2,899 views

முந்தைய நாள் இரவு ஜிஷ்ணுவையும் வசுந்தராவையும் தேடி மலைக்கு சென்ற மூவரும், ஆளுக்கொரு டார்ச்சை அடித்து நடக்க, அர்ச்சனா, “நம்ம இப்படியே இந்த ஆளை அடிச்சு போட்டுட்டு ஓடிடலாமா சார்?” என பரத்திடம் குமரன் அறியாமல் கிசுகிசுக்க,

அவனோ, “நல்லா இருக்குற ரோட்டுலயே நடக்கத் தெரியாத நீ, மலைக்குள்ள ஓட போறியா? என்றான் முறைப்பாக.

குமரன் தான் நடையை நிறுத்தி இருவரையும் திரும்பிப் பார்த்து, “டேய்… நீ முன்னாடி போடா” என பரத்தை முன்னே அனுப்ப, அவன் வாய்க்குள் முனகிக் கொண்டு முன்னேறினான்.

பின், அர்ச்சனா புறம் திரும்பியவன், “மவளே… என்னை அடிச்சு போட்டுட்டு ஓடுற அளவு உனக்கு தைரியம் இருக்கா? அப்படியே உருட்டி விட்டுடுவேன்!” என்று முறைத்தவன், “ஒழுங்கா என் கூடயே நட…” என மிரட்டி அழைத்துச் செல்ல, அர்ச்சனாவிற்கு கடுப்பாக இருந்தது.

இப்படியே சிறிது தூரம் டார்ச்சுடன் நடக்கையிலேயே அர்ச்சனா ‘ஆஆ’ வெனக் கத்தினாள்.

அதில் நின்ற இரு ஆடவர்களும் என்னவென்று வினவ, “இங்க பாருங்க… கீழ பாருங்க… ரத்தமா இருக்கு” என்று அப்பாறை மீது வெளிச்சத்தைப் பரவ விட்டு காட்ட அதனைக் கண்டு இருவரும் திகைத்தனர்.

பரத்தோ, “அந்த எம். எல். ஏ தாராவை கூட்டிட்டு போய் என்னமோ பண்ணிட்டான். அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு. உங்களை சும்மாவே விட மாட்டேன்டா.” என்று கோபத்துடன் மூச்சு வாங்க,

குமரன் தான், பயத்தில் துடித்த மனதை அடக்கி, “ம்ம்க்கும்… உங்க வக்கீலு அவனை ஒண்ணும் பண்ணாம இருந்தாலே போதும். நீ வேற ஏன்டா?” என எரிச்சலானவன், “தர்மா! வசு!” என்று கத்தி அழைத்துப் பார்த்தான்.

என்னவானதோவென்ற அச்சம் ஒரு புறம் மூவரையும் வாட்ட, மலை உச்சி வரை தேடிப்பார்த்து சோர்வுடன் கீழே இறங்கினர். மேலும் சில ஆட்களை மலைக்குள் அவர்களை தேட அனுப்ப, கௌரவ் தான் அவ்வப்பொழுது யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பியபடி இருந்தான்.

இங்கு மூன்று ஜீவன் துடிப்பது தெரியாமல், ஜிஷ்ணுவும் வசுந்தராவும் ஒருவரை ஒருவர் பார்வையால் சுட்டு விட்டு, வெளியில் வர, அதற்குள் அப்பெரியவர் அவர்களுக்கு தேநீரைக் கொணர்ந்தார்.

“எதுக்கு தாத்தா இதெல்லாம். நாங்க கிளம்புறோம்” என்று வசுந்தரா கனிவாய் மறுக்க, “பஸ்ஸு வர இன்னும் நேரம் இருக்குமா. காயம் பட்ட உடம்பு வேற. வெறும் வயித்தோட இருக்க கூடாது…” என ஜிஷ்ணுவின் காயத்தை ஆராய்ந்தார்.

“இப்ப வலி பரவாயில்லையா தம்பி…” அவர் பவ்யமாய் வினவ, அதற்கு அவன் பதிலளிக்கும் முன்னே, வசுந்தரா “பஸ் எப்ப வரும்?” என்று கேட்க, “மொதோ பஸ்ஸு எட்டு மணிக்கு தான்மா” என்றார்.

“ஓ…” என்று நெற்றியை தேய்த்தவள், திலகா அங்கு வருவதைப் பார்த்து, “போன் இருக்கா?” எனக் கேட்டாள்.

“இருக்குக்கா!” எனத் தலையாட்டியவள், சிறிய அலைபேசியை அவளிடம் கொடுக்க, அதனை அவள் வாங்கும் முன்னே ஜிஷ்ணு வெடுக்கென பிடுங்கி இருந்தான்.

பின், குமரனின் எண்ணிற்கு அழைக்க, குமரனோ புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை புரியாது ஏற்று ஜிஷ்ணுவின் குரல் கேட்டதும் தான் நிம்மதியானான்.

“எங்க மாப்ள போய் தொலைஞ்ச? பயந்தே போய்ட்டோம். வசு எங்க இருக்கா? அவளுக்கு ஒண்ணும் இல்லைல?” எனப் பதறியபடி கேட்க, அவனின் பதற்றம் போனை தாண்டி அவளுக்கும் கேட்டது.

அதில் நிமிர்ந்து வசுந்தராவை நக்கலாக ஏறிட்ட ஜிஷ்ணு, “வக்கீலுக்கு என்ன? குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்கா.” என ஏகத்துக்கும் கேலி புரிய, வசுந்தரா அனல் மூச்சுடன் முறைத்தாள்.

பின், ஜிஷ்ணு விவரம் கூறி அவனை வண்டியை எடுத்துக்கொண்டு வர கூற, மறுகேள்வி கேளாமல் குமரனும் கிளம்பினான். இதில், பரத்தும் அர்ச்சனாவும் உடன் வந்தே தீருவோம் என அடம்பிடிக்க, வேறு வழியற்று அவர்களையும் அழைத்துச் சென்றான்.

ஜிஷ்ணு கூறிய தகவலின் படி, சரியாக அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தனர். குமரன் தான் ஜிஷ்ணுவின் காயத்தை கண்டு அதிர்ந்து, “என்னடா ஆச்சு? இப்படி அடி பட்டுருக்கு?” எனப் பதற,

வசுந்தரா “ப்ச்… இந்த விளக்கம் எல்லாம் போற வழில பேசுங்க. கிளம்பலாம்” என்றாள் அவசரமாக.

இதில் ஜிஷ்ணு தான், பரத்தையும் அர்ச்சனாவையும் கூர்ந்து பார்க்க, பரத்திற்கு கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது. குமரனோ, “இந்த ரெண்டு எதிர்க்கட்சி வக்கீல்களும் நம்மூருல நின்னுட்டு இருந்தாங்க தர்மா” என்று கோர்த்து விட,

அர்ச்சனா வேகமாக, “நின்னுட்டு இருந்ததை கூடவா எம். எல். ஏ கிட்ட புகார் குடுப்பீங்க. ஏன் வக்கீலா இருந்தா நிக்க கூட கூடாதா?” என்று சமாளிக்கிறேன் பேர்வழி என உளறித் தள்ளினாள்.

‘ஏதோ சரி இல்லையே…’ என்ற யோசனையுடன் வசுந்தராவை அளந்த ஜிஷ்ணுவை அலட்சியப்படுத்தியவளின் மனமெங்கும் அவளின் தந்தை நினைவே இருந்தது.

பின், ஐவரும் அங்கு இருந்து கிளம்பி விட, குமரன் “மாப்ள. முதல்ல ஹாஸ்பிடல் போய் உனக்கு ப்ராப்பர் ட்ரீட்மெண்ட் பார்த்துடலாம். செப்டிக் ஏதாவது ஆகிடப்போகுது” என்றதில்,

வசுந்தரா “முதல்ல என் அப்பா எங்கன்னு தெரியணும். செப்டிக் ஆகி சாகட்டும்.” என இறுதி வரியை மட்டும் முணுமுணுத்தவளுக்கு, தன் மீதே தீராத கோபம் எழுந்தது.

அவன் பலவீனமானால், தன் மனதும் பலவீனமாவதை எண்ணி எரிச்சலுற்றவள், பெரிய பெரிய மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்தினாள்.

குமரன் ஜிஷ்ணுவைப் பார்க்க, அவன் கண்ணால் சைகை செய்ததும், தலையை உருட்டி காரை எடுத்தான்.

அப்படியும் கார் நேராக ஒரு பெரிய மருத்துவமனை வாசலில் தான் நின்றது. கீழே இறங்கியவள்,
குமரனின் தலையில் சப்பென அடித்து, “டேய்… உன்ன நான் என் அப்பா இருக்குற இடத்துக்கு தான போக சொன்னேன்.” என்று எரிந்து விழ, குமரனோ தலையைத் தேய்த்தபடி பாவமாக நண்பனைப் பார்த்தான்.

பரத்தோ, “விடு தாரா. எம். எல். ஏ க்கு ட்ரீட்மெண்ட் முடிச்சுட்டு கூட அப்பாவை தேடலாம்” என நல்ல பையனாக ஆஜரானான். எங்கே மறுபடியும் கையைக் கிழித்து விடுவானோ என்ற பயம் அவனுக்கு.

வசுந்தரா பரத்தை முறைத்து விட்டு, மேலும் ஏதோ பேசப் போக, ஜிஷ்ணு அவளைத் தடுத்து “உன் அப்பா இங்க தான் இருக்காரு…” என்றான் சலனமின்றி.

ஏனோ அக்குரல் அவளுள் பெரும் பிரளயத்தை உருவாக்கியது. எப்போதும் மரியாதையின்றி அழைப்பவனின் வார்த்தைகளில் இருக்கும் மரியாதையை உணர்ந்தவளுக்கு, ஏதோ நெருட, “என்… என் அப்பா இங்க ஏன்?” எனக் கேட்கும் போதே, கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடியது.

குமரன் தான் தயக்கத்துடன், “அது வசு… ஐசியூல…” என்று கூற வர, அவளோ வெகுவாய் அதிர்ந்து விட்டாள்.

ஜிஷ்ணுவின் பனியனை கோபத்துடன் பற்றியவள், “என்னடா பண்ணுன அப்பாவ?” எனக் கடும் சீற்றத்துடன் வினவ, அவனோ பதிலே கூறவில்லை.

கோபமும் பயமும் மாறி மாறி எழுந்ததில், விறுவிறுவென மருத்துவமனைக்குள் சென்றவள், அவளின் தந்தையைத் தேடி உள்ளே செல்ல, அங்கோ குமரன் கூறியது போல தீவிர சிகிச்சைப் பிரிவில் உடல் முழுதும் கத்தியால் வெட்டுப்பட்டு கண் மூடிக் கிடந்தார் ராஜசேகர்.

ஒரு கணம் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. கண்ணில் நீர் திரையிட, உள்ளே அனுமதிக்காத மருத்துவரிடம் பிடிவாதம் பிடித்து, வெளியில் நின்றே தந்தையைக் கண்டு பதறிட, ஜிஷ்ணுவின் கண்ணசைவில் மருத்துவர் அவளை அனுமதித்தார்.

அந்நிலையிலும் அதனை கண்டுகொண்டவள், உள்ளே செல்லாமல் ஒட்டுமொத்த ஆத்திரத்துடன் ஜிஷ்ணுவின் கன்னத்தில் பளாரென அறைந்தாள். அவள் அறைந்த சத்தமே அந்த இடத்தை எதிரொலிக்க வைக்க, மற்ற மூவரும் தனக்கே அறை விழுந்த ரீதியில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டனர்.

ஆனால், அறை வாங்கியவனோ கல்லாக நிற்க, “ஏன்டா இப்படி செஞ்ச? இப்ப ஏன் இவரை பேச்சு மூச்சில்லாம படுக்க போட்டு இருக்கன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்…” என விழிகளில் அனலைக் கக்கியவள்,

“என்ன என் அப்பனை கொன்னா, எவனாவது எம். பி சீட் தரேன்னு சொன்னானா. இன்னும் உன் அரசியல் வெறிக்காக எத்தனை பேரை கொல்லுவ? சொல்லுடா. ஏன்டா இப்படி செஞ்ச…?” உச்சஸ்தாதியில் கத்திய வசுந்தரா வஞ்சகமின்றியே அவன் கன்னங்களைப் பழுக்க வைத்தாள்.

அதனை சிறு எறும்பு கடித்தது போல அசட்டையாக ஏற்றுக்கொண்டவன், புருவங்களை நெளித்து முறைத்தபடி அவள் விரல்களை நறுக்கென பிடித்துக் கொள்ள,

குமரன் தான், “என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாத வசு. உன் அப்பா தான் இவனை தேடி வந்தாரு…” என அதட்டி விட்டு, ஜிஷ்ணுவிடமும் “மாப்ள அவள் கையை விடுடா…” என்றான் பரிதாபமாக.

அவன் வளைத்த விரல்கள் ஒடிந்தது போன்றதொரு வலியைக் கொடுக்க, சிறிதும் கத்தாமல் இறுமாப்பாக நின்றவள், பட்டென அவனிடம் இருந்து கையை உதறி, “என் அப்பா எதுக்குடா உன்னை பார்க்க வந்தாரு?” எனக் கேட்டாள் நம்பாத தொனியில்.

ஜிஷ்ணுவோ, “அத உன் அப்பன் பொழைச்சு வந்தா அவன்கிட்டயே கேளு…” என்று உறுமினான்.

அதில் மேலும் வெறுப்பானவள், அவனின் பரந்த மார்பில் படபடவென அடித்து தீர்த்து, “என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறியா இல்லையா?” என்றாள் தீப்பார்வையுடன்.

கூடவே, பாவையின் விழிகள் கலங்கி இருக்க, அதில் என்ன கண்டானோ அவளை சற்றே விலக்கி நிறுத்தி, சலனமின்றி நடந்ததைக் கூறினான்.

ராஜசேகரை கொல்ல வேண்டும் என்ற வெறியில் தான் மிதிந்திருந்தான் ஜிஷ்ணு. அதற்கு சரியான நேரமும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அதற்கு தோதாய், கோவில் வாசலில் நின்றிருந்தவர் அந்த வழியாய் காரில் சென்றவனை தடுத்து நிறுத்தினார்.

அவன் மட்டுமே இருந்தாலும், பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை தயாராகவே வைத்திருந்தவன், முறைப்புடன் காரை விட்டு இறங்கி, அதில் சாய்ந்து திமிருடன் நின்று அவரைக் கண்டு விழி உயர்த்தினான் என்னவென்று.

அவனின் திமிர் கண்டு எப்போதும் போல ராஜசேகருக்கு சுள்ளென வைத்தாலும், அதனை அடக்கிக்கொண்டு “உங்கிட்ட பேசணும்” என்றார்.

‘சாகுறதுக்கு முன்னாடி பேசிக்க…’ என எண்ணியவன், கண்ணாலேயே ‘பேசு’ என்பது போல ஜாடை செய்ய, இன்னும் கடுப்பானாலும் அதனை கட்டுப்படுத்திக்கொண்டவர்,

“உனக்கும் என் பொண்ணுக்கும் என்ன பிரச்சன?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார். இக்கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது சிறு அதிர்விலேயே புரிந்தது ராஜசேகருக்கு.

அவன் பதில் பேசாது போனதில், அவனை அழுத்தமாகப் பார்த்தவர், “இங்க பாரு தர்மா. எனக்கு உன்ன பிடிக்காது தான். நீ அடிதடி சண்டைன்னு போறது எனக்கு சுத்தமா பிடிக்காது தான். ஆனாலும், என் பொண்ணு இந்த ஊருக்கு படிக்க வந்து, உன் கூட பேசுனப்ப நான் அமைதியா இருந்தது… உன் மேல இருந்த நம்பிக்கையில தான்.” முதலில் அவர் பேசியதை அசுவாரஸ்யமாக கேட்ட ஜிஷ்ணு, அதற்கு மேல் பொறுமையின்றி கத்தியை எடுத்திருக்க, அவரின் இக்கூற்றில் விழி சுருங்க அவரைப் பார்த்தான்.

“நான் நினைச்சு இருந்தா, அப்பவே என் பொண்ணை திரும்ப ஊருக்கு அனுப்பி இருக்க முடியும். உன் கூட பேச விடாம செஞ்சுருக்க முடியும். ஆனா, எனக்கும் நம்ம ஊரை பத்தியும் இங்க இருக்குற வக்கிர புடிச்ச மனுஷங்கள பத்தியும் நல்லா தெரியும். சாதி சாதின்னு… மனசாட்சி இல்லாம ஊரையே கொளுத்துற ஆளுங்க.

இதுல, திடீர் திடீர்ன்னு பொண்ணுங்க காணாம போறது வேற. என்னதான் அவள் தைரியமான பொண்ணா இருந்தாலும், என்னை பொறுத்தவரை அவள் குழந்தை தான். உன் கூட இருந்தா அவள் பாதுகாப்பா இருப்பான்னு தெரிஞ்சு தான், நானும் அவள தடுக்கல. என் பொண்ணை பாதுகாத்துக்கிட்ட நான், ராதி பொண்ணை எப்படி விட்டேன்னு தெரியல…” எனக் கூறும் போதே அவருக்கு குரல் ராதிகாவின் நினைவில் நடுங்கியது.

பின் உடனே தன்னை மீட்டவர், “போனது போகட்டும். எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம். அவள் இப்படியே இருந்துடுவாளோன்னு எனக்கு பயமா இருக்கு. பிடிவாதம் பிடிச்ச பொண்ணு… உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றதை கேட்கவே பதறுது.” என்றவர் அவனைப் பார்க்க, அவனோ பேச்சற்று நின்றிருந்தான்.

அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவராக, “என்ன உன் மேல இம்புட்டு நம்பிக்கையான்னு தோணுதா?” எனக் கேள்வியாக கேட்டவர் அவரே பதிலாக,

“உன்ன பொறந்ததுல இருந்து நான் பாத்துட்டு இருக்கேன். சண்டியர் மாதிரி திரிஞ்சாலும், நீ நியாயஸ்தன்ற ஒரே காரணத்துக்காக தான், என் பெண்ணுக்காக உங்கிட்ட பேசிட்டு இருக்கேன். உனக்கு கோபம் என் மேல, ஊர் மேல இருக்குன்னா அதை எங்க மேல காட்டு. என் பொண்ணு… என் பொண்ணு… எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாது.” என்றவருக்கு வார்த்தைகள் பிசிறடித்தது.

மேலும் சில உரையாடல்கள் நடைபெற, ஜிஷ்ணுவிற்கோ முதன் முறை மனதில் ஒரு குழப்பம். இதுவரை, ராஜசேகரை மரியாதை நிமிர்த்தமாகவோ, அல்லது வசுந்தராவின் தந்தையாகவோ அவன் பார்த்ததே இல்லை. அவனைப் பொறுத்த வரை, ஜாதி வெறிப் பிடித்தவர் அவ்வளவு தான்.

ஆனால், இப்போதோ அவனுக்குள் ஒரு வித குற்ற உணர்வு அலைக்கழிக்க, முதன் முறை அவர் கண்ணைப் பார்க்க இயலாமல் விழிகளைத் திருப்பினான். அத்துடன், பேச்சு முடிந்து விட்டதாக காரில் ஏறியவன், ஏகப்பட்ட சிந்தனையுடன் மெல்ல காரை கிளப்பி சிறிது தூரம் செல்ல, அப்போது தான் கண்ணாடி வழியே பின்னால் நின்ற ராஜசேகரை நோக்கி யாரோ ஒருவன் கத்தியுடன் நெருங்குவதைப் பார்த்தான்.

பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்து, “டேய்… டேய்…” என்று கத்தி, காரை நிறுத்தி இறங்கி ஓடி வரும் முன், அக்கத்தி ராஜசேகரை சரமாரியாகத் தாக்கியது.

ஜிஷ்ணு தாவி வந்து அவனைப் பிடிப்பதற்குள் அவன் ஓடி விட, “டேய்ய்ய்…” என்று அவனை நோக்கி சீறியவன், இரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை பரிதவிப்புடன் கையில் அள்ளினான்.

அப்போதும் அவர், “டேய். நீயே என்னை கொல்ல தான நினைச்ச அப்பறம் ஏன் ரொம்ப நடிக்கிற.” என அரை மயக்கத்தில் புலம்பிட,

“யோவ்… செத்து தொலைச்சுறாத. அப்பறம் அதுக்கும் உன் பொண்ணு என்னை    
தான் சாவடிப்பா.” எனப் பேச்சுக் கொடுத்து அவரை விழிக்க வைக்க முயற்சி செய்தான்.

ஆனால், அவரோ “என் பொண்ணு…” எனக் கூறும் போதே மயங்கி விட, “யோவ்… யோவ்…” என்று அவர் கன்னத்தில் தட்டியவன்,

“மாமா! மாமா” என்று நெஞ்சம் துடிக்க அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி வந்தான். இந்த களேபரத்தில் அவரின் சட்டை மட்டும் நாராய் கிழிந்து, அவன் தூக்கும் போதே கீழே விழுந்து விட, அதனைப் பார்த்து தான் மரகதமும் பயந்தது.

ஜிஷ்ணு கூறி முடித்ததுமே, பிரம்மை பிடித்தவள் போல நின்றாள் வசுந்தரா.

தந்தையின் வார்த்தைகள் அனைத்தும் அவள் செவிகளுக்குள் ஊடுருவி வதைத்தது. ஒவ்வொரு முறையும், தான் என்ன கூறினாலும், அவர் தவறே செய்கிறார் என அதட்டிக் கூறினாலும், அதையும் சிறுவன் போல தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் எந்த தந்தைக்கு இருக்க இயலும்.

இதுவரை, அவள் என்ன பிடிவாதம் பிடித்தாலும் அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்ளும் தந்தையல்லவா அவர். இறுதியாக அன்று திருமணத்தைப் பற்றி பேசும் போது கூட, ஜிஷ்ணுவைப் பற்றி பேசியும் அதை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூறாது, தன்னை புரிந்து கொண்டவர், தனக்காக அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவனிடம் சென்று பேசிய அவரின் பாசம் அவளை கதி கலங்க வைத்தது.

அவளை மீறி இந்நினைவுகள் கேவல்களாக வெளிவர, தொப்பென நாற்காலியில் அமர்ந்தவள், வாய் விட்டே அழுது விட்டாள்.

முகத்தை மூடி கண்ணீரில் தேம்பியவளுக்கு, ஆறுதல் கூற குமரன் வேகமாக அவளின் அருகில் சென்று அமர, அவளோ முகத்தில் இருந்து கையை எடுக்கவே இல்லை.

“தாரா… அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. சரி ஆகிடுவாரு” என்ற பரத்தின் பேச்சுக்களும் அவள் காதில் கேட்கவில்லை.

ஜிஷ்ணு நடந்ததை கூறி முடித்ததோடு தன் வேலை முடிந்து விட்டது போல நகர்ந்து நிற்க, குமரன் தான், அவனைக் கெஞ்சலாக அழைத்தான். ஆனால், அவன் அவளை என்னவென்றும் பார்க்காது இறுக்கமாக நிற்க, அப்போது மருத்துவர் அங்கு வந்தார்.

“ராஜசேகரோட உடல்நிலை கொஞ்சம் மோசம் தான். நிறைய இடத்துல குத்து பட்டருக்கு. அவரோட வயசுக்கு ரெகவர் ஆகுறது கஷ்டம் தான். முடிஞ்ச அளவு ட்ரீட்மெண்ட் குடுத்து இருக்கோம். அதுக்கு மேல கடவுள் கைல தான் இருக்கு. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்.” என்று கூறி விட்டு செல்ல, முகத்தை மூடி இருந்தவளின் விசும்பலோ மருத்துவரின் வார்த்தையில் மேலும் அதிகமானது.

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், ஜிஷ்ணு அவளருகில் வந்து, அவள் கையை எடுத்து விட, அவ்ளோ வீம்பாக அமர்ந்திருந்தாள்.

“ப்ச்… ஏய்! கைய எடு!” அவன் அதட்டலாகக் கூற, அவள் அழுது கொண்டே இருந்ததில், அப்படியே அவனின் வயிற்றில் அவளின் முகத்தை பதிய வைத்து இறுக்கிக் கொண்டான்.

இடுப்பில் ஏற்பட்ட காயம் வேறு சுருக்கென வலி கொடுக்க, அதனை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன். அதே நேரம் முகத்தில் காதல் பொங்கி வழியவும் இல்லை. அது இறுக்கமாகவே தான் இருந்தது.

“இப்ப அழுகைய நிறுத்த போறியா இல்லையா?” மேலும் குரலை உயர்த்தி அதட்டியவன், வலுக்கட்டாயமாக அவளின் கையை எடுத்து விட்டு, எழ வைத்து, அவள் கரங்களை அவனின் தோள்களில் மாலையாக்கி, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அவளும் திமிறவில்லை. ஜிஷ்ணுவின் கழுத்தை இறுக்கி பற்றிக் கொண்டவள், அவனது கழுத்தினுள் கண்ணை மறைத்து, கண்ணீரை உகுக்க, அவனோ அவள் தோள் மீது விடாமல் முத்தம் வைத்தபடி இருந்தான்.

அர்ச்சனாவிற்கும் பரத்திற்குமோ ஒரே வியப்பு தான். இத்தனை நாட்களாக சண்டையிட்டது என்ன… இப்போது கட்டி அணைப்பது என்ன? அப்போ, இனிமே வழக்கை எல்லாம் தூக்கி போட்டுட்டு ரெண்டு பேரும் ஒரே லவ்ஸ் தான் என்பது தான் இருவரின் எண்ணமாக இருந்தது.

சில நிமிடங்கள் அவனணைப்பில் அவளது தேம்பல்கள் குறைய, கண்ணீரும் ஒரு முடிவுக்கு வந்தது. அதுவரை அவளை ஆசுவாசப்படுத்தியவன், அவள் சற்று தெளிந்ததும் அவளை விட்டு நகர, அவளும் நகர்ந்து விட்டாள்.

மீண்டும் இருவரின் முகமும் இறுக்கத்தை சுமந்திருந்தது.

கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட வசுந்தரா, “நீ சொல்றதை உண்மைன்னு நான் எப்படி நம்புறது?” என இழந்த நிமிர்வை மீட்டுக்கொணர்ந்து அவனை நேராய் பார்க்க,

அவனோ, “அதான் சொன்னேனே. உன் அப்பன் பொழைச்சு வந்தா அவன்கிட்டயே கேளுன்னு” என்றான் எகத்தாளமாக.

அவள் அழுத்தமாக, “என் அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம் தான் ஒத்துக்குறேன். அஃப்கோர்ஸ். அன்னைக்கு காலைல, என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னேன் தான். அதையும் ஒத்துக்குறேன். ஆனா, உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் அவருகிட்ட சொல்லவே இல்ல. சரி அப்படின்னு அவரே முடிவு எடுத்துருந்தா கூட, பொண்ண கல்யாணம் பண்ண, ஒரு கொலைகாரன்கிட்ட ஏன் அவர் வந்து பேசணும்?” எனக் கேட்டாள் குதர்க்கமாக.

அக்கேள்வியில் ஜிஷ்ணு மௌனமாக, “ஒன்னு அவரோட நண்பனா சுத்துன செங்கமலம் மாமாவை நீ கொன்னதை அவரு மன்னிச்சு இருக்கணும். இல்ல, அந்த கொலைய நீ பண்ணாம இருந்து இருக்கணும்…!” எனக் கூர்மையாக அவனை ஏறிட்டவளை, இதனை எதிர்பார்த்தேன் என்பது போல மெச்சுதலாக பார்த்தான்.

அவளே தொடர்ந்து, “இந்த ரெண்டுமே கண்டிப்பா நடந்து இருக்காது. ஏன்னா, கொலையை மன்னிக்கிற அளவு அவருக்கு பெருந்தன்மை கிடையாது. அதே நேரம், நீ தான் கொலை பண்ணன்னு நல்லாவே தெரியும்.

அதையும் மீறி, உங்கிட்ட வந்து பேசி இருக்காருன்னா… அப்போ நீ தான் எதையோ மறைக்கிற!” என்றாள் கையைக் கட்டிக்கொண்டு.

அர்ச்சனாவோ தலையை சொறிந்து, “பரத் சார்… இப்ப ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்களா? இல்ல இன்னும் பிரேக் அப்ல தான் இருக்காங்களா” என்ற அதி முக்கிய கேள்வியை முன்வைக்க, அவனும் அதே குழப்பத்தில் மிதந்ததில் பேந்த பேந்த விழித்தான்.

வசுந்தரா கேட்ட கேள்வியில் ஜிஷ்ணு தோளைக் குலுக்கி விட்டு நகரப் போக, அவன் முன் சென்று நின்றவள், “எனக்கு உண்மை என்னன்னு தெரியணும் தர்மா. இப்பவே!” என்றவளின் குரல் கட்டளையாக வெளி வர,

ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “இதே கேள்விய அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கேட்டு இருந்தா… மே பி சொல்லிருப்பேன். ஆனா, இப்ப டூ லேட்…” என்று அவள் உயரத்திற்கு குனிந்து நெருப்பைப் பார்வையை பொழிந்திட, அவள் தான் சற்றே திகைத்தாள்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
107
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment