Loading

அத்தியாயம் 17

 

மறுநாள் துவக்கமே, அந்த வீட்டினருக்கு கார்த்திகேயன் மற்றும் குமரகுருபரனின் கத்தலில் தான் துவங்கியது.

 

“யாரைக் கேட்டு அவனை திரும்ப வர சொன்னீங்க? அப்படியே வந்தாலும் ஆரத்தி எடுத்து உள்ள சேர்த்துப்பீங்களா?” என்று சின்னவன் துள்ள, “ஆமாடா, ஆரத்தி எடுத்து தான் உள்ள அழைச்சுட்டு போனோம். இப்போ எதுக்கு இந்த துள்ளு துள்ளிட்டு இருக்க?” என்று மகனை கடிந்து கொண்டார் சோபனா.

 

அதில் அன்னையை முறைத்தவன் ஏதோ கூற வர, அதற்குள் கார்த்திகேயன் சக்திவேலிடம், “சித்தப்பா, அவன் எதுக்கு வந்தான்னு கேட்டீங்களா?” என்று விசாரித்தான் பொறுமையாக.

 

“க்கும், எங்க? வாயை திறந்தா தான? அப்பாக்கு கூட மரியாதை இல்ல கார்த்தி.” என்று தம்பி பேசுவதற்கு முன்னர் ஆஜரானார் கார்த்திகா.

 

“கார்த்தி எதுக்கு தேவையில்லாத பேச்சு? ரெண்டு பேரும் முதல்ல ஃபிரெஷாகிட்டு வாங்க.” என்று வெற்றிவேல் கூற, “பெரியப்பா, எப்படி இவ்ளோ கூலா இருக்கீங்க?” என்ற குமரகுருபரன் ஏதோ சொல்லப் போக, “ஏன், இப்போ நீங்க குதிச்சுட்டு இருக்க மாதிரி, எல்லாரும் தாம்தூம்னு குதிக்கணுமா?” என்றவாறே வந்தார் சக்கரவர்த்தி.

 

மீண்டும் வந்த பேரனின் வரவால் அவரின் கம்பீரமும் மீண்டிருந்தது போலும்!

 

கீழே இத்தனை பிரச்சனை நடந்து கொண்டிருக்க, அதன் காரணகர்த்தாவோ விழித்திருந்தும் கீழே போக பிடிக்காமல் படுத்திருந்தான்.

 

அவன் மனதிற்குள் பல யோசனைகள். இங்கு வந்தது சரியா? அவன் செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி பெறுவானா? அதனால், அவனுக்கோ அவனை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை வருமா? 

 

இப்படி பல விடை தெரியாத கேள்விகளுடன் அவன் மல்லுகட்டிக் கொண்டிருக்க, அப்படி எவ்வித குழப்பங்களும் இல்லாமல் துயில் கொண்டிருந்த துவாரகா, உறக்கத்தில் அவனருகே வந்திருக்க, அவன் உதட்டில் புன்னகையும் மீண்டிருந்தது.

 

“இதே மாதிரி எந்த கவலையும் இல்லாம இருக்கணும் குட்டிம்மா.” என்று முணுமுணுத்தவன் கீழே இறங்கி சென்றான்.

 

அப்போது சக்கரவர்த்தி தான் பேசிக் கொண்டிருந்தார்.

 

“அவனை நான் தான் வர சொன்னேன். இப்போ என்ன? நேத்தே சொல்லிட்டேன், யாருக்கு விருப்பம் இல்லையோ, அவங்க தாராளமா வீட்டை விட்டு போயிடலாம். விருப்பம் இருந்தா பிசினஸை விட்டும்!” என்று கார்த்திகேயன் மற்றும் குமரகுருபரனை கூர்ப்பார்வை பார்த்தபடி கூறினார் சக்கரவர்த்தி.

 

“ஓடிப் போனவனுக்காக எங்களை விலக்கி வைக்குறீங்களா?” என்று குமரகுருபரன் வினவ, அவனை அடக்கிய கார்த்திகேயனோ, “ஏற்கனவே ஓடிப் போனவன் தான? இந்த முறை ஓட மாட்டான்னு என்ன நிச்சயம்?” என்று நக்கலாக பேசியவன் தம்பியை இழுத்துக் கொண்டு மேலே ஏறினான்.

 

அதே சமயம், படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் மயூரன்.

 

எவனை இந்த பக்கமே வர விடக்கூடாது என்று எண்ணி பல திட்டங்களை தீட்டினார்களோ, அவன் அதே மாளிகையில் இருப்பதைக் கண்டு இருவருக்கும் உள்ளம் கொதித்தது. கார்த்திகேயனுக்கு சற்று அதிகமாக!

 

இரவு முழுவதும் மதுவும் மாதுவும் என்று ஆட்டம் போட்டவர்களுக்கு அவனின் வருகை அன்று விடியற்காலையில் தான் தெரிய வந்திருந்தது.

 

உடனே, போதையில் இருந்து முடிந்தளவு விடுபட்டு வீட்டை நோக்கி ஓடி வந்திருந்தனர். அப்படி ஆரம்பித்தது தான் அந்த கலாட்டா!

 

இருவரும் கோபத்துடன் மயூரனை முறைத்துக் கொண்டிருக்க, அவனோ நக்கல் சிரிப்புடன் அவர்களை நெருங்கினான்.

 

அதுவே அவர்களை மேலும் வெறுப்பேற்ற, “ஹே, உன்னை தான் இங்க வரக்கூடாதுன்னு சொன்னோம்ல!” என்று குமரகுருபரன் வினவ, “ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட மயூரா.” என்று எச்சரிக்கும் குரலில் பேசினான் கார்த்திகேயன்.

 

அதில் ஏதோ நகைச்சுவையை கேட்டு சிரிப்பதை போல சிரித்த மயூரனோ, “என்ன போதை இன்னும் தெளியலையா, காமெடி பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவன் கூற, “உனக்கு தான் மெமரி லாஸ் போல. அந்த ஃபோட்டோ எல்லாம் ஞாபகம் இருக்கா இல்லையா? இன்னும் கவர்ச்சியா வேணும்னா ரெடி பண்ணவா?” என்று எகிறிக் கொண்டு  வந்தான் குமரகுருபரன்.

 

“உனக்கு தான் தம்பி மூளை குழம்பிடுச்சு போல! யாரை நீ அசிங்கப்படுத்தப் போற? உன் அண்ணியையா? அதை பார்த்துட்டு நம்ம தாத்தா உன்னை சும்மா விடுவாங்களா? ஏற்கனவே, கேட்டுருப்பியே… வெளிய போக சொல்லி சொன்னாரே… அதுவும் எனக்காக! இப்போ என்னோட பொண்டாட்டியை தப்பா ஃபோட்டோ எடுத்து போடுவியா? அப்பறம் சொத்தும் கிடையாது ஒன்னும் கிடையாது.” என்று சிரித்துக் கொண்டே கூற, அதைக் கேட்ட மற்ற இருவரின் முகம் தான் கர்ணகடூரமாக மாறி இருந்தது.

 

“ஹான், சொல்ல மறந்துட்டேன்… உங்களுக்கு ஹெல்ப் பண்ணாளே… அவ பேரு என்ன… ச்சு, இப்போ பேரா முக்கியம்? அவளை போலீஸ் பிடிச்சுட்டாங்க.” என்று மயூரன் கூற, அதிர்ந்து தான் போயினர் இருவரும்.

 

“எதுக்குன்னா… கல்யாணமான கப்பில்ஸை அத்துமீறி தப்பா ஃபோட்டோ எடுத்ததுக்காக! நோட் திஸ் பாயிண்ட்… கல்யாணமான கப்பில்ஸ்! நீங்க வீடியோவே வெளிய விட்டாலும், அது உங்களுக்கு தான் அசிங்கம்! புரிஞ்சுதா?” என்றவனின் சிரித்த முகம் இப்போது கடுமையாக மாறியது.

 

“என்ன, எப்பவும் ஒதுங்கி போயிட்டே இருப்பேன்னு நினைச்சீங்களா? என்னை துரத்துன வரை ஒதுங்கி இருக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா, எப்போ என்னை சேர்ந்தவங்களை தொடணும்னு பிளான் போட்டீங்களோ… அப்போவே முடிவு பண்ணிட்டேன்… கவுண்ட் யுவர் க்ரைம்ஸ்… நீங்க குடுத்ததெல்லாம் திரும்ப குடுக்கணும்ல!” என்றவன் மீசையை முறுக்கி விட்டவாறு இறங்கிச் சென்றான்.

 

அவனின் முதுகை வெறித்து இரு சகோதரர்களும், இயலாமையில் வெம்மியபடி அவர்களின் அறைக்கு சென்றனர். மேரியை பற்றிய தகவலை அறிய வேண்டுமே!

 

*****

 

கீழே கலவர பூமியாக இருந்த இடம் சற்று அமைதியை தத்தெடுக்க, இறங்கி வந்த மயூரனிடம், “மருமக எங்க மயூரா? நீ மட்டும் தனியா வந்துருக்க? புது இடம்ல… பாவம் பொண்ணு பயந்துடப் போகுது.” என்றவாறே வந்த சோபனா, அவன் கைகளில் குளம்பிக் குவளையை தந்தார்.

 

மனைவியின் பேச்சே மன்னவனுக்கு சிரிப்பை கொடுக்க, “அவ மத்தவங்களை பயமுறுத்தாம இருந்தா சரி தான்!” என்றான்.

 

“அந்த பொண்ணா? அடப்போடா, பார்க்கவே அப்பாவியா இருக்குது.” என்று சோபனா அங்கலாய்க்க, “யாரு அப்பாவி? அவளா?” என்றவனுக்கு அவனை அந்தரத்தில் தொங்க விட்டது நினைவுக்கு வந்தது.

 

அப்போது அங்கு வந்த தேவி இன்னொரு குவளையை சோபனாவிடம் தர, “ஏன் நீங்க குடுத்தா வாங்க மாட்டேன்னு சொன்னானா? ஏன்கா இப்படி இருக்கீங்க?” என்று சலித்தபடி வாங்கிய சோபனா மயூரனிடம் கொடுக்க, அத்தனை நேரமிருந்த அவனின் சிரிப்பு மறைந்து போய், சலிப்பு அவ்விடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.

 

மயூரன் அங்கிருந்து நகர, தேவியை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் சோபனா.

 

“புருஷன் சொல்றதை கேட்டு நடக்குற பொண்டாட்டியை நான் பார்த்துருக்கேன் தான். ஆனா, அதுக்காக சொந்த பையனை விட்டுக் குடுத்த அம்மாவை இங்க தான் பார்க்குறேன். அவன் நிலைமை தெரிஞ்சும் எப்படி உங்களால இப்படி அமைதியா இருக்க முடியுதுக்கா? அவனை விடுங்க, மருமக வந்துருகாளே… அவளை விசாரிக்கணும்னு தோணுதா உங்களுக்கு? இந்த வீட்டோட முத மருமக… அவங்க கல்யாணத்தை தான் பார்க்கல… மத்ததாவது பார்த்து செய்ய வேண்டாமா? இதுக்கு கூட மாமா சொல்லணும்னு காத்துட்டு இருப்பீங்களா? இது ரொம்ப தப்புக்கா. அவ்ளோ தான் நான் சொல்லுவேன்.” என்று சோபனா கூறியது படிகளில் ஏறிக் கொண்டிருந்த மயூரனுக்கும் கேட்டு தான் இருந்தது.

 

அதோடு அவனின் தாயின் மௌனமும் தான்!

 

சலிப்புடன் அறைக்கு சென்றவனை வரவேற்றது மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த துவாரகாவே தான்.

 

அதில் வழக்கம் போல புன்னகை பூக்க, “என்ன தூங்குமூஞ்சி மேடம், தூக்கம் போதுமா?” என்றவாறு உள்ளே வந்த மயூரனை அதிர்ந்து நோக்கிய பாவையோ, “ரொம்ப லேட்டாகிடுச்சா மயூ?” என்று வினவினான் துவாரகா.

 

“ரிலாக்ஸ் வரா. புது இடம்… டிராவல் வேற… சரியா தூங்கி இருக்க மாட்ட. இங்க யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும், அதுக்காக நீ கவலைப்பட தேவையில்ல.” என்றான் மயூரன்.

 

அப்போது தான் சற்று நிம்மதியடைந்த துவாரகாவோ, இலகுவான மனநிலையுடன், தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, “ஹப்பா, இப்படி ஒரு ஹஸ்பண்ட் யாருக்கு கிடைப்பாங்க?” என்று கிண்டலுடன் கேட்க, “ம்ம்ம், முழுசா கம்ப்ளீட் பண்ணு வராம்மா. இப்படி ஒரு ஹஸ்பண்ட் யாருக்கு கிடைப்பாங்க. அதனால, அந்த அபூர்வமான ஹஸ்பண்டுக்கு என்ன தரலாம்னு யோசிச்சுருக்க?” என்றவன் குவளைகளை மேஜையில் வைத்து விட்டு மனைவியை நெருங்கினான்.

 

தலையணையை அவன் மீது எரிந்தவளோ, “இது மாதிரி பில்லோ பன்ச் தரலாம்னு இருக்கேன், ஓகேவா ஹஸ்பண்ட்?” என்று அவள் கலகலத்து சிரிக்க, அவள் எரிந்த தலையணையை பிடித்தவனோ, “தலையணை யுத்தமா?” என்று அவள் சொன்னதை தமிழில் மொழியாக்கம் செய்ய, அது பாவையின் வதனத்தில் வெட்கரேகையை பரப்பியது.

 

“ஃபிளர்ட்!” என்று அவள் முணுமுணுக்க, “ஹே வரா, நீ இப்போ என்னை ஹஸ்பண்ட்னு தான கூப்பிட்ட? அப்போ ஃபிரெண்ட் ஸோன் ஓவரா?” என்று ஆர்வமாக வினவ, அவனை தள்ளி விட்டு, “அதெல்லாம் இல்ல. நான் சொல்ற வரை ஃபிரெண்ட் ஸோன் தான். சோ, உங்க லவர் பாய் வெர்ஷனை அடக்கி ஃபிரெண்ட் வெர்ஷனுக்கு வாங்க மயூ.” என்று நாக்கை துருத்தி காட்டினாள்.

 

அவளின் செய்கை சிரிப்பை வரவழைக்க, “அப்போ இது ஃபிரெண்ட்லி ஹக்.” என்றவன், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

 

அணைப்பிலிருந்து வெளிவர விரும்பாத துவாரகாவும் அவனுக்குள் ஒடுங்க, இப்போது சற்று தீவிரமாக பேச ஆரம்பித்தான்.

 

“வரா, இன்னைக்கு நம்ம பிசினஸை பார்க்க ஆரம்பிக்க போறேன். இப்போ ஆரம்பிச்சா, கொஞ்ச நாளைக்கு பிஸியாகிடுவேன். உனக்கு ஓகேவா? இல்லன்னாலும் சொல்லிடு, உன் கம்ஃபர்ட் பார்த்து தான் மத்ததெல்லாம்.” என்று மயூரன் கேட்க, சற்று தயங்கினாள் துவாரகா.

 

புது இடம், பழகியிராத மக்கள்… அதுவும் சிலரை எல்லாம் எப்படி அணுகுவது என்றோ, அணுகுவதா வேண்டாமா என்றோ தெரியவில்லை.

 

அப்படியான சமயத்தில், கணவனும் தனியே விட்டு செல்வானோ எற எண்ணம் ஒருபக்கம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், எப்போதென்றாலும் அவன் செல்லத்தானே வேண்டும் என்று அவளுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

 

அவளை தன்னிடமிருந்து பிரித்தவனோ, “என்னடா? வேண்டாம்னாலும் சொல்லிடு. அதுக்கேத்த மாதிரி பார்த்துக்கலாம்.” என்று அவன் கூற, அதற்கு மேல் அவளை தடுக்க விரும்பாதவள், “அட நான் என்ன சின்ன பிள்ளையா? அதெல்லாம் மேனேஜ் பண்ணிடுவேன். என்ன, இப்போவரை யாரு கிட்டயும் பேசி பழகலையா, அதான் ஸ்டார்டிங் டிரபில்லா இருக்குமோன்னு யோசிக்குறேன்.” என்றாள்.

 

அவளின் புரிந்துணர்வில் புத்துணர்ச்சி கொண்டவன், “ஈஸி வராம்மா, சோபனா சித்தி கூட இரு. அவங்க டக்குன்னு அட்டாச்சாகிடுவாங்க. அவங்க அப்படியே உன் ரெப்ளிக்கா மாதிரி. வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க. ரெண்டு பேருக்கும் நல்லா செட்டாகும்.” என்றவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

 

அதுவரை அவன் கூறியதைக் கேட்டு நிம்மதியடைந்தவளோ, அவன் சிரிப்பிற்கான காரணம் அறியாமல் குழப்பமாக பார்க்க, அவனோ சற்று முன்னர் சோபனாவிடம் துவாரகா பற்றி பேசியதைக் கூறி, “அப்போ டக்குன்னு நீ என்னை தலைகீழா தொங்க விட்டது ஞாபகம் வந்துடுச்சு.” என்றான்.

 

“ப்ச், கிண்டல் செய்யக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டேனே மறந்துட்டீங்களா?” என்று சிணுங்கியவள் அவனின் அணைப்பில் இருந்ததால், அவள் முகம் நோக்கி குனிந்தவன், “அச்சோ, ரூல்ஸை வயலேட் பண்ணிட்டேனே. அப்போ பனிஷ் பண்ணிடு.” என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.

 

அவனின் குரலே வில்லங்கமாக ஒலிக்க, அவனிலிருந்து விடுபட்டவளோ, “ஊர் உலகத்துலேயே இப்படி பனிஷ்மெண்ட்டை சிரிச்ச முகமா கேட்டு வாங்குறது நீங்களா தான் இருக்கும். சரியான ஃபிளர்ட்!” என்றவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

அப்போது மயூரனின் அலைபேசிக்கு பாஸ்கர் அழைத்திருந்தான்.

 

“மயூரா, அங்க எல்லாம் ஓகே தான?” என்று அழைப்பை ஏற்றதும் இதை தான் கேட்டிருந்தான் பாஸ்கர்.

 

பாஸ்கருக்கும் இதே ஊர் தான். ஒரே பள்ளியில் தான் படித்தனர் இருவரும். சிறுவயது தோழன் என்பதால் மயூரனின் குடும்பம் பற்றி அனைத்தும் அறிவான் பாஸ்கர்.

 

என்னதான் பணம், பதவி என்று அனைத்தும் இருந்தாலும், பாசமில்லை என்று மயூரன் துவளும் போதெல்லாம் தோள் கொடுத்தது பாஸ்கரே.

 

மயூரனும், அவனின் ரகசியங்களை எல்லாம் தைரியமாக தெரிவிப்பதும் பாஸ்கரிடமே. அத்தகைய நட்பு அவர்களது!

 

இப்போது நண்பனின் பதற்றம் மயூரனுக்கு கண்களுக்கு தெரியாத தெம்பை கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

 

“எல்லாம் ஓகே தான் பாஸ்கி. நேத்து நைட் லேட்டாகிடுச்சு. அதான், உனக்கு கால் பண்ணல.” என்று மயூரன் கூற, “அந்த அடங்காத பாய்ஸ் எதுவும் சொல்லலையா? இந்நேரம் ஒரு ஆட்டம் ஆடியிருப்பானுங்களே.” என்று சரியாக யூகித்து கேட்டான் பாஸ்கர்.

 

“நைட் வீட்டுக்கு வர அவங்களுக்கு எங்க நேரம் இருக்கு? பாரெல்லாம் சுத்திட்டு காலைல தான் வந்தானுங்க.” என்ற மயூரன் நடந்ததை சுருக்கமாக கூற, “எதுக்கும் கேர்ஃபுல்லா இரு மயூரா. உங்க தாத்தாவை நம்ப முடியாது.” என்று எச்சரித்தான் பாஸ்கர்.

 

மேலும், “இதோ கிஷோரும் ஸ்பீக்கர்ல தான் இருக்கான்.” என்று பாஸ்கர் கூற, மயூரனின் இதழ்களோ கேலியாக வளைந்தன.

 

“மயூரா, என்ன இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்னு ஊருக்கு கிளம்பிட்ட?” என்று கிஷோர் வினவ, மயூரனோ அலட்டிக் கொள்ளாமல், “திடீர்னு தோணுச்சி கிஷோர்… சொல்லாம கொள்ளாம வந்து நின்னா, எல்லாரும் ஷாக்காவாங்கன்னு. அதான் கிளம்பி வந்துட்டேன். நினைச்சதை விட நல்லாவே ஷாக்கானாங்க.” என்றான்.

 

“அதுக்குன்னு எங்க கிட்ட கூட சொல்லாம…” என்று கிஷோர் இழுக்க, “நீயும் ஷாக்காவேல கிஷோர்!” என்றான் மயூரன் நக்கலாக.

 

அதில் அதிர்ந்த கிஷோரோ, “மயூரா…” என்று அழைக்க, “என்ன கிஷோர், இன்னும் உன் பாஸ் உனக்கு கால் பண்ணி திட்டலையா?” என்றான் மயூரன். இப்போது அவன் தொனியே மாறியிருந்தது.

 

இதில், எதுவும் புரியாமல் இருந்தது பாஸ்கர் தான்!

 

“மயூரா… அது வந்து…” என்று கிஷோர் திக்கி திணற, “அட இங்க என்னதான் நடக்குது? கிஷோரோட பாஸ் யாரு? அவரு எதுக்கு அவனை திட்டனும்? அது எப்படி உனக்கு தெரியும் மயூரா?” என்று தொடர்ந்து கேள்விகளை அடுக்கினான் பாஸ்கர்.

 

“என்ன கிஷோர் சொல்லிடலாமா?” என்று மயூரன் நக்கலாக வினவ, கிஷோரோ தலை குனிந்து கொண்டான்.

 

மயூரனோ ஒரு பெருமூச்சுடன், “கிஷோரோட பாஸ் வேற யாரும் இல்ல, தி கிரேட் கார்த்திகேயன் சக்கரவர்த்தி தான்!” என்று உண்மையை போட்டுடைக்க, திகைத்து போன  பாஸ்கரோ, அதிர்ச்சிலியிலிருந்து வெளிவந்ததும், “துரோகி…” என்றான் கிஷோரை பார்த்து.

 

“டேய் மயூரா, உனக்கு எப்படி இது தெரியும்? ஏன், என்கிட்ட சொல்லல? சொல்லியிருந்தா, அப்போவே இந்த துரோகியை அடிச்சு பத்தி விட்டுருக்கலாம்ல.” என்று பாஸ்கர் கூற, “அதுக்கு தான் சொல்லல பாஸ்கி. இவன் தான் கருப்பாடுன்னு தெரிஞ்சு கேர்ஃபுல்லா இருக்கலாம். இதே, இவனை துரத்தி விட்டு, புதுசா யாராச்சும் வந்தா, அவங்களை எப்படி கண்டு பிடிக்கிறது?” என்று மயூரன் அவனின் புத்திக்கூர்மையை வெளிப்படுத்தினான்.

 

“சரி, எப்போ எப்படி கண்டுபிடிச்ச, இவன் தான் கருப்பாடுன்னு?” என்று மீண்டும் பாஸ்கர் வினவ, “என்னோட டெயிலி ரொட்டீனை தோண்டி துருவும் போதே எனக்கு சந்தேகம் தான். இவனும் அப்பப்போ, யாருக்கிட்டயோ ரகசியமா பேசுறதை கவனிச்சுருக்கேன். அப்படி நான் பார்க்கும் போது, அவன் டென்ஷனாகுறதையும் பார்த்துருக்கேன். அதோட, அவன் இப்போ வேலை பார்க்குற கம்பெனியோட எம்.டி கார்த்திகேயனோட ஃபிரெண்டு. அதான், நம்ம போலீஸ் ஃபிரெண்ட் கிட்ட சொல்லி, அவனோட கால் ரெக்கார்ட்ஸை டிராக் பண்ண சொன்னேன். கருப்பாடு மாட்டிக்கிட்டான்.” என்றான் மயூரன்.

 

தன் குட்டு வெளிப்பட்டதில் அவமானமாக உணர்ந்த கிஷோரோ, “சாரி மயூரன். என் குடும்பத்தை காப்பாத்த வேற வழி தெரியல. கார்த்திகேயன் சார் குடுக்குற பணத்தால தான், இப்போ என் குடும்பம் நல்ல நிலைமைல இருக்கு.” என்று ஒப்புக்கொண்டவன், “நான் கிளம்புறேன்.” என்று கூறி அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கிளம்பி விட்டான்.

 

பாஸ்கருக்கு தான் கோபம் அடங்கவில்லை. அவன் கிஷோரை திட்டிக் கொண்டே இருக்க, “ஃபிரீயா விடு பாஸ்கி.” என்றவன், “இனிமே கொஞ்சம் பிஸியாகிடுவேன் பாஸ்கி. இவனுங்க என்னென்ன குளறுபடி பண்ணி வச்சுருக்காங்கன்னு பார்த்து, எல்லாம் சரி பண்ணனும்.” என்றான்.

 

“இது உனக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னா, நீ கேட்க மாட்ட.” என்று பாஸ்கர் சலித்துக் கொள்ள, “நோ பாஸ்கி, என்னை துடிக்க வச்சவங்களை அப்படியே விட மாட்டேன். ஒவ்வொரு தப்புக்கும் அவங்க பதில் சொல்லியாகணும்.” என்று அழுத்தத்துடன் கூறியவன், அப்போது தான் மனைவி குளியலறையிலிருந்து வந்ததைக் கண்டவன், “நான் அப்பறம் பேசுறேன் பாஸ்கி.” என்று மறுபக்கம் பாஸ்கர் சொல்ல வந்ததை கூட கேட்காமல் அழைப்பை துண்டித்து விட்டான் மயூரன்.

 

“அடப்பாவி, இது தான் பொண்டாட்டி வந்ததும் ஃபிரெண்டை கழட்டி விடுறது போல. ஹ்ம்ம், நமக்கு எதுவும் அமைய மாட்டிங்குது!” என்று புலம்பியபடி வேலையை பார்க்க சென்றான் பாஸ்கர்.

 

குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் வந்த துவாரகாவை கண்களால் கைது செய்து கொண்டிருந்த மயூரனிடம், “இப்போ என்ன அந்நியன் அவதாரமா?” என்று கிண்டலாக கேட்டபடி, தலையை துவட்ட, “நீ ஓகே சொன்னா ரெமோவா மாற ரெடி தான்.” என்றான் அவன்.

 

“ச்சு, நான் கிளம்பி வர வரைக்கும் கொஞ்சம் சைலண்ட்டா இருங்களேன்.” என்று அவள் கூற, அவனும் பாவம் பார்த்து அமைதியாக அலைபேசியை பார்வையிட, அவளும் தயாரானாள்.

 

இருவரும் ஜோடியாக இறங்கி வர, அது பலருக்கு எரிச்சலையும், சிலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது.  

 

அவர்கள் வந்ததும் சக்திவேலும் கார்த்திகாவும் எரிச்சலுடன் அங்கிருந்து எழுந்து சென்று விட, எதற்கு வம்பென்று கார்த்திகாவின் கணவர் சந்தானமும் அவருடனே சென்று விட, கதிர்வேலோ அவர்களை முறைத்துக் கொண்டே, “எனக்கு பரிமாறுறதை விட்டுட்டு, அங்க என்னடி பார்வை?” என்று மனைவியை அதட்டினார்.

 

இதில் ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்று அமைதியாக இருந்தவர்கள் வெற்றிவேலும், அவரின் மனைவி யமுனாவும் தான்.

 

சக்கரவர்த்தியோ, “வாங்க வாங்க. உங்களுக்காக தான் நான் வெயிட்டிங்.” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்க, அதற்கு தலையசைப்பை மட்டுமே கொடுத்தான் மயூரன்.

 

அவர்களுடன் பேசி பழக வேண்டும் என்று நினைத்த துவாரகா தான், “இந்த வயசுல எதுக்கு தாத்தா எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று வினவினாள்.

 

அதில் சிரித்த அந்த பெரியவரோ, “இத்தனை நாள் தனியா தான்மா சாப்பிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் உங்களோட சாப்பிடப் போறேன்.” என்று கூற, துவாரகாவிற்கே பாவமாகி விட்டது.

 

உணவு உண்டு கொண்டிருந்த கதிர்வேல் மற்றும் வெற்றிவேல் அங்கிருந்து எழ, மயூரனை பாவமாக பார்த்தாள் துவாரகா.

 

அதற்கு அவனோ அலட்டலில்லாமல், “அவங்க சாப்பிட்டு முடிச்சுருப்பாங்க வராம்மா. நம்ம சாப்பிடுவோம்.” என்றான்.

 

சோபனா தான் மூவருக்கும் பரிமாற, அவரை முறைத்துக் கொண்டே தான் சென்றார் கதிர்வேல்.

 

அப்படியும் பரிமாறிக் கொண்டிருந்தவரை ஆச்சரியமாக பார்த்த துவாரகாவை கண்ட சோபனாவோ, “புருஷன் முறைக்குறதுக்கு எல்லாம் பயந்து பின்னாடியே போனோம்னு வை, அவங்க நம்ம தலை மேல ஏறி உக்கார்ந்துடுவாங்க.” என்றார்.

 

அதைக் கேட்ட துவாரகா சிரிப்புடன் மயூரனை பார்க்க, “இப்போவே மருமகளுக்கு பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா சித்தி?” என்றான் அவன்.

 

“பின்ன, நான் தான சொல்லிக் குடுக்கணும்.” என்றவர், துவாராகவிடம், “இந்த பைய ஏதாவது கரைச்சல் குடுத்தான்னா, என்கிட்ட சொல்லு ஒருவழியாக்கிடுவோம்.” என்று கூற, அப்போதே அங்கு ஒரு மாமியார் – மருமகள் கூட்டணி உருவாகியது.

 

அவை அனைத்தையும் ஒரு ஓரமாக பார்த்துக் கொண்டிருந்தார் தேவி!

 

உணவை முடித்ததும் சக்கரவர்த்தியிடம், “பிசினஸ் பத்தி பேசணும் தாத்தா.” என்று கூற, “ஆமா மயூரா, நீ வந்ததை நம்ம கம்பெனில எல்லாருக்கும் சொல்லணும். இன்னைக்கே மீட்டிங் அரேஞ் பண்ண சொல்றேன். நாம மெயின் பிராஞ்சுக்கு போவோம்.” என்றார்.

 

அடுத்து சோபனாவிடம் திரும்பியவன், “வராவை பத்திரமா பார்த்துக்கோங்க சித்தி. எனக்கு இங்க வேற யார் மேலயும் நம்பிக்கை இல்ல.” என்றான் அன்னையை பக்கம் வைத்துக் கொண்டே.

 

அதில் தேவிக்கு சுருக்கென்று தைத்தது. எனினும், எதுவும் கூறவில்லை. என்ன கூறிவிட முடியும்?

 

“இதை சொல்லணுமா மயூரா? என் மருமகளை நான் பார்த்துக்காம வேற யாரு பார்த்துக்குவாங்களாம்? பயப்படாம போயிட்டு வா. உன் ‘வரா’வை பத்திரமா பார்த்துக்குறேன்.” என்றார் சோபனா.

 

செல்லும் முன் துவாரகாவையும் தனியே அழைத்து, “சோபனா சித்தி கூடவே இரு வராம்மா. டையர்ட்டா இருந்தா ரூமுக்கு பொய் தூங்கு. யாரும் எதுவும் சொல்லுவாங்களோன்னு நினைக்காத.” என்று ஆயிரம் பத்திரங்கள் சொல்லியபடி தான் சென்றான் மயூரன்.

 

‘வேறு யாரிடமும் பேசாதே!’ என்றும் எச்சரித்திருக்க வேண்டுமோ?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மயூ வில்லன்களை வைச்சு வராவை தனியாக விட்டு போனது டூ மச்