெட் பாடி பிரச்னையை சமாளித்து, இந்த பிரச்சனையால் எஸ்டேட்டில் நின்று போன அவனின் வேலைகளை சரி செய்து விட்டு, வீட்டிற்கு வரவே இரவாகிப் போனது.

இந்த வேலைகளுக்கு நடுவிலும், முந்தைய நாள் என்ன நடந்தது என்று யோசிக்க தவறவில்லை. மெதுவாக வீட்டிற்குள் வந்தவன், கார்த்தியும், பூவரசியும் அவரவர் அறையில் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு, அவனின் அறைக்குள் செல்ல, அங்கு கயல் கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்.

‘இவள் ஏன் இன்னும் தூங்காம இருக்காள்…’ என்று நினைத்து விட்டு, அவளைப் பாராமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டவன், பின்,’ எப்படி இருந்தாலும் நம்ம அவள்கிட்ட தப்பா எதுவும் நடந்துருக்க மாட்டோம். நம்ம தான் இந்த ரூம்லயே இல்லையே’ என்று தன்னை சமாதானப்படுத்தி விட்டு, எப்போதும் போல் கெத்தாக வெளியில் வந்தான்.

ஆனால் அதற்குள் கயல் புத்தகத்தை கையில் வைத்தபடி உறங்கி விட, ஜீவா அந்த புத்தகத்தை மெல்ல எடுத்து, டேபிளில் வைத்து விட்டு, அவளை தலையணையில் படுக்க வைத்து, நெற்றியில் முத்தமிட்டவன், அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

வெகு நேரம் அவனுக்காக காத்திருந்ததில் சற்று  கண்ணயர்ந்தவள், ஜீவா அவளின் புத்தகத்தை எடுக்கும் போதே விழித்திருந்தாள்.

இதில் அவன் முத்தம் கொடுத்ததும், டக்கென்று விழித்து விட்டவள், அவனை பே வென பார்க்க, ஜீவாவும் அவள் கண் விழிக்கவும் திருதிருவென முழித்தான்.

பின், ஒன்றும் நடக்காத மாதிரி மறுபுறம் சென்று படுத்து போர்வையை போர்த்தி கொண்டவன், ‘ஐயோ நேத்துல இருந்து எல்லாம் நான் சிங்காவே போகுதே, எனக்கு இவள் பயந்தது போய் இப்போ இவளுக்கு நான் பயப்பட வேண்டியதா இருக்கு…’ என்று புலம்ப, கயலோ, அவன் கொடுத்த முத்தத்திலேயே உறைந்து விட்டாள்.

‘அடப்பாவி, அப்போ தினமும் நீ தான் எனக்கு முத்தம் கொடுத்துட்டு இருக்கியா. இது தெரியாம நான் கனவுல நடக்குதுன்னு லூசு மாதிரி நினைச்சுட்டு இருந்துருக்கேன்…’ என்று தன் தலையிலேயே கொட்டி கொண்டவள், அவன் தோளை உலுக்கி எழுப்பினாள்.

‘நம்ம ஸ்வீட் ஹார்ட் தான் நம்மளை தொட்டு எழுப்புறாளா? இல்ல நம்மளும் அவளை மாதிரி கனவு கண்ணுறோமா’ என்று
சற்றே யோசித்தவன், அவள் மேலும் அவனை உலுக்குவதை உணர்ந்து எழுந்து, “என்ன கயல்?” என்று புரியாமல் கேட்க, அவள் அவனை முறைத்தாள்.

‘ஏன்டா இவ்ளோ பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி என்ன கயல் நொண்ண கயல்ன்னு கேக்குற’ என்று பார்க்க,

ஜீவா, “எதுக்கு என்னை எழுப்புன?” என்று சற்று குரலை உயர்த்தி கேட்க,

“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள்.

‘ஏன் முத்தம் குடுத்தன்னு கேட்பாளோ? கேட்டா என்ன அவள் என் பொண்டாட்டி நான் முத்தம் குடுப்பேன்’ என்று மனதில் அவனுக்குள்ளயே பேசிக்கொண்டிருக்க, கயல், “ஜீவா நான் கேட்கவா வேணாமா” என்று அழுத்திக் கேட்டதில், ஜீவா அவளை தான் ஆச்சர்யமாய் பார்த்தான்.

இப்போது தான் முதன் முறையாய் உரிமையாக அழுத்தம் திருத்தமாக அவனிடம் பேசுகிறாள்.

இல்லை என்றால் அவள் குரலில் பயமும், கோபமும் மட்டுமே இருக்கும் என்று மகிழ்வுடன் நினைத்தவன், “ம்ம்” என்று தலையாட்டினான்.

“அஸ்வின் யாரு…?” என்று கயலின் கேள்வியில், ஜீவா மீண்டும் இறுகி விட்டான்.

சிறிது நேரம் அமைதியாக இருக்கவும், கயல், “ஜீவா… உங்களை தான் கேட்டேன் அஸ்வின் யாரு? அவங்க அம்மா இறந்ததுக்கு நீங்க தான் காரணமா” என்று கேட்க,

ஜீவா, மேலும் கடினமாகி “உனக்கு எப்படி அவனை தெரியும்? என்றான் கூர்மையாக.

“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க அப்பறம் நீங்க கேட்டதற்கு நான் பதில் சொல்றேன்” என்று கயல் பிடிவாதமாய் இருக்க, ஜீவா பெருமூச்சு விட்டு,

“அஸ்வின் என் கூட பிறந்த தம்பி…”என்றான் அமைதியாய். இப்போது கயல் தான் வெகுவாய் திகைத்து விட்டாள்.

தொடரும்..
-மேகா  

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
64
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.