1,733 views

 

“இன்னைக்கு முழு நேரம் கம்பெனியில இருக்க மாட்டேன். மதியத்துக்கு மேல வீட்டுக்கு வந்துடுவேன்.” என ஆறாவது முறையாக சொல்லிவிட்டான் மனைவியிடம்.

அவளோ கண்டுகொள்ளாமல் சமயலை கவனித்துக் கொண்டிருக்க, “லய்ய்யா…. உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.” என்றான் கோபமாக.

“கேக்குதுங்க” என ஓசையை மட்டும் கொடுத்தவள் வேலையை கவனித்துக் கொண்டிருக்க, “லய்ய்யா!” கத்தினான்.

“எதுக்குங்க இப்படி கத்திட்டு இருக்கீங்க.” காதில் கை வைத்துக் கொண்டு முறைக்கும் மனைவியின் அருகில் வந்தவன், “ப்ளீஸ்! இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.” கெஞ்சினான்.

“முடியாதுங்க, ஒழுங்கா கம்பெனிக்கு போங்க. இந்த நாலு நாள்ல மூனு நாள் தான் அங்க முழு நேரம் இருந்திருக்கீங்க. குழந்தை ஸ்கூலுக்கு போக அழுகுற மாதிரி அடம் பண்றீங்கங்க. இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தா நம்ம நாலு பேரும் சாப்பாட்டுக்கு பிச்சை தான் எடுக்கணும். என்னை கோபப்படுத்தாம கிளம்புற வழிய பாருங்க.”

“லயா முன்ன விட இப்ப கம்பெனி நல்லா போய்ட்டு இருக்கு.”

“அதுக்காக வீட்ல உட்கார்ந்துக்கலாமா” எரிந்து விழுந்தாள் அவனிடம்.

முகத்தை சுருக்கி கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் தரணீஸ்வரன். இருவருக்குள்ளும் அன்னியோன்யம் அதிகரித்து இருந்தது இடைப்பட்ட நாட்களில். தயாளனுக்கு ஓரளவுக்கு உடல்நிலை தேறி விட இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்ப இருக்கிறார். நடக்க மட்டும் சில மாதங்கள் ஆகும் என்றிருக்கிறார்கள்.

போதை பழக்கத்திலிருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டான் என்றானா என்றால் இல்லை. ஆனால் அதை கட்டுப்படுத்த தன்னை தானே தேற்றிக் கொண்டான். இப்பொழுதெல்லாம் கை நடுக்கம் வரும்பொழுது யோகா செய்ய துவங்கி விடுகிறான். மனைவி கொடுத்த ஐடியா தான் இது.

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட வேண்டும். உடற்பயிற்சி செய்துவிட்டு வர அடுத்ததாக அவனை தள்ளி விடுவாள் யோகாசனம் செய்ய. முதலில் செல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்தவனை ஒரு பயில்வானோடு அனுப்பி வைத்தாள். அந்த பயில்வானோ சமத்தாக பார்த்துக் கொள்ள, அந்த இடைப்பட்ட நேரத்தில் காலை உணவை தயாரித்து விடுவாள் அகல்யா.

அதன் பின் அவனைக் கிளப்பி கம்பெனிக்கு அனுப்புவது தான் பெரும் தொல்லையாக இருந்தது அவளுக்கு. யோகா செய்ய அழைத்துச் செல்லும் பயில்வான் ஜீபூம்பா கூட இதில் பின் வாங்கி விடுவான். ஏனென்றால் அலுவலகம் செல்லும் தரணியை இப்பொழுதெல்லாம் பார்க்கப் போவதில்லை ஜீபூம்பா. அகல்யாவும் மாலை வேலை தான் அங்கு செல்கிறாள்.

தன் நிழலாய் அவனை வைத்துக் கொள்ள விரும்பாதவள் அவனுக்கான இடத்தை அவனே நிறுத்திக் கொள்ள துணை நின்றாள். முதலில் தன்னை மீட்டெடுக்க பாடுபட்டவன் இப்பொழுது மனைவியின் துணை இல்லாமல் அலுவலகம் செல்ல போராடிக் கொண்டிருக்கிறான்.

இதுவும் தன்னை மாற்றத்தான் என்பதை உணர்ந்தாலும் ஏனோ அவளை மாலை நேரம் பார்க்கும் வரை ஒருவித தவிப்போடு இருப்பான். அதன்பின் அவள் அருகில் இருந்தாலும் வேலையை மட்டுமே கவனிப்பாள். அதுதான் அவனுக்கு இன்னும் சோதனையாக அமையும். கம்பெனியில் வேலையைத் தவிர மற்ற எதற்கும் பேச்சு இல்லை என்று விட்டாள்.

பாவமான முகத்தோடு வீடு வந்து சேர்ப்பவனை உடனே துரத்தி விடுவாள். முகத்தை சுருக்கிக் கொண்டு ரோஜா செடிகளை கவனிக்க ஆரம்பித்தவன் பெருமளவு மாறிவிட்டான் முன்பு போல். மனைவியிடம் பேசாத பேச்சுக்களையும் சேர்த்து அங்கிருக்கும் பூவோடு பேச, அவைகள் நன்கு செழித்து வளர ஆரம்பித்தது.

கணவனின் முக மாறுதல்களில் பெருமூச்சு விட்டவள் அவனிடம் வந்தாள். கண்டுகொள்ளாமல் அவன் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, “ப்ச்! சின்னப்பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க. இன்னைக்கு ஒரு நாள்  போங்கங்க. நாளைக்கு சண்டே  லீவு தான.” என முகத்தை அவள்புறம் திருப்பினாள்.

“நாளைக்கும் எதையாது சொல்லி துரத்தி விடுவ உன்ன பத்தி தெரியாதா.” சிணுங்கி முகத்தை திருப்பிக் கொண்டான்.

லேசாக சிரிப்பு வந்தாலும், “என்னங்க” என்று அழைத்தாள்.

அவன் திரும்பாமல் அடம் பிடிக்க, “ஈஷ்வா!” என்று சொக்குப்பொடி போட்டாள்.

உடனே திரும்பியவன் கண்கள் மின்ன மனைவியை கண்டான். அவன் மூக்கை பிடித்து ஆட்டியவள், “நாளைக்கு நீங்களே கேட்டாலும் உங்களை எங்கயும் அனுப்புறதா இல்ல. நாளைக்கு ஒரு ஸ்பெஷல் டே வருது. அதுக்கு நீங்க என் கூட இருக்கணும். அதனாலதான் இன்னைக்கே வேலைய முடிச்சுட்டு வர சொல்லி துரத்தி விடுறேன்.” என்றவளை தன் மடிமீது அமர்த்திக் கொண்டான்.

“அடுப்பு எரிஞ்சிட்டு இருக்குங்க.” என எழ முயலபவளை விடாமல் தன்னோடு சேர்த்துக் கொண்டவன், “அப்படி என்ன நாள் லயா” ரகசியம் பேசினான் காதோடு.

“நாளைக்கு சொல்றாங்க.”

“ப்ச்! எனக்கு இப்பவே தெரியணும்.” என்றவன் குரல் அவள் கழுத்து வழியாக வெளிவந்தது.

கூச்சம் தாங்காமல் அதை தடுத்துக் கொண்டு, “அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்க கிளம்பி கம்பெனிக்கு போங்க.” என்ற பாவையின் இடையோடு தன் விரலை குடி பெயர்ந்தவன், “நீ சொன்னா ஈஷ்வா குட் பாயா கிளம்புவான்.” என்றான்.

விரல்கள் கொடுக்கும் வித்தையால் மதி மயங்கி போனவள், “ஈஷ்வா!” என முணங்க…. இன்னும் அதை அதிகப்படுத்தினான் விரல் மொழியை கற்றுக் கொடுத்து.

பெண்ணின் மனம் அதை ரசித்து இன்னும் தனதாக்கிக் கொள்ள, இதழ் அதற்கான தேடலை துவங்கியது. நல்லவேளையாக ஜீபூம்பா அங்கு இல்லை. இவர்களைப் பார்த்து கன்னிப்பையன் கெட்டுப் போய் இருப்பான். சேட்டைகள் நடுக்கூடம் என்பதை மறந்து நீண்டு கொண்டே இருக்க…. வலு இல்லாமல் ஒப்புக்கு தடுத்துக் கொண்டிருந்தது அகல்யாவின் கைகள்.

மனைவியின் அவஸ்தை புரிந்தவன் வெகுவாக தன் வேகத்தை குறைக்க, நிதானம் பெற்றாள் மதியவள். கிரங்கடித்த வெட்கத்தில் அவனோடு சேர்ந்து கொண்டவள்  அமைதியாக இருந்தாள். 

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு முத்தங்கள் என்பது இருவருக்கும் சாதாரணமானது. பகல் பொழுதில் அத்தனை சேட்டைகளையும் மேற்கொள்ளும் தம்பதிகள் இரவு நேரத்தில் அரவணைக்க மட்டுமே செய்தார்கள். தரணியின் மனம் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயங்க, அகல்யாவின் மனம் வேண்டும் வேண்டாம் என்ற இரு வேறு மனநிலையில் இருந்தது.

மகன் மருமகளை பார்த்த ஆதிலட்சுமி சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மட்டுமே அறிந்து கொண்டார். வீட்டில் இல்லாததால் இருவருக்குள்ளும் இருக்கும் அன்னோன்யம் புலப்படாமல் போனது. இருப்பினும் மகனின் மாற்றத்தை கண்டுபிடித்தவர் மருமகளின் மாற்றத்தை உணராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

“லயா!” என்றவனுக்கு, “ம்ம்” அவள் ஓசை கொடுக்க, “அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே.” என்றான் புன்னகையோடு.

திகைப்பு கலந்த ஆச்சரியத்தோடு விலகியவள் கணவனின் முகம் பார்க்க, “நீ சொல்லி உன்னோட பிறந்தநாளை தெரிஞ்சிக்கிற அளவுக்கு நான் யாரோ இல்ல லயா. ரொம்ப நாளைக்கு முன்னாடியே உன் பிறந்தநாள் எதுன்னு எனக்கு தெரியும்.” என்று இன்னும் அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தான்.

“ஈஷ்வா” எனத் துள்ளி குதித்தவள் ஆசையோடு அவனை கட்டிக் கொள்ள, இடைப்பட்ட இத்தனை நாட்களில் மனைவி தானாக கட்டிக் கொள்ளும் இந்த தருணத்தை பொக்கிஷமாக சேமித்துக் கொண்டான் மன புத்தகத்தில்.

அதுவும் மனைவி நேற்றில் இருந்து அழைக்கும் பெயரில் உற்சாகத்தோடு சுற்றிக் கொண்டிருப்பவன் இதில் இன்னமும் உற்சாகம் கொண்டான். அவை முகத்தில் பிரதிபலிக்க, முகம் முழுவதும் முத்தம் கொடுத்து அதையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டாள் துணையாள்.

அடுத்த சில நொடிகள் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் குறைந்து முத்த ஓசைகள் மட்டுமே பரிமாறிக் கொண்டிருந்தது. இந்த முறை அகல்யாவின் பங்கு அதிகமாக இருக்க, சும்மாவே மனைவியிடம் எதிர்பார்ப்பவன் இன்னும் எதிர்பார்த்து தன் உடைகளை அலங்கோல படுத்திக் கொண்டான்.

“லொள்!” என்ற ஓசையில் இருவரும் விலகினார்கள்.

இருவரையும் ஜீபூம்பா குத்திக் கிழிக்காத குறையாக முறைத்துக் கொண்டிருந்தது. பாவம் வெகு நேரமாக கத்திக் கொண்டிருந்த ஜீபூம்பா கண்டுகொள்ளாததால் முறைக்கிறது. அசடு வழிந்து அவனை எதிர் கொள்ள முடியாமல் இருவரும் தலைகுனிந்து கொண்டனர்.

குரைப்பதை நிறுத்தியது ஜீபூம்பா. ஆனாலும் அவர்கள் நிமிர்ந்து பார்ப்பதாக இல்லை அந்த ஜீவனை. பல நொடிகள் கழித்து அகல்யா ஒரு வழியாக அதைப் பார்க்க, ஜீபூம்பாவின் ரியாக்ஷனை புரிந்து கொள்ள முடியாமல் கணவனை உசுப்பினாள்.

அவனோ, மீண்டும் மனைவி முத்தத்திற்கு அழைக்கிறாள் என்று ஆனந்தமாக திரும்ப, “அங்க பாருங்க அவன.” முகத்தை ஜீபூம்பா பக்கம் திருப்பி விட்டாள்.

‘ச்சைக்! மனுஷ ஜென்மமா டா நீங்க எல்லாம்.’ என்ற ரீதியில் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது செல்லப்பிராணி.

கண்டுகொண்ட தரணி பல்லை காட்டிக் கொண்டு எழுந்து நிற்க, அகல்யாவை பார்த்து ஓசை கொடுத்தது. இருவருக்கும் எதுவும் புரியவில்லை. பாவம் ஜீபூம்பா தன் முன்னாங்காலால் தலையில் அடித்துக் கொண்டது.

“என்னடா உனக்கு பிரச்சனை.” என்றவனை கண்டு கொள்ளாமல்  அகல்யாவின் துணியை பிடித்துக் கொண்டு ஓடியது சமையலறைக்கு. அப்பொழுதுதான் உணர்ந்தார்கள் லேசாக வரும் அடி பிடிக்கும் வாசனையை.

‘ஐயோ!’ என்று நொந்து கொண்ட அகல்யா உடனே அடுப்பை அணைக்க, “ஏண்டா வாசனை வருதுன்னு தெரியுதுல அடுப்பை ஆஃப் பண்ண வேண்டியது தான. கொஞ்சம் கூட அறிவு இல்லாம கத்திட்டு இருக்க.” ஈவிறக்கம் பார்க்காமல் தவறே செய்யாத அந்தச் செல்லப் பிராணியை திட்டினான் தரணீஸ்வரன்.

‘சொரணை இல்லாம இருந்துட்டு என்னை சொல்லுறாங்க பாரு.’ என்று ரியாக்ஷன் கொடுத்த ஜீபூம்பா சோக கீதத்தோடு அங்கிருந்து வெளியேறியது. அவன் முகத்தைப் பார்த்த தம்பதிகள் சத்தமாக சிரிக்க, திரும்பி ஒருமுறை குரைத்து விட்டு சென்றது.

“லயா இதுக்கு மேல சாப்பாடு செஞ்சு ஹாஸ்பிடல் எடுத்துட்டு போனா லேட் ஆகிடும். இன்னைக்கு ஒரு நாள் நானே அம்மா அப்பாக்கு ஹோட்டல்ல வாங்கி கொடுத்துட்டு போறேன். நீ எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடு.” என்றவன் சொன்னது போல் உணவை வாங்கி கொடுத்தான்.

போன் செய்து அதை உறுதிப்படுத்திக் கொண்டவள் அவனுக்கு மதிய உணவை எடுத்து செல்ல சமைக்க தொடங்க, “பர்த்டே பேபிய ரெஸ்ட் எடுக்க சொன்னேன்.” என்றவாறு உள்ளே வந்தான்.

வந்தவனுக்கு பதில் சொல்லாமல் அவள் முறைக்க, “நீ வேணா மேனேஜருக்கு போன் பண்ணி பேசு லயா. இன்னைக்கு கம்பெனியில பெருசா எந்த வேலையும் இல்லை. அதான் அங்க இருந்து டைம் வேஸ்ட் பண்ண வேணாம்னு  என் அழகு பொண்டாட்டிக்கு சமைச்சு கொடுக்க வந்திருக்கேன்.” என்றவன் தாஜா செய்தான் கொஞ்சி.

இதற்கு மேல் சொன்னாலும் கேட்க மாட்டான் என்பதால் அவளும் விட்டுவிட, அவளுக்குப் பிடித்த பன்னீர் பிரைட் ரைஸ் செய்ய ஆரம்பித்தான் தரணீஸ்வரன்.

“சமைக்க தெரியுமாங்க?”

“தெரியாது லயா இதுதான் முதல் தடவை.” என்றதும் பதறியவள் அவனை அங்கிருந்து துரத்த பார்க்க, “பர்த்டே பேபிக்கு நான் தர முதல் கிஃப்ட்.” என்றவன் ஓரளவிற்கான ருசியோடு சமையல் திறமையை காட்டினான் மனைவிக்கு.

***

அவனுக்கு தன் பிறந்த நாள் தெரியாது நாளை சொல்லி இன்ப அதிர்வு கொடுக்கலாம் என்று எதிர்பார்த்தவள் ஏமாந்து போனாள் ஒரு நாள் முன்பே அவன் கொண்டாட ஆரம்பித்ததில். மதிய உணவு சமைத்துக் கொடுத்தவன் கையோடு அழைத்துச் சென்றான் துணி கடைக்கு. அவள் ஆசை போல்  எடுத்துக்கொள்ளும்படி கூற, சாதாரண விலையில் இருக்கும் ஒரு புடவையை எடுத்தாள்.

“பிறந்தநாள் அன்னைக்கு போடுற டிரஸா லயா இது!” அவள் தேர்வு செய்த உடையை முறைத்துக் கொண்டே கேட்க,

“இது தாங்க எனக்கு பிடிச்சிருக்கு.” என்றாள் புன்னகையோடு.

“உனக்கு டிரஸ் எடுக்கவே தெரியல.” கடிந்து கொண்டவன் அவளை அழைத்துக்கொண்டு வேறு கடைக்குப் புறப்பட்டான். எடுக்கும் புடவை அனைத்தும் உயர்ரக மதிப்பை கொண்டிருக்க,

“ஒரு நாளுக்கு இவ்ளோ விலையில புடவை கட்டுறது ரொம்ப ஓவர்ங்க.” என்று தடுத்துக் கொண்டிருந்தாள்.

“முதல் தடவை அதுவும் உன் பிறந்த நாளுக்கு எடுத்து தரேன் லயா. வாழ்க்கை முழுக்க இந்த புடவை மாதிரி வேற எந்த புடவையும் சந்தோசத்தை கொடுக்காது. நம்ம கல்யாணத்துக்கு கூட நீ பிடிச்ச மாதிரி புடவை கட்டி இருக்க மாட்ட. நான் எடுத்து தரதை சமத்தா கட்டிக்கணும்.”

அவன் சொல்வது புரிந்தாலும் கையில் பணம் இல்லை என்பதை அவள் அறிவாள். ஏற்கனவே அவனிடம் இருந்த அனைத்தையும்  வாங்கி விட்டார் மாமியார்.  தினமும் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து கணக்கு வழக்குகளையும் அன்னையிடம் காட்டி விடுகிறான். அவர் கேட்க தயாராக இல்லை என்றாலும் கணவனை தினமும் இதற்காகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பாள்.

அதேபோல் கம்பெனி தொடர்பாக வரும் தொகை எதுவாக இருந்தாலும் மாமியாரின் உத்தரவு இல்லாமல் எடுக்கக் கூடாது என்றும் கூறிவிட்டாள். அவரே கணவனின் செயலை கவனித்து பிடுங்கிய அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் இதை செய்ய, இதுவரை மனைவிக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை தரணீஸ்வரன். மாறாக இருவரின் சொந்த செலவிற்கு தன்னிடம் இருக்கும் சிறு தொகையை உபயோகிக்க தொடங்கினாள் அகல்யா.

மனைவி நடவடிக்கையில் உள்ளம் வதங்கியவன் இந்த நிலைமையை மாற்றி அவளை மகாராணி போல் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியோடு உழைத்துக் கொண்டிருக்கிறான். ஆதிலட்சுமி வழக்கம்போல் வீட்டு செலவிற்கு பணத்தை கொடுக்க,

“இருக்கட்டும் அத்தை. மாமா சரியாகி வீட்டுக்கு வர வரைக்கும் ஆகுற செலவை நாங்க பார்த்துக்கிறோம்.” என்று விட்டாள் வீம்பாக.

இதை மனதில் வைத்து அடுத்து அவன் எடுத்த புடவையையும் மறுத்தாள். “இந்த புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் லயா. எனக்காக எடுத்துக்கோடா.” என முகத்தை சுருக்கி கெஞ்ச, மனம் வலித்தாலும் விலையைப் பார்த்து மீண்டும் மறுத்தாள்.

“ரொம்ப பண்ணாத லயா. துணியே எடுக்க வேணாம்  வீட்டுக்கு போகலாம்.” என்று கோபம் கொண்டு கடையை விட்டு கிளம்பி விட்டான்.

பின்னால் வந்தவள் தடுத்து, “எதுக்காக இப்போ இவ்ளோ கோபப்படுறீங்க. கைல எவ்ளோ காசு இருக்குன்னு மறந்துட்டீங்களா. இருக்க காச வச்சு தான் அத்தையும் மாமாவும் வர வரைக்கும் தள்ளனும். ஒரு புடவைக்கே மொத்த காசையும் கொடுத்துட்டா மத்த செலவுக்கு என்ன பண்ணுவோம்.

அதுவும் இல்லாம எனக்கு எப்பவும் இவ்ளோ விலை கொடுத்து புடவை வாங்க பிடிக்காது. என்னைக்காது ஒரு நாள் கட்டுறதுக்கு இந்த செலவு ரொம்ப அதிகம். சாதாரணமா நான் எடுத்த மாதிரி ஒரு புடவை எடுத்துக் கொடுங்க போதும். விலை கம்மியா எடுத்து கொடுத்தா உங்க அன்பு குறைஞ்சிடுச்சுன்னு அர்த்தமில்ல ஈஷ்வா.” பொறுமையாக புரிய வைத்தாள் அவனுக்கு.

“இவ்ளோ தான் விஷயமா லயா. நான் கூட வேற என்னமோன்னு நினைச்சு டென்ஷன் ஆகிட்டேன்.” என்று அவள் தலையில் லேசாக
வலிக்காமல் அடித்தான்.

அவன் பேசுவது அகல்யாவிற்கு புரியாமல் போக, “என்னங்க?” என்றிட, தன்னுடைய பணப்பையை எடுத்து மனைவி கையில் திணித்தான். அவள் புரியாமல் கணவனை பார்க்க,

“உன் புருஷன் முன்ன மாதிரி இல்ல இப்போ பணக்காரன்.” என்று சட்டை காலரை உயர்த்தினான்.

மணிப்பையை திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள் அதில் இருக்கும் ஐநூறு ரூபாய் தாள்களை பார்த்து. இவ்வளவு பணம் இவனிடம் எப்படி வந்தது என்ற யோசனையில், “ஏதுங்க இவ்ளோ பணம்? அன்னைக்கே சொன்னேன்ல கம்பெனி காச எடுக்காதீங்கன்னு.” என சந்தேகம் கொண்டு முறைத்தாள்.

“அடிப்பாவி! என்னை பார்த்தா திருட்டு வேலை செய்றவன் மாதிரியா இருக்கு. இது உன் புருஷன் சுயமா உழைச்சு சம்பாதிச்ச பணம்.”

“புரியிற மாதிரி சொல்லுங்க. நீங்க எங்க உழைச்சீங்க?” என்றிட, மனைவியை கடுமையாக முறைத்தான்.

சட்டென்று புன்னகைத்தவள், “சும்மாங்க…” என்று கன்னம் கிள்ளி முத்தம் வைத்து சமாதானம் செய்தாள்.

“அம்மா கிட்ட கேட்டு வாங்கினேன்.” என்ற ஒற்றை வரியில் அவள் கணவனை வசைபாட, “முழுசா கேக்க மாட்டியா லயா” என்று பல்லை கடித்தான்.

அகல்யாவை விரும்ப ஆரம்பித்து விட்டதை உணர்ந்தவன் முழு மனதோடு அவளுக்கு மட்டும் சொந்தமானான். மனைவியை நோட்டம் விட ஆரம்பித்தவன் அவள் விருப்பு வெறுப்பு அனைத்தையும் கவனித்து தெரிந்து கொண்டான். அதேபோல் அவளின் மற்ற விஷயங்களையும் ஆராய, மனைவியின் பிறந்தநாள் தெரிய வந்தது.

தனக்காக இவ்வளவு செய்யும் மனைவியை அன்று ஒரு நாளாவது மகிழ்விக்க விரும்பியவன் அன்னை முன்பு நின்றான். அவரும் வழக்கம் போல் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க,

“உங்க கம்பெனிய நான் தான் கிட்டத்தட்ட ரெண்டு மாசமா பார்த்துட்டு இருக்கேன். இது எல்லாம் நீங்க விட்டுட்டு போனதுல இருந்து நான் பார்த்துட்டு இருக்க ப்ராஃபிட் லிஸ்ட். இந்த மாசம் பெருசா ஒன்னும் இல்லாம இருக்கலாம். ஆனா நான் பண்ண ஐடியாவால இன்னும் மூனு மாசத்துல இந்த தொகை மாறலாம்.” என கையில் இருக்கும் அறிக்கையை அவர்கள் முன்பு வைத்தான்.

தினமும் அன்றைய விவரங்களை காட்டுபவன் எதற்காக மீண்டும் ஒரு முறை மொத்தமாக கொடுக்கிறான் என்ற குழப்பத்தில் தயாளன் கேள்வி எழுப்ப, “இவ்ளோ நாள் வேலை பார்த்துட்டு ஒரு ரூபா கூட நான் எனக்குன்னு எடுத்துக்கல. உங்க பொண்டாட்டி என் கையில இருக்குற எல்லாத்தையும் வாங்கிட்டாங்க. நான் தனியா இருந்தா கூட பரவால்ல சமாளிச்சிடுவேன்.

இப்போ என்னை நம்பி என் பொண்டாட்டி இருக்கா. அவளுக்கான செலவ யாரு பார்க்குறது. போதாக்குறைக்கு வீட்டு செலவையும் அவதான் பார்த்துட்டு இருக்கா. அவ கஷ்டப்பட்டதெல்லாம் போதும் இனிமே எனக்கு மாச சம்பளம் கொடுத்துடுங்க. இல்லனா உங்க கம்பெனிய விட்டு நான் வேற வேலைக்கு போக வேண்டியதா இருக்கும்.” என்று சட்டம் பேசினான்.

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் அர்த்த பார்வையில்.  அதை கவனித்தும் கவனிக்காதது போல் நின்றிருந்தான் அவர்களின் புதல்வன். வெகு நேரங்களாக பார்த்துக் கொண்டவர்கள், “சரிப்பா நீ கேட்ட மாதிரி இனிமே உனக்கு மாசம் சம்பளம் வரும்.” என்றார்கள்.

“ரொம்ப சந்தோஷம்.” என இழுத்து அவர்களை நக்கல் செய்தவன், “முதல் மாச சம்பளத்துல இருந்து எனக்கு கொஞ்சம் முன்பணம் வேணும்.” என்றான் அதிரடி மாறாமல்.

மீண்டும் பெற்றவர்கள் பார்வையால் பேசிக்கொள்ள, “என் பொண்டாட்டிக்கு பிறந்தநாள் வருது. அவளுக்கு நான் ஏதாச்சும் வாங்கி கொடுக்கணும்.” அவர்கள் கேள்விக்கான பதிலை கேட்காமல் கொடுத்தான்.

இருவருக்கும் புன்னகை அரும்ப, மகனை ஒரு சேர பார்த்தார்கள். அவனோ ஏதோ எதிர்தரப்பிடம் வாதாடி விட்டு தீர்ப்புக்காக காத்திருப்பது போல் கெத்தாக நின்று கொண்டிருந்தான். மகனிடம் மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்த்தவர்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்காததால் தலையாட்டி சிரித்துக்கொண்டனர்.

உடும்புப் பிடியாக காசை வாங்க நின்றவன் வேலையை முடித்துக் கொண்டுதான் கிளம்பினான் அங்கிருந்து. நடந்ததை முழுவதுமாக மனைவியிடம் விவரிக்க, “இப்படிதான் அப்பா அம்மா கிட்ட பேசுவாங்களாங்க. அப்படி என்ன அவசரம் முன்னாடியே காசு வாங்கி எனக்கு எடுத்துக் கொடுக்கணும்னு. நீங்க சம்பளம் கேட்டதே முதல்ல தப்புங்க. எப்பவும் அவங்க மனசு புரிஞ்சுக்க மாட்டீங்களா.” அடுக்கடுக்காக அவனை வசைபாடி விட்டாள்.

இதை சொன்னதும் மகிழ்வாள் என்று எதிர்பார்த்தவன் ஏமாந்த முகத்தோடு, “உன்னோட பிறந்தநாளுக்கு ஒரு துணி கூட எடுத்துக் கொடுக்க முடியாம இருக்குறது  எவ்ளோ பெரிய வலி தெரியுமா லயா. இவ்ளோ நாள் ஒரு பத்து ரூபா கூட இல்லாம முதலாளி சீட்ல உக்கார்ந்துட்டு வரேன். வெளிய யாருக்காது தெரிஞ்சா காரி துப்பு வாங்க. அதை கூட நான் தாங்கிப்பேன். என்னை குழந்தை மாதிரி பார்த்துக்குற என் மனைவிக்கு  ஒண்ணுமே செய்யலன்னு நினைக்கும்போது தான் ரொம்ப வலிக்குது.” என அதன் வலி மொத்தத்தையும் குரலில் காட்டினான்.

கணவன் பக்கம் இருக்கும் நியாயம் அவன் வார்த்தையில் புரிய தன்னை மாற்றிக் கொண்டு, “ஈஷ்வா!” என்றழைக்க, அவன் வீம்போடு திரும்பவில்லை.

“எனக்கு புடவை வேணாம். வேற ஒன்னு கேட்பேன்  செய்றீங்களா.”

உடனே ஆர்வம் பொங்க திரும்பியவன் என்ன வேண்டும் என்று கேட்க, “என்னோட எல்லா பிறந்தநாளுக்கும் ஏதாச்சும் ஒரு ஆசிரமத்திற்கு சாப்பாடு கொடுப்பேன். இந்த தடவை கொடுக்க முடியலன்னு மனசு சங்கடப்பட்டுட்டு இருந்துச்சு. புடவை எடுக்குற காசுக்கு அதை செஞ்சு தரீங்களா…” என தயக்கத்தோடு கேட்டாள்.

“இது ஒரு விஷயமா லயா. எத்தனை பேருக்கு சாப்பாடு கொடுக்கணும்னு சொல்லு. எல்லாரையும் சந்தோஷப்படுத்திடலாம். கூடவே என் அழகு தேவதையும்.” ஆயிரம் பேர் வந்து செல்லும் கடைக்கு முன்னால் நின்று கொண்டு மனைவியின் இரு கன்னத்தையும் பிடித்து, ஆட்டிக்கொண்டே பேசினான்.

நாகரிகம் கருதி அதை எடுத்து விட்டவள், “அப்படியே நாளைக்கு எங்க வீட்டுக்கும் போலாமா.” திருமணம் ஆனதிலிருந்து அங்கு செல்லாததால் அதையும் கேட்க,

“உனக்கு என்ன வேணுமோ அதை கேளு. நாளைக்கு நீ ஆசைப்பட்ட எல்லாமே அப்படியே நடக்கும்.” சத்தியம் செய்து கொடுத்தான் அவளுக்கு.

கணவனின் மனம் நோகக்கூடாது என்பதற்காக அவனையும் சமாதானம் செய்து விலை குறைவில் ஒரு புடவை எடுத்துக் கொண்டாள். அதே நேரத்தில் அவனுக்கும் ஒரு ஆடை எடுக்க, மாலை நேரம் வீட்டிற்கு வந்தார்கள்.

இரவு பன்னிரண்டு மணிக்கு கணவன் முதல் வாழ்த்தை தெரிவிப்பான் என்ற ஆசையில் அவள் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்க, பொய்யாக்கவில்லை அவளின் ஈஷ்வா.

மனைவி புறம் திரும்பிப் படுத்தவன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் லயா.” என்று நெற்றியில் முத்தமிட, அதற்காக காத்துக் கொண்டிருந்தவள் அவனோடு சேர்ந்துக் கொண்டாள்.

“லவ் யூ லயா” என்று மீண்டும் அவளுக்கு வாழ்த்துக்களோடு முத்தத்தை பரிசளிக்க, பதில் பேசாத புன்னகையோடு தன் பிறந்த நாளை துவங்கினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
75
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *