1,223 views

(நான் இருக்க இடத்துல நெட்வொர்க் இல்லைங்க. அதனால பிழை திருத்தம் செய்ய முடியல. டென்ஷன்ல கண்ணும் வேலை செய்ய மாட்டுது. நாளைக்கு திருத்தம் செஞ்சிடுறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம படிச்சிடுங்க. அதிக பிழை இருக்காது, இருந்தா மன்னிச்சிடுங்க. )

விடிக்காலை எழுந்து விட்ட திவ்யா வழக்கம் போல் தான் வைத்திருக்கும் இரு ரோஜா தொட்டிகளுக்கு நீர் ஊற்ற வெளியே வந்தாள். ஒரு செடியில் மொட்டு விட்டிருக்க, குழந்தை போல் துள்ளி குதித்தாள்.

புகைப்படம் எடுத்துக் கொள்ள நினைத்தவள் வேகமாக அங்கிருந்து ஓட… பால்கனியில் படுத்திருக்கும் அன்பினி தெரிந்தாள்.  அக்னி அறையின் பால்கனி நேராக வாசல் பார்த்தது போல் இருப்பதால் கேட்டின் முன்பு நின்றாலே நன்றாக தெரியும். வேகமாக அறைக்கு ஓடியவள் அன்னையை அழைத்து வந்து காண்பித்தாள்.

மகன் மீது பொல்லாத கோபம் கொண்டார். இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணியவர் திவ்யாவை கல்லூரிக்கு கிளம்ப தயார்படுத்தினார். தூக்கத்தில் இருந்த அன்பினி  வீட்டின் நினைப்பில் கை கால்களை வீசி படுக்க, பால்கனி கம்பி முட்டி சேதாரம் ஆக்கியது அவளை. எரிச்சலோடு எழுந்தவள் அந்த கம்பியை ஒரு அடி அடித்து,

“உனக்கென்ன அன்பினிய அடிக்கிற அளவுக்கு தைரியம். இந்த ரைட்ஸ் ஒன்லி என் புருஷனுக்கு மட்டும் தான். ப்பே!” என்று நிமிர்ந்து பார்க்க, நின்றிருந்தான் அக்னி.

எதுவும் பேசாமல் குளித்து முடித்தவள் அத்தையிடம் சென்றாள். அவரோ அமைதியாக சமைத்துக் கொண்டிருக்க, “குட் மார்னிங் அத்தை!.” என்றவள் அவருக்கு உதவியாக வேலை பார்த்தாள்.

பரமேஸ்வரி எதுவும் சொல்லாமல் அமைதியாக தன் வேலையை கவனிக்க, “அத்தை பாட்டிய வர சொல்லவா” என்றாள் அவர் முகத்தை ஆராய்ந்த படி.

அன்னையும் அண்ணியும் ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த திவ்யா, “அடடா! என்ன ஒரு அற்புதமான காட்சி.” என்றபடி உள்ளே நுழைந்தாள்.

“என்னத்த அற்புதம் நானும் வந்ததுல இருந்து பேசிட்டு இருக்கேன். என் மாமியார் ஒரு வார்த்தை கூட பேச மாட்றாங்க.” என்று புகார் வாசித்தாள் நாத்தனாரிடம்.

“ஏன்மா நீங்களும் உங்க பையன் மாதிரி வீட்டுக்கு வாழ வந்த பொண்ண கொடுமை பண்றீங்க.” என்றதும் மகளை முறைத்த பரமேஸ்வரி,

“யாரு யாரடி கொடுமை பண்றா. அரை மணி நேரத்துல முடிக்க வேண்டிய வேலைய உதவி பண்றேன்னு இன்ன வரைக்கும் முடிக்க விடாம பண்ணிட்டா.” என்றவர் ரகசியமாக மருமகளை முறைத்தார்.

பெருமை தாங்கவில்லை அன்பினிக்கு தன்னைப் பற்றிய முதல் கருத்தை கேட்டு. “ஐயய்யோ! என் அத்தை என்னை ரசிச்சுட்டாங்க.” என்று கண்ணை மூடிக்கொண்டு வெட்கப்பட,

“சகிக்கல அண்ணி ப்ளீஸ்.” என்று  மூடி இருக்கும் கைகளை எடுத்து விட்டாள்.

“இப்படி ஒரு மாமியார் மருமகளை பார்த்து பொறாமை உனக்கு.” என்று பரமேஸ்வரியின் தோள் மீது கை வைக்க, உடனே அக்னியை போல் முறைக்க ஆரம்பித்தார்.

அமைதியாக கைகளை எடுத்துக் கொண்டவள் தலையை குனிந்து கொண்டாள். திவ்யா தான் அண்ணியை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள். உடனுக்குடன் பதில் கொடுத்தவள், “அத்தை பாட்டிய வர சொல்லட்டுமா.” என்று மீண்டும் கேள்வி கேட்டாள்.

பத்து நிமிடங்கள் கடந்தும் பதில் வரவில்லை. பெருமூச்சு விட்டவள், “உங்க மகன் என்னை காதலிச்ச உண்மைய மறைச்சதால நீங்க எவ்ளோ கோபப்பட்டிங்களோ அதே கோபம் தான் அன்னைக்கு அவங்க கிட்ட சொல்லாம மாமாவை கல்யாணம் பண்ணும் போது பாட்டிக்கு இருந்திருக்கும். மகளா யோசிக்க மறந்த நீங்க ஒரு அம்மாவா யோசிங்க.”
இதற்கு மேலும் பேசுவது வீண் என்பது போல் அன்பினி அமைதியாக அங்கிருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

“என் அம்மாவ வர சொல்லு.” என்ற பரமேஸ்வரி அமைதியாக சென்றுவிட, ஆச்சரிய முக பாவத்துடன்  செல்பவரை பார்த்தாள். 

“வாழ்த்துக்கள் அண்ணி! நம்ம கட்சி தலைவர் உங்க பேச்சை கேட்க ஆரம்பிச்சுட்டாரு.”என்று கட்டிக்கொள்ள கைகளில் சோப்பு நுரை இருப்பதால் முகத்தை மட்டும் அவள் முகத்தோடு வைத்து தன் மகிழ்வை பரிமாறினாள்.

பேச்சுக்களுக்கு நடுவில், “சாரி அண்ணி.”  என்றிட, நாத்தனாரின் வார்த்தையில் குழம்பியவள் எதற்கென்று விசாரித்தாள்.

“நேத்து அண்ணா உங்களை சாப்பிட வேணாம்னு சொன்னதுக்கும், பால்கனில படுக்க வச்சதுக்கும்.” என்று விளக்கம் கொடுத்தாள்.

உடனே பதில் தராத அன்பினி அமைதியாக பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்க, “என்ன அண்ணி எதுவுமே பேச மாட்றீங்க.” தயக்கத்தோடு கேட்டாள் திவ்யா.

“உங்க வீட்டிலயே நீ மட்டும் தான் கொஞ்சம் அறிவோட இருக்கன்னு நினைச்சேன். ஆனா நீ தான் இருக்கிறதுலயே  அடி முட்டாள்.” என்று சிரிக்கத் துவங்கி விட்டாள்.

முகத்தை சுருக்கி கொண்டவள் முறைக்க, “ஸ்ஸ்! கிட்ட வா.” என்றாள் அன்பினி.
முறைத்தாலும்  அண்ணி அழைத்ததால் உடனே நெருங்கி சென்றாள்.

“நீ நினைக்கிற மாதிரி எந்த சீனும் அன்பினி கிட்ட செல்லாது. நேத்து நீ ஃபோன் பேச போன கேப்ல நாலு சப்பாத்திய கிட்சன்ல வச்சு சாப்டுட்டேன். அதான் உங்க அண்ணன் சொல்லும் போது பேசாம போயிட்டேன்.” என்றாள் கமுக்கமாக.

“அடிப்பாவி அண்ணி!”என்று நெஞ்சில் கை வைத்தாள் திவ்யா.

“மரியாதை! மரியாதை!!” என்று நாத்தனாரின் வார்த்தையை திருத்த, “ம்க்கும்!” என்று சிலிப்பினாள் திவ்யா.

“அது சரி அந்த பால்கனி மேட்டர்.” அண்ணியின் சாதுர்யத்தை அறிந்து அறிவாளியாக திவ்யா கேட்க,

“முந்தா நேத்து நைட்டு உங்க எல்லாரையும் எழுப்பி நிக்க வச்ச கோவத்துல கை கால கட்டி போட்டுட்டான் உங்க அண்ணன். தூங்கவே முடியல உடம்பெல்லாம் ஒரே வலி. இன்னைக்கும் அந்த மாதிரி எதுவும் நடக்க கூடாதுன்னு பவ்யமா போய் படுத்துட்டேன்.” என்று தன் சாதுரியங்களை பெருமையாக சொன்னாள் அன்பினி.

“ஆத்தாடி ஆத்தா…! எங்க அண்ணனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி வரும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல.” என்று கொக்கலித்து சிரித்தவள் அப்படியே அமைதியாகி விட்டாள் அக்னி அங்கு நிற்பதைக் கண்டு.

அதை அறியாத அன்பினி “ஆனா இன்னைக்கு நைட் அப்படி இல்ல. உங்க அண்ணனுக்கு சிவராத்திரி தான்.”என்று இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அண்ணியின் கைகளை மெதுவாக சுரண்டி விட்டாள் திவ்யா.

என்னவென்று விசாரிக்க திரும்பியவள் அக்னியை பார்த்துவிட்டு, “இதன் நான் கனவுல கூட நினைக்கல.”என்று வாய்க்குள்ளே பேசினாள். அண்ணியின் பேச்சை கேட்ட திவ்யா அண்ணனை மறந்து மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

உஷ்ண மூச்சுக்கள் அண்ணியிடமிருந்து வெளிப்படுவதை அறிந்தவள் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விட, “இதோ நானும் வந்துட்டேன் திவ்யா.” என்றபடி நாத்தனாரின் பின்னால் ஓட ஆரம்பித்தவளின் முடியை பிடித்து இழுத்த அக்னி,

“உன்ன போய் பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும்.” என்று கையில் சிக்கிய முடியை அழுத்தி பிடித்தான்.

விடும்படி அன்பினி கெஞ்சி கொண்டிருக்க, “இன்னைக்கு யாருக்கு சிவராத்திரின்னு பார்த்திடலாம்.” என்றான்.

அக்னி விடாமல் பிடித்துக் கொண்டு நிற்க, தப்பிக்க நினைத்தவள் கிச்சு கிச்சு மூட்டினாள். இடுப்பை வளைத்தவன் முடியை விட, “நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சிவராத்திரி கொண்டாடலாம் மாமா‌” என்றவள் அத்தோடு நிறுத்தாமல் அவன் அசந்த நேரம் பார்த்து உதட்டை கன்னத்தில் உரசி எடுத்தாள்.

உடனே திரும்பி தன் வீட்டு ஆட்கள் யாராவது பார்க்கிறார்களா என்று ஆராய்ந்தவன், “உன்ன” என்று அடிக்கத் துரத்த, கைக்கு சிக்காமல் சென்று விட்டாள்.

 

பின்னால் துரத்திக் கொண்டு வருபவனை மடக்க எண்ணியவள் அறை கதவின் பின் நின்றுக் கொண்டாள். துரத்தி வந்தவன்  அவளைத் தேட, கட்டி அணைத்து இருப்பை தெரிவித்தாள்.

“ப்ச்!” என்றவன் தள்ளி விட்டு விலகி நிற்க, ஒட்டி நின்றாள் உரசிக் கொண்டு. “வேற வேலையே இல்ல டி உனக்கு நகரு.” என்று அலுத்தவன் குளிக்க சென்றான்.

“புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரியா பேசுற. உன்ன நம்பி பாட்டி கிட்ட சீக்கிரமா கொள்ளுப் பேரன காட்டுறேன்னு நம்பிக்கை கொடுத்துட்டு வந்தேன்.” என்று வேண்டுமென்றே கத்தினாள்.

கதவைத் திறந்தவன் மக்கில் இருந்த தண்ணீரை அவள் மேல் ஊற்றி, “பொழப்ப பாரு டி விளங்காதவ மகளே.” என்றவன் கதவை சாற்றிக் கொண்டான்.

அதில் ஓங்கி உதைத்தவள், “வெளிய வா இருக்கு உனக்கு.” என்றாள்.

அக்னி வெளியில் வருவதற்குள் தன் பாட்டிக்கு அழைத்தவள் வீட்டிற்கு வரும்படி உற்சாகமாக கூறினாள். முதியவர் மகிழ்விற்கு எல்லை இல்லாமல் போனது. நந்தினியை அழைக்க வெளியில் வர, அவர் அங்கு இல்லை. மருமகளுக்கு பதில் பேரன் அங்கிருக்க, மருமகளைப் பற்றி விசாரித்தார்.

“ஏன் பாட்டி? அம்மா மார்க்கெட் வரைக்கும் போயிருக்காங்க.” என்றவனுக்கு,

” என் மகள் என்னை வரச் சொல்லி இருக்கா. உடனே என்னை அங்க கூட்டிட்டு போறியாப்பா.” என்றவர் சிரமப்பட்டு படி இறங்கினார்.

அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தவன், “இப்பதான் பாட்டி உங்க முகத்துல சிரிப்ப பார்க்கிறேன்.” என்று தானும் சிரித்தவன் அழைத்துச் சென்றான் அக்னியின் வீட்டிற்கு.

வரும் வழி எல்லாம் பரமேஸ்வரி புராணம் தான் விக்ரம் காதில் ஒலித்தது. திருமணத்திற்கு முன் வரை தன் மகள் செய்த அனைத்து சேட்டைகளையும் பட்டியலிட்டார்.

“கல்யாணத்துக்கு அப்புறம் அத்தைய  பார்க்க ஒரு தடவை கூடவா முயற்சி பண்ணல பாட்டி.”

“என்ன இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம அவளா ஒரு வாழ்க்கையை தேடிக்கிட்டு கோபம். அது எவ்ளோ பெரிய தப்புன்னு அன்பினி சொல்லித்தான் தெரியும்.” என்றவரை புரியாமல் பார்த்தான் விக்ரம். அவனின் முக அசைவை வைத்து புரிந்து கொண்டவர் விவரிக்க தொடங்கினார்  அவள் செய்ததை.

***

அன்பினி பாட்டியின் வருகையை பரமேஸ்வரிக்கு தெரிவித்து விட, அவரோ எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வாசலையே பார்த்திருந்தார். மனைவியின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த மணிவண்ணன்,

“எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற பரமு அவங்க உன் அம்மா தான. கோபமே இருந்தாலும் அதை உரிமையா காட்டிடு. இன்னையோட ரெண்டு பேருக்குள்ள இருந்த எல்லா மனஸ்தாபங்களும் முடிஞ்சிடும்.” என்றார்‌.

“ஆமா ம்மா நேத்தே பாட்டி ரொம்ப ஃபீல் பண்ணிட்டாங்க. இன்னைக்கும் அப்படி ஆக்கிடாதீங்க.” புதிய உறவான பாட்டிக்கு ஆதரவாக பேசினாள் திவ்யா.

“நீ என்னம்மா இவ்ளோ நேரம் வீட்டுல இருக்க, காலேஜ் போகலையா?.”  மணிவண்ணன்.

“போகணும் ப்பா பர்மிஷன் கேட்டு இருக்கேன் பாட்டி வராங்கன்னு.” திவ்யா.

மூவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரம், “அம்மாடி” அழுகை கலந்த குரலில் அழைத்தார் அன்னபூரணி.

எத்தனை வயதானாலும் தாய்க்கு என்றும் பிள்ளை தானே. அன்னையைப் பார்த்ததும் அழத் தொடங்கி விட்டார் பரமேஸ்வரி.‌ மகளின் அழுகையை சகித்துக் கொள்ள முடியாதவர் பிரிந்த ஏக்கத்தை தீர்த்துக் கொண்டார் கட்டி அணைத்து. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் மன்னிப்பு கேட்டு ஆறுதல் தேடிக் கொண்டிருக்க, மணிவண்ணன் ஒதுங்கி நின்றார். இருவரும் பேசிக் கொள்வதை பார்த்த அன்பினி இப்போது அக்னி வந்தால் சூழ்நிலை நன்றாக இருக்காது என்பதற்காக அவனை வரவிடாமல் செய்ய அறைக்கு ஓடிவிட்டாள்.

அழுது முடித்து ஓய்ந்தவர்கள் சகஜமாக பேச ஆரம்பிக்க, “அம்மாடி நான் கிளம்புறேன்” என்றார் அன்னபூரணி.

“என்ன பாட்டி இப்ப தான வந்தீங்க அதுக்குள்ள கிளம்புறீங்க.” திவ்யா.

“எனக்கும் ஆசை தான் ஆனா விக்ரம் வெளிய நின்னுட்டு இருக்கான் எவ்ளோ நேரம் வயசு புள்ள வெளிய நிற்கிறது பாவம்ல.” என்றதும்,

“ஏன்மா உள்ள வர சொல்றது தான.”  கேட்டார் பரமேஸ்வரி.

“கூப்பிட்டேன்   வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஏற்கனவே ரெண்டு பேரன்களுக்கும் ஆகாதுன்னு அன்பினி சொல்லி இருக்கா. எதுக்கு வம்புன்னு நானும் விட்டுட்டேன்.” என விளக்கம் கொடுத்தார்.

“நீங்க இருங்க அத்தை நான் கூட்டிட்டு வரேன்” என்று மணிவண்ணன் கிளம்ப,

“நீங்க உக்காருங்கப்பா நான் கூட்டிட்டு வரேன்” என திவ்யா வெளியில் சென்றாள்.

அத்தை குடும்பத்தை ஏற்றுக் கொண்டவன் தங்கை கணவனையும் ஏற்றுக் கொண்டான். ஆனால் தன் அலுவலகத்தில் வேலை பார்த்த அக்னியின் மீதி இருந்த கோபம் மட்டும் இன்னும் குறையவில்லை.  விசித்திரமான கலவையாக காரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் விக்ரம்.

திவ்யாவிற்கு அவனின் முதுகு தரிசனம் தான் கிடைத்தது. அன்று மண்டபத்தில் இருவரும் சாதாரணமாக பார்த்துக் கொண்டார்களே தவிர முகம்  அந்த அளவிற்கு பதியாமல் போனது.

அவன் பின் நின்றவள், “மாமா” என்று அழைத்தாள்.

தனக்கு பின்னால் ஓசை வருவதை உணர்ந்த விக்ரம் திரும்ப, திவ்யாவை பார்த்து முழித்தான். “உள்ள வாங்க மாமா.” என்று சாதாரணமாக அவள் அழைக்க, இவனோ திண்டாடிப் போனான்.

திரும்பி வேறு யாராவது நிற்கிறார்களா என்பதை ஆராய்ந்தவன் மீண்டும் முழிக்க, “உங்களை ஒன்னும் குடும்பமா சேர்ந்து கடிச்சு சாப்பிட மாட்டோம் உள்ள வாங்க.” என்றவள் வீட்டுக்குள் நகர்ந்தாள்.

“இப்ப என்னன்னு கூப்பிட்ட.” என்ற குரலில் திரும்பியவள்,

“உள்ள வாங்கன்னு” என்றாள்.

“அது கூட சேர்ந்து வேற ஏதோ…” என்று அவன் தடுமாற, இப்போதும் சாதாரணமாக கூறினாள், “உள்ள வாங்க மாமான்னு சொன்னேன்.” என்றாள்.

பண்ணையில் கோழியை திருடிய திருடன் போல் புதிதான அழைப்பில் அவன் கோலிக்கண்ணை உருட்டினான். புரிந்து கொண்ட திவ்யா,

“மாமன் மகனை மாமான்னு சொல்லாம வாடா போடான்னு சொன்னா நல்லா இருக்காது உள்ளே வாங்க.” என்றவள் சென்று விட்டாள்.

தயக்கத்தோடு உள்ளே வந்தவன் அமைதியாக நிற்க, மருமகனை நன்றாக உபசரித்தார் பரமேஸ்வரி. அவரிடம் பேச முதலில் தயங்கினாலும் பாட்டி பேசும் தைரியத்தில்  பேச ஆரம்பித்தான். சம்பிரதாயத்திற்கு மணிவண்ணிடம் பேசியவன் தங்கையை தேடினான்.

விட்ட உறவுகள் அழகாக இணைந்துக் கொள்ள,  படாத பாடுப்பட்டு கொண்டிருந்தாள் அக்னியை வெளியில் வரவிடாமல் இருக்க அன்பினி.

அலுவலகத்திற்கு ஃபார்மல் உடையில் தயாராகி நின்றவன் தலை சீவிக் கொண்டிருக்க, ” ஆங்கிரி பேர்ட்.” பின்னால் நின்று அணைத்தாள்.

வழக்கம்போல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டவன் வெளியில் கிளம்பினான். ஓடி சென்றவள், “அடிமை வரும்போது எனக்கு  ஃபோன் வாங்கிட்டு வா.” என்றாள்.

“யார் நீ? எனக்கு ஆர்டர் போட்டுட்டு இருக்க தள்ளு.” அவளை தள்ளிவிட்டவன் கதவை திறக்க, விடவில்லை அன்பினி.

“நீதான என் ஃபோனை உடைச்ச ஒழுங்கா வாங்கி கொடு.” மிரட்டல் விடுக்க, “முடியாது” என விடாப்படியாக கூறிவிட்டான் அக்னி.

“வாங்கித் தர மாட்ட.”

“மாட்டேன்.”

“பொண்டாட்டி முதல் முதலா  ஒன்னு கேக்குறா, முடியாதுன்னு சொல்ற நீ எல்லாம் என்ன புருஷன்.”

“அதெல்லாம் முறையா கட்டிக்கிட்டு வந்தவ கேட்டா வாங்கி தரலாம். நீ ஒட்டிக்கிட்டுல வந்திருக்க.” என்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அன்பினி.

“என்னடி முறைப்பு இதெல்லாம் வேற எவன் கிட்டயாவது காட்டு. எங்கிட்ட செல்லாது.”

“எனக்கு வேற யாரும் இல்ல உன்கிட்ட தான் காட்ட முடியும்.”

“அதான் தெரியுமே உன் லட்சணத்திற்கு எவன் வருவான்.”

“அக்னி”

“வாய உடைச்சிடுவேன் என் பேர சொன்னினா.”

“அக்னி.”

“ஏய்!”

“அக்னிசந்திரன்.”

அவன் முறைப்பதை அறிந்து இன்னும் சத்தமாக அழைக்க தொடங்கினாள்.

பட்டென்று வாயில் அடித்தவன், “சக்கரை தண்ணி ஊத்தி நீயா பேர் வச்ச வக்கனையா கூப்பிடுற.” என்று மீண்டும் வாயில் அடிக்க, அவளின் பல் பட்டு உதட்டில் ரத்தம் வர ஆரம்பித்தது.

வாயை மூடிக் கொண்டு குளியல் அறைக்கு சென்றாள். அவள் பின்னே அவனும் செல்ல, “வராத போ!” என்று தள்ளி விட்டவள் சுத்தப்படுத்த துவங்கினாள் ரத்தம் வந்த இடத்தை.

ரத்தம் வருவதை பார்த்தவன் வருத்தத்தோடு, “இங்க காட்டு அன்பு.” என அவள் முகத்தை திருப்பினான்.

கையை உதவியவள் அவனைப் பார்க்காமல் சுத்தம் செய்யும் வேலையில் இறங்க, “சும்மா இருந்தவன் கிட்ட நீ தானடி வம்பு பண்ண. இப்போ என்னமோ உன்ன அடிச்சு கொடுமை படுத்துன ரேஞ்சுக்கு சீன் போடுற.” என அவள் தட்டி விட்ட கடுப்பில் பேசினான்.

“வம்பு பண்ணா இப்படித்தான் அடிப்பியா? என்னை அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.” என்றதும் முகம் சுருங்கி விட்டது அக்னிக்கு.

“சாரி அன்பு நான் பொறுமையா தான் அடிச்சேன். இப்படி ஆகும்ன்னு நினைக்கல.” என்றவன் குளியலறை விட்டு வெளியில் கிளம்பினான்.

அன்பினியின் புத்தி வேகமாக ‘அய்யய்யோ உன் புருஷன் கீழ போனா அவ்ளோ தான்’ என அறிவுரை கூற,

“அடிச்சிட்டு சாரி சொன்னா முடிஞ்சிருச்சா. கேட்க ஆள் இல்லைன்னு தான உன் இஷ்டத்துக்கு பண்ற. இதுவே உன் தங்கச்சிய இப்படி அவ புருஷன் அடிச்சிருந்தா சும்மா  இருப்பியா.” என்று அக்னியின் மனசாட்சியை தூண்டி  விட்டாள்.

நியாய இஸ்திரி  அக்னி, “இப்ப என்ன தாண்டி பண்ண சொல்ற.” என்று இறங்கிப் போனான்.

“பண்ணதுக்கு பனிஷ்மென்ட் வாங்கு.” என்றவள் முகம் அநியாயத்துக்கு நல்லவள் வேஷம் போட்டது.

“என்ன பனிஷ்மென்ட்.”

“நீ போட்டு இருக்க டிரஸ் எல்லாம் ரிமூவ் பண்ணு  இன்னைக்கு நான்தான் உனக்கு டிரஸ் பண்ணி அழகு படுத்துவேன்.” என்றதும் அவளின் மனசாட்சி, ‘இதான் சாக்குனு உன் ஆசையை நிறைவேத்திக்கிற.’ என்று காரி துப்பியது.

விட்டால் இந்த வாய்ப்பு கிடைக்காது என்பதால் அதை அலட்சியம் செய்தவள் முடியாது என்ற அக்னியையும் அடம் பிடித்து சம்மதிக்க வைத்தாள்.

தலையில் அடித்துக் கொண்டு சட்டையை   கழற்ற முயன்றவன் சந்தேகத்தோடு அவளை திரும்பிப் பார்த்தான்.
அதுவரை திட்டம் போட்டு செயல்பட்ட அன்பினி காதலோடு தன் ஆசையை நிறைவேற்ற பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் திரும்புடி!” என்றதும்,

“எதுக்கு நான் திருமணம் நீ என்னோட பிராப்பர்ட்டி. உன்ன பார்க்கிற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு. கழட்டு.” என்றாள் மனைவி என்ற உரிமையோடு.

“பல்ல உடைப்பேன் திரும்பு.” என்ற பின்னும் அவள் திரும்பாமல் இருக்க, தானே திருப்பி நிறுத்தினான்.

“அறிவுக்கொழுந்து திரும்பி நின்னு  எப்படி டிரஸ் போட முடியும்.”  நியாயமான கேள்வியை முன்வைக்க,

“கண்ண மூடிட்டு மாத்தலாம்.” என்ற அற்புதமான ஐடியாவை கொடுத்தான்.

கோபத்தோடு திரும்பியவள், “என்னடா ஓவரா பண்ற. நான் பார்த்தா என்ன குறைஞ்சு போயிடுவியா.” என்று அவன் சட்டையில் கை வைத்தாள்.

அக்னி தடுத்து நிறுத்த, புசுபுசுவென்று கோபம் வந்தது அவளுக்கு. வேகமாக அந்த கையில் அடித்தவள், “கொன்றுவேன் உன்ன.” என்று அவன் சொல்ல சொல்ல கேட்காமல் சட்டையை கழற்றி தனக்கு பிடித்த ஆடையை போட்டு விட்டாள்.

ஒவ்வொரு பட்டனாக போட்டவள் பார்வை முன் மேனியை படம் பிடித்துக் கொண்டது. ஏகத்துக்கும் அவளின் காதல் ஆசைகள் நெஞ்சில் இருக்கும் பட்டனை போடும்போது எகிறி குதிக்க,  விழியை அவன் விழியோடு சேர்க்க ஆரம்பித்தாள்.

போட்டுக் கொண்டிருந்தவள் பாதியில் நிறுத்த, தன் சட்டையை பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான். உதட்டில் சிரிப்பும் கண்ணில் காதலும் சம பங்கு அளவில் நிரம்பி இருந்தது. இமை சிமிட்டாமல் கண் கருவில் நிரப்பிக் கொண்டிருந்தாள் கணவனின் அழகை. அவளை அறியாமல் முகம் அக்னியின் முகத்தருகே நெருங்க, விலக நினைத்தாலும் அந்த பார்வை தடை போட்டது அக்னிக்கு.

தலைமுடியில் ஆரம்பித்த பார்வை நெற்றி, அடர்ந்த புருவம்,கண்முடி நிரம்பியிருந்த அழகான கண்கள், நீண்ட மூக்கு, பெண்களைப் போல் சிவந்திருந்த உதடு
என்று முதல் முறையாக அவனை இவ்வளவு நெருக்கத்தில் ரசிக்கிறாள். இவன் தனக்கானவை என்ற உரிமை அவளிடத்தில் அதிகரிக்க, விரல் கொண்டு ரசித்ததை தடவ ஆரம்பித்தாள்.

உதட்டிற்கு வந்த கைகள் கீழிறங்க மனமில்லாமல் கீழ் உதட்டோடு நின்று கொண்டது. அக்னிக்கு ஒன்றும் புரியாத மோக நிலை. கன்னியின் விழிகள் அவன் விழியை ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் உதட்டில் மையம் கொண்டது.  கட்டுப்படுத்த முடியாத பேராசை இடைவெளியை குறைத்தது. நிலைக்கொண்ட பார்வையை திசை திரும்பியது நெஞ்சில் இருக்கும் சுருள் முடிகள். விரல்கள் அந்த இடத்தை கோலம் போட்டு தன் விரலோடு சுருட்டிக் கொள்ள கருப்பு மோதிரங்கள் சுழல ஆரம்பித்தது.

மார்பு கூந்தலில் சொக்கி போனவள் உதட்டின் அழகை பின்னுக்கு தள்ளி, நெஞ்சில் முத்தம் கொடுத்து அவற்றை முன்னிறுத்திக் கொண்டாள். விலகாதே என்று மனம் கட்டளையிட முகத்தை புதைத்தாள் அன்பினி. அவனின் வாசம் எங்கோ கூட்டிச் செல்ல கழுத்தை நிமிர்ந்து, முகத்தை நகர்த்தி கன்னத்தில் குடி கொண்டாள் .

மூச்சுக்காற்று அவன் மீசை கூந்தலில் பட்டு அவஸ்தை கொடுக்க அதற்கும் ஒரு இதழ் ஒற்றல். கருப்பு நிற காட்டில் அவன் இதழ் மட்டும் தனித்திருக்க துணை சேர்க்க முயன்றாள் தன் உதட்டை சேர்த்து. மனைவியின் பார்வை அவன் மதியை கலங்கடித்திருக்க, இதழில் எச்சில் பட்டதும் தன் நிலை தெளிந்தவன் வேகமாக விலகி நின்றான்.

அதன்பின்னே அவளும் புரிந்துக்கொண்டு விலகி நின்றாள். அவளைப் பார்க்காமல் கிளம்ப போனவன் கையைப் பிடித்தவள்,

“கொஞ்சம் இரு பேசணும்” என்றாள்.

உதறி தள்ளியவன் வெளியில் செல்ல கைப்பிடித்து தடுத்தாள். கோபம் சட்டென்று வெளிப்பட்டு விட, “கைய விடுறியா இல்ல திரும்பவும் ரத்தத்தை பார்க்குறியா.” என்றதும் கைகளை  விட்டாள் அன்பினி.

கோபத்தோடு கீழ் இறங்கியவனின் கோபம் பன்மடங்கு பெருகியது அங்கு நடக்கும் காட்சிகளை பார்த்து. விக்ரம் நடு வீட்டில் அமர்ந்துக் கொண்டு தன் அன்னையோடு கதை அளந்து கொண்டிருந்தான். பக்கத்தில் அன்னபூரணி  பேத்தியோடு பேசிக் கொண்டிருக்க, மணிவண்ணன் அவ்வப்போது அனைவரிடமும் பேச்சு கொடுத்துக் கொண்டு சிரித்தார்.

திரும்பி மனைவியை முறைத்தவன் கோபத்தை படியிறங்கும் ஓசையில் காட்டினான். மகனின் வருகையை அறிந்த மணிவண்ணன் நேற்று போல் எதுவும் நிகழக் கூடாது என்பதற்காக கண்களால் கண்டிப்பை காட்டினார். புரிந்தவன் பற்களைக் கடித்துக் கொண்டு அன்னையைப் பார்க்க, அவர் முகத்தில் தெரிந்த சிரிப்பில் விட்டுக் கொடுத்துப் போனான்.

அக்னியை பார்த்ததும் விக்ரம், “நான் கிளம்புறேன் அத்தை.”என்று எழுந்து நின்றான். உரிமை கொண்டாடிய விக்ரமை ஆக்ரோஷத்தோடு முறைத்தான் அக்னி. அவனின் பார்வை அங்கிருந்த அனைவருக்கும் சங்கடத்தை கொடுக்க, “அக்னி ப்ளீஸ் எதுவும் பேசாம அமைதியா இரு.” பின்னால் வந்த அன்பினி பொறுமையாக கூறினாள்.

திரும்பி பார்த்தவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் அடுத்த வார்த்தை வர மறுத்தது அன்பினிக்கு. நடப்பதை புரிந்துக் கொண்ட அன்னபூரணி, “அம்மாடி டைம்‌ ஆச்சு நாங்க நாளைக்கு வரோம்.” என கிளம்ப தயாரானார்.

மகன் முகத்தில் இருக்கும் கோபத்தில் பரமேஸ்வரியும் உடனே தலையசைக்க, “அம்மா நானும் அப்படியே காலேஜ் போறேன்” என்று கிளம்பினாள் திவ்யா.

“எப்படிடா போவ காலேஜ் பஸ் அப்பவே போய்ட்டு இருக்குமே.” திவ்யாவை காலை, மாலை இருவேளையும் அழைத்துச் செல்ல கல்லூரி வாகனம் வரும். இன்று பாட்டி வருகையால் பர்மிஷன் போட்டவள் எப்படி செல்வாள் என்று மணிவண்ணன் கேட்க,

“மூணு ஸ்டாப்பிங் தான ப்பா நான் இன்னைக்கு ஒரு நாள் பஸ்ல போறேன்.” என்றவள் கல்லூரி பையை தூக்கிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள்.

பேத்தியின் கல்லூரி எங்கு இருக்கிறது என்பதை விசாரித்த அன்னபூரணி, “அம்மாடி நாங்க போற வழி தான் பேசாம விட்டுட்டு போகட்டுமா.” என்று தன் மகளிடம் உத்தரவு கேட்டார்.

“அவ என்ன குழந்தையா நாலு பேர் கூட்டிட்டு போய்விட. உங்க வேலைய மட்டும் பாருங்க அவளுக்கு போக தெரியும்.” கோபம் தெறித்தது அக்னியின் வார்த்தையில்.

“அக்னி!” என்ற அன்னையின் கண்டிப்பில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

அவன் பேச்சில் விக்ரமிற்கும் கோபம் வெகுண்டு எழுந்தது. அனைவருக்காகவும் தன்னை கட்டுப்படுத்தியவன் யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்று விட்டான். இரு இளம் ரத்தத்தின் கோபத்தை பார்த்த பெரியவர்கள் தலைசுற்றி போனார்கள்.

“நீங்க கூட்டிட்டு போங்கம்மா.” என்று பரமேஸ்வரி உத்தரவு கொடுத்ததும் முதியவர் கிளம்ப, அண்ணனைப் பார்த்துக் கொண்டே கிளம்பினாள் திவ்யா.

அவர் சென்ற பின் பரமேஸ்வரி அமைதியாக நகர்ந்து விட, மணிவண்ணனும் வேலையை கவனிக்க சென்று விட்டார். தனித்து விடப்பட்டவன் தன் கோபம் முழுவதையும் வாழ வந்தவளிடம் காட்டினான்.

“நீ பண்ண வேலைக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்ல உனக்கு. நான் வெளியே வரக்கூடாதுன்னு இவ்ளோ நேரம் நடிச்சிருக்க அதுவும் உன்னை காட்டி.”

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.” என்று கத்தினாள் அன்பினி.

“ச்சீ பேசாத! உன் புத்தி எவ்ளோ அசிங்கமா இருந்தா இப்படி எல்லாம் யோசிச்சி இருக்கும். நல்ல வேளை நான் விலகிட்டேன். இல்லன்னா நீ விரிச்ச வலையில விழுந்து என்னை நானே அசிங்கப்படுத்தி இருப்பேன்.” என்று வார்த்தையை இஷ்டத்துக்கு அள்ளி தெளித்தான் அவள் மீது.

அன்பினி கொடுக்கும் பதிலை கூட கேட்க விரும்பாதவன் கோபத்தோடு கிளம்பி விட்டான். செல்பவனை பார்த்தவள் மனம் தன்மானம் குறைந்து தலை கவிழ்ந்தது.

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
26
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *