17 – காற்றிலாடும் காதல்கள்
சில மாதங்களுக்கு முன்பு வரை மிருணாளினி தமிழில் முனைவர் பட்டம் வாங்கும் முயற்சியில் இருந்தாள். அதற்கான ஆராய்ச்சியிலும், அதைச் சார்ந்தக் கற்றலிலும் அவளது நாட்கள் பறந்துக் கொண்டிருந்தது.
மிருணாளினியும், கிருபாலினியும் ஒரே கருவில் உருவான இரண்டு உயிர்கள். பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து வாழ்ந்து வந்தனர். மிருணாளினிக்கு தமிழில் ஆர்வம் அதிகம், கிருபாலினிக்கு கணிதத்தில் ஆர்வம் அதிகம். அவள் கணிதத்தில் இரண்டாம் முதுகலைப் பட்டம் வாங்கியதும் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தாள்.
மிருணாளினி தமிழின் மேல் உள்ள தாகம் தீராமல் இன்னுமின்னும் என்று தேடலில் நீந்திக் கொண்டே முனைவர் பட்டத்தைக் குறியாக்கி ஓடிக்கொண்டிருந்தாள்.
அவர்களின் தந்தை கனகவேல் தனியாக ஒரு தொழில் தொடங்கி அதை லாபகரமாக நடத்திக் கொண்டிருந்தார். தாய் ஜெயந்தி வீட்டினைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டார். இவர்களின் இரட்டைப் புதல்விகள் தான் மிருணாளினி மற்றும் கிருபாலினி.
“ஹேய் கிருபா.. நேத்து எனக்கு பழைய புக் வாங்கி தரேன்னு சொன்னியே அது எங்க?” என மிருணாளினி கேட்டாள்.
“அந்த கடைல அந்த புக் நேத்து இல்ல மிரு.. நான் என் ஸ்டூடண்ட்கிட்ட கேட்டிருக்கேன். இன்னொருத்தர்கிட்ட அந்த புக் இருக்காம். அதை வாங்கி தரேன், நீ ஜெராக்ஸ் எடுத்துக்க. சரியா?” எனக் கல்லூரிக்குத் தயாராகியபடிக் கூறினாள்.
“நீ சொன்னதாலதான் நான் நேத்து எனக்கு ஒருத்தர் குடுத்ததையும் வேணாம்ன்னு சொல்லியனுப்பிட்டேன். எனக்கு இன்னிக்கி அந்த புக் வேணும். நாளைக்கு நான் எட்டயபுரம் போகணும்.” என அவளின் முன்னே வந்து வழிமறித்து நின்றாள்.
இருவரையும் எதிரெதிரே பார்க்க கண்ணாடி முன் நின்ற பிம்பம் போல இருந்தது. ஆனால் கிருபாலினி முகத்தில் கொஞ்சம் குழந்தைத்தனமும், நிறைந்த காருண்யமும் தெரியும்.
மிருணாளினி முகத்தில் எப்போதும் ஒரு எச்சரிக்கையுணர்வும், அறிவினால் பெற்ற கம்பீரமும், மிடுக்கும் இருக்கும். எதிரில் உள்ளவர்களை ஆழ்ந்து ஆராயும் கண்களைக் கொண்டவள். கிருபாலினி யாரேனும் தலைவலி என்று கூறினால் கூட இவளே மருந்து வாங்கிக்கொடுத்து வாயில் போட்டு நீர் குடிக்கும் வரையிலும் அவர்களைத் தனியாக விடாமல் அருகிருந்துப் பார்த்துக் கொள்ளும் இளகிய மனம்.
இப்படியான இருதுருவங்கள் தான் ஒரே கருவில் வளர்ந்து, ஒன்றாகப் பிறந்து வாழ்ந்து வருகிறார்கள்.
“என் புஜ்ஜு குட்டில நீ.. இன்னிக்கு கிடைச்சா வாங்கிட்டு வரேன் இல்லைன்னா நாளைக்கு தான். கோச்சிக்காதடா.. பிளீஸ்.” என உடன்பிறந்தவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.
“இன்னிக்கி ஒரு நாள் தான் டைம். நாளைக்கு எனக்கு புக் கைக்கு வந்தாகணும். பாத்துப்போ.. இரு.. இதென்ன இவ்ளோ வெயிட் அஹ் இருக்கு உன் ஹேண்ட்பேக்?” சந்தேகமாகப் பார்த்தபடிக் கேட்டாள்.
“அதில்ல மிரு… என் டிபார்ட்மெண்ட்ல ஒரு பையனுக்கு உடம்பு சரியில்ல. அவன் ஹாஸ்டல் வேற. அதான் வீட்டு சாப்பாடு சாப்பிட்டா சீக்கிரம் உடம்பு சரியாகும்ன்னு அவனுக்கும் சேர்த்து கொண்டு போறேன்.”
“தல வாழ இலை வாங்கி மறக்காம பரிமாறு சரியா?” முறைத்தபடிக் கூறினாள்.
“திட்டாத மிரு. பாவம் அவன் நேத்து மயங்கி விழுந்துட்டான். நான் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்தேன். பாவம் அவனுக்கு யாருமே இல்ல. ஆஷ்ரமத்துல தான் வளந்தானாம்.”
“இங்க பாரு கிருபா.. நீ உதவி பண்ணு வேணாம்னு சொல்லல. ஆனா அதுக்கும் ஒரு அளவு இருக்கு எல்லை இருக்கு. இதெல்லாம் ரொம்ப அதிகம். இதுவே கடைசியா இருக்கட்டும். இனிமே இந்தமாதிரி பண்ணிட்டு இருக்காம ஒழுங்கா கிளாஸ் எடுத்தோமா வந்தோமான்னு இரு.” கண்டிப்புடன் கூறி அவளையனுப்பி வைத்தாள்.
“ம்மா.. ம்மா.. உன் பொண்ணு என்ன கேட்டாலும் உடனே செஞ்சி பேக் பண்ணி குடுத்துறுவியா? அவ கிளாஸ் எடுக்க போறாளா சோறு போட போறாளா? இன்னொருதரம் நீ இப்படி செஞ்சி குடுத்துட்டு இருக்காத. இவ எல்லாம் எப்படி தான் பசங்கள கண்டிச்சி சொல்லித் தராளோ தெரியல.” அடுப்படியில் இருக்கும் தாயிடம் வந்துப் பொறிந்தாள்.
“இந்தா டீ குடி. அவ கொஞ்சம் இளகின மனசா இருக்கா அவளோதான். உன்னமாதிரி பாறையாட்டம் இருக்கணுமா? இன்னும் படிக்கறேன் ஆராய்ச்சி பண்றேன்-ன்னு ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்க. உன்னய ஏதாவது நான் கண்டிக்கறேனா?” தாய் ஜெயந்தி அவளைப் பேசினார்.
“அம்மா. நானும் அவளும் ஒரே மாதிரி இருந்தாலும் வேற வேற தான். அவள ஈசியா எல்லாரும் ஏமாத்திடுவாங்க. இவ்ளோ கருணை எப்பவும் ஆபத்து தான். இன்னும் யாராவது கண்ல ஒரு சொட்டு தண்ணி விட்டா அவ்ளோ தான். கைல இருக்கற அத்தனையும் தூக்கி குடுத்துட்டு வந்துடறா.. வெவரமே வரமாட்டேங்குது. போன வாரம் நீ ஒன் கிராம் கோல்ட்ல ஒரு செயின் வாங்கிக்குடுத்தியே அது எங்கன்னு சாயிந்தரம் கேளு. அப்ப தெரியும்” எனப் பேசியபடி டீ குடித்தக் கப்பை அப்படியே போட்டுவிட்டுச் சென்றவளை ஜெயந்தி பிடித்தார்.
“வா இங்க. இத கழுவி வச்சிட்டு போ. காலைல அவ சாப்பாடு கேட்டதோட இல்லாம எனக்கு எல்லா உதவியும் செஞ்சி தான் வாங்கிட்டு போயிருக்கா. நீ அவள குத்தம் சொல்லிட்டு, நீ குடிச்ச கப் கூட கழுவாம ஓடற. இத செஞ்சிட்டு போ. நாளைக்கு கிருபாவ பொண்ணு பாக்க வராங்க. எங்கயும் போகாம இங்கயே இரு.”
“ம்மா.. நாளைக்கு நான் எட்டயபுரம் போகணும். சுவடி தமிழ் படிக்க தெரிஞ்ச ஒருத்தர் அங்க இருக்காராம். எங்க சார் நேத்து தான் கண்டுப்பிடிச்சி சொன்னாரு. போனா ஒரு வாரம் பத்து நாள் கத்துகிட்டு வந்துடுவேன். அதுக்கப்பறம் வர சொல்லு.”
“உனக்கா பாக்க வரச்சொன்னேன். அவளுக்கு தான.. நீ இருக்கணும்ன்னு நெனைச்சா மதியம் வரைக்கும் இரு.. இல்லையா கெளம்பு.. என் பொண்ணுக்கு என்ன எப்படி பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்..” என ஜெயந்தி நொடித்துக் கொண்டார்.
“அப்ப நான் யாராம்?” மிருணாளினி முறைத்தபடிக் கேட்க அங்கே கனகவேல் வந்து, “நீ என் பொண்ணு டா..”, என அவளை அரவணைத்துக் கொண்டார்.
“அப்பா.. பாருங்க அம்மாவ.. ஆமா திடீர்னு என்ன கிருபாக்கு பையன் பாக்கறீங்க? அவகிட்ட சம்மதம் கேட்டீங்களா?” என அடுத்தப் பேச்சிற்குச் சென்றாள்.
“உங்கம்மா தான்டா.. உங்களுக்கு வயசாகிட்டே போகுது சீக்கிரம் கல்யாணம் செஞ்சி வைக்கணும்ன்னு ஒரே நச்சரிப்பு. அதான் நேத்து ஜாதகம் பாக்க போயிருந்தோம். கிருபாக்கு இப்ப கல்யாண வேளை வந்திருக்கு. அதான் மேட்ரிமோனில ரிஜிஸ்டர் பண்ணோம். அதுல ஒரு வரன் தான் நாளைக்கு வராங்க.”
“பையன் யாரு என்ன பண்றான்? அவன் கேரக்டர் எல்லாம் விசாரிச்சீங்களா? குடும்பம் பேக்ரவுண்ட் எல்லாம் செக் பண்ணீங்களா?”
“எப்பவும் பொண்ணு பாத்து பிடிச்சா தான் அதுலாம் செய்யணும் மிரு.. அது தான் வழக்கம்.” என தாய் கூறவும் மிருணாளினி அவரை முறைத்தாள்.
“இன்னும் எந்த காலத்துல மா இருக்க நீ? மொதல் இது எல்லாம் விசாரிங்க. அப்றம் போட்டோ பாத்துப்பிடிச்சா நேர்ல வரசொல்லுங்க. கிருபா ஒண்ணும் ஜவுளிக்கடை பொம்மை இல்ல. கண்டவனும் வந்து பாத்துட்டு போக. அப்பா.. அவங்களப்பத்தி மொத விசாரிங்க. நமக்கும், கிருபாக்கும் பிடிச்சா வரச்சொல்லலாம்.” எனத் தந்தையை விரட்டி அவர்களை வரவேண்டாமென கூறிவிட்டுப் பையனை பற்றிய விவரங்கள் வாங்கிக்கொண்டுத் தந்தையோடு டிடெக்டிவ் ஏஜென்ஸி சென்று அவனைப் பற்றி அறிந்துக் கூற விண்ணப்பம் கொடுத்தாள்.
“இதெல்லாம் எதுக்கு டா?”, கனகவேல் கேட்டார்.
“பையன் சென்னை, பெங்களூர்ல வேலைல இருந்திருக்கான். அங்க என்னென்ன பழக்கம் பழகினானோ? நம்ம விசாரிச்சா ஒருத்தனும் உண்மைய சொல்லமாட்டான். தவிர நாம முழுசா தெரிஞ்சிக்கவும் முடியாது. நீங்க அவங்க குடும்பத்தப்பத்தி விசாரிங்க. தாத்தாகிட்ட சொல்லி டீப் அஹ் விசாரிக்க சொல்லுங்க. ஒரு மாசம் ஆனாலும் பரவால்ல. கிருபா இன்னமும் குழந்தை மாதிரி தான் இருக்கா. அவளை நல்லா வச்சி வாழறவன நம்ம தான் கண்டுப்பிடிச்சி கட்டி வைக்கணும்.” என அவள் கூறியதும் அன்போடு தோளில் சாய்த்துக் கொண்டு,“ஆம்பள புள்ள இல்லைன்னு நான் வருத்தப்பட்டது இல்லடா. கல்யாணமுன்னு உங்கம்மா சொன்னதும் கொஞ்சம் யோசிச்சேன். தனியாளா எப்படி பண்ணப்போறேன்னு. இப்ப எனக்கு வேலையே இல்லாம நீ எல்லாத்தையும் பார்த்துப்பன்னு புரிஞ்சது டா.” எனக் கூறித் தலையில் முத்தமிட்டார்.
“இதெல்லாம் ஒரு விஷயமாப்பா? அதெல்லாம் அவள சூப்பர் பையனுக்கு கட்டி வைக்கலாம். அவளுக்கு முடிஞ்சி ஒரு மூணு நாலு வருஷம் கழிச்சி என் கல்யாண பேச்சு எடுத்தா போதும். அதுக்குள்ள நானும் ஸ்டெடி ஆகிடுவேன்.”
“உங்கம்மா உனக்கும் சேர்த்து மாப்ள பாக்க சொன்னா டா.”
“அதெல்லாம் முடியாது. இப்பவே என்னை தொறத்த பிளான் பண்றீங்களா? இதெல்லாம் நல்லாவே இல்ல சொல்லிட்டேன்.”
“அப்டி இல்லடா. நானே ஒரு வருஷம் போகட்டும்ன்னு சொல்லிட்டேன். நீ கவலப்படாத. சரி தாத்தா ஊருக்கு கூப்டுகிட்டே இருக்காரு அடுத்த மாசம் போயிட்டு வரிங்களா?”
“நீங்க?”
“உங்கம்மாவ அனுப்பறேன்.”
“உங்கப்பாகிட்ட அப்டி என்ன வீம்போ உங்களுக்கு. அவருக்கும் வயசாச்சிப்பா. மறந்துட்டு வந்து பேசுங்க.” எனக் கூறி அவரைக் காரில் அனுப்பிவிட்டு தனது ஸ்கூட்டியில் அவளது கல்லூரி நோக்கிச் சென்றாள்.
“ஹேய் மிருணா வந்துட்டியா? உனக்கு ஒரு சர்ப்ரைஸ். இங்க வா.” என அவளின் தோழி பாமா கையோடு அவளை அழைத்துச்சென்றாள்.
“எங்க டி இழுத்துட்டு போற?”
“நீ ரொம்ப நாளா சுவடில இருக்கறத கண்டுப்பிடிச்சி போய் பாக்கணும்னு சொல்வியே. அதுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு.” எனக் கூறி ஒரு பேராசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“நிஜமாவா சொல்ற? அந்த மாதிரி வெளிய தெரியாத இடம் பத்தின குறிப்பு இருக்கற சுவடி எல்லாம் நமக்கு குடுக்கமாட்டாங்கன்னு சொன்னாரே அவரு.”
“அதுக்கு தொல்பொருள் ஆராய்ச்சி குழுவுல சேர்ந்தா தான் சட்டபடி நீ அத எல்லாம் பண்ண முடியும்.”
“அப்ப இது?” அடிக்குரலில் கேட்டாள்.
“நம்ம ஹெச்.ஓ.டிக்கு வந்த பிரோபோசல். அவர் தான் உன்னை சஜ்ஜஸ்ட் பண்ணியிருக்காரு. எப்பவாது இப்படி அன்அபீசியல் வேலையும் வரும். அத செஞ்சா காண்டாக்ட் கெடைக்கும். தவிர நல்ல த்ரில்லா இருக்கும்.”
“மாட்டினா கம்பி தான் தெரியும்ல?”
“ஹேய் இவங்க கொள்ளை அடிக்கற கூட்டம் இல்லடி. முறையா அரசாங்கம்கிட்ட அந்த எடத்தப்பத்தி சொல்லி அத பராமரிக்க முறையீடு பண்ற குரூப் இது. இவங்க கூட எல்லா அஃபீஸியல் ஆளுங்களும் காண்டாக்ட்ல தான் இருப்பாங்க. இப்பக்கூட ஒரு ஆபிசர் வந்திருக்காரு.” என அவளை சமாதானம் செய்துக் கொண்டு போய் அந்த அறையில் நிறுத்தினாள்.
“சார்… மிருணாளினி..” எனக் கூறவும் ஆதர்ஷ் அவளைத் திரும்பிப் பார்த்தான்.