Loading

“கில் மீ” என்று ஜீவா சொன்னதில், அஸ்வின் துப்பாக்கியை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினான்.

அவனை தீப்பார்வை பார்த்துக் கொண்டே, ட்ரிக்கரை அழுத்தப் போனவன் பின், சட்டென்று துப்பாக்கியை எடுத்து, மீண்டும் அந்த சேரில் சென்று அமர்ந்து அவனுக்கு முன் காலை டேபிள் மேல் நீட்டி ஆட்டினான்.

“உன்னை ஷூட் பண்ணனும்னா அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்தப்பவே சுட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருந்துருப்பேன். ஆனா நீ அவ்ளோ ஈஸியா செத்துரக்கூடாது. வாழ்க்கையே வெறுத்து போய் தற்கொலை பண்ணிக்கணும். அப்பவும் உயிர் தொண்டை குழியிலே சிக்கிக்கிட்டு, வாழவும் முடியாம சாகவும் முடியாம ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து வாழனும்” என்று குரல் முழுதும் வெறுப்புடனும் பகையுடனும் கூற, ஜீவா அவனையே ஆழமாய் பார்த்தான்.

“பெஸ்ட் ஆஃப் லக்” என்று கூறி வெளியில் வந்தவன், ‘அப்போ இவன் ஷூட் பண்ணலைன்னா வேற யாரு பண்ணிருப்பா’ என்று தீவிரமாக சிந்தித்தவன், கமிஷனரிடம் பேசி, அவனை கண்டுபிடிக்க கூறினான்.

ஜீவா சென்றதும், யாரோ ஒருவருக்கு போன் செய்த அஸ்வின், “நான் தான் பாத்துக்குறேன்னு சொன்னேன்ல, எதுக்கு அவசரப்பட்டு அவனை ஷூட் பண்ண போனீங்க அப்பா…” என்று கோபமாக கேட்க,

எதிர்முனையில் “அவனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு உன் அம்மா இறந்தது தான் நியாபகம் வருது அஸ்வின்” என்று ஒரு குரல் குமுற,

“எனக்கும் வெறி ஆகுது தான்ப்பா ஆனால் ஆனால் அவனை ஈஸியா சாகடிக்க மாட்டேன். இனிமே நீங்க இங்க வராதீங்க. இன்னும் ஒரு மாசத்துல அவனை நான் ஒண்ணுமே இல்லாம ஆக்கி, உங்க முன்னாடி நிறுத்துறேன் அப்போ அவனை ஆசை தீர சுட்டு தள்ளுங்க” என்று அவரை சமாதானப்படுத்தி போனை வைத்தவன் கண்ணில் வெறியுடன் ஜீவா சென்ற திசையை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்.

அறையே இருட்டாக இருக்க, சுகமாக உறங்கிக் கொண்டிருந்த கயல், லேசாக விழிப்பு தட்ட, கண்ணை கசக்கி பார்க்கையில் தான் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே புரிந்தது.

‘நம்ம எப்படி இங்க வந்தோம். ஜீப்ல வந்துட்டு இருந்தோம்… அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு?’ என்று யோசித்து விட்டு, பின் பூவரசி உடன் வந்தது ஞாபகம் வந்து, “ஐயோ அவளுக்கு வேற இதெல்லாம் புதுசாச்சே” என்று அவசரமாக அவளை பார்க்க போனாள்.

அவளோ அந்த அறையையே சுற்றி முற்றி பார்த்து, பால்கனியில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கயல் அவளை கண்டு, “பூவரசி ஏன் இங்க உக்காந்துருக்க… கொஞ்சம் நேரம் தூங்கலாம்ல” என்று கேட்க,

“இல்லக்கா எனக்கு பகல்ல  தூங்கி பழக்கம் இல்ல…” என்றவளுக்கு அந்த இடமே அவளை எங்கயோ அடைத்து வைத்தது போல் இருந்தது.

கயல் அவளை புரிந்தவாறு, “சரி நீ குளிக்கிறியா” என்று கேட்க, வேகமாக தலையாட்டியவள் “இங்க ஆத்து எங்கக்கா இருக்கு” என்றாள்.

“என்னது ஆறா…?” என்று சிரித்த கயல், “இங்க பாத்ரூம் இருக்கு அங்க போய் குளிச்சுட்டு வா” என்று அவளுக்கு பாத் டப்பில் தண்ணீரை நிறைத்து கொடுத்து, எப்படி உபயோகிப்பது என்று சொல்லி கொடுத்து விட்டு, அவளின் சுடிதாரையும் கொடுக்க,

அவள் “எனக்கு இதெல்லாம் போட்டு பழக்கம் இல்லக்கா நான் என் தாவணியவே கட்டிக்கிறேன்” என்று சொல்ல,

“நீ காலேஜ்லாம் போகணும ல அங்க இந்த ட்ரெஸ்லையா போவ.l. உனக்கு வேணும்னா வேற மாதிரி பாவாடை தாவணி வாங்கிக்கலாம் இப்போ இதை போடு” என்று கையில் கொடுத்து விட்டு, கார்த்தியை பார்க்க வர, அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

பின் மணியை பார்த்தவள், பன்னிரண்டை நெருங்கி இருக்க, மதிய உணவு செய்வதற்காக அடுக்களைக்கு சென்று, அங்கு வேலை பார்த்தவரை நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி விட்டு, அவளே சமைக்கத் தொடங்கினாள். கூடவே ஜீவா எங்க போயிருப்பாரு  என்ற யோசனை வராமல் இல்லை.

பின், பூவரசியும் வந்து விட, அவளும் கயலுடன் பேசிக்கொண்டிருக்கையில் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்க  இருவரும் சென்று பார்த்தனர்.

அங்கு கயலின் பூனை பப்பு கட்டி போட்டிருப்பதை கண்டு, அப்பொழுது தான் அந்த ஜீவனின் நினைவு வந்தது கயலுக்கு.

ஓடிச சென்று “பப்பு.” என்று அதை கட்டி இருந்த செயினை அவிழ்த்து விட்டு, “யாருடா உன்னை கட்டிப்போட்டது” என்று கேட்க, அது ஒரு வாரமாய் கயலை பார்க்காததால் அவளை வந்து முட்டி முட்டி கோபத்தை காட்டியது.

கயல்,” சாரி பப்பு… என் செல்லம்ல” என்று கொஞ்சி விட்டு அருகில் பார்க்க, அதற்கு பால் கொடுக்க கிண்ணம் இருந்தது.

“யாரு இதுக்கு பால்லாம் ஊத்தி குடுத்துருப்பாங்க” என்று யோசித்து விட்டு, வாட்ச்மேனிடம் விசாரிக்க, அவன், “வாசு சாப் தான் பூனையை கட்டிபோட்டு தினமும் சாப்பாடு குடுக்க சொன்னாங்க மேம்…” என்று சொல்ல, அதில் ஜீவா சொன்னாரா என்று வியந்தவள், அந்த பப்புவுக்கு பாலை கொடுத்து, பூவரசிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். 

அவளும் அதனை பப்பு பப்பு என்று கொஞ்சிக் கொண்டிருக்க, கார்த்தி, இவர்களின் சத்தம் கேட்டு, “யாரை இதுங்க கொஞ்சிகிட்டு இருக்குதுங்க” என்று வீல் சேருடன் வெளியில் வந்து பார்க்க, அங்கு இருவரும் ஒரு பூனைக்குட்டியை கொஞ்சுவதை புரியாமல் பார்த்தான்.

கயல் “கார்த்தி, இது பப்பு. என் பெட் கேட்… டெயிலி என்னை பார்க்க வந்துடும்…” என்றவள், அதனை பார்க்க அது ஒருவாரமாக கட்டி போட்டதில் சோகமாக இருந்தது.

“இனிமே உன்னை யாரும் கட்டிப்போட மாட்டாங்க பப்பு… நீ வெளிய போயிட்டு வா” என்றதும்,

கார்த்தி ‘என்ன அதுகூட பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கா? ஐயோ வாசு அண்ணாவுக்கு இதெல்லாம் பிடிக்காதே… கயலை திட்டப்போறாரு’ என்று மனதில் பதறிக்கொண்டு இருக்க, ஜீவா சரியாக அங்கு வந்து இவர்களை பார்க்க, இவனை பார்த்ததும், அந்த பப்பு வெளியில் ஓடியது.

ஜீவா, வாட்ச்மேனை விட்டு அந்த பூனையை பிடிக்க சொல்ல, கயல் அவசரமாக தடுத்து, “வேணாம் அதை எதுக்கு கட்டி போட சொன்னீங்க” என்று கேட்டதில்,

அவன் “நீ ஏன் அதை அவிழ்த்து விட்ட கயல்… அந்த பூனையை உனக்கு பிடிக்கும்ல. அதான் அது உன்னை தேடி வந்துச்சுன்னு வாட்ச்மேன் சொல்லவும் கட்டிப்போட்டு சாப்பாடு குடுக்க சொன்னேன்…” என்று தோளைக் குலுக்கி கொண்டு சொல்ல, அதில் கார்த்தி அவனை ஆ வென்று பார்த்தான்.

ஒரு தடவை அவன் ஒரு நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு வந்ததற்கு அதனை வெளியில் விடுமாறு மிரட்டி, இனிமே எதையும் தூக்கிட்டு வரக்கூடாது என்று கண்டிப்பாக சொன்ன அண்ணாவா இது…? என்று அவனைப் பார்க்க,

கயலோ, “பிடிக்கும்ன்றதுக்காக வாயில்லா ஜீவனை கட்டி போட்டு வதைக்க கூடாது. அதுக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. அதுக்கு எப்போ தோணுதோ அப்போ வந்து இங்க சாப்ட்டுட்டு போகட்டும். அதை கட்டி போட்டு அதோட சுதந்திரத்தை பறிக்க வேணாம்…” என்று அவனைப் பாராமல் கூறி விட்டு உள்ளே சென்றாள்.

ஜீவா தான், “இவளுக்காக பண்ணுனா…  இவள் என்னை ஏதோ அந்த பூனை கட்டி போட்டு கொடுமை படுத்துற வில்லன் மாதிரி பேசிட்டு போறா. இவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரியலையே” என்று  நொந்து விட்டு, கார்த்தியை பார்க்க, அவன் இவனை தான் ஒரு மாதிரியாக பார்த்திருந்தான்.

ஜீவா முகத்தை தீவிரமாக மாதிரி “லன்ச் முடிச்சுட்டு ஹாஸ்பிடல் போகணும்” என்று, அவனை கிளம்ப வைத்து விட்டு, டைனிங் டேபிளுக்கு அழைத்து வர, கயல் சாப்பாடை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

“அப்பறம் சாப்பிட்டுகுறேன்” என்று சொன்ன பூவரசியை கட்டாயப்படுத்தி அமர வைத்து, அவள் காட்டில் சாப்பிடும் களி, காய்கறிகளையே அவளுக்கு தெரிந்த அளவு செய்து வைக்க, கார்த்திக்கு இலகுவாக சாப்பிடுமாறு உரைப்பில்லாமல் சைவ உணவுகளை வைத்திருந்தாள்.

அதனை பார்த்த கார்த்தி, அங்கிருந்த வேலையாளை முறைத்து “ஹே நான் என்ன பண்ண சொன்னேன் நீ என்ன பண்ணிருக்க” என்று கடுப்படிக்க, ஜீவா என்னவென்று பார்த்தான்.

கயலோ “சார் நீங்க போட்ட லிஸ்ட்லாம் இப்போதைக்கு உங்களுக்கு தர முடியாது. ஒழுங்கா இதை சாப்பிடு. நான் தான் நீ சொன்னதை செய்ய வேணாம்னு சொன்னேன்…”என்று தட்டில் சாப்பாடை வைக்க, கார்த்தி அவளை முறைத்து,

“உனக்கே இது நியாயமா இருக்கா , இவ்ளோ நாள் இலை தழை எல்லாம் சாப்டுட்டு இன்னைக்கு தான் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நினைச்சேன்…”என்றவன் தூங்கும் முன்பு, இன்னைக்கு சிக்கன் மட்டன் மீன் என அனைத்தும் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு தான் உறங்கினான்.

“டேய் ஏற்கனவே உனக்கு தொண்டை வலி. இதுல அவ்ளோ காரமான டிஷ்லாம் சாப்பிட கூடாது. உடம்பு சரி ஆனதும் நானே உனக்கு நீ கேட்டதெல்லாம் செஞ்சு தரேன். இப்போ இதை சாப்பிடு…” என்று கறாராக சொல்ல, அவனோ பாவமாக கயலை பார்த்தான்.

பூவரசி அவனின் முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கி, “யோவ் உனக்கு நாங்க இலை தழை எல்லாமா கொடுத்தோம்…” என்று விட்டு,

கயலிடம் “அக்கா, இந்த ஆளுக்கு அடுத்து ஆறு மாசத்துக்கு உப்பு சப்பில்லாத சாப்படையே குடுங்க அப்போ தான் புத்தி வரும்…” என்று நக்கலடிக்க,

கார்த்தி, “ஆமா எனக்கு புத்தி வந்து நான் புத்தர் ஆக போறேனா… காட்டுவாசி” என்று முணுமுணுக்க,

அவள் கோபமாக “இந்தாய்யா
காட்டுவாசின்னு சொன்ன எனக்கு கெட்ட கோபம் வரும்” என்று முறைத்தாள்.

“நான் அப்படிதான் சொல்லுவேன் காட்டுவாசி…” என்று மேலும் கார்த்தி நக்கலடித்ததில், அவளும் ஏதோ திட்ட வர, ஜீவா “கார்த்தி பேசாம சாப்பிடு” என்று ஒரு அதட்டலை போட்டதும் தான் இருவரும் அமைதி ஆகினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, ஜீவா “கார்த்தி, உண்மையிலேயே நீ மலைல இருந்து தவறி தான் விழுந்தியா” என்று கேட்க,

அவன் சற்று முழித்து விட்டு, “ம்ம் ஆமா அண்ணா நான் தெரியாம தான் விழுந்துட்டேன்” என்று மெல்லிய குரலில் சொல்ல, ஜீவா அவனை அழுத்தமாக பார்த்தான்.

ஏனோ அவனுக்கு இதனை நம்ப முடியவில்லை.

கயல் தான், “கண்ணை எங்க வச்சுட்டுடா நடக்கிற… இப்படியா கேர்லெஸ் – ஆ இருப்ப” என்று முறைக்க, அவன் பதில் சொல்லாமல் சாப்பிடவும் ஜீவா ஏதோ யோசனையிலேயே இருந்தான்.

அடுத்த நாளில் இருந்து, பூவரசி கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள். அவளுக்கு சுடிதார் போட என்னவோ போல் இருப்பதை உணர்ந்து, கயல் அவளுக்கு கல்லூரிக்கு அணிந்து செல்வது போல் பாவாடை தாவணி வாங்கி தர சொல்லி இருந்தாள் ஜீவாவிடம். கயல் சொன்னதும் தான் தாமதம், ஒரு கடையவே வீட்டில் பரப்பி இருந்தான் ஜீவா.

இரு பெண்களும் திருதிருவென முழிக்க, ஜீவா “எது வேணுமோ எடுத்துக்கோங்க இல்ல எல்லாமே வேணும்னாலும் எடுத்துக்கோங்க” என்று சொல்ல, கார்த்தியோ, கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பூவரசி “எதுக்கு இம்புட்டு” என்று தயங்கிட, இரு ஆண்களுமே காதில் வாங்கவே இல்லை.

இதில் கயலுக்கும் சேர்த்து ஜீவா உடை தேர்வு செய்ததில், புடவையை அவள் மேல் போட்டு பார்த்து தேர்வு செய்ய, கயல் ‘ஐயோ கார்த்தியும் பூவரசியும் இருக்கும்போது இவரு ஏன் இப்படி பண்றாரு’ என்று சங்கடமாக நெளிய, அவனோ இதனை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

கார்த்தி தான் ‘நம்ம உண்மையிலே நம்ம வீட்டுல தான் இருக்கோமா இல்லை… அண்ணா உடம்புக்குள்ள ஆவி எதாவது புகுந்துருச்சா’ என்று புலம்பியவனுக்கு இருவரையும் பார்த்து சொல்ல முடியாத சந்தோசமாக இருந்தது. இதனை கொண்டாடவாவது தனக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

இப்படியாக பூவரசி, கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருக்க, முதலில் அங்கு அனைவரும் கிண்டல் செய்ததில் முகம் சுருங்கியவள், கார்த்தியிடம், “நான் காலேசுக்கு போகலை நான் என் வீட்டுக்கே போறேன்” என்றாள்.

அவள் முகத்தை கண்டவன் மிருதுவாக, “என்ன ஆச்சு பூவரசி? யாரும் உன்னை எதாவது சொன்னாங்களா?” என்று கேட்க,

“காலேசுல என்னை ரொம்ப கிண்டல்  பண்றாக… எல்லாமே இங்கிலீசுல வேற இருக்கு எனக்கு புரியவே இல்லை…

எனக்கு இதெல்லாம் வராது. நான் என் அம்மைக்கிட்ட போகணும்…” என்றாள் அழுகுரலில்.

  ‘அவளுக்கு ஹோம் சிக் போல அதான் இப்படி பேசுறாள்’ என்று கணித்த கார்த்தி, “சரி போ… அங்கேயே போய் உன் மாமனை கட்டிக்கிட்டு குழந்தை குட்டியை பெத்துக்க,  நீ அதுக்கு தான் லாயக்கு. உன் பசங்களும் இப்படி, காட்டுமிராண்டி தனமா, காட்டுக்குள்ள வர்றவங்களை அடிச்சுகிட்டு, படிப்பறிவு இல்லாமல், உன் கிராமமே முன்னேறாம எல்லாருக்கும் அடிமையாவே இருக்கட்டும். அதான உனக்கு வேணும்.

நான் கூட ஏதோ இந்த பொண்ணு லட்சியத்தோட இருக்கா. அவள் படிச்சு டீச்சர் ஆகி, அவள் கிராமத்தை அவளே உயர்த்துவாள்ன்னு நினைச்சு, உனக்காக அண்ணாகிட்ட எல்லாம் பண்ண சொன்னேன்ல… என்னை சொல்லணும்” என்று சலிப்பாக கூற, அவளுக்கு கண்ணே கலங்கி விட்டது.

அதில் அவன் மென்மையாக “இங்க பாரு அரசி… நாங்கல்லாம் படிச்சா எங்க பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி அவ்வளவு தான். ஆனால் நீ படிச்சா அது உன் கிராமத்தையும், அந்த மலை வாழ்மக்களையும் எல்லாரு முன்னாடியும் உயர்த்துற ஒரு சாவி.

நீ படிச்சா உன் பாதைல உன் கிராமத்துல இருந்து மட்டும் இல்ல, நிறைய மலை வாழ் கிராமத்துல இருக்குற மக்களும் உன் வழில நடந்து, உன்னை இன்ஸ்பிரேஷனா நினைச்சு  முன்னேறுவாங்க. இந்த சமூகத்துல அவங்களுக்குன்னு ஒரு மரியாதை கிடைக்கும். படிப்பு கிடைக்கும். உரிமை கிடைக்கும். இதெல்லாம் தான நீ ஆசைப்பட்ட. இப்போ உப்பு  பெறாத விஷயத்துக்காக இப்படி இலட்சியத்தை விடுறேன்னு சொல்ற…” என்றதும்,

பூவரசி அப்பொழுது தான் தன் முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்டாள்.

“ஆமாய்யா எனக்கு டீச்சர் ஆகி என் கிராமத்துலயே பள்ளிக்கூடம் கட்டணும்னு தான் ஆச. நான் நல்லா படிச்சா தான அது முடியும்.” என்றவள்,

சட்டென வாடி, “ஆனால் எனக்கு இங்கிலீசு தான் வரவே மாட்டேங்குது” என்று சொல்ல, அவள் உடனே புரிந்து கொண்டதே பெரிய விஷயம் என்று நினைத்தவன்,

“உனக்கு இங்கிலிஷ் தான பிரச்சனை. நான் வெட்டியா தான இருக்கேன் நான் சொல்லித்தரேன். காலேஜ் முடிச்சு ரெண்டு மணி நேரம் இங்கிலிஷ் கிளாஸ் உனக்கு. ஓகே வா.?” என்றான்.

அவள் “நிசமா எனக்கு சொல்லித்தருவியா?” என்று கேட்க,

மெல்ல புன்னகைத்தவன், “நிஜ்ஜம்மா சொல்லித்தரேன்… பட் நீ குருதட்சணையா எனக்கு என்ன தருவ?” என்று கேட்க,

அவள் யோசித்து விட்டு, “நான் என்ன உனக்கு குடுக்க முடியும் என்கிட்ட பணம்லாம் இல்லையே…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

“எனக்கு குருதட்சணையா உன் டிகிரி தான் வேணும். ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் வந்த மாதிரி காலேஜ்லையும் நீதான் டாப்பாரா இருக்கனும். அதான் எனக்கு நீ தர்ற குருதட்சணை.” என்று சொல்ல, அவள் மெலிதாக சிரித்து விட்டு, ம்ம் என்று தலையாட்டினாள்.

இவர்களின் நாட்கள் இப்படி செல்ல, ஜீவாவோ வீடே தங்கவில்லை. அவனுக்கு எஸ்டேட்டிலும் கோயம்பத்தூர் அலுவலகத்திலும் ஏகப்பட்ட பிரச்னையை உருவாக்கி இருந்தான்  அஸ்வின்.

ஒரு வாரமாக கோயம்பத்தூர்க்கும் ஊட்டிக்கும் அலைந்து கொண்டிருந்தவனுக்கு பெரும் குழப்பமே, அஸ்வின் அல்லாது குடைச்சல் கொடுக்கும் அந்த மூன்றாவது நபர் யார் என்று தான்.

கார்த்தி ஏன் அவனா விழுந்துட்டதா சொல்றான்… ஆனால் என்னால நம்பவே முடியல… அன்னைக்கு போலீஸ் பிடிச்ச அந்த பையன், யாரோ தொப்பி போட்ட ஒருத்தன் தான் கார்த்தியை தள்ளி விட்டதா சொன்னான். அது யாரு. ஏன் கார்த்தி என்கிட்ட மறைக்கிறான். என்று குழம்பிப் போனான்.

கயலுக்கோ ஜீவாவைக் கண்ணில் பார்ப்பதே அரிதாகி விட, அந்த காட்டுக்குள்ளேயே இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

மேலும், கார்த்தி கிடைத்ததும்  இங்கு இருந்து செல்லலாம் என்று நினைத்திருந்தவளுக்கோ, ஜீவாவின் கோப முகம் கண் முன் தோன்றி, அதனை செய்யவிடாமல் தடுத்தது. அடுத்து என்ன செய்வது என்றும் அவளுக்கு புரியவில்லை.

அன்று ஞாயிற்றுக் கிழமையாய் இருக்க, ஜீவா அன்று தான் வீட்டில் இருந்தான். அவனும் ஒரு வாரமாக கயலிடம் சரியாக பேச முடியாமல் தவித்து தான் போயிருந்தான்.

ஆனாலும் மனதினுள் ‘ஆமா இல்லைன்னாலும் அப்படியே என்கிட்ட சிரிச்சு பேசிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா’ என்று யோசிக்கவும் தவறவில்லை..

கயலோ அன்று அவன் வீட்டில் இருப்பதில் சந்தோஷமாகி அவனுக்கு பிடித்த சாப்பாட்டை செய்து கொண்டிருக்க,

ஜீவா, ‘இன்னைக்கு தான் நம்ம வீட்டுல இருக்கோம். இன்னைக்காவது என்னை கண்டுக்கிறாளா… என் முன்னாடி கூட வரமாட்டேங்குறாள்’ என்று அடுக்களைக்கு சென்று பார்க்க, அங்கு பூவரசியுடன் ஏதோ பேசிக்கொண்டே அவள் வேலை பார்ப்பதைக் கண்டவன், கயலையே பார்வையால் விழுங்கி கொண்டிருந்தான்.

ஜீவாவை பார்த்துவிட்ட பூவரசி, “அக்கா நான் வந்துடறேன்” என்று சொல்லி விட்டு, வெளியில் ஓடி விட, ஜீவா பூனை நடை நடந்து உள்ளே வந்தான்.

அவள் அடுப்பில் எதையோ வதக்கிக் கொண்டிருக்க, அவன் மெதுவாக “கயல்” என அழைத்ததில், திடீரென அருகில் ஜீவாவின் குரல் கேட்டதும் பதறி அடித்து திரும்பினாள்.

” எ என் என்ன வேணும்…”

“உன்னை இந்த வேலை எல்லாம் பார்க்காதன்னு சொன்னா கேட்கவே மாட்டியா. இங்க தான் வேலை பார்க்க இத்தனை பேர் இருக்காங்கல்ல” என்று சற்று கோபமாக அதட்டியவனுக்கு அவள் கையால் செய்து பரிமாறிய உணவை சாப்பிடுவது தேவாமிர்தமாய் இருக்கும்.

ஆனால் அவள் வேலை பார்ப்பது தான் பிடிக்கவில்லை. ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாள் என்று இருந்தது அவனுக்கு.

கயல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், ஜீவா, “கயல் நீ என்னை மன்னிக்கவே மாட்டியா?” என்று உடைந்த குரலில் கேட்க, அதில் திகைத்தவள் அவனையே பார்க்க, அவள் விழியில் விழுந்து எழுந்தவன் குறும்பாக,

“நான் செஞ்சதுலாம் தப்புன்னு மன்னிப்பு கேட்டுட்டேன். அப்பவும் இப்படி நீ என்கிட்ட கோபமா நடந்துகிட்டா அப்பறம் கார்த்திக்கிட்ட அவன் சொன்ன பொண்ணு யாருனு கேட்டு அவளையே கூட்டிட்டு வந்து வச்சுக்குவேன் பார்த்துக்கோ” என்று சொல்ல கயலுக்கு கோபமாக வந்தது

“அதான் நீங்க எனக்கு டி… டி… டிவோர்ஸ் தரமாட்டேன்னு சொன்னீங்களே. அப்பறம் எப்படி அவளை கல்யாணம் பண்ணிப்பீங்க” என்று கடுப்பாக கேட்க,

அவன் “கல்யாணம் பண்ண தான் டிவோர்ஸ் வேணும். நான் வச்சுக்குவேன்னு தான சொன்னேன்” என்று சொல்ல அதில் அதிர்ந்தவள், உதட்டைக் கடித்து கண்ணீரை கட்டுப்படுத்திகொண்டு அவனை தாண்டி செல்ல போக, ஜீவா அவள் கையைப் பிடித்து, தன் கை வளைவுக்கு கொண்டு வந்தான்.

“கயல் என்னை பாரு…” என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவன் கண்ணை பார்க்க வைக்க,

அவள் கலங்கிய கண்ணுடன் அவனை பார்த்ததும், “சாரி கயல்… ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஃபார் வாட் ஐ ஹேவ் டன்…” என்று கூற, அவனின் வதங்கிய குரல் அவளை என்னவோ செய்தது.

இருந்தும், அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை. ஏதோ ஒன்று அவனிடம் ஒன்ற தடுத்தது.

மன்னிப்பும் கேட்டு விட்டான் தான், தனக்கு அனைத்தும் பார்த்து பார்த்து செய்கிறான் தான். ஆனால் இதை எதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் இருந்து மறையாமல் அடம்பிடித்தது.

அதை எப்படி மறப்பது என்றும் அவளுக்கு புரியவில்லை. அவள் அழுத்தமாக அமைதியாக நிற்க, அவனுக்கு தான் அவள் காதல் தனக்கு கிடைக்கவே கிடைக்காதோ என்று பாரமாக இருந்தது.

கயலை பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி, எஸ்டேட்டிற்கு சென்றவனோ, அங்கு அனைவரும் பதட்டமாக இருப்பதைக் கண்டு புரியாமல் பார்க்க,

சூப்பர்வைசர் “சார் நம்ம இடத்துல ஒரு டெட் பாடியை புதைச்சு வச்சுருக்காங்க சார். ஏதோ பேட் ஸ்மெல் வருதுன்னு நாங்க தோண்டி பார்த்தோம். அப்போ தான் தெரிஞ்சுது” என்று சொல்ல,

ஜீவா திகைத்து “வாட் நான்சென்ஸ்… யாரு இதை பண்ணுனது” என்று கேட்க,

பின்னால் இருந்து “உங்க எஸ்டேட்ல உங்க பெர்மிஷன் இல்லாமல் யார் மிஸ்டர் வாசுதேவன் டெட் பாடியை புதைக்க முடியும்.” என்ற அஸ்வினின் குரல் கேட்டது.

ஜீவா அவனை கூர்மையாகப் பார்த்து விட்டு, “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அஸ்வின்… எல்லா நேரமும் நான் பொறுமையா இருக்க மாட்டேன்.” என்று பல்லைக்கடித்தான்.

அஸ்வினோ, “என்ன பண்ணுவ… என் அம்மாவை கொன்ன மாதிரி என்னையும் கொல்லுவியா? ஆனா அதுவரை நான் உன்னை உயிரோட விட்டு வைக்க மாட்டேன்.” என்று அவன் சட்டையைப் பிடித்தான்.

நேசம் தொடரும்
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
75
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்