Loading

பிரஷாந்தின் அடியில் தான் பிதற்றுவதை நிறுத்திய மைதிலி, கன்னத்தில் கை வைத்து அவனைத் திகைத்துப் பார்க்க, அவனோ தன்னுள் எழுந்த ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் காட்ட வழியற்று, கையை இறுக்கி மூடி விழி சிவக்க அவள் மீது அனல் பார்வை வீசினான்.

“என்னடி பேசிட்டு இருக்க?” வீடே அதிரும் அளவு உச்சஸ்தாதியில் கத்திய பிரஷாந்த்திக்கு, உயிரணுக்கள் ஒவ்வொன்றும் அத்தனை வலியைக் கிளறியது.

அவள் கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கியதில், பின்னந்தலையை அழுந்தக் கோதி அடுக்களையிலேயே அங்கும் இங்குமாக சில நொடிகள் பைத்தியக்காரன் போல அலைந்தவன், விருட்டென அருகில் வந்து அவளது இரு கன்னத்தையும் அழுந்திப் பிடித்தான்.

அவனது செயல்களை எல்லாம் மிரட்சியுடன் பார்த்திருந்த மைதிலி, அவன் முகம் காட்டிய சினத்தின் வீரியத்தில் பேச்சற்றுப் போனாள்.

பிரஷாந்த்தோ, கண்ணீரில் தோய்ந்திருந்த அவளது முகத்தின் மீது விழிகளைப் படர விட்டு, “நீ ரகுவை லவ் பண்ணவே இல்ல மைதிலி. மே பி அவனைப் பார்த்து உனக்கு ஸ்பார்க் தோன்றி இருக்கலாம். ஆனா, கண்டிப்பா அது லவ் இல்ல. இப்ப அது சுத்தமா இல்ல. நீ என்ன நினைச்சுட்டு இருக்க… ‘அவன் மேல உனக்கு இன்னும் அளவு கடந்த காதல் சும்மா இருக்கு. அந்த காதலால அவன் இன்னும் உன் மனசுல இருக்கான். அவன் கூட காதலான வாழ்க்கைய வாழ்ந்துட்டேன்’னு நம்பிக்கிட்டு இருக்கியா?

இல்ல மைதிலி… யூ ஆர் ராங்…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, அவளுக்கு மீண்டும் கண்ணில் நீர் சுரந்தது.

“இல்ல… அவன்கூட நிறைவான வாழக்கையை தான வாழ்ந்தேன்!” திக்கித் திணறி அதனை மறுக்க,

அந்நேரம் அவளது கண்ணீர் கன்னத்தை அடையும் முன்னே, கட்டை விரலால் அணை கட்டிக்கொண்டவன், “இந்தக் கண்ணீர் அவனுக்காக வர்றது இல்ல மைதிலி. உன் காதல் அவன் இல்லைன்னு உன்னால ஏத்துக்க முடியாததுனால வர்ற கண்ணீர்” என்னும் போதே அவள் கேவினாள்.

அப்போதும் அவன் பிடித்திருந்த கன்னத்தை விடவில்லை.

“என்ன சொன்ன? ஒருத்தனை காதலிச்சு அவன்கூட நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துட்டியா? அப்படின்னு உனக்கு யார் சொன்னா? செத்துப்போன உன் எக்ஸ் புருஷன் கனவுல வந்து சொன்னானா?” என்று உறுமலுடன் கேட்க, அவளிடம் தேம்பல் அதிகம் ஆனது.

“நிறைவான வாழ்க்கைன்னா என்ன மைதிலி? யூ நோ வாட்… உலகத்துல புதுசா கல்யாணம் ஆன 90 சதவீதம் பேருக்கு கல்யாணம் முடிஞ்ச முதல் மாசம், நடக்குற முதல் கூடல், தோணுன முதல் சிலிர்ப்பு இது எல்லாமே நிறைவா தான் தோணும். ஏன்னா, அந்த உணர்வுக்கும் சரி, உறவுக்கும் சரி ஆணும் பெண்ணும் மதிப்பு குடுப்பாங்க. எல்லா விஷயத்துலயும் ரெண்டு பேருமே ஒத்துப்போற மாதிரி ஒரு மாயைய குடுக்குறது கல்யாணம் ஆன அந்த முதல் மாசம் தான். அதுக்கு அப்பறம் வர்ற ஒவ்வொரு பிரச்சனைக்கும் தான் அவங்களுக்குள்ள இருக்குற வேற்றுமையே தெரியும். அதுல ஒருத்தருக்கு ஒருத்தர் புருஞ்சு, மூணாவது ஆளுங்ககிட்ட துளியும் விட்டுக்கொடுக்காம, சண்டை வந்தாலும் ஒருத்தரோட உணர்வுக்கு மதிப்பு குடுத்து, கோபம் வந்தா அதை பொறுமையா புரிய வச்சு, ஒவ்வொரு கஷ்டமும் தன்னோட துணையை நெருங்கும் போது அவங்களை அது மனரீதியான தாக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் தூணா நின்னு வாழுறாங்க பாரு. அது தான் நிறைவான வாழ்க்கை. அந்த மாதிரி ஒரு வாழ்க்கையை அறுபது வயசு வரை வாழ்ந்து புரிஞ்சுக்கணும்னு இல்ல, அப்படி ஒரு லைஃப் பார்ட்னரோட ஒரு நாள் வாழ்ந்தா கூட அது நிறைவு தான். சோ, இப்ப சொல்லு நீயும் ரகுவும் நிறைவான வாழ்க்கையா வாழ்ந்தீங்க?” என்று விழி இடுங்க கேட்க, மைதிலி அவனைப் பாராமல் விழிகளைத் தாழ்த்தி விசும்பினாள்.

“என்னைப் பாருடி…” என கர்ஜித்து நிமிர்த்த, அவளோ அழுகையுடன் “விடுடா என்னை… ப்ளீஸ். என்னால முடியல” என்று கண்ணை இறுக்கி மூடி நிஜத்தை உள்வாங்க திறனற்று கைக்கூப்பி முகத்தை மூடி அழுதாள்.

அதில் அவளை விடுவித்தவன், “உன் பிரச்சனை என்ன தெரியுமா மைதிலி. கொஞ்ச நாளா இருந்தாலும் அவன் உன்மேல அன்பைக் காட்டி இருக்கான். அதை நான் மறுக்கல. ஆனா அதை விட அதிக அளவு வலியையும் கொடுத்து மனசிதைவை கொடுத்து இருக்கான். உனக்கு அவன்மேல் கோபம் இருக்கு. ஆனா உன்னால காட்ட முடியல. ஏன்னா, உன் மனசு அவன் காட்டுன அன்புலயே வேலை நிறுத்தம் செஞ்சுருச்சு. அதுக்கு அப்பறம் அவனோட நிஜமான குணத்தை காட்டும் போது உன்னால அதை மனசுக்குள்ள ஏத்தி அவன்மேல் கோபப்பட்டு அவனை வெறுக்க முடியல. அதான், உன் விருப்பம் இல்லாம உன்கூட லவ் மேக் பண்ணும் போது கூட நீ அதை பொறுமையா சகிச்சிக்கிட்ட, சராசரி தமிழ்நாட்டுப் பொண்ணா!” என்று குத்திக் கிளற, அவளோ “வேணாம் நிறுத்து” என்று கெஞ்சலுடன் கண்ணீரில் கரைய அவன் நிறுத்தவில்லை.

“உன்னை மட்டம் தட்டும் போதும், மத்தவங்ககிட்ட விட்டுக் கொடுக்கும் போதும், உன்னை குற்ற உணர்ச்சியில் தள்ளி செல்பிஷா உருவகப்படுத்துன போதும், அவன் காட்டுன அந்த கொஞ்ச நாள் அன்புக்கான நன்றிக்கடன் தான் உன் மனசை ஆக்கிரமிச்சு இருந்துருக்கு.

சின்ன வயசுல இருந்து யாரோட அன்பும் நேரேடியா கிடைக்காம போன உனக்கு, அவன் காட்டுன சின்ன அன்பும் காதலும் உன்னை பிரமிக்க வச்சுருக்கு. அந்த அன்போட நீ ஸ்டக் ஆகிட்ட. அதுக்கு அப்பறம் நடந்தது எல்லாம் உன் ஆழ்மனசை பாதிச்சுதே தவிர, அப்பவும் அவன்மேல் நீ கோபத்தை காட்டல. அவனை ஒதுக்கி வைக்கல. அவன் வெர்பல் அபியூஸ் பண்ணும் போதும் நீ ஒரு தைரியமான லா ஸ்டூடண்ட்ன்ற உன் ஒரிஜினாலிட்டியை மறந்துட்ட…

கடைசியா உங்கிட்ட சண்டை போட்டதுனால கான்சென்ட்ரேஷன் மிஸ் ஆகி செத்துட்டான்ற குற்ற உணர்ச்சி அவன் செஞ்ச தப்ப எல்லாம் மறக்க வச்சு, அதுக்கான கோபத்தைக் கூட காட்ட முடியாதபடி உன்னை இறுக வச்சுடுச்சு. ரகுவோட இருந்த ஹேப்பி மொமெண்ட்ஸ மட்டும் இந்த மண்டைக்குள்ள சேவ் பண்ணிட்டு, அதுக்கு அப்பறம் நடந்த எதையும் உன் மூளை முழுசா ஏத்துக்காம ஸ்ட்ரைக் பண்ணுது… நாட்டுக்காக செத்துட்டான்ற சாப்ட் கார்னர் ஒரு பக்கம். அவன யாரும் போர்ஸ் பண்ணி அனுப்பல. அவனா ஏத்துக்கிட்ட ஜாப் அது. சோ அதுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு அவனோடது தான. சாகாம உயிரோட இருந்திருந்தா உன்னை தற்கொலைக்கு தூண்டி இருப்பான். கண்டிப்பா நீ இப்ப இருந்துருக்க மாட்ட. உன் கையை அறுத்துக்கிட்டது கூட நீ விரும்புன ஒருத்தன் இந்த உலகத்தில இல்லாம போய்ட்டான்ற காதலால இல்ல மைதிலி, அவன் சாவுக்கு நீயும் காரணமோன்றை குற்ற உணர்வு மட்டும் தான் அந்த முடிவ எடுக்க வச்சுருக்கு. சோ எந்த விதத்திலயும் உனக்கு அவன் மேல இருந்தது, இருக்குறது லவ் இல்ல இல்ல இல்ல…” ஆவேசத்துடனும் அழுத்தத்துடன் அவளது மனநிலையை புட்டு புட்டு வந்தான் பிரஷாந்த்.

அது அவளை உடைய வைத்ததோ என்னவோ, “போதும் பிரஷாந்த் ப்ளீஸ்” எனக் காதை மூடிக்கொண்டு தரையில் முட்டியிட்டு அமர்ந்தவள், வாய்விட்டு கதறி அழுதாள்.

அவன் இறந்த போது கூட வராத அழுகை, அவனது உதாசீனத்தின் பலனாக இறுகிக்கொண்டு விழியைத் தாண்டாத விழிநீர் இப்போது பிரஷாந்தின் வார்த்தைச் சூட்டில் பனிக்கட்டியாக உடைந்து கொண்டிருக்கிறது.

மைதிலியோ, “ஐ லவ் ஹிம் பிரஷாந்த். ஐ லவ் ஹிம்… என் கூடவே கடைசி வரை இருப்பான்னு நினைச்சேன்டா… அவனுக்கு நான் ஒரு பொருட்டே இல்லைன்னு என்னால ஏத்துக்கவே முடியலடா… பான்டசி கதைல வர்ற மாதிரி கலர்புல்லா லைஃப் இருக்கும்னு நினைச்சேன். அதெல்லாம் வெறும் கற்பனைன்னு என்னால ஒத்துக்க முடியல. ஐயோ” என்று குலுங்கி குலுங்கி அழுதவளை கண் கொண்டு காண இயலாதவனாக, அவனும் தரையில் அமர்ந்து அவளை இழுத்து நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

அவள் துளியும் அழுகையை நிறுத்தவில்லை.

பிரஷாந்தின் நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு, அழுகுரலில் புலம்பித் தீர்த்தாள்.

“நான் அவனுக்கு என்னடா பாவம் பண்ணேன். அவன்கிட்ட என்ன பெருசா கேட்டுட்டேன். என்கூடவே இருன்னு தான் கேட்டேன். ஏன் அவனால அதை புரிஞ்சுக்க முடியல. என்கிட்ட முன்னாடியே பேசி, ஆர்மி தான் என் கனவுன்னு சொல்லிருந்தா, நான் அவனை வேணாம்னா சொல்லப்போறேன். அவனை அவளோ விரும்புனேன் தெரியுமா… ஏன்டா என்னை இப்படி வாழவும் விடாம சாகவும் விடாம நட்டாத்துல விட்டுட்டுப் போனான்…” எனக் கதற,

பிரஷாந்திற்கும் நிற்காமல் கண்ணீர் வந்தபாடாய் இருந்தது. “இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே…” என்று அவள் முதுகைத் தேய்த்து ஆசுவாசப்படுத்தினான்.

“என்னையும் என் வயித்துல இருந்த குழந்தையையும் அவன் கூட இருந்து பார்க்கணும்னு நினைச்சேன். ஆனா, ‘இனிமே குழந்தை வந்துருச்சு அதுவே உனக்கு துணை தான்’னு அவன் கடமை முடிஞ்ச மாதிரி பேசுனதுல ஒப்பாம தான, அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் ரெட் லைட் ஏரியாவுக்கு போகலாம்னு வாயை விட்டேன். ஆதங்கம் தாங்க முடியல. உண்மையா தலையெல்லாம் சுத்திக்கிட்டே இருந்துச்சு தெரியுமா. என்னால தண்ணி கூட பிடிச்சு குடிக்க முடியல. தூங்குனா எவ்ளோ நேரம் தூங்கி எந்திரிக்கிறேன்னு கூட எனக்கு தெரியல. காலேஜ்க்கும் போக முடியல. யாருமே இல்லாம என்னால இருக்கவே முடியல தெரியுமா. அதான அவனை வர சொன்னேன். நான் என்ன பண்ணுவேன்…” என்று மூக்கை உறிஞ்சி நடுங்கிய குரலுடன் தேய்ந்த வார்த்தைகளுடன் வெடித்திட, அவனுக்கும் அவளது வலிகள் கேவலைக் கொடுத்தது.

“சரிடி! சரிடி! நீ கேட்டதுல தப்பு எதுவும் இல்லடாம்மா…” என அவளது கூந்தலை மென்மையாக வருட,

“என்னைப் பெத்தவங்கள்ல இருந்து என்னை வளர்த்தவங்க வரை யாருமே என்னைப் புருஞ்சுக்கல சரி, அவனும் ஏன் புருஞ்சுக்காம போய்ட்டான்டா. நான் என் மொத்த அன்பையும் அவனுக்கு தான அள்ளிக் குடுத்தேன்…” என நெஞ்சு விம்ம புலம்பித் தீர்த்தாள்.

“அவனுக்கு அவ்ளோ அறிவு இல்லைடி. உன் அன்ப ஏத்துக்குற பக்குவம் அவனுக்கு இல்லை மைலி!” என்று இறுக அணைத்துக் கொள்ள, அவ்வணைப்பிற்குள் வாகாக அடங்கியவள் வெடுக்கென நிமிர்ந்து,

“உனக்கு இருக்கே. அவனுக்கு மட்டும் ஏன் இல்லாம போச்சாம். அதுசரி, அவன் கல்யாணம் பண்ணுனதே ஒவ்வொரு லீவுக்கும் வரும் போதும் எனக்கும் குடும்பம் இருக்கு, பொண்டாட்டி இருக்கா, மயிறு இருக்கான்னு காட்ட தான… அவனுக்குலாம் ஆர்மி ஒரு கேடு. கூட இருக்குற பொண்டாட்டியை காப்பாத்த தெரியல, இவன் நாட்டைக் காப்பாத்த போறானாம். கட்டிக்கிட்டவகிட்ட உண்மையை சொல்ல வக்கில்ல… அவன் கனவையே வெளில சொல்லிப் புரிய வைக்க முடியல. அவனுக்குலாம் எதுக்கு பேஷன், ட்ரீம், மண்ணாங்கட்டி எல்லாம்! செல்பிஷ்… கடைஞ்செடுத்த சுயநலவாதி… இதுல என்னை சொல்றான் செல்பிஷ்ன்னு. பு**டுங்கி, ****…” என்று பீப்பில் திட்டத் தொடங்கினாள். இத்தனை நாள் மனதினுள் அழுந்திக் கிடந்த கோபத்தை எல்லாம் வார்த்தைகளால் வடிவமைத்தவள், கெட்ட வார்த்தைகளுக்குப் பஞ்சமின்றி ரகுவீரைத் திட்டித் தீர்த்தாள்.

பிரஷாந்த் மெலிதாய் எழுந்த குறுநகையுடன் தனது சட்டையால் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு, “அவன் கிடக்கிறான் மயி*ரா*ண்டி” என எஸ். ஜெ. சூர்யா பாணியில் கூறியதில், சட்டென மறைந்த கோபத்துடன் நிமிர்ந்தவள்,

“டேய் அவனை நான் தான் திட்டுவேன். நீ திட்டக்கூடாது. என்ன இருந்தாலும் நான் லவ் பண்ணுனவன்” என்று விரல் நீட்டி எச்சரிக்க,

“சரிதான் போடி. நான் திட்டுவேன். என் லவரை அவன் ஹர்ட் பண்ணிருக்கான். நான் வாயை மூடிக்கிட்டு போகணுமா, ******” என பீப்பில் திட்டினான்.

அவளுக்கு கோபமொன்றும் வரவில்லை தான். ஆனாலும் வீம்பிற்காக “டேய் திட்டாதன்னு சொல்றேன்ல…” என்று அவன் நெஞ்சில் குத்த, காலை மடக்கி அமர்ந்திருந்தவன், அவள் தள்ளியதில் தடுமாறி கீழே விழுக, மொத்தமாக அவன் மீது சாய்ந்திருந்தவள் அவனுடன் சேர்ந்து அவன் மீதே படுத்து விட்டாள்.

இருவரின் இதயத்துடிப்பும் ஒன்றாய் துடிக்க, அவன் விழி வழியே அவளும் அவள் விழி வழியே அவனும் பயணம் செய்ய, தன் மீது படர்ந்த பாவையின் வாசம் அவனை இழுத்ததில், இரு இதழ்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க தலையை மெல்லத் தூக்கியவன், “ஒரு கிஸ் பண்ணிக்கவா?” எனக் கிசுகிசுப்பாகக் கேட்டான்.

அவளது நெஞ்சம் படபடவெனத் துடிக்க, எழ தோன்றியும் அதற்கு விருப்பமின்றி அப்படியே இருந்தவள், “என் நிழலக் கூட தொட மாட்டேன்னு சொன்ன?” எனக் கேட்டாள் கேலி இழையோட.

“என் நிழலைத் தொட விரும்பாதவளுக்கு தான் அந்த பதில். சட்டமா என் மேல படுத்துக்கிட்டு நிழலைத் தொடாதன்னா எப்படியாம்?” இரு புருவம் உயர்த்தி ரசனையுடன் கேட்டவன், அவள் முகத்தில் வந்து விழுந்த கூந்தலைப் பின்னால் நகர்த்த, அவன் கூற்றில் புதிதாய் நாணம் மலர்ந்ததில், எழ முயன்றவளை இப்போது வேண்டுமென்றே அவன் மீது விழுக வைத்தான் சன்னப் புன்னகையுடன்.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
100
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்