மூன்று ஜோடிகளும் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு, ஹால் சோபாவில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தனர்.
தயானந்தனிற்கு பிரஷாந்தின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்று ஆசை தான். ஆனால் மீண்டும் மீண்டும் தன்னவள் காயப்படுகிறாளே என்று வலிக்கவும் செய்தது.
மைதிலி கூறியது போல அவர்களை அப்படியே விட்டு விடுவதும் ஆபத்து தான் என்ற உண்மை உறைக்க மெளனமாக அமர்ந்திருந்தான்.
மிருணாளினிக்கு தான் வருத்தம் மேலோங்கியது. தனது மனநிலையை எண்ணியே அனைவரும் சிந்திக்கின்றனர் எனப் புரிய, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், “தயா இப்ப ஏன் நீ டல்லாகுற. மறுபடியும் இந்த பிரச்சனையை ஃபேஸ் பண்றதுக்கு எனக்கு எந்த சங்கடமும் இல்ல. அவங்க இந்த அளவுக்கு இறங்கி இருக்காங்கன்னா இன்னும் எந்த எல்லைக்கும் போகலாம்!” என்று அவன் கையைப் பற்றி கண் மூடித் திறந்தாள். மனையாளின் உறுதியான பேச்சில் தயானந்தனுக்கும் மனம் சற்று ஆறுதல் அடைந்தது.
“இப்ப என்ன பண்ண போறோம்?” மகேஷ் கவலையுடன் கேட்க,
மைதிலி இன்னும் ஆடவனது மீசையின் குறுகுறுப்பை உணர்ந்த கரத்தைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
எத்தனை தேய்த்தும் ஸ்பரிசத்தின் சலனம் அவளை விட்டுத் தூரம் செல்லாமல் சோதித்தது.
தன் அனுமதியின்றி முத்தமிட்டவனின் மீது கோபம் பெருகுவதற்கு பதிலாக, தவிப்பு ஏன் பெருகுகிறது என்ற எரிச்சலும் மிகுந்தது.
தொட்டதும் இழையும் அளவு, தன்னுடல் அத்தனை பலவீனமானதா? ஒருவனுடன் நிறைவான தாம்பத்யம் மேற்கொண்ட பின்னும், இன்னொருவனின் தொடுதலுக்கு உருகிப் போவது வேசித்தனம் அல்லவா? தனது பலவீனத்தின் எதிரொலிப்பாகத் தான், ரகுவிடம் கூட ‘ரெட் லைட் ஏரியாவிற்குச் சென்றே பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்’ என்ற வார்த்தை வெளி வந்ததோ?
ரகு தன்னை என்ன நினைத்திருப்பான்… சுகத்திற்காக அலைபவளென்றா? அதே போல தான் இன்னும் சிறிது நாட்களில் பிரஷாந்தும் எண்ணுவான்? இறுதியான சிந்தனையில் உடலும் மனமும் அதிர்ந்து போனது மைதிலிக்கு.
ரகுவின் மீதான காதல் மாயத்தின் மிச்சம் இன்னும் அவளை விட்டுப் போகாமல் இருப்பதே, செய்யாத தவறைக் கூட தானே செய்ததாக அவளை எண்ண வைக்கிறது. ஆசை கொள்ள ஆர்வம் இருந்தும், ஆர்மி ஆபிசரின் மனைவி இன்னொருவனின் மீது ஆசை கொள்வது பெரும் இழுக்கு என்று ரகு அவளுக்குள் இருந்து எச்சரிப்பது போலவே ஒரு பிரம்மை அவளுக்கு. அது அவளை குற்ற உணர்ச்சியில் மேலும் மேலும் ஆழ்த்தி ஆழமான அழுத்தத்திற்கு கொண்டு செல்கிறது.
மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளுக்குள் இறுகிக் கொண்டிருந்தவளுக்குப் புரியவில்லை, இப்போது பிரஷாந்த் அவளது கணவன் என்று. ரகு இறந்தகாலம், பிரஷாந்த் நிகழ்காலம் என்று உணராதவளுக்கு, கணவனுக்கு துரோகம் இழைப்பது போல மனதினுள் ஏதோ குத்தியது.
அவளுக்குள் இன்னும் வீற்றிருக்கும் ரகுவீர் தான், தினம் தினம் அவளைக் குற்ற உணர்ச்சியில் தள்ளிக்கொண்டிருக்கிறானே. அவளது இயல்பைத் தொலைத்த இறுக்கத்திற்கும் கூட இன்னும் அவளுள் உருவகம் செய்திருக்கும் ரகுவீரின் உருவம் தானே காரணம்.
இப்போதுவரை அவள் எது செய்தாலும், ஆழ் மனதில் மண்டி இருக்கும் ரகுவின் அசிரிரீ, அவளைக் குத்திக் கிளறி, “நீ ஒரு செல்பிஷ், இம்மெச்சூர்ட், முடிவெடுக்க தெரியாத கோழை, தனியா எதையும் ஹேண்டில் செய்யத் தெரியாத சின்னப்பொண்ணு, உன் உணர்வுகளை அடக்கத் தெரியாத சுயநலவாதி” என ஒவ்வொன்றிற்கும் அவளையே மட்டம் தட்ட வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை அக்குரல் அவளுள் கேட்கும் போதெல்லாம், வீறு கொண்டு தான் அப்படி இல்லையென தனக்கு தானே நிரூபித்துக்கொள்ள, தொழில் ரீதியாக முன்னேறுவாள்.
ஆனால், பிரஷாந்தின் விஷயத்தில் மட்டும் அந்த வேகம் வெகுவாய் குறைந்து போனது. அவன் மீது அவளுக்கு இருக்கும் சிறு துளி அன்பை உணராதவள், தனக்குள் குடி கொண்டிருக்கும் ரகுவீருக்காக பயப்படத் தொடங்கினாள்.
அவளது மனப்போராட்டங்களை அறியாத பிரஷாந்த், “மைலி… மைலி” என்று அவள் தோளைத் தொட்டு உலுக்க, அதில் தான் நிகழ்வுக்கு வந்தவள், “என்… என்ன?” எனக் கேட்டாள்.
“என்ன ஆச்சு? ஏன் இப்படி அசையாம உட்காந்து இருக்க?” என்றவன், இன்னும் அவள் கையைப் பிசைந்து கொண்டிருப்பதைக் கவனித்தான்.
“அது ஒன்னும் இல்ல… என்ன செய்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என அவனைப் பாராமல் சமாளித்தவள், “அதான்… அவங்க மேல மானநஷ்ட வழக்கு போட்டு, ஜீவனாம்சம் கேட்கணும். அகரன் பேர்ல இருக்குற ப்ராப்பர்டி ப்ளஸ், அவங்க சொத்துக்களையும் பறிமுதல் பண்ணனும். இல்லன்னா, இன்னும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பாங்க!” என்றதும்,
தயானந்தன், “அமர் ரெண்டு நாள்ல வந்துடுவான். வந்ததும் அவன்கிட்டயும் இதை பத்தி பேசிடுறது நல்லது” என்றான்.
“ம்ம் ஓகே… நான் வேற என்ன என்ன வழி இருக்குன்னு பாக்குறேன் அதுவரை. எவ்ளோ சீக்கிரம் அவங்களை அடக்குறோமோ அவ்ளோ சீக்கிரம் நல்லது” என்று எழுந்தவள், “லேட் ஆச்சு நான் கிளம்புறேன்…” என்று உறங்கிக் கொண்டிருந்த மகிழினியைத் தூக்கிக் கொள்ள,
திவ்யஸ்ரீ தான், “மணி பத்தாச்சு மைதிலி. இந்நேரம் ஏன் டிராவல் பண்றீங்க. இருந்துட்டு போலாம்ல. பாப்பாவும் தூங்கிட்டா பாரு” என்றதை மறுத்தவள், அவர்களிடம் சொல்லி விட்டு வெளியில் சென்றாள்.
‘நல்லா தான இருந்தா என்ன ஆச்சு இவளுக்கு?’ என்று தனது மனையாளின் விசித்திர நடவடிக்கையைப் புரியாமல் பார்த்த பிரஷாந்தும் விடை பெற, மிருணாளினி கிசுகிசுப்பாக, “அண்ணா மைதிலிகிட்ட நல்ல மாற்றம் தெரியுது. வில்லாலேயே வந்து இருக்க போறேன். உங்களுக்கு அலைச்சலா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா. சீக்கிரம் இந்த வந்துடுங்க!” என்று கூறியதில்,
“நிஜமாவா?” என்றான் நம்பாமல்.
“ஆமாண்ணா. நீங்க மாடிக்கு வர்றதுக்கு முன்னாடி வரை இதை தான் பேசிட்டு இருந்தோம்!” என்றிட, என்னவோ அவனுக்கு மனது உறுத்தியது.
யோசனையுடன் வெளியில் சென்றவன், மைதிலி மகிழினியுடன் காரின் பின் சீட்டில் அமர்ந்திருப்பது கண்டு காரினுள் அமர்ந்தவன், கண்ணாடி வழியே அவளை ஒரு நொடி அழுத்தமாகப் பார்த்தான்.
எதுவோ அவளைத் தின்று திணறடிக்கிறது! என்பதை உணர்ந்து கொண்டவன், அமைதியுடனே வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த இரு நாட்களும் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள்.
பிரஷாந்த் பேச வந்தாலும் பாராதது போல கடந்து விடுவாள். மகிழினியைப் பள்ளியில் இருந்து அழைப்பதற்கு கூட அவள் செல்வதில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், மூன்றாவது நாள் அவளது வண்டியைப் பஞ்சராக்கி விட்டான்.
கோர்ட்க்குச் செல்ல அவசரமாக கிளம்பி வெளியில் வந்தவளுக்கு, பஞ்சரான டயரைக் கண்டு எரிச்சல் மண்டியது. ‘இது வேற’ என சலித்தவள், கேப் புக் செய்ய முயல அதுவும் சுற்றிக்கொண்டே இருந்தது.
அந்நேரம் மகிழினியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த பிரஷாந்த், மைதிலியைக் கண்டும் காணாதது போல மகளை முன்சீட்டில் அமர வைத்து, சீட் பெல்ட்டைப் போட்டு விட்டான். மறுபக்கம் அவன் சென்று அமர்ந்து காரைக் கிளப்ப, அதுவரையிலும் தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட கேளாதவனின் மீது கோபப்பொறி எழுந்தது.
“அங்கிள் அம்மா ஏன் இன்னும் கிளம்பல?” எனக் கேட்டவள் அவன் பதில் கூறும் முன்னே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து “அம்மா வாங்க நம்ம சேர்ந்து போகலாம்…” என்று அழைத்தாள்.
அவன் அழைக்காமல் எதற்கு செல்ல வேண்டும் என்ற ஈகோ தலைதூக்க, “வேணாம் மகி. நீ அங்கிள் கூட போ. அம்மா ஈவ்னிங் வரேன்” எனக் கூறி விட்டு இறுமாப்புடன் நிற்க, பிரஷாந்தும் என்ன ஏதென்று கேளாமல் கிளம்பியே விட்டான்.
அந்நேரம் கேபும் புக் ஆகி இருக்க, அருகிலேயே இருந்ததனால் இரு நிமிடத்தில் காரும் வந்து விட்டது. ஆனால் எதையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
முதன்முறை அவளை ஒதுக்கி விட்டு சென்றதனாலோ என்னவோ தேவையற்று உள்ளம் குமுறியது.
‘இவனுங்க காதலெல்லாம், நம்ம உருகுறது தெரியிற வரை தான். தெரிஞ்சுட்டா நம்ம தேவையில்லாத ஆணி தான்…’ என ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும் திட்டித் தீர்த்தாள்.
திடீரென தனித்து விடப்பட்டது போல, அவளையே சுற்றிக் கொண்டிருந்த நேர்மறை எண்ணங்களெல்லாம் அவளை ஏதோ ஒரு தீயில் தள்ளுவது போல என்னன்னவோ வலியெல்லாம் எழுந்தது.
இதுவரை கத்தி அழ வேண்டுமென்று தோன்றியதில்லை. இப்போது அழத் தோன்றியது. அவன் அவளை கடந்து சென்ற இந்த ஐந்து நிமிடங்களுக்குள் அழுத்தத்தில் இருந்த வாழ்வு கூட சூன்யமாகி விட்டதாக தோன்றியது.
கார் ஓட்டுநர் அழைப்பது கூட செவியினுள் விழுகாத வண்ணம், எண்ணமெல்லாம் பிரஷாந்த்தே நிறைந்திருந்தான்.
மகளை ஐந்து நிமிடத்தில் பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டான் பிரஷாந்த்.
வாசலில் எங்கோ வெறித்தபடி நின்ற மனையாளையும், அவளை அழைத்து ஓய்ந்த கார் ஓட்டுனரையும் பார்த்தபடி காரை விட்டு இறங்கி, கேபை கிளம்பச் சொல்லி விட்டு, அவளருகில் வந்தான்.
“மைலி!”
ஒவ்வொரு முறையும் அப்பெயரை ஊனுருக அவன் அழைக்கும் விதம் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் இனிமையைக் கொடுக்கும். இப்போதும் அந்த இனிமை சுட்டதில், சட்டென நிகழ்விற்கு வந்தவள், அவன் தனக்கு வெகு அருகில் நிற்பதை கண்டு திகைத்து வேகமாக போனைப் பார்த்தாள்.
கேப் கேன்சல் செய்ததற்கான குறுஞ்செய்தி வந்திருக்க, ‘ச்சை’ எனத் தன்னையே திட்டிக்கொண்டவள், “நீ எதுக்கு வந்த? கண்டுக்காம போன தான…” என விழி சிவக்க ஆத்திரத்துடன் கேட்டாள்.
அவளை கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன், வாசற்கதவை மூடி விட, அவன் கையை உதறினாள்.
“தொடாத என்னை!” பைத்தியம் பிடித்தவள் போல கத்தினாள்.
“நான் உன்னைத் தப்பா தொடலையே… இப்ப ஏன் இவ்ளோ கோபம் என்மேல. நான் என்ன செஞ்சேன் மைலி. உன் கைல கிஸ் பண்ணது பிடிக்கலையா? பிடிக்கலைன்னா என்னை அடிக்கக் கூட செய்டி. இனிமே கண்டிப்பா அப்படி செய்ய மாட்டேன். அதுக்காக ஏன் என்னை அவாய்ட் பண்ற?
காதல் குடுக்குற வலி என்னன்னு உனக்குத் தெரியும் தான. தெரிஞ்சும் ஏன்டி எனக்கும் அதைத் திருப்பித் திருப்பிக் குடுக்குற. என்னை வெறுத்துப் பிடிக்கலைன்னு ஒதுக்கிட்டா கூட அதை ஒரு வகைல ஏத்துப்பேன். என் கஷ்டமும் என் வருத்தமும் உன்னை பாதிக்குதுன்னா, உன் மனசுல என் மேல ஒரு டிராப் ஆஃப் அன்பு கூட இல்லைன்னு என்னால எப்படிடி ஒத்துக்க முடியும். அந்த சிங்கில் டிராப் ஆஃப் அன்பை உணர்ந்ததுனால தான், உங்கிட்ட வம்பு பண்ணேன், கிஸ் பண்ணேன். அது தப்புன்னா சாரிடி. உன்னை ஹர்ட் பண்ணிட்டேனோன்னு இந்த ரெண்டு நாளா என்னை நானே ப்ளேம் பண்ணி, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குடி. ப்ளீஸ், எனக்கு இந்த தண்டனை வேணாம் மைலி!” தனது கம்பீரம் முழுதையும் தொலைத்து அவளிடம் கெஞ்சும் தொனியில் கேட்டான் பிரஷாந்த்.
வெகு சில நிமிடங்களாக அவனையே வெறித்தாள் மைதிலி.
ஏன் இப்படி பார்க்கிறாளென்றே புரியாதவனாக, “உன்னைக் கண்டுக்காம போகலடி. பேபியை ஸ்கூல்ல டிராப் பண்ணத் தான் போனேன். உங்கிட்ட பேசணும்னு தான் உன் ஸ்கூட்டியை பஞ்சராக்குனேன். உன்னை விட எனக்கு என் ஈகோ பெருசு இல்ல மைலி…” என அவளுக்குப் புரிய வைத்து விட முயன்றான்.
ஈகோ மட்டுமா பெரிதில்லை? அவளுக்கு முன் அவனது சிறு சிறு சந்தோஷங்கள் கூட அவனுக்குப் பெரிதில்லை தானே. என்ன தவறு இழைத்து விட்டானென்று தன்னிடம் இப்படி கெஞ்சிக்கொண்டிருக்கிறான்… ஏன் தான் இவன் இப்படி இருந்து தொலைக்கிறானோ என்று ஆதங்கமாக இருந்தது அவளுக்கு.
“என்னை விட்டுப் போய்டு பிரஷாந்த்!” சலனமற்று அவளிடம் இருந்து வந்தது உயிரைக்கொல்லும் வார்த்தை.
மின்சாரம் தாக்கியது போல ஒருகணம் துடித்தவன், “மைலி…” எனத் தேய்ந்த குரலில் அழைக்க, அவளோ வெடித்தாள்.
“போன்னா போவேன்டா!”
“நான் கிஸ் பண்ணது தான் பிரச்சனையா மைலி. அதான் இவ்ளோ கோபமா?” மீண்டும் மீண்டும் கேட்டான் அவன். இப்போது அவன் விழிகளில் நீர் தேங்கி இருந்தது.
அவனுக்கு என்ன காரணம் உரைப்பதென்று தெரியாமல் திணறும் போதே, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“இனிமே சத்தியமா விளையாட்டுக்கு கூட உன்னைத் தொட மாட்டேன் மைலி. உன் நிழலைக் கூட தொட மாட்டேன். என்னைப் போக மட்டும் சொல்லாதடி. எங்க போவேன் நானு. தெரியல மைலி. உங்கிட்ட என்னை மொத்தமா தொலைச்சுட்டேன். உங்கிட்ட தொலைஞ்ச என்னை பிரிச்சு அனுப்பனும்னா, அதுக்கு என் ஆன்மா கூட அனுமதிக்காது மைலி. உன்கூடவே இருந்துட்டு மகிக்கு அப்பாவாவே செத்துடுறேன் மைலி. ப்ளீஸ்டி…” ஆறடி ஆண்மகனுக்குரிய ஒட்டுமொத்த ஈகோவையும் அவளது காலடியில் சமர்ப்பித்து இருந்தவனது கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தை தொட, கிட்டத்தட்ட அவளிடம் யாசகம் கேட்டான் அவன்.
அவனது செயலில் அதிர்ந்து நின்ற மைதிலியால் அசையக்கூட இயலவில்லை. ரகுவிடம் ஒரு முறை இதே போல கெஞ்சியதும், அவன் அதனை உதாசீனப்படுத்தியதும் நினைவடுக்குகளில் படமாக, இப்போது தானும் ஒருவனை அதே நிலைக்குத் தள்ளுகிறோம் எனப் புரிந்து பதறி விலகினாள்.
விழிகளை அங்கும் இங்கும் உருட்டி மூச்சு வாங்கத் திணறியவளுக்கு என்ன செய்ய, என்ன பேச எதுவும் தெரியவில்லை. வேகமாக அங்கிருந்து நகன்று அடுக்களைக்குச் சென்று அடுப்பு மேடை மீது கையை ஊற்றி நின்றாள்.
கீழுதட்டை அழுந்தக் கடித்து அழுகையை அடக்க முயன்றவளுக்கு முடியவில்லை. கண்ணீர் பொலபொலவெனக் கொட்டியது.
சத்தம் வராமல் அழ முயன்றும் அந்த முயற்சியும் தோற்றுப் போக, விசும்பும் சத்தம் மெலிதாய் வெளிவந்தது.
அவள் சென்றபின்னும் முட்டியிட்ட நிலையில் இருந்து மாறாதவனாக காதல் வலியில் துவண்டிருந்தான் பிரஷாந்த்.
வேதனையுடன் எச்சிலையும் விழுங்கியவனுக்கு விழிநீர் நின்றபாடில்லை. உள்ளே இருந்து மைதிலி விசும்பும் சத்தம் கேட்க, விருட்டென எழுந்து அடுக்களைக்குச் சென்ற பிரஷாந்த், அவள் நின்று அழுத கோலம் கண்டு உடைந்து போனான்.
“அழாத மைலி… எனக்கு கஷ்டமா இருக்கு. என் ப்ரெசன்ஸ் உனக்கு அவ்ளோ வெறுப்பா இருக்கா” என்னும் போதே கீழே அமர்ந்து கதறி அழுதாள் மைதிலி.
அவளைத் தொட்டு ஆறுதல் கூறவும் பயந்து, அதே நேரம் அவள் அழுவதை வேடிக்கைப் பார்க்கவும் இயலாதவனாக, தன்னுடைய இயலாமையை எண்ணி தன்மீதே சினம் பெருக, செய்வதறியாமல் பக்கவாட்டு சுவற்றில் அவன் தலையை அவனே முட்டினான் நங்கென.
அதில் பதறிய மைதிலி, “பிரஷாந்த் என்ன பண்றீங்க” என்று எழுந்து விட,
“நீ அழுகுறதைப் பார்த்து எதுவும் செய்ய முடியாம நிக்கிறேன்ல. உன் கண்ணீரைக் கூட துடைக்க முடியாத ஒண்ணுத்துக்கும் உதவாத காதல் என்னோடது. ஐ ஜஸ்ட் ஹேட் மைசெல்ஃப்” என்று மீண்டும் சுவற்றில் முட்ட, “ஐயோ” எனத் தடுத்தாள்.
“டேய் பைத்தியம் பிடிச்சுருக்காடா உனக்கு… நெத்தி புடைச்சுப் போச்சு. இதுக்கு மேல முட்டுனா மண்டை உடைஞ்சுடும்” என்று அவனது கன்னத்தைப் பற்றிக் கொண்டவளிடம்,
“என்னை தான் போக சொல்லிட்டியே. எனக்கு என்ன ஆனா தான் உனக்கு என்ன?” எனச் சிவந்த விழிகளுடன் சாடியவன், “உனக்கு என்ன தான் பிரச்சனை மைலி” என்றான் தளர்ந்து.
இன்னும் கூட அவன் கன்னத்தில் இருந்து கையை எடுக்காதவள், “நீ தான் என் பிரச்சனை. உன் காதல் தான் பிரச்சனை. உன் அன்பு தான் பிரச்சனை. உன் சிரிப்பு தான் பிரச்சனை. உன் கண்ணீர் தான் பிரச்சனை. நீ என் கூட இருக்குறதே பிரச்சனை. என்னை அன்பால சாவடிக்கிறதே பிரச்சனை. ஐயோ! எனக்கு நீ தான்டா பிரச்சனை” என்றவளின் கரங்கள் இப்போது அவன் சட்டையைப் பிடித்து இருந்தது.
“நான் போய்ட்டா உன் பிரச்சனை சரி ஆகிடுமா மைலி. என் நினைப்பே உனக்கு வராதா? வெறும் பாசிங் க்ளவுடா என்னை மறந்துடுவியா? மறந்துடுவேன்னு சொல்லு. நான் போயிடுறேன்” வேதனை மிகுந்த குரலில் அவன் கேட்க,
அவளோ விழி இடுங்க அவனை நெருங்கி, “மறந்துடுவேன்” எனத் திட்டவட்டமாகக் கூறியதில், அவன் முகத்தில் அப்பட்டமான வலி.
“நீ என்னைக் கடந்து போற வெறும் அஞ்சு நிமிஷத்துக்கே என்னை நானே மறந்து போய் புத்தி பேதலிச்சுப் போறேன். நீ மொத்தமா போய்ட்டா, என்னை நானே மறந்துடுவேன்டா.
நீ கூட இருக்குற ஒவ்வொரு செகண்டும் எனக்கு உயிர்ப்பு குடுத்துக்கிட்டே இருக்க.
நீ நீ… என் என்… என் மேல காட்டுற அன்புல எனக்குள்ள புதைஞ்சு போன ஆசையும், எதிர்பார்ப்பும் மேலெழும்பி நின்னு என்னை ஆட்டிப்படைக்குது பிரஷாந்த். அதெல்லாம் நடக்க நடக்க ரகு… ரகு… என்னைக் கேவலமா பேசுற மாதிரியே தோணுது” என்றவளுக்கு குரல் தேய்ந்தது.
பிரஷாந்த் தான் அதிர்வில் சமைந்து நின்றான். அவளுக்குள் தனது காதல் ஏற்படுத்திய மாற்றம் நலம் தான் என்றாலும், அவள் அதனால் வெகுவாய் பாதிக்கப்படுகிறாளென இப்போது புரிந்தது.
அவளோ பேசக் கூட மூச்சிரைத்து, பித்துப் பிடித்தவள் போல உளறினாள்.
“நீ… நீ… என் கைல கிஸ் பண்ணப்ப கூட எனக்கு அது பிடிக்கலைன்னா உதறி தள்ளிருப்பேன். ஆனா ஆனா நீ காட்டுற காதலும் நீ என்கிட்ட எடுத்துக்குற உரிமையும் அக்கறையும் எனக்கு எனக்கு நிறைய எதிர்பார்ப்பை குடுக்குது. நான்… நான் நீ பக்கத்துல வந்தாலே மெல்ட் ஆகிடுறேனோன்னு தோணுது.
எனக்கு எப்படி சொல்லன்னு தெரியல பிரஷாந்த்… நான் நான் நான்… நீ தொட்டா கூட வீக் ஆகிடுறேனோன்னு, என் உடம்பு அவ்ளோ வீக்கான்னு ரகு என்னை என்னை உள்ள இருந்து டார்ச்சர் பண்றான் பிரஷாந்த். எனக்கே கூட தோணுது. அவனை லவ் பண்ணிட்டு, அவனுக்கு பொண்டாட்டியா இருந்துட்டு இன்னொருத்தனோட காதலுக்கு எப்படி முழுமனசா இந்த உடம்பும் மனசும் ஒத்துக்குதுன்னு எனக்கே கேவலமா இருக்கு. நீயும் என்னை அப்படி நினைப்ப தான…” என விழியில் நீர் தளும்ப பரிதாபமாகக் கேட்டவளை கண்டு நொறுங்கிப் போனான்.
“ஜஸ்ட் ஸ்டாப் திஸ் மைதிலி…” பிரஷாந்த் பொறுமலுடன் அவளை நிறுத்த முயல, அவள் நிதானத்திலேயே இல்லை.
“நினைச்சுருப்ப! அன்னைக்கு கிஸ் பண்ணப்ப நான் சும்மா இருந்தப்பவே நினைச்சு இருப்பல்ல. இவளோட பிடிவாதம் அவ்ளோதான். புருஷன் இல்லாதவ தான தொட்டுட்டா கரைஞ்சுடுவான்னு நினைச்ச தான…” என்று உதட்டைப் பிதுக்கி கேட்க, ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
உயிர் வளரும்
மேகா
🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
அடியே ஏன் டி இப்படிலா பேசுற 😔😔😔😔😔😔