ஜீவன் 15
மகனைப் பார்க்க முடிவெடுத்தார் ஆதிலட்சுமி. அவனோ அவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அறைக்குள் முடங்கி இருந்தான். மருமகள் மூலம் மகன் எழுந்து விட்ட செய்தியை கேட்டவர் நேற்று நடந்த அனைத்தையும் மறந்து,
“தரணி நேத்து மதியத்துல இருந்து சாப்பிடாம இருக்க. இப்படியே இருந்தா திரும்பவும் ஹாஸ்பிடல் போக வேண்டியது தான், வந்து சாப்பிடு.” என்று அழைத்தார் எதுவும் நடக்காது போல்.
அவன், அவர் முகத்தை பார்ப்பதை தவிர்க்க, “இப்ப தல குனிஞ்சு நின்னு எதுவும் ஆகப்போறது இல்ல. உன்னால வீட்டுக்கு வந்த பொண்ணு முன்னாடி நாங்க தான் தல குனிஞ்சு நிற்கிறோம்.” என்றதும் முகத்தை நோக்கினான் மகன்.
“இதுக்கு மேல நாங்க சொல்ல எதுவும் இல்ல தரணி. நீயாச்சு உன்ன நம்பி வந்த பொண்ணாச்சு. கொஞ்ச காலம் இரண்டு பேரையும் பார்ப்போம். ஒத்து வந்தா கடைசி காலம் உங்க கண்ணு முன்னாடி. இல்லனா கண் காணாத திசைக்கு கிளம்பிடுவோம்.”
“சாரி மாம்” என அவரை நெருங்க, “அம்மா கிட்ட சாரி சொல்லணும்னு அவசியம் இல்ல தரணி. நீ நல்லா வாழ்றது தான் எங்களுக்கு கொடுக்கிற மிகப்பெரிய சந்தோஷம். முடிஞ்சா அதை கொடுக்க பாரு.” என்றவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்தாள் அகல்யா.
மாமியாரை கண்டுகொள்ளாதவள் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள். மருமகளை பார்த்த பின், “அம்மா மேல சத்தியமா ஒன்னு கேட்பேன் பதில் சொல்லுவியா?” கேட்டார்.
அவ்வார்த்தையில் தம்பதிகள் இருவரும் அவரை நோக்க, “இன்னமும் உன் மனசுல சிவானி மனைவி ஸ்தானத்துல தான் இருக்காளா?” என்றவரின் பார்வை மருமகள் மீதுதான் அதிகம் நகர்ந்தது.
இதை நேரடியாக மகனிடம் கேட்பார் என்று அகல்யா எதிர்பார்க்கவில்லை. அவனும் இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைக்கவில்லை. இருவரையும் திகைப்போடு கட்டிப் போட்டவர் பதிலை எதிர்பார்க்க,
“அவளை என்னைக்கும் என்னால மறக்க முடியாது அம்மா.” என்றான் தரணீஸ்வரன்.
கணவனின் வார்த்தையில் நக்கல் சிரிப்பு பாய்ந்தது மாமியாரிடம். அவரோ எந்த முகபாவத்தையும் பிரதிபலிக்காமல், “ரொம்ப சந்தோஷம் தரணி.” என நகர்ந்தார்.
“அவ கொடுத்த வலி அந்த மாதிரி. சாகுற வரைக்கும் என்னை விடாம துரத்திட்டு இருப்பா. ஆனா, நீங்க கேட்ட மாதிரி மனைவியா இல்ல என்னை ஏமாத்திட்டு போனவளா. என் விருப்பம் இல்லாம ஒருத்தி கழுத்துல தாலி கட்டி இருந்தாலும் இப்போ அவ என்னோட மனைவி. அந்த இடத்துல இன்னொரு பொண்ண வைச்சு அவளை அசிங்கப்படுத்த மாட்டேன்.” என்றதும் சென்றவர் அப்படியே நின்று விட்டார்.
அவர் மட்டும் அல்ல அமர்ந்துக் கொண்டிருந்த அகல்யாவும் எழுந்து விட்டாள் கேட்ட பதிலில். ஆனால், அவனோ எதார்த்தமாக அவ்விருவரையும் கடந்து வெளியில் சென்றான். திரும்பிய மாமியார் மருமகளை பெருமை பொங்க பார்க்க, முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள் வேறு புறம்.
***
சாப்பிட்டு முடித்த தரணீஸ்வரன் தன் அறையில் முடங்கிக் கொள்ள, மகனை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார் மருத்துவமனைக்கு. நேற்று ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கொடுத்து மதுவை தொடக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிற்கு வந்த ஆதிலட்சுமி மருமகளிடம் அதை பகிர, அவள் மாமனாரிடம் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரோ கைக்கு சிக்காமல் அலுவலகம் பறந்து விட்டார். ஆடவனின் மீதி கதையைக் கேட்க இப்பொழுது அதிகமாக ஆர்வம் பொங்கியது அவளுக்கு.
ஒன்று நன்றாக சென்று கொண்டிருந்த கதை பயணம் பாதையில் நின்ற கடுப்பு. மற்றொன்று மாமியார் போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவனின் தோல்வியை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டிற்கும் பதில் மாமனாரிடம் இருப்பதால் அவரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறாள்.
மாலை வேலை வரை தாக்குப்பிடித்த தரணீஷ்வரன் கைகள் நடுங்க ஆரம்பித்தது. மனமும் உடலும் மதுவை கேட்டு அடம் பிடித்தது. அன்னையின் கண்ணீருக்காக இன்று ஒரு நாளாவது குடிக்காமல் இருக்கலாம் என்றவன் எண்ணம் நொடி கடக்க வீரியம் கொண்டு எழுந்து நின்றது. தன்னை அறியாமல் அவனுக்குள் கோபம் உருவாகியது.
கட்டுப்படுத்த நினைத்தவன் குளியலறை சென்று நான்கு முறை குளித்து விட்டான். பத்து நிமிடங்கள் மேல் சென்றதும் உடல் சூடு மதுவை கேட்டு கெஞ்சியது. வேண்டாம் என்று உறுதியாக இருந்தவன் உள்ளம் கொஞ்சம் வேண்டும் என்று இறங்கி வந்தது. கூடவே அன்னையின் முகமும் சேர்ந்து வர, செய்வதறியாது கத்த ஆரம்பித்தான்.
அவனின் சத்தத்தில் வேகமாக ஓடி வந்தார்கள் பெண்கள். இருவரையும் பார்த்த பின் கொஞ்சம் நிதானம் கொண்டவன் எதுவும் நடக்காது போல் நடை பழகிக் கொண்டிருந்தான் அறைக்குள். ஆதிலட்சுமி மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர, அந்தப் பார்வை புரிந்ததோ என்னவோ அவள் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
அன்னை இருக்கும் வரை பொறுமை காத்தவன் கைகள் வேகமாக நடுங்க ஆரம்பித்தது. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சுவற்றில் நான்கைந்து முறை முட்டிக்கொண்டான். அதை கவனித்தவள் தடுக்க செல்ல, தன் இயலாமை மொத்தத்தையும் அவளிடம் காட்டினான் வேகமாக பிடித்து தள்ளி. விழுந்த வேகத்தில் கைமுட்டியில் லேசாக வீக்கம் ஏற்பட்டது அகல்யாவிற்கு.
வலியோடு எழுந்தமர்ந்தவள் அவனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அறையின் மூலையில் அமர்ந்தவன் கை கால்களை கட்டிக்கொண்டு என்னவோ உளறிக் கொண்டிருந்தான். பயம் அவளுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. அருகில் சென்று தொட,
“ஏய்ய்ய்! கிட்ட வராத….” என்று ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தான்.
பயந்து இரு அடி தள்ளி அமர்ந்தாள் அகல்யா. மகனின் குரல் கண்ணீரை கொடுத்தாலும் பூஜையறையில் அமர்ந்திருந்தார் ஆதிலட்சுமி. நொடி முள் கடப்பது போல் அவனின் நிலமையும் தீவிரமானது. தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே தாக்கிக் கொள்ள ஆரம்பித்தான். தடுக்க அவள் சென்றாலும் அவளையும் அடிக்க ஆரம்பித்தான்.
என்ன செய்வதென்று தெரியவில்லை அகல்யாவிற்கு. அறையில் இருக்கும் பொருட்களை போட்டு உடைத்தவன் தண்ணீரை எடுத்து வேகமாக குடித்தான். எச்சில் விழுங்கிக் கொண்டு அவனை நெருங்கியவள், “இப்போ உங்களுக்கு என்ன வேணும்.” என்றாள் பயந்து கொண்டு.
“குடிக்கணும்” என பலம் இல்லாமல் தரையில் கால் மடக்கி அமர்ந்தான்.
“குடிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. ஒரு ரெண்டு நாள் கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க.”
குடிக்கக்கூடாது என்ற வார்த்தையை கூட கேட்க தயாராக இல்லை அவன் மனம். பேய் பிடித்தவன் போல் வேகமாக அவளை நோக்கி தவழ்ந்து நெருங்கியவன்,
“எனக்கு குடிக்கணும். இல்லன்னா என்னை நானே குத்திட்டு செத்துடுவேன்.” என்றான்.
இதுவரை இப்படி ஒரு நிலையில் அவனை பார்க்காததால் திகைத்து, “இ…இல்ல.. இப்ப நீங்க குடிச்சா இன்னும் மோசமா நடந்துப்பீங்க. ரெண்டு நாளைக்கு எதையும் தொடக்கூடாது.” என்றவளை அடிக்க சென்றவன் தன் செயலை செய்யாமல் நிறுத்தினான்.
அடிக்க வருவதை அறிந்தவள் முகத்தை மூடிக்கொண்டாள். அடி விழாமல் இருப்பதால் விழி திறந்தவள் அவனைப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்டான். அவள் பயந்து பின்னால் நகர,
“சொன்னா கேளு என்னால குடிக்காம இருக்க முடியாது. எனக்கு வெறி பிடிக்கிற மாதிரி இருக்கு. என்னையவே நான் ஏதாச்சும் பண்ணிட்டு சாகறதுக்குள்ள என்னை காப்பாத்து.” என்று ஆக்ரோஷத்தில் கத்த ஆரம்பித்தவன் தன் ஆடையை கிழித்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அவள் தடுப்பதையும் மீறி அடித்து அடித்து தன்னை காயப்படுத்திக் கொண்டவன் தலையில் ஒட்டி இருந்த பேண்டேஜை பிய்த்து எறிந்தான். வேகமாக உருவியதில் லேசாக அங்கு ரத்தம் வர, தரையில் படுத்து தலையை முட்டிக் கொள்ள ஆரம்பித்தான்.
“நான் குடிக்கணும். யாராது எனக்கு குடிக்க கொடுங்க. ப்ளீஸ்…. கொஞ்சமாது கொடுங்க. நான் குடிக்கணும்… இப்பவே குடிக்கணும்.”
இவை இன்னும் சில முறை தொடர்ந்தால் நிச்சயம் பெரும் ரத்தத்தை இந்த அறை பார்க்கும் என்று உணர்ந்தவள் வேகமாக தன் மடியில் தாங்கிக் கொண்டாள். அதில் அவனின் ஆத்திரம் அதிகமாக மனைவியின் மடி மீது படுத்தவாறு முட்டினான். கால் இரண்டும் வலியில் துடித்தது.
இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், “தரணி உங்களை நான் குடிக்க அனுப்பி வைக்கிறேன் கொஞ்ச நேரம் அமைதியா படுங்க.”
….
“இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தா அத்தை உங்களை குடிக்க அனுப்ப மாட்டாங்க.”
….
“அவங்க இல்லாத நேரம் பார்த்து நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். என்னை நம்பி கொஞ்ச நேரம் அமைதியா படுங்க.”
பல மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு மெல்ல செவி சாய்க்க ஆரம்பித்தான் அவளுக்கு. ஆத்திரம் குறைந்து மிதமான செயலில் தன்னை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். அதையும் கட்டுப்படுத்த முயன்றவள்,
“நீங்க அமைதியா இருந்தா தான் நான் அனுப்பி வைப்பேன்.”
அவன் நம்புவது போன்று பேச்சை வளர்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் அடைந்தவன் அவள் மடிமீது கண்மூட, நிம்மதி பெருமூச்சு விட்டாள் அகல்யா. அந்த நிலை ஒரு இருபது நிமிடம் சென்றிருக்கும்,
“நான் குடிக்கணும் அகல் எப்படியாது என்னை அனுப்பி வை. அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாங்க. அவங்களுக்கு தெரியாம என்னை எப்படியாது இங்க இருந்து அனுப்பு. குடிக்கலன்னா என்னால இருக்க முடியாது.” என்றவன் தலையில் அடித்துக் கொண்டு,
“இங்க தேவையில்லாம ஏதாச்சும் ஓடிக்கிட்டே இருக்கும். என்னால அதை சமாளிக்க முடியாது அகல். உன்ன கெஞ்சி கேட்கிறேன் இந்த ஒரு தடவை மட்டும் அனுப்பு.” என்று அழ ஆரம்பித்து விட்டான்.
நயமாக பேசி ஒவ்வொரு முறையும் அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். மாலை வேளை சென்று இரவு வேளையும் வந்து விட்டது வீட்டில். இருட்டில் அமர்ந்திருந்தாள் மடியில் கணவனை தாங்கிக் கொண்டு. கருமை நிழலில் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் இப்பொழுது அவள் கைகள் தட்டிக் கொடுக்க துவங்கியிருந்தது அவனை.
விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தவன் மனம் மீண்டும் உச்சிக்கொம்பில் ஏறி அமர்ந்து விட, அவளைப் பிடித்து தள்ளிவிட்டவன் கத்த ஆரம்பித்தான். இரவு விளக்கை போட முயன்றாள். அதற்கு கூட நேரம் கொடுக்காதவன் மெத்தையில் இருக்கும் துணிகளை கிழிக்க ஆரம்பித்தான்.
“அறிவில்லையா உனக்கு? எத்தனை தடவை சமாதானப்படுத்துறது. உன்ன கூட உன்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலன்னா எதுக்காக உயிரோட இருக்க. கேவலம் ஒன்னும் இல்லாத ஒரு போதைக்கு இப்படி நடந்துக்குறியே அசிங்கமா இல்ல உனக்கு. பெத்தவங்களை கஷ்டப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்தி இப்படி வாழ்றதுக்கு செத்துப்போலாம்.” என்று கோபத்தில் கத்தி விட்டாள் அவனிடம்.
தரணீஸ்வரன் அப்படியே நின்றான். இருட்டில் அதை கண்டு கொண்டவள் இனி தொந்தரவு செய்ய மாட்டான் என்று நம்பி விளக்கை போட்டாள். வெளிச்சத்தில் அவன் முகம் பார்க்கலாம் என்று திரும்பியவள் அதிர்ந்தாள் பால்கனி கம்பியில் ஏற முயல்வதை பார்த்து.
ஜீவன் 16
“என்னங்க!” என அதிர்ந்தவள் சுதாரித்துக் கொண்டு அவனை நெருங்குவதற்குள், கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றான்.
யார் செய்த புண்ணியமோ அதற்குள் மனைவியின் கைகள் வேகமாக பிடித்துக் கொண்டது. அறையின் உள்பக்கம் விழுந்தார்கள் இருவரும். இருவரின் விழிகளும் மூடிக்கொண்டிருந்தது பயத்தில். இருவரின் மூச்சுக்களும் வானை தொட்டு விட்டு மீண்டும் பூமியை தொட்டுக் கொண்டிருந்தது. நடுவில் எரிமலை சீற்றம் போல் எகிறி குதிக்கவும் தவறவில்லை உணர்வுகள்.
அவனை விட அகல்யா தான் அதிக பயத்தில் படுத்திருந்தாள். அடுத்து என்ன என்று யோசிக்க தெம்பில்லை உடலில். கணவனின் அசைவில் தான் எழுந்து அமர்ந்தாள். பயம் அகலாத முகத்தோடு மூச்சு வாங்கி அவனைப் பார்க்க, தவறு செய்த குழந்தை தலை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தது.
அவன் இருக்கும் தோற்றத்தில் திட்ட கூட மனம் வரவில்லை அவளுக்கு. எதுவும் பேசாமல் எழுந்து நின்றவள் அவனையும் எழுப்பினாள். கை பொம்மை போல் அவளோடு சென்றவன் மெத்தையில் அமர்ந்தான். இருவரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை.
“குடிச்சிட்டு வாங்க.” என்று இரு வார்த்தைக்கு அவன் மௌனமாக வேண்டாம் என்று தலையசைத்தான்.
“அத்தை கேட்டா நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க கிளம்புங்க.” என்றதும் அவள் முகம் பார்த்தவன் குற்ற உணர்வில் தலை குனிந்து கொள்ள,
“முடிஞ்சா கொஞ்சமா குடிச்சிட்டு வாங்க.” என்றாள்.
“சாரி”
“எதுக்கு?” அவன் பதில் சொல்லாமல் குனிந்த தலையோடு அப்படியே இருக்க,
“கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.” என்றாள் அகல்யா.
“உன்ன கஷ்டப்படுத்துனதுக்கு.”
“அப்படி என்ன பண்ணிங்க?”
…
“உங்களை தான் கேட்கிறேன் தரணி. அப்படி என்ன என்னை கஷ்டப்படுத்தினீங்க.”
“சாரி!”
“என் முகத்தை பார்த்து சொல்லுங்க.”
அவன் தலை நிமிராமல் இருக்க, தாடையில் கை வைத்து நிமிர்த்தினாள். கண்கள் கலங்கி நீர் சூழ இருந்தது. ஒரு நொடி அவள் விழிகளை நோக்கியவன் கைகளை தட்டி விட்டு மீண்டும் தலை குனிந்து கொள்ள, தன்னை பார்க்குமாறு தாடையில் கை வைத்தாள்.
அவன் தட்டி விட, இவள் நிமிர்த்த என்று நிமிடங்கள் கடந்தது. கோபம் கொண்ட அகல்யா வேகமாக உயர்த்த, அதைவிட வேகமாக கோபத்தில் தட்டி விட்டான். ஒவ்வொரு முறையும் அவள் முகம் நிமிர்த்தும் பொழுதெல்லாம் கண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது தரணீஸ்வரனுக்கு. அதை உணர்ந்து தான் தன் செயலை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
“எத்தனை தடவ பண்றது ஒழுங்கா என் முகத்தை பாருங்க.” கோபமான வார்த்தையோடு அவள் முகம் உயர்த்த, “சாரி” என்றவன் தலை கவிழ்ந்து கொண்டான்.
“என்னை பார்த்து சொல்லுங்கன்னு சொன்னேன்.” இந்த முறை விட்டுக் கொடுக்காமல் பலம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி அவன் முகம் நிமிர்த்த, சிகப்பு நிற சிவந்த விழியில் இருந்த திரவம் நில்லாது கன்னம் தொட்டது.
மனைவியின் கைகள் கணவனின் கண்ணீரைத் துடைக்க, வேகமாக இடுப்பை கட்டிக் கொண்டான். அதிர்ந்தவள் கையை விலக்கும் நேரம், “சாரி அகல். என்னால எல்லாருக்கும் ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி தினமும் உங்களை சித்திரவதைப் படுத்துறதுக்கு பதிலா செத்துட்டா எல்லாரும் நல்லா இருப்பீங்க. நான் செத்துப் போறேன். என் அம்மா அப்பாவ மட்டும் நல்லா பார்த்துக்க. என்னால அவங்க ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டாங்க.” என்று தேம்பி அழ ஆரம்பித்தான்.
என்ன செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு. மூச்சு வாங்க அழுகிறான் என்பதை உணர்ந்தவள் பல உணர்வு போராட்டங்களுக்குப் பிறகு தலையை கோதிவிட்டாள் தன்னோடு சேர்த்து. விசும்பி அழுதவன் மெல்ல தன்னை தைரியப்படுத்தினான் அந்த வருடலில்.
தானாகவே அவளை விட்டு பிரியும் வரை தலை கோதுவதை நிறுத்தவில்லை அகல்யா. இப்பொழுது என்ன பேசுவான் என்ற சங்கடத்தோடு அவள் அவன் முகம் நோக்க, அப்படியே மெத்தையில் சாய்ந்தான். கைகள் இரண்டும் மீண்டும் நடுக்கம் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் சுருண்டு படுத்தவன் துடித்துக் கொண்டிருந்தான் உடலை கட்டுப்படுத்த முடியாமல்.
இதற்கு மேலும் அவனைக் கட்டுப்படுத்தினால் சரி வராது என்று உணர்ந்து, “நீங்க குடிக்க போங்க. வீட்ல இருக்கவங்க கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்.” என்றாள்.
முதலில் அதை மறுத்தவன் உடல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து, “என் அம்மா கிட்ட சொல்லிடாத. போனதும் உடனே வந்துடுவேன். நீ சொன்ன மாதிரி கொஞ்சமா குடிச்சிட்டு வரேன்.” என்றவன் முகத்தை திகைத்து பார்த்தாள்.
கோபம் எதுவும் தென்படவில்லை. அதற்கு மாறாக கிடைக்கக் கூடாத ஒன்று கிடைத்தது போல் ஆர்வத்தோடு கண்கள் விரிந்து… வார்த்தை தடுமாறி மனநிலை சரியில்லாதவர் போல் இருந்தது. தரணியின் பாவனையில் தலை தானாக ஆட, அப்படி ஒரு சிரிப்பு அவன் முகத்தில்.
ஒரே ஓட்டமாக ஓடி விட்டான் அங்கிருந்து. பின்னால் வந்தவள் அவன் என்ன செய்கிறான் என்று நோட்டமிட, அன்னை அறியாது பூனை நடை போட்டவன் அவர் அறையை கடந்ததும் ஓட்டம் பிடித்தான்.
***
வீட்டிற்கு வந்த தயாளன் மகனைப் பற்றி விசாரிக்க, அகல்யாவிற்கு தூக்கி வாரி போட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் முழிக்க, ஆதிலட்சுமிக்கு தெரியாது என்பதால் அறைக்குள் இருப்பதாக தெரிவித்தார்.
இருவரும் அவளோடு சகஜமாக உரையாட அவளுக்குத்தான் பதட்டம் ஏறிக்கொண்டே இருந்தது கணவனை நினைத்து. உடனே வந்து விடுவேன் என்றவன் இரண்டு மணி நேரங்கள் ஆகியும் வரவில்லை. இங்கிருந்து கிளம்பும் போது இருந்த மனநிலையில் இப்பொழுது எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற தவிப்பு அதிகமானது.
சாப்பிட்டு முடித்தவர்கள் மகனை சாப்பிட அழைப்பதாக கூற, கை கால்கள் உதற ஆரம்பித்தது அவளுக்கு. மருமகள் நிலை அறியாது ஆதிலட்சுமி மாடிப்படி ஏற,
“அவரு தூங்கிட்டு இருக்காரு. எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க. நீங்க சாப்பாட்ட வைங்க நானே எடுத்துட்டு போறேன்.” என்றாள் பயத்தை மறைத்துக் கொண்டு.
மருமகளின் வார்த்தையில் அதிசயத்தவர் கணவனை பார்த்து புன்னகைக்க, அவரோ மருமகளை ஆச்சரியத்தோடு பார்த்திருந்தார். இருவர் காட்டும் முக பாவனைகளை கவனிக்கும் அளவில் அவள் மனநிலை தெளிவாக இல்லை.
மருமகள் வார்த்தையை மீறும் தைரியம் இல்லாததால் அவர்கள் புன்னகையோடு அங்கிருந்து விடைபெற, கணவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள் அகல்யா. இரண்டு என்ற எண் நான்கு என்றானது அவன் வீட்டை விட்டுச் சென்று. அவனுடைய கைபேசி எண் இல்லாததால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை அவளால்.
இரவு பதினோரு மணிக்கு தள்ளாடி கொண்டு உள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் மாமியார் அறையை பார்த்தாள். அறை கதவு மூடி இருக்கும் தைரியத்தில் கணவனை நெருங்கியவள்,
“இதுதான் நீங்க சீக்கிரமா வர லட்சணமா. போனா போகுதுன்னு அனுப்பி வச்சா எவ்ளோ டென்ஷன் பண்ணிட்டீங்க.” பொறுமையாக தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தாள்.
“நான் எப்ப வேணா போவேன் எவ்ளோ நேரம் வேணா கழிச்சு வருவேன். அதைக் கேட்கிற உரிமை உனக்கு இல்லை.” உளறலோடு வார்த்தைகள் சற்று அதிக சத்தத்தில் வெளிவந்தது.
“சத்தம் போடாம மேல போங்க. நீங்க வீட்ல இல்லங்கற விஷயம் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது.” என்றாள்.
“ஏன் தெரியாது? நான் வீட்ல இல்லன்னு நீ சொல்லி இருக்க வேண்டியது தான. என்ன பண்ணிடுவாங்க அவங்க. இந்த தரணி யாருக்கும் பயப்பட மாட்டான்.” என சட்டை காலரை தூக்கி விட்டவன் நிதானம் இல்லாமல் தடுமாற ஆரம்பித்தான்.
தலையில் அடித்துக் கொண்டு அவனைத் தாங்கியவள், “உன்னை அனுப்பி வச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.” என்று அவனோடு சேர்ந்து மாடிப்படி ஏற முயன்றாள்.
“என்னது! என்னை நீ அனுப்பி வச்சியா? நல்ல காமெடி பண்ற. இந்த தரணி யார் கிட்டயும் எப்பவும் ஃபர்மிஷன் கேட்க மாட்டான். அவன் நினைச்சா போவான். அவன் நினைச்சா வருவான். அவன் நினைச்சா குடிப்பான். அவனே ராஜா, மந்திரி, ராணி எல்லாமே.” என்றவன் வார்த்தைகளை கேட்டுக்கொண்டு ஒரு வழியாக அறைக்கு வந்து விட்டாள்.
மெத்தையில் படுத்திருந்தவன் விடாமல் பேசிக்கொண்டே இருந்தான். காதில் ரத்தம் வராத குறையாக கேட்டுக் கொண்டிருந்தாள் அகல்யா. சிறிது நேரம் பேச்சை நிறுத்தியவன் தூங்கிக் கொண்டிருக்க, போன் அடித்தது. மயான அமைதியாக இருக்கும் அறையில் திடீரென்று ஓசை கேட்க, பதறி எழுந்தவள் யார் என்று பார்த்தாள்.
மாமியார் தான் அழைத்து இருந்தார். மகன் சாப்பிட்டு விட்டானா என்று விசாரிக்க, “ம்ம்” என்ற ஓசையை பதிலாக கொடுத்து துண்டித்தாள்.
அவன் சாப்பிடாமல் இருப்பதை அறிந்து உணவு எடுத்து வந்தவள் சாப்பிட அழைத்தாள். மயக்கத்தில் இருந்தவன் அதை உணராமல் மீண்டும் பேச துவங்கி விட்டான். இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்த சுகன்யா மீது கோபம் பிறந்தது மகளுக்கு.
கடினப்பட்டு அவனை அமர வைத்தவள் மடியில் தட்டை வைக்க, எடுக்கும் ஒரு வாயில் ஒரு பருக்கை தான் உள்ளுக்குள் சென்றது. மீதி அத்தனையும் மடிமீதும் கட்டில் மீதும் விழுந்தது. அருவருப்பாக உணர்ந்தவள் இதற்கு மேல் முடியாது என்று பால்கனியில் நின்று கொண்டாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த தரணீஸ்வரன், “உன்ன நான் கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது. எல்லாம் அவனால வந்தது. தங்கச்சி பாவம் தங்கச்சி பாவம்னு என்னை உன்கிட்ட சிக்க வச்சுட்டான். அவன் மட்டும் இப்ப என் கையில கிடைச்சான் அடிச்சே கொன்னுடுவேன்.” என்றான்.
வார்த்தை செவியை அடைந்ததும் திரும்பி பார்த்தாள் கணவனை. அதை அறியாதவன் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருந்தான். தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் ஆகியது அவளுக்கு. அருகில் அமர்ந்தவள்,
“யார சொல்றீங்க? சிவானி கூட எப்படி உங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு?” மெல்ல பேச்சு கொடுத்தாள்.
முன்னாள் மனைவியின் பெயரில் ஒரு நொடி முகம் மாறியது அவனுக்கு. அதை குறித்து வைத்துக் கொண்டாள். விடாமல் அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க,
“அப்பா அம்மா ஒத்துக்கல. கல்யாணத்தை இன்னும் ரெண்டு வருஷம் தள்ளி வைக்கலாம்னு சொன்னேன். ஆனா, அவ தான் சாகப் போறன்னு பிடிவாதம் பிடிச்சா. அதுக்கு என் கூட இருந்தவனும் ஒத்து ஊதினான். நண்பன் பேச்சைக் கேட்டு தப்பு பண்ணிட்டேன்.” என்றவன் தொடர்ந்தான்,
“இல்ல… அவன் எனக்கு நண்பன் இல்ல. அந்த துரோகிய என் வாழ்க்கையில சிக்க வச்ச அயோக்கியன். அவன தான் தேடிட்டு இருக்கேன். கிடைச்சதும் கொன்னுடுவேன்.” என்று.
உண்மை தெரியாமல் பாதி பாதியாக கேட்கும் வசனங்கள் அவளுக்குள் ஆர்வத்தை தூண்டியது. மயக்கத்தில் இருப்பவனிடம் பேச்சு கொடுத்து கடந்த காலத்தை தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
“அம்மா அப்பா மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க நீங்க எப்படி அவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிங்க.”
ஜீவன் துடிக்கும்…