Loading

அத்தியாயம் 15:

மீண்டும் மருத்துவமனைக்கே வந்து விட்ட தஷ்வந்தை மருத்துவர்களால் முறைக்க கூட இயலவில்லை. பின்னே, பாதி சிகிச்சையில் எழுந்து சென்று, அவனுக்கு ஏதேனும் ஆகி விட்டால், அவர்கள் மஹாபத்ராவிற்கு அல்லவா பதில் கூற வேண்டும். ஆனால், அவள் இருப்பதால், எதுவும் பேச இயலாமல், சிகிச்சையை தொடர்ந்தனர்.

“கைல இருக்குற வென்ஃப்ளான எடுத்து விட்டுட்டு வந்துருக்க. இடியட்டா நீ.” என தஷ்வந்த்தை கடிந்து கொண்டவள், அதன் பிறகு அவனுடனே இருந்தாள்.

மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் தான் இருக்க நேர்ந்தது.

இதற்கிடையில், மாதவ் தான், “ஒரு கொலை சீனை அநியாயமா கெடுத்து விட்டுட்டியே பாஸ்…” என குறைபட்டுக் கொண்டான்.

அதில் அவனை முறைத்த தஷ்வந்த், “நானே அவள் கொலை பண்ண போய்ட்டாளேன்னு பதறி போயிருக்கேன். இவன் வேற… இதுல மதனும் அமிஷும் வேற அவனுங்களை அடி பின்னிட்டானுங்க.” என்றதில், மந்த்ராவிற்கு தான் குளுகுளுவென இருந்தது.

அமிஷ் தனக்காக தான், அவனை அடித்திருக்கிறான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை. புரிந்ததும், உள்ளுக்குள் எழுந்த பரவசத்தை தடுக்கவும் இயலவில்லை.

மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களும், மஹாபத்ரா கல்லூரிக்கே செல்லவில்லை. ஆனால் மற்றவர்களை வம்படியாக அனுப்பி வைத்து விட்டாள். மஹாபத்ரா உடன் இருக்கையில் அங்கிருக்கவும் மந்த்ராவிற்கு பிடிக்காததால், அவள் கிளம்பி விட்டாலும், மாலை நேரம் முழுக்க, மருத்துவமனையில் கழிப்பாள்.

“ஒழுங்கா சாப்பிட கூட மாட்டியா அமுல் பேபி.” தஷ்வந்திற்கு அதட்டி மிரட்டி உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள் பத்ரா.

தானே சாப்பிட்டுக்கொள்வதாக கூறியும் அவள் அடங்கவே இல்லை. அதில் அவனுக்கு தான் ஏதோ போல இருக்க, “குடு. நானே சாப்ட்டுக்குறேன்.” என்றான்.

“என்னடா நீ… சுத்த வேஸ்ட் பெலோவா இருக்க. இந்நேரம் இதை ஒரு ரொமான்டிக் சீனா கிரியேட் பண்றதை விட்டுட்டு, தேஞ்சு போன ரெக்கார்டர் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க. அதான் கையில அடிபட்டு இருக்குல்ல எப்படி சாப்பிடுவ.” என்று முறைத்து வைத்தாள்.

அவனோ முதலில் விழித்து, பின் “ரொமான்ஸ் சீன் நடத்த இங்க என்ன அடிதடியா நடக்குது…” என கேலி செய்ய,

“அடப்பாவி… நீ என்னடா ரொமான்ஸ் பண்றதுக்குலாம் வயலண்ட் சிட்டுவேஷன் எக்ஸ்பெக்ட் பண்ற?” என்று வாயில் கை வைத்தாள்.

அதில் உதட்டை மடித்து சிரித்தவன், “நீ காலேஜ் போக வேண்டியது தான… ஏன் இங்கயே இருக்க” எனக் கேட்டான் கனிவுடன்.

“உன்னை விட்டுட்டு காலேஜ் போக நான் என்ன லூசா… அதுலயும் உன்னை இப்படி ஒரே இடத்துல புடிச்சு வச்சு சைட் அடிக்கிற சான்ஸ் கிடைச்சும் அதை மிஸ் பண்ணுவேனா அமுலு?” என்றவளின் குறும்பில் கரைந்தவன்,

“காலேஜ் கட் அடிக்க இது ஒரு சாக்கு உனக்கு… அதுக்காக எதுக்கு என்னை இழுக்குற.” என்றான் கிண்டலாக.

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. உன்னை கிஸ் பண்ண வைக்கிறதுக்காகவாவது யாரையாவது அடிக்கிறேன்.” என அழகு காட்டினாள்.

அதற்கும் புன்னகையை மட்டும் பரிசளித்தவன், “பத்ரா…” என அழைத்தான் மென்மையாக.

“ம்ம்…” புருவத்தை உயர்த்தி அவள் என்னவெனக் கேட்க, “ஐ லவ் யூ” என்றான் சட்டென.

அதிகபட்சம் சிறு அதிர்ச்சியையாவது எதிர்பார்த்திருந்த தஷ்வந்திற்கு அவளது கேலி சிரிப்பு நெஞ்சை குத்தியது.

“காமெடி பண்ணாத அமுலு.” என்றவள், “இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என்று ஊட்டி விடும் வேலையை தொடர,

“வேணாம்” என்றான் மறுப்பாக. “ப்ச்… இப்ப என்ன பிரச்சனை உனக்கு? டேப்லட் போடணும்ல” என்று அதட்டினாள்.

“ஒருவேளை சாப்பிட்டு டேப்லட் போடலைன்னா நான் செத்துற மாட்டேன் பத்ரா. இப்ப என் ஹெல்த்ல உனக்கு ஏன் இவ்ளோ அக்கறை. லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல தான இருக்கனும்ன்னு நினைச்ச. அப்போ பிஸிக்கல் நீட்ஸ மட்டும் முடிச்சுட்டு உன் வேலையை பாத்துட்டு போக வேண்டியது தான.” எரிச்சலில் வார்த்தைகளை கொட்டி இருந்தான்.

அவனை அமைதியாக பார்த்தவள், “உனக்கு அப்ஜக்ஷன் இல்லைன்னா, எனக்கும் இல்ல” என்று முடித்து விட,

அவனுக்கோ ஒரு நொடி எதுவும் புரியவில்லை. “என்ன அப்ஜக்ஷன் இல்ல?” மீண்டும் ஒரு முறை கேட்டவனிடம்,

“அதான் நீ சொன்ன பிஸிக்கல் நீட்ஸ்…! உனக்கும் இருக்கும் எனக்கும் இருக்கும்… சோ ஐ டோண்ட் மைண்ட்.” என தோளைக் குலுக்கினாள்.

அவனுக்கு தான் கோபம் பெருக்கெடுத்து ஓடியது. ‘நான் சீரியஸா சொல்ற விஷயத்தை காமெடியா எடுத்துக்குறா. டென்ஷன்ல சொன்ன விஷயத்தை சீரியஸா எடுத்துக்குறா… இவளை…’ எனப் பல்லைக்கடித்துக் கொண்டவன், அதன் பிறகு அவளிடம் பேசவே இல்லை.

அவளோ இப்படி ஒரு பேச்சு வார்த்தை தங்களுக்குள் நிகழவே இல்லை என்ற ரீதியில், “டேப்லட் எடுத்துக்கோ அமுலு… பெயின் எப்படி இருக்கு? கொஞ்சமாச்சு குறைஞ்சுருக்கா?… ஏன் முழிச்சே இருக்க தூங்கு…” என பல வகையில் அவனை கவனித்துக் கொண்டே இருந்தாள்.

எதற்கும் பதில் கூறாமல் அமைதியை மட்டுமே கடைபிடித்தவனின், மௌனம் அவளின் சமநிலையைக் கெடுத்தது.

“தஷ்வா… ஏதாவது பதில் சொல்லு” அவள் அதட்டலாக கேட்க,

“உங்கிட்ட பேச பிடிக்கல பத்ரா. ஐ ஜஸ்ட் ஹேட் யூ…” என்றான் பொங்கிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு.

பக்கென சிரித்தவள், “நேத்து தான் ஐ லவ் யூ சொன்ன, இப்ப அதுவே ஐ ஹேட் யூ ஆகிடுச்சா. கமிட்மெண்ட்ல எல்லாமே ஒரே மாதிரி இருக்குறது இல்ல அமுலு. பாரு உன்னையவே மாறி மாறி பேச வைக்குது. எப்பவும் என் பாய் ஃபிரெண்டாவே இரு அமுலு” என்றாள்.

அவளை உறுத்து விழித்தவன், மெல்ல தணிந்து, “மனசுல காதல் இருக்கும் போது, ‘லவ் யூ’ ன்னு சொன்னாலும் ‘ஹேட் யூ’ ன்னு சொன்னாலும் ஒரே அர்த்தம் தான் பத்ரா. விச் மீன்ஸ், ஐ ஆல்வேஸ் லவ் யூ. ஆனா, எனக்கு உன்னை லவ் பண்றது கொஞ்சம் கூட பிடிக்கலடி. என்னை ஃபோர்ஸ் பண்ணி, இந்த நிலையில்லாத உறவுக்குள்ள இழுத்து விட்டுட்டு, என்னை மொத்தமா மாத்திட்டு, இப்ப லவ் பண்றேன்னு சொன்னா, ஜஸ்ட் பாய் பிரெண்டுன்னு சொல்லி என்னை சாவடிக்கிற.” என்றவனின் குரலில் ஆதங்கம் மிகுந்தது.

சிறு தடுமாற்றம் தோன்றினாலும், அதனை மறைத்துக் கொண்டவள், தீவிர முக பாவனையுடன், “திஸ் இஸ் த லாஸ்ட் தஷ்வா. இன்னொரு தடவை நமக்குள்ள லவ்ன்ற வார்த்தை அடிபட்டா, அப்பறம் அது பிரேக் – அப்ல முடிஞ்சுடும். காட் இட்?” என்றதில்,

“அதுக்கு இப்பவே பிரேக் – அப் பண்ணிடு. நானாவது நிம்மதியா இருப்பேன்ல.” என்றவனின் விழிகளில் என்னை விட்டுவிடேன் என்ற கெஞ்சல் இருந்தது.

அதில் சற்றே கோபமுற்றவள், “சோ, நீ லவ் பண்றேன்னு சொன்னா, நான் உன்னை பிரேக் – அப் பண்ணிடுவேன்னு உனக்கு தெரியும். அதான், கிஸ் பண்ற மாதிரியும், ப்ரொபோஸ் பண்ற மாதிரியும் நடிச்சு, எஸ்கேப் ஆகலாம்ன்னு பாக்குற?” என்று குரலை உயர்த்தினாள்.

ஒரு நொடி அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே கணத்தில் தன் காதலை நடிப்பு என்று கூறி விட்டாளே… என ஆற்றாமையாக இருந்தது.

“பத்ரா…” என அவன் பேச வரும் முன்னே, அவனை தடுத்து நிறுத்தியவள், “இன்னொரு தடவை என்கிட்ட நடிக்கிற வேலை வச்சுக்காத தஷ்வா. எனக்கு உங்கிட்ட பிடிச்சதே உன்னோட ஒரிஜினாலிட்டி தான்.” என்று கூறி விட்டு வெளியில் செல்ல, அவனுக்கு ஐயோ என்றிருந்தது.

கல்லூரிக்கு அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மந்த்ரா, தூரத்தில் அமிஷ் வண்டியில் வருவதை பார்த்து விட்டாள்.

அருகில் வந்ததும், அவனைக் காணாதது போன்று தலையை தாழ்த்திக் கொள்ள, நேராக அவள் முன் வண்டியை நிறுத்தியவன், “நான் வந்தது உனக்கு தெரியவே தெரியுதுன்ற மாதிரி சீன் போடாத மந்து. ஹாஸ்பிடல் தான போற. வா…” என்று பின்னால் கண் காட்டினான்.

ஏனோ இன்று அவனை மறுத்துப் பேசவும் வரவில்லை அவளுக்கு. அமைதியாக அவன் பின்னால் ஏறிக் கொண்டதில், அவனுக்கு தான் மனதினுள் மென்சாரல்!

மருத்துவமனை வாசலில் இறங்கிக் கொண்டவள், “தேங்க்ஸ் ஃபார் தி லிஃப்ட்!” என்றாள் அவனைப் பாராமல்.

“ஹ்ம்ம். வாழ்க்கை முழுக்க நான் தான் உனக்கு லிஃப்ட் குடுக்க போறேன் மந்து. அப்போ எத்தனை தடவை தேங்க்ஸ் சொல்லுவ?” எனக் கேட்டு சிரித்தவனை முறைத்தபடி, “ரொம்ப தான் ஆசை!” என சிலுப்பிக் கொண்டாள்.

“ஏதோ ஹாஸ்பிடல்க்கு சீக்கிரம் வந்து தஷுக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு உங்க கூட வந்தேன்.” என சமாளித்தவளிடம்,

“ஹா ஹா. நீ என்ன ஹெல்ப் பண்றது…? அதான் என் ப்ரெண்ட் அவன் கூடவே இருக்காளே. நீ வேணும்ன்னா என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணேன்!” என்றான் குறும்புடன்.

மஹாபத்ராவின் பேச்சை எடுத்ததும், தானாக நடந்தவை அனைத்தும் கண் முன் தோன்ற, முகம் சுருங்கிப் போனது மந்த்ராவிற்கு.

“உங்க பிரெண்டு எப்பவும் அவன் கூடவா இருக்க போறா. எப்படியும் கழட்டி விட தான போறா. அவள் சொல்லிட்டு கழட்டி விடுவா… நீங்க எப்படி?” ஏதோ ஒரு கோபம் தாக்க கேட்டு விட்டவளை அறைய தான் கை முணுமுணுத்தது.

“மைண்ட் யுவர் வர்ட்ஸ்!” பல்லைக்கடித்தவனின் முகம் சினத்தில் சிவந்திருக்க, ‘நான் அப்டி எல்லாம் செய்ய மாட்டேன்’ என்ற வார்த்தையை எதிர்பார்த்தவளுக்கோ, அவனது கோபம் கண்டு கண் கலங்கியது.

‘இவங்க பழக்க வழக்கமே வேணாம்னு தான ஒதுங்கி போன. அப்பறம் ஏன் தேவை இல்லாம அவன்கூட பைக்ல வந்து, எதை எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போற…’ என தன்னையே நிந்தித்துக் கொண்டவள், அவனுக்கு தனது விழிகளை காட்டாமலேயே உள்ளே சென்று விட்டாள்.

‘சே…! எப்ப பார்த்தாலும் என்னவோ இவளை ஏமாத்த பிறந்த மாதிரியே பில்ட் அப் குடுக்க வேண்டியது.’ என சிறிது நேரம் கோபத்தில் அலைந்தவன், பின் மெல்ல நிதானம் பெற்று, அவளையும் புரிந்து கொள்ள முயன்றான்.

அவளிடம் பேசுவதற்காக உள்ளே செல்ல, அவளோ மீண்டும் பாராமுகம் காட்டி கண்ணாமூச்சி விளையாடியதில், அமிஷிற்கு தான் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

தஷ்வந்தின் உடல்நிலை சீரானதும், மீண்டும் கல்லூரி வாழ்க்கைக்குள் புகுந்தனர். அதன் பிறகு தவறி கூட காதல் என்ற வார்த்தையை கூறவே இல்லை அவன். ஏனோ, அவளிடம் விளக்கம் கூறி, தன்னை நிரூபிக்கவும் பிடிக்கவில்லை. எப்படி பேசினாலும், இறுதியில் தன் காதல் நடிப்பு என ஒதுக்கி விடுபவளிடம் பேசி என்ன பயன்?

ஆனாலும், தினம் தினம் அவளது அன்பில் உடைந்து போகிறவனுக்கு, நாளுக்கு நாள் அக்காதல் மெருகேறியதே தவிர குறையவில்லை. எப்படி இக்காதல் தன்னுள் நுழைந்து, ஆழமானது என்றும் புரியவில்லை அவனுக்கு. ஆனால், எக்காரணம் கொண்டும் அவளை விட்டுக்கொடுக்க இயலாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.

அவ்வுறுதி அவளுக்கும் இருக்க வேண்டும் என்ற நிதர்சனம் புரியாதவனாய், தனக்குள் அளவுக்கு அதிகமான காதலையும் வளர்ந்துக் கொண்டான், அது வெறும் காயத்தை மட்டுமே தரப் போகிறது என்றறியாமல்.

“படத்துக்கு போவோமா அமுலு?” எனக் கேட்ட மஹாபத்ராவை நிமிர்ந்து பார்த்த தஷ்வந்த், “உனக்கு இன்டெர்ன்ஷிப் ஸ்டார்ட் ஆகிடுச்சுல. லீவே எடுக்க முடியாது. அப்பறம் எப்படி படத்துக்கு போவ?” எனக் கேட்டான்.

“ப்ச்… ஆமா பெரிய இன்டெர்ன்ஸ்! கத்தியை எடுத்து கையை அறுக்குறவளுக்கே, அதை எப்படி ட்ரீட் பண்ணனும்ன்னு சொல்லிக் குடுக்கும் போது எனக்கே சிரிப்பு வருது அமுல் பேபி.” என்றவளை முறைத்தவன், “எனக்கு பாவமா தான் இருக்கு. உங்கிட்ட வர்ற பேஷண்ட்ஸை நினைச்சு. பழக்க தோஷத்துல, கட்டு போடுறதுக்கு பதிலா கத்தியால போட்டுற போற…” என நக்கலடித்தான்.

உதட்டை சுளித்த மஹாபத்ரா, “இப்ப நீ படத்துக்கு வர்றியா இல்லையா?” எனக் கேட்டாள் தீர்மானமாக.

“லாஸ்ட் இயர் ஆவது பங்க் பண்ணாம இன்டெர்ன்ஸ் அட்டென்ட் பண்ணு பத்ரா. நாளைக்கே சப்ஜெக்ட் புரியாம யாரையாவது போட்டு தள்ளிடாத.” என மீண்டும் கேலி செய்ய, அவனை உறுத்து விழித்தாள்.

“வர வர உனக்கு பயம் விட்டு போச்சு தஷ்வா.” என அவன் தலையை பிடித்து ஆட்டியதில், “உங்கிட்ட எனக்கு பயம்ன்னு யாரு சொன்னா…?” என்றான்.

“ஹோ… நீ என்னை பார்த்து பயப்படல? அப்படி தான?” என்றதில்,

“ஆமா” என வேகமாக தலையாட்டினான்.

அதில், அவனருகில் நெருங்கியவள், “அப்போ என்னை அடி.” என்றாள் மெல்லமாக.

“உனக்கு பயந்து அடிக்கலன்னு யாரு சொன்னா, எனக்கு வன்முறை பிடிக்காதாக்கும்.” என்றபடி நகர்ந்து நின்றவனுக்கு, அவளது நெருக்கம் மூச்சடைத்தது.

“ஆஹான்…! நல்லா சமாளிக்க கத்துக்கிட்ட அமுல் பேபி.” என அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளிடம் இருந்து மீண்டும் விலகியவன், “காலையிலேயே கன்னத்தை எச்சில் பண்ணாத…” என்றான் பிடிக்காத பாவனையோடு.

“நடிக்காத அமுலு. நான் கிஸ் பண்ணதும் அதை சைலண்டா வாங்கிட்டு, சமத்தா கிளம்பிடுற. அப்பறம் எதுக்கு, இந்த ஆக்டிங்… ம்ம்?” என விழியுயர்த்தி கேட்டதில், “நீ லவ்வபிளா கிஸ் பண்ணிருந்தா, நானும் பிடிக்காத மாதிரி ஆக்டிங் பண்ண வேண்டிய அவசியம் இல்லையே.” என்று நேராக தாக்கிட, அவள் முறைத்தாள்.

“எனக்கு டைம் ஆச்சு கிளம்புறேன். நீ இன்டெர்ன்ஸ்க்கு போனாலும் சரி, போகலைன்னாலும் சரி. உன் பாடு…!” என அசட்டையாக கூறி விட்டு சென்றான். இப்போதெல்லாம், வார இறுதி என்று அல்லாமல், இடைப்பட்ட நாட்களிலும் அபார்ட்மெண்டிலேயே தங்கி கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். அதனை அவன் தடுக்கவும் இல்லை. அதே நேரம் தரையில் படுக்கும் பழக்கத்தை மாற்றவும் இல்லை.

காரில் ஏறி பாதி தூரம்  சென்று விட்டவனால், அதற்கு மேல் தாக்கு பிடிக்க இயலவில்லை. ‘இவளை வச்சுக்கிட்டு, நான் படுற அவஸ்தை இருக்கே…’ என முணுமுணுத்து விட்டு, “மதன், என்னை வீட்ல விடு.” என்றிட, அவனை ஆச்சர்யமாக பார்த்த மாதவ் “எதுக்குடா?” எனக் கேட்டான்.

“அது… என் ஐடி கார்ட மறந்துட்டேன்” என பச்சையாக பொய் கூறியவனை ஒரு மார்க்கமாக பார்த்த மாதவ், அவனது கழுத்தில் தொங்கி கொண்டிருந்த ஐடி கார்டை கண்டு கமுக்கமாக சிரித்தான்.

அதில் விழிகளை மூடி திறந்து நொந்த தஷ்வந்த், அசடு வழிந்தான்.

மதன் நேராக வீட்டிற்கே செல்ல, மாதவ் தான், “பாஸ்… நான் ஒன்னு சொல்லட்டா” என மீண்டும் ஆரம்பித்தான்.

“என்னடா?” எனக் கேட்ட தஷ்வந்திடம், “இல்ல வேணா இன்னொரு நாள் சொல்றேன்” என்று மீண்டும் அதே பல்லவியை பாட,

“டேய்… நானும் இத்தனை வருஷமா பாக்குறேன். எதையோ சொல்ல வந்துட்டு சொல்ல வந்துட்டு மழுப்புற. என்ன தாண்டா சொல்ல வர்ற?” எனக் கேட்டான் கடுப்பாக.

“ஹி ஹி… அது வந்து பாஸ்… நீ ஸ்டார்டிங்லயே சீனியர்கிட்ட விழுந்துட்ட. அக்கா சொன்னா கேட்டுக்குற. அவளை பத்தி தப்பா பேசுனா பொங்குற, திட்டிக்கிட்டுனாலும் அவள் கூடவே தான் இருக்குற. அவள் கோபப்பட்டா சமாதானம் பண்ற, அவளுக்கு ஒண்ணுன்னா பதறுற துடிக்கிற… ஆனா என்ன,  இதெல்லாம் நான் முன்னாடியே சொல்லிருந்தா நீ ஒத்துக்க மாட்ட. அதான் சொல்லல…” என உதட்டை பிதுக்கினான்.

அவனை முறைக்க முயன்று தோற்ற தஷ்வந்த், மென் சிரிப்புடன், “உண்மை தான்!” என்றான் ரசனையாக.

அதில் விழி விரித்த மாதவ், “என்ன உண்மை பாஸ்? நீ சீனியர்கிட்ட விழுந்ததா?” என கேலியாக கேட்க, சிறு வெட்கப்புன்னகை பூத்தவன், “அவள் தான் என்கிட்ட விழுந்தா…” என்று கண் சிமிட்டினான்.

“ஓ! அப்போ ஒரே சம்திங் சம்திங் தான் ஓடுது. அப்போ காலேஜ் முடியும் போது கல்யாண பத்திரிக்கையும் வரும்ன்னு சொல்லு…” என குஷியாகி கேட்க, தஷ்வந்த்தின் மலர்ந்த முகம் வாடி விட்டது.

“தெரியல மாதவ். இதெல்லாம் எங்க போய் முடியும்ன்னு எனக்கு புரியவே இல்ல. ரொம்ப குழப்பமா இருக்கு. சில நேரம் பயமா இருக்கு. ஆனா இதெல்லாம் தாண்டி, நான் அவளை என் உயிரா நேசிக்கிறான் பாஸ். அது அவளுக்கு புரியவும் இல்ல. இனிமேலும் புரியுமான்னு தெரியல.” என்றவனின் குரலில் அத்தனை வருத்தம்.

இதுவரை, அவனிடம் இத்தகைய வேதனையை கண்டிராத மாதவ், விளையாட்டை நிறுத்தி விட்டு, அவனது தோள்களில் தட்டினான்.

அவனுக்கும் என்ன கூறுவது என்று புரியவில்லை. ‘நமக்குள் எந்த வித கமிட்மெண்டும் கிடையாது’ என ஆரம்பத்திலேயே திட்டவட்டமாக அவள் தான் கூறி விட்டாளே… இப்போது வரையிலும் அவளது முடிவில் தெளிவாக இருப்பவளை எண்ணி, சற்று வருத்தமும் எழுந்தது மாதவிற்கு. 

தஷ்வந்தை வீட்டில் இறக்கி விட்டு விட்டு, மாதவ் கல்லூரிக்கு செல்ல, தனதற்குள் நுழைந்தான்.

அதே நேரம், மஹாபத்ராவும் குளித்து விட்டு, துவாலையை சுற்றிக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியில் வர, இருவரும் சன்னமாக அதிர்ந்தனர்.

அத்தியாயம் 16:

“டேய்… நீ காலேஜ் போகலையா?” கேட்டபடி மஹாபத்ரா நெளிய, அவனோ சட்டென பார்வையை திருப்பிக் கொண்டு, “சாரி… நான் தெரியாம… ப்ச்… கதவை லாக் பண்ணிருக்கலாம்ல” எனக் கடிந்து விட்டு நகர எத்தனிக்கும் போதே, முதன் முறை விடுதியில் தன்னை துண்டுடன் நிற்க வைத்து கலவரப்பப்படுத்தியது நினைவு வந்தது.

அவளோ, “ரோஷப்பட்டு காலேஜ்க்கு போனவன், திரும்பி வருவன்னு நான் என்ன கனவா கண்டேன்.” என மெல்ல முணுமுணுத்திட, அவனோ சிரிப்பை அடக்கிக்கொண்டு சட்டமாக கட்டிலில் வந்து அமர்ந்தான்.

வெளியில் செல்ல போகிறான் என எண்ணியவள், அவன் வந்தமர்ந்ததும் திகைத்து, “என்ன பண்ற?” எனக் கேட்க,

“நீ மட்டும் என்னை துண்டோட பார்த்த தான. அதான் நானும்… பழிக்கு பழி…” என்று கன்னத்தில் கை வைத்து பார்த்தான்.

அவனது பார்வையில் சிவந்தவள், பின் அவனின் குறும்பில் முறைத்து, “பழி தான வாங்கணும். வாங்கிக்கோ. நான் ஒன்னும் உன்னை மாதிரி பயந்து நடுங்க மாட்டேன்…” என அழகு காட்டியவள், கண்ணாடி முன் நின்று, ஈர கூந்தலை உலர்த்தினாள்.

“இவள்கிட்ட கூச்சத்தை எதிர்பார்த்தது என் தப்பு தான்!” என வாய்க்குள் திட்டிக்கொண்டவன், “கிளம்பி வா.” என்று வெளியில் சென்றிட, அவள் இதழ்களிலும் சிறு புன்னகை.

நாட்கள் நகர்ந்திட, ஒருமுறை, மஹாபத்ரா, “ஆமா அமுலு நான் கேட்கணும்ன்னு நினைச்சேன். உன் அக்கா மேரேஜ் பண்ணிட்டாங்கன்னு சொன்ன? எங்க இருக்காங்க?” எனக் கேட்க,

“மாம்ஸ்க்கு ஃபாரீன்ல ஜாப் கிடைச்சுடுச்சு பத்ரா. சோ மாம்ஸ் அங்க போய்ட்டாரு.” என்றதும், “அப்போ உன் அக்கா?” எனக் கேட்டாள் புரியாமல்.

“அவள் சென்னைல அவள் மாமியார் வீட்ல தான் இருக்கா. கொஞ்ச நாள்ல மாம்ஸ் அவளை கூப்ட்டுக்குறேன்னு சொன்னாங்க. இன்னும் என் அப்பா அம்மாவும் அவள் மேல கோபமா தான் இருக்காங்க. சோ, அப்டியே போயிட்டு இருக்கு” என்றான்.

அவனை விசித்திரமாக பார்த்தவள், “நாடு தாண்டி போறதுக்கு ஏண்டா, அவசரமா கல்யாணம் பண்ணனும்? இதுக்கு பேரு ஒரு கல்யாணம்…” என சலிப்புடன் கூறியதில் அவனும் பதில் கூறவில்லை.

அவனுக்கும் ஆதங்கம் தான், மஞ்சுளாவை தனியாக விட்டு சென்றதில்…

இதோ அதோவென அவளுக்கும் படிப்பு முடியும் தருவாயில் இருந்தது. நாள் செல்ல செல்ல, தஷ்வந்திற்கு தான் இருப்பு கொள்ளவில்லை. அவளது படிப்பு முடிந்ததும், தன்னை விட்டு செல்வதாக கூறினாளே, சென்று விடுவாளோ… என்ற தவிப்பு மனதை அரித்தது.

அதனை வெளிப்படுத்தாமல், முடிந்த அளவு அவளுடனே நேரத்தை செலவழித்தான். அவள் அபார்ட்மெண்டில் தங்கும் நேரமும், அவளையே பார்த்தபடி இருப்பான்.

அவனது பார்வை உறுத்தினாலும், அதனை முயன்று ஒதுக்கினாள்.

“இன்னும் ஒன் வீக்ல உன் இன்டெர்ன்ஷிப் முடியுது பத்ரா…” உள்ளே சென்ற குரலில் தஷ்வந்த் கேட்க, “ம்ம்” என்றாள் அவளும்.

“அதுக்கு அப்பறம் என்ன பண்ண போற?”

“ஹையர் ஸ்டடீஸ்க்கு நானும் என் ப்ரெண்ட்ஸும் யூகே போகலாம்ன்னு இருக்கோம்” என்றாள் ஏதோ சிந்தித்தபடி.

தொண்டையை அடைக்க, “ஓ” என்றவன், “அப்போ… நான்… நான் ஹாஸ்டல் போய்டுவா?” தவிப்புடன் அவன் கேட்க,

“ம்ம்! உன் இஷ்டம். உனக்கு சொன்ன டைம் தான் முடிஞ்சுதே.” என்றாள் தலையை சரித்து.

இதழ்களை அழுந்தக் கடித்தவன், “நிஜமாவே உனக்கு என்மேல எந்த ஃபீலிங்க்ஸும் இல்லையா பத்ரா? எதுவுமே இல்லன்னா, இத்தனை வருஷமா நமக்குள்ள இருந்த ரிலேஷன்ஷிப்க்கு பேர் என்ன?” என்றான் ஆதங்கத்துடன்.

அவளோ பதில் பேசவே இல்லை. “அமுலு! நான் ஒண்ணு சொன்னா கேட்பியா?” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தவளிடம், “சொல்லு” என்றான்.

அதற்குள் அவளது தந்தை போன் செய்ததில், “நானா காலிங் அமுலு. நான் வீட்டுக்கு போறேன். சீ யூ லேட்டர்.” என்றவள், மறக்காமல் அவனது கன்னங்களில் தனது அதரங்களை பதிக்க, இம்முறை அவளைத் தடுத்து, அவனே முத்தமிட்டான். பெண்ணவளின் முகம் முழுதும் ஆடவனின் வசம் இருக்க, அவள் தடுக்கவும் இல்லை.

அவளது மலரிதழ்களில் தனது கட்டுப்பாடுகளை உடைத்து, தேன் அருந்தியவன், அவளை விடும் எண்ணமே இல்லாது கட்டி அணைத்திருந்தான்.

சில நிமிடங்களில் அவளே பிரிந்து, “என்ன ஆச்சு உனக்கு? இப்பா நான் போகலைன்னா நானா இங்கயே வந்துடுவாரு அமுலு. லெட் மீ கோ!” என வலுக்கட்டாயமாக அங்கிருந்து சென்றாள்.

அவளுக்கு படிப்பு முடிந்த மறுநாள் தான் மஞ்சுளாவும் ஹைதராபாத் வர வேண்டியதிருந்தது. எப்போதும் தனியாக பயணப்பட்டு பழக்கம் இல்லாதவளை, தானே வந்து அழைத்து போவதாக தஷ்வந்த் கூறியும் மறுத்து விட்டாள்.

“உனக்கு எக்ஸாம்ஸ் இருக்குன்னு சொன்னீல தம்பூ. நீ எனக்காக வேலையை விட்டுட்டு வராத. நான் வந்துடுறேன்” என பத்தாவது முறையாக தம்பியை சமாதானம் செய்தாள்.

‘இவள் சொல்லு பேச்சே கேட்க மாட்டேங்குறா’ என ஏற்கனவே தனது தோழமைகளிடம் புலம்பி தள்ளியதில், அவள் வருகை பற்றி மஹாபத்ராவிற்கும் தெரியும்.

“நீ ஏண்டா ஓவரா இமேஜின் பண்ற? அவள் என்ன கண்டம் விட்டு கண்டமா வர்றா. இந்தா இருக்குற சென்னைல இருந்து வர்றா. இதுக்கு ஏன் இவ்ளோ சீனு…” என்றாள் அசட்டையாக.

அதன் பிறகு, அடுத்த ஒரு வாரமும் மஹாபத்ராவை அவன் பார்க்கவே இல்லை. அன்றுடன் அவளுக்கு இன்டெர்ஷிப்பும் முடிந்திருக்க, அதற்கு மேலும் பொறுக்க இயலாமல், அவளுக்கு போன் செய்தான்.

உடனே அழைப்பை ஏற்றவள், “வீட்டுக்கு தான் வர போறேன் அமுலு. அங்க பார்க்கலாம்” என்று விட்டு போனை வைக்க, அவனும் உடனடியாக அபார்ட்மெண்டிற்கு விரைந்தான்.

இங்கோ, மந்த்ராவை நிறுத்தி அவளை யாசகத்துடன் பார்த்திருந்தான் அமிஷ்.

“உனக்கு என்ன தாண்டி பிரச்சனை. தெரியாம அடிச்சு தொலைஞ்சுட்டேன் அதுக்காக இத்தனை வருஷமா என்னை சாவடிக்கிற. உனக்கு என் லவ் புரியுதா இல்லையாடி?” எனக் கேட்க, அவளுக்கு பதில் சொல்ல இயலாத நிலை தான்.

அந்த வயதில் ஏனோ அவளால் பக்குவமாக முடிவெடுக்க இயலவில்லை. நாளை திருமணம் ஆனால் கூட, அவளுக்காக தன்னை விட்டுக்கொடுத்து விடுவான் என்ற பயமே அவளை ஆட்டுவித்தது. அதனைக் கூறினால், அவனும் அதை ஒப்புக்கொள்ளத்தான் செய்வான் என்றுணர்ந்து, செய்வதறியாமல் நின்றாள்.

“என் லவ்க்கு ஒரு பதில் சொல்லு மந்து. உன் மனசுல நிஜமாவே நான் இல்லையா?” ஏக்கத்துடன் அவன் கேட்டது அவளை அசைத்தது.

ஆனால், பதில் கூற வார்த்தை தான் வரவில்லை. அவனைப் பார்க்கவும் இல்லை.

அதில் பெருமூச்சு விட்டவன், “இன்னைக்கு தான் எனக்கு லாஸ்ட் டே. நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு காலேஜ் பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணுவேன். நீ வர்ற… என் மேல உண்மையாவே லவ் இருந்தா வா மந்த்ரா. இல்லன்னா உன் மனசுல நான் இல்லைன்னு நினைச்சு உன்னை மறந்துடுறேன்.” என திட்டவட்டமாக உரைத்தவன், அங்கிருந்து சென்று விட்டான்.

அவளுக்கு தான் ஆயாசமாக இருந்தது. கூடவே அவனது வலி அவளையும் தாக்க, சோர்ந்த முகத்துடன் திரும்பியவள், எதிரில் மாதவ் நிற்பதைக் கண்டு, அழுதே விட்டாள்.

“என்ன ஆச்சு மந்த்ரா? அவன் ஏன் உங்கிட்ட பேசிட்டு போறான். எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டவனுக்கு, பாவம் அமிஷ் பேசியது எதுவும் புரியவில்லை.

அவளே அழுகையுடன் மேலோட்டமாக நடந்ததை கூற, ‘இங்க ஒரு லவ் டிராக் ஓடிருக்குறது கூட தெரியாம இருந்துருக்கோமே’ என தன்னையே சாடிக் கொண்டவன், ‘அதான் நம்ம இன்னும் சிங்கிளாவே இருக்கோம் போல’ என நக்கலடித்து விட்டு, “நீ அவனை லவ் பண்றியா?” என்று கேட்டான்.

அதற்கும் அழுகையையே பதிலாக கொடுத்ததிலேயே அவனுக்கும் புரிந்து விட்டது. ஆனால், அமிஷின் மொழி புரியாத காரணத்தாலோ என்னவோ அவனது காதலின் ஆழமும் அவனுக்கு புரியாமல் போனது. இவனை பார்த்தா சீரியஸ் ரிலேஷன்ஷிப் மாதிரி தெரியவே இல்ல என எண்ணினாலும் வெளியில் சொல்லவில்லை. அவளது நம்பிக்கையையும் கெடுக்க இயலவில்லை.

அவளோ சிறிது நேரத்தில் தெளிந்து, தன் காதலையும் உணர்ந்து, பின் நெளிந்தபடி, “மாதவ்… நாளைக்கு நீயும் என்கூட இருக்கியா. அவரை தனியா மீட் பண்ண ஒரு மாதிரி நெர்வஸா இருக்கு.” என்றாள். அவனும் சரியென்று விட, மறுநாள் மாலைக்காக அன்று முழுதும் தவம் இருந்தாள்.

அபார்ட்மென்ட்டினுள் நுழைந்த தஷ்வந்த், அவனுக்கு முன்பே அங்கிருந்த மஹாபத்ராவைக் கண்டதும், இறுக்கி அணைத்துக் கொண்டான். அவளுக்கும் அவ்வணைப்பு தேவையாக இருக்க, “டூ யூ மிஸ் மீ?” எனக் கேட்டுக்கொண்டாள்.

அதற்கு பதிலையும் அவன் முத்தத்தின் மூலமே கொடுக்க, “எங்கடி போன? ஒரு வாரமா போன் கூட இல்ல…” என்றான் முறைப்பாக.

“இன்டெர்ன்ஸ்ல பிசி ஆகிட்டேண்டா. நீ தான சீரியஸா வேலை பார்க்க சொன்ன…” என உதட்டை குவித்துக் கூற, அவ்விதழ்கள் மறுநொடி அவன் வசம் இருந்தது.

எத்தனை முத்தங்கள் பரிமாறினாலும், அது வற்றாத நதியை போன்று மீண்டும் மீண்டும் பெருக்கெடுத்தது. நொடிகள் நிமிடங்களாகி, ஒரு மணி நேரத்தை தொட்டும் கூட, அவன் ஓயவில்லை. அவள் தான், அவனை தள்ளி விட்டு, “லிப்ஸை கடிச்சு சாப்பிட்றாதடா!” என்றவள், தடித்திருந்த இதழ்களை தேய்த்துக் கொண்டாள்.

அவனோ இன்னும் கிறக்கத்தில் இருந்து வெளிவரவில்லை. அவளுடன் சோபாவில் சரிந்தவன், பெண்ணவளை தனது மடியில் அமர வைத்து, இறுக்கி பிடித்துக் கொண்டான்.

அவளது கழுத்தில் முகம் நுழைத்து, தனது தவிப்பை வெளிப்படுத்தியவன், “டாலு…” என்றழைக்க, ஏற்கனவே அவன் தொடுகையில் தன்னிலை இழந்திருந்த மஹாபத்ரா, தஷ்வந்தின் இவ்வழைப்பில் மொத்தமாக தன்னை மறந்தாள்.

“ம்ம்…!” என ரீங்காரமிட்டவளிடம், “லவ் வேணாம், மேரேஜ் வேணாம்… நம்ம ஏன் ஸ்ட்ரெய்ட்டா பேபி பெத்துக்க கூடாது!” என குதர்க்கமாக கேட்டு வைக்க, மெல்ல நகர்ந்து அவனைக் கண்டு விழித்தாள்.

அவனோ அந்த விலகளையும் ஏற்றுக்கொள்ள இயலாமல், “ப்ளீஸ்டி… இங்கயே இரேன்.” என உரிமையுடன் அவளின் இடையில் கரங்களை பதித்திருந்தான்.

“சொல்லு டாலு. பேபி பெத்துக்கலாமா?” எனக் கேட்டு, அவளை இன்னும் சோதிக்கும் விதமாக கரங்களை அவள் மேனி எங்கும் அலைய விட்டான்.

அந்த தீண்டல் தந்த கதகதப்பும், அவனது கிசுகிசுப்பான குரலும், அவளை மயங்க வைக்க, அப்போதும் “ம்ம்!” என்றாள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து.

அத்துடன், இருவருமே நிகழ்வதையும், நிகழப் போவதையும் மறந்திருக்க, அவளை அள்ளிக்கொண்டு அறைக்கு சென்றவன், கட்டிலில் கிடத்தினான்.

“யூ மேட் மீ கிரேஸி டாலு!” என உளறியவன், தன் ஒவ்வொரு அசைவிலும் காதலையும் தாபத்தையும் காட்ட, அவளோ ஆடவனின் மென்தீண்டலில் சுகித்திருந்தாள்.

“அமுலு… கொல்லாதடா. ப்ளீஸ்” என்றவளின் முனகல்கள் எல்லாம் அவனுக்கு போதையூட்ட, அப்போதையை அவளுக்கும் ஊட்டி, அவளுடன் கலந்தான்.

பேச்சு வார்த்தை அறவே அற்றுப் போக, இருவருமே அந்நிலையை தவறவிட விரும்பவில்லை. பேசினாலும் நிச்சயம், கவனம் கலைந்து, நிஜம் சுடும் என்ற உண்மை உணர்ந்ததாலோ என்னவோ, இரு தேகங்கள் மட்டுமே பேசிக்கொண்டது அவ்விரவு முழுதும்.

காலையில் தாமதமாகவே கண் விழித்த தஷ்வந்த், நாசியில் தங்கியிருந்த தன்னவளின் வாசத்தில் மென்முறுவல் பூத்தான். அதே புன்னகையுடன் அருகில் அவளைத் தேட, அங்கு வெறும் தலையணையே இருந்தது.

உறக்கம் கலைந்து படக்கென எழுந்தவன், “பத்ரா” என அழைக்க, அவள் எங்கும் இல்லை. குளியலறைக்கு சென்று பார்த்தும் அவள் இல்லாது போக, அதன் பிறகே கிளம்பி விட்டாள் என்று புரிந்தது.

மனது வேறு, அமைதியின்றி தவிக்க, “ப்ச்… அவள் அப்பா போன் பண்ணிருப்பாரு அதுனால கிளம்பி போயிருப்பா.” என்றெண்ணி, போன் செய்ய எத்தனித்து, பின் குறுஞ்செய்தியாக அனுப்பினான்.

ஆனால், அவளிடம் இருந்து பதிலேதும் இல்லை. இப்படியே மாலை நேரமும் ஆகி இருக்க, ஏதோ தவறாக நிகழப்போவது உணர்ந்தாலும் அதனைப் பற்றி சிந்தியாமல், ஹைத்ரபாத் வரவிருக்கும் தமக்கையை அழைக்க ரயில் நிலையத்திற்கு கிளம்பினான்.

எப்போதும் அட்டை போல அவனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மதனும் அன்று இல்லை. அதில் ஆட்டோ பிடித்து, சரியாக கிளம்பும் போது, மஹாபத்ராவிடம் இருந்து குறுஞ்செய்து வந்தது, அவனை வீட்டிற்கு அழைத்திருந்தாள். அங்கு தான் அவளது தந்தை இருப்பாரே, எனக் குழம்பினாலும், அதனை பற்றி யோசியாமல் நேரத்தை பார்த்தான்.

இன்னும் தமக்கை வர நேரம் இருந்தாலும், சீக்கிரம் அவளைப் பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, மஹாபத்ராவின் வீடு நோக்கி சென்றான்.

மாலை ஐந்து மணிக்கு பேருந்து நிலையத்தில் மாதவுடன் காத்திருந்த மந்த்ராவின் பொறுமையை சோதித்தான் அமிஷ்.

ஐந்து மணி, ஆறானது. ஏழானது. பத்தும் ஆனது. ஆனால் அவன் வரவில்லை. தண்ணீர் கூட அருந்தாமல், கண்ணில் நீர் தேங்க, அங்கேயே அமர்ந்திருந்தாள். ஒரு மணி நேர தாமதம் ஆனதுமே, மாதவிற்கு புரிந்து போனது அமிஷ் வரப்போவதில்லை என. ஆனால், அதனை காதல் கொண்ட இப்பெண் புரிந்து கொள்ள வேண்டுமே. இன்னும் கூட அவன் வருவான் என்ற நம்பிக்கையில் சாலையை பார்த்து தேடுபவளை என்னவென்று சொல்லி தேற்றுவது.

குரலை கனைத்தவன், “மந்த்ரா, அவன் வர மாட்டான்.” என்றதில், குனிந்திருந்த அவளது கன்னங்களில் வழியே கண்ணீர் ஓடியது.

ஒருவேளை ஏதாவது பிரச்சனையா இருக்குமோ, என்று போன் செய்தும் பார்த்தாகிற்று. ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட போனை யாரால் எடுக்க இயலும். வேண்டுமென்றே தன்னை தவிர்த்து விட்டானா? அல்லது காதல் என்று கூறியது அனைத்தும் பொய்யா? என ஒன்றும் புரியாமல், உள்ளுக்குள் உடைந்து போனாள்.

மாதவ் தான், “வீட்ல இருந்து பல தடவை கால் பண்ணிட்டாங்க மந்த்ரா. மிட் நைட் ஆகிட போகுது. வா போலாம்.” எனப் பாவமாக அழைக்க, மனதை மொத்தமாக அமிஷிடம் தொலைத்து, கூடவே காயத்தையும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு சென்றவள், கண்ணீரில் கரைந்தாள். 

தஷ்வந்த் தயங்கியபடி வீட்டிற்கு சென்றதும், அவனைக் கண்டு புருவம் சுளித்த மஹாபத்ரா, “இங்க என்ன செய்ற?” எனக் கேட்டாள்.

“நீ தான வரச்சொன்ன? ஏன் சொல்லாம கிளம்புன டாலு?” எனக் கேட்டதில், “உங்கிட்ட ஏன் நான் சொல்லணும்.” என்றாள் அழுத்தமாக.

அவளது அழுத்தம் அவனை திகைக்க வைக்க, “விளையாடாத பத்ரா…” என்றான் நடுங்கும் குரலில்.

“நான் விளையாடல. நீ தான், முட்டாள் மாதிரி எத எதையோ நினைச்சுட்டு இருக்க. என் படிப்பு முடிஞ்சதும், நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்ல. சோ பண்ணிக்கலாம்…”  என்றதில் அவன் அதிர்ந்தான்.

“இதை நேத்தே பண்ணிருக்க வேண்டியது தான…” என அவன் அடிபட்ட பார்வையுடன் கேட்க, அவளோ தோளை குலுக்கினாள்.

“உனக்கு என் கூட படுக்கணும்னா, எப்பவோ படுத்துட்டு போயிருக்க வேண்டியது தானடி.” ஏமாற்றம் தாளாமல் அவன் கத்தி விட,

அவளோ அது எதுவும் தன்னை பாதிக்கவே இல்லை என்ற ரீதியில், “இப்ப நீ என் டைமை வேஸ்ட் பண்ணாம கிளம்புறியா? இல்ல… நானே வெளிய தள்ளவா?” என்றாள் கண்டிப்புடன்.

கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் இறுகிக் கொண்டிருந்தவன், “இதுக்குலாம் பதில் குடுக்காம விட மாட்டேன்டி.” கண்கள் நீரால் தளும்பி இருந்தாலும், வார்த்தைகள் கடினமாக வந்தது.

“ஊஃப்… காட்! கெட் லாஸ்ட் தஷ்வந்த்…” என்றவள், அங்கிருந்த அவளது தந்தையின் ஆட்களிடம் கண்ணைக் காட்ட, அவர்களோ அவனை பிடித்து அடித்து தள்ளினர். தனக்கு ஒன்றென்றால் பதறியடித்து வருபவள், அசையாமல் அவனை பார்த்து விட்டு, அறைக்குள் புகுந்து கொள்ள, அந்நிமிடமே அவன் மரணித்திருந்தான்.

நடந்ததை அமைதியாக பார்த்திருந்த ஹர்மேந்திரன் தான், இகழ்ச்சி புன்னகை வீசியபடி, அடியை தொடர சொல்ல, மற்றவர்கள் அடிப்பது கூட உறைக்காமல், அவள் தந்த மாறா காயத்தின் வடுவை நெஞ்சில் தாங்கி கொண்டான்.

இறுதியாக, ஒருவன் தலையில் அடிக்க, குருதி வழிய தரையில் விழுந்தவனுக்கு, மயக்கத்தில் கண்கள் சொருகும் போது தான் மஞ்சுளாவின் நினைவு வந்தது. மஞ்சு… அக்கா… என வாய் மட்டுமே அசைய, மயக்க நிலைக்கு சென்றிருந்தான் தஷ்வந்த்.

காயம் ஆறும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
31
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்