Loading

நகத்தைக் கடித்தபடி அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள் சஹஸ்ரா. ‘இவன் மனசுல என்ன என்னதான் நினைச்சிட்டு இருக்கான். வித்த ப்ராப்பர்ட்டிய எல்லாம் திரும்ப கொடுத்து பார்ட்னரா வர சொல்கிறான். ஆனா இதெல்லாம் தீரன் ஏன் வாங்கணும்?’ என்ற யோசனையுடன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

தீரஜ் சென்றதும் நிக்கோலஸ்ஸும் அவனுடனே பின்னால் விரைய தேவிகா வேகமாக நிக்கோலஸை பின் தொடர்ந்தாள்.

“நில்லு நிக்கி” கோபமாக அவள் முறைக்க,

‘ஐயையோ போச்சு’ என பதறியவாரே நிக்கோலஸ் மெதுவாக நின்றான்.

தேவிகாவோ கடும் சினத்துடன், “உனக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா. அவ ஹஸ்பண்ட்ன்னு சொல்லி உன் பாஸ் ஏமாத்தி இருக்கான். அது மட்டும் இல்லாம இப்ப சொத்தை வச்சு லாக் பண்றான். நீயும் இதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டுக்கிட்டு இருக்க. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. தீரன் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட அவ மனசு எவ்வளவு வேதனைப்படும்.” என்று படபடவென கத்தினாள்.

நிக்கோலஸ் அமைதியின் உருவாக நிற்க, அது பாவையை மேலும் சினப்படுத்தியது

“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் நிக்கி. அமைதியா இருந்தா என்ன அர்த்தம். அது சரி நியாயம் ஒன்னு இருந்தா தானே உன்னால பதில் பேச முடியும். அநியாயமா அவளோட மனசு ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க. தேவை இல்லாம அவன் இவளோட வாழ்க்கைக்குள்ள புகுந்து அவ வாழ்க்கைய கெடுத்துட்டான். அண்ணன், அண்ணன்னு சொல்லிட்டு, அவன் கூட இருந்து நீயும் குழி பறிச்சிட்டில்ல.

உண்மையை சொல்லு இவன் தீரன் இல்லைன்னு உனக்கு ஏற்கனவே தெரியும் தான. அதனால தான ஆக்சிடென்ட் ஆகி பத்து நாள் ஆகியும் சஹாகிட்ட நீ இன்ஃபார்ம் பண்ணவே இல்ல.

சீ… இப்படி பண்ண உனக்கு வெக்கமா இல்ல” இன்று முகத்தை சுளித்தாள்

அவனோ, “பேசி முடிச்சிட்டியா நான் கிளம்பவா” என்றான் அமைதியாக

“தயவு செஞ்சு கிளம்பு. உன்ன யாரும் இருக்க சொல்லல. நீங்க ரெண்டு பேரும் செஞ்ச பாவத்துக்கு நல்லா அனுபவிப்பீங்க” என்று சாபம் விட்டாள்.

ஆனால் உள்ளுக்குள் ஒரு பெரும் வலி தாக்கியது என்னவோ உண்மைதான்

அவனுக்கும் அதே வலி தாக்கியதோ என்னவோ, “நீ சொல்றத நான் ஒத்துக்குறேன். நீ சாபம் கொடுத்த மாதிரி நல்லா அனுபவிச்சிட்டே போறேன். ஆனா இவ்வளவு சொன்ன உன் ஃபிரண்டு தீரன் கூட நடந்த அக்ரிமெண்ட் மேரேஜ் பத்தி சொன்னாளா” எனக் கேட்டான்.

விழிகளை அகல விரித்த தேவிகா, “என்ன உளர்ற” என்றிட, நான் ஒன்னும் உளறல. நீ வேணும்னா உன் ஃபிரண்டுகிட்டயே கேளு, உண்மையா அவ கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு… என்று கூறிவிட்டு நிற்காமல் நகர்ந்து விட்டான்

கூண்டுக்குள் சிக்கியவள் போல சஹஸ்ரா, செய்வதறியாமல் குழம்பி இருக்க, தேவிகா அவளிடம் வந்தாள்.

‘இந்த நிக்கி சொன்னதை வச்சு எப்படி இவகிட்ட கேட்க முடியும்?’ என்ற தயக்கம் எழுந்தாலும், ‘அக்ரிமெண்ட் மேரேஜ்’ என்றது அவளை உறுத்தியது.

“சஹா… நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்.” தேவிகா பொறுமையாக ஆரம்பிக்க,

“ம்ம்.” என்றவள், சோர்வாக நிமிர்ந்தாள்.

“நீயும் தீரன் அண்ணாவும் அக்ரிமெண்ட் மேரேஜ் செஞ்சுகிட்டீங்களா?” கேட்ட பிறகு, அவளுக்கே சங்கடமாகிப் போனது.

சஹஸ்ராவோ திகைக்க, அவளின் பாவனைகள் தேவிகாவின் வயிற்றில் அமிலத்தை கரைத்தது.

இம்முறை அழுத்தமாகவே “சொல்லு சஹா…” என்று கேட்க,

கண்ணில் நீர் தளும்ப, ஆமோதிப்பாக தலை ஆட்டியதில் தேவிகா கொதித்து விட்டாள்.

சப்பென அவளை ஒரு முறை அறைந்த பிறகே, “ஏண்டி, ஏன் இப்படி ஒரு மடத்தனம் பண்ணுன?” என அவளை உலுக்கிட,

கன்னத்தில் கை வைத்தபடி நடந்ததை உரைத்ததில், பொத்தென்று அமர்ந்து விட்டாள்.

“பைத்தியக்காரியாடி நீ. காலம் முழுக்க ரூம் மேட் – ஆ இருக்க எதுக்காக கல்யாணம் பண்ணனும். அதுவும் தாலியை கூட நீயா கட்டி இருக்க. கல்யாணம் ஆவது ரெஜிஸ்டர் ஆச்சா இல்லையா?” காட்டமாக கேட்க,

பாவமாக தலையாட்டினாள் சஹஸ்ரா.

“ம்ம்ஹும்… எனக்கு என்னமோ நம்பிக்கை இல்ல. அனாவசியமா உன் வாழ்க்கைய கெடுத்ததே தீரன் தான்னு தோணுது” என்றாள் உறுதியாக.

சஹஸ்ரா, “வாட் எவர். அது நான் சுயமா எடுத்த முடிவு. ஆனா, இவன்…” எனக் கூறும் போதே,

“நீ எடுத்த முடிவே முட்டாள்தனம்ன்னு சொல்றேன். இதுல சுயமா எடுத்ததாம். என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, இவ்ளோ பெரிய காரியத்தை செஞ்சுருக்க” 
என்று பொரிந்தவள், கோபத்தை கட்டுப்படுத்த இயலாமல் அகன்று விட, சஹஸ்ராவிற்கு தலை வலித்தது.

இதில் விற்ற வியாபாரங்களின் சுமை வேறு அவள் மீதே விழ, எதையும் சமாளிக்க இயலாமல் திணறினாள்.

அன்று இரவு வீட்டினுள் நுழைந்த தீரஜ் கண்டது, முகம் முழுதும் சோர்வு அப்ப உறங்கிக் கொண்டிருந்தவளை தான்.

அவனுக்கும் தெரியும்… அவளால் தனியாக இதனை கையாள முடியாதென்பது. அவளருகில் அமர்ந்தவன், அவளையே சிறிது நேரம் உணர்வின்றி பார்த்து விட்டு, “மிஸ் யூ பிரின்ஸஸ்…” என நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

அதைக் கூட உணராமல், அடித்துப் போட்டது போன்று உறங்கியவளை பெருமூச்சுடன் ஏறிட்டவன், கட்டிலில் அவளை ஒட்டிக் கொண்டு படுக்க மனமற்று, சோஃபாவிலேயே படுத்துக் கொண்டான்.

மனம் இல்லை என்பதை விட, அவன் மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. ஆனால், இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பாராமுகம்? என்ற கேள்விக்கு அவனுக்கும் அவளுக்குமே விடை தெரியவில்லை.

மறுநாள், சஹஸ்ராவின் அலுவலகத்தில் அவளுக்கு முன் தீரஜ் ஆஜராகி இருந்தான்.

“வொர்க் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு மிஸஸ் சஹஸ்ரா தீரஜ்?” என அவன் தீவிரமாகக் கேட்க,

“என் பேர் சஹஸ்ரா மட்டும் தான்” என்றாள் அழுத்தி.

அதனைக் காதில் வாங்காதவன் போல, “குரோம்பேட்டைல இருக்குற பங்களாவோட இன்டீரியர் டிசைன் பிராஜக்ட்டை ஏன் முடிக்காம வச்சு இருக்க” என்றான் அதிகாரமாக.

பதில் சொல்ல பிடிக்கவில்லை என்றாலும், பதில் கூற வேண்டிய நிலையில் அல்லவா இருக்கிறாள். அதனால், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,

“மத்த பிசினஸ் வேலை நிறைய இருந்துச்சு. இன்னும் 2 நாள்ல முடிஞ்சுடும்.” அவனைப் பாராமல் கூற,

“இந்த ஸ்டுப்பிட் காரணத்தை எல்லாம் க்ளையண்ட்கிட்ட சொல்ல முடியாது மிஸஸ் சஹஸ்ரா. மேக் இட் ஃபாஸ்ட்.” என்றவன், மேலும் சில தொழில் ரீதியான கேள்விகளை கேட்டு குடைந்தான்.

தலையெழுத்தே என்று பட்டும் படாமல் பதில் கூறியவளிடம், “ஓகே. கிளம்பு. குரோம்பேட்ல உன் இன்டீரியர் வொர்க் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரலாம்.” என்று எழுந்திட,

“நான் வரல. எனக்கு வேற வேலை இருக்கு” என்றாள் சுள்ளென்று.

“உன் பிசினஸ் பார்ட்னர்க்கு, நீ பெர்ஃபக்ட் – ஆ வேலை பாக்குறன்னு நம்ப வைக்கிறது அவசியம் மிஸஸ் சஹஸ்ரா.” என தோளைக் குலுக்கியவன், அவளின் அனுமதி கேளாமல், “லெட்ஸ் கோ” என்று முன்னே நடக்க, எழுந்த எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காட்டியபடி அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவனது காரில் ஏறாமல், தன் ஸ்கூட்டியை கிளப்பியவளை புருவம் சுருக்கி பார்த்தவன், “என் கூட வா!” என அழைக்க,

அவளோ நக்கலாக, “ஐயோ வேணாம் மிஸ்டர் தீரஜ். உங்க அண்ணனை ஆக்ஸிடென்ட் பண்ணுன மாதிரி என்னையும் கூட்டிட்டு போய் போட்டு தள்ளிடாதீங்க. அட்லீஸ்ட் என் தங்கச்சிக்காகவாவது நான் உயிரோட இருக்கணும்.” என சுடு சொற்களை வீசி விட்டு அவள் வண்டியில் பறந்து விட, வெகுநேரம் அதே இடத்தில் இறுகி நின்றான் தீரஜ்.

அவனைக் காயப்படுத்திய திருப்தியில் அவள் முகம் சற்றே பிரகாசமாக இருந்தது. குரோம்பேட்டை அடைந்து அரை மணி நேரம் ஆகியும் கூட தீரஜ் வராது போக, அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அவள் வேலையில் மூழ்கினாள்.

ஏற்கனவே அந்த பங்களாவின் உள்வடிவமைப்பு முடியும் தருவாயில் தான் இருக்க, ஒரு மணி நேரம் ஆகியும் தீரஜ் வராததில் அவளை மீறி அவள் கண்கள் வாசல் புறம் துழாவியது.

‘எங்கயோ போய் சாகட்டும்…’ என ஒரு மனம் சாபமிட்டாலும், மற்றொரு மனமோ ‘எங்க போனான். ஏன் இவளோ நேரமா வரல.’ என தவித்தது.

இரு வகையான உணர்வுகளில் சிக்கி பதறியவள், அவன் காரை கண்டதும் தான், நிதானத்திற்கு வந்து விழிகளை திருப்பிக் கொண்டாள்.

வந்தவன், சஹஸ்ராவைப் பாராமல், வேலையை பற்றி மட்டும் ஆராய, இயல்பாகக் காட்டிக் கொண்டாலும் அவன் முகமும் குரலும் வாடி தான் இருந்தது.

ஓரக்கண்ணில் அவனை நோட்டமிட்ட சஹஸ்ராவிற்கு நெஞ்சை பிசைந்தது.

எப்போதும், மனம் சுணங்கினால், உடனே நத்தையாக அவளிடமே சுருண்டு தஞ்சம் புகுந்து விடுவான். அவளைக் கட்டிக்கொண்டு, மடியில் தலையை புதைத்துக் கொள்பவன், நேரம் சென்ற பிறகே இயல்பிற்கு திரும்புவான்.

சில நேரம், அவளே அவன் முக வாட்டத்தை அறிந்து கொண்டு, இழுத்து மடியில் போட்டு அழுத்தமாக முத்தமும் இடுவாள்.

தன்னை புரிந்து கொண்ட மனையாளின் செய்கையில் ஒரு நொடி அவன் விழிகள் வியப்பில் விரியும். சின்ன புன்னகையுடன் சேயாய் அவளுடன் ஒட்டிக் கொள்வான்.

இப்போதும் அவளை மீறி அவள் கரங்கள் பரபரவெனத் துடித்தது.

‘உனக்கு மான ரோஷமே இல்லையா?’ என மனம் காறி உமிழ்ந்தாலும், தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று உணர்ந்தாலும், அவளால் அவனின் வாட்டத்தை காண இயலவில்லை.

அதற்கு மேல் அங்கிருக்க பயந்து, உடனே கிளம்பி விட்டாள்.

அவள் கிளம்பியதும் தான் தீரஜால் மூச்சே விட முடிந்தது.

காயம் கொடுத்தது அவளாக இருந்தாலும், அதற்கான மருந்தையும் அவளிடமே தேடினான்.

தன்னிச்சையாக, அவளின் அரவணைப்பை தேடிய மனதையும் உடலையும் கட்டுப்படுத்த இயலாமல், இத்தனை நேரம் காரினுள்ளேயே அமர்ந்திருந்தவன், நேரம் கடப்பதை உணர்ந்து அங்கு வந்தான்.

ஆனால், அவளைப் பார்த்ததும் மட்டுப்பட்டிருந்த வலி மீண்டும் பேயாய் எழ, அவளைக் கட்டிக்கொள்ள ஒவ்வொரு அணுவும் போட்டி போட்டது.

அவள் கிளம்பியதுமே தன்னை தானே சமன் செய்தவன், முயன்று கவனத்தை திசை திருப்ப, அவள் செய்திருந்த உள்வடிவமைப்பை பார்வையிட்டான்.

நுணுக்கமாக அவள் செய்திருந்த அத்தனை வடிவமைப்பும், கிரியேட்டிவிட்டி திறனும் அத்தனை அழகாக இருந்தது.

“சோ காட்ஜியஸ்…” ரசனையாக அவன் இதழ்கள் முணுமுணுக்க, “டாலெண்ட் எல்லாம் நிறைய தான் இருக்கு. கொஞ்சம் மூளை தான் கம்மி.” என மீண்டும் ரசனை பொங்க, மனைவியை திட்டியவன், சோம்பலாய் புன்னகைத்துக் கொண்டான்.

கண்கள் இரண்டும் ஆத்திரத்தில் சிவந்தது வினோதினிக்கு.

அந்த செய்தித்தாளில் வெளிவந்திருந்த தீரஜின் பெயரை மீண்டும் மீண்டும் வாசித்தாள்.

தீரன் அல்ல தீரஜ் என்று அவன் உணரவே சில நேரம் பிடித்தது.

கோபம் எரிமலையாக வெடிக்க, ஹாலில் இருந்த பொருட்களை எல்லாம் உடைக்கத் தொடங்கினாள்.

சுலோச்சனா அவளை சமன் செய்யப் பார்த்தும் முடியவில்லை. “வினோ என்ன ஆச்சு உனக்கு?” அவர் புரியாமல் கேட்க,

அவளோ செய்தித்தாளை நீட்டினாள் சினத்துடன்.

அதில் தீரஜ், இத்தனை நாட்களாக அம்னீஷியாவில் சில விஷயங்கள் மறந்திருந்ததாகவும், இப்பொழுது தான் அனைத்தும் நினைவு வந்ததாகவும், இடைப்பட்ட நாட்களில் சஹஸ்ராவை திருமணம் செய்து கொண்டதையும் செய்தியாக கொடுத்திருந்தான்.

விபத்தில் இறந்தது தீரனா தீரஜா? என்ற குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க, வினோதினிக்கு ஆற்றாமை அடங்கவில்லை.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, சீட் பண்ணிட்டான்ம்மா. இத நான் சும்மா விட மாட்டேன்.” எனக் கத்திட, சுலோச்சனாவிற்குமே இது பெரிய அதிர்ச்சி தான்.

இவ்வளவு நாளாக, தீரஜ் இறந்ததாகவும் அவனை கொன்றது தீரன் தான் என்றும் ஆணித்தரமாக நம்பியவள், வழக்கு தொடுக்க முயன்று அதில் தோல்வியே கண்டாள்.

ஆனால் கண் முன் இருப்பது அவள் ஆசைப்பட்டவனல்லவா! அவனை தாரை வார்க்க அவளுக்கு பைத்தியமா பிடித்து இருக்கிறது!

நேராக தீரஜின் வீட்டை நோக்கி சென்றாள்.

அங்கு ஏற்கனவே சஹஸ்ரா, அவனை பார்வையால் எரித்தாள்.

“யாரை கேட்டு நான் உன் பொண்டாட்டின்னு நியூஸ் குடுத்த?” காளியாக அவள் நிற்க,

சாவகாசமாக நெளிப்பு விட்டவன், “யாரை கேட்கணும்? நீ என் வைஃப் தான.” எனக் கூறிய படி, குளிக்க செல்லும் பொருட்டு டீ – ஷர்ட்டை கழற்றினான்.

முகத்தை சுளித்து அவள் திரும்பிட, அதில் லேசாக எழுந்த கடுப்பில் சுவற்றோரம் அவளை அணை கட்டினான்.

“தள்ளிப் போடா…” என்று சுவற்றில் ஒன்றியவள், அவன் மீது விரல் நுனி கூட படாமல் நிற்க,

ஆடவனின் வெற்று மார்பின் கதகதப்பும் வெப்பமும் அவளை ஆட்டுவித்தது.

இதழ்களை இளிவாய் விரித்தவன், “நீ இதுக்கு முன்னாடி என்னை இப்படி பாத்ததே இல்லையாடி. “என நக்கலாக கேட்டு விட்டு, அவளின் கையைப் பற்றி அவன் நெஞ்சின் மீது பதித்தான்.

“இந்த நெஞ்சு மேல தான் பல நாள் தூங்கி இருக்க. நீ தேடுற நிஜம் நான் தான்டி.” என்றவன், மெதுவாக அவள் கைகளுக்கு விடுதலை கொடுக்க, வெடுக்கென கையை எடுத்துக் கொண்டவள், கண்ணில் தேங்கி நின்ற கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்.

அது என்ன மாதிரியான பார்வை என்று அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் அதனைக் காண சகிக்கவில்லை.

அவளது கன்னத்தை கையில் ஏந்தியவன், “நான் உன்ன ஏமாத்தணும்ன்னு நினைக்கலடி. ஐ… ஐ ஜஸ்ட் லவ் யூ பிரின்ஸஸ். உன்னை விட்டு தள்ளி இருக்க முடியலடி.” ஒட்டு மொத்த உணர்வையும் குரலில் தேக்கி அவன் கூறிட, விழிகளைத் தாண்டி அவளின் கண்ணீர் வழிந்தது.

கன்னம் தாண்டி வழியும் முன்னே, இதழ் கொண்டு அதனை துடைத்து விட்டவன், மலர் கன்னங்களில் ஊர்வலம் சென்றான்.

தடுக்கத் தோன்றாமல், கண்களை இறுக மூடி நின்றவளுக்குள் பலவித உணர்வுப் போராட்டம்.

அதற்குள் அவன் இதழ்களை ஆக்கிரமிக்க எத்தனிக்க, சட்டென சுதாரித்து அவனை தள்ளி விட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன்னை இழந்திருந்தவனுக்கு, அவளின் விலகல் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்க, “சஹி… பிளீஸ்…” என மீண்டும் அவளருகில் வந்தான்.

அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள், “போடா பொறுக்கி…” எனக் கத்திட,

“ஆமா… நான் பொறுக்கி தான். உன்கிட்ட மட்டும்!” அவளை ஆழப் பார்த்துக் கூறியவன், “ஒரே ஒரு கிஸ் குடுக்குறேன் பிரின்ஸஸ். பிளீஸ்…” கிட்டத்தட்ட கெஞ்சலாகவே கேட்டான்.

“போய் நீ கூட கூட்டிக்கிட்டு சுத்துனவளுங்ககிட்ட கேளு. கெட் லாஸ்ட்.” என கோபமாக கூற வந்தவளின், குரல் ஏனோ கமறலாகவே வெளிவந்தது.

அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், கீழே ஏதோ சத்தம் கேட்டதில் டீ ஷர்ட்டை அணிந்து கொண்டு, விருட்டென அங்கிருந்து சென்றான்.

உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிய சஹஸ்ரா, கண்ணை துடைத்துக் கொண்டு அவன் பின்னே செல்ல, கீழே வினோதினி தான் இருவரையும் முறைத்திருந்தாள்.

“யூ ப்ளடி சீட்டர். என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, இப்ப என்னை ஏமாத்தி இருக்கீல…” என தீரஜ் மீது பாய, அவன் சலனமின்றி பார்த்தான்.

சஹஸ்ராவோ திகைத்து நிற்க, வினோதினியின் மொத்த கோபமும் அவள் மீது திரும்பியது.

“உன் புருஷன் செத்துட்டா, அதுக்கு இவன் என்ன பேக் அப் ஆப்ஷனா? என் வாழ்க்கையை கெடுத்துட்டு நீ இவன் கூட கூத்தடிச்சுட்டு இருக்க…” என தங்கை மீது குற்றம் சாட்டிட, சஹஸ்ரா அதிர்ந்தாள்.

அவள் பேசியதை விட, தீரஜ் அவளை காதலித்தது தான் இத்தனை வலிக்கிறதா? என்ற உண்மை புரியாமல் உறைந்தாள்.

ஆனால் கோபமாக பேசிக் கொண்டிருந்த வினோதினி திடீரென வலியில் அலறினாள்.

தீரஜ் தான், சினத்தின் மறுஉருவமாக  வினோதினியின் காலை தன் காலால் மிதித்துக் கொண்டிருந்தான்.

நிகழ்விற்கு வந்த சஹஸ்ரா பதறி, “விடுடா அவளை என்ன பண்ற?” என்று அவனை தடுக்க முயற்சிக்க, தீரஜ் அவளை முறைத்த முறைப்பில் முயற்சியை கைவிட்டாள்.

இப்போது வினோதினியின் புறம் திரும்பியவன், “நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கேனா?” எனக் கேட்க,

அவளோ வலியில் அலறியபடி, “இல்ல” என்றாள் வேகமாக.

தீரஜ் விடாமல், “என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி, என் பின்னாடி சுத்துனது யாரு?” என நன்றாக காலை மிதிக்க, அவனிடம் இருந்து விடுபட இயலாமல், “நான் தான்” என்றவள், “காலை விடு.” என்று கெஞ்சினாள்.

அவன் நிதானமாக சஹஸ்ராவைப் பார்க்க, அவளோ சிலையாகி இருந்தாள்.

இதென்ன புது கதை! இருவரும் காதலிப்பதாக அல்லவா இவள் கூறினாள்? அப்போ எல்லாமே பொய்யா? என நினைக்கவே உள்ளம் பதறியது.

வினோதினியின் காலை விட்டவன், “இப்ப சொல்லு. எதுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வதந்திய கிளப்பி விட்ட.” என அழுத்தமாக கேட்க,

அவளோ காலை பிடித்தபடி, “நான் உன்னை ஒன் சைடா லவ் பண்ணுனது உண்மை தான். ஆனா, கடைசியா நீ தான் நிச்சயதார்த்தத்துக்கு ஒத்துக்கிட்ட. என்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு தீரன்கிட்ட ஹோப் குடுத்த.” என்றிட, இப்பொழுது அதிர்வது தீரஜின் முறையானது.

யாரோ இவன்(ள்)
மேகா…

ஹாய் டியர் பிரெண்ட்ஸ். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🤩🤩🤩🤩😍😍😍💜💜💜 And sorry, Niraya comments kku ennala reply panna mudiyala. Ud mudincha varai seekiram poda try panren drs💜💜

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
41
+1
114
+1
9
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்