210 views

அத்தியாயம் 16

பிரித்வியின் பார்வை தன்னைத் தொடர்வதை அறியாமல், எப்போதும் போலவே வகுப்பில் வலம் வந்து கொண்டிருந்தாள் அதிரூபா.

ஆனால் அதை எளிதாக கண்டு கொண்டாள் காஜல்.

முதலில் பிரித்வியிடம் கேட்கலாம் என அவனிடம் பலமுறை பேசுவதற்குப் போனால், இவளை மதிக்காமல் சென்று விடுவான்.

அதனால், வேறு வழியின்றி அதிரூபாவிடம் போனாள்.

“அதிருபா! நான் பிரித்வியை லவ் பண்றேன்னு உனக்குத் தெரியும் தான?”

அவளை விசித்திரமாகப் பார்த்த அதிரூபா,

“தெரியும் காஜல்!” என பதிலளித்தாள்.

“அவனுக்கும், எனக்கும் ஒரு சின்ன பிரச்சினை, சண்டை. அதனால் , என் பக்கம் திரும்பாமல் இருக்கான். அது சரி ஆகிடும்னு நினைச்சேன்.ஆனால், இப்போ உன்னைப் பார்க்க ஆரம்பிச்சுட்டான்” என்று இவள் கதையொன்றை வடிவமைத்து உண்மை போல கூறினாள்.

“என்னைப் பார்க்கிறானா? உனக்கு என்னப் பைத்தியம் பிடிச்சுப் போச்சா காஜல்? பிரித்வி என்னைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அது மட்டுமில்லாமல், நீயே போய் அவன்கிட்ட இதைக் கேட்கலாமே?” என்று சரியான கேள்வியுடன் நிறுத்தினாள்.

“அஃது… அவன் எனக்குப் பொறாமை வர வைக்கனும்னு நினைச்சுக்கிட்டு இதெல்லாம் பண்றான்.நானே போய்க் கேட்டால் அவனுக்கு தலையில் ஏறிக்கும்” என்று விதவிதமான பொய்களை வாரியிறைத்தாள் காஜல்.

“உங்க லவ் விஷயமே எனக்குத் தேவையில்லாதது. நீ வந்து கேட்கிறியேன்னு தான் பொறுமையாக பதில் சொல்லிட்டு இருந்தேன். இப்போ என்னடான்னா ஏதேதோ உளறிட்டு இருக்க! சாதாரணமாக கூட பேசாமல் இருக்கிற நீங்க எப்படி லவ்வர்ஸ் ஆக ப்ரொமோட் (promote) ஆகி இருக்கீங்கன்னு ஆச்சரியமாக இருக்கு!!” என்று பொய்யான வியப்பை வெளிக் காட்டினாள் அதிரூபா.

சொல்லப் போனால், அவள் இப்படி யாரிடமும் அழுத்திப் பேச மாட்டாள். ஆனால், இந்தக் காஜலின் செயலாலும், வார்த்தைகளாலும் தனக்குத் தான் கோபம் உண்டாகிறது என்று தெரிந்து கொண்டாள் அதிரூபா. அதனாலேயே, காஜலுக்கு  இப்படியான தொனியில் பதில் அளித்துக் கொண்டிருக்கிறாள்.

“அது இல்லை அதிரூபா…!” என்று தடுமாறி நின்றவளை அழுத்தமாகப் பார்த்தவள்,

“இது சரியாக வராது. நான் போய் பிரித்விகிட்ட பேசறேன் காஜல். அப்போ தான் அவர் பக்கம் இருக்கிற விஷயமும் எனக்குத் தெரிய வரும்” என்று தீர்க்கமாக கூறினாள்.

அதற்குள் பதறிப் போன காஜல்,

“என்ன நீ… பிரித்வி என்னை வெறுப்பேத்துறதுக்காக தான் உன்னைப் பார்க்கிறான்னு சொல்றேன். பின்னே, நீயே போய் அவன்கிட்ட பேசுறேன்னு சொல்ற? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று பயத்தில் இருந்தவள், வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டினாள்.

“ஹேய்!! இப்போ உனக்கு என்னப் பிரச்சினை? ந் சொன்னால் நான் அமைதியாக இருக்கனுமா?” என்று உச்சஸ்தாயியில் கேட்டாள் அதிரூபா.

அதில் மருண்டு, விழித்தாள் காஜல்.

“நீ செல்வதை எல்லாம் கேட்டுட்டு அமைதியாகப் போயிடனுமோ?” என்று வினவினாள்.

அதற்கு காஜலோ, “இல்லை அதிரூபா. ந் பிரித்விகிட்ட எதுவும் கேட்காத” என்று மன்றாட ஆரம்பித்து விட்டாள்.

“ரெண்டு பேருமே லவ் பண்றீங்க தான? அப்பறம் என்ன தயக்கம்? கவலைப்படாதே! நான் ஒன்னும் அவனைப் பாத்து மயங்கிட மாட்டேன்”என்று ஒரு முடிவுடன் பிரித்வியைப் பார்க்கப் போனாள் அதிரூபா.

அங்கே தன் தோழர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த பிரித்வி, தன் முன்னால் வந்து நின்ற அதிரூபாவைப் பார்த்தான்.

“ஹாய் பிரித்வி! உங்க கூட கொஞ்சம் தனியாகப் பேசனும்” என்று இவள் ஆரம்பிக்கவும்,

“அதிரூபா! நீ உன் லிமிட்டை ரொம்ப கிராஸ் பண்ற?” என்று அவளைக் கடிந்து கொண்டாள் காஜல்.

“நீ வாயை மூடு!” என்று அவளை அதட்டினாள்.

பின்பு , இவர்களைத் திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,

“பிரித்வி! உங்களை டிஸ்டர்ப் பண்றதுக்கு வெரி சாரி. ஆனால் எனக்கு ஒரு டவுட் அதைக் கிளியர் பண்ணி விடுங்க” என்று கூறினாள் அதிரூபா.

“என்ன டவுட்?” என்று கேட்டான்.

“நீங்களும், காஜலும் லவ்வர்ஸ் தான? அவளை வெறுப்பேத்துறதுக்காக, என்னை நீங்கப் பார்க்கிறீங்கன்னு வந்து கய்ப்ளைண்ட் பண்ணிட்டு இருக்கா! இதில் நான் என்னப் பண்ணேன்? ஏன் என்னை வந்து டார்ச்சர் பண்றீங்க?” என்று கொதிப்புடன் கேட்டாள்.

“இது உன்னோட இரண்டாவது நாடகமா காஜல்?” என்று காட்டமாக கேட்டான்.

“பிரித்வி…”

வழக்கம் போல தப்பு செய்து விட்டு, கையும் களவுமாக பிடிப்பட்டவளின் வாயிலிருந்து வேறென்ன வார்த்தை வந்து விடப் போகிறது?

“நான் காஜலை லவ் பண்ணவே இல்லை அதிரூபா. அதுவே முதல்ல பொய். அப்பறம் அவளுக்குப் பொறாமை வர வைக்க நான் உங்களைப் பார்க்கிறேன்னு சொன்னது மகா பொய்!” என்று விளக்கினான் பிரித்வி.

அவன் கூறியதைக் கேட்டதும், காஜலைத் துச்சமாகப் பார்த்தாள் அதிரூபா.

“ஆனால், அவளைப் பொறாமைப்பட வைக்கனும்னு இல்லை. உண்மையிலேயே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ” என்று சாதாரணமாக தன் காதலை அதிரூபாவிடம் தெரிவித்து விட்டு சென்றான் பிரித்வி.

“என்னது!” என்று சம்பந்தப்பட்டவளை விட, அளவுக்கதிகமாக அதிர்ந்து போனாள் காஜல்.

பிரித்வியிடம் இதைச் சற்றும் எதிர்பாராமல் இருந்த அதிரூபாவிற்கு கால்கள் தள்ளாடியது.

“அவனுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை?” என்று வாய் விட்டுக் கத்தினாள் காஜல்.

அவளை வெறுப்பாகப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் அதிரூபா.

வீட்டில் தன் அறையில் இருந்தவளுக்கு இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.

காஜல் தான் பொய் சொல்லி இருக்கிறாள் என்றால், அதை மட்டும் மறுத்துச் சொல்லி இருக்கலாமே? ஏன் தன்னை விரும்புவதாக கூறினான்? என்ற  கலக்கத்தில் உழன்று கொண்டிருந்தாள் அதிரூபா.

இதை இப்படியே வளர விடுவது தவறு என்றும் புரிந்து கொண்டாள்.

காஜலுக்கோ அவமானமாக இருந்தது. தன்னைப் பொது வெளியில்  மறுத்தது மட்டும் இல்லாமல், அதிரூபாவைக் காதலிப்பதாக கூறி விட்டானே அந்த பிரித்வி! என்று ஆதங்கமாக இருந்தது.

💕💕💕

இன்று…!

“நீ ஏன் இப்படி எதையோ பறி கொடுத்தா மாதிரி இருக்கிற? எனக்கு எங்கேயுமே நிம்மதி கிடைக்காதா?” என்று உரத்தக் குரலில் கத்தினான் தன்வந்த்.

அவன் குரலைக் கேட்டதும், தன் கடந்த கால நினைவுகளில் இருந்து மேலெழும்பி வந்தாள் காஜல்.

“என்னங்க?” என்று அவனிடம் வினவினாள்.

“ம்ம்! ஒன்னுமே இல்லை! எனக்கு இப்போ பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்று உத்தரவு பிறப்பித்தவன், டைனிங் டேபிளின் அருகிலிருந்த  இருக்கையில் அமர்ந்தான் தன்வந்த்.

அவனுக்கு உணவு பரிமாறிய மனைவியிடம்,

“ஏன் ரொம்ப வீக் ஆக தெரியுற? காய்ச்சல் இன்னுமா சரியாகாமல் இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

“ஆமா – ங்க. காய்ச்சல் குறையவே இல்லை” என்று பதிலளித்தாள் காஜல்.

“அப்போ ஹாஸ்பிடலுக்குப் போய்ட்டு வா. நானே எல்லாத்தையும் சொல்லனுமா?” என்று தட்டில் இருந்த பார்வையை அவள் புறம் வீசினான் தன்வந்த்.

“சரிங்க.போய்ட்டு வர்றேன்”

“இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடு” என கேட்டு வாங்கி உண்டான் கணவன்.

அவன் உண்டு முடித்ததும், சுத்தம் செய்ய ஆரம்பித்தவளிடம்,
“சாப்பாடு நல்லா இருந்துச்சு” என மனைவியின் கரத்தில் இதழ் பதித்து விட்டுச் சென்றான் தன்வந்த்.

தன் மீது அவனுக்குக் காதல் உள்ளதா? என்ற ஐயம் தான் தோன்றியதே தவிர, அந்த முத்தத்தில் திளைத்து மகிழ்ந்து விடவில்லை அவள்.

மூன்று வருடங்களாக அவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறாளே?

இந்த யோசனைகளைத் தள்ளி வைத்து விட்டு, காய்ச்சலுக்கு சிகிச்சைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு விரைந்தாள் காஜல்.

💕💕💕

“இதை ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லலை பிரித்வி?” என்று  தன் கணவனிடம் கேட்டாள் அதிரூபா.

“எதை?” என்று குழப்பமாக கேட்டான் பிரித்வி.

“காஜலைப் பத்தி தான் கேட்கிறேன். அவளுக்கும், தன்வந்த்க்கும் கல்யாணம் ஆகி மூனு வருஷம் ஆயிடுச்சு” என்று விளக்கிக் கூறினாள் அதிரூபா.

“உனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன் அதி. அவனோட கல்யாணம் பர்சனல் ஆக நடந்திருக்கு. எந்த நியூஸ் பேப்பர்ஸிலும் வரலை. எல்லாத்தையும் புத்திசாலித்தனமாக மறைச்சு இருக்கான்.  இதை நான் உங்கிட்ட சொல்லாததுக்கு அது மட்டும் காரணம் இல்லை. நம்மளோட பாஸ்ட் எதுவும் இப்போ தேவையில்லைன்னு நினைச்சேன்” என்று கூறினான் பிரித்வி.

“கடந்த காலம் எதுவும் இப்போ தேவையில்லைன்னு சொன்னீங்க தான? அப்போ நீங்க லவ் புரபோஸ் பண்ணதும் , அப்போ தானே நடந்துச்சு? அதைப் பத்தி என்ன சொல்றீங்க?” என்று கிடுக்கிப்பிடி போட்டுக் கேட்டாள் அதிரூபா.

“ப்ச்! அதி! அது வேற, இது வேற! அது நமக்குத் தேவையில்லாதது. இது நமக்குச் சொந்தமானது!” என்று அவளுக்குப் புரிய வைக்கப் போராடினான் கணவன்.

“காதல் இரண்டு பேருக்கும் சொந்தமானது தான் பிரித்வி. ஆனால் அதை எந்த சூழ்நிலையில் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?”

தன்னவள் இன்று ஒரு முடிவோடு தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் பிரித்வி.

“நான் உங்கிட்ட புரபோஸ் பண்ணலாம்னு தான் வெயிட் பண்ணேன். கிடைச்ச சான்ஸை யூஸ் பண்ணிக்கிட்டேன் அதி!” என்றான்.

“ஓஹோ! அப்போ காஜல்கிட்ட இருந்து தப்பிக்க தான் எனக்குப் புரபோஸ் பண்ணீங்களா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ஏன் அவளை வேண்டாம்னு நிறைய தடவை சொன்ன எனக்கு, அப்பவும்
மறுக்கத் தைரியம் இல்லையா என்ன?” என்று பொறுமையாக கேட்டான் பிரித்வி.

“அப்பறம் நான் அன்னைக்குக் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு, வேற சுவிட்சேஷனில் லவ் சொல்லி இருக்கலாமே?” என்று விடாமல் பிடித்துக் கொண்டாள் மனைவி.

இந்தக் கேள்வியை அன்றும் பிரித்வியிடம் கேட்டிருந்தாள் அதிரூபா.இதற்கு அவனுடைய அப்போதைய பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய பதிலும் அதே தானா? மாற்றம் எதுவும் இல்லையா?

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்