தெம்மாங்கு 16
அன்புக்கரசனின் வாரிசு பற்றிய தகவல் கௌரவ நண்பர்களுக்குத் தெரிய வந்தது. அன்று காரில் செல்லும் அவர்களைப் பின்தொடர ஆள்களை அனுப்பி இருந்தார் பேச்சியப்பன். என்னவோ இருக்கும் என்று எதிர்பார்த்த கௌரவ நண்பர்களுக்குப் பேரிடியாக இருந்தது. அதிலும் பொன்ராசுவின் கோபம் எக்குத்தப்பான நிலைக்குச் சென்றது. தன் மகனை அழைத்தவர் விஷயத்தைக் கூற,
“அவ தாலி கட்டிக்கிட்டதை விட, இது பெரிய அசிங்கம். ஓடிப்போய் கல்யாணம் பண்ணதைப் பார்த்த மாதிரி இதையும் வேடிக்கை பார்க்கக் கூடாதுப்பா. கருவுலயே அந்தக் குழந்தையை அழிச்சிட்டு, நம்ம வீட்டுக்கு அந்தக் கழுதையைக் கூட்டிட்டு வருவோம்.” என்றான்.
“அவ சம்பந்தம் இல்லாம எப்படி குழந்தையை அழிக்க முடியும்? இதைக் கொஞ்சம் பொறுமையா தான் முடிக்கணும்.”
“இல்ல மாமா, பொறுமையா இருக்க முடியாது. அவன் குழந்தை நாளுக்கு நாள் வளர்ந்து எங்க முன்னாடி உசுரோட நிக்கும். ஏற்கனவே அந்த அசிங்கம் பிடிச்சவ பண்ண வேலையால, எங்க அப்பாக்கு ஊருக்குள்ள இருந்த மரியாதையே போயிடுச்சு. இப்பப் புருஷன் இல்லாம, செத்துப் போனவன் புள்ளையச் சுமந்துக்கிட்டு இன்னும் அசிங்கப்படுத்தப் பார்க்குறா. அவளை அவன் செத்த அன்னைக்கே தரதரன்னு இழுத்துட்டு வந்திருக்கணும். இவர்தான் கொஞ்ச நாள் போகட்டும்னு வாயை அடைச்சுட்டாரு.”
“போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருக்கோம் கருப்பா. அவசரப்பட்டு நீ பண்ண வேலையில இருந்து உன்னைக் காப்பாத்த ரொம்பப் போராடிட்டேன். இதுலயும் எங்களை மாட்டி விட்டுடாத.”
“உங்க பொண்ணு இப்படிப் பண்ணி இருந்தா தான் எங்க வருத்தம் புரியும் மாமா.”
“என் நண்பன் குடும்பம் வேற, என் குடும்பம் வேறன்னு நினைச்சதில்ல. அவனோட அசிங்கத்தை, என்னோட அசிங்கமா நினைச்சதால தான் அவசரப்பட்டு நீ பண்ண வேலையை மறைக்க, பணத்தை அள்ளிக் கொட்டி இருக்கேன்.” என்ற பேச்சியப்பனைப் பார்ப்பதைத் தவிர்த்தார் பொன்ராசு.
“நீங்க என்னப்பா சொல்றீங்க?”
“அவன் குழந்தை என் வாரிசா இருக்கக் கூடாது. அந்தக் குழந்தையை அழிச்சிட்டு அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றது தான் சரி.”
“என்ன பொன்ராசு, நீயும் புரியாம பேசிட்டு…”
“பொட்டப் புள்ளையப் பெத்து மொத்த கௌரவத்தையும் காவு கொடுத்து இருக்கேன் பேச்சி. இந்தப் பிள்ளை, எல்லாத்தையும் விடப் பெரிய அவமானம் எனக்கு. இதுல என் மகன் முடிவு தான் சரின்னு படுது.”
“கொலை பண்ண ஆள் அனுப்புன உன் மகன் மேல, யாரோட பார்வையும் கொஞ்ச நாளைக்கு விழாம இருக்குறது தான் நல்லது. அதுக்காகத்தான், பணத்துக்காக வேலை செய்ய வந்தவங்களையே குற்றவாளியா மாத்தி உள்ள உட்கார வச்சிருக்கோம். இந்த விஷயத்துல தலையிடப் போய் எல்லாம் நம்ம கையை மீறி நடந்துடப் போகுது.”
“பயந்துட்டியா பேச்சி?”
“எனக்கு என்ன பயம்? கஷ்டப்பட்டு மூடி மறைச்சு வச்சதை நம்மளே தொறந்து காட்டிடக் கூடாதுன்னு சொல்றேன். என் மகன் முன்ன அந்த வீட்டுப் பக்கமே வராம இருந்தான். முக்கியமா வழக்கு சம்பந்தமா அவன் தலையிடவே இல்லை. இப்போ எந்நேரமும் அங்கதான் இருக்கான். நண்பனை விட்ட மாதிரி அவன் வாரிச அவ்ளோ சாதாரணமா விடமாட்டான்.”
பேச்சியப்பன் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை மகன் இருவரும் கண்களால் பேசிக் கொள்ள, “அடுத்த முறை ஆஸ்பத்திரிக்குப் போகும்போது உன் பொண்ணுக்கே தெரியாம அந்தக் குழந்தையைக் கலைக்கப் பார்க்கலாம். அதுவரைக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க.” என்றவரின் வார்த்தையைக் கேட்க விரும்பாத கருப்பன், தேனிசை தேவியை அழைக்கப் புறப்பட்டான்.
தடுத்து நிறுத்துமாறு பொன்ராசைச் சொல்லியும் கேட்கவில்லை அவர். மகனுக்குப் பின்னால் அவரும் கிளம்ப, வேறு வழி இல்லாமல் பேச்சியப்பனும் கிளம்பினார்.
***
பிள்ளையைப் பார்த்த மகிழ்வோ என்னவோ, முதல் முறையாக மயக்கம் வருவது போல் இருந்தது தேனிசைக்கு. சோர்வில் படுத்து விட்டாள். படுத்த சிறிது நேரத்திலேயே குமட்டல் உண்டானது. எழுந்து அமர்ந்தவள், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே ஓட, சத்தம் கேட்டு வெளியில் வந்த மாணிக்கம் அவளைத் தாங்கிப் பிடித்தார்.
பிள்ளையைப் பெற்றெடுக்கப் போகும் உடம்பு, வாந்தி எடுக்கத் தயாரானது. சாப்பிட்ட தோசை மொத்தமும், வயிற்றை விட்டு வெளியேறிவிட்டது. சோர்ந்து, முகத்தைக் கழுவிக் கொண்டு திண்ணையில் அமர்ந்தவளுக்கு மீண்டும் குமட்டல். வேகமாக எழுந்து ஓடியவள் முன் நின்ற குமரவேலன் பதறிப் போனான்.
“என்னம்மா?” என அவளைத் தாங்கிப் பிடிக்க, “வாந்தியா எடுத்துட்டு இருக்கா ராசா.” கவலை கொண்டார் மாணிக்கம்.
“கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க தாத்தா, இதோ வந்திடுறேன்…”
அதிகம் வாந்தி வருவது போல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த ஒரு மாத்திரை எழுதிக் கொடுத்திருந்தார் மருத்துவர். அவரைச் சந்திக்கும் முன் வரை அப்படி ஒன்று வராததால், அந்த மாத்திரையை வாங்க வேண்டாம் என்று விட்டாள். அதை வாங்கத்தான் இப்போது ஓடுகிறான் குமரவேலன். அவன் இல்லாத நேரம் உள்ளே வந்த கருப்பன், கண்ட காட்சியில் ரத்தம் கொதித்தான்.
“அசிங்கம் பிடிச்சவளே! நீ எல்லாம் எப்படிடி என் அப்பனுக்குப் பொறந்த.” எனக் கூச்சலிட, அவனைக் கண்டு அரண்டு நின்றாள்.
வெடவெடத்துப் போன மாணிக்கம், “உள்ள வாம்மா” என அவளை அழைத்துச் செல்ல,
“அவளை எங்க கூட்டிட்டுப் போற? மரியாதையா கூட அனுப்பி வை.” என்றான்.
“எதுக்கு ராசா பிரச்சனை பண்ற? விதியேன்னு கம்முனு தான நாங்க இருக்கோம்.”
“ஏய் கிழவா! எங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறியா? அந்த அசிங்கம் பிடிச்சவன் பிள்ளையைப் பெத்துக்க நான் விடமாட்டேன்.”
இவ்வளவு சீக்கிரம் இவர்களுக்குத் தெரிந்து விடும் என்பதை எதிர்பார்க்காத அவ்விருவரும், திகைப்பு மாறாது நின்று இருக்க நண்பரோடு வந்து நின்றார் பொன்ராசு. அவர்களும் வந்த பின், சம்பந்தப்பட்ட இருவருக்கும் இன்னும் பயம் அதிகரித்தது. கத்திக் கொண்டிருக்கும் தன் மகனை அடக்கியவர்,
“இங்கப் பாரு, உனக்கும் எனக்கும் பிரச்சனை வேணாம். உன் பேரனே செத்துப் போயிட்டான். அவனோட பிள்ளை எதுக்கு? புருஷன் இல்லாம பிள்ளையைப் பெத்து இவ என்ன பண்ணப் போறா? இவளை என்கூட அனுப்பி வச்சிடு. இந்தக் குழந்தையைக் கலைச்சிட்டு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.”
“என் பிள்ளையைக் கலைக்க நீ யாருடா? இந்தக் குழந்தையைப் பெத்துக்கணுமா, வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியது நான். மரியாதையா வெளிய போயிடு, இல்லன்னா அசிங்கமாகிடும்.” என்றவளை நெருங்கிய கருப்பன்,
“என்னடி? நானும் பார்த்துட்டு இருக்கேன், ஓவராப் பேசிட்டு இருக்க. அப்பாவ மரியாதை இல்லாமப் பேசுற அளவுக்கு ஆளாகிட்டியா நீ… குடும்ப மானத்தை வாங்கிட்டுக் கத்தவா செய்யற…” என அவள் முடியைக் கொத்தாகப் பிடித்தான்.
“கருப்பா! அந்தப் பொண்ண விடு…”
“இதுல நீங்க தலையிடாதீங்க மாமா”
“விஷயம் வெளிய தெரியாம முடிக்கணும். அதனால தான் சொல்றேன் விடு.”
“எவன் என்ன பண்ணிடுவான்? எங்க அப்பா மானத்தை வாங்குன இவளையும், இவ வயித்துல வளர்ற குழந்தையையும் அழிக்காம விட மாட்டேன்.”
“எப்பா… விடுப்பா. உன் கூடப் பொறந்தவளை இவ்ளோ கொடுமை பண்றியே. என் பேரனை தான் கொன்னுட்டீங்க, அவன் வாரிசையாவது விட்டு வையுங்க. வயித்துப் பிள்ளையோட இருக்கற பொண்ணைச் சித்திரவதை பண்ணாதப்பா. ஏற்கனவே புருஷனை இழந்துட்டு அனாதையா நிற்கிறா. எங்களை விட்டுடுங்க, நாங்க எங்கயாவது கண் காணாத தேசத்துக்குப் போயிடுறோம்.”
“பொறுக்கி! விடுடா என்னை. கேஸ்ல இருந்து தப்பிச்சிட்டதா நினைச்சு தான இவ்ளோ ஆட்டம் போடுற. உன்னையும் உன் கூட நிக்கிற இவங்களையும், என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” எனப் பேசிக் கொண்டிருந்தவள் முடியை இன்னும் சுற்றி வளைத்து இறுக்கிப் பிடித்தவன்,
“அதுக்கு நீ உயிரோட இருக்கணும்.” எனப் பிடித்துக் கீழே தள்ளினான்.
முதியவர் ஓடிச்சென்று தாங்கிப் பிடித்துக் கொள்ள, “இவளை விட்டு வச்சா என்னைக்கா இருந்தாலும் ஆபத்து தான். கையக் கால உடைச்சி எந்திரிக்க முடியாம ஆக்கணும்.” என்றவன் தாக்க ஆரம்பித்தான்.
“ஏய் நாயே… விடுடா… விடு… என்னை விடுடா.”
கர்ப்பிணிப் பெண், தன் வயிற்றில் வளரும் சிசுவைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருக்க, விடுவதாக இல்லை அந்த அரக்கன். எப்படியாவது மகள் வயிற்றில் இருக்கும் அந்தக் குழந்தையை அழித்தால் போதும் என்று பொன்ராசு, உடன் உதவி செய்ய, மகனைக் கொல்லத் திட்டம் போட்ட அந்த அரக்கர்களின் உண்மை முகம் தெரியாமல், நண்பனுக்காகத் தவறுக்கு மேல் தவறுக்குத் துணை நின்றார் பேச்சியப்பன்.
மாணிக்கம், கௌரவ நண்பர்கள் காலில் விழுந்து கதற, “எல்லாம் உன்னால தான்டா கிழட்டு நாயே” அவரைப் பிடித்துத் தள்ளினார்கள்.
கீழே விழுந்தவர் தன் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல், தேனிசை தேவியைக் காப்பாற்றுவதற்கு ஓட, கத்திக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியை நாடினாள். அவள் கத்த ஆரம்பித்ததும் கருப்பனின் கோபம் இன்னும் அதிகமானது. மற்றவர்கள் வருவதற்குள், அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டிற்குச் செல்ல நினைத்தவன் காரில் ஏற்ற முயன்றான்.
கருப்பன் காலிலும் விழுந்த மாணிக்கத்தின் அழுகுரல் கேட்டு, ஊர் கூட ஆரம்பித்தது. தன் முடியைப் பிடித்திருக்கும் கயவன் கையைக் கடித்தவள் அங்கிருந்து ஓடினாள். ஊர் மக்கள் கௌரவ நண்பர்களிடம் சண்டை பிடிக்க, “இது எங்க குடும்ப விஷயம். இதுல தலையிட யாருக்கும் உரிமை இல்ல.” என்றனர்.
“என்னப்பா உரிமை இல்லை?” என ஓடியவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வந்த சந்தானம்,
“இப்ப எதுக்குத் திடீர்னு இந்தப் பொண்ண வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போறீங்க.” கேள்வி கேட்டார்.
சந்தானத்தைக் கையெடுத்துக் கும்பிட்ட மாணிக்கம், “ஏய்யா… இவங்ககிட்ட இருந்து என் பேரனோட வாரிசைக் காப்பாத்துய்யா. அவனத்தான் அநியாயமா கொன்னு இந்தப் பொண்ண விதவை ஆக்கிட்டாங்க. இப்போ ஒரு தப்பும் செய்யாத அந்தப் பிஞ்சுக் குழந்தையையும், மனசாட்சியே இல்லாம அழிச்சிட்டு வேற கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா சொல்றாங்க.” என்று கதறி அழுதார்.
சந்தானம், கௌரவ நண்பர்களுடன் சண்டை பிடிக்க, “யோவ்! இந்தப் பிரச்சனைக்கு நடுவுல நீ வராத. உன் பொண்ணு இந்த மாதிரி ஓடிப் போயி, தாலி கட்டுனவன் செத்துப் போனதுக்கப்புறம் பிள்ளைய வாங்கிட்டு நின்னா சும்மா இருப்பியா? அப்பா இல்லாத குழந்தை எதுக்குப் பிறக்கணும்? புருஷன் இல்லாம வாழுற வயசா என் பொண்ணுக்கு. பிள்ளையோட இருக்குறவளை எவன் கல்யாணம் பண்ணிப்பான்? பெத்த அப்பன் எனக்குத் தான் தெரியும் அந்த வருத்தம். இதுல யாராது தலையிட்டீங்க, யார் என்னன்னு பார்க்க மாட்டேன்.” என்றவர் சந்தானம் பக்கத்தில் நின்றிருந்த மகளை இழுத்தார்.
***
மாத்திரை வாங்கிக் கொண்டிருந்தவனை அழைத்தாள் தெய்வானை. அத்தை மகளின் பெயரைப் பார்த்ததும் எடுத்தவன் கதி கலங்கிப் போனான் அவள் அழுகையில். ஓரிரு நிமிடத்திற்குள் உடல் எல்லாம் நடுங்கியது. வாங்கிய மாத்திரைக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தவன்,
“என்ன தெய்வானை, எதுக்கு அழற?” விசாரித்தான்.
“உடனே உங்களைப் பார்க்கணும்.”
“என்னன்னு சொல்லு?”
“ப்ளீஸ் மாமா… எதுவும் கேட்காதீங்க. இப்பவே கிளம்பி நான் அங்க வரேன்.”
“என்னன்னு சொல்லு?”
“அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கப் போறதா சொல்றாரு மாமா.”
“என்னவாம் அந்த ஆளுக்கு? அதான் அன்னைக்கு வந்து பேசிட்டுப் போனேன்ல.”
“எனக்கு உங்களை உடனே பார்க்கணும் மாமா. நம்ம வீட்டுக்கே நான் வந்திடுறேன். அப்பாகிட்டப் பேசுங்க. ஒத்துக்கிட்டா திரும்ப வீட்டுக்குப் போவேன். இல்லன்னா அங்கயே இருந்திடுறேன்.”
அவன் சொல்லியும் கேட்கத் தயாராக இல்லாதவள் கிளம்புவதில் குறியாக இருக்க, அவன் இருக்கும் இடத்திலிருந்து தெய்வானையின் ஊர் பக்கம் என்பதால், ஊர் எல்லைக்கு வரச் சொல்லி இருந்தான். மாமன் தன் அண்மையில் இருக்கும் தைரியத்தில் கிளம்பியவள், அவனைப் பார்க்கும் வரை அழுகையை நிறுத்தவில்லை.
என்ன நடந்தது என்று தெரியாமல், தலை வலியில் தவித்துக் கொண்டிருந்தவன் முன் நின்றவள், “மாமா…” என அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“நீங்க பேசிட்டுப் போனதுக்கு அப்புறம் கல்யாணத்தைப் பத்தி எதுவும் பேசாம தான் இருந்தாரு. உங்க ஃப்ரெண்ட் இறந்ததுல இருந்து உங்க விஷயம் எல்லாம் தெரியும் போல. நேத்து அம்மா கூட ஒரே சண்டை. அம்மாவும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டாங்க. அப்பா கேட்கிற மாதிரித் தெரியல. உங்களைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் மாமா. எப்படியாது அப்பாவச் சமாதானப்படுத்துங்க ப்ளீஸ்.”
“அவர் வேணாம்னு சொல்லிட்டா, வேற ஒருத்தனோட உனக்குக் கல்யாணம் ஆகிடுமா? இந்த விஷயத்துல மாமா நினைக்கிறது என்னைக்கும் நடக்காது. நீ என் பொண்டாட்டி. உன் கழுத்துல தாலி கட்டுற தைரியம் என்னைத் தவிர எவனுக்கு வரும்?”
“அப்படி ஒரு நிலைமையை என்னால தாங்கிக்க முடியாது மாமா. உங்களைத் தவிர வேற யாரைப் புருஷனா ஏத்துக்கச் சொன்னாலும் செத்துப் போயிடுவேன்.”
அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன்,
“ஏய்… ச்சீ! என்ன வார்த்தை பேசுற? இன்னொரு தடவை இந்த மாதிரி வார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது. ஒரு உயிரோட மதிப்பு, கொடுத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது. என்ன நடந்தாலும் உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும்.” கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“அப்பாவை மீறி என்ன செய்ய முடியும்னு பயமா இருக்கு மாமா. என்னால உங்களை மறந்துட்டு வாழ முடியாது. நம்ம கல்யாணம் எப்படி நடந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அப்பாகிட்டப் பேசிப் பாருங்க, இல்லனா வீட்டை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம்.”
“அப்படி ஒரு நிலைமை வராது. உன் அப்பா சம்மதிச்சாலும், சம்மதிக்கலனாலும் ரெண்டு குடும்பமும் சேர்ந்து நம்ம கல்யாணத்தை நடத்தும். அவர் விருப்பம் இல்லாம ஓரமா ஒதுங்கி நிப்பாரு, அவ்ளோதான். தாலி கட்டுற வரைக்கும் தான் இந்தப் பிரச்சனை எல்லாம். அதுக்கப்புறம் மாமா நம்ம விஷயத்துல இருந்து விலகிடுவாரு.”
“நிஜமா அப்பாவால எந்தப் பிரச்சனையும் வராதுல மாமா”
“சத்தியமா வராது.” எனத் தெய்வானையைச் சமாதானம் செய்தவன் வீட்டிற்குக் கிளம்பச் சொல்ல,
“நம்ம வீட்டுக்கு வரேன்.” எனப் பிடிவாதம் பிடித்தாள்.
பலமுறை அவன் வீட்டிற்கு வருபவள், வருங்காலத்தில் உரிமை இல்லாமல் தான் வருவோம் என்பதை அறியாது அவனோடு இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து மலைக்குச்சியை நோக்கிப் பயணித்தாள்.
தந்தை செய்த கலவரத்திலிருந்து கலங்கிப் போனவள் மனம் லேசானது. மாமனோடு இருக்கும் தருணத்தை மன நிறைவாக ரசித்தாள். சாலை மீது கண் இருந்தாலும், பின்னால் வருபவளின் சிரிப்பைக் கண்ணாடி வழியாக ரசிக்கத் தவறவில்லை குமரவேலன். சில நாள்களாக இருந்து வந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தது போல் இருந்தது, தோள் மீது கை வைத்த அவள் விரல்களின் பரிசத்தால்.
அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்வை எதிர்கொள்ளத் தயாராகியவன், ஊருக்குள் வந்ததுமே புருவம் சுருக்க ஆரம்பித்தான். வாகனத்தின் வேகத்தை அதிகரித்தவனைத் தடுத்து நிறுத்திய ஒருவர், விஷயத்தைக் காதில் போட, ராக்கெட் வேகத்தில் கிளம்பினான்.
மாமன் வேகத்தில் மிரண்டவளைக் கணக்கில் கொள்ளாது ஊர் மத்திக்கு வர, இந்திராவும், முத்துமாரியும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும், மாமன் தோளில் தட்டி வண்டியை நிறுத்தச் சொல்ல, நண்பன் மனைவியைப் பார்ப்பதில் மட்டுமே அவன் கவனம் இருந்தது.
ஊருக்குள் நடக்கும் கலவரத்தை அறிந்த பவானி, தன் தோழிக்கு அழைப்பு விடுத்து, “என் பொண்ண இந்த நாசமாப் போறவனுங்க, கொல்லாம விட மாட்டாங்க போல அண்ணி. அவளை அடிச்சு இழுத்துட்டு வரப் போயிருக்கானுங்களாம். இப்பதான் பால் கறக்குற அண்ணன் வந்து சொல்லிட்டுப் போறாரு. உங்க பையன்கிட்டச் சொல்லி என் பொண்ணக் காப்பாத்தச் சொல்லுங்க.” ஒப்பாரி வைத்தார்.
“என்ன பவானி சொல்ற?”
“தேனிசை மாசமா இருக்கா அண்ணி. அந்த விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டு பிரச்சனை பண்றானுங்க.”
“முதல்ல நீ அங்க போ… நானும் அத்தையும் பின்னாடியே வரோம்.” என்றவர் பலமுறை மகனை அழைத்து விட்டார்.
அன்னையோடு பேச விரும்பாதவன் அழைப்பை எடுக்கவில்லை. இருசக்கர வாகனத்தைக் கல் ரோடு உரச தொப்பென்று விட்டவன், கூட்டத்தைக் கண்டு பதறி ஓட, “அந்தப் பொண்ணு ஒரு வாழ்க்கையை விருப்பப்பட்டு ஏத்துக்குச்சு. இப்போ அது பாதியிலயே முடிஞ்சு போச்சு. வாழ்க்கையை இழந்த பொண்ணுக்குப் பாதுகாப்பா இருக்காம, அந்தக் குழந்தையை அழிக்க நினைக்கிறது மகாபாவம். நீங்க என்ன பண்ணாலும் பார்த்துட்டு இருப்போம்னு நினைக்கிறீங்களா? அந்தப் பொண்ண விட்டுட்டுப் போங்க.” என ஒற்றை ஆளாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார் சந்தானம்.
ஊரே வேடிக்கை பார்க்க, ஒருவன் மட்டும் தங்களை எதிர்த்துப் பேசுவதைப் பொறுக்காத கருப்பன், வயதானவர் என்றும் பார்க்காமல் கன்னத்தில் ஓங்கி அடித்து விட, “ஏய்ய்ய்!” எனப் பாய்ந்து வந்தவன் அவன் நெஞ்சில் எட்டி உதைத்தான்.
வாங்கிய அடியை உணரச் சில நொடிகள் தேவைப்பட்டது சந்தானத்திற்கு. அவர் வீட்டு ஆள்கள் அடித்ததற்காக அவன் தந்தையிடமும் சண்டை பிடிக்க, எட்டி உதைத்தவன் சட்டைக் காலரைப் பிடித்து நிற்க வைத்து, “யாரடா அடிக்கிற?” என ஓங்கி ஒன்று பதிலுக்கு வைத்தான்.
குமரவேலனைப் பார்த்ததும் ஓடிவந்த மாணிக்கம், “இந்தப் பொண்ண சித்திரவதை பண்றாங்க ராசா. இவளையும் உன் நண்பனோட குழந்தையையும் காப்பாத்து.” என்ற போது தான் தேனிசை தேவியைப் பார்த்தான்.
வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. ஆடை கிழிந்து அலங்கோலமாக நிற்க, அவளை நெருங்காதபடி பொன்ராசுவின் ஆள்கள் பிடித்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தாள். பவானி அழுதபடி மண்ணை வாரிக் கணவன் மீது அடிக்க, அங்கிருந்த பெரியவர்கள் கௌரவ நண்பர்களிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர்.
“விதவையா இவ வாழவா பெத்து சொகுசா வளர்த்தேன்? ஆசைப்பட்டு அப்பன மதிக்காமப் போனதுக்கு தான் தாலிய அறுத்துட்டு நிக்கிறா. இப்ப அப்பன் வயித்தெரிச்சலோட இந்தப் பிள்ளையப் பெத்துகிட்டா இதுவும் செத்து தான் போகும். ஒழுங்கு மரியாதையா எல்லாரும் சேர்ந்து என் பொண்ண வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க.”
“இப்படி வலுக்கட்டாயமா உன் பொண்ணக் கூட்டிட்டுப் போறது தப்புய்யா” என்ற முத்துமாரியை ஆக்ரோஷமாகப் பார்த்தவர்,
“எல்லாம் உன் பேரனால வந்தது. அவன் மட்டும் அந்தப் பரதேசி கூடச் சேராம இருந்திருந்தா இது எதுவுமே நடந்திருக்காது. ஒத்தப் பொண்ணப் பெத்து விதவையாப் பார்க்குறதே கொடுமை. இதுல வயித்துப் பிள்ளையோட எப்படிப் பார்ப்பேன். ஒரு பெரிய மனுஷியா, அந்தக் குழந்தையைக் கலைச்சிட்டு அப்பன் கூட வந்து இருக்கச் சொல்லு.” என்றிட,
“கொஞ்சம் பொறுமையா இருங்க அண்ணா” என்றார் இந்திரா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கருப்பனை அடித்துத் துவைத்தவன், தேனிசை தேவியைக் காப்பாற்ற ஓடினான். அவன் செல்வதைப் பார்த்த கௌரவ நண்பர்களும், கருப்பனும் ஓடிவந்து தடுத்தனர். தேனிசை தேவிக்கு ஆதரவாக மாணிக்கமும், சந்தானமும் நடுவில் போராட, தெய்வானை உச்சகட்ட பயத்தில், பேச்சியப்பனிடம் மாமனை விடுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் கலவரத்தை ஊர் மொத்தமும் ஒன்று கூடித் தடுத்து விட்டனர். கௌரவ நண்பர்களிடமிருந்து பிரிந்த குமரவேலன், கருப்பனிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். யார் கெஞ்சியும் கேட்காதவர்கள் தேனிசை தேவியை அழைத்துச் செல்வதில் குறியாக இருக்க, “உங்ககிட்ட மாட்டி என் பொண்ணு கஷ்டப்படுறதுக்குப் பதிலா எங்கயோ நிம்மதியா வாழ்ந்துட்டுப் போகட்டும். அவளை விட்டுடுங்கடா பாவிங்களா…” என்ற பவானியை அடித்த பொன்ராசு,
“இன்னைக்கு வேணா நீங்க எல்லாரும் காப்பாத்தலாம். என்னைக்கா இருந்தாலும் இதே இடத்துல அந்தக் குழந்தையை வெட்டிப் பிணமா போடுவேன். அப்படி ஒரு நிலைமைக்கு ஏன்டா தள்ளுனோம்னு அப்ப வருத்தப்படுவீங்க.” என்ற வார்த்தை குமரவேலனின் மூளையைச் செயல் இழக்க வைத்தது.
இதுதான் சமயம் என்று அவனை அடித்து வெளுக்க ஆரம்பித்தான் கருப்பன். மகன் அடி வாங்குவதைப் பார்த்த பேச்சியப்பன் தடுத்து விட, மொத்த ஊரிடமும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார் பொன்ராசு. ஸ்தம்பித்து நின்றவனைத் தன் வீட்டுப் பெண்களிடம் ஒப்படைத்த பேச்சியப்பன், தேனிசை தேவியின் கையைப் பிடித்து இழுத்து நண்பன் கையில் கொடுத்து,
“என் பையன அடிச்சி வீரத்தக் காட்டாம, முதல்ல உன் பொண்ண இழுத்துட்டுப் போய் வீட்ல அட.” என்றார்.
“விடுங்கடா என்னை. தாத்தா… டேய்… விடுங்கடா.”
எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடிக் கொண்டிருந்த அவளின் மீது, சிறிதும் கருணை வராத அந்த அரக்கர்கள் தரதரவென்று இழுத்துச் சென்றனர். மாணிக்கத்தையும் சந்தானத்தையும் சிலர் பிடித்துக் கொண்டதில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த விஷயத்தில் தலையிட்டுத் தன் மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று இந்திரா வீட்டுக்கு அழைத்துச் செல்ல இழுக்க,
“உன் அன்பு பிள்ளையைக் காப்பாத்து…” எனக் குமரவேலனிடம் கடைசியாக நின்றாள் தேனிசை தேவி.
ஸ்தம்பித்த உடல் புடைத்து நாடி நரம்பு வெடிக்க அவளை நோக்கி ஓடியவன், கருப்பனை எட்டி உதைத்து விட்டு அவன் அப்பனைக் கீழே தள்ளியவன், தேனிசை தேவியைத் தனக்குப் பின்னால் வைத்துக் கொண்டு,
“இது என் பிள்ளை… எனக்கும் இவளுக்கும் பொறக்கப் போற பிள்ளை. இது இந்தக் குமரவேலனோட சொந்த ரத்தம். செத்துப் போனவன் பிள்ளை கிடையாது.” என்ற கர்ஜனையில் மூச்சை இழந்தாள் தேனிசை தேவி.