528 views

 

 

மான்குட்டி சொர்க்க தேவதையாக உறக்கத்தில் மிதந்து கொண்டிருக்க, மகளை மகனோடு படுக்க வைத்தவன் கணவன் முகமூடியை போட்டுக் கொண்டான். ஆர்வமாக புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் மனைவி மடி மீது தலை சாய்ந்தான்.

 

கவனம் திரும்பியவள் புத்தகத்தை வேகமாக மூட, மனைவியின் கோபம் அறிந்து பழையபடி படுத்துக் கொண்டான். பார்வை மட்டும் அவளை விடாமல் துரத்த, அவளைத் தொடாமல் பல சில்மிஷங்களை செய்து தன் மனதை வெளிப்படுத்தினான்.

 

 

கணவனின் திருட்டுத்தனங்களை அறிந்தவள் தள்ளி அமர்ந்துக் கொள்ள, ரகுவரனும் தள்ளிப் படுத்தான். கணவனை முறைத்தவள் புத்தகத்தை ஓரம் வைத்து விட்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் காதில் இருக்கும் கேட்பொறி கருவியை எடுத்து விட, முறைத்தே பஸ்பம் ஆக்கினாள் கணவனை.

 

விடாமல் கணவன் அதையே செய்ய, தலையணை அவனை பலமாக தாக்கியது. சிரிப்போடு அனைத்தையும் வாங்கிக் கொண்டவன் ஒலிபெருக்கி கருவியை கையோடு எடுத்துக் கொண்டு….

 

 

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்

இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்

புது வித்தை காட்டிடவா..

 

ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு

அதை மூடாமல் தாழ் போடாமல்

எனைத் தொட்டுத் தீண்டுவதா

 

மாமங்காரன் தானே மாலை போட்டு தானே

மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்

தொடலாம்

மீனம்மா…மழை உன்னை நனைக்கும்

இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

 

அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால்

இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்.

 

 

 

 

 

 

 

மெல்லிய ரக பாடல்களை தன் குரலில் பாடி அசத்தியவன் மோகத்தோடு உடலை முறுக்கேற்றி தெரியாமல் கை போடுவது போல் ஒரு பக்கமாக கை போட்டான். போட்ட வேகத்தில் கை உடனே அவனிடம் வந்து விட்டது மனைவி தூக்கி அடித்ததில். மீண்டும் படையெடுக்க நினைத்தவன் அதேபோல் கை போட, இந்த முறை கடித்து வைத்தாள் கையை. 

 

 

“சாரிடி” ஒரு வழியாக சமாதானத்திற்கு அடி போட்டான். 

 

 

மகிழினி கண்டு கொள்ளாமல் அமர்ந்திருக்க, “வேணும்னு நான் எதையும் பண்ணல பொண்டாட்டி. அப்படியானது எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. உன்ன பார்த்ததும் கட்டிப்புடிச்சு அழனும்னு தோணுச்சு. நீ அப்படி பேசினதும் முன்னாடி வலிச்சதை விட ரொம்ப அதிகமா வலிச்சுது. அதை தாங்கிக்க முடியாம தான் ராத்திரி தனியா படுத்தேன். ஏதோ என்னை மட்டும் தனியா ஒதுக்கி வச்ச மாதிரி இருந்துச்சு உன் பேச்சு.” மனதில் இருக்கும் மொத்தத்தையும் கொட்டினான்.

 

 

அதற்கும் மகிழினி பதில் சொல்லாமல் அமைதிக்காக்க, “சாரிடி உனக்கு தெரியாதா 

உன் ரகு எப்படின்னு. அவனுக்கு உன்ன உண்மையா வெறுக்க தெரியாது. அப்படி நடிப்பான்… கோபத்தை ஒரு நாளுக்கு மேல இந்த உடம்பும் மனசும் தாக்கு பிடிக்காது நீ இல்லாம.” என்று பொறுமையாக கை போட்டான்.

 

 

தட்டி விடாமல் அமைதி காக்கும் மனைவியின் செயலில் புன்னகைத்தவன் தைரியமாக மடிமீது தலை வைத்தான். அவனையே அவன் நேசிக்கும் தருணமாக அந்த நொடி அமைய, நேற்றிலிருந்து இழந்த சுகத்தை முழுவதும் உணர்ந்தான் அவனவள் வாசம் பிடித்து. மடியில் முகம் புதைத்தவன் தலையை அங்குமிங்கும் அசைத்து வயிற்றில் முத்தமிட, தலையில் நங்கென்று கொட்டு வைத்தாள் அவனது மனைவி.

 

 

பதிலுக்கு கள்வன் வயிற்றை‌ கடிக்க, “நடிக்காம எந்திரிச்சு போடா” என்றவள் எழுந்துக் கொண்டாள்.

 

‘ப்ளீஸ் டி பொண்டாட்டி’ பார்வையால் காதலை தூது விட, பதில் அனுப்பாது உதாசினம் செய்தவள் தனக்கான துணிகளுடன் குளியல் அறையில் நுழைந்து கொண்டாள்.

 

 

 

உடைமாற்றி வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்த ரகுவரன் இன்பமாக அதிர்ந்தான் அவனுக்கு பிடித்த வெண்ணிற  சேலை கட்டிக்கொண்டு வந்த மனைவியால். கண்கள் இரண்டும் அநியாயத்திற்கு துள்ளி குதித்து ஆச்சரியத்தை பிரதிபலிக்க, கணவனை ஒரு பார்வை பார்த்தவள் கண்ணாடி முன்பு நின்றாள்.

 

 

இரவு நேர ஒப்பனைகள் மிதமாக அவள் முகத்தில். கணவனுக்கு பிடித்தது போல் தலை அலங்காரம் செய்து கொண்டவள் கண்ணாடி வழியாக அவனை நோட்டமிட, எழுந்தமர்ந்து கன்னம் இரண்டிலும் கை வைத்து கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மனைவியை.

 

 

கண்ணாடி வழியாக அவள் கண்ணசைக்க, “பொண்டாட்டி” என்று குதிக்களித்தவன் கைநீட்டி அழைத்தான் தன்னிடம் வருமாறு.

 

 

கண் அடித்த விழிகள் இரண்டும் அக்னி பழம் போல் சிவந்துவிட்டது உடனே. கள்வனின் முகமும் அவள் தன்னை சோதிக்கிறாள் என்றறிந்து மாறிவிட, இரவு விளக்கை போட்டவள் சோதிக்க பக்கத்தில் படுத்தாள். உடலும் மனமும் ரகுவரனை மனைவியிடம் இழுத்துச் செல்ல, பெண் உடலை உரசிக்கொண்டு படுத்தான்.

 

 

தடுக்காமல் படுத்திருந்த மனைவியின் கழுத்தில் முத்தம் கொடுத்து காதல் மூச்சுகளை பரிசாக அனுப்பினான். அவளிடம் தடுப்போ உணர்வோ எதுவும் இல்லை. அதை அறிந்து கொண்டவன் கோபத்தை குறைக்க இந்த முறை கைகளை தூது அனுப்பினான். சேலை கட்டிய பகுதி அவனுக்காக காத்திருக்க, தன் இஷ்டத்திற்கு சேலைக்குள் நுழைந்தவன் வயிற்றோடு சேர்த்து அணைத்தான்.

 

 

 

மனைவியின் கால்கள் இரண்டும் சுருங்கிக் கொள்வதை உணர்ந்தவன் மூச்சுக்காற்றை மீண்டும் கழுத்தில் ஊர்வலம் கூட்டிச் செல்ல, கூச்சம் தாங்காமல் அவன் பக்கம் திரும்பி படுத்தாள். முகம் முழுவதும் ரகுவரனின் மீசை முத்தங்கள். பதிலுக்கு மனைவி கொடுக்காமல் அடம் பிடிக்க, கெஞ்சினான் முத்தம் கேட்டு முத்தத்தால். 

 

 

எல்லையில்லா சுதந்திரம் மனைவியின் கோபத்தை மெல்ல குறைக்க, நெருங்கி சென்றாள் முத்தம் கொடுக்க. இமை மூடி அந்த தருணத்தை அனுபவிக்க நினைத்தவன் உதட்டை மட்டும் தூக்கி கொடுத்து காத்திருக்க, கதவு சாற்றும் ஓசை மிக மெல்லிய அளவில் கேட்டது. 

 

 

மோகத்தோடு விழித்திறந்தவன் கடுப்பானான் மனைவி இல்லாததை கண்டு.  அதே கடுப்போடு எழுந்து பக்கத்து அறைக்கு செல்ல, அந்த அறை பூட்டி இருந்தது. கதவை நான்கு ஐந்து முறை தட்டியவன், “பொண்டாட்டி சாரி கேட்டதுக்கு அப்புறமும் இப்படி பண்றது நல்லா இல்ல. நானாது ஏதோ ஒரு கோபத்துல தனியா படுத்தேன். நீ இப்போ பண்றது பழி வாங்குற மாதிரி இருக்கு. நேத்துல இருந்து கட்டிப்பிடிக்க கூட இல்லடி. ரொம்ப சோதிக்காம கதவை திறந்து விடு.” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

 

 

கால் கடுக்க காத்திருந்தும் சாமி தரிசனம் கிடைக்காததால் தோல்வியோடு பிள்ளைகள் உறங்கும் அறைக்கு வந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவன் கைப்பேசி திடீரென ஒலி எழுப்பி நிறுத்தப்பட்டது. பிள்ளைகளின் தூக்கத்தை உறுதி செய்தவன் மனைவியின் அழைப்பை கண்டு மீண்டும் அழைத்தான். 

 

 

“நேத்து எனக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். அது என்னடா உனக்கு மட்டும் தான் கோபம் வருமா. உன் கோபத்தை நான் தாங்கிப்பேன் என் கோபத்தை உன்னால தாங்கிக்க முடியாது ரகு. இது நான் உனக்கு கொடுக்கிற தண்டனை. என் கோபம் போற வரைக்கும் நமக்குள்ள இதான் நிலைமை.” என்றதோடு அழைப்பை துண்டித்தாள்.

 

 

 

தன்னைத்தானே நொந்து கொண்டான் தலையில் அடித்துக் கொண்டு. இருந்தும் தன் மீது கோபம் குறையாமல் இருக்க கண்ணாடி பக்கம் சென்றவன், “உனக்கு என்னடா ரகுவரா இவ்ளோ கோபம் வருது. நீ எல்லாம் ஒரு ஆளா பொண்டாட்டி கிட்ட கோபப்படுற அளவுக்கு. திட்டுனா என்ன! அடிச்சா என்ன! வெக்கம், மானம், சூடு சொரணை இல்லாம பக்கத்துல படுக்க வேண்டியது தான. ரோசம் பார்த்து என்னடா சாதிச்ச வெட்டிப் பயலே.” புகழாரம் சூட்டிக் கொண்டான்.

 

 

திட்டிக் கொண்டிருந்தவன் முகத்தை அஷ்ட கோணலாக வைத்து, “ஐயோ இப்ப அவ வேணும்னே என்ன சொறிஞ்சு விட்டு கண்டபடி அலைய வைப்பாளே. தள்ளி இருந்தாலே அரை மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க மாட்டேன். கிட்ட இருந்து சாகப் போறேன்.” அழுக ஆரம்பித்தான் தலை முடியை பிடித்துக் கொண்டு.

 

 

அந்த அறையை நோட்டமிட்டு வந்தவன் விளக்கு அணையாமல் இருப்பதால் அழைத்தான் வீடியோ காலில். சில நிமிட காத்திருப்புக்கு பிறகு எடுத்தவள் இருக்கும் மொத்த கோபத்தையும் காட்டினாள் விளக்கை அணைத்து இருட்டான முகத்தை.

 

 

“அடியே! அதான் கிட்ட சேர்க்கலயே முகத்தையாது காட்டுடி.” எனக் கதற ஆரம்பித்த பின் தான் ஒளிந்த முகத்தை காட்டினாள்.

 

 

 

புலம்பல்கள் அனைத்தும் காணாமல் ஓடியது தன்னவள் முகத்தைப் பார்த்ததும். கைத்திரையில் மனைவி இருக்க தொடு  விரல் இல்லாமல் பார்வையால் வருடி ரசித்தான். அவளும் முறைப்பைக் காட்டுவதாக அவன் ரசிப்பை ஆழமாக ரசிக்க,

 

“அழகா இருக்கடி” என்றான் காதலோடு.

 

 

பதில் மொழி பேசாமல் அவள் பார்வையை மாற்றிக் கொள்ள, “சாரிமா” இந்த முறை வந்த மன்னிப்பு ஆழ்ந்து வந்ததாக உணர்ந்து, “இனிமே இந்த மாதிரி பண்ணாத ரகு. உன்னோட நிராகரிப்பு நீ சொன்ன மாதிரி தனிமைய கொடுக்குது. இருந்துட்டு போனு சாதாரணமா இருக்க முடியல.” வருத்தத்தோடு வரும் மனைவியின் வார்த்தையில் உள்ளம் வதங்கியவன், 

 

 

“மன்னிச்சிடு பொண்டாட்டி” மன்னிப்பை வேண்டி சரணடைந்தான் பாதத்தில்.

 

 

அவன் கேட்டதை கொடுக்காதவள் தண்டனையை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தாள் சோதித்து. எப்படியாவது சமாதானம் செய்து அவள் அருகில் உறங்கலாம் என்று எண்ணியவன் ஏமாந்து, 

 

“எனக்கு வேற எதுவும் வேணாம் பொண்டாட்டி உன் பக்கத்துல உன்னை கட்டிப்பிடிச்சிட்டு தூங்குனா போதும்‌. ப்ளீஸ் டி இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சு விடு.” என்றிட,

 

“இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டா இதையே பழக்கம் ஆகிடுவ. இன்னிக்கு ஒரு நாள் இந்த தண்டனைய நீ அனுபவிச்சு தான் ஆகணும்.” முடிவாக மறுத்துவிட்டாள்.

 

 

அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல், “ஒரு ஐ லவ் யூவாது சொல்லுடி” குழந்தை போல் கெஞ்ச ஆரம்பித்தான் விடாமல். அதற்கும் மறுப்பை பதிலாக கொடுத்தவள் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண் எடுக்காமல்.

 

 

 

அவள் மறுப்பில் சிறு கோபம் வந்தாலும் பார்க்கும் பார்வையில் உள்ளம் குளிர்ந்தது. அதன்பின் இருவரும் எதையும் பேசிக்கொள்ளாமல் பார்வையால் மட்டுமே காதலை வளர்க்க, நள்ளிரவு தாண்டி சென்றது இருவரின் காதல் லீலைகள். மனம் விழித்துக் கொண்டு இரவு முழுவதும் காதல் போர் புரிய தயாராக இருக்க, விழிகள் பின் முதுகை காட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தது தூக்கத்திற்காக.

 

 

 

எப்போது தூங்கினார்கள் என இருவரும் அறியவில்லை. நேரம் கடந்து கைபேசி தானாகவே அழைப்பை துண்டித்தது காலை வேளை பார்த்துக் கொள்ளட்டும் என்று.

 

****

 

 

“அப்பன மாதிரி எவ்ளோ திமிர் தனம் பண்ற… அதை கொஞ்சமாவது இதுல காட்டக்கூடாது. எத்தனை தடவை சொல்றது பெட்ட அசிங்கம் பண்ணாதன்னு. தினமும் உன்னால நாலு போர்வைய துவைச்சி போட வேண்டியதா இருக்கு.” குப்புற படுத்துக் கொண்டிருந்த ரகுவரன் செவியில் எங்கோ சண்டை நடப்பது போல் கேட்டது.

 

 

முகத்தை சுழித்து அசைந்து படுத்தவன் காதினுள், “ஆமாண்டி உனக்கு உன் அப்பனையும் திட்டிட கூடாது, உன் தம்பியவும் திட்டிட கூடாது. உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவ. நான் மட்டும் உங்க மூணு பேருக்கும் எப்படி தெரியுறன்னு தெரியல. இப்படியே மூணு பேரும் திமிர்த்தனம் காட்டிட்டு இருங்க மொத்தமா விட்டுட்டு என் வேலைய பார்க்க போறேன்.” பேச்சுக்கள் விழுந்து கொண்டே இருந்தது.

 

இதமான தூக்கத்தை பாதியில் கெடுத்து விட்ட கடுப்பில் முகம் சுருக்கி எரிச்சலோடு திரும்பிப் படுத்தான். கணவனின் செய்கைக்காகவே காத்துக் கொண்டிருந்தவள், “அப்பனுக்கு பிள்ளைங்க தப்பாம பிறந்து இருக்கீங்க. ரெண்டுத்துல ஒன்னாவது என்னை மாதிரி இருந்திருக்க கூடாது. கடவுளுக்கு நான் மட்டும் என்ன பண்ணன்னு தெரியல. அன்பான புருஷனையும் கொடுக்கல அடங்கி போற பிள்ளைகளையும் எனக்கு கொடுக்கல. எல்லாம் என் தலையெழுத்து.” முன்பு பேசியதை விட அதிக சத்தத்தோடு பேசினாள்.

 

 

கண்டு கொண்டான் மனைவி தான் திட்டிக் கொண்டிருக்கிறாள் என்று. சோம்பல் முறிக்க கூட உடம்பு இணங்கி வராததால் அப்படியே கண்களை மூடி படுத்திருக்க, “காட்டு கத்து கத்திட்டு இருக்கேன் உன் காது என்ன செவிடா? இல்ல இது எப்படியாது கத்திட்டு போகட்டும்னு அமைதியா படுத்திருக்கியா?” தலையணையை தூக்கி போட்டாள் ரகுவரன் மீது.

 

 

நன்றாக தூக்கம் கலைந்து எழப்பார்க்கும் ரகுவரனை நோட்டமிட்டவள், “டேய்! நான் உன் மேல தான தலகாணிய தூக்கி போட்டேன்… நீ எதுக்கு உங்க அப்பா மேல தூக்கி போடுற. இப்ப அய்யா எந்திரிச்சி சாமி ஆடுவாரு தேவையா எனக்கு இது.” என பிள்ளை மீது பழி போட்டாள்.

 

 

ரகுவரனின் இளம் ரத்தம் திட்டுவாங்கிக் கொண்டிருந்ததால் கவனிக்க மறந்து விட, “அம்மா நீங்க தான அப்பா மேல தூக்கி போட்டீங்க எதுக்காக தம்பிய திட்டுறீங்க?” மாட்டிவிட்டாள் அன்னையை.

 

 

பிள்ளையை முறைத்தவள் ரகுவரன் பார்க்கிறானா என நோட்டமிட்டாள். இன்னும் கண் முழிக்காமல் இருப்பதில் நிம்மதி அடைந்தவள் சைகை செய்தாள், ‘ஏண்டி உனக்கு யாருடி இவ்ளோ அறிவு கொடுத்தது. நீயும் உன் தம்பியும் எந்திரிச்சு போங்க முதல்ல.’ என்று.

 

மகளின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் அறியா வண்ணம் லேசாக கண்ணை திறக்க, “எல்லாம் எனக்கு எதிராவே சதி பண்ணுதுங்க. ஒன்னாவது என் பக்கம் இருக்குதா பாரு எல்லாம் அப்பன மாதிரியே திமிரு. நேத்து ராத்திரி என்னமா கொஞ்சல்…ஆசை இருக்க மாதிரி. இவ்ளோ நேரம் என் குரல் கேட்டும் படுத்திருக்கான் பாரு வெட்டிப் பையன். எந்திரிச்சி பல்ல காட்டட்டும் மொத்தத்தையும் உடைக்கிறேன். நான் மட்டும்தான் புருஷன் புள்ளைங்கன்னு உருகிட்டு இருக்கேன்.‌ என்னை ஒன்னும் கண்டுக்க மாட்டேங்குது.” தன் போக்கில் புலம்பிக்கொண்டு போர்வைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

லேசான கண் திறப்பில் மனைவியின் அழகை ரசிக்க முடியாமல் ஏங்கியவன் கைகளை கண் மீது வைத்துக்கொண்டு ஒரு கண்ணை மட்டும் முழுதாக திறந்தான். மகிழினி கொடுத்த அன்பு பரிசில் படக்கென்று திறந்து கொண்டது இரு விழியும் வியப்பில். 

 

 

ரகுவரனுக்கு பிடித்த இளம் மஞ்சள் கலரில் போன மாதம் புடவை எடுத்துக் கொடுத்திருந்தான். அவை மனைவிக்கு பிடிக்காமல் போக கட்ட மாட்டேன் என்று விசிறி அடித்தாள். தன் ஆசையை நிறைவேற்றாமல் போன மனைவி மீது ஏற்பட்ட கடுப்பில் அந்த புடவையை அத்தோடு தூக்கி அடித்தவன் தான் அதன்பின் பார்க்கவில்லை. 

 

‘ஆத்தாடி நம்ம பொண்டாட்டியா இது! கும்முனு இருக்காளே நான் கம்முனு இருக்க நேரமா பார்த்து.’ வெளிப்படையாக சொல்ல முடியாமல் உள்ளுக்குள் நொந்தவன் பார்வையால் தனக்கானதை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.

 

‘வேணான்னு சொல்லிட்டு பிளவுஸ கூட தெச்சி இருக்கா கேடி. நம்ம நினைச்சதை விட சூப்பரா இருக்கே… என்னதான் சொல்லு ரகுவரனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி ரொம்ப அதிகம்.’ அவளைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொண்டான்.

 

 

பார்வை ஊர்கோலம் சென்று அவனுக்கு பிடித்தமான இடுப்பில் நிற்க, ‘காலையிலயே புருஷன் மேல பாவம் பார்க்காம இப்படி சோதிக்கிறாளே… முருகா என்னை நீ தான் இன்னைக்கு காப்பாத்தணும்.’ என்றவன் பார்வை அங்கிருந்து நகர மறுத்தது.

 

 

போதும் என்று மனம் சொன்னாலும் பார்வை போதாது என்று அடம் பிடித்தது ரசிப்பதை நிறுத்தாமல். அவனை இன்னும் சோதிக்கும் விதமாக பக்கத்தில் இருக்கும் தலையணையை சரி செய்ய அவன் மீது சரிந்தாள்.  பட்டாம்பூச்சி புடவை கட்டி தன் மீது சாய்வதாக எண்ணியவன் கூசிய உடலை கட்டுப்படுத்த பெரும் பாடுபட்டான்.

 

 

‘அடியே!’ என்றவன் கைகள் உணர்வுகளை வெளிப்படுத்த கட்டி அணைக்க முயன்றது. அதற்குள் அவனது மனைவி விலகிச் சென்று விட, நல்ல கனவை தொடர முடியாமல் கடுப்பானான்.

 

 

உள்ளுக்குள் பெருமூச்சு விட்டவன் ரசிப்பை தொடர்ந்தான். ஈரத்தோடு துண்டு கட்டி இருக்கும் மனைவியை கண்டு, ‘ஐயோ என் செல்லம் ஈரத் தலையோட இருக்குதே. இப்படியே இருந்தா சளி புடிச்சி ஜுரம் வருமே என் பொண்டாட்டிக்கு. இந்தா வரேண்டி மாமா….’ மறைந்திருந்து ரசிப்பதை நிறுத்திவிட்டு நேரடியாக களத்தில் குதிக்க எண்ணியவன் முகத்தில் போர்வை வந்து அடித்தது வேகமாக.

 

“ஃபிராடு நீ எப்பவோ எந்திரிச்சிட்டன்னு எனக்கு தெரியும். பார்த்து கிழிச்சது போதும் எந்திரிச்சு வேலைய பாரு.” அவனின் கள்ளத்தனத்தை கண்டு கொண்டவள் முறைத்துக் கொண்டே வெளியேற, உதட்டுக்குள் நாக்கை சுழற்றி செல்லும் மனைவியின் பின்னழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

 

 

அதன் பின் அவனுடள் அவன் பேச்சை கேட்குமா! சோம்பல் முறித்த உடல் அவள் பின்னே சென்றது. பிள்ளைகள் இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை சிறிதும் கண்டு கொள்ளாதவன்,

 

“சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க….

ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க…

மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றி வைத்து போக….

ரகுவரன் பார்வை பொண்டாட்டி அழக ரசிக்க…

இன்னைக்கு லீவ் போட்டு கொஞ்சுவோமாமாமா…” என்றவன் கைகள் கிள்ளியது இடுப்பை.

 

 

கிள்ளிய கையை கரண்டியால் அடித்து தண்டனை கொடுத்தவள், “இன்னொரு தடவை என்னை தொட்ட… கை இல்லாத அட்வகேட்டா ஹைகோர்ட்டுக்கு போக வேண்டியதா இருக்கும்.” தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

 

சிலுப்பி கொண்டவன் ரோஷத்தோடு கிளம்புவான் என்று எண்ண, அதற்கு மாறாக பூனை போல் சுற்றி வந்தான். இல்லாத உதவிகளை கூட தானே செய்ய முன் வந்தவன் அவள் உடலை உரசி இம்சிக்க எண்ணிட, ஆசை நிறைவேறாமல் போனது பதில் தாக்குதலால்.

 

 

“மானு உங்க அப்பாவ காபி குடிக்க சொல்லு.” என்று விட்டு தன் வேலைகளை கவனித்தாள். பல காதல் வித்தைகளை காட்டியும் தோத்து போன ரகுவரன் மனைவி மீது கோபம் கொண்டு பின் சுற்றுவதை கைவிட்டான். 

 

கணவனின் தொல்லை தன்னிடம் இல்லை என்பதை கண்டு கொண்ட மகிழினி அவன் மீது இருக்கும் மொத்த கோபத்தையும் காட்டினாள் சமையலறையில் இருக்கும் அனைத்து பாத்திரங்களையும் தூக்கிப்போட்டு. பிள்ளைகள் இருவரும் அன்னையை ஏதோ விசித்திரமாக பார்க்க, சிரித்துக் கொண்டிருந்தான் ரகுவரன்.

 

“என்னத்துக்கு என் மூஞ்சிய பார்த்துட்டு இருக்கீங்க, ரெண்டு பேரும் போய் குளிங்க.” 

 

“ஏய்! என் பசங்கள மிரட்டுற வேலை வச்சுக்காதடி.”

 

இல்லாத பாத்திரத்தை தேடி தரையில் தூக்கிப் போட்டு உடைத்தவள், “இப்ப என்ன சொல்லிட்டேன் பசங்கள? நேத்து என்னமோ வக்கனையா பேசின இனிமே உன் விஷயத்துலயும் உன் பிள்ளைங்க விஷயத்துலயும் தலையிட மாட்டன்னு. இப்ப எதுக்குடா வந்து பேசுற வெக்கமா இல்ல உனக்கு.” வார்த்தைக்கு வார்த்தை பாத்திரத்தை தூக்கி அடித்து தன் கோபத்தை காட்டினாள்.

 

“நீ ராட்சசிங்கறத மறந்துட்டு அப்படி சொல்லிட்டேன். உன்ன எல்லாம் நம்பி என் பசங்கள விட முடியாது.”

 

“விடாத, யாரு விட சொன்னது? இனிமே நீயே எல்லாத்தையும் பார்த்துக்க.”

 

“சரிதா போடி ரகுவரன் முன்னாள் பொண்டாட்டி.” என்றதும் கண்கள் விரிந்தது அவளுக்கு.

 

“என்னடி லுக்கு விடுற? அதான் நான் வேணான்னு மூஞ்சிய திருப்பிக்கிட்டு போறல அப்புறம் எதுக்கு பொண்டாட்டின்னு உரிமை கொண்டாடிட்டு.” சிலுப்பிக் கொண்டவன் தன் பிள்ளைகள் இருவரையும் கூட்டிச் சென்றான் குளிக்க வைக்க.

 

 

மான்விழியை குளியல் அறையில் விட்டவன் துண்டோடு காத்துக் கொண்டிருந்தான் வெளியில். அக்கா வரும் வரை தனியாக இருந்த சின்னவன் தந்தையை அழைத்தான் விளையாட்டுக்கு. மனைவியும் மகளும் அருகில் இல்லாததால் மகனோடு கும்மாளம் அடித்தான் ரகுவரன்.  

 

இருவரின் சத்தத்தில் அரைகுறை குளியலை போட்ட மான்விழி, “அப்பா மான்குட்டியும் விளையாட்டுக்கு வருது.” ஓடி வந்து ஐக்கியமானாள்.

 

 

மகனை தூக்கிப்போட்டு மெத்தையில்  குத்துச்சண்டை போட்டி நடத்தியவன் மகளை நடுவராக வைத்து குதுக்களித்தான்.  மூவரும் இட்ட கூச்சலில் ஆதவ் இருப்பு கொள்ளவில்லை அவர்கள் வீட்டில். தூங்கிய முகத்தோடு மாமன் வீட்டின் கதவை தட்டினான். கோபத்தில் இருந்த மகிழினி யார் என்று கதவை திறக்க, “மகிழா…” அத்தையை கண்டுகொள்ளாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு ஓடினான்.

 

 

மூவர் கூட்டணி நால்வராக சத்தம் காதை கிழித்தது. மகிழினிக்கு இருப்புக் கொள்ளவில்லை கணவன் தன்னை மறந்து ஆனந்தமாக சிரிப்பதால். உள்ளுக்குள் கருகிக் கொண்டே இருந்தாள் அவளவனை‌  அர்ச்சித்து. விளையாட்டோடு விளையாட்டாக திரும்பியவன் பார்வையில் முகம் சிவந்து அமர்ந்திருக்கும் மனைவி விழ, அவள் பார்வை சொல்லியது அனைத்தையும்.

 

 

நாக்கை கடித்துக் கொண்டு உள்ளுக்குள் குஷியானவன் தன் பிள்ளைகளை உசுப்பி விட்டான் அவள் இருக்கும் இடத்திற்கு ஓட. தந்தையின் எண்ணம் அறியாத மகிழ்வரன் முதலில் அன்னையருகில் ஓட, பிள்ளைகளிடம் விளையாடுவது போல் அடுத்த ஆட்டத்திற்கு அடி போட்டான் பாட்டு பாடி ஆடலாம் என்று. கைத்தட்டி ஆரவாரம் செய்யும் பிள்ளைகளை பார்ப்பதற்கு பதில் பார்வை மனைவியிடம் தாவியது.

 

“மானு ஸ்கூலுக்கு மணி ஆகுது கிளம்பு.” உச்ச கடுப்பில் மகளை விரட்டி விட முயன்றாள்.

 

“தங்கம் இன்னைக்கு நீ லீவுடா…” 

 

“நிஜமாவா அப்பா” என்று ஆச்சரியத்தில் கேட்கும் மகளை தூக்கி சுழற்றியவன், “ஆமாண்டா தங்கம் இன்னிக்கு புல்லா அப்பா கூட இதே மாதிரி ஜாலியா விளையாட போற.” இருக்கும் ஆரவாரத்தை இன்னும் அதிகமாக்கினான். 

 

நடப்பதை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாத மகி அங்கிருந்து வெளியேற பார்க்க, வளைத்துப் பிடித்து பிள்ளைகளிடம் தள்ளியவன் களத்தில் இறங்கினான்….

 

ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி….

ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி….

 

நான் இருந்தேன்

தேருக்குள்ள இப்போ

விழுந்தேன் சேருக்குள்ள….

நான் இருந்தேன்

தேருக்குள்ள இப்போ

விழுந்தேன் சேருக்குள்ள….”

 

ரகுவரனின் ஆட்டம் இப்பொழுது நிற்காது என்பதை அறிந்தவள் சமயம் கிடைக்கட்டும் என்று நழுவ பார்க்க, விடவில்லை அவள் கணவன். தடுப்பதையும் மீறி தூக்கிக் கொள்ள, மூன்று பிள்ளைகளும் சக்தியை மீறி கத்தி குதித்தனர்.

 

“விடுடா” விடுபட போராடும் மனைவியை இன்னும் கடுப்பேற்றினான்,

 

“கண்டு மயங்கவில்ல

அவ முகத்த கண்டா

பிடிக்கவில்ல….

 

இன்னும் புரியவில்ல

அவ நெனப்பு என்ன

தெரியவில்ல

 

வெளியில…ஹே..ஹே…

ஓணானத்தான்

ஹே ஹிஹி

வீட்டுக்குள்ள

விட்டுப்புட்டேன்

ஏன்?….

 

ஒரு மூணு முடிச்சால

முட்டாளு ஆனேன் கேளு

கேளு தம்பி….”       

 

 

என்று.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்