502 views

 

 

ரகுவரன் மீதி கதையை சொல்ல துவங்கவும் அவனது மனைவி வேலைக்கு கிளம்பி வரவும் சரியாக இருந்தது. வந்தவளின் பார்வையில் ஐந்து நபர்களுக்கு நடுவில் அமர்ந்துக் கொண்டு கதையடிக்கும் ரகுவரன் விழ, ‘இவன் என்ன இவங்களோட உட்கார்ந்துட்டு இருக்கான்.’ சந்தேகத்தோடு பார்த்தாள்.

 

மனைவி வருவதை அறியாதவன் போல், “அந்தக் கோபத்தோட சாப்பிடாம கிளம்பிட்டேன். மதியம் நேரம் வந்ததும் தாக்குப் பிடிக்க முடியல பசில. நம்ம பொண்டாட்டி கண்டிப்பா வர மாட்டாங்குற கடுப்புல உட்கார்ந்துட்டு இருக்கேன்…. வந்து நிக்கிறா.” என்றான் கண்ணில் காதல் கூடி.

 

“சார் நீங்க ரொம்ப லக்கி. என் பொண்டாட்டி எல்லாம் என்னை சாப்பிட்டியானு கூட கேட்க மாட்டா சார்.”

 

“ஆமாம் சார், என் பொண்டாட்டி இருக்காளே அவகிட்ட ஒரு டீ கேட்டாலே அப்படி எரிஞ்சு விழுவா. நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர் அதான் எவ்ளோ வீம்போட இருந்தாலும் உங்க மனைவி உங்களை தேடி வராங்க.” 

 

“என் பொண்ண நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மருமகனே.” என ஐவரும் ஆளுக்கொன்று பேச, ஒன்றும் புரியவில்லை மகிழினிக்கு.

 

 

ஆனால் கணவனோ, “எல்லாரும் இந்த ரகுவரன் ஆகிட முடியுமா.” என்று சட்டை காலரை தூக்கி விட்டான்.

 

“சார் சீக்கிரம் உங்க கதைய சொல்லுங்க அடுத்து என்ன என்னன்னு ஒரே ஆர்வமா இருக்கு.” என்றவரின் ஆர்வத்தில் சத்தமிட்டு புன்னகைத்தவன், “என் பொண்டாட்டிய பார்த்ததும் கண்டுக்காத மாதிரி நான் வேலை செஞ்சிட்டு இருந்தேன். அவளும் எதுவும் பேசாம டேபிள் மேல சாப்பாட்டை வச்சிட்டு நின்னுட்டு இருந்தா. அடங்கி போவனா நானு…” என்று மார்தட்டிக் கொள்ளாத அளவிற்கு பெருமை கொண்டவன், 

 

“அவளை கொஞ்சம் கூட மதிக்காம கிளம்பி போய்கிட்டே இருந்தேன். பின்னாடியே வந்து கால பிடிக்காத குறையா கொஞ்சமாவது சாப்பிடுங்கன்னு கெஞ்சுனா. சரிதான் போடின்னு அடிச்சு விரட்டாத குறையா துரத்தி விட்டேன். அப்ப கூட உடனே போகல. இப்ப மட்டும் நீ போகல வீட்டை விட்டு துரத்திடுவேன்னு மிரட்டுனேன் அப்புறம் தான் இடத்தை காலி பண்ணா.” என்றான்.

 

“சார் நீங்க பண்ணது ரொம்ப தப்பு. என்ன இருந்தாலும் நீங்க அந்த மாதிரி நடந்திருக்க கூடாது.” காவலாளி.

 

“மருமகனே என் பொண்ணு உன்னை எந்த அளவுக்கு நேசிச்சு இருந்தா ரோஷம் பார்க்காம இப்படி கெஞ்சுவா. அப்படிப்பட்ட பொண்ணு கிட்ட அடங்கி போகாம இப்படி சண்டியர் தனம் காட்டுறியே, நியாயமா.” அழகுசுந்தரம்.

 

 

“அதெல்லாம் நியாயம் தான். அவளை நான் மன்னிக்கவே இல்ல அந்த விஷயத்துல. ராத்திரி வீட்டுக்கு போனதும் உண்மையாவே கால பிடிச்சி கெஞ்சுனா. இன்னொரு தடவை என்னை யாரு முன்னாடியும் அப்படி பேச கூடாதுன்னு முடிவா சொல்லித்தான் மன்னிச்சு விட்டேன். அதுக்கப்புறம் அவ அந்த மாதிரி என்கிட்ட நடந்துக்கவே இல்ல. நான் உக்காருன்னு சொன்னா உட்காருவா சாப்பிடுன்னு சொன்னா சாப்பிடுவா என்னோட அடிமை மாதிரி.” என்றவனின் விழிகள் தன்னை முறைத்துப் பார்க்கும் மனைவியை ரகசியமாக நோட்டமிட்டது.

 

 

பேச ஆரம்பிக்கும் போது இருந்த முறைப்பு சொல்லி முடித்த பின் இன்னும் அதிகமாக இருப்பதாய் உணர்ந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ரகுவரனின் பேச்சை கேட்ட ஐவரும் மகிழினிக்காக பாவம் பார்க்க, ரகுவரனின் பொய் பேச்சுக்கள் அதிகமாகி கொண்டே இருந்தது. அதைவிட அதிகமாக பெண்ணின் கோபமும் ஏறியது.

 

 

அதை மேலும் தூண்டும் விதமாக, “நம்ம எல்லாரும் ஆம்பளைங்க. தாலி கட்டினவன் என்ன சொல்றானோ அதைத்தான் கேட்கணும் பொண்ணுங்க. இங்க இருந்து என் பொண்டாட்டிய கட்டி போட்டு தூக்கிட்டு போய்… ரத்தம் வர அளவுக்கு இந்த கையால முகத்தை குத்தி வீங்க வைக்கல நான் ரகுவரன் இல்லை.” என்றிட, அடுத்த நொடி அவனின் வலது கன்னம் புஷ் என்று வீங்கிவிட்டது மகிழினி கொடுத்த கராத்தே குத்தில்.

 

 

ஐவர் படை பதறி மகிழனியை பயத்தோடு பார்க்க, “ஏண்டா பொறுக்கி… நான் உனக்கு அடிமையா? என்ன சொன்ன என் முகத்தை குத்தி வீங்க வைப்பியா… இன்னும் இந்த காமெடி பண்றதை விடலையா நீ. ஒழுங்கு மரியாதையா ஹாஸ்பிடல் போய் ஆயில்மெண்ட் வாங்கி தடவு. இல்லனா பணியாரம் மாதிரி உன் மூஞ்சி உப்பி போயிடும்.” என்றாள் நக்கலாக.

 

“என்னம்மா இப்படி அடிச்சுட்ட…” அழகுசுந்தரம் பதற, “மேடம் கட்டுன புருஷனை போட்டு இப்படி அடிக்கலாமா.” கேட்டார் காவலாளிகளுள் ஒருவர். 

 

“கட்டுன புருஷன் மட்டுமில்ல எவனா இருந்தாலும் இந்த மாதிரி பொண்ணுங்கள நக்கலா பேசினா அடிக்கலாம்.”  

 

“மேடம் என்ன இருந்தாலும் புருஷனை இத்தனை பேருக்கு முன்னாடி அடிக்கிறது தப்பு.” என்ற மற்றொரு காவலாளியை முறைப்போடு பார்த்தவள், “இத்தனை பேருக்கு முன்னாடி அடிக்கிறது தப்புன்னா இத்தனை பேர் கிட்ட பொண்டாட்டி வந்து கால்ல விழுந்து கெஞ்சினான்னு அபாண்டமா பொய் சொன்னதும் தப்புதான்.” என்றவளின் பார்வை இப்போது கணவனை கேவலமாக பார்த்தது.

 

 

அங்கிருந்த அனைவரும் இன்னும் குழம்பி போனார்கள்  “பொண்டாட்டி ரொம்ப வலிக்குது ஏதாச்சும் ஆயில்மெண்ட் வச்சிருக்க” என கை நீட்டும் ரகுவரனால்.

 

“த்தூதூ…” பேச்சுக்கு துப்பாமல் உண்மையாகவே துப்பிய மகிழினி, “இந்த சார் சொல்ற மாதிரி அன்னைக்கு ஒன்னும் நடக்கல. அவ்ளோ இறங்கி போனதுக்கு அப்புறமும் மூஞ்சிய திருப்பிக்கிட்டு போன இவன அதுக்கப்புறம் நான் கண்டுக்கவே இல்லை. மதிய நேரம் இவன்தான் என் ஆபீஸ்ல வந்து நின்னான். எதுக்காக எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரலன்னு அழுதான்.” என்றதும் சுற்றி இருந்த ஐவரும் ரகுவரனை பார்க்க, அவனோ கண்ணடித்து சிரித்தான்.

 

 

கணவனின் சிரிப்பில் இன்னும் கடுப்பானவள் கையில் இருந்த பைலால் அடித்து, “ஃபிராடு இன்னும் என்னென்ன பொய்டா சொல்லி வச்சிருக்க இவங்க கிட்ட. உன்ன ஒரு ஆளுன்னு நம்பி கதை கேக்குறாங்க பாரு வேலை வெட்டி இல்லாதவங்க. ஒழுங்கா ஊர் போய் சேரு. நான் திரும்பி வரும்போது நீ இங்க இருந்த… கொலை பண்ணிடுவேன்.” என இன்னும் வேகமாக அடித்தாள். 

 

மனைவியின் கைப்பற்றி, “அப்போ நான் சொன்னதுக்கு ஓகே சொல்லு போறேன்.” என்றான் சிரித்துக் கொண்டு.

 

 

“அது மட்டும் என்னைக்கும் நடக்காது. உன்ன நம்பி நான் பட்டதெல்லாம் போதும் இனியும் பட தெம்பு இல்ல.”

 

 

“இந்த ஒன்னுக்கு மட்டும் ஓகே சொல்லுடி. அதுக்கப்புறம் ரகுவரன் குட் பாயா இருப்பான். உன் புடவை முந்தானிய பிடிச்சுக்கிட்டு உனக்கு சேவகம் செய்வான்.” முந்தானையை பிடிப்பதுபோல் சல்வாரை பிடித்துக் கொண்டு கண்ணடிக்க, “எப்படிடா இப்படி வெக்கமே இல்லாம பொய்க்கு மேல பொய் பேசுற. என்னால ஓகே சொல்ல முடியாது அவ்ளோ தான்.” என்றாள்.

 

“புருஷன் பொண்டாட்டி  பேசிட்டு இருக்கோம் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம வாய பொளந்துட்டு பார்க்குறீங்க. பொழப்ப பாருங்க போங்க…” என்ற ரகுவரனின் வார்த்தையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

“இதான் இவன். யார எப்ப தொரத்தி விடுவான்னும் தெரியாது, யார் கால எப்ப பிடிப்பான்னும் தெரியாது. இவன் பொண்ண தவிர வேற யாருக்கும் அடங்கி போக மாட்டான். இவனை நம்பி உட்கார்ந்து கதை கேக்குறீங்க பாருங்க நீங்க எப்படிப்பட்ட ஆளுங்களா இருப்பீங்க.” போற போக்கில் கணவனை அவமானப்படுத்துவதாக நினைத்து ஐவரையும் அவமானப்படுத்தினாள்.

 

 

கணவன் மனைவி இருவரும் பேசும் வார்த்தை ஒன்றாக இருக்க பார்த்துக் கொள்ளும் விதம் வேற வகையாக இருந்தது. அதைக் காவலாளிகள் கண்டு கொள்ளாமல் முழிக்க, அழகுசுந்தரம் பின் வாங்கினார் சுதாரித்து. இருவரின் விழிகளையும் நோட்டமிட்டவர் மூளை வேகமாக செயல்பட, “பொண்டாட்டி நேத்து தான் சாப்பாடு கொடுக்கல இன்னைக்கு ஏதாச்சும் சாப்பாடு இருக்கா.” சம்பந்தமே இல்லாமல் பேசினான் ரகுவரன்.

 

 

“உன்னை எல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல. போய் கொட்டிக்க போ செஞ்சு வச்சிருக்கேன்.” என்றதும் சிட்டாக பறந்து விட்டான் ரகுவரன்.

 

 

அவன் செல்லும் அழகை ஒரு நொடி ரசித்தவள் தன் முகத்தை மாற்றிக் கொண்டு, “இனிமே இந்த மாதிரி கூட்டம் போட்டு கதை கேட்டுட்டு இருக்காதீங்க. என் புருஷன் வாய தொறந்தாலே வரது எல்லாம் பொய்யா தான் இருக்கும். வந்தோம்மா வேலைய பார்த்தோமான்னு இல்லாம ஊர் கதைய பேசாதீங்க.” மீண்டும் ஒரு முறை அசிங்கப்படுத்தியவள் அழகுசுந்தரத்தை பார்த்து,

 

 

“எதுக்காக அவனுக்கு உங்க வீட்ல இடம் கொடுத்து இருக்கீங்க. நாளைக்கு இங்க ஏதாச்சும் பிரச்சனை நடந்தா உங்க சட்டைய தான் பிடிப்பாங்க. அவன் வக்கீல்னு சொன்னதும் நல்லவன்னு நினைக்காதீங்க. வக்கீல் தொழில் செய்ற நம்பர் ஒன் கேடி அவன்தான். சீக்கிரம் வீட்டை விட்டு துரத்த பாருங்க.” என்றாள் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.

 

 

இந்த விசித்திர கணவன் மனைவியை பார்த்த அழகுசுந்தரம் எதுவும் பேசாமல் அமைதிக்காக்க, நடையை கட்டினாள் அங்கிருந்து மகிழினி. மனைவியின் கை மனத்தை சாப்பிட வந்தவனை வரவேற்றார் “வாங்க ரகு.” என்று ரேகா.

 

 

“வரேன் வரேன் என் பொண்டாட்டி செஞ்ச கொண்டக்கறி இடியாப்பத்தை சாப்பிட வரேன்.” உற்சாக மிகுதியில் பேசும் ரகுவரனை கண்டு வியந்தவர், “எப்படி கரெக்டா சொல்றீங்க உங்க பொண்டாட்டி அதான் செஞ்சாங்கன்னு.” கேட்டார்.

 

 

“ஏன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

 

“சோ”

 

“ரெண்டு நாளா தவிக்க விட்ட புருஷனுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு போடணும்னு எனக்கு பிடிச்சதை செஞ்சிருப்பா என் பொண்டாட்டி.”

 

“யார் நீங்க?”

 

“பல பேர் கேள்வி இதுதான். ஆனா, பதில் எங்க கிட்ட இல்ல.”

 

“நீங்க சண்டை போடுறீங்களா இல்ல கொஞ்சிறீங்களா.”

 

“கொஞ்சல் சண்டைன்னு சொல்லிக்கலாம் நல்லா இருக்கும்.” என்றிட, தலையாட்டி தனக்குள் பேசிக்கொண்ட ரேகா அங்கிருந்து கிளம்பினார்.

 

 

புது வீடு என்ற கூச்சம் இல்லாமல் இருக்கையில் அமர்ந்தவன் மேஜையில் இருக்கும் உணவை திறந்து வாசம் பிடித்தான். அவன் சொன்னது போல் விருப்பமான உணவு மேஜை மீது இருக்க, வயிறு நிறையும் வரை சாப்பிட்ட ஆரம்பித்தான். நிறைந்த வயிறு மனைவியை நினைக்க வைக்க, வேலை விஷயமாக கிளம்பியவள் எண்ணத்தில் அவனே.

 

 

கணவன் சொன்ன பொய்களை நினைத்துக் கொண்டே நடந்தவள் அன்றைய உண்மையான நிகழ்வை நினைக்கத் துவங்க, அவளின் வில்லன் அதே நினைவை நினைத்துக் கொண்டிருந்தான் புன்னகையோடு. 

 

****

 

ரகுவரனின் பிடிவாதம் மதியம் வரை தான் தாக்குப் பிடித்தது. பசி எடுக்கும் வயிறு மனைவியின் வருகையை எதிர் நோக்க, அவளோ போதும் என்ற அளவு இறங்கி விட்டதால் வருகை கொடுக்க விரும்பாமல் வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள்.

 

மணி இரண்டானது மூன்றானது ரகுவரனின் பொறுமை எல்லையை கடந்தது. ரோஷத்தை கைவிட்டு தானே தொடர்பு கொண்டான். கணவனின் எண்ணை பார்த்ததும் லேசாக இதழ் சிரித்தவள் எடுக்காமல் இன்னும் அவனை சோதிக்க, அடுத்த அரை மணி நேரத்தில் மனைவி முன்பு ரகுவரன்.

 

 

 

“உத்ரா அந்த கேஸ் ஃபைலை மட்டும் கையோட நாளைக்கு கொண்டு வந்துடுங்க. நாளைக்கு முடிச்சே ஆகணும்.” தன் முன்னாள் அமர்ந்திருக்கும் கணவனை சிறிதும் மதிக்காமல் வேலை விஷயமாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

பொறுமை இல்லாமல் மனைவியிடம் வந்தவன் இன்னும் நொந்து போய், “பசிக்குது” என்றான்.

 

அப்பொழுதுதான் ரகுவரனை பார்ப்பது போல் பார்த்தவள், “நீங்க வேலைய கவனிங்க உத்ரா.” என ஜூனியரை அனுப்பி வைத்துவிட்டு அவன் முன்பு டிபன் பாக்ஸை திறந்து வைத்தாள்.

 

 

கணவன் முகம் அஷ்ட கோணலாக மாற, “சாப்ட்டு கெளம்பு” என்று தன் வேலைகளை கவனித்தாள்.

 

“அடியே!” 

 

…..

 

“உன்ன தான் கூப்பிடுறேன்.”

 

“பொண்டாட்டி” பல வகையான அழைப்புகளை அவளிடம் செலுத்தியும் பலன் இல்லாமல் போனது.

 

 

ரோஷம் கொண்டவன் சாப்பிடாமல் எழப்பார்க்க, “இதை மட்டும் சாப்பிடாம போனினா உன் பசங்களும் சாப்பிடாம தான் இருக்கும். முக்கியமா உன் செல்ல பொண்ணு.” ஓசை வந்ததும் மனைவியை திரும்பி பார்க்க, அவளோ கண்டுகொள்ளாமல் பார்வையை கையில் இருக்கும் கேஸ் ஃபைலில் வைத்திருந்தாள்.

 

 

தன் நிலைமை இறங்கி விட்டதாக எண்ணியவன் சாப்பிட ஆரம்பித்தான். கடுப்போடு சாப்பிடுவதால் உள்ளே சென்ற சாப்பாடு புரையேறி அவனை இன்னும் கடுப்பேற்ற, “தண்ணி குடி” இரு வார்த்தையில் பேச்சை முடித்தாள்.

 

 

கொடுத்ததை கடமைகாக சாப்பிட்டு முடித்தவன் ஏதாவது பேசுவாள் என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தான். நேரம் தான் கடந்ததே தவிர அவளிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஒரு மணி நேரம் கடந்து இருக்க, “நான் போகட்டுமா” என உத்தரவு கேட்டான்.

 

அதற்கும் பதில் வராமல் போக, “ரொம்பதான் பண்ணிக்கிறா. வேணும்னே பண்ண மாதிரி வாய்க்கு வந்ததை சொல்லி திட்டிட்டு சாரி சொல்லவாளாம் நாங்க உடனே சமாதானம் ஆகணுமாம். கொஞ்சம் கெத்து காட்டுவோம்னு தள்ளி இருந்தேன். அது ஒரு குத்தமா போயிடுச்சு இவளுக்கு. ஒரு வார்த்தை பேசுறாளா பாரு. இந்த ரகுவரன் மேல இருந்த பயம் குறைஞ்சிடுச்சு.” சத்தமாக பேசும் துணிவு இல்லாததால் உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினான். 

 

 

கதவை தாண்டும் வரை பொறுமையாக இருந்த மகிழினி டேபிளை தட்ட, திரும்பிப் பார்த்தான். இந்த முறை கணவனை நேருக்கு நேராக பார்த்தவள், “இனி ஒரு தடவை சாப்பிடாம சீன் போட்ட எப்பவும் என் கையால சாப்பாடு கிடைக்காது.” பேச்சை முடித்தாள்.

 

***

 

“அப்பா உங்களை அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.” மகள் அழைக்க, பார்வை தூரத்தில் இருக்கும் மனைவி மீது இருந்தது.

 

 

அவளை சமாதானம் செய்யவே வீட்டிற்கு சீக்கிரமாக வந்திருந்தான். கணவனின் எண்ணத்தை அறிந்து தாமதமாக வந்து சேர்ந்தாள் மகிழினி. வந்ததிலிருந்து குட்டி போட்ட பூனை போல் அவள் இருக்கும் இடத்திலேயே ரகுவரன் காத்துக் கொண்டிருக்க, கண்டுகொண்டதாக தெரியவில்லை.

 

 

வீட்டின் ஆட்கள் இவர்களை நோட்டமிட்டு கொண்டிருந்தாலும் இடையில் வராமல் ஒதுங்கிக் கொள்ள, மனைவி பேசாமல் தனித்து இருப்பது போல் உணர்ந்தான் ரகுவரன். அவள் பார்வையை வாங்க நினைத்தவன் பிள்ளைகள் அனைவரையும் வெளியில் கூட்டு சென்று விளையாட வைத்தான். 

 

 

பிள்ளைகளின் உற்சாகத்தில் பாட்டிகள் இருவரும் மாலை நேர சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு அங்கு வந்து விட, இனன்யாவும் சேர்ந்து கொண்டாள். இனியா சமத்து பிள்ளையாக படித்துக் கொண்டிருக்க, மற்ற ஆண்கள் இருவரும் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. 

 

அனைத்தும் தோல்வியில் முடிய,

வீம்பு பிடிக்காமல் மகளோடு சாப்பிட சென்றான் ரகுவரன். வழக்கம்போல் அவனின் இளம் ரத்தம் சாப்பிடாமல் அடம் பிடிக்க, “மகிழ்குட்டி அப்பா கிட்ட வாங்க சாப்பாடு ஊட்டி விடுறேன்.” என்றான் குழைவாக.

 

 

வீட்டில் இருந்த அனைவரும் ஆச்சரியம் கொள்ள, ரகுவரனின் இளம் ரத்தம் கண்ணை சுருக்கி பார்த்தது தந்தையை. மகனின் பார்வையில் திருத்திருவென்று முழித்தவன், “என்னடா மகிழ்குட்டி.” என்றான் சமாளிக்க எண்ணி.

 

எதுவும் பேசாத குட்டி வாண்டு சமத்தாக அன்னை மடி மீது அமர்ந்துக் கொண்டது. இளையவனை முறைத்த ரகுவரன் தன் மகளுக்கு மட்டும் சாப்பாடு ஊட்டி விட, “அப்பா குட் பாயா பேட் பாயா அம்மா” ரகசியமாக தன் சந்தேகத்தைக் கேட்டான் மகிழ்.

 

 

“குட் பாய் மாதிரி இருக்க பேட் பாய். பேட் பாய் மாதிரி இருக்க குட் பாய்.” மனைவி மகன் இருவரும் பேசிக் கொள்வதை ஓரக் கண்ணால் கண்டு கொண்டவன், “தங்கம் அம்மாவும் தம்பியும் என்ன பேசுறாங்கன்னு கேளுடா.” மகளை தூது விட்டான்.

 

 

“நாங்க என்ன பேசினா உங்க அப்பாக்கு என்னன்னு கேளு மானு.”

 

“அப்பா தானடா உங்க மூணு பேரையும் பாதுகாக்குற பில்லர். எனக்கு தெரியாம எப்படி அவங்க பேசலாம்னு கேளுடா தங்கம்.” 

 

 

“நேத்து நைட்டு நம்ம மூணு பேரையும் விட்டுட்டு இந்த பில்லர் தனியா ஏன் படுத்தார்னு கேளு மானு.” என்றதும் மகன் மகளுக்கு அவை ஞாபகத்திற்கு வர,

 

“எதுக்குப்பா தனியா படுத்தீங்க மான்குட்டி ராத்திரி உங்களை தேடி வந்துச்சு தெரியுமா.” வாய் முழுக்க சாதத்தை அடைத்துக் கொண்டிருக்கும் குட்டி இளவரசி அதை ஓரமாக ஒதுக்கி வைத்து பேசினாள்.

 

 

சாப்பாட்டு கிண்ணத்தை ஓரம் வைத்தவன் கன்னத்தில் குவிந்திருக்கும் சாதத்தை நாக்குக்குள் நுழையுமாறு தள்ளிவிட்டான். 

 

“இப்படி எல்லாம் ஒதுக்கி வைக்க கூடாது தங்கம் வாயில வச்சதும் நல்லா மென்னு சாப்பிடணும்.” என்றுவிட்டு, “நான் ஒன்னும் தனியா தூங்கல தங்கம் உங்க அம்மா தான் என்னை துரத்தி விட்டுட்டா.” என்றான்.

 

“எதுக்கு அப்பா?”

 

“உன்னையும் தம்பியையும் நான்தான் காருக்குள்ள வச்சு பூட்டிட்டனாம்.” என முகத்தை தொங்க போட, “அம்மா நாங்க தான் தெரியாம விளையாடி காரை லாக் பண்ணிட்டோம். அப்பா எதுவும் பண்ணல.” தந்தைக்கு ஆதரவாக பேசினாள் மான்விழி.

 

 

“மானு உங்க அப்பா உனக்கு மட்டும் தான் நல்லவர். அதனால அவர் சொல்ற எல்லாத்தையும் நீ நம்பிட்டு போ.” 

 

 

மகள் எதுவும் பேசாமல் தந்தையின் முகத்தை பார்க்க, அவன் மிகவும் பாவமான முகபாவனையோடு மகளுக்கு சாப்பாடு ஊட்ட முயன்றான். தந்தையின் நடிப்பை பார்த்த மகிழ்வரன், “அப்பா பேட் பாய்.” என்றிட, ” என் புருஷன் குட் பாய்.”  என்று மகனின் முறைப்பை வாங்கிக் கொண்டாள் மகிழினி.

 

 

சாப்பிட்டு முடித்தவர்கள் தங்கள் இல்லத்திற்கு வர, வழக்கம்போல் இரு பிள்ளைகளோடும் விளையாடிக் கொண்டிருந்தான் ரகுவரன். மூவர் அடிக்கும் லூட்டி சமையலறையில் இருக்கும் மகிழினி காதை கிழித்தது. சேட்டை செய்யும் மூன்று குழந்தைகளுக்கும் பால் காய்ச்சி கொண்டு வந்தவள் பிள்ளைகள் இருவருக்கும் கொடுத்து விட்டு, “மானு உங்க அப்பாவ பால் குடிக்க சொல்லு.” என்றாள் அவனைப் பார்க்காது.

 

மகள் கட்டளையிட, தந்தை நிறைவேற்றினான் நீர் ஆதாரத்தை முழுவதும் குடித்து. மூவரும் குடித்து முடிக்கும் வரை பக்கத்தில் இருந்தவள் பிள்ளைகள் இருவரிடமும் டம்ளரை சிரித்த முகத்தோடு வாங்கிக்கொள்ள, அதைவிட அதிக புன்னகையோடு ரகுவரன் நீட்டினான் தன்னிடம் கொடுத்த சிறு குவளையை. சிரித்த பெண்ணின் உதடுகள் உஷ்ணத்தோடு அதைப் பிடுங்கிக் கொள்ள, 

 

 

‘ஆத்தாடி கோபம் ரொம்ப பெருசா இருக்கு போலயே.’ உள்ளுக்குள் நொந்து கொண்டான்.

 

 

இரவு நேர வேலைகளை முடித்து விட்டு வருவதற்குள் மகிழ்வரன் உறக்கத்திற்கு சென்று விட, சின்னவள் தம்பியை அரவணைத்துக் கொண்டு கண் சொக்க ஆரம்பித்தாள். மகளை அணைத்தவாறு திரும்பி படுத்தவன், “என் தங்கத்துக்கு தூக்கம் வந்திருச்சா” என்றான் அன்பொழுக.

 

 

பதில் சொல்லாத பிள்ளை கண்ணை கசக்கி காட்ட, “அப்படி பண்ணாதடா தங்கம்.” கண்ணில் இருக்கும் கையை எடுத்து விட்டவன் பதமாக கண் இமைகளை நீவி விட்டான். 

 

 

தம்பியை விட்டு தந்தையிடம் தாவிக் கொண்டது பெண் குட்டி. சேர்த்தணைத்துக் கொண்டவன், “என் தங்கத்துக்கு பிறந்தநாள் வருது என்ன கிப்ட் வேணும்.” கேட்டிட, “அப்பா எது கொடுத்தாலும் ரொம்ப புடிக்கும்.” என்றது மழலை.

 

 

“எது கொடுத்தாலும் புடிக்குமா தங்கம்” என்றதும் பலமாக தலையசைக்க, நெற்றியில் முத்தம் வைத்தவன் “என் அழகு புள்ள” என்றான் உள்ளிருந்து.

 

 

“அப்பா மான்குட்டிக்கு எத்தனை வயசு ஆகப்போகுது.”

 

“ம்ம்ம்…. என் மான்குட்டி தங்கத்துக்கு பதினோரு வயசு ஆகப்போகுது.”

 

“அப்பா மான்குட்டி அப்போ பெரிய பொண்ணா.”

 

“ஆமா…ஆனா, ஊருக்கு”

 

சொக்கி விழும் கண்களை தெளிய வைத்த குட்டி தந்தையை நிமிர்ந்து பார்க்க, பிள்ளையின் எண்ணம் அறிந்து பதில் சொன்னான் “என் தங்கம் என்னைக்கும் எனக்கு குழந்தைதான்.” என கட்டிக் கொண்டான்.

 

 

 

இருவரும் பேசிக்கொள்ளாமல் நிமிடங்களை கடக்க, “அப்பா அன்னைக்கு குளிக்கும்போது நீ பெரிய பொண்ணு இனிமே நீயா தான் குளிக்கணும்னு சொன்னீங்க.” முகத்தை சுருக்கி கொண்டு கேள்வி எழுப்பினாள்.

 

 

“அதுக்கு ஏன்டா தங்கம் மூஞ்சி இப்படி போகுது.” சுருங்கி காற்று இல்லாத பலூனாக இருக்கும் மகளின் முகத்தை நீவி விட்டு சரி செய்ய, “மான்குட்டி கிட்ட பொய் சொன்னீங்களா.” என்றது முகத்தை இன்னும் சுருக்கி வைத்துக் கொண்டு.

 

 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரம் வேலைகளை முடித்து விட்டு வந்த மகி ஏதோ ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் அமர, மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் வானம் பார்த்து படுத்து மகளை மார்பு மீது போட்டுக் கொண்டான். 

 

 

“பொய் சொல்லல தங்கம் நீ அம்மா மாதிரி பெரிய பொண்ணா ஆனாலும் எனக்கு குழந்தை தான்.”

 

“அது எப்படிப்பா அப்ப மான்குட்டி உயரமால இருக்கும்.”

 

“இருந்தா என்ன தங்கம் என் குழந்தை நல்ல உயரம் ஆயிடுச்சுன்னு சந்தோஷப்படுவேன்.”

 

“அப்போ எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவீங்களா அப்பா.” 

 

“ம்ம்ம்”

 

“இந்த மாதிரி கொஞ்சுவீங்களாப்பா”

 

“ம்ம்ம்”

 

“டெய்லி கதை சொல்லி தூங்க வைப்பீங்களா அப்பா.”

 

புன்னகையோடு மனைவி பக்கத்தில் படுக்க வைத்தவன் அவள் புறம் திரும்பிக்கொண்டு, “இதே மாதிரி அப்பா உனக்கு எல்லாத்தையும் பண்ணுவேன் தங்கம். ஆனா இப்ப இருக்குற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.” என்ற வாசகம் புரியாமல் போனது மான்குட்டிக்கு.

 

 

அதனால் மேற்கொண்டு கேள்வி கேட்காமல் தாய் தந்தையோடு வேறு பேச்சுக்களை உலாவ விட்டாள். பிள்ளையின் மனம் எதை நினைத்து மாறுகிறது என்பதை அறிந்த பெற்றோர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் புரிய வைக்க.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்