Loading

கையில் இருந்து ரத்தம் வழிந்ததாலும், மேலும் அதிகமாக யோசித்ததாலும், மயங்கி விழுந்தவளை தாங்கிப்  பிடித்தான் துருவேந்திரன். அவள், அலுவலகத்தில் இருந்து வரும்போதே, நிச்சயம் இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று கணித்து வந்தவனுக்கு அவளின் நிலை கண்ணில் ஈரத்தைக் கொடுத்தது.

அவன் பின்னேயே வந்த அர்ஜுன், விது, மீரா மூவரும், உத்ரா முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த துருவை பார்த்து வேதனை அடைந்தனர். அர்ஜுன் வேகமாய் சென்று அவளின் கைக்கு மருந்து போட்டு விட்டு, கட்டிட்டான். அப்பொழுதும், அவள் துருவின் மடியில் தான் இருந்தாள்.. பின், துருவ் அவளை தூக்கி, கட்டிலில் படுக்க வைத்து விட்டு, இறுகிய முகத்துடன் வெளியில் வந்தான்.

அர்ஜுனும், விதுனும் உத்ராவைப் பார்த்து வருந்தி விட்டு, அவர்களும் வெளியே வர, மீராவிற்கு லட்சுமி போன் செய்தார்.

மீரா, “சொல்லுங்கம்மா” என்றதும்,

அவர் “இந்த பசங்க எங்க மீரா? போன் அடிச்சா யாருமே எடுக்க மாட்றீங்க” என்று சற்று அதட்டலாகக் கேட்க, அவள் பயந்து “அது வந்துமா… எல்லாரும் வீட்ல தான் இருக்கோம்” என்றாள் திக்கி திணறி.

லக்ஷ்மி, “நான் கருணா அண்ணா வீட்டுக்கு தான வரச்சொன்னேன். எல்லாரும் அங்க என்ன பண்றீங்க? என்ன திருட்டுத்தனம் பண்ணுதுங்க எல்லாரும் சேர்ந்து” என்று கேட்டதும், அவள் மிரண்டே விட்டாள். பேந்த பேந்த முழித்து கொண்டு, மற்ற மூவரையும் பார்க்க, அர்ஜுன் அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. நீயே சமாளி என்று வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்தான்.

“மா அது வந்து” என்று திணறியவளுக்கு அழுகையே வந்து விட்டது.. உடனே லட்சுமி சிரித்து விட்டு, “இவங்க கூட இருந்தும் உனக்கு சமாளிக்க தெரியல. இப்படிலாம் இருந்தால், அந்த வானரக்கூட்டம் உன் தலைல மிளகா அரைச்சுடுங்க. சரி உதி எங்க?” என்று கேட்க, அவள் அவர் சாதாரணமாய் பேசிய பிறகே நிம்மதி ஆகி, “உத்ரா தூங்குறாங்க மா” என்று சொல்லுகையில், அர்ஜுன் அவளிடம் இருந்து போனை வெடுக்கென வாங்கி பேசினான்.

“மா அவள் தூங்குறாள். நாங்க இங்க இருந்துட்டு நாளைக்கு வரோம். சஞ்சுவை பார்த்துக்கோங்க” என்று நைசாக நழுவி வெளியில் வந்தவன், “யம்மோவ் எதுக்கு மா அவளை மிரட்டிகிட்டு இருக்க” என்று கேட்க,

அவர், “ஹ்ம்ம் அவள் வாயில்லா பூச்சியா இருக்காள். இப்படி உங்க கூட்டத்துகிட்ட வந்து சிக்கிட்டாளே, நம்ம கொஞ்சம் அவளை ட்ரெயின் பண்ணுவோமேன்னு மிரட்டி பார்த்தேன். விட்டா அழுதுடுவா போல! எப்படி டா மகனே அவளை சரி பண்ண போற? இதுல உங்க மாமாவை வேற சமாளிக்கணும்” என்றார் நக்கலாக.

அவனோ “மா, நீங்க பழைய பிரச்சனைய பத்தி பேசுறீங்க. இப்ப புதுசா ஒரு பிரச்சனை” என்றதும், அவர் மிரண்டு,

“ஏற்கனவே இந்த மீரா விஷயத்தை என்கிட்ட சொல்லி, எப்போ உன் மாமாகிட்ட திட்டு வாங்க போறேன்னு தெரியாம இருக்கேன். இதுல நீ வேற எதையாவது சொல்லி என் பிபியை ஏத்தாத. அஜய்க்கு போன் பண்ணேன் அவன் எடுக்கவே இல்லை. அவன் வந்ததும் என்கிட்டே பேச சொல்லு!

அப்பறம் எல்லாரும் சீக்கிரம் சாப்டுட்டு தூங்குங்க” என்று போனை வைக்கவும்,

அர்ஜுன், ‘நம்ம பிரச்சனைன்னு சொன்னால், எல்லாரும் அரண்டு ஓடுறாங்க’ என்று நினைத்து விட்டு உள்ளே வந்தான்.

துருவ் அவனிடம், “அவள் எப்போ கண்ணு முழிப்பாள்” என்று கேட்க, அவன், “ஒரு மணி நேரத்துல முழிச்சுடுவாள்” என்று சொன்னதும், அவன் “ம்ம்” என்று மட்டும் தலையாட்டி விட்டு ஏதோ யோசனையிலேயே இருந்தான்.

பின், அர்ஜுன் விதுனை அஜய்க்கு போன் செய்ய செல்ல, அவன் “பங்கு அவன் போனை எடுக்க மாட்டுறாண்டா…” என்று சொன்னதும், அர்ஜுன் சுஜிக்கு அழைத்தான்.

அங்கு சுஜியின் வீட்டில், அவளின் அம்மா காயத்ரி “இன்று பார்த்த மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?” என்று கேட்க, அவள் யோசனையுடன் “நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்மா” என்று விட்டு அறைக்கு வந்தாள். வந்தவளுக்கு இன்று சந்துருவுடனான சந்திப்பு தான் தலையில் ஓடியது.

அஜய் இருக்கும் வரை, அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவன் சென்ற பிறகு சந்துருவின் முன் அவளால் ஒரு நிமிடம் கூட இயல்பாய் இருக்க முடியவில்லை. அவன் பேசும்போதும், அவள் அஜயுடனே அதனை ஒப்பிட்டு பார்த்தாள். ஏன் இப்படி எனக்கு அவன் அருகில் இருந்தால் மட்டுமே சாதாரணமாய் இருக்க முடிகிறது என்று குழம்பியவள், சந்துரு கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னோம் என்று கூட தெரியாமல் ஏதோ உளறி விட்டு வீட்டிற்கு வந்தாள்.

“எனக்கு என்ன ஆச்சு?” என்று குழம்பி கொண்டிருக்கையில் தான் அர்ஜுன் போன் அடித்தான்.

அதனை எடுத்தவள் “சொல்லு பங்கு” என்க,

அவன் “சுஜி எங்க இருக்க?” என்றான் தீவிரமாக.

“சுடுகாட்டுல நம்ம 5 பேருக்கும் குழி தோண்டிகிட்டு இருக்கேன்… கேக்குறான் பாரு கேள்வி” என்று அவனை கிண்டலடித்து விட்டு, “இந்த நேரத்துல வீட்ல தான இருப்பேன் எதுக்கு போன் பண்ணுன ” என்றாள்.

அதற்கு அர்ஜுன், மீராவை பார்த்துக் கொண்டே, ” நீ 5 குழி தான் தோண்டுவன்னு எனக்கு தெரியும்/ அதான் எக்ஸ்ட்ரா ஒரு குழி சேர்த்து தோண்டுன்னு சொல்ல போன் பண்ணுனேன்.” என்றான்.

அதில் மீரா அவனை பார்க்காமல் உள்ளே செல்ல, சுஜி, “என்ன உன் ஆள் இருக்காளாக்கும் பக்கத்துல” என்றதும், அவன் எதுவும் சொல்லாமல், “அஜய்கிட்ட போன் பண்ணி எங்க இருக்கானு கேளு” என்றான்.

சுஜி குழம்பி, “ஏண்டா அதை நீயே போன் அடிச்சு கேட்கவேண்டியது தான?” என்றதும்,

“ப்ச் அது எங்களுக்கு தெரியாதா, எனக்கும் அவனுக்கும் ஒரு சின்ன பிரச்சனை. அவன் கோச்சுக்கிட்டு வெளியே போய்ட்டான். போனும் எடுக்க மாட்டுறான். எப்படியும் பீச்க்கு தான் போயிருப்பான்… நீ அவன்கிட்ட பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வா” என்றதும் தான் அவளுக்கு அவன் ஏதோ பிரச்சனை என்று அவசரமாக கிளம்பியது ஞாபகம் வந்தது.

“ஆமா, அவன் சாயங்காலமும் ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டு போனான். என்னாச்சு பங்கு…? உங்களுக்குள்ள சண்டையே வராதே. இன்னைக்கு என்ன ஆச்சு” என்று சற்று பதட்டத்துடன் கேட்க,

“உனக்காக எல்லாம் மறுபடியும் பிளாஷ்பேக் சொல்ல முடியாது. நீ அவனை போய் பாரு. அவனே உனக்கு சொல்லுவான்” என்று விட்டு போனை வைத்தான்.

என்னதான், அஜய் சுஜியிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாலும், ஏதாவது பிரச்சனை என்றால் அவன் அவளிடம் மட்டுமே ஆறுதல் தேடுவான். அவன் மனதை அர்ஜுனும் நன்கு அறிந்து தான் வைத்திருந்தான். அதனாலேயே அவன் சுஜியிடம் பேச சொன்னான்.

சிறிது நேரம், அமைதியாகவேக் கழிய, உத்ராவின் அறையில் ஏதோ சத்தம் கேட்டு அர்ஜுன் அங்கு சென்றான். உத்ரா கண் விழித்து எங்கயோ வெறித்து கொண்டிருந்தாள்.

அர்ஜுன் “உதி” என்று அழைக்க,

அவள் “எங்க அவன்?” என்று கேட்டாள். அர்ஜுன் “யாரு”” என்று புரியாமல் கேட்க, அவள் ‘நான் யாரை கேட்கிறேன் என்று உனக்கு தெரியவில்லையா’ என்று பார்த்தாள்.

அர்ஜுன், “வெளிய தான் இருக்கான் வர சொல்லவா?” என்று கேட்க, அவள் அமைதியாய் இருந்ததாள். அவள் என்ன நினைக்கிறாள் என்று புரியாமல், துருவை அழைத்தான். துருவ், உள்ளே சென்று உத்ராவைப் பார்க்க, அவள் அவன் முகத்தை பார்க்கக் கூட இல்லை.

வேறு எங்கோ பார்த்து கொண்டு, “அன்னைக்கு என்னை ஆக்சிடென்ட் பண்ணுனது, அந்த மூணு பேரு வேலை தானா” என்று கேட்க, அவன் அமைதியாய் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

உத்ரா, “இன்னைக்கு நடந்த ஷூட்டிங்க்கு காரணமும் அவங்க தானா?” என்று கேட்க, அவன் மீண்டும் அதே பாவனையைக் கொடுத்தான்.

பின் “எனக்கு மறந்து போனது பத்தி, காஞ்சனாக்கும், ரிஷிக்கும் தெரியாது. பட் அந்த சைதன்யாவுக்கு எப்படி தெரியாமல் போச்சு. இவ்வளவு நாள் இல்லாமல், இப்போ மட்டும் எதுக்கு என்னை தாக்கணும்?” என்று கேட்க, துருவ் அமைதியாய் இருந்தான்.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், அர்ஜுனிடம் “அவளை சாப்பாடும், மாத்திரையையும் சாப்பிட்டு தூங்க சொல்லு. நாளைக்கு பேசிக்கலாம்.” என்று சொல்ல, உத்ரா, எதுவும் பேசவில்லை.

மீரா தட்டில் சாப்பாட்டுடன், அங்கு வந்து உத்ராவை சாப்பிட சொல்ல, அவளுக்குள் பல கேள்விகள்.

பின், மீராவிடம் “எல்லாரும் சாப்டாச்சா?” என்று கேட்க, அவள் இல்லை என்று சொன்னதும், தட்டை கையில் வாங்கி விட்டு, “எல்லாரும் போய் சாப்பிடுங்க” என்றதில்,

துருவ் “அர்ஜுன்! கை சரி ஆகுற வரை அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லு. நான் கிளம்புறேன்” என்று விட்டு வெளியில் வந்தான்.

மீரா, உத்ராவிடம், “உத்ரா, அண்ணா காலைல இருந்து சாப்பிடவே இல்லை. இப்போ சாப்பிட்டு போக சொல்லுங்க” என்று சொல்ல,

அவளோ “உங்க நொண்ணன் சாப்பிடலைன்னா நீயே போய் சாப்பிட வை. அதை எதுக்கு என்கிட்ட சொல்ற.” என்று விட்டு, அர்ஜுனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவன் அவளை புரிந்து கொண்டு, வெளியில் வந்து, “துருவ்” என்று அழைத்தான்.

துருவ் என்னவென்று பார்க்க, அர்ஜுன் “சாப்பிட்டுட்டு போ..” என்றான்.

அவன் வேணாம் என்று தலையாட்டி விட்டு, வெளியில் செல்ல எத்தனிக்க, அர்ஜுன் அவன் கையைப் பிடித்து, “இந்த கதை எல்லாம் இங்க வேணாம். உன் தங்கச்சி வேற சமைச்சுருக்கா. அந்த தண்டனையை அண்ணன்காரன் நீயும் அனுபவிக்கனும்” என்று கிண்டலடிக்க,

மீரா அர்ஜுனை முறைத்து “நான் நல்லாத்தான் சமைப்பேன் அண்ணா சாப்பிட்டு போங்கண்ணா..ப்ளீஸ்” என்று கெஞ்ச, துருவ் அமைதியாய் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அர்ஜுனும் அவன் அருகில் சென்று அமர, துருவ் “அஜயை ஏன் அடிச்ச அர்ஜுன்? அவன் என்ன பண்ணுனான்” என்று கேட்க,

அர்ஜுன், “அவனை சரி பண்ண ஒரு ஆளை அனுப்பிருக்கேன் வந்துடுவான். நீ சாப்பிடு.” என்று அவனே அவனுக்கு பரிமாறினான்.

விதுன் தான், ‘நம்மளை யாராவது சாப்பிட கூப்பிட்றாங்களா. அது சரி நமக்கு என்ன பிளாஷ்பேக் இருக்கா இல்லை கேர்ள் பிரெண்ட் தான் இருக்கா. நம்மளே போட்டு சாப்பிட்டுக்க வேண்டியது தான்.’ மனதினுள் புலம்பியபடி அமர,

அர்ஜுன், “டேய் வெண்ணெ. கருணா மாமாகிட்ட எதையாவது உளறுன… ஆயுசுக்கும் நீ சிங்கிளா தான் இருக்கணும்” என்று மிரட்டியதும், அவன் ‘நம்ம மைண்ட் வாய்ஸ் இவனுக்கு எப்படி கேட்டுச்சு’ என்று தீவிர சிந்தனையில் இருந்தான்.

இங்கு, அஜய் கடற்கரையை வெறித்துக் கொண்டு, தன்னால் தான் உத்ராவிற்கு இப்படி ஆகி விட்டதோ, அவளை அப்பொழுதே சிகிச்சை கொடுத்து சரி செய்திருக்க வேண்டுமோ என்று நினைத்தவனுக்கு துருவின் காதலை நினைத்து, சிலிர்த்தது.

அவனை, தான் எவ்வளவு மோசமானவனாக நினைத்தோம். ஆனால் அவன் தான் எவ்வளவு மன வருத்தத்தில் இருந்திருக்கிறான் என்று தன்னையே நொந்தான்.

திடீரென தன்னருகில் யாரோ அமர்வது போல் இருக்க, திரும்பி பார்த்தவன் அங்கு சுஜி இருப்பதை பார்த்து, தன்னை மறந்து அழுக ஆரம்பித்து விட்டான். ‘ஏதாவது சப்பையான சண்டையா இருக்கும்.’ என்று நினைத்து வந்தவள் அவன் அழுகவும் அரண்டு , “டேய் என்னடா ஆச்சு எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க?” என்று பதறி கேட்டதும்,

அவன் பாவமாக “அர்ஜுன் அடிச்சுட்டான்” என்று சிறுபிள்ளைத்தனமாக புகார் கொடுத்தான்.

அவள் கோபமாக “எதுக்கு உன்னை அடிச்சான்?” என்று கேட்க,

“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் சுஜி. உத்ரா லைஃபயே ஸ்பாயில் பண்ணிட்டேன்” என்று நடந்ததை கூற, அவள் அதிர்ந்து விட்டாள்.

துருவை நினைக்கவே அவளுக்கு பாவமாக இருந்தது, மேலும், இவ்வளவு காதலித்த ஒருவனை தன் தோழி மறந்து விட்டாளே என்று வேதனையாகவும் இருந்தது.

பின், அஜயை சமாதானப்படுத்த, “சரிடா, இதுல நீ என்ன தப்பு பண்ணுன. அவள் தான, உன்னை வீட்ல சொல்ல கூடாதுன்னு சொன்னாள். அப்போ நீ என்ன பண்ண முடியும். அது போக, அவள் லவ் பண்றது தெரிஞ்சுருந்தா நீ அப்டியே விட்டுருப்பியா? இல்லைல… அர்ஜுன் ஏதோ கோபத்துல அடிச்சுருப்பான். அதுக்கு யாரு போன் காலையும் அட்டண்ட் பண்ணாம இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா…? வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்தாள்.

அவன் “நான் வரல. அர்ஜுன் என் மேல கோபமா இருக்கான். உத்ராவுக்கு வேற இதெல்லாம் தெரிஞ்சுடுச்சு. அவளை பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கும்” என்று புலம்ப,

சுஜி அவன் தலையை கோதி, “லூசு மாதிரி பேசாத அஜய். அர்ஜுன் உன் மேல கோபப்பட்டா, அவன்கிட்ட பேசி சரி பண்ணு. உத்ராவையும் துருவையும் சேர்த்து வைக்க என்ன பண்ணணுமோ அதை பண்ணு. அதை விட்டுட்டு இப்படி ஒப்பாரி வச்சா எல்லாம் சரி ஆகிடுமா? வா முதல்ல, வீட்டுக்கு போகலாம்!” என்று அவனை தேற்றி அழைத்து வந்தாள்.

இவர்கள் சாப்பிடும் போது தான், அவர்களும் வந்தார்கள்.

வந்தவள், அர்ஜுனை பார்வையாலேயே சுட்டெரித்து விட்டு, அஜயை “உக்காந்து சாப்பிடு!” என்று சொல்ல, அவன் அர்ஜுனையும், துருவையும் தயக்கமாகப் பார்த்தான்.

சுஜியோ, “உக்காருடா உன்னை யாரு அடிக்கிறாங்கன்னு நான் பார்க்குறேன்…” என்று அவனை அமர வைத்து, தட்டில் இட்லியை வைத்தாள்.

பின், விதுனிடம் “எதுக்குடா என் பிரெண்ட அடிச்சீங்க? அவன் என்ன தப்பு பண்ணுனான்… உங்க கிட்ட சொல்லாததை தவிர. இனிமே அவனை யாராவது ஏதாவது சொன்னீங்க…” என்று மிரட்ட, விதுன் அவள் மண்டையில் நறுக்கென்று கொட்டி,

“நீ பிரெண்டுன்ற பேர்ல ரௌடிசம் பண்ணிக்கிட்டு இருக்க” என்றதும், அவள் அஜயை சாப்பிட வைத்து விட்டு, உத்ராவை சென்று பார்த்தாள், அவளிடமும் சிறிது நேரம் பேசி விட்டு, வீட்டிற்கு சென்றாள். துருவ் எதுவும் பேசாமல், ஏனோ தானோவென்று எதையோ உண்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

மறுநாள், எப்போதும் போல், உத்ரா அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க, அர்ஜுன், “பங்கு, துருவ் உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி சொன்னான். பேசாம ரெஸ்ட் எடு” என்றிட, அவள் அவனைப் பார்த்து முறைத்து விட்டு, “எனக்கு வேலை இருக்கு” என்று அஜயின் அறைக்கு வந்தாள்.

அங்கு அவன் உத்ராவை பார்க்க கூட முடியாமல் குற்ற உணர்ச்சியில் இருக்க, அவள் “டேய் ஆஃபீஸ் வர்ற ஐடியாவே இல்லையா. உன் ஃபீலிங்ஸ் எல்லாம் அங்க போய் வச்சுக்க வா…” என்று அவனையும் அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றாள்.

அங்கு துருவ், அடுத்து அடுத்து வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று தீவிர சிந்தனையில் இருக்க, உத்ரா அவன் அறைக்கு வந்து குரலை கணைத்தாள்.

அவன் “நீ எதுக்கு இங்க வந்த, உன்னை ரெஸ்ட் எடுக்க தான சொன்னேன்” என்று கடிந்து கொள்ள,

“நீ சொன்னா நான் ஏன் கேட்கணும்” என்று அவனை ஒரு பார்வை பார்த்து கொண்டு உத்ரா கேட்க, அவனிடம் பதில் இல்லை.

பின், “இன்னைல இருந்து உங்க ப்ரொஜெக்ட் ஸ்டார்ட் பண்ணலாம்.” என்று விட்டு, அவனிடம் அதனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.. அவளிடம் பிடிவாதம் அறிந்தவன் ஆயிற்றே. அதனால் வேறு வழி இல்லாமல் அவனும் வேலையை பற்றி பேசினான்.

வேறு எதை பற்றியும் அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை. துருவிற்கு அவள் என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை. தான் சொன்னதை நம்பினாளா. இல்லையா… என்று கூட அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படியே இரண்டு நாட்கள் சென்றிட, அஜய்… சுஜி, உத்ரா தவிர வேற யாரிடமும் பேசவில்லை. அர்ஜுனுக்கு உத்ரா என்ன தான் நினைக்கிறாள் என்றும் புரியவில்லை.

துருவிடம், “நீ அவள்கிட்ட இதை பத்தி பேசலையா துருவ்? அவள் என்ன நினைக்கிறாள்ன்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா. இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்க, அங்கு அஜய் சுஜி மீரா மூவரும் அதே கேள்வியை தாங்கி அவனைப் பார்த்தனர்.

துருவ் தான் எங்கோ வெறித்தபடி, “இப்போ அவள் என் உதி இல்லை. அவளுக்கு நான் இப்போ லவரும் இல்லை. இப்போ அவளை பொறுத்த வரைக்கும் நான் ஒரு விமனைசர். அவளோட வளர்ச்சியை தடுக்குறதுக்காக வந்துருக்குற, ஒரு கெட்டவன். அதான் அவள் மனசுல இருக்கு.

என்னைக்கு அவள் என்னையும், என் காதலையும் மறந்துட்டாளோ அன்னைக்கே என் காதல் செத்துருச்சு. அவளுக்கு என் ஞாபகம் வர்ற வரைக்கும் அவள் யாரோ நான் யாரோ தான். இப்போ அவள்கிட்ட பேசுறது முக்கியம் இல்ல.

அந்த சைதன்யா, அவளோட தொழிலையும், அவளையும் மொத்தமா அழிக்க நிறைய வேலை பார்த்து வச்சிருக்கான். அதுக்கு ஒரு சாம்பிள் தான், அந்த டயர் ஃபாக்டரில நடந்தது. அன்னைக்கு நான் அவளை காப்பாத்தி வெளிய கூட்டிகிட்டு வந்தேன்னு தெரிஞ்சதும், அவளை ஷூட் பண்ணி கொல்ல பார்த்தான்.

அந்த கிருபாவோட பில்டிங்க இடிச்சது கூட, அந்த பில்டிங்ல ட்ரக்ஸ் வச்சு, அந்த பழியை உத்ரா மேல போட பிளான் பண்ணுனானுங்க. அதான் அதை இடிச்சேன். அது மட்டும் இல்லை. அவள் இப்போ சைன் பண்ணுன க்ளையண்ட்ஸ் எல்லாரையும் சைதன்யா அவனோட கைக்குள்ள போட்டுக்கிட்டு, உத்ராவை அவங்க மூலமா அழிக்க முயற்சி பண்ணுனான்.

அதான் எல்லாத்தையும் கான்செல் பண்ண வச்சேன். தென், வெளிநாட்ல இருந்து நிறைய பிசினெஸ் கிரிமினல்ஸ வச்சு, இவள் பிசினெஸ்ல ஒரு ப்ளாக் மார்க் ஏற்படுத்த நினைச்சான். பட் அவள் கம்பெனி என் கம்பனிஸோடு டை – அப் ஆகிடுச்சுன்னு தெரியவும், அவங்க எல்லாம் பயந்து ஓடிட்டாங்க. அதான் அவளை வற்புறுத்தி டை – அப் பண்ண வச்சேன்” என்று அவன் நீளமாக விளக்கம் கொடுக்க, அனைவரும் அசந்து விட்டனர். அவளுக்காக ஒவ்வொரு விஷயத்தையும், யோசித்து செய்தவனை நினைக்கவே அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மேலும், துருவே தொடர்ந்து, “பட் இதெல்லாம் ஆரம்பம் தான். அவன் பெருசா ஏதாவது பண்றதுக்குள்ள அவனை ஒன்னும் இல்லாமல் ஆக்கணும்” என்று கண்ணில் வெறியுடன் கூறியவன்,

“அதுவரை உத்ராவை பாதுகாப்பா பார்த்துக்கணும். அவளை எங்கயும் தனியா விடாதீங்க” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே “அர்ஜுன்!” என்று உத்ராவின் குரல் கண்டிப்புடன் கேட்டது.

அவளை திரும்பி பார்த்த அர்ஜுன், ‘இவள் வேற என்ன பேசுனாலும் ஒட்டு கேட்டுடறாள். ரகசியமா ஏதாவது பேச முடியுதா’ என்று நொந்து கொண்டு, அவளிடம் “என்ன?” என்று கேட்க,

உத்ரா, துருவை அழுத்தமாகப் பார்த்து, “என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். ப்ராஜக்ட் பண்ண வந்தவங்க ப்ராஜக்டை மட்டும் முடிச்சுட்டு கிளம்ப சொல்லு. யாரும் யாரையும் காப்பாத்த வேண்டாம்ன்னு சொல்லு” என்றவள்,

அஜயிடம் “பங்கு, நம்ம கான்செல் பண்ணுன ப்ராஜக்டை அகைன் ஓகே பண்ணு. எவன் என்ன பண்றான்னு நானும் பார்க்குறேன்.” என திமிராய் கூற, அஜய்க்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அர்ஜுன், “உதி… நீ” என்று பேச வர, துருவ் அவனைத் தடுத்து விட்டு, “அவள் இஷ்டம்… ஆனால், எனக்கு தெரியாமல் எதுவும் பண்ணகூடாதுன்னு சொல்லு அர்ஜுன்… அவளுக்கு வேணா நான் யாரோவா இருக்கலாம். ஆனால் என் பொண்டாட்டியை என்னால என்ன வேணும்னாலும் நடக்கட்டும்னு விட முடியாது” என்று கோபத்துடன் அவளை பார்த்து விட்டு சென்றான்.

அர்ஜுன் தான் ‘இதுங்களுக்கு இடைல மாட்டிகிட்டது, ஏதோ கரும்பு மெஷின்ல மாட்டுன மாதிரியே ஒரு பீலிங்கு…’ என்று புலம்பிக் கொண்டான்.

துருவ் சென்ற திசையை பார்த்த உத்ராவின் இதழில் மெலிதாய் ஒரு புன்னகை அரும்பியது.

உறைதல் தொடரும்.
-மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
62
+1
5
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.