Loading

அத்தியாயம் 16

 

பாதி தொலைவை கடந்திருந்த வாகனம், அந்த தேசிய நெடுஞ்சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 

 

கணவனின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளின் உறக்கம் கலையாதவாறு, மெல்லொலியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதற்கு ஏற்றவாறு தாளம் போட்டுக் கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தான் மயூரன்.

 

என்னதான் தவிர்க்க நினைக்கும் ஊர் என்றாலும், அவனின் சொந்த மண் அல்லவா? அதனாலேயே உள்ளுக்குள் சொல்லத் தெரியாத உணர்வு நிரம்பிக் கொண்டிருந்தது.

 

மணியை பார்த்தவன், “சாமிண்ணா, அடுத்து வர ஹோட்டல்ல நிறுத்துங்க. டீ குடிச்சுட்டு போலாம்.” என்று கூறிய மயூரன், சிறிதும் சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்த துவாரகாவை பார்த்தான்.

 

‘ஹ்ம்ம், உனக்கென்னமா சுகமா தூங்கிட்டு இருக்க!’ என்று உள்ளுக்குள் பொறாமை எழுந்ததோ என்னவோ, அவளை சிறிது தொந்தரவு செய்ய ஆரம்பித்தான்.

 

அதற்கெல்லாம் அசருபவளா அவள்?

 

அவனின் சில்மிஷங்களை எல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் உறக்கத்தை நீட்டித்தாள்.

 

அதற்குள் கந்தசாமி ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்த, “சாமிண்ணா, நீங்க உள்ள போய் உங்களுக்கு வேணுங்கிறதை வாங்கி சாப்பிட்டுட்டே இருங்க. இவளை எழுப்பி கூட்டிட்டு வரேன்.” என்ற மயூரன், அவரின் மறுப்புகளை எல்லாம் சட்டை செய்யாமல், அவரை அனுப்பி வைத்தான்.

 

வாகனம் நின்றதில் உண்டான புழுக்கத்தில் தான் துவாரகாவின் உறக்கம் சிறிது கலைந்தது.

 

அப்போதும், இதழ் சுழிப்புடன் விட்ட உறக்கத்தை தொடர எண்ண, அவளின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி விட்டான் மயூரன்.

 

“அவுச்…” என்றவாறே விழித்தவளோ, ‘எங்கிருக்கிறோம்’, ‘இங்கு என்ன செய்கிறோம்’ என்பதெல்லாம் விளங்காமல் முழித்துக் கொண்டிருக்க, “உனக்கும் கும்பகர்ணனுக்கும் காம்பெட்டிஷன் வச்சா கூட, அதுல நீதான் வின் பண்ணுவ வரா.” என்று அவன் அவளை வாற, சுயத்தை அடைந்தவளோ, “இப்போ இதை சொல்லத் தான் எழுப்புனீங்களா?” என்று இடுப்பை தேய்த்துக் கொண்டாள்.

 

“பின்ன, நானும் எவ்ளோ நேரம் தான் கத்த? இனி இந்த ட்ரீட்மெண்ட் தான்!” என்று விஷமமாக கூறியவன், அவளின் இடுப்பை பார்க்க, அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவளோ, அவன் கரத்தில் பட்டென்று அடித்து, “கிள்ள வேற இடமே கிடைக்கலையா?” என்றாள் சிவந்து விட்ட முகத்துடன்.

 

“அது தான் கைக்கு வாகா இருந்துச்சு.” என்று தோளை குலுக்கி கூறியவன், “அப்பறம் கொஞ்சம் கிலுகிலுப்பாவும் இருக்கும்ல.” என்று ஹஸ்கி குரலில் கூற, “ஹான் இருக்கும் இருக்கும். வலி எனக்கு தான தெரியும்?” என்றவள், வாகனத்திலிருந்து இறங்க முற்பட, அவளை தடுத்தவன், “டிரெஸை சரி பண்ணிட்டு இறங்கு.” என்று கூறிவிட்டு மறுபக்கம் கதவை திறந்து இறங்கினான்.

 

உடனே கீழே குனிந்து பார்த்தவள், முன்பக்கம் இறங்கியிருந்த மேற்சட்டையை வேகமாக ஏற்றி விட்டுக் கொண்டாள்.

 

இதில், ‘அடக்கடவுளே, இப்படியேவா பேசிட்டு இருந்துருக்கேன்? இந்த லவர் பாயும் எதுவும் சொல்லாம… ச்சீ!’ என்று எண்ணியபடி கண்களை மூடி நெற்றியில் கைவைத்துக் கொள்ள, அவள் பக்கமிருந்து கதவை திறந்து அவளை நோக்கி குனிந்தவனோ, “மேடம் இவ்ளோ வெட்கப்படுற அளவுக்கு ஒன்னும் நான் பார்க்கல.” என்றான்.

 

சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டவள் நிமிர்ந்து அவனை முறைத்தவாறே, “யாரு வெட்கப்பட்டா?” என்றவாறே வாகனத்தை விட்டு கீழிறங்கியவள், “சரியான ஃபிளர்ட்!” என்று முணுமுணுத்து விட்டு, விடுவிடுவென்று நடக்க, நமுட்டுச் சிரிப்புடன் அவளை தொடர்ந்தான் அவளின் கணவன்.

 

அங்கு தேநீர், வடை, சமோசா என்று உண்டு விட்டு மீண்டும் பயணத்தை துவங்கினர்.

 

இப்போது சற்று தேறியிருந்த துவாரகாவோ மயூரனிடம், “உங்க… ப்ச், நம்ம குடும்பத்தை பத்தி சொல்லுங்க.” என்றாள்.

 

அவனும் ஒரு பெருமூச்சுடன், “நம்ம குடும்பத்தோட மூத்த தலைமுறை, தாத்தா சக்கரவர்த்தி – பாட்டி குமுதவல்லி. மூணு வருஷத்துக்கு முன்னாடி பாட்டி இறந்துட்டாங்க. அவங்களுக்கு மொத்தம் ஆறு பிள்ளைங்க – மூணு பசங்க, மூணு பொண்ணுங்க. ஃபர்ஸ்ட் பெரியப்பா வெற்றிவேல் – பெரியம்மா யமுனா. அடுத்து பெரிய அத்தை கார்த்திகா – மாமா சந்தானம். நெக்ஸ்ட் என் அப்பா சக்திவேல் – அம்மா தேவி. அப்பறம் நடு அத்தை சாரதா – மாமா  கண்ணன். அடுத்து சித்தப்பா கதிர்வேல் – சித்தி சோபனா. அப்பறம்…” என்றவனை இடைவெட்டியவள்,

 

“ஹோல்டான். இப்பவே கண்ணைக் கட்டுது. பேரெல்லாம் என்னால் ஞாபகம் வச்சுக்க முடியாது.” என்றவள், “பெரியப்பா – பெரியம்மா, அப்பா – அம்மா, சித்தப்பா – சித்தி, அப்பறம் ரெண்டு அத்தை…” என்று மனப்பாடம் செய்வதை போல சொல்லிப் பார்க்க, “மேடம், எனக்கு தான் அந்த உறவு. உனக்கு அப்படியே ஆப்போசிட்டா வரும். எனக்கு அப்பான்னா, உனக்கு மாமா. எனக்கு அத்தைன்னா, உனக்கு பெரியம்மா.” என்று தெளிவாக அவளை குழப்பினான்.

 

“போச்சு போச்சு! இப்போ ஃபர்ஸ்ட்ல இருந்து மனப்பாடம் பண்ணனும். நீங்க ஏன் உங்களுக்கான ரிலேஷன்ஷிப்பை வச்சு சொன்னீங்க? நீங்களா புதுசா கத்துக்க போறீங்க?” என்று அவள் மயூரனை திட்ட, அதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே வாகனத்தை செலுத்தினார் கந்தசாமி.

 

அவள் மீண்டும் ஏதோ முணுமுணுக்க, “ஈஸி வரா. எதுக்கு இவ்ளோ டென்ஷன்? அவங்களை எல்லாம் பார்த்தா உனக்கு ஈஸியா புரிஞ்சுடும்.” என்றவன், “அப்பறம் இது ஒரு ஜெனரேஷன் தான். அடுத்த ஜெனரேஷன் வேற இருக்கே!” என்றான்.

 

“அதுவாச்சும், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ டெம்ப்ளேட்டா? இல்ல, உங்க தாத்தா – பாட்டி மாதிரி ‘வீட்டை வளர்க்குறேன், நாட்டை வளர்க்குறேன்’ பாலிஸியா?” என்று பதற்றமாக இருந்த போதிலும் கிண்டல் செய்தாள்.

 

அதில் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டவன், அவளின் செவியை பிடித்து, “நம்ம குடும்பத்தையே கிண்டல் பண்றியா ராஸ்கல்?” என்று கோபமில்லா கோபக் குரலில் வினவினான்.

 

அப்படியே சில நிமிடங்கள் வெட்டிப்பேச்சில் கழிய, அவர்களின் வாகனம் அந்த தெருவில் நுழைந்தது.

 

அந்த தெருவையே அடைத்து வைத்ததை போலிருந்தது பெரிய காம்பவுண்ட்டும் அதனுள்ளிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய பங்களாவும்.

 

“இதோ, நம்ம வீட்டுக்கு வந்தாச்சு.” என்று மயூரன் சொல்லும் முன்பே அதை உணர்ந்தவளாக வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் துவாரகா.

 

இரவு நேரத்தில் விளக்குகள் ஒளிர கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அந்த நான்கு அடுக்கு மாளிகை!

 

விளக்குகள் அந்த மாளிகையின் அழகை மட்டுமே காண்பித்தது. அதை சுற்றியிருந்த தோட்டத்தின் அழகை அவ்விளக்குகளால் கூட காட்டி விட முடியவில்லை.

 

அதற்கே திறந்த வாய் மூடாமல் திகைத்து போயிருந்தவளை அவன் உலுக்க, “வாவ்! இது தான் உங்க வீடா?” என்று திகைப்பிலிருந்து வெளிவராமல் அவள் வினவினாள்.

 

என்னதான், அவளுடைய தந்தையின் இல்லம் (!!!) பெரியது தான் என்றாலும், இந்த மாளிகைக்கு முன்னர், அதெல்லாம் சிறியதாக தான் இருக்கும்.

 

அவனோ அவளை கரம்பிடித்து இறக்கியவாறே, “நம்ம வீடு!” என்று சரிப்படுத்தினான்.

 

“ஹான் ஹான்… நம்ம வீடு!” என்றவளும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த பணியாளர் ஒருவர், மயூரனைக் கண்டு திகைத்து நிற்க, “யாருடா வந்துருக்குறது?” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்க, அந்த பணியாளரோ விரைந்து உள்ளே ஓடியிருந்தார்.

 

அவளின் ரசனையை தடை செய்த குரலை கேட்டவள், ‘யாரென்று’ மயூரனை பார்க்க, “பெரிய அத்தை!” என்றான் மெல்லிய குரலில்.

 

“பெரிய அத்தைக்கு வாய்ஸும் பெருசா தான் இருக்கும் போல.” என்று அவள் அவனிடம் கிசுகிசுக்க, “உனக்கு அவங்க பெரியம்மா.” என்று அப்போதும் அவளை திருத்தினான்.

 

அந்த இடைவேளையில், ஒரு கும்பலே அந்த வீட்டிற்குள்ளிருந்து வெளியே வர, மொத்தமாக பார்த்ததும் பயந்தே போனாள் துவாரகா.

 

அதில், மயூரனை ஒட்டிக் கொண்டவளை ஆதரவாக கைபிடித்தபடி உள்ளே நுழையப் போனவனை தடுத்து நிறுத்தியது அந்த குரல்.

 

“இனிமே இங்க வரவே மாட்டேன்னு போனவன், இப்போ எதுக்கு இங்க வந்துருக்கானாம்?” என்று வெறுப்புடன் சக்திவேல் வினவ, மயூரனோ அவரை அலட்சியப்படுத்தி விட்டு உள்ளே நுழைய எத்தனித்தான்.

 

மீண்டும் அவனை தடுத்த அவனின் அத்தை கார்த்திகா, “என் தம்பி அவ்ளோ சொல்லியும், அதை மதிக்காம உள்ள வரன்னா, உனக்கு எவ்ளோ திமிரு? அப்பான்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா? எல்லாம் வளர்ப்பு அப்படி!” என்றவரின் பார்வை ஒரு ஓரத்தில் தவிப்பை கண்களில் தேக்கி, அதற்கு இணையாக கண்ணீரையும் வெளியே விடாமல் பூட்டி வைத்து நின்று கொண்டிருந்த தேவியை குற்றம்சாட்டியது.

 

அதை சரியாக கவனித்த துவாரகாவிற்கோ தேவியை கண்டு வருத்தம் மேலோங்கியது. அவரை பார்க்கும்போதே தெரிந்தது, அவர் தான் அவள் கணவனின் அன்னை என்று. 

 

அதோடு, வந்தவர்களை உள்ளே கூட விடாமல், வெண்கலக் குரலில் பேசிய அந்த அக்கா – தம்பி காம்போவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் பேச்சு எரிச்சலைக் கொடுத்தது.

 

அதனாலேயே, “ஓஹ், அப்போ உங்க அப்பா உங்களை சரியா வளர்க்கலைன்னு சொல்றாங்களா அந்த ஆன்ட்டி.” என்று அப்பாவியாக விழிகளை சிமிட்டியபடி, மயூரனிடம் கிசுகிசுப்பது போல அனைவருக்கும் கேட்கும் வகையில் பேசினாள் துவாரகா.

 

அவளின் நக்கலை புரிந்து கொண்டவனோ அமைதியாக நிற்க, அதற்கு காரணககர்த்தாவோ தாம்தூம் என்று குதிக்க ஆரம்பித்தார்.

 

“இந்தம்மா, நான் எப்போ என் தம்பியை குத்தம் சொன்னேன்? எல்லாம் அவனோட ஆத்தாக்காரியை தான் சொன்னேன். பையனை எப்படி வளர்த்து வச்சுருக்கா?” என்று எரிச்சலுடன் கார்த்திகா பேச, அவரை எரிச்சல் படுத்தி பார்த்த திருப்தியை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

 

“ஓஹ், அப்போ உங்க குடும்பத்துல, குழந்தை பிறந்ததும் அப்பா கிட்ட இருந்து ஒதுக்கி வச்சுடுவீங்களா? எங்க சைட்ல எல்லாம் அப்படி இல்லப்பா!” என்று ஆச்சரியப்படுவதை போல பேசி, எதிராளிகளின் கோபத்திற்கு மேலும் தூபம் போட்டாள்.

 

“ஏய், என்ன விட்டா ரொம்ப பேசிட்டே போற? பெரியவங்கன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா?” என்று துவாரகாவை பார்த்து ஆவேசமாக பேசிய கார்த்திகா, இப்போது தம்பியிடம், “பார்த்தியா சக்தி, நம்மளை அசிங்கப்படுதன்னே உன் பையன் எவளையோ இழுத்துட்டு வந்துருக்கான். பாரு, அவளை பேச விட்டு கமுக்கமா நிக்குறதை…” என்று புகாரளிக்க, “சொல்ல சொல்ல கேட்காம, வீட்டை விட்டு போனவன் எல்லாம் என் பையன் இல்ல.” என்றார் சக்திவேல் அழுத்தத்துடன்.

 

அதில் மயூரனின் தேகம் இறுக, அதை அவனுடன் நின்றிருந்த துவாரகாவும் உணர்ந்து தான் இருந்தாள்.

 

‘ச்சே, இப்படி எல்லாம் கூட இருப்பாங்களா? நடக்குறதை பார்த்தா, இது ரொம்ப வருஷமா நடந்துட்டு இருக்க மாதிரி இருக்கு! இதை எல்லாம் டாலரேட் பண்ணிட்டு எப்படி இருந்தாங்களோ?’ என்று எண்ணியவள் மயூரனை பார்க்க, அவனோ கண்களை மூடி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

அவனின் நிலை கண்டு வருந்திய துவாரகா, அவன் கரம் வருடி அவளின் இருப்பை உணர்த்த, ஒரு பெருமூச்சுடன் கண்களை திறந்தவன், “இங்க விவாதம் பண்ண நான் வரல. அது என் வேலையும் இல்ல. அதை மீறி ஏதாவது கத்திட்டு இருந்தீங்கன்னா… தனியா கத்திக்கோங்க. எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல.” என்றவனின் பார்வை சக்திவேலிடம் பதியவே இல்லை.

 

மாறாக, ஓரமாக நின்று கண்ணீருடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவனின் அன்னையை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தவன், திரும்பி கார்த்திகாவிடம், “இன்னொரு முறை என் ஒய்ஃபை பத்தி ஏதாவது பேசினா, புகுந்து வீட்டுல ஹராஸ் பண்றாங்கன்னு கேஸ் குடுக்க சொல்லுவேன்.” என்று மிரட்டினான்.

 

அதில் கார்த்திகா அதிர, துவாரகாவிற்கோ சிரிப்பு வந்தாலும், அடக்கிக் கொண்டாள்.

 

“எது கம்ப்லைண்ட் குடுப்பியா? என் வீட்டுக்கே வந்து என்னையே மிரட்டுறியா? இதை யாருமே கேட்க மாட்டீங்களா? அண்ணன் தம்பின்னு இத்தனை பேரு இருந்து என்ன பிரயோஜனம்?” என்று பெருங்குரலில் கத்தி, வராத கண்ணீருடன் போராட, அப்போது தான் பேச சந்தர்ப்பம் கிட்டியது போல, 

 

“அதான, எங்க வந்து யாரை பேசுற?” 

 

“ஓடிப் போனவனுக்கு திமிரை பார்த்தியா?”

 

“அன்னைக்கு என்னவோ வரவே மாட்டேன்னு சபதம் விட்டுட்டு போன!” என்று ஆளாளுக்கு பேசினர்.

 

அதில் பேசாமல் இருந்தவர்கள் மூவர் தான். அவர்கள் அவ்வீட்டின் மருமகள்களான யமுனா, தேவி மற்றும் சோபனா!

 

சக்திவேலோ ஒரு படி மேலே சென்று, மயூரனின் சட்டையை பிடிக்க, நடக்கும் நிகழ்வுகளை கண்டு அதிர்ந்து போனாள் துவாரகா.

 

அவளும் தந்தையும் என்று வாழ்ந்து வந்தவளுக்கு குடும்ப அரசியல் என்பதே புதிதாக இருக்க, அதில் இப்படி கைகலப்பை எல்லாம் அவள் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை.

 

ஒரே களேபரமாக இருக்க, “என்ன நடக்குது இங்க? வாசல்ல வச்சு பஞ்சாயத்தா? இது தான் நீங்க எல்லாரும் கத்து வச்சுருக்க மரியாதையா?” என்ற குரல் கேட்க, சந்தைக்கடையாக மாறியிருந்த இடம் நொடியினில் கப்சிப்பென்று அமைதியாக மாறியது.

 

‘யாரந்த ஹீரோ?’ என்று துவாரகா எட்டிப் பார்க்க, அங்கு வயதின் மூப்பு தலை முடியிலும் முக சுருக்கங்களிலும் மட்டுமே தெரியும் வண்ணம் கம்பீரமாக வந்து கொண்டிருந்தார் அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினர், சக்கரவர்த்தி.

 

“அப்பா, இவன் என்ன சொல்றான்னு கேட்டீங்களா?” என்று முந்திக் கொண்டு சென்ற கார்த்திகாவை கண்களால் அடக்கிய சக்கரவர்த்தி, “அவன் என்ன சொன்னான்? சொன்னதெல்லாம் நீங்க தான?” என்றவரின் பார்வை சக்திவேலையும் முறைத்தது.

 

அதில் அவர் வெறுப்புடன் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்ள, குரலை செருமிக் கொண்டவர், “இப்போ சொல்றேன், நான் தான் மயூரனை வர சொன்னேன். அவன் இங்க தான் இருப்பான். இது அவனுக்கும் வீடு தான். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தா, தாராளமா வெளிய போலாம்.” என்று கைகாட்ட, அதற்கு மேல் யாரும் எதுவும் பேசிவிட முடியுமா?

 

வயதானாலும் அனைவருக்கும் அவரின் தயவு அவசியம் அல்லவா.

 

சொல்லப் போனால், அந்த ஒரு காரணத்திற்காக தான், அவரிடம் இருக்கும் இந்த பயமும், மரியாதையும். சொத்தை பிரித்துக் கொடுக்கும் அந்த சமயம் தெரியும், யார் எத்தனை சுயநலவாதி என்று. எல்லாம் பணம் படுத்தும் பாடு!

 

சக்திவேல் முதல் ஆளாக அங்கிருந்து விலகி விட, கார்த்திகாவும் இருவரையும் வஞ்சப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

 

அவ்வீட்டின் மூத்த வாரிசான வெற்றிவேலோ ஒருவித குழப்பத்துடனும் பயத்துடனும், “அப்பா, இப்போ எதுக்கு மயூரனை இங்க கூப்பிட்டுருக்கீங்க?” என்று வினவ, “ஏன்… இப்போவே உன் பையனுக்கு சொல்லியாகனுமா?” என்ற சக்கரவர்த்தி அவரை அற்பப் பார்வை பார்க்க, சற்று தள்ளியிருந்த யமுனாவோ, “இது உங்களுக்கு ரொம்ப அவசியமா? வாங்க போலாம்.” என்று சிடுசிடுத்து விட்டு அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றார்.

 

சின்னவர் கதிர்வேலோ தந்தையை முறைத்து விட்டு வெளியே சென்று விட, ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது அவரின் மனைவி சோபனாவிடம்.

 

அவரவர் அவரவர்களின் வேலைகளில் மூழ்கியிருக்க, சக்கரவர்த்தியோ நீண்ட நாட்கள் நேரில் சந்திக்காத பேரனை நெருங்கியவர், “மயூரா, எப்படி இருக்க? எனக்கு தெரியும், நீ வருவன்னு.” என்று பாசமாகவும் பெருமையாகவும் கூறினார்.

 

அவர் முன்னர் செய்த தவறுகள் வரிசை கட்டிக் கொண்டு நிற்க, மயூரனால் சாதாரணமாக அவரிடம் பேச முடியவில்லை.

 

“ம்ம்ம், நல்லா இருக்கேன்…” என்று அவன் முனக, “கோபமா இருக்கியா?” என்றவர், அத்தனை நேரம் தாத்தாவிற்கும் பேரனிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த துவாரகாவிடம் திரும்பியவர், “அம்மாடி, இந்த வயசானவனை மன்னிச்சுக்கோம்மா. உங்க கல்யாணத்துக்கு வர முடியல. வீணாப்போன பிடிவாதம் இன்னும் இந்த கெழவனை விட்டு போகல. ஹ்ம்ம், என்ன செய்ய? அப்படியே இருந்து தொலைச்சுட்டேனே.” என்று வருத்தத்துடன் கூற, அதில் பதறிய துவாரகாவோ கணவனை பார்த்துக் கொண்டே, “மன்னிப்பெல்லாம் எதுக்கு… தாத்தா?” என்றாள்.

 

அதில் அந்த முதியவரின் முகம் ஒளிர, “பார்த்தியாடா என் பேத்தியை…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, “மாமா, உள்ள கூட்டிட்டு போய் பேசுவோம். சாப்பிட்டாங்களோ என்னவோ!” என்றார் சோபனா.

 

“அட, ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் அப்படியே நிக்க வச்சு பேசிட்டேன். வாங்க வாங்க.” என்று இருவரையும் உள்ளே அழைத்தவர், வாகனத்தின் அருகே நின்றிருந்த கந்தசாமியிடம், “லக்கேஜை மணி வந்து எடுத்துப்பான் சாமி. சாப்பிட்டு போ.” என்றார்.

 

அத்தனை நடந்தும் மௌனமாக இருந்த தேவியை இடித்த சோபனாவோ, “அக்கா, இப்பவும் அமைதியா இருந்தா நானே உங்களை திட்டிடுவேன், பார்த்துக்கோங்க. மகன் மருமகப்பொண்ணோட முதல் முறை வீட்டுக்கு வந்துருக்கான். போய் ஆரத்தி எடுத்து வரவேற்காம இப்படி மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க!” என்று சத்தம் போட, கனவிலிருந்து விடுபடுபவர் போல, உள்ளே விரைந்தார்.

 

அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்த மயூரனின் முகம் இறுகிக் கிடக்க, ஆரத்தி கரைத்து வர உள்ளே சென்ற அன்னைக்காக கூட காத்திருக்காமல் வீட்டினுள் செல்ல விரைய, அவனை தடுத்த சோபனாவோ, “இரு மயூரா, உனக்காக இல்லன்னாலும், உன்னை நம்பி வந்த பொண்ணுக்காக இதெல்லாம் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.” என்று அவனை மடக்கினார்.

 

அவ்வீட்டில் அவனுக்கு ஆதரவாக இருப்பவரும் அவர் தான். அதே சமயம் அவன் அடங்கி போவதும் அவரிடம் மட்டுமே.

 

அதற்குள் தேவி ஆரத்தி தட்டுடன் வந்துவிட, “புது மருமகளே தள்ளி நின்னு பராக்கு பார்த்துட்டு நிக்காம, எங்க மயூரனோட சேர்ந்து நில்லு. க்கும், கல்யாணத்தை தான் பார்க்க முடியல. இப்போயாவது உங்க ஜோடி பொருத்தத்தை பார்த்துக்குறோம்.” என்ற சோபனா ஓரக்கண்ணில் மாமனாரை பார்த்துக் கொண்டார்.

 

அப்போதும் தேவி அமைதியாக நிற்க, “என்னக்கா உங்களுக்கு தனியா சொல்லணுமா. எவ்ளோ நேரம் பிள்ளைங்க வெளிய நிப்பாங்க?” என்று சத்தம் போட, தேவியும் சங்கடத்துடன் மணமக்கள் இருவருக்கும் ஆரத்தி சுற்றினார்.

 

அதில் மயூரனுக்கு சிறிதும் மகிழ்ச்சி இல்லை என்பது அவனின் கடுகடுவென்று இருந்த முகத்தினில் அப்பட்டமாக தெரிய, அவன் கரத்துடன் அவளின் கரத்தை கோர்த்துக் கொண்டாள் துவாரகா. 

 

ஒருவழியாக ஆரத்தி சுற்றும் சடங்கு முடிய, இருவரையும் உள்ளே அழைத்துச் சென்ற சோபனா, “ஒரேடியா சாப்பிட்டு அப்பறம் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.” என்று சோபனா கூறவும், “இல்ல சித்தி.” என்று மறுத்தான் மயூரன்.

 

“ஏன் மயூரா? உங்களை பார்த்தாலே தெரியுது, பசியில இருக்கீங்கன்னு.” என்ற சக்கரவர்த்தியோ, “சோபனா, எல்லாத்தையும் எடுத்து வைக்க சொல்லுமா.” என்றவர், மீண்டும் பேரனிடம் திரும்பி, “உங்களுக்காக தான் காத்துட்டு இருந்தேன். வாங்க சேர்ந்து சாப்பிடுவோம்.” என்றார்.

 

அதில் மயூரனோ, “அப்போ எங்களை வேவு பார்த்துட்டு தான் இருக்கீங்க இப்பவும்!” என்று கூற, “என் பேரனை நான் எதுக்கு வேவு பார்க்கணும்? நீ சாமியை கூப்பிட்டா எனக்கு தெரியாதா? நீ ஜட்டி போட்டு சுத்திட்டு இருந்தப்பவே, நான் பிசினஸ்காரன்டா.” என்று கூறி சக்கரவர்த்தி சிரிக்க, அவரின் உவமையில் துவாரகாவிற்கும் சிரிப்பு வந்தது.

 

மயூரனின் முறைப்பில் அதை அடக்கியவள் மீண்டும் தாத்தாவை பார்த்தாள். கணவனைப் பற்றி சுவாரசியமான செய்திக்காக இருக்குமோ?!

 

மீண்டும் அவரே, “சாமி எப்பவும் உனக்கு விசுவாசமான ஆளு தான். ஆனா, அவன் பையன் இல்லையே.” என்றவர், பேசிக் கொண்டே இருவரையும் உணவுண்ணும் அறைக்கு அழைத்து வந்திருந்தார்.

 

அதன்பிறகு, மூவருக்கும் சோபனா பரிமாற, புது இடம் என்பதால் உணவை கொறித்துக் கொண்டிருந்தாள் துவாரகா.

 

“அட இப்படி சாப்பிட்டா, எப்போ முடிக்கிறது? நல்லா அள்ளி சாப்பிட வேண்டாமா?” என்று சோபனா கூற, “நீங்க இப்படி அரட்டிட்டே இருந்தா, அவ எப்படி சாப்பிடுவா சித்தி?” என்றான் மயூரன் சற்று இலகுவாக.

 

“க்கும், இப்போவே பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா மகனே! நல்லது நல்லது. இந்த வீட்டுல தப்பிப் பிறந்தவன் நீதான்னு அடிக்கடி நிரூபிச்சுட்டே இருக்க.” என்று சோபனா சாதாரணமாக கூற, அது அங்கிருந்த இரு ஆண்களிடமும் வெவ்வேறு பிரதிபலிப்பை உண்டாக்கியது.

 

அதன் பிறகான நொடிகள் மௌனமாக கழிய, அவ்வபோது மயூரன் மட்டும் துவாரகாவின் தேவையை அறிந்து கொள்ள மெல்ல அவளின் காதருகே முணுமுணுத்தபடி உண்டான்.

 

அதைக் கண்ட இரு தாய்களுக்கும் மகிழ்ச்சியே! என்னதான் கணவன் இப்படி வாய்க்கவில்லை என்றாலும், மகனின் செயல் இருவரின் உள்ளங்களையும் குளிர்வித்தது.

 

அதை சோபனா வெளிப்படையாக சொல்லிவிட, தேவியோ வழக்கம்போல அதை தனக்குள் புதைத்துக் கொண்டார்.

 

உண்ணும் வேலை திவ்யமாக முடிய, “மயூரா, உன் ரூம் சுத்தம் செஞ்சு ரெடியா இருக்கு. லக்கேஜும் மேல வைக்க சொல்லிட்டேன். பயணக்களைப்பு வேற இருக்கும். மத்ததை நாளைக்கு பேசிக்கலாம். போய் ரெஸ்ட் எடுங்க.” என்று சக்கரவர்த்தி கூற, அவருக்கு ஒரு தலையசைப்பை தந்தவன் துவாரகாவோடு அவனின் அறைக்கு சென்றான்.

 

உள்ளே நுழைந்ததும் அத்தனை நேரம் மௌனம் காத்ததே ஏதோ சாதனை புரிந்ததை போல, “மயூ, உங்க வீடு… ப்ச், நம்ம வீடு செமையா இருக்கு. ஆனா, வீட்டுல இருக்கவங்க தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்புல இருக்காங்க.” என்றாள் துவாரகா.

 

அத்தனை நேரம் தொலைந்து போன சிரிப்பு மீண்டும் எட்டிப் பார்க்க, “ஆஹான்…” என்றவாறே அவளை நோக்கி திரும்பினான் மயூரன்.

 

“ஹப்பா, இவ்ளோ நேரம் இந்த சிரிப்பு எங்க இருந்துச்சாம்? நான் கூட, பழைய மயூரன் வந்தாச்சோன்னு நினைச்சேன்.” என்ற துவாரகாவை ஒட்டி நின்றவனோ, “உன்கிட்ட மட்டும் தான் என் சிரிப்பு வெளிய வருது போல குட்டிம்மா.” என்றான்.

 

அவன் குரலே, எதையோ எண்ணி வருந்துவதை துவாரகாவிற்கு சுட்டிக் காட்டியது. 

 

இன்னும் முற்று முழுதாக அவனின் கடந்த காலத்தையோ, வாழ்க்கையையோ பகிராதவனின் சிறு அலைப்புறுதல் கூட மனைவியானவளுக்கு புரிந்தது. அது மனதில் கொண்ட காதலின் மகிமையா, இல்லை கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தின் மகிமையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

 

அவனின் சோகத்தை போக்க எண்ணியவளோ, “ஆமா, நீங்க ஏன் யாருக்கிட்டயும் சரியா பேசல. அந்த முதல் ரெண்டு டிக்கெட் கூட பேசாதது ஓகே. ஆனா, உங்க மேல இவ்ளோ பாசம் இருக்க தாத்தா கிட்ட கூட ஒழுங்கா பேசல. உங்க அம்மா… அவங்களை கூட நீங்க விசாரிக்கலையே. எனக்கு தெரிஞ்சு, உங்க சித்தி கிட்ட தான் கொஞ்சமாச்சும் பேசுனீங்க.” என்று அவள் கவனித்ததை கூற,

 

“ஏன்னா, டிஃபிக்கல்ட்டான சிசுவேஷன்ல சித்தி மட்டும் தான் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.” என்றவனின் குரல் பழைய நினைவுகளின் தாக்கத்தில் தேய்ந்து ஒலித்தது.

 

‘அட லூசு, தேவையில்லாம பழசை ஞாபகப்படுத்தி விட்டுட்ட போல!’ என்று அவளின் மனசாட்சி அவனுக்காக அவளை கடிய, “இதுக்கு முன்னாடி யாரையாவது சமாதானப்படுத்தி இருந்தா தான, அடுத்து என்ன பண்ணன்னு தெரியும்!” என்று முணுமுணுத்தாள் துவாரகா.

 

அதில் உதட்டோரம் புன்னகை பூக்க, “எப்படி சமாதானம் செய்யணும்னு நான் வேணும்னா சொல்லித் தரவா?” என்று அவளை அவன் சுற்றி வளைக்க, “அம்பில இருந்து ரெமோவா மாறியாச்சா அதுக்குள்ள?” என்றவளோ, அவனிடமிருந்து தப்பிக்க முயல, முடிந்தால் தானே!

 

அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவனோ, “இதோ, இப்படி ஒரு ஹக் போதும் என்னை சமாதானப்படுத்த.” என்று அவன் அவளுக்கு வகுப்பெடுக்க, அவளோ அவர்களின் முதல் அணைப்பை எண்ணி திகைத்தவளாக, மூச்சு கூட விட மறந்து உறைந்து போனாள்.

 

அவளிடமிருந்து பதில் வராமல் போக, தன்னிடமிருந்து அவளை பிரித்தவன், அவளிருக்கும் நிலை கண்டு மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன், “இதுக்கே இப்படியா? ஆமா, நீ எந்த தைரியத்துல என்னை லவ் பண்றேன்னு பக்கத்துல பக்கத்துல வந்துட்டு இருந்த?” என்றான் கிண்டலாக.

 

அதில் லேசாக கோபம் எட்டிப் பார்க்க, “ஹான், நீங்க ஒரு ஜென்டில்மேன்னு நம்பி தான் வந்தேன். இப்போ தான் தெரியுது நீங்க ஒரு ஃபிளர்ட்டுன்னு.” என்று அவள் உதட்டை சுழிக்க, “லவ் பண்றவன் வேணும்னா ஜென்டில்மேனா இருக்கலாம். ஆனா, ஹஸ்பண்ட் ஜென்டில்மேனா இருக்கணும்னு எதிர்பார்த்தா எப்படி?” என்று அவளை நோக்கி குனிய, இருவருக்கும் இடையே கையை வைத்து தடுத்தவள், “இன்னும் ஃபிரெண்ட் ஸோன் தான் லவர்பாய்!” என்று நாக்கை துருத்தி காட்டிவிட்டு, குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

 

மயூரனும் கீழே நடந்தது மறந்து ஒரு சிரிப்புடன் கட்டிலில் விழுந்தான்.

 

அவனின் சிரிப்பிற்கு ஆயுட்காலம் என்னவோ நாளை காலை வரை மட்டும் தான் என்பது அவனுக்கும் தெரிந்தது தானே!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment