17 – விடா ரதி…
“நீங்க இப்போ காதலிக்கறீங்கன்னு அவளுக்கும் தெரியுது ரகு… ஆனா அவ குழப்பமே முன்ன நீங்க அவள காதலிச்சீங்களான்னு தான்…. “
“அதுக்கும் என் காதல் ஒன்னு தான் பதில் வருண்….”
“அப்போ நீங்க அவள காதலிக்கவே இல்லையா?”
“அப்போவே அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் … சரவணன் கல்யாணத்துல அவ என்னை பார்த்த பார்வை எனக்குள்ள ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினது நிஜம்…. அதுக்கப்பறம் அவள பாக்கவே தினம் போனேன்… சொல்லப்போனா அது என் பழக்கமாவே மாறிடிச்சி….. ஆனா அத எல்லாம் நானும் உணராமயே செஞ்சிட்டு இருந்தது தான் எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல…. உண்மையா சொன்னா அந்த உணர்வு தான் காதல்ன்னு அப்போ நான் உணரல வருண்… “, ஆழ்ந்த மூச்செடுத்து அவன் கூறிய விதம் அவனுள் பெரும் வருத்தம் இருக்கிறதென உணர்த்தியது.
வருண் ஆதரவாக அவனது தோளில் கைவைத்தான்.
“நான் படிச்சது எல்லாம் மெட்ராஸ்ல வருண் … அங்க பொண்ணுங்ககிட்ட ஈசியா பேசி பழகுவோம்… நிறைய கலாய்ச்சிப்போம்…. இன்னும் சொல்லப்போனா அது பேர் இல்லாத பழக்கமா கூட நிறைய மாறும்…. கொடைக்கானல் வந்து நான் கடை ஆரம்பிச்ச புதுசுல இவ பண்றது எல்லாம் எனக்கு என் காலேஜ் டேஸ் அஹ் ஞாபகப்படுத்திச்சி…. அந்த நெனைப்புல தான் நானும் அவளை கவனிச்சேன்… பல தடவ எதுவும் காட்டிகலன்னாலும், சில தடவ நானும் அவளை தேடினேன், அப்போ எல்லாம் என் கண்ணு காட்டின ஆர்வத்த அவ சரியா புடிச்சிருக்கா… நான் உணராத எனக்குள்ள இருந்த காதல அவ உணர்ந்திருக்கா….”
“ரகு……”
“புரியுது வருண்.. சின்ன பொண்ணோட மனச கலைச்சது தப்பு தான். அது உணர்ந்தப்போ தான் நான் அன்னிக்கி அவகிட்ட காதலிக்கலன்னு சொன்னது…. அவ கொஞ்சம் நின்னு அடுத்து நான் பேசினத கூட கேக்கல…. அப்படி கேட்டு இருந்தா ஒன்னு அவளோட காதல அவளே என்கிட்ட வந்து சொல்லி இருப்பா.. இல்லையா என்னை மறக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சி இருப்பா….”
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சின்னு அவளுக்கு புரிஞ்சுமே அவளால மறக்க முடியல ரகு இத்தன வருஷமா….. ரெண்டு வருஷம் முன்ன ஆகலன்னு தெரிஞ்சி அவ எவ்ளோ சந்தோஷப்பட்டான்னு ஸ்வே சொன்னா…. அந்த பொண்ணுக்கு உங்கமேல அப்புடி ஒரு தீரா காதல்… நல்லவேளை இன்னிக்கி நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. இல்லைன்னா அவ கடமைக்குன்னு தான் வாழ்ந்து இருப்பா வேற யார கல்யாணம் பண்ணி இருந்தாலும்…. உங்கள அவ மறக்க வாய்ப்பே இல்லை எனக்கு தெரிஞ்சு….”
“நாமலுமே நம்ம முதல் காதல மறக்கமாட்டோம் தான் வருண்… அவளுக்கு நான் தான் முதல் காதல் அதுவும் கொஞ்சம் ஆழமான காதல் தான். நானே கடைசி காதலாவும் இப்போ மாறினது கண்டிப்பா என் அதிர்ஷ்டம் தான்….
அவளோட தடுமாற்றம் நியாயம் தான். அத நான் சரி பண்ணனும்….”
“உங்களால மட்டும் தான் முடியும்… நீங்க கைல கெடைச்சும் முழுசா இன்னும் அவளால ஏத்துக்க முடியல… மனசுல ரொம்பவே தவிக்கறா ரகு….. சீக்கிரம் அவளுக்கு அமைதிய குடுங்க….”, எனக் கூறினான்.
அதன்பின் இருவரும் மற்ற விசயங்களைப் பேசியபடிப் பொருட்களை வாங்கிக்கொண்டு இல்லம் வந்துச் சேர்ந்தனர்.
“ரொம்ப குளிருது… கொஞ்சமா சரக்கு அடிக்கலாமா ரகு?”, வருண் கேட்டான்.
“அடிக்கலாம் தான்.. ஆனா உங்க வைஃப் விடுவாங்களா?””
“எந்த பொண்டாட்டி ப்ரோ சரக்கடிக்க விடுவாங்க? நாம அடிச்சிட்டு வந்து அடி வாங்கிக்க வேண்டியது தான்…”
“ஹாஹாஹா.. அதுவும் சரி தான்…. இந்த பக்கம் போனா பார் இருக்கு.. போயிட்டு வரலாமா?”, ரகு தாழ்ந்த குரலில் கேட்டான்.
“போலாம்…. இருங்க வந்துடறேன்…”, என வருணும் மெல்லக் கூறிவிட்டு அறைக்குச் சென்று ஸ்வெட்டர் அணிந்துக் கொண்டு வந்தான்.
இருவரும் மெல்ல வெளியே செல்ல ரதி பார்த்துவிட்டு, “மறுபடியும் வெளிய போறீங்களா?”, எனக் கேட்டாள்.
“ஆமா ரதி… வெளிய போயிட்டு வரோம்.. நீங்க வீடு லாக் பண்ணிக்கோங்க… கொஞ்சம் லேட் ஆகும்.. கடையும் காமிச்சிட்டு வரேன்….”
“நாளைக்கு சுந்தரி வந்தா எல்லாரும் ஒண்ணா போலாம்ன்னு இருந்தோம்…. சரி சீக்கிரம் வந்துடுங்க….. கார் எடுத்துட்டு போங்க…”, எனக் கூறியனுப்பினாள்.
“ரதிக்கு மட்டும் நாம எங்க போறோம்-ன்னு தெரிஞ்சா இப்படி சொல்வாளா?”, வருண் சிரித்தபடி கேட்டான்.
“இன்னும் நான் அடி வாங்கள ப்ரோ. இன்னிக்கி வாங்குவேன்னு நினைக்கறேன்…. “, என ரகுவும் சிரித்தபடி முதலில் கடைக்குக் சென்று அவனுக்கு காட்டிவிட்டு, அன்றைய கணக்கு வழக்குகளை முடித்துக் கடையைப் பூட்டி சாவியை வீட்டில் சென்றுக் கொடுத்து விடுமாறு கூறிவிட்டு ஊரைப் பார்த்தபடி ஒரு ஹை – கிளாஸ் பாருக்கு சென்றனர்.
வருணும், ரகுவும் ஏறத்தாழ ஒரே வயதுள்ளவர்கள் என்பதால் நன்றாகவே ஒன்றிக்கொண்டனர். இருவரின் விருப்பங்களும் அநேக விசயங்களில் ஒன்று போல இருக்க, நண்பர்களாகி இருந்தனர் அன்று இரவே….
“என்ன டி ரெண்டு பேரையும் இன்னும் காணோம்….. “, ஸ்வே நேரத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“இது கடை மூடற நேரம் தான்… சாவி வாங்கிட்டு வருவாங்கன்னு நினைக்கறேன்….”, ரதியும் வாசலை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
நேரம் 10.30 மணியைத் தொட்டும் இருவரும் வரவில்லை, கடை பையன் வந்து சாவியை மட்டும் கொடுத்தான்.
“கணபதி… உங்கண்ணன் எங்க டா? இன்னும் வரல… எதாவது சொல்லிட்டு போனாறா?”, ரதி கேட்டாள்.
“தெரியல்லக்கா…. சாவிய வீட்ல குடுக்க சொன்னாரு அதான் கொண்டு வந்தேன்… அவர் ப்ரெண்ட் கூட தான் வெளிய போனாரு…. நான் எங்க இருக்காருண்ணு பாக்க சொல்லவாக்கா பசங்ககிட்ட…?“
“அப்படியா.. .சரி நீ போ… பக்கத்துல தான் எங்கயாவது போயிருப்பாங்க ரெண்டு பேரும்… நீ பாத்து வீட்டுக்கு போ…”
“ரதி… இன்னிக்கி குளிர் அதிகமா இருக்குல்ல… இன்னும் பனி காலத்துல எல்லாம் எப்படி குளிரும் இங்க?”, என ஸ்வே கேட்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்படி இருக்குமோ?”, ரதி ஸ்வேதாவை பாத்துக் கேட்டாள்.
“இருந்தாலும் இருக்கும் டி… ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டு தான் வெளிய போனாங்க….”, ஸ்வே இப்போது திடமாகவே கூறினாள்.
“ஃபோன் போட்டு பாக்கலாம்….”, என ரகுவிற்கு அழைக்க வீட்டில் தான் ரிங் அடித்தது. வருணும் வீட்டிலேயே தொலைபேசியை வைத்துவிட்டுச் சென்றிருந்தான்.
“ரெண்டும் நல்லா சின்க் ஆகிரிச்சி போல டி… இப்போ எங்க போய் தண்ணியடிச்சிட்டு இருக்காங்களோ?”
“இரு கடை பையனை கூப்பிடுறேன்…”, என சாவி கொடுத்தவனுக்கு அழைத்து ரகு எங்கிருக்கிறான் என்று தெரிந்துச் சொல்லச் சொன்னாள்.
“அண்ணே வழக்கமா போற ஸ்டார் ஹோட்டல் தான் போய் இருப்பாருக்கா.. இருங்க அங்க எனக்கு தெரிஞ்ச பையன் வேலை பாக்கறான் பாத்துட்டு சொல்ல சொல்றேன்…”
சில நிமிடங்களில் இருவரும் அங்கே தான் இருக்கின்றனர் என்று தெரிந்ததும், வீட்டை பூட்டிக் கொண்டு அங்கே சென்றனர்.
ஒரு முழு பாட்டில் காலியாகி உருண்டுக் கொண்டிருந்தது. இருவரும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தனர்.
“இவங்கள….”, ரதி பல்லைக் கடித்தாள்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… வண்டில மொதல் ஏத்துவோம் வா…”, என இருவரும் அவர்களைத் தோளில் கைப்போட்டுத் தாங்கிப் பிடித்துக் காருக்குக் கொண்டு வந்து அமரவைத்தனர்.
“ ஸ்வே.. நீ ஸ்கூட்டில முன்ன போ.. நான் பின்ன கார்ல வரேன்….”
“சரி.. பாத்து வா….”
இருவரும் வீடு வந்து அவர்களை தங்கள் அறைகளுக்கு இழுத்துக் கொண்டுச் சென்றனர்.
“நா வரல.. என் நண்பன் கூட தான் இருப்பேன்… நண்பா… என் நண்பா… . வருணா….. அருணா…. இன்னொரு ரவுண்ட் போவோமா?”, ரகு பிதற்றினான்.
“நண்பா… போலாம் டா….. ரகுபதி பசுபதி வித்யாபதி…… எனக்கு ஒரு பிளேட் சிக்கன் 75….”, வருண் ஒருபக்கம் உளறினான்.
இருவரையும் அறையில் படுக்க வைத்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தனர்.
“என்னடி இப்படி ஜெல் ஆகிட்டாங்க….?”, ரதி கேட்க, ஸ்வே முதலில் இவர்களுக்கு போதை தெளிய வைக்கலாம் என்றாள்.
“ஒரு ஃபுல் உள்ள போய் இருக்கு… எங்க தெளியறது? நாளைக்கு அவங்களே தெளிஞ்சா தான்….”
“சரி நாம எங்க தூங்கறது?”, ஸ்வே.
“நான் மேல தான் போயாகணும்…. நீ பக்கத்து ரூம்ல படுத்துக்கோ….”
“நானும் அங்கேயே போறேன்.. இப்போ தான் உண்மை வெளிய வரும்….”, என ஸ்வே கூறியதும் ரதியின் கண்கள் மின்னியது.
“சரி நான் ரூம் போறேன் ஸ்வே.. குட் நைட்…”
ரதி வேகமாக அறைக்கு வந்தவள், போதையில் படுத்திருக்கும் கணவனைக் கண்டாள். அவனுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும், குடிப்பழக்கமும் இருக்கிறதென அவனை காதலிக்க ஆரம்பித்த நாட்களிலேயே அவளுக்குத் தெரியும். புகைப் பிடிப்பதை அவனாகவே இப்போது விட்டிருந்தான். குடி பழக்கம் அவ்வப்போது இருந்தது தான்.
“ராக்கி…. ராக்கி….”, எனத் தட்டினாள்.
“நண்பா.. நண்பா…”
“நண்பா வா…. பிச்சிடுவேன்… நான் ரதி டா…”
“ஹேய் ரதி.. வா வா… ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.. என்னை மறக்க நீ குடிச்சி மாட்டின தானே,….”, எனக் கூறிக் கேவலமாகச் சிரித்தான்.
“வாய மூடு…. இப்படி நாத்தம் வருது.. என்னத்த குடிச்ச?”
“விஸ்கி டி என் கிஸ்ஸி…. செம்ம ரைமிங்கா இல்ல….. விஸ்கி….கிஸ்ஸி …. “, என மீண்டும் சிரித்தான்.
“உன் கிஸ்ஸி தான்… ஒன்னு கேட்டா சொல்வியா டா”
“என்ன செல்லம் வேணும் கேளு.. உனக்கு இல்லாததா?”
“நீ என்னை லவ் பண்ணியா டா?”
“லவ் பண்றேன் டி.. இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப அதிகமா லவ் பண்றேன்….. லவ் யூ டி மை டியர் பொண்டாட்டி….”, என அவள் கன்னத்தை இழுத்து முத்தம் கொடுத்தான்.
“சீ… நாறுது.. தள்ளி போடா…. நான் இப்போ கேக்கல… 8 வருஷம் முன்ன என்னை காதலிச்சியா?”
“அத கேட்காத டி…. நான் சொல்ல மாட்டேன்… அது ரகசியம்….. “, என மீண்டும் அவளை இழுத்து மடியில் அமர்த்தினான்.
“என் செல்ல புருஷன் தானே நீ… சொல்லு டா…. உனக்கு என்ன வேணுமோ தரேன்….”
“நிஜமாவா?”, மெதுவாக ஹஸ்கி குரலில் கேட்டான்.
அவளும் அதே போல ஆமாம் என்று கூறினாள்.
“சொல்றேன்.. ஆனா நீ யார்கிட்டேயும் சொல்லக் கூடாது. சரியா?”
“சரி சொல்லல.. நீ சொல்லு…”, ஆர்வமாக அவனைப் பார்த்தாள்.
“நான்.. நான்….. ரதிய… ர… தி…ய….”, எனக் கூறியபடி அப்படியே மயங்கிவிட்டான்.
அதன்பின் அவள் எவ்வளவு எழுப்பியும் எழவில்லை. ரதிக்கு தான் கடுப்பாகி போனது. போதையில் கூட சொல்லமாட்டேன் என்கிறானே என்று….
அடுத்தநாள் காலையில் 8 மணிக்கு ரகு எழுந்தான். அதற்கு முன் வருண் எழுந்து ஸ்வேதாவிடம் பலமான பூஜையைப் பெற்றுக் கொண்டிருந்தான்.
ரதி காப்பி கோப்பையுடன் மேலே வந்து அவனருகில் வைத்துவிட்டு ஊஞ்சலில் அமர்ந்தாள்.
“குட் மார்னிங் ரதி….”, தலையைப் பிடித்தபடிக் கூறினான்.
“சாருக்கு நைட் என்ன பண்ணீங்கன்னு ஞாபகம் இருக்கா?”, ரதி கண்களில் கோபத்துடன் கேட்டாள்.
“என்ன பண்ணேன்?”
“மட்டை ஆகற அளவுக்கு குடிச்சிட்டு இருந்தீங்க..”
“ஹோ… வருணும், நானும் நல்லா செட் ஆகிட்டோம்.. அந்த சந்தோசத்துல கொஞ்சம் அதிகமாகிடிச்சி…. சாரி….”
“அளவா இருக்கறவரைக்கும் நல்லது… “, எனக் கூறிவிட்டு அவனிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தாள்.
“எது ?”
“போதை தான்….”, என முறைப்புடன் கூறினாள்.
“அது கஷ்டம் தான்…”
“ஏன் கஷ்டம்?”
“அத விட பெரிய போதை எனக்கு இருக்கு?”
அப்படி கூறியதும் அவள் அதிர்ந்து, “அது என்ன பழக்கம்?”, என அவசரமாக அவனருகில் வந்துக் கேட்டாள்.
அவன் எதுவும் கூறாமல் பாத்ரூம் உள்ளே சென்றுவிட்டான்.
வெளியே அவளோ யோசனையுடன் வேறென்ன போதை பழக்கம் அவனுக்கு இருக்குமென மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.
அவனோ மெதுவாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தான்.
அவளிடம் இருந்த கோப்பையை அவன் வாங்கி அருந்திக் கொண்டே ஊஞ்சலில் சென்று அமர்ந்தான்.
“இத தவிர என்ன போதை இருக்கு உங்களுக்கு?”, அவன் அருகில் வந்துக் கேட்டாள்.
அவளின் பதட்டமான முகத்தைப் பார்த்தபடி மெதுவாக காபியைக் குடித்தான்.
“சொல்லுங்க ரகு …”
“ராக்கி…”
“சோ… சொல்லு ராக்கி….”
அவனோ புருவத்தை உயர்த்திக் காட்டினான். “வாய தொறந்து சொல்லு ராக்கி…”
“ம்ம் …”
“ச்ச…இப்போ சொல்ல போறியா இல்லையா?”
“என் போதையே நீ தான் டி… ”, எனக் கூறி இதழணைத்தான்.