Loading

15

செவ்வானம் மறையத் தொடங்கிய வேளை, பறவைகள் தத்தம் கூட்டிற்கு பறக்க அந்த மாலைப் பொழுதில் ‘வசந்தம் ப்ளாட்ஸ்’யில் இருந்த பூங்காவில், சிறுவர் சிறுமியர் கூட்டம் பட்டாம் பூச்சிகளாய் பறந்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் தலையில் கை வைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள் நறுமுகை.

ரகுநந்தனும், சிரஞ்சீவியும் அப்பொழுது தான் அந்த பூங்காவிற்கு வந்தனர். இருவரும் அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் இருந்த மற்றொரு சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தனர்.

அவர்கள் அருகில் வந்ததைப் பார்த்து நிமிர்ந்தவள், ரகுநந்தனை பார்த்தாள்.

“ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா முகி?” என்றான் ரகுநந்தன்.

“இல்ல சார்… வந்து கொஞ்சம் நேரம் தான் ஆகுது” என்க,

“ஜானு என்ன பண்றா முகி?” என்றான் ரகுநந்தன். “அவ ஏதோ பேயறைஞ்ச மாதிரி இருக்கா சார். சில நேரம் ஜாலியா இருக்கா, சில நேரம் மௌனியாகிறா. பார்க்கு போறேன், வானு கூப்பிட்டேன். மேடம் ‘வேலை இருக்கு, நீ போனு’ சொல்லிட்டா. சில்வண்டு கூட வந்து கூப்பிட்டான், அவ வர மாட்டேனு சொல்லிட்டா” என்றாள் நறுமுகை.

“சில் வண்டா… யாரு அது?” என அவன் ஆச்சரியமாக வினவ, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனை அழைத்த நறுமுகை,

“இவன் தான் சில்வண்டு சார்” என்றவள், அவனிடம் “சார்க்கு கை கொடு” என்றாள் நறுமுகை.

“ஹாய் சார்… ஐ ஆம் ராம்” என அந்த ஐந்து வயது சிறுவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, ‘ஓ… இதான் காரணமா’ என நினைத்தவன்,

“உங்க பேரும் ராமா சில்வண்டு” என்றான் ரகுநந்தன்.

“ம்…” என்றவன், “ஆனா என் பொன்வண்டுக்கு நான் எப்பவும் சில்வண்டு தான்” என தலையை சாய்த்து கூற,

‘இப்படிலாம் நீ பண்ணா. அவ அப்புறம் என்னை விட்டுட்டு உன்னைக் கட்டிக்குவாளே டா…’ எனப் புலம்பியவன்,

“ஓ… உனக்கு உன் பொன்வண்ட ரொம்ப பிடிக்குமோ!” என்றான் ரகுநந்தன் அவனை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டு.

“ரொம்பபபபப…” என அவன் கைகளை விரித்து காண்பிக்க, “எனக்கு மட்டும் எங்க இருந்து டா போட்டிக்கு வர்றீங்க. அவ ராம்ங்கிற பேருக்கே உருகுவாளே! இப்படி அவள ரொம்ப பிடிக்கும்னு சொன்னா, அப்புறம் என் நிலைமை” எனப் புலம்பியவன்,

“ஓ.கே டா சில்வண்டு, இனி நானும் உன் ப்ரண்ட். என்னையும் உன் கூட சேர்த்துக்குவியா?” என்றான் அவன் தாடையை பிடித்து கொண்டு.

“ஓ.கே ப்ரண்ட். ஆனா அதுக்கு முதல்ல பொன்வண்டு சம்மதம் சொல்லணும்” என்க, “இவன் பொன்வண்டு புராணத்தை விட மாட்டான், போலயே!” என எண்ணியவன்,

“சரி. உன் பொன்வண்டு ஓ.கே சொன்னா நீ ப்ரண்ட் ஆகுவியா?” என்றான் ரகுநந்தன்.

“ம்…” என அவன் தலையாட்ட, “சரி, இப்போ போய் விளையாடு” என அவனை இறக்கி விட, தன் நண்பர் பட்டாளங்களோடு கலந்து கொண்டான் சில்வண்டு என்ற குட்டி ராம்.

இதனை அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த சிரஞ்சீவியோ, “வந்த வேலைய விட்டுட்டு மத்ததெல்லாம் நல்லாவே பண்ற டா” என்றான் கோபமாய்.

“ஏன் டா நண்பா, அப்படி சொல்ற?” என்றவாறே அவன் கழுத்தில் கை போட, அதனை எடுத்து விட்டவன் “நீ முதல்ல உன் ராமன், கிருஷ்ணன் கதைய சொல்லு டா. எனக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு” என்றான் சிரஞ்சீவி.

கல்லூரி கேன்டீனில் அதனைப் பற்றி பேச முடியாது என்று தான் மாலை நேரத்தில் பூங்காவில் சொல்வதாக ரகுநந்தன் கூற, அன்று முழுவதும் அரை பைத்தியங்களாக சுற்றிக் கொண்டிருந்தனர் சிரஞ்சீவியும் நறுமுகையும்.

அவன் ஏற்கெனவே கலங்கிய குட்டையில் மேலும் குழப்பத்தை கலக்கி விட்டால் பாவம் அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்.

தன் அக்காவும் எங்கே தன் கூட எப்பொழுதும் போல் பூங்காவிற்கு வந்திருவாளோ, அவள் வந்தால் ரகுநந்தனிடம் பேச முடியாதே எனக் கலக்கத்தில் இருந்தவளை, ‘வேலை இருக்கிறது’ என்ற அவளின் பதிலில் தான் நிம்மதி அடைந்தாள்.

சிரஞ்சீவியோ, சொல்லத் தேவையில்லை. முழுவதுமாய் குழப்பத்தில் தான் இருந்தான். தன் நண்பன் வாழ்வில் தான் அறியாத பக்கங்களும் உள்ளது எனத் தெரிந்திருந்தாலும் அவன் வாழ்வில் மிதிலாவின் வருகைக்கு பின் குழம்பி போய் இருந்தான்.

அவர்கள் இருவரின் குழப்பத்திற்கும் விடையளிக்கும் வண்ணம் தங்களின் கடந்த கால வாழ்க்கையை கூறலானான்.

2005

எங்கு நோக்கினும் கடைகள், சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல், மக்கள் கூட்டம் வெயில் எனப் பாராமலும் அலை மோதும் நகரமாய் இன்று காட்சியளிக்கும் அதே கோயம்பத்தூர் மாநகரத்தில் தான் பதினைந்து வருடங்களுக்கு முன் சுந்தரேசன் குடும்பத்தினர் இருந்தனர்.

அன்றைய சரவணம்பட்டி இப்பொழுது போல், அதிகளவு கடைகள் இல்லாமல் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடைகள் இருந்தன.

நெரிசலான தெருக்கள் என இல்லாமல் கிட்டத்தட்ட வளர்ச்சி அடைந்த கிராமம் போல் தான் இருந்தது. அந்த தெருவிற்கே சுந்தரேசன் தான் ‘தமிழ் ஐயா’.

அவரிடம் பாடம் கற்று கொள்ள மாலை நேரமானால் அவரின் வீட்டின் முன் ஒரு சிறுவர் பட்டாளமே குவிந்து கிடப்பர்.

அப்பொழுது மிதிலாவிற்கு ஒன்பதே வயது. ஆனால் அந்த தெருவையே ஆட்டிப் படைப்பவள் அவள்.

எதிர்வீட்டு மாமி மண்டையை உடைப்பதாகட்டும், பக்கத்து வீட்டு பாட்டியின் பாக்கையும் வெற்றிலையையும் திருடுவதாகட்டும், அடுத்த வீட்டில் இருந்த நெல்லிக்காய் மரத்தில் நெல்லிக்காய் பறிக்கிறேன் என்று மரத்தில் ஏறி கிளைகளை உடைப்பதாகட்டும் அவளின் சேட்டைகளின் வகைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றது.

அவளின் நண்பர் பட்டாளமோ அவளை இன்னும் ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்ப்பர்.

ஒவ்வொரு செயலுக்கும் நியாயம் கேட்டு சுந்தரேசனைக் காண வந்தால், அவரோ “ஏன் ம்மா மிது, அப்படியா பண்ண?” என்பார்.

பின் அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பிவிட்டு மகளிடம், சிறிது நேரம் அட்வைஸ் மழை பொழிவார்.

ஆனால் அவை அனைத்தும் அவள் காதில் ஏற்றினால் தானே. சில நேரங்களில் காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொள்வாள் அவள்.

அவரும் அட்வைஸ் செய்தே சோர்ந்து போனார் என்றால், அவரிடம் புகார் தெரிவிக்க வந்தே சோர்ந்து போகினர் அந்த தெரு மக்கள்.

ஒருக்கட்டத்தில், அவளுக்கு தண்ணீர் தெளித்து விட்டு விட்டனர். அவளும் தன் சேட்டைகளைத் தொடர்ந்தாள்.

அப்பொழுது தான் ரகுநந்தனின் குடும்பம் அந்த ஏரியாவில் குடியேறியது. ரகுநந்தனின் தந்தை ராஜாராமிற்கு வேலை இடமாற்றம் செய்திருந்தனர்.

அதனால் சென்னையில் இருந்து கோயம்பத்தூர் வந்திருந்தார்.

ரகுநந்தனும் சிரஞ்சீவியும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை வர, சிரஞ்சீவியோ அவனை விட்டு பிரிய மறுத்தான்.

அதனால், இரண்டு நாட்கள் கோயம்பத்தூர் அழைத்து வந்திருந்தனர் ராஜாராமின் குடும்பத்தினர்.

தன் நண்பனுடனும், தம்பியுடனும் பேசிக் கொண்டே புது வீட்டிற்கு பொருட்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தான் பதினான்கே வயதான ரகுநந்தன்.

அப்பொழுது தான் அவளைக் கண்டான் ரகுநந்தன்.

தங்கள் வீட்டு திண்ணையில் நின்றவாறே அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் குட்டி மிதிலா.

குட்டிப் பெண்ணாய், இரட்டை ஜடையை தன் இரு வெண்டை விரல்களால் ஆட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

அவளைப் பார்த்த நொடிதனிலே அவன் மனதில் அவள் சிம்மாசனமிட்டு அமர்ந்தாள் அவனறியாமல்.

அப்பொழுது அவனின் தந்தையின் அம்மா சிவகாமி, “கிருஷ்ணா…” என அழைக்க, அதற்குள் அவன் தன் பார்வையை தன் பாட்டியை நோக்கி செலுத்தினான்.

“இதோ வரேன் பாட்டி…” என அவன் அங்கு செல்ல, ‘கிருஷ்ணா…’ என்ற அழைப்பில் அவள் மனம் அப்பொழுதே நொருங்கியது.

காதல் என்றால் என்ன? என்று கூட அறிந்திராத வயதிலே தன் ராமனுக்காய் காத்திருப்பவள் அவள். அவனைக் கண்ட நொடி, அவளுக்கு கம்பராமாயண கன்னிமாட நிகழ்ச்சி தான் கண்முன் விரிந்தது.

யாரையும் பார்த்து அவளுக்கு அப்படி தோன்றியதும் இல்லை. ஆனால் இன்று அவனைக் கண்டவுடன் தன் மனம் ஏன் ராமனை அவனுடன் ஒப்பிடுகிறது எனக் குழம்பி போனாள் அந்த குட்டிப் பெண்.

ஆனால் அந்த குழப்பத்திலே கல் எறிவது போல் இருந்தது சிவகாமி பாட்டியின் அழைப்பு.

அவள் வாழ்வில் வெறுக்கும் ஒரே பெயர் கிருஷ்ணன். காரணமில்லாமலே அவள் வெறுக்கும் ஒரு விசயம் என்னவென்றால் அது ‘கிருஷ்ணன்’ என்ற பெயர் தான்.

அவள் மனதில் ராமன் எந்தளவு சிம்மாசனமிட்டு அமர்ந்தாரோ அதே அளவு கிருஷ்ணன் கீழிறங்கி இருந்தார்.

அதன்பின் பக்கத்து வீட்டின் மேல் கூட தன் பார்வையை செலுத்தாமல் அவள் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் குட்டி மிதிலா.

தன் நண்பர் கூட்டத்தோடு இருக்கும் போது, அவர்களின் ஒருத்தி “மிது, பக்கத்து வீட்டுல சீத்தாப்பழம் பழுத்திருக்கு டி. ப்ளீஸ், ப்ளீஸ் எனக்கு பறிச்சு தாப்பா” எனக் கெஞ்ச,

முதலில் மறுத்தவள், “சரி, உனக்காக அந்த வீட்டுல போய் பறிச்சு தரேன்” என்றவள், முதலில் அந்த வீட்டை நோட்டமிட்டனர்.

ராஜாராமும், அம்பிகாவும் அன்று வெளியே சென்றிருக்க அண்ணன், தம்பி, தங்கை மூவரும் தான் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டினுள் இருப்பதை உறுதி செய்து கொண்ட மிதிலா, தன் நண்பர் பட்டாளத்திடம் “நீங்க இங்கயே இருங்க. நான் போய் சீத்தாப்பழம் பறிச்சுட்டு வரேன்” என்றவாறே மிதிலா பூனை நடையிட்டு வீட்டின் பின்பக்கம் நுழைந்தாள்.

அப்பொழுது தான் தண்ணீர் குடிக்க வந்த ரகுநந்தனின் பார்வையில் பட்டாள் அவள்.

மெல்ல மெல்ல, பூனை நடையிட்டு அவள் கண்கள் வேறு அங்கும் இங்கும் யாராவது வருகிறார்களா! என நோட்டமிட்டவாறே இருக்க பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருப்பவளைக் கண்டவன்,

“இவ இங்க என்ன பண்றா…” என எண்ணியவாறே அவளைப் பின்தொடர்ந்தான் அவளறியாமல்.

அவளோ பதுங்கி பதுங்கி சென்று இறுதியாய் சீத்தாப்பழம் மரத்தருகே சென்றாள்.

பழம் வேறு உச்சியில் இருக்க அவளால் பறிக்க முடியாமல் போக கீழே கிடந்த பெரிய குச்சி ஒன்றை எடுத்தாள் மிதிலா.

அவளால் அந்த குச்சியைத் தூக்க முடியாமல் தள்ளாடியபடியே அதனை எடுத்து மரத்தின் மேல் நீட்ட அவள் கரங்களோ குச்சியின் பாரம் தாங்காமல் விடப் பார்க்க அந்த குச்சி அவள் மேலே விழப் பார்த்தது.

அதனைக் கண்டவன் நொடியும் தாமதிக்காது அந்த குச்சியைப் பிடிக்க அவனை அங்கு எதிர்பாராத அவள் முதலில் பயத்தில் வெலவெடுத்தாலும் பின் தன்னை சமாளித்து கொண்டவள், அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்தாள்.

“ஓய்… குட்டிப் பொண்ணே, எங்க ஓடுற?” என அவளை அவன் மறித்து நிற்க,

“நான் ஒன்னும் குட்டிப் பொண்ணு இல்ல. ஆறாப்பு படிக்கிறேன்” என அவள் அவனை முறைத்துக் கொண்டே கூற,

அவன் இதழ்கள் அவளின் செயலில் புன்னகையால் மலர்ந்தது.

“சரி, நீ குட்டிப் பொண்ணு இல்ல. பெரிய பொண்ணு தான், ஆமா எதுக்கு இங்க வந்த? சீத்தாப்பழம் வேணுமா?” என்க,

இவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை வேறு ஒத்துக் கொள்வாளா அந்த மிதிலா.

“இல்ல, சும்மா வேடிக்கைப் பார்க்க வந்தேன்” என்றாள் வீம்பாய்.

“அப்புறம் எதுக்கு இந்த குச்சிய தூக்குன” என்றவன் அவளை குறும்பாக பார்க்க,

“அத உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல…” என்றவாறே அவன் அசந்த நேரத்தில் அவனை கீழே தள்ளி விட்டு ஓடினாள் குட்டி மிதிலா.

கீழே விழச் சென்றவன், சற்று தடுமாறி தன்னை சமாளித்து நின்றவன் “அவ்ளோ வீராப்பா…” என்றவன் அவள் பறிக்க முயன்ற சீத்தாப்பழத்தை பறித்துக் கொண்டு எதிர்வீட்டுக்குச் சென்றான் ரகுநந்தன்.

அங்கோ, சுந்தரேசன் வராண்டாவில் அமர்ந்து புத்தகத்தில் மூழ்கி இருக்க, இவன் வருவதைக் கண்ட மிதிலாவோ, “அடுத்த பஞ்சாயத்தா…” என்ற ரீதியில் தன் தந்தையின் காலடியில் அமர்ந்து சமத்துப் பிள்ளையாய் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.

“வணக்கம் அங்கிள்” என பணிந்து வணங்க, புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்தியவர், “சொல்லுப்பா… நீ பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்கிறவரோட பையன் தான” என்றார்.

“ஆமா அங்கிள்” என்றான் ரகுநந்தன். “எத்தனாவது படிக்கிற தம்பி?” என்றார் சுந்தரேசன்.

“லெவன்த் அங்கிள்” என்றான் அவன். “நல்லா படிக்கணும் தம்பி” எனும் போது தான், “அங்கிள், நானும் டியூசன் வரலாமானு கேட்க வந்தேன்” என அவன் கூறினாலும் அவன் பார்வை முழுவதும் மிதிலாவின் மீது தான் இருந்தது.

அவளின் கண்கள் கீழே குனிந்து பாடப்புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், கவனம் முழுவதும் அவனின் வார்த்தைகளில் தான் இருந்தது.

“நாளைல இருந்து தாராளமா வா பா… அப்பா, அம்மாகிட்டயும் பேசிறேன்” என அவர் தன் சம்மதத்தைக் கூற, “ஓ.கே அங்கிள்” என்றவன்,

“பாப்பா, இந்தா சீத்தாப்பழம்” என அவளிடம் நீட்ட,

“பாப்பாவாம் பாப்பா…” என முறைத்தவள் அதனை வாங்காமல் இருக்க, “தம்பி குடுக்கிதுல்ல மிது, வாங்கிக்கோ… நம்ம பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்துருக்கிறவங்க தான்” என்றார் சுந்தரேசன்.

அவன் தன்னை மாட்டிவிட தான் வருகிறானோ என்று தான் அவள் நினைத்திருக்க, அவனோ அவளைப் போட்டு கொடுக்காமல் இருந்ததோடு சீத்தாப்பழத்தை வேறு பறித்துக் கொண்டு வந்து தருகிறான் என நினைத்தவள், தன் கோபத்தை கை விடாமல் “எனக்கு வேண்டாம் ப்பா…” என தன் தந்தையிடம் மறுப்பு தெரிவித்தாள் மிதிலா.

அவனோ, அவள் அருகில் பழத்தை வைத்து விட்டு “நான் நாளைல இருந்து டியூசன் வரேன் சார்” என்றவன், அங்கிருந்து கிளம்பினான்.

அவளோ அந்த பழத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க சுந்தரேசன் வீட்டினுள் சென்றவுடன் அதற்காகவே காத்திருந்தது போல் அந்த பழத்தை ஓடிவந்து எடுத்தனர் அவளின் கூட்டாளிகள்.

“அலையாதீங்க எல்லாரும். இந்த பழத்தை யாரும் சாப்டக் கூடாது” என்றவள் அதனைப் பிடுங்கி குப்பைத் தொட்டியில் கோபத்துடன் வீசினாள் மிதிலா.

அவர்களோ, “ஏன் மிது குப்பைத் தொட்டில போட்ட… ச்சே, ஒரு பழம் வீணா போச்சு” எனப் புலம்பினர்.

“இனி யாராவது சீத்தாப்பழம் கேட்டீங்க, அவ்ளோ தான்” என ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு வீட்டினுள் சென்றாள் மிதிலா.

அவர்களோ ஏமாற்றத்தோடு செல்ல, அதுவரை நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த ரகுநந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அன்று தன்னைப் பார்த்து புன்னகைத்தவள் இன்று ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று குழப்பம்.

ஏனோ! அந்த குட்டி மிதிலா அவனுக்கு சுவாரஸ்யமாகிப் போனாள்.

அதன்பின் அவளுடன் நட்பு பாராட்ட நினைத்த அவனுக்கு வெறும் முறைப்புகள் மட்டுமே பரிசாக கிடைத்தது.

அதன்பின் அவளுடன் நட்பு பாராட்ட முதலில் அவளின் நண்பர்களை பிடிக்க வேண்டும் என்று தன் ரூட்டை மாற்றினான் ரகுநந்தன்.

அவர்களுக்கு பிடித்த சீத்தாப்பழத்துடன் அவர்களுடன் நட்பு பாராட்ட நினைக்க, அவர்களோ “ஸாரி ண்ணா… நீங்க கொடுத்த சீத்தாப்பழத்த வாங்குனோம்னு தெரிஞ்சா அவ்ளோ தான். அப்புறம் எங்க கூட டூ விட்ருவா மிது” என அவர்கள் முதலில் மறுத்தனர்.

அவனும் விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் சீத்தாப்பழத்தை அவர்களிடம் தூது விட்டான்.

அதுவும் செயல்பட ஆரம்பித்தது. “ரொம்ப நல்ல அண்ணனா இருக்காங்க, அப்புறம் ஏன் நம்ம மிது அவங்க கூட பேச மாட்டேங்கிறா” என்று அவர்கள் பேசும் அளவு அவனின் முயற்சி பலித்திருந்தது.

“அதெல்லாம் சரி தான். ஆனா நம்ம மிதுக்கு தெரியாம அவங்க கிட்ட பேசுனா நம்ம மேல அவ கோபப்படுவாளே!” என்றாள் ஒருத்தி.

அந்த நட்பு கூட்டத்தில் ஆண், பெண் பேதம் இல்லாமல் இருக்க அதில் ஒருவன், “நான்லாம் அந்த அண்ணா கூட பேச மாட்டேன். நம்ம மிதுவோட பகைய சம்மாதிக்க வேண்டாம், அவ்ளோ தான்” என்றான்.

கடைசியில் அனைவரும் சமாதானமாகி ஒன்றாய் ரகுநந்தனிடம் பேச ஆரம்பித்தனர்.

அவர்களின் நட்பு கிடைத்தவுடன் ரகுந்தனோ இறக்கை இல்லாமல் வானில் பறந்தான். ஆனால் அந்த குட்டி மிதிலாவின் கோபம் அவன் வாழ்நாள் முழுக்க தொடரும் என அறியாமல்!

 

16

ரகுநந்தன் மிதிலாவின் நண்பர்களோடு நட்பு கொண்டு, அடுத்தக்கட்ட முயற்சியாக மிதிலாவிற்கு அவள் நண்பர்களையே தூது விட்டான்.

ஆனால் மிதிலாவோ, “எனக்கு பிடிக்காத விசயம்னு தெரிஞ்சும் இப்படி பண்றீங்கள்ள. போங்க, போய் உங்க புது பிரண்ட் கிட்டயே பேசுங்க. இனி என்கூட பேசாதீங்க. மாங்கா வேணும், நெல்லிக்கா வேணும்னு வாங்க, அப்ப இருக்கு” என முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“ஸாரி மிது. அந்த அண்ணா ரொம்ப நல்லவங்க மிது, பாரு எனக்கு சாக்லேட்லாம் கொடுத்தாங்க. நம்ம பாரதிக்கு சீத்தாப்பழம் பிடிக்கும்னு தினமும் சீத்தாப்பழம் பறிச்சிட்டு வந்து தர்றாங்க. ப்ளீஸ் பா, அவர் கூட பேசலாமே” என்றான் அவர்களின் நட்புகளில் ஒருவன்.

“சீத்தாப்பழத்துக்காக அந்த கிருஷ்ணா உங்களுக்கு பெருசா போய்ட்டான்ல… போங்க, இனி என்கிட்ட பேசாதீங்க” என மூக்கை சிந்திக் கொண்டு வராத கண்ணீரை வரவழைத்தாள் மிதிலா.

தன் தோழியின் சோகத்தைக் கண்டு, “இனிமேல் அவங்க கூட கா விட்றோம். சத்தியமா பேச மாட்டோம் மிது, காட் ப்ராமிஸ்” என சத்தியம் செய்ய,

“மீற மாட்டீங்கள்ள. சத்தியத்த மீறுனா அப்புறம் நைட் உங்க கண்ண சாமி வந்து இப்படி குத்தும்” என அவள் இரு விரல்களை அவர்கள் கண்கள் அருகே கொண்டு செல்ல,

“இல்ல, இல்ல. இனி பேச மாட்டோம்” என ஒருமித்த குரலில் கூற, அதன்பின் தான் புன்னகை செய்தாள் மிதிலா.

தன்னுடைய இந்த முயற்சியும் தோல்வியை தழுவ, அவனுக்கு அந்த குட்டிப் பெண்ணின் நட்பை பெற்றே ஆக வேண்டும் என்ற உந்துதலை தள்ளியது.

அவனே அவளிடம் சென்று பேசலானான். அவள் மட்டும் வீட்டின் பின்புறம் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்க அதனைக் கண்டவன் அவள் அருகில் சென்றான் ரகுநந்தன்.

அவளோ, அவனின் வருகையை உணர்ந்து முகத்தை திருப்பிக் கொள்ள, “ஹாய், குட்டிப் பொண்ணே!” என்க,

“நான் பெரிய பொண்ணு. குட்டி பொண்ணு இல்ல” என முகத்தை சிலுப்பிக் கொண்டாள் மிதிலா.

அவளின் முக சிலுப்பல் அவனுக்கு புன்னகையை வரவழைக்க அதனை அடக்கிக் கொண்டவன், “நீ குட்டி பொண்ணு தான். அதுனால தான என் கூட பிரண்ட் ஆக மாட்டேன்கிற?” என்றான் ரகுநந்தன்.

“இல்லையே. நான் பெரிய பொண்ணு தான்” என தன்னை நிரூபிக்க உடனே கூற, “அப்போ என்கூட பிரண்ட் ஆகிரு. நான் நம்பறேன்” என்றான் ரகுநந்தன்.

“எனக்கு உன்னைப் பிடிக்கல” என முகத்தை திருப்ப, “ஏன் மித்து என்னை பிடிக்கல” என பாவமாய் கேட்டு வைத்தவனைக் கண்டு அவளுக்கும் பாவமாக தோன்றியது.

“பிடிக்கல, அவ்ளோ தான்” என்க,

“எனக்கு யாருமே பிரண்ட்ஸ் இல்ல. அதான் உன்கூட சேரலாம்னு நினைச்சேன், இப்போ நீயும் என்கூட பிரண்ட்டா இருக்க மாட்டீல. போ, நான் தனியாவே இருந்துக்கிறேன்” என அழுகுபவன் போல் அவன் கூற,

“ஏன், உனக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லையா?” என்றாள் மிதிலா பாவமாக.

“இல்ல…” என அவன் உதட்டைப் பிதுக்க, “உன் வகுப்புல பிரண்ட்ஸ் இல்லயா?” என்றாள் மிதிலா.

“நான் இந்த வருஷம் புதுசா வந்ததால யாரும் என்னை பிரண்டா சேர்த்துக்க மாட்டேன்கிறாங்க” என அவன் அழுபவனைப் போல் கண்ணை கசக்க,

“சரி, சரி. எனக்கு உன்னை பிடிக்காம இல்ல, ஆனா உன் பேரு தான் எனக்கு பிடிக்கல” என்றாள் மிதிலா.

“அப்போ என்னை பிடிக்குமா உனக்கு?” என கண்ணில் ஆர்வம் மின்ன அவன் வினவ,

“ம்…” என அவள் தலையாட்டினாள். “என் பேரு ஏன் உனக்கு பிடிக்கல? ரகுநந்தன். நல்ல பேரு தான?” என யோசிக்க,

“உன் பேரு கிருஷ்ணா தான?” என்றாள் அவள்.

“அது பாட்டிக்கு. என் பேரு ரகுநந்தன், எனக்கு முதல்ல தாத்தா பேர வச்சாங்க. என்னை பேர் சொல்லி கூப்பிட முடியலனு திரும்ப ரகுநந்தன்னு பேர் வச்சாங்க” என்றவன்,

“ஆமா, ஏன் உனக்கு கிருஷ்ணாங்கிற பேர் பிடிக்கல” என்றான் ரகுநந்தன்.

அவளோ, ‘தெரியல’ என உதட்டைப் பிதுக்கியவள்,

“உன் பாட்டி உன்னை கிருஷ்ணானு தான் கூப்பிடுவாங்களா?” என சோகமாக அவள் வினவ,

“ஏன், உனக்கு பிடிக்கலயா. சரி, உனக்கு பிடிச்ச பேரு என்ன?” என்றான் ரகுநந்தன்.

“ராமன்…” என பட்டென பதில் வந்தது. அதனைக் கண்டு சிரித்தவன், “அப்போ நீ ராமர் பக்தையா?” என்றான் ரகுநந்தன்.

“ம்…” என அவள் தலை ஆட்ட, “அதுனால தான் கிருஷ்ணன பிடிக்கலையா?” என்றான் ரகுநந்தன்.

“அப்படிலாம் இல்ல. ஆனா ஏன்னு தெரியல, எனக்கு அந்த பேரே பிடிக்கல. அவரையும் பிடிக்காது, என் ராமன் தான் எனக்கு ரொம்பபப பிடிக்கும்” என அவள் கண்கள் விரித்து கூற,

“நீ ஏன் என்னோட முழு பேர கேட்கவே இல்ல?” என்றான் ரகுநந்தன்.

“இப்போ தான சொன்னீங்க” என அவள் கூற,

“இல்ல. என்னோட தாத்தா பேரு ‘ராமகிருஷ்ணன்’, பாட்டி தான் என்னை கிருஷ்ணானு கூப்பிடுவாங்க. நீ ராம்னு கூப்பிடு” என அவளுக்கு பிடித்ததை அறிந்து அதனையே கூற,

“அப்போ உன் பேரு ராமா!” என ஆச்சரியத்தில் கண்களை அகல விழித்தவளைக் கண்டு,

“ஆமா ஜானு…” என கண் சிமிட்டினான்.

“என் பேரு மிதிலா” என அவள் கூற, “உன்னை இனி நான் ஜானுனு கூப்பிடவா…” என கண்களில் ஏக்கத்தோடு அனுமதி கேட்டவனைக் கண்டு அந்த குட்டி மிதிலா என்ன உணர்ந்தாளோ! அவள் தலை தானாக ஆடியது.

“பிரண்ட்ஸ்…” என அவன் கை நீட்ட, அவள் கரங்கள் தானாக நீண்டது. அதன்பின் அவர்கள் குழுவில் இவனும் ஒருவனானான்.

அவனிற்கு மட்டுமே அவள் ஜானு. அவளிற்கு மட்டுமே அவன் ராம்.

அவர்களின் உறவு புனிதமான உறவாக மாறத் துவங்கியது. அவள் ஒவ்வொன்றிற்கும் ராமைத் தேடுவாள். அவனும் எந்த விசயம் என்றாலும் முதலில் அவனின் ஜானுவிடம் தான் கூறுவான்.

அந்த பருவத்தில் அதனை நட்பு என்றோ, காதல் என்றோ பெயர் சூட்டாமல் புனிதமான உறவாக வளரத் தொடங்கியது.

அவள் எப்பொழுதும் ஆண், பெண் பேதமில்லாமல் நட்பு கொள்ளபவளாதலால் இவர்களின் நட்பும் தங்கு தடையின்றி சீராக சென்றது.

ராமிற்கு ஜானு செய்யும் தில்லுமுல்லுகளை கண்டறிந்து, அதிலிருந்து காப்பாற்றுவதே வேலையாக இருக்கும்.

ரகுநந்தன் சுந்தரேசனிடம் டியூசன் வந்ததால், அவர்கள் இல்லத்திலும் அவன் நற்பெயர் பெற்றான்.

ஆனால் மிதிலாவோ, அவளின் தொடர் சேட்டைகளால் அம்பிகாவிடம் மாட்டிக் கொள்வாள். அவளை அதிலிருந்து காப்பாற்றுவதே தலையாய கடமையாக இருந்தது ரகுநந்தனுக்கு.

ஜானுவா! தாயா! என இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பவன் ரகுநந்தன் தான்.

ஒருமுறை தெருவில் தன் நண்பர் பட்டாளங்களுடன் கிட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் மிதிலா.

அந்த நேரம் பார்த்து காய்கறி வாங்கி வந்து கொண்டிருந்த அம்பிகா அவர்களைக் கடக்க, மிதிலா அடித்த கிட்டி குச்சி அவரின் கண்களை பதம் பார்த்திருந்தது.

சிறிது தவறி இருந்தாலும் அன்று கிட்டி குச்சியின் உபயத்தால் கண் பார்வையை இழந்திருப்பார் அம்பிகா. கண்ணின் ஓரத்தில் பட்டிருந்ததால் கண்கள் பெரிதாக வீங்கி போனது.

எப்பொழுதும் போல் சுந்தரேசனிடம் புகார் வர, மிதிலாவோ எதுவும் தெரியாதவள் போல் கைகளைக் கட்டிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அம்பிகாவோ, அவளைத் திட்டியதோடு மட்டுமல்லாமல் கோபத்தில் அவள் கன்னத்தில் வேறு அறைந்திருந்தார்.

சுந்தரேசனிடம், “பிள்ளையவா பெத்து வச்சுருக்கீங்க. தொல்லைய பெத்து வச்சுருக்கீங்க, என் கண்ணு போய்ருக்கும் இந்நேரம். ஏதோ தெய்வ சங்கல்பத்தால கிட்டி குச்சி கொஞ்சம் தள்ளி பட்ருச்சு” என கத்திக் கொண்டிருக்க,

“மன்னிச்சுக்கோங்க… அவ பிள்ளைகளோட விளையாடும் போது ஏதோ தெரியாம பட்ருச்சு, சின்ன பிள்ளைங்க ஏதோ விளையாட்டுத் தனமா இருந்துட்டாங்க. இனி இப்படி நடக்காது, மன்னிச்சுக்கோங்க” என சுந்தரேசன் மன்னிப்பு கேட்க,

தன் தந்தை தாழ்ந்து போய் பேசுவதைக் கண்ட குட்டி மிதிலாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“அவங்க தான் ப்பா குறுக்க வந்தாங்க. அப்போ அது அவங்க தப்பு தான, நாங்க விளையாடும்போது அவங்கள யாரு குறுக்க வர சொன்னா” என்றவளை பார்த்து கோபப்பட்ட சுந்தரேசன்,

“கொஞ்சம், அமைதியா இரு மிதிலா…” என்றவர், “விளையாட்டுப் புள்ள. இத பெரிய விசயமா எடுத்துக்காதீங்க” என மீண்டும் அம்பிகாவிடம் மன்னிப்பு வேண்ட,

“இப்பவும் எப்படி பேசுதுங்க பாருங்க. ஏதோ உங்க முகத்துக்காக தான் சும்மா விடுறேன்” என்றவர்,

“பொம்பள புள்ளயா அடக்க ஒடக்கமா இருக்க சொல்லுங்க, அப்புறம் போற இடத்துல ஒதப்பட்டு வசப்பட்டு தான் கிடக்கணும்” என்றவர் தன் இல்லத்தை நோக்கி சென்றார்.

இத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன், மிதிலாவின் அருகில் வர,

“போற இடத்துல நான் அடி வாங்குவனா ராம்” என உதட்டை பிதுக்கிக் கொண்டு கேட்பவளைக் கண்டு அவன் என்ன பதில் சொல்வான்.

“என் ஜானுவ யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ குட் கேர்ள் தான ஜானு” என அவள் கன்னத்தில் தன் அன்னை கரம் பட்ட இடத்தை வருடிய படி கேட்க,

“உன் அம்மா மேல தான் தப்பு ராம். அவங்க ஏன் நாங்க விளையாடுற இடத்துக்கு வந்தாங்க, அதுனால தான இப்படி ஆச்சு?” என்றவள்,

“போ. நீ உன் அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ ராம்” என முகத்தை திருப்பியவளைக் கண்டு சிரிப்பு தான் வந்தது ரகுநந்தனுக்கு.

“என் ஜானுக்கு தான் நான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவேன்” என்க,

“ப்ராமிஸ்” என அவள் கைகளை நீட்ட, அவனோ அவசரத்தில் அவளை சமாளிக்க,

அவள் நீட்டிய கரங்களை தடுத்து அவள் தலையில் கை வைத்து, “ப்ராமிஸ். என் ஜானு மேல ப்ராமிஸ், எப்பவும் உனக்கு தான் நான் சப்போர்ட் பண்ணுவேன்” என சத்தியம் செய்தான் ரகுநந்தன்.

“சத்தியமா…”

“சத்தியமா…”

“காட் ப்ராமிஸ்ஸா…”

“காட் ப்ராமிஸ்…”

ஆனால் எதிர்காலத்தில் இந்த சத்தியத்திற்காகவே தன் அம்மாவை அவனின் ஜானுவிற்காக எதிர்ப்பான் என அவன் நினைத்தானில்லை.

அதன்பின், ராம் ஜானுவின் உறவும் வளர்ந்து கொண்டே சென்றது.

பருவமெய்திராத வயதிலே அவளின் ராமன் ரகுநந்தன் தான் என அவள் மனதில் ஆழப் புதைந்தது.

எந்த பெண்ணாவது அவனிடம் பேச முற்பட்டால் கூட, கொதித்தெழுவாள் ஜானு என்கிற மிதிலா.

இதில் அவனை அவர்கள் பள்ளியில், ஒரு பெண் “ரகுநந்தனுக்கு இன்னொரு பேர் இருக்காம் பா… கிருஷணனாம், அவன் பக்கத்து வீட்டுல இருக்கிற நம்ம மாலா சொன்னா” என்க,

அந்த பதின் பருவ விடலை பையனாக இருந்த ரகுநந்தனுக்கு கிருஷ்ணன் என்ற அவதாரமும் இந்த பெண்களால் உருவெடுத்தது.

பருவ வயது கோளாறாக அவனைப் பின்தொடரும் பெண்களுக்கு அவன் கிருஷ்ணனாக தெரிய,

இதனை தன் தோழிகள் மூலம் அறிந்த மிதிலா ரகுநந்தனிடம் கிட்டத்தட்ட ஒரு மாதம் பேசாமல் அவனை தவிக்க விட்டாள்.

காரணம் புரியாமல் அவன் அவளிடம் சென்று நின்றாலும் அவளின் முறைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது. அந்த முறைப்பு மிதிலாவுடன் அவன் நட்பு கொண்டாடுவதற்கு முன் பார்த்த அதே முறைப்பு.

தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்காத குறையாக அவள் பின் அலைந்தான் ரகுநந்தன்.

ஆனால் மிதிலாவோ, கிருஷ்ணன் என்ற திருநாமத்தையே வெறுக்க, அவன் ராமன் தான் என நிரூபிக்க முடியாமல் தவித்துப் போனான் ரகுநந்தன்.

எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டு, ஒருநாள் அவள் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வரும் போது அவள் காலிலே விழுந்து விட்டான் ரகுநந்தன்.

அவள் பதறி விலக, “ப்ளீஸ் ஜானு, உன் கோபம் ராம் மேல இல்லனு எனக்கு தெரியும். ஆனா கிருஷ்ணா மேல என்ன கோபம், நான் எதுவுமே பண்ணலையே!” என கேட்க,

“நீ கிருஷ்ணனாம். அந்த பத்தாவது படிக்கிற கொரங்குங்க சொல்லுச்சுங்க, உன்னைச் சுத்தி அவங்க கோபியரா நிற்ப்பாங்களாம். போ, போய் உங்க கோபியர சுத்தி வாங்க” என அவள் முறைத்துக் கொண்டு கூற,

அவளின் அர்த்தமற்ற கோபம் புன்னகையை வரவழைத்தாலும் அவள் ராமனின் மீது எந்தளவு பைத்தியமாக உள்ளாள் என்பதும் புரிந்தது.

“நான் எப்பவும் என் ஜானுவோட ராம் தான். ப்ராமிஸ் ஜானு, ப்ளீஸ்” என அவன் கெஞ்ச,

சற்று மலையிறங்கி வந்தாள் அவள். “இனி யாராவது உன்னை கிருஷ்ணானு கூப்பிட்டா இனி உன்கூட நான் பேச மாட்டேன்” என உறுதியாய் கூற,

‘கடவுளே. ஏன் பா, நீங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கைல இப்படி விளையாடுறீங்க’ என மனதினுள் புலம்பியவன்,

“இனி யாரும் என்னை அப்படி கூப்ட மாட்டாங்க. ஆனா பாட்டி மட்டும்…” என அவன் இழுக்க,

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தவனைக் கண்டு, “சரி, அவங்கள தவிர உங்கள யாரு கிருஷ்ணானு கூப்பிட்டாலும் நான் உன்கூட பேச மாட்டேன் ராம்” என்றாள் மிதிலா.

ஒரு மாதத்திற்கு பிறகான அந்த ‘ராம்’ என்ற அழைப்பில் அவன் உருகி தான் போனான்.

அதன்பின் அவள் ஏதாவது ஒன்றை செய்து மாட்டிக் கொள்வதும் இவன் பின்னாலே சென்று அதனை தீர்த்து வைப்பதுமாய் காலங்கள் நொடிகளாய் பறந்தன.

அவளை காப்பாற்றும் ஒவ்வொரு முறையும் அவள், “தேங்க் யூ ராம்” என அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, அந்த ஒன்றிற்காகவே அவள் பின்னால் அலைய ஆரம்பித்தான் ராம்.

பதினான்கு வயதான அந்த விடலை பையனுக்கு, ஹார்மோன் மாற்றங்கள் நன்றாகவே வேலை செய்ய ஆரம்பிக்க, ஜானுவின் மீதான ஈர்ப்பை  காதல் என நம்பத் தொடங்கினான் ரகுநந்தன்.

ஆனால் மிதிலாவோ, அவள் ஜானகி என்றால் அவளின் ராமன் அவன் தானே! என்றதன் அர்த்தம் புரியாமலே அவனுடன் நட்பாக இருந்தாள்.

அவளின் நட்பு பட்டாளங்கள் இப்பொழுது ராமின் உற்ற நண்பர்களாகி இருந்தனர்.

மிதிலாவின் வகுப்பு தோழிகளோ அவளை கிண்டல் பண்ண ஆரம்பித்தனர். “உன் ராம் எங்க மிதிலா?”

“ஆமா, நீயும் உன் ராமும் பதினாலு வருஷம் வனவாசம் போகலயா?”

“உன் ராமனா அந்த அண்ணன்”

இப்படி பல கேலி, கிண்டல்கள்.

இன்னும் ரகுநந்தனின் வகுப்பு பெண்களோ, ஒருநாள் பள்ளியில் அவளை மறித்து “எங்க கிளாஸ் ரகு, உனக்கு ராமனா?. ராமன் அவன்னா நீ என்ன ஜானகியா?” என கிண்டல் பண்ண,

இவளோ, கோபத்தில் “ஆமா, நான் ராமனோட ஜானகி தான்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அன்று மாலையே, ரகுநந்தனின் முன் வந்து நின்றாள் மிதிலா.

“என்ன ஜானு?” என அவன் வினவ,

“நீ என்னோட ராம் தான?” என அதன் அர்த்தம் அறியாமல் வினவ,

“ஏன் ஜானு, இப்படி ஒரு கேள்வி?” என்றான் ரகுநந்தன்.

“சொல்லு. நீ என்னோட ராம் தான?” என அந்த பத்து வயது சிறுமி கேட்க, அதன் அர்த்தத்தை அவளுக்கு எவ்வாறு விளக்குவது எனப் புரியாமல், ‘ஆமாம்’ என தலையாட்டி வைத்தான் ரகுநந்தன்.

“அப்போ, நீ என்னை விட்டு பிரிஞ்சுருவியா?” என அவள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கேட்க, அவனுக்கு புரியாமல்,

“உன்னை ஏன் ஜானு பிரிய போறேன்” என்றான் ரகுநந்தன்.

“இல்ல, ராமாயணத்துல ஜானகிய ராமன் வனவாசம் முடிஞ்சோனே பிரிஞ்சுருவாரு. அப்போ நீயும் என்னை விட்டு பிரிஞ்சு போய்ருவியா” என கம்பராமாயணத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கேட்கும் அந்த சிறுமிக்கு என்ன பதில் அளிப்பது எனத் தெரியாமல் முழித்தான் அந்த விடலை பையன்.

“அது ராமாயணம் ஜானு. நீ ஏன் இதல்லாம் போட்டு குழப்பிக்கிற?” என்க,

“இல்ல, எனக்கு பயமா இருக்கு. நீ என்னை விட்டு போய்ருவியா ராம்” என கேட்கும் குட்டி மிதிலாவை என்ன சொல்லி புரிய வைப்பது எனத் தெரியாமல் தவித்தவன்,

“இந்த உலகத்துல எந்த மூலைல நீ இருந்தாலும் உன்னைத் தேடி உன் ராம் வருவேன் ஜானு” என வாக்களித்தான்.

தன் தந்தையின் சொல் கேட்டு, தன் கரம் பிடித்தவளோடு பதினான்கு ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்றால்,

இந்த கலியுக ராமனும் ஜானகியும் வாழ்க்கை ஓடத்தின் சூழ்நிலை காரணமாய் அதே பதினான்கு ஆண்டுகள் பிரிந்திருக்க நேர்ந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்