1,920 views

“என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க? நேத்து உங்களை இந்த வேலைய செய்ய வைக்கலாம்னு தான் நினைச்சேன். கடைசில அது எங்கயோ போய் முடிஞ்சிடுச்சு.” என்றவள் ஆடவனின் கைப்பிடித்து அருகில் அமர்த்தினாள்.

“இவங்க கூட எல்லாம் பேசுவீங்களாமே… என்ன பேசுவீங்க?” என்ற பெண்ணின் மீது இருந்த பார்வை சிதறவில்லை தரணீஸ்வரனுக்கு. 

காலை கம்பெனி சென்றவன் மதியம் வரை தாக்குப் பிடித்தான். அதற்கு மேல் முடியாமல் கிளம்பலாம் என்றவன் எண்ணத்தை சிதைத்து மாலை நான்கு மணி வரை இருக்க வைத்து விட்டாள் அகல்யா. மனைவியை திட்டி கொண்டு வீடு வந்து சேர்ந்தவன் வீட்டிற்குள் கால் வைக்க,

“எப்ப பாரு முட்டை போடுற கோழி மாதிரி மூலையில் உட்கார்ந்துட்டு” என்று அழைத்துச் சென்றாள் தோட்டத்திற்கு.

“என்ன அவசரம் அகல், ட்ரெஸ்ஸ மாத்திட்டு வரேன்.”

“மாத்த போறன்னு அங்கயே படுத்துடுவிங்க உங்கள பத்தி தெரியாதா. இனிமே ராத்திரிய தவிர மீதி நேரம் எல்லாம் நீங்க அந்த ரூம் பக்கம் போக கூடாது. ஐயா அழுது புலம்பி தண்டனை கொடுத்ததெல்லாம் போதும். எந்த பாவமும் பண்ணாம பல வருஷமா தண்டனை வாங்கிட்டு இருக்க இந்த வாயில்லா ஜீவன்களுக்கு சாப விமோசனம் கொடுங்க.” என்றவள் எண்ணம் எதுவென்று கண்டுபிடித்தவன் உணர்ச்சிகளை கொட்டாமல் நின்றிருந்தான்.

உடனே  மாற்றிக் கொள்வது கடினம் என்பதால் அவனை மாற்றும் பொருட்டு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். மங்கையின் பேச்சில் ‌ உடல் தளர்ந்து செவி மடுக்க ஆரம்பித்தான்.

“பெருசா ஒன்னும் இல்ல. வீட்டுக்கு ஒரே பையனா போய்ட்டதால கூட பேச என் வயசுக்கு ஏத்த ஆள் இல்லை. அதனால இவங்க எல்லாரையும் என் கூட பிறந்தவங்களா நினைச்சு மனசுல தோன்றதை பேசிட்டு இருப்பேன்.”

“இப்ப என்ன தோணுது?” என்றவளுக்கு அவன் புன்னகையை பதிலாக கொடுத்தான் விழிகளை நோக்கி.

“பேசுங்க…இத்தனை நாள் நீங்க பேசாம உண்மையாவே ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன்கள் இவங்க தான். பூக்கப்போற ஒரு நாள கொண்டாட ஆள் இல்லாம எப்படி வாடி போய் இருக்குன்னு பாருங்க. நீர் கொடுக்காத ஊட்டச்சத்தை உங்க வார்த்தை கொடுக்கும்.

நீங்க இவங்க எல்லாரையும் பார்த்து புன்னகைச்சா போதும் மறுபடியும் பூவா சிரிப்பாங்க. இந்த பூவோட உயிர் வேர் நீங்க தான் தரணி. பாவம் உயிர்பிச்சை கேட்டு கடைசி விளிம்புல இருக்க இத்தனை உயிர்களையும் கொன்னு புதைச்சிடாதீங்க.” என்ற மனைவியின் விழி அகன்றதில் தான் அவன் புதைந்து விட்டான்.

முட்டக்கண் அழகில் பேச்சை தொடர்ந்தாள்…”தொலைஞ்ச உங்களோட உணர்வுகள் மாதிரி தான் இதுங்களும். கொஞ்சமாது பேச்சு கொடுத்து பாருங்க. நீங்களே நான் சொன்ன எல்லாமே உண்மைன்னு நம்புவீங்க.” என்று.

பதில் மொழியாமல் அவன் பார்வையால் அவளுக்குள் நீண்ட தூரம் பயணப்பட்டான். அவன் பயணம் தன்னுள் என்பதை அறியாதவள் உடலை அசைத்து இயல்புக்கு மீட்டு வர, எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டான் அவள் மடியில்.

“ஐயோ என்ன இது! எந்திரிங்க ஒரே மண்ணா இருக்கு.” நேற்று தரணியை இதில் ஈடுபட வைக்க நினைத்தவள் தோட்டத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வைத்திருந்தாள்.  அதில் அதிக அளவில் இடம் பெற்றிருந்தது மணல்கள். கணவனை அந்த இடத்தில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தவள் மணலை  ஒவ்வொரு தொட்டியிலும் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

செம்மண், கருமண் இரண்டும் அவள் ஆடையில் ஒட்டியிருந்தது. அதிலே அவன் படுத்துக்கொள்ள தரணி மேனி முழுவதும் மண் மீது இருந்தது. துணையாளின் பேச்சில் பெரிதாக மறுப்பு இல்லாததால்,

“எனக்கு எல்லாமே புரியும் அகல். ஆனா, வெளிய வந்து நடிக்க விரும்பல. மனசு முழுக்க என்னன்னு சொல்ல முடியாத ஒரு வலி குத்திகிட்டே இருக்கும். எந்த இடத்துல தரணி தப்பு பண்ணான்னு ஒவ்வொரு தடவையும் யோசிச்சு பார்த்து என் மேல நானே கோபப்பட்டுப்பேன்.” என்றவன் எழுந்து அவள் கன்னத்தை சிறைப்பிடித்தான்.

அகல்யா விழிகளை பெரிதும் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “என் வாழ்க்கையில நீ வந்த இந்த கொஞ்ச நாள்ல ரொம்ப ஆசை வருது அகல்… சந்தோஷமா இருக்கணும்னு. இந்த ரோஜா பூ மாதிரி தான் நானும். யாராது  பார்த்துக்க மாட்டாங்களான்னு ஏங்கிப் பார்த்து மடிய ஆரம்பிச்சிட்டேன். உன்னோட மடி கிடைக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா தப்பான ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டேன்.” என்றவன் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து,

“நீ எதுக்காக என் வாழ்க்கையில இவ்ளோ தாமதமா வந்த. நீ பண்ண தப்பால தான் நான் ஒரு தப்பு பண்ண வேண்டியதா போச்சு. நேத்து உன்னை கிஸ் பண்ணும் போது எனக்குள்ள பல தடுமாற்றம். ஆனா ஒரு நொடி கூட இதை நம்ம இன்னொருத்தி கூட பண்ணியிருக்கோம்னு நினைக்க தோணல அகல் சத்தியமா. இந்த வார்த்தைக்கு நீ என்னை எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் சரி, இதுதான் உண்மை. இப்பவும் சொல்றேன் உன்கிட்ட இருந்து அன்ப தவிர வேற எதுவும் எனக்கு வேணாம். என்னை பார்த்துக்கிறியா வாழ்க்கை முழுக்க.” தரணீஸ்வரன் கண்களில் எப்பொழுது கொட்டட்டும் என்ற கேள்வியோடு உப்பு நீர் காத்துக் கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் ஆடவன் கொடுத்த பேச்சுக்கள் ஒவ்வொன்றும் இதயத்திற்குள் சென்று அப்படியே  உணர்வில் கலந்தது. கண்ணில்  உணர்ச்சி அளவில்லாமல் வழிந்தோடியது. மனதில் அவள் ஆசைக்கான தேடல் இவன் இல்லை என்ற எண்ணம் மறைந்து இவனுக்குள் நான் இவனாக இருக்கிறேன் என்ற எண்ணம் உருவானது.

தரணீஸ்வரன் கண்ணில் இருக்கும் நீர் உத்தரவு கிடைக்காததால் அதுவே உருண்டு கன்னத்தைத் தொட, சட்டென்று மாறிய வானிலை மேகமும் நீரை கொட்ட ஆரம்பித்தது. மிக மெல்லிய தூறல்கள் தான் என்றாலும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் பூமியை ஆக்கிரமித்தது. புவியில் இருக்கும் மண்  தன் மேல் விழும் நீரில் ஒரு நொடி விரிந்து சுருங்க, இருவர் மட்டும் உணராமல் பார்வையால் ஆட்கொண்டிருந்தனர்.

மாலை வெயிலோடு மழையும் சாரல்களை தூவிக் கொண்டிருக்க, லேசான கருமேகங்கள் அவர்கள் இருக்கும் இடத்தை சூழ ஆரம்பித்தது. அதில் பயந்த மழைத்துளிகள் வேகமாக பொழிய, பந்தத்தில் இணைந்த கணவன் மனைவி மெல்ல உணர ஆரம்பித்தார்கள். இருப்பினும் கையை எடுக்க அவன் நினைக்கவில்லை. எடுக்க சொல்லவும் அகல்யாவின் வாய் வரவில்லை.

மனைவியின் முகத்தில் தன் உத்தரவு இல்லாமல் மழை நீர் ஆக்கிரமித்ததை ஏற்றுக் கொள்ள முடியாதவன் அதை தடுக்கும் நோக்கத்தோடு நெருங்கினான்.‌ அதே எண்ணம் லேசாக அவளுக்குள் உருவாக, நெற்றியில் நீண்டிருக்கும் அவனின் முடியில் பட்ட ஒரு மழைத்துளி மூக்கு நுனியில் வந்து விழுந்த அழகை ரசித்தாள்.

இருவரும் நனைவதை பார்த்த ஜீபூம்பா வேகமாக வீட்டிற்குள் ஓடியது. ஐந்தறிவு ஜீவன் ஆறறிவு உயிர்களைக் காக்க கையில் கிடைத்த துணியை எடுத்து வந்தது. தான் மழையில் நனைகிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருவருக்கும் போர்த்தி விட்டது. தொப்பலாக நனைந்த ஜீபூம்பா ஓரமாக ஒதுங்கிக் கொள்ள, ஒரு சொரணையும் இல்லாமல் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

ஆரஞ்சு வண்ண சால்வை இருவரையும் ஒளிய வைத்திருக்க, அதையும் தாண்டி சாமர்த்தியமாக தங்களிடம் வந்த மழை துளியை உதாசீனம் செய்தார்கள் கண்டுகொள்ளாமல். இருவரின் நெருக்கம் இப்போது குறைந்திருந்தது. மனைவியின் முகத்தோடு கணவன் தன் முகத்தை வைக்க, இருவருக்கும் நடுவில் மழைத்துளிகள்.

“நான் குப்ப தான் அகல். என்னை பல பேர் அப்படி பார்த்து இருக்காங்க. அதுக்கெல்லாம் என் மனசு பெருசா கவலைப்பட்டது இல்லை.  ஆனா நீ எப்படி நினைக்கிறன்னு நினைக்க கூட ரொம்ப வலிக்குது. என்னை அப்படியே ஒதுக்கி வைக்காம சுத்தப்படுத்தி ரசிக்கிறியா.” என்ற தரணீஸ்வரனின் உதடுகள் பேச்சை நிறுத்தியது அவள் நெற்றியில் முத்தமிட்டதால்.

மனைவியின் விழியில் அருவருப்பு இல்லை என்பதை உணர்ந்தவன் மீண்டும் அங்கு முத்தமிட்டு, “ஒவ்வொரு தடவையும் நான் கஷ்டப்படும் போது ஓடி வந்து அணைக்கிற மாதிரி  பதிலுக்கு நானும் உன்ன உரிமையா கட்டிப்பிடிக்கனும்னு தோணுது.” என்று தாடையில் முத்தம் பதித்தான்.

தங்கள் மேல் இருந்த போர்வையை விலக்கியவன் முட்டி போட்டான் அமர்ந்த நிலையில். மனைவியின் முகத்தருகே தன் முகத்தை வைத்தவன் அதை வருடிக் கொண்டு, “நாலு வருஷமா என்னால முடியாத ஒன்ன எப்படிடி வந்ததும் மாத்திட்ட. என்னை பார்த்த உனக்கு பயமா இல்லையா. உன் தகுதிக்கு நான் தகுதியானவன் இல்ல டி. நீ சொன்ன மாதிரி இன்னொருத்தி தூக்கி போட்டு குப்பை. நான் தொட்டா உனக்கு…” என்றவன் பேச்சு நின்றது.

பெரும் நடுக்கம் உருவானது அவனுக்குள். மதுவை கேட்டு அல்ல  மாதுவின் இதழ் தேனை கேட்டு. தனக்கு அவள் வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல் அவன் சுத்தி வளைக்க, என்ன மனநிலையில் இருந்தாளோ அவளே தன்னை சேர்த்துக் கொண்டாள் அவனோடு.

இருவரின் இதழ்களுக்கு நடுவில் சிக்கி சிதைந்து போனது மழை நீர். உவர்ப்பு இல்லாத மேகத்தாயின் அமுதை தங்களை மறந்து குடித்தார்கள். மழைநீர் திறந்திருக்கும் விழியில் விழுந்து தடுக்க பார்ப்பதாக உணர்ந்தவர்கள் விழியை மூடி கொண்டார்கள். பார்க்க வழியில்லாததால் வெட்கம் அங்கு நிற்காமல் ஓடிவிட, மனைவியின் இதழை மொத்தமாக தனக்குள் நுழைத்துக் கொண்டான்.

இடைவெளி இல்லாத முத்த இடி இருவரையும் தாக்கிக் கொண்டிருக்க, நனைந்து நடுங்க ஆரம்பித்தார்கள். தரையில் இருந்த மண் கலங்கி சேற்றை போல் மாறிக் கொண்டிருக்க… பலம் இழந்த அகல்யா அதில் கை வைத்து சிக்கிக் கொண்டாள்.

வழுக்கும் கைகளுக்கு வலு சேர்க்க கணவனின் தோள்களை பற்றி கொண்டாள். தன் முதல் பரிசு மனைவிக்கு இன்னும் வேண்டும் என்று நினைத்தவன் இடைவிடாமல் வேகத்தை அதிகரிக்க, இளம் பெண்ணை காக்கும் பொருட்டு வேகமாக இடி இடித்தது. பயத்தில் அவனை விட்டு உதட்டை பிரித்தாள் அகல்யா.

முட்டி போட்டுக் கொண்டிருந்தவன் கால்கள்  அமரு என்று கெஞ்சுவதை உணர்ந்து அவள் அருகில் அமர்ந்தான். மனைவி என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள அவள் முகத்தை ஆராய்ச்சி செய்தான். எவ்வளவு நேரம் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவனால். அதிகமாக சென்று விட்டதாய் உணர்ந்தவன் எழுந்து நிற்க, கை பிடித்து அமர வைத்தவள் ஜீதும்பா கொண்டு வந்த துணியால் அவன் முகத்தை‌ மூடினாள்.

மனைவியின் செயல் எதற்கென்று புரியவில்லை என்றாலும் தன்னை அருகில் அமர வைத்தது பெரும் குளிர்வாக இருந்தது. அதை இன்னும் குளிரூட்ட… முகத்திற்கு மேலிருக்கும் துணியை இறுக்கி பிடித்த அகல்யா நெற்றியில் முத்தமிட்டாள். ஆயிரம் உணர்வுகள் நொடியில் பட்டாசாய் வெடிக்க, மொத்தமும் நீரில் நனைந்து போனது உதட்டிற்கு கொடுத்ததால். நடுவில் நூல் ஆடை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் குளிர் எடுத்திருக்கும்  இரு இதழ்களுக்கும்.

மழைநீர் மேகத்தை உதறித் தள்ளி பூமிக்கு சொந்தமானதை போல் இருவருக்குள்ளும் இருந்த அனைத்தும் விலகி காதலின் முதல் தருணம் உருவாகியது. இளையவனின் உணர்வுகளை விட தன் முகத்தில் இருக்கும் ஆடை தான் பெரும் தடை கல்லாக தெரிந்தது. அதை எடுக்க தரணீஸ்வரன் முற்பட, இறுக்கமாக அதை கணவனின் முகத்தோடு பிடித்துக் கொண்டவள் தாடையில் முத்தமிட்டாள்.

முகம் பார்க்க முடியாமல் தவித்தவன் தன் கைகளால் அவளை சிறை பிடித்துக் கொள்ள, இந்த முறையும் தாடைக்கு தான் குறி வைத்தாள். முத்தம் இரண்டாம் முறையாக இனிக்க போகிறது என்ற ஆர்வத்தில் அவன் இருக்க, “ஸ்ஸ்ஆஆஆ லயா?” என்று முணுமுணுதான்.

‘என்ன பெயர் இது’ என்று ஒரு நொடி தன் முகத்தை பின்னெடுத்தவள், தன்னுடைய பெயரின் பிற்பகுதி என்பதை உணர்ந்து அவன் ஆசை போல் இனிக்க செய்தாள் முகம் எங்கும். வலியில் கத்திக்கொண்டே அவள் பெயரை கூறியவன் முதல் இரண்டு எழுத்தை மட்டும் வலியோடு சேர்த்து விட அழகாக மனைவிக்கு ஒரு பெயர் உருவானது.

மழைநீர் ஓய்வெடுக்க விரும்பி தன் இயல்பை சற்று குறைத்துக் கொள்ள, ஆடவனின் கைகள் வேகம் எடுத்தது. கைகளின் உதவியால் மனைவியை தன்னோடு சேர்த்துக் கொண்டவன் அவள் அழகை தொட்டு ரசித்துக் கொண்டிருந்தான். கை கொடுக்கும் அழுத்தத்தில் இயல்புக்கு மீண்டவள் அவனை விட்டு விலகி அமர, ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இயல்பு நிலைக்கு மீண்டவள் மனம் என்ன செய்து கொண்டு இருந்தாய் என்பதை படம் போட்டு காட்ட, சங்கடத்தோடு தன்னை சிறை பிடித்து இருக்கும் கைகளை எடுத்து விட்டாள். அதை உணரும் நிலையில் இல்லாத தரணீஸ்வரன் தன் முகத்தில் இருக்கும் ஆடையை விலக்கி அவளை தன்னோடு ஒட்டவைத்துக் கொண்டான்.

காந்த விழிகள் ஓயாமல் அவள் விழியை மொய்க்க, சங்கடத்தில் அதை தவிர்த்தவள் தாக்குப் பிடிக்க முடியாமல் அதில் பயணிக்க ஆரம்பித்தாள். கை விரல்கள்  கன்னத்தோடு விளையாடிக் கொண்டிருக்க, அந்த கைகளை சிறை பிடித்துக் கொண்டிருந்தது அகல்யாவின் கைகள். முகம் முழுவதும் இருவருக்கும் ஈரமாக இருக்க, சூடான வெப்பம் இரு உடலையும் ஆக்கிரமித்தது போன்று இருந்தது.

“லயா!” என ஒரு முறை அவன் உருவாக்கிய பெயரை சொல்லிப் பார்க்க, பிடித்துப் போனது கேட்டவளுக்கு.

“லயா” இந்த முறை சொல்லி பார்க்காமல் தன் மனைவியை அழைக்க, ரசித்துக் கொண்டிருப்பதால் புரியவில்லை பாவைக்கு.

“லயா” என்று அழைத்தவன் அசுர வேகத்தில் தன் முகத்தோடு அவள் முகத்தை சேர்க்க, திடுக்கிடும் ஓசையோடு விழிகள் அவன் விழியை கண் எடுக்காமல் பார்த்தது.

“என் கூட எப்பவும் நீ இருக்கணும். இதோ!” என்றவன் நொடி இடைவேளையையும் குறைத்து, “இந்த முகம் என்னை இப்படி பார்த்துட்டே இருக்கணும். என் லயா தூக்கத்துல கூட என்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும். என்னமோ கனவுல வர தேவதை மாதிரி தெரியுறடி. தூக்கம் கலைஞ்சா எங்கடா போய்டுவியோன்னு பயமா இருக்கு. என்னை நீ நல்லா பார்த்துன்னு தெரியும். இப்ப என் மனசுல ஓடுற கேள்வி எல்லாம் இந்த தேவதைய வாழ்க்கை முழுக்க நான் எப்படி பார்த்துக்க போறன்னு தான்.

என்னை பார்த்துட்டே இருக்க இந்த முட்ட கண்ணு என்னால ஒரு நாளும் கலங்கக்கூடாது. நான் சாகும்போது கூட இந்த கண்ணு என்னை பார்த்து சிரிக்கணும். காத்தா கரையும் போது கூட இந்த கண்ண பார்த்துட்டு கரையணும். லவ் யூ லயா…லவ் யூ. ரொம்ப… ரொம்ப லவ் யூ.” என்றவன் உணர்வுகள் மொத்தமும் இதழ் வரைக்கும் வந்துவிட, சிறிதும் சிதறவிடாமல் அவள் இதழ் வழியே இதயத்திற்கு அனுப்பினான்.

காதல் நெருப்பு அவள் மேனியில் பட்டென்று பத்தி கொள்ள, பெண் மனதை குளிர்விக்க மேகத்தாய் மீண்டும் மழையை அனுப்பி வைத்தாள். இந்த முறை வரும்போது வேகமாக வந்தது. இருவரின் மீதும் அசுர வேகத்தில் விழ, தோற்று அதை வெற்றி பெற வைக்க விரும்பாதவர்கள் ஏளனம் செய்தார்கள் பிரியாமல்.

மழை நீரோடு கணவனின் இதழ் நீரும் சங்கமிக்க, திணறிப் போனாள் மூச்சு விட முடியாமல். உணர்வுகள் போட்டி போட்டாலும் உயிர் தேவை என்பதால் விலக, விட்டுக் கொடுத்தவன் மீண்டும் அவள் முகத்தை தன்னோடு சேர்த்து,

“நீ என் வாழ்க்கையில லேட்டா வந்தததுக்கான தண்டனைய இனி வாழ்க்கை முழுக்க கொடுத்துக்கிட்டே இருப்பேன். மரியாதையா எல்லாத்தையும் வாங்கிக்கோ. இல்லன்னா இந்த குடிகாரன் நடவடிக்கை ரொம்ப மோசமா இருக்கும்.” என்ற தரணீஸ்வரன் இந்த முறை கதாநாயகனாக அல்லாமல் வில்லனாக மனைவியின் இதழை சிறைபிடிக்க முயன்றான்.

அந்த அழகிய வில்லனை நகைச்சுவை நடிகனாக மாற்றியது ஜீபூம்பா. வெகு நேரமாக அவர்களை கவனித்துக் கொண்டிருந்த ஐந்தறிவு ஜீவன் இந்த முறை வேறு ஒரு துணியை எடுத்து வந்து அகல்யா மீது மட்டும் போத்தியது. இதழ் ஒத்தடம் கொடுக்க சென்றவன் அதை வீணாக்கினான் துணிக்கு கொடுத்து.  சப்பென்றானது அவனுக்கு உணர்வுகள்.

நூல் ஆடைக்குள் இருந்தவள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்க, வெறிகொண்டு முறைத்தான் தன் தம்பியை தரணீஸ்வரன். அதுவோ அவனை மிகவும் கடுமையாக குரைக்க ஆரம்பித்தது. பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அகல்யாவை அவன் மீண்டும் மீண்டும் தன் புறம் இருப்பதை பார்த்து என்ன நினைத்ததோ… சிறைப்பட்டு மனதால் மருகிக் கொண்டிருந்த தன்னை அன்பு கொட்டியவனிடம் சேர்த்ததால் காப்பாற்ற வந்தது.

“ஹா… ஹா ஹா!” வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தாள் அகல்யா. தம்பியின் செயலில் கூட அவன் இவ்வளவு கோபம் கொள்ளவில்லை. மனைவியின் சிரிப்பில் கோபமெல்லாம் அவள் மேல் சென்றது. மழைநீரில் ஊறி போயிருந்த மண்ணை அள்ளி மனைவி மீது அடித்தான்.

ஜீபூம்பா நினைத்தது சரி என்பது போல் தரணீஸ்வரன் நடந்துகொள்ள, வேகமாக குரைத்து மணல் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தது. காலால் விசிறி அடித்தது மண்ணை தன் அண்ணன் மீது. அகல்யாவின் சிரிப்பிற்கு அளவே இல்லாமல் போனது.

எப்பொழுதும் கோபம் வந்துவிட்டால் ஜீபூம்பா முறைக்கும் அந்த “உர்ர்ர்ர்” ஓசை இப்போது அவனிடமிருந்து வந்தது. ஜீபூம்பாவிற்கு பழக்கப்பட்ட ஓசை என்பதால் அவன் கோபமாக இருக்கிறான் என்பதை கண்டு கொண்டது.

என்ன இருந்தாலும் அதிக அளவு அன்பு கொண்ட உள்ளம் அவன் அல்லவா! உடனே ஓடிச் சென்று கட்டிக்கொண்டு ஓசை கொடுத்தது. தலையை தடவிக் கொடுத்த தரணீஷ்வரன் தன் மடிமீது படுக்க வைத்துக் கொண்டான். அவன் மடியையும் தாண்டிய பெரிய உருவம் என்பதால் பாதி அகல்யாவின் இடத்திற்கும் வந்தது.

அண்ணனின் கோபம் குறைந்துவிட்டது என்ற நம்பிக்கையில் அப்பாவி ஜீபூம்பா நிம்மதியாக ஓய்வெடுக்க, சகுனி வேலை செய்து தடுத்த அந்த துணியை ஐந்தறிவு ஜீவன் மீது போட்ட தரணீஸ்வரன் வேகமாக கடித்தான். வலியில் துடித்த ஜீபூம்பா கதறி எழுந்து கத்தியது. விடுவதாக இல்லை தரணீஸ்வரன்.

வலி பொறுக்க முடியாத செல்லப்பிராணி அவனை தாக்க ஆரம்பித்தது. பற்களை தூக்கிக்கொண்டு கடுமையாக முறைக்க, அதைப்போல் முறைத்தான் தரணீஸ்வரனும். இருவரையும் கண்டு புன்னகைத்தவள் எதற்கு வம்பு என்று அமர்ந்த நிலையில் நகர, செல்லப் பிராணியும் செல்லம் கொடுத்தவனும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

சகதியில் விழுந்தவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்ள, பயந்த மழை ஓடியது மேகத்திடம். தரணி தோல்வி கண்டான் தன் அன்பு தம்பியிடம். அவன் கீழே படுத்திருக்க அவன் மீது ஏறி நின்று சிங்கம் போல் உருமியது ஜீபூம்பா.

தோற்ற கடுப்பில் அவன் உறும, தன்னை மீண்டும் சீண்டிப் பார்க்கும் அன்பானவன் சத்தத்தில் அதுவும் உறுமியது.

“போதும் ரெண்டு பேரும் கட்டி புரண்டு உருண்டது. எவ்ளோ அழகான இடத்த இப்படி அசிங்கம் பண்ணி வச்சுட்டீங்க. எழுந்திடுங்க இரண்டு பேரும்.” விளையாட்டை நிறுத்தினாள் அகல்யா.

சமத்து பிள்ளை ஜீபூம்பா தன் அண்ணனை பார்க்க, “அவ கெடக்குறா நீ வாடா தங்கம்.” என்றவன் தரையில் இன்னும் நன்றாக படித்துக்கொண்டு ஜீபூம்பாவை தன் மேல் படுக்க வைத்துக் கொண்டான்.

சேற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்டுப் பன்னிகள் போல் இருந்தார்கள் இருவரும். தரணியாவது பரவாயில்லை மனிதன் என்பதால் ஓரளவிற்கு பார்க்க சகித்தான். ஜீபூம்பா நிலைமை தான் மிகவும் மோசமாக இருந்தது. கண்ணைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவன் உருவத்தில். குளிக்க வைக்க ஒரு டேங்க் தண்ணீர் தேவைப்படும் போல.

மனதில் நினைத்ததை வெளிப்படையாக அவள் சொல்லிவிட, இருவரும் அவளை முறைத்து கோபத்தை காட்டினார்கள். இருக்கும் நிலைக்கு அது சிரிப்பை கொடுக்க, “ஜீபூம்பா இவ இனிமே சிரிக்க கூடாது… கமான்!.” என்று துணைக்கு அழைத்தவன் சேற்றை அடித்து மனைவியை தங்களைப் போல் மாற்றி விட்டான்.

ஒரு வழியாக தப்பித்து எழுந்து நின்றவள் ஓட பார்க்க, தடுத்து தன்னோடு அமர வைத்தான் தரணி.

“என்னங்க போதும் எழுந்திடுங்க.”

“வேணா லயா இந்த இடம் ரொம்ப வசதியா இருக்கு.” என்று கண்ணடித்தான்.

ரசித்தாலும் முறைத்துக் கொண்டு, “அடி வாங்குவீங்க. மழையில வேற ரொம்ப நேரம் நனைஞ்சிட்டோம். இதுல இப்படியே படுத்து இருந்தா அவ்ளோ தான்.” என்றாள்.

“எவ்ளோ தான் லயா!” என்றவன் கைகள் சும்மா இருக்காமல் அவள் இடையில் நடை பழகி கொண்டிருக்க, அதில் அடித்து செயலுக்கு தடை போட்டவள்,

“பாவம் பார்த்து கொஞ்சம் இடம் கொடுத்தா உடனே மடத்தை பிடிக்க பிளான் பண்ண வேண்டியது.” என முறைத்தாள்.

“இது பார்க்க மடம் மாதிரி தெரியலையே லயா….நல்லா புசு புசுன்னுல இருக்கு.” என்ற கையோடு அவர் இடையில் அழுத்தமும் கொடுக்க, பேச்சை கொடுக்காமல் தடுக்கும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.

இருவரின் பார்வையும் மீண்டும் காதல் தருணத்தை கேட்க, சுதாரித்துக் கொண்ட அகல்யா கைகளை தடுத்து எழ முயன்றாள். எழுந்து நிற்போம் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கினான் தன் மேல் சாய்த்துக் கொண்டு.

லேசாக ஜீபூம்பா மீதும் அவள் விழ, நொந்து கொண்டே அண்ணனின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டது. வாயில்லா ஜீவன் தங்களைத்தான் மிகவும் நெருக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கூட உணராமல்,

“லவ் யூ லயா. உன் சம்மதம் இல்லாம அத்துமீற மாட்டேன். பக்கதுலயே இருக்கணும்னு தோணுது. கசகசன்னு தான் இருக்கு உடம்பு முழுக்க. ஆனாலும் நீ இப்படி மேல படுத்துட்டு இருக்கும்போது லேசா குளுகுளுன்னு இருக்கு. எல்லாமே ஒரு மாதிரி புதுசா இருக்கு லயா. என்னை முழுசா அனுபவிக்க விடு.” என்ற கணவனின் உணர்வுகளை பேச்சு மொழியாக கேட்காமல் இதய மொழியாக கேட்க ஆரம்பித்தாள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
75
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *