Loading

நிரண்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கீதன். அவள் முகத்தில் குழப்பம் மட்டுமே படர்ந்திருந்தது. 

 

“எனக்கு என்னதான் ஆச்சு. ஒண்ணுமே புரியல. ஞாபகமும் இல்லை” என்று கூற, கீதனுக்கு என்ன கூறுவது என்று‌ தெரியவில்லை. 

 

அவன் பதில் சொல்லும் முன்பே அவள் முந்திக் கொண்டாள்.

 

“ஆனா ஒரு விஷயம். என்னோட மனசு உன்னை நம்ப சொல்லுது. ஏன்னு தெரியல. நான் என்னோட மனசைப் புரட்டிப் போட்டு காரணம் என்னவாக இருக்கும்னு தேடிட்டேன். ஆனா கண்டுபிடிக்க முடியலை” என்று அவள் கூற, அவனுக்கு அதுவே நிம்மதியாக இருந்தது. அவள் பல சமயங்களில் மொழியாக நடந்து கொண்டாலும், வெகு சில சமயங்களில் நிரண்யாவாகவும் இருக்கிறாள். தன்னை நம்புகிறேன் என்று அவள் கூற காரணம் அது மட்டுமே என்று திடமாக நம்பினான் அவன். 

 

அவள் பேருந்தில் இருந்த கோலத்தைக் கண்டு உண்மையில் திடுக்கிட்டான். இப்பொழுது ஓரளவு விளங்கியது. அவள் ஏன் அந்த கோலத்தில் அங்கு அமர்ந்திருந்தாள் என்று. காலில் செருப்பு இல்லை. தலை பின்னலிடவும் இல்லை. ஒழுங்காக உடுத்தவும் இல்லை. மொத்தத்தில் எதையோ தொலைத்தவள் போன்று அமர்ந்திருந்தாள். அவள் குழந்தை அவனிடம் இருக்கிறது என்று கூறுகிறாள் இப்பொழுது. ஒரு குழந்தையைப் பிரிந்த தாயின் ஏக்கம் அவள் விழிகளில் இருந்தது என்பதை அவனால் இப்பொழுது புரிந்துகொள்ள முடிந்தது. எதையோ நினைத்துப் பரித்தவிக்கிறது அவளின் மனம். ஆனால் அது என்னவென்று அவளுக்கே விளங்கவில்லை. விரைவில் அந்த மொழியையும் இன்பனையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தான் மனதில். 

 

“மொழி, நீ என்னை நம்புறதே‌ எனக்கு சந்தோஷமா இருக்கு. உனக்கு எப்பவாவது ஏதாவது சொல்லணும்னு தோணுச்சுன்னா எங்கிட்ட சொல்லு. நிச்சயம் நான் உன் பக்கம் இருப்பேன். ஏனா உன் பக்கம் நியாயம் இருக்கும். அதை நான் நம்புறேன்” என்று கூற அவள் தலையை ஆட்டி வைத்தாள். 

 

மனம் ரணமாய் வலித்தது. இப்படி ஒரு வலியை அவள் இதுவரை அனுபவித்ததில்லை. அப்படி ஒரு வலி. குரங்குபோல் தாவிக் கொண்டே இருந்தது. ஏன் இப்படி தன் மனம் வேதனையுறுகிறது என்று நினைத்து நினைத்தே தலை வலித்தது. 

 

இதை யாரிடம் கூறி யோசனைக் கேட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் பைத்தியக்காரிபோல் நடக்கவில்லை. இன்னொருத்தியின் உணர்வுகளை தாங்கியிருக்கிறாள். அவள் மொழியாக மாறியிருப்பதால் மட்டுமே ஒரு குழந்தையைப் பிரிந்த தாயாய் உணர முடிகிறது. ஆனால் ஒரு விஷயம் இடித்தது. அவள் கூறும் தகவல்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருக்கிறது. முன்பு குழந்தை வயிற்றில் இறந்துவிட்டது என்று கூறினாள். இப்பொழுது குழந்தை அவனிடம் இருக்கிறது என்று கூறுகிறாள். 

 

நற்பவிக்கு அலைபேசியில் அழைத்தான். சீ.சீ.டீவி ஃபூட்டேஜ் விவகாரத்தில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று கீதன் வினவ, அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது. 

 

“மேடம்.. நிரண்யா இன்னைக்கு ஒரு விஷயம் சொன்னா.”

 

“என்ன சொன்னா?”

 

“இன்பனிடம் தன்னுடைய எட்டு மாத குழந்தை இருப்பதாகவும், அவனைத் தேடி கோயம்பத்தூர் போக நினைத்ததாகவும் சொன்னா” என்று அவன் கூற, சற்று நேரம் அமைதி காத்தவள், “உண்மையில் மொழிக்கு எட்டு மாதக் குழந்தை இருந்துச்சு இறக்கும்போது” என்று அவனை அதிர வைத்தாள்.

 

“வாட்?”

 

“மொழி செத்துப் போய் ஒரு வருஷம் ஆகுது. அதனால் இப்போ அந்த குழந்தைக்கு 1 வயசு எட்டு மாசம் இருக்கணும்” நற்பவி.

 

“மேடம்.. என்னால எதையும் நம்ப முடியல. அந்த மொழிக்கும் நிரண்யாவுக்கும் என்ன சம்மந்தம். என்னோட மாமியார் சொல்ற மாதிரி ஒருவேளை அவளுக்கு பேய் பிடிச்சுடுச்சோன்னு பயமா இருக்கு.”

 

“ம்ம்ப்ஸ்… அதுல எனக்கு நம்பிக்கை இல்லை.”

 

“உங்க வாதத்துக்கே வரேன் நான். அப்படிப் பார்த்தா நிரண்யாவுக்கு இவ்ளோ தகவல் யார் சொல்லிருப்பா?”

 

“தட்ஸ் எ பில்லியன் டாலர் குவெஸ்டின். அதுக்குப் பதில்தான் இந்த வழக்கோட முக்கியத் திருப்பம்.”

 

“எனக்குப் புரியலை மேம்.”

 

“நாம கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம் இதில் ஏதோ இருக்கணும் மிஸ்டர் கீதன். நிரண்யாவோட இன்னும் பேசுங்க. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கோங்க. நாம நிச்சயம் அந்த இன்பனை மீட் பண்ணனும். அவன் ஒரு முக்கிய ஆதாரமா இருக்கலாம்” என்று கூற, கீதனால் எதையும் சிந்திக்கவே முடியவில்லை.

 

“மேம்.. மொழியோட வீட்டில் ஏதாவது டெய்ரி இல்ல வேற ஏதாவது பொருள் நிரண்யாவுக்குக் கிடைச்சிருக்குமா. இது டாக்டர் எங்கிட்ட கேட்டாங்க. ஆனா இப்போ அந்த வீடு உங்க கண்ட்ரோல்ல இருக்கு. கொஞ்சம் ஏதாவது கிடைச்சா சொல்லுங்க. அப்படி ஏதாவது இருந்தா அதைப் படித்த தாக்கம்தான் நிரண்யாவைப் படுத்துதுன்னு முடிவுக்கு வரலாம்” என்று அவன் கூற, உதட்டைப் பிதுக்கினாள் நற்பவி.

 

“அப்படி ஒண்ணுமே கிடைக்கல” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

*****************

 

அடுத்த சில தினங்களில் நற்பவியும்‌ கீதனும் பெங்களூர் சென்றனர். இன்பன் அங்குதான் இருப்பதாக தகவல் வந்தது. தனக்கு வந்த முகவரியைத் தேடிப்பிடித்து வீட்டின் அழைப்பு மணியை அடிக்க, உள்ளிருந்து ஒரு பெண் கதவைத் திறந்தாள்.

 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

 

கதவைப் பாதி திறந்து “யார்? என்ன வேண்டும்?” என்று அவள் வினவ, கீதன் கூறும் முன் நற்பவி முந்திக்கொண்டாள்.

 

“நாங்க இன்பனோட ஃப்ரெண்ட்ஸ். அவரைப் பார்க்க முடியுமா?” என்று கேட்க, உள்ளே வருமாறு அழைத்தாள். 

 

பின் இன்பனுக்கும் அழைத்து செய்தியைக் கூறிவிட்டு அவர்களுக்கு தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். அதற்குள் அந்த வீட்டை அலசி ஆராய்ந்து விட்டாள் நற்பவி. 

 

இன்பனின் இரண்டாவது மனைவி இவள் என்று அங்கிருந்த புகைப்படம் கூறியது. குழந்தையின் குரல் ஏதேனும் கேட்கிறதா என்று கவனித்துப் பார்க்க, அப்படி ஒன்று கேட்கவில்லை. அமைதியாக இருந்தது வீடு. 

 

“உங்க பேரு?” என்று நற்பவி அவளிடம் வினவ, “வித்யா” என்று பதிலளித்தாள் அவள்.

 

“நீங்க?”

 

“நான் நற்பவி.. இவன் கீதன்..”

 

“இன்பன் எப்படி பழக்கம் உங்களுக்கு?”

 

“இன்பனோட படிச்சோம் ரெண்டு பேரும்.”

 

“எப்போ? ஸ்கூலா காலேஜா?”

 

“அது காலேஜ்” என்று நற்பவி பதிலளித்தாள். கீதன் அமைதியாக இருந்துவிட்டான்.

 

“இன்பனோட ஃப்ரெண்ட்ஸ்னு சொல்றீங்க. உங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாதே. அவர் இந்த மாதிரி பேரையும் எங்கிட்ட சொன்னதில்லை” என்று சந்தேகமாக வித்யா வினவ, “உங்களுக்கு இப்போ என்ன தெரியணும்” என்றாள் நற்பவி. 

 

காவல் துறையில் இருக்கிறாளே. வித்யா தங்களின் பொய்யை நம்பவில்லை என்று அவளுக்கு நன்றாக விளங்கியது. இனி மறைத்து ஒரு பலனும் இல்லை என்பதை உணர்ந்ததால் நேரடியாகவே வினவினாள் அவளிடம்.

 

“நீங்க எதுக்காக வந்திருக்கீங்க. ஏன் இன்பனோட ஃப்ரெண்ட்ஸ்னு பொய் சொன்னீங்க?” என்று அவளும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

 

“ஒரு தகவல் வேணும்.”

 

“என்ன தகவல்?”

 

“மொழியைப் பத்தி?” என்று கூற, அவள் தன்னுடைய பெருத்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள். 

 

“தயவு செஞ்சு வெளில போறீங்களா? அவளைப் பத்தி இந்த வீட்டில் பேச உரிமை‌ இல்லை. இது என்னோட வீடு. நான் அனுமதிக்கவும் மாட்டேன்” என்று சற்று காட்டமாகவே கூறினாள்.

 

“அவுங்க உங்கள் புருஷனோட முதல் மனைவிதானே. அதை மாத்த முடியாதே. அப்புறம் அதைப் பத்தி பேச உரிமையில்லைன்னு நீங்க எப்படி சொல்லலாம்.”

 

“அதைக் கேக்க நீங்க யாரு?”

 

“நான் நற்பவி ஐ. பீ. எஸ்.” என்று நற்பவி கூற அவள் நம்பாமல் பார்த்தாள் அவர்களை.

 

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவு அவளின் விழியில் கோபம் சுரந்திருந்தது. ஆனால் நற்பவியின் பதவி உண்மையாய் இருக்குமோ என்ற ஐயம்‌ அக்காரியம் புரியவிடாமல் தடுத்து நிறுத்தியது.

 

“நீங்க யாரா வேணா இருங்க. எப்பவோ செத்துப் போனவளைப் பத்தி இப்போ என்ன பேச்சு. அவ ஒரு பைத்தியக்காரி. செத்துப் போய் இன்பனை படுத்தி எடுத்தா. அவளைப் பத்தி பேச ஒண்ணும் இல்லை” என்றாள் பட்டுக் கத்திரித்தாற் போல்.

 

“இல்ல.. அப்படி எல்லாம் விட முடியாது. மொழியோட சாவில் ஏதோ மர்மம் இருக்கு. அதனால் அதைப் பத்தி உங்க கணவரிடம் பேச வேண்டும்” என்று நற்பவி கூற, அவள் அதிர்ந்தாள்.

 

“இல்ல.. திரும்பவும் நீங்க பொய் சொல்றீங்க. அவ சாவில் ஒரு மர்மமும் இல்லை” என்று‌ அழ ஆரம்பித்தாள். 

 

அவளைக் கண்டு மனமிரங்கிய கீதன் முதன் முதலில் வாய் திறந்தான்.

 

“மிஸஸ் வித்யா.. அழாதீங்க. சென்னையில் மொழியோட வீட்டுக்கு எதிர் வீட்டில் நான் இருக்கிறேன். கொஞ்ச நாளாக என்னோட மனைவி மொழி மாதிரியே பேசுறாங்க. அவுங்களைக் காப்பாத்தணும். அதான் உங்கள் கணவரைப் பார்க்க வந்திருக்கோம்” என்று உண்மையான காரணத்தை விளக்க, அவள் முகத்தில் மீண்டும் குழப்ப ரேகை.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்