நற்பவி கூறியதைக் கேட்டு கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் வித்யா. ஆனால் கீதன் அடுத்துக் கூறிய தகவலை எப்படி எடுத்துக்கொள்வது என்று அவளால் சிந்திக்கவும் முடியவில்லை. ஒன்று கீதன் பொய் கூற வேண்டும். இல்லையேல் மொழியின் ஆத்மா அவனின் மனைவியை ஆட்டுவிக்க வேண்டும். அவன்தான் கூறினானே மொழியின் வீட்டிற்கு எதிர் வீடு என்று. ஆக மொத்தம் தலைச்சுற்றிப் போனாள் வித்யா.
திடீரென அழைப்பு மணி ஒலிக்க, திடுக்கிட்டாள். பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்தாள். இன்பன் நின்றிருந்தான். இவர்கள் இருவரையும் கேள்வியாகப் பார்த்தான் அவன். பின் அங்கிருந்த தேனீர் கோப்பைகளைக் கண்டவன் மனைவியைப் பார்த்தான். அவள் தேனீர் கெடுத்து உபசரித்திருக்கிறாள் என்றால் நலன் விசாரணைகள் முடிந்திருக்கும் என்று அனுமானம்.
“உங்களைப் பார்க்கதான் வந்திருக்காங்க. மொழியைப் பத்தி ஏதோ தகவல் தெரியணுமாம்” என்று வித்யா கூற, அவளை ஆச்சர்யம் பொங்க பார்த்தான்.
ஏனெனில் இந்த வீட்டில் மொழியைப் பற்றி பேச எவராலும் முடியாது. அவள் இவ்வளவு அமைதியாக இருப்பதிலே விஷயம் ஏதோ விபரீதம் என்று உணர்ந்து கொண்டான் இன்பன்.
பின் அவர்களை உரையாடும்படி கூறிவிட்டு உள்ளே சென்றாள் வித்யா.
பின் கீதனும் நற்பவியும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவள் காவல் துறையைச் சார்ந்தவள் என்று தெரிந்ததுமே அவன் திடுக்கிட்டான்.
“சரி.. நீங்க சொல்லுங்க.. மொழியைப் பத்தி என்ன தெரியணும்” என்றான் நேரிடையாக.
“உங்களுக்கு எப்போ ரெண்டாவது கல்யாணம் ஆச்சு?” நற்பவி.
“மொழிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”
“நிச்சயம் இருக்கு. மொழி இறந்து குறைந்தது இரண்டு மாதங்களுக்குள் நீங்க வித்யாவை திருமணம் செஞ்சிருக்கணும். அப்போதான் வித்யா இப்போ கர்ப்பமா இருக்க முடியும்.”
“அது உண்மைதான். அதில் தப்பு ஒண்ணும் இல்லையே.. எட்டு மாதக் குழந்தையை வச்சிக்கிட்டு எப்படி என்னால தனியா இருக்க முடியும். வீட்டில் கட்டாயப் படுத்தினாங்க” என்றான் பொத்தாம் பொதுவாக.
“ம்ம்ம்.. புரியிது உங்க சூழ்நிலை. வீட்டில் கட்டாயப்படுத்தியிருக்கலாம். ஆனா மனைவி இறந்து இரண்டு மாதத்தில் இன்னொரு பெண்ணை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உங்களுக்கு எப்படி வந்தது?”
“ஏன் வரக்கூடாது. மொழியால எனக்கு எவ்ளோ மனவுளைச்சல் தெரியுமா? பைத்தியமா இருந்த அவளை மீட்க எவ்வளவோ போராடினேன். ஆனா தற்கொலைப் பண்ணி செத்துப் போயிட்டா. அவளை நினைச்சிட்டே எவ்ளோ நாள் வாழ முடியும். எனக்கும் மனசு இருக்கு. அதில் வாழணும்னு ஆசை இருக்கு. ஒரு பைத்தியத்தை இருபத்தி நாலு மணி நேரமும் பாதுகாத்துக்கிட்டே இருந்தா, அதில் உள்ள சிரமங்கள் உங்களுக்கு புரியும். கிட்டத்தட்ட நாமளும் அந்த நிலைக்குத் தள்ளப்படுவோம். வாழ ஒரு வழி கிடைக்காதான்னு நினைச்சுப்போ என்னோட வாழ்க்கையில் வித்யா வந்தா. இப்போ என்னோட வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருக்கேன்” என்று உணர்ச்சி மிக பேசினான்.
“கூல்.. கூல்… நாங்க உங்களை சந்தேகப்பட்டு இங்க வரல..” நற்பவி.
“நீங்க கேட்ட கேள்விக்கு அதுதான் மேம் அர்த்தம்.”
“இது சாதாரண கேள்வி. பார்ட் ஆஃப் மை ஜாப்.. மொழிக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? மொழிக்கு மிஸ்கேரேஜ் ஏதாவது ஆச்சா? இப்போ மொழியோட குழந்தை எங்க இருக்கு?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைத்தாள் நற்பவி.
“இப்போ எதுக்கு இந்த கேள்வியெல்லாம் கேக்குறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“ரெண்டு விஷயம். ஒண்ணு சென்னையில் இருக்கும் உங்களோட வீட்டில் ஏதோ மர்மமான சில விஷயங்கள் நடக்குது. கீதனோட மனைவி தன்னையே மொழின்னு சொல்லிக்கிறாங்க. சும்மா இல்லை. இப்போ நாங்க சொன்ன தகவல் எல்லாம் அவுங்க சொன்னதுதான்” என்றதும் அவன் அதிர்ந்தான். அவனால் பதிலேதும் கூற முடியவில்லை.
“அவ மனசு சரியில்லாம தற்கொலை செஞ்சுகிட்டான்னு சொல்லி கேஸ் க்ளோஸ் பண்ணிட்டாங்க. இதை திரும்ப நீங்க வந்து கேக்குறது ஆச்சரியமா இருக்கு. அப்புறம் அந்த வீடு இப்போ எங்கிட்ட இல்லை. மொழி சம்மந்தமான எதுவுமே எனக்கு வேண்டாம்னு வித்துட்டேன். அதுதான் வித்யாவோட விருப்பமும். ஆரம்பத்தில் யாருமே இந்த வீட்டை வாங்க வரல. கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒருத்தருக்கு வித்தேன். விஷயம் கேள்விப்பட்டு அவரே வந்து குறைச்ச விலைக்கு வாங்கிகிட்டாரு” என்று கூற, அதிர்வது மற்ற இருவரின் முறையாயிற்று.
“என்ன சொல்றீங்க. இப்போ அந்த வீடு யார்கிட்ட இருக்கு” என்று வினவ, அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நற்பவியிடம் வழங்கினான்.
“இதுக்கு மேல இதைப் பத்தி பேச எங்கிட்ட வரமாட்டீங்கன்னு நினைக்கிறேன். மொழியைப் பத்தி பேசி அமைதியா போயிகிட்டு இருக்க என்னோட வாழ்க்கையில் பூகம்பம் கிளப்பாதீங்க” என்றான் சற்று கண்டிப்புடன்.
“மிஸ்டர் இன்பன்.. திரும்ப வராம இருக்கத்தான் நானும் ஆசைப்படுறேன். ஆனா சூழ்நிலை எப்படி இருக்குன்னு பார்க்கலாம். நிச்சயம் நீங்க ஒரு தடவை நிரண்யாவை சந்திக்க வேண்டி வரும். அதாவது மொழியா மாறியிருக்க நிரண்யாவை” என்றாள் அழுத்தத்துடன்.
இன்பனுக்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. இவர்கள் இருவரும் எதற்காகவோ நாடகம் ஆடுவது போல் நினைத்தான். ஆனால் அவளின் இந்த பதிலில் கீதன் சற்று அதிர்ந்தான். மனதிற்குள் புரியாத பயம் அப்பிக் கொண்டது. என்னதான் தெளிவுடன் நிரண்யாவைக் கையாண்டாலும், அவனால் நிரண்யா இன்பனை சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் மனித மனதின் நிலைபாடு. முதிர்ச்சியெல்லாம் மூளை சிந்திப்பதோ? மனம் எப்பொழுதும் தனக்கு வேண்டியதைத்தான் முதலில் பரிந்துரைக்கும். பின் பகுத்தறிவு பின்னே வந்து பகுதிவாரியாக பணி தவறுகளை பிரித்து பொருளை வைக்கும் மனதின் முன். மனம் எதைத் தேர்ந்தெடுக்கிறதோ அதுவாகவே அவன் கறுதப்படுகிறான்.
இன்பனின் மனநிலையை கீதனால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.
“கடைசியா ஒரு கேள்வி. மொழியோட குழந்தை இப்போ யார்கிட்ட இருக்கு.”
“மொழியோட அம்மாவோட” என்றான் இன்பன்.
“குழந்தைக்காக இரண்டாவது திருமணம்னு சொன்னீங்க. ஆனா இப்போ அந்த காரணமே பொய்யோன்னு தோணுது” என்று குத்திவிட்டுக் கிளம்பினாள் நற்பவி. கீதனும் அவளுடன் சென்றான்.
இன்பன் கொடுத்திருந்த நபரைப் பற்றிய முழுத் தகவலும் சேகரிக்குமாறு கட்டளையிட்டாள் இன்ஸ்பெக்டரிடம்.
அதன்பிறகு மொழியின் அன்னையை சந்தித்துப் பேசினர். மொழியைப் பற்றி அவர் முழுவதும் கூறினார்.
“மொழிக்கும் இன்பனுக்கும் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டதெனவும், முதலில் அவர்கள் இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லையென்றும் கூறினார்.
“மொழி ரொம்பவே கலகலப்பான பொண்ணு. எல்லாரோடையும் எளிமையா பழகுவா. கொஞ்சம் வாய்த்துடுக்கும் அதிகம். இன்பன் தனக்கு அடங்கிப் போகும் மனைவியா வேணும்னு நினைச்சிருப்பாரு. ஆனா இவ அப்படி கிடையாது. ஆனா கெட்டவ இல்ல. நியாயமானது அவ நினைச்சா அதைப் பிடிச்சுட்டு தொங்குவா. அதை மாத்தவே முடியாது. பச்சை மரத்தில் எழுதுறது போல மனசில் பதிச்சு வச்சுக்குவா. அதனால் எப்பவும் சண்டைதான் அவுங்க ரெண்டு பேருக்கும். கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சு அவ கர்ப்பமா இருந்தா. ஆனா வழக்கம் போல ஏதோ ஒரு சண்டையில் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் அதிகமாகி, இன்பன் இவளைப் பிடிச்சு தள்ளிட்டாரு. அதுல அவளுக்கு கரு கலைஞ்சு போச்சு. ஆனால் இன்பன் வீட்டில் இவளையே குறை சொல்ல, அவளால தாங்க முடியலை. இன்பன் அதுக்கு எதுவும் பேசாம இருக்க, அவளுக்கு கோபம் வந்து பிரிஞ்சு வந்துட்டா. அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு இன்பனே வந்து மன்னிப்புக் கேட்டு கூட்டிட்டு போனாரு. அப்புறம் கொஞ்ச நாள் நல்லா இருந்த மாதிரிதான் இருந்துச்சு. அவ திரும்பவும் கர்ப்பமா இருந்தா. ஆனா மனசுக்குள்ள அழுத்தம் இருந்ததால பைத்தியமா ஆயிட்டா” என்று கூறி அழுதார்.
“அம்மா.. டாக்டர் என்ன சொன்னாங்க. அவுங்களை கூட்டிட்டுப் போனீங்களா?”
“அதெல்லாம் இன்பனே செஞ்சாருமா. மனசு கெட்டுப் போய் புருஷனை விட்டுட்டு வேற ஒரு பேரை சொல்லி அவன்தான் என் புருஷன்னு சொல்லுவா. அவனோட தினமும் பேசுறேன்னு சொல்லுவா. என்னால தாங்க முடியலை. ஆனா இன்பன் தம்பி எல்லாத்தையும் தாங்கிகிட்டாரு.”
“இது முரணான கருத்தா இருக்கே. இன்பனுக்கு மொழியைக் கொஞ்சம் பிடிக்கல. அதனால் நிறையவே சண்டைப் போட்டிருக்காரு. அப்புறம் எப்படி நீங்க சொல்ற மாதிரி மாறிருக்க முடியும்.”
“ஏனா டாக்டர் சொன்ன காரணம் அப்படி. மொழி தன்னோட வாழ்க்கை எப்படிலாம் இருக்கணும், கணவன் எப்படி இருக்கணும், அவன் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கணும்னு நினைச்சாலோ அப்படியெல்லாம் ஒரு கற்பனை உருவம் மனதில் உருவாக்கி, அதுக்கு உயிர் கொடுத்து, அந்த உருவத்தோட பேசிக்கிட்டே இருந்திருக்கா. அந்த கற்பனையோட இன்பன் எந்த வகையிலும் பொறுந்தலைன்னு உறுதியா நம்பிருக்கா. அதனால கடைசி கொஞ்ச நாள் இன்பனை ரொம்பவே படுத்திட்டா. செஞ்ச தப்புக்குத் தண்டனையா எல்லாத்தையும் அவர் ஏத்துக்கிட்டாரு. எங்கிட்ட ரொம்பவே வருத்தப்பட்டு பேசிருக்காரு. இவ தீபன், தீபன்னு உளரும் போதுகூட அதைப் பொருத்துக்கிட்டாரு. எனக்கும் அவர் மேல் கோபம். ஆனா என்ன பண்ண முடியும். மனசு வருந்தி இருக்கவரைத் திரும்பவும் வருத்த முடியாதே” என்று அவர் தன் கவலைகளைக் கொட்டிக் தீர்க்க, கீதன் அதிர்ச்சியில் உரைந்திருந்தான்.
மொழியின் கற்பனைப் பாத்திரமான தீபனைக் கூட நிரண்யா கூறுகிறாளே. அதை என்னவென்று எடுத்துக் கொள்வது என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
திகையாதே மனமே!