Loading

வெகு நேரம் கடந்த பின்னே, வழி மாறி சென்றது ஜிஷ்ணுவிற்கு புரிய, “எங்கடி போயிட்டு இருக்க?” என்றான் கடுப்பாக.

“யாருக்கு தெரியும்…? கால் வந்த போக்குல போயிட்டு இருக்கேன்” எனத் தோளைக் குலுக்கியவளுக்கு நிறைய முறை அங்கு வந்திருந்தால் கூட, அத்தனை நுணுக்கமாக வழி தெரியாது. அதிலும் பல நேரங்களில் இருவரின் இதழ் மொழிகள் மட்டுமே ஆட்சி செய்திருந்ததால் விழிகளுக்கு வேலையற்று போனது.

அவள் மனதில் பழைய எண்ணங்கள் தாண்டவமாட, ஜிஷ்ணு இரு முறை அழைத்தும் அவள் கவனிக்கவில்லை.

“ஏய் வக்கீலு…” அவன் பொறுமை இழந்து அவள் முதுகில் அடித்திட, அதில் தான் சுயம் பெற்றவள், “எ… என்ன?” என்று தடுமாற, அவளை ஆழ்ந்து பார்த்தவன், “வழி மாறி போய்ட்டோம்.” என்றான் கீழ்க்கண்ணால் முறைத்து.

அவளோ திகைத்து, “என்ன?” என விழிக்க, அவனோ கிண்டலுடன் “மலரும் நினைவுகளோ?” எனக் குரலில் ஏளனத்தை ஏற்றி கேட்டான்.

அதில் முகம் இறுகியவள், “நினைச்சு பாக்குற அளவு எதுவும் ஒர்த் இல்ல…” என்றாள் அதே ஏளனத்துடன்.

அக்கூற்றில் அவன் முகமும் சுண்டி விட, இடுப்பில் எழுந்த வலி வேறு அவனை நிதானமிழக்க வைத்தது.

மேலும் நடக்க இயலாமல், ஒரு பாறையில் அமர்ந்து விட்டவனை கண்டுகொள்ளாது, “இப்ப எப்படி ஊருக்குள்ள போறது?” என எரிச்சலாகக் கேட்க,

“நம்ம ரொம்ப தூரம் வந்துட்டோம். மறுபடியும் வந்த வழில போனா, ரொம்ப நேரம் ஆகும்.” என்றவன், தூரத்தில் தெரிந்த ஒரு விளக்கைக் காட்டி, “இங்க இருந்து அந்த குக்கிராமம் 2 கிலோமீட்டர் இருக்கும். இப்போதைக்கு அது தான் பக்கம். அங்க போய் முதல்ல காயத்தை சரி பண்ணிட்டு, அப்பறம் மத்ததை யோசிக்கலாம்…!” என்றிட,

“உன் காயத்துக்கு மருந்து போடவா உன்கூட நான் வந்துட்டு இருக்கேன். நான் ஊருக்கு போகணும். நீ ரெண்டு கிலோமீட்டர் நட. இருவது கிலோமீட்டர் கூட நட. எனக்கு என்ன வந்துச்சு…! நான் வந்த வழில தான் போக போறேன்.” என அசட்டையாக கூறியவள், அவன் வலியில் சுருண்டிருப்பதைக் கண்டு எள்ளல் நகை புரியவே செய்தாள்.

“நான் நாப்பது கிலோமீட்டர் நடந்தாலும், நீயும் கூட வந்து தான் ஆகணும் வக்கீலு. உன் அப்பன் என் கைல. அப்பப்ப அத மறந்துடுற…” எனக் கூறியபடி அவளை அருகில் இழுத்தவன், பலம் கொண்ட மட்டும் அவள் கழுத்தில் பற்களை பதித்தான்.

அவளோ “தள்ளி போடா” என துள்ளியும், அவனோ சிறிதும் நகராமல் போக, அவன் தீண்டலில் எழுந்த கோபத்துடன் அவன் காயத்தில் நறுக்கென கிள்ளப் போனாள்.

ஆனால், அதனை நொடியில் உணர்ந்து கொண்டு அவள் கையை பிடித்து விட்டவன், “அச்சச்சோ… இப்ப உனக்கும் காயமாகிடுச்சு வக்கீலு. பாரு லேசா ரத்தம் வருது. இந்த ரத்தத்தோட தனியா போனன்னு வை… ரத்த வாடையை மோப்பம் புடிச்சு, மிருகம் எல்லாம் உன்ன ரவுண்டு கட்டிடும்.” என்றான் நக்கலாக.

கழுத்தில் கையை வைத்து எரிச்சலில் நெற்றியை சுருக்கியவள், “உன்னை விடவா மிருகம் இருக்க போகுது. பொறுக்கி…” என்று கத்தியவளுக்கு கழுத்தில் இருந்த காயம் எரிந்தது.

“முழு மிருகமா மாத்திடாத வக்கீலு. அப்பறம் இரத்தத்தை எல்லாம் குடிச்சுடுவேன்.” என விரல் நீட்டி எச்சரித்தவன், அவள் கையைப் பிடித்து இழுத்துப் போக, சில நிமிடங்களுக்கு பிறகு அவனால் நடக்க இயலவில்லை.

கண்ணை வேறு இருட்டியது. தொண்டை வற்றி நாக்கு நீருக்கு ஏங்க, மூச்சு வாங்க அமர்ந்து விட்டான்.

இதற்கு மேல் நடக்க இயலாது என்று புரிந்தவன், “இதே வழில நடந்து போ. அந்த கிராமத்துல இருக்குற ஆளுங்களை கூட்டிட்டு வா. அந்த வெளிச்சத்தை பார்த்தே போ. இல்லன்னா மறுபடியும் வழி மாறிடும்.” என்றான் இடுப்பை பற்றியபடி.

“நான் ஆளுங்களை கூட்டிட்டு வந்து உன்ன காப்பாத்துவேன்னு வேற நினைச்சுட்டு இருக்கியா? இப்படியே விட்டுட்டு போக சான்ஸ் கிடைச்சும், அதை யூஸ் பண்ணலைன்னா நான்லாம் என்னடா வக்கீலு…” அவனுக்கு கண்ணைத் திறக்க இயலவில்லை என உணர்ந்தும், அவளிடம் சிறிதும் பிசிறில்லை.

அவன் செய்த கொலைகளும், தன் தந்தையை பிணைக்கைதியாக மறைத்து வைத்திருப்பதும், மேலும் ராதிகாவின் இறப்பும் அவளை மனமிரங்க விடவில்லை.

“பழி வாங்குறியாடி. உன்ன செத்தாலும் ஆவியா வந்து கொல்லுவேன்” என எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவன் கூற, “ஆல் தி பெஸ்ட்…” என திமிராய் கூறியவள், அவனை விட்டு சில அடிகள் எடுத்து வைத்து விட்டு, பின் மீண்டும் அவனிடம் வந்தாள்.

சிவந்திருந்த விழிகளை மூடி திறந்தபடி நிமிர்ந்தவன், “என்ன ஃபியூனரல் ஸ்பீச் குடுக்க போறியா?” அந்நிலையிலும் நக்கல் குறையாமல் பார்த்தான்.

சலனமின்றி சில வினாடிகள் அவனை வெறித்தவள், அவனருகில் சென்று அவன் முகத்தை பற்றி, அவனின் இதழ்களில் இதழ் பதித்து, தன் இதழீரம் கொண்டு அவன் உதடுகளுக்கு உயிர் கொடுத்தாள்.

அதில் விழி விரித்த ஜிஷ்ணு, அப்படியே அமர்ந்திருக்க, அவனிடம் இருந்து விலகிய வசுந்தரா, மீண்டும் அவனிதழ்களை வேண்டுமட்டும் ஈரப்படுத்தி விட்டு, நகரப் போக, அவன் அவளின் கையை பிடித்தான்.

“நானும் வரேன்.” என அவளை பிடித்தபடியே எழ முயன்றவனை அவள் தடுக்கவில்லை. அதே நேரம் பிடித்துக்கொள்ளவும் இல்லை.

“இன்னும் எவ்ளோ தூரம் போகணும்…” அவள் மறுபுறம் திரும்பி வினவ, “கொஞ்ச தூரம் தான் இருக்கும்” என முணுமுணுத்தவன், அவனது சட்டையையும் கழற்றி ஏற்கனவே இடுப்பில் இறுக்கி இருந்த துப்பட்டாவோடு சேர்த்து கட்டினான். பல்லைக்கடித்து வலியை பொறுக்கிறான் என்பது அவனது முனகல் சத்தத்திலேயே புரிய, அவன் பக்கம் திரும்பவே இல்லை அவள்.      

வசுந்தரா இருந்த அறையில் தன் அலைபேசி சுக்கு நூறாக உடைந்திருப்பதை கண்ட குமரன், “அட பக்கிங்களா?” என தலையில் அடித்துக்கொண்டு, தன்னிடம் இருந்த அலுவலக அலைபேசியை எடுத்து ஜிஷ்ணுவிற்க்கு அழைக்க, அவ்வழைப்போ எடுக்கப்படவே இல்லை.

“எங்க போய் தொலைஞ்சான் இவன்…” எனக் குழம்பியபடி, கௌரவிடம் வினவ, அவனும் தனக்கு தெரியாது என்றதில், கன்னிமனூருக்கு சென்றிருப்பான் என்றெண்ணி அங்கு சென்று தேடிப் பார்த்தான்.

அங்கோ, ஜிஷ்ணுவின் கார் மட்டும் நிற்க, அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் ஜிஷ்ணு வசுந்தராவை அழைத்துக்கொண்டு மலை மீது ஏறி இருக்கிறான் எனப் புரிந்தது.  கூடவே தூரத்தில் தெரிந்த இருவரைக் கண்டு திகைத்தான்.

“பரத் சார்… தாரா மேம் சொன்ன ரெண்டு வேலைல ஒன்னு முடிச்சாச்சு. இங்க நடக்குற வேலையையும் கவர் பண்ணிட்டு, அவங்க சொன்ன மருதுவையும் பாண்டியையும் புடிக்கணும்.” என அர்ச்சனா பரத்திடம் இரகசியம் பேச, அவனும் கேட்டுக்கொண்டான்.

“ஆமா, தர்மா வர்றதுக்குள்ள இந்த வேலையை முடிக்கணும்” என்று பரத்தும் தீர்மானமாக கூறிட, “டேய்… அப்பரசண்டிங்களா?” என்ற குமரனின் குரலில் இருவரும் ‘பே’ வென விழித்தனர்.

குமரனின் அலைபேசி வழியாக, பரத்திற்கு வசுந்தரா கொடுத்த வேலையே, எப்படியாவது ஜிஷ்ணுவை தனியாக தான் அழைத்து சென்று விடுவதாகவும், அந்த நேரத்தில் பரத்தும் அர்ச்சனாவும் அவன் வீட்டினுள் புகுந்து, அவனிடம் இருக்கும் கோப்புகள், சந்தேகப்படும் படியான எதுவாக இருந்தாலும் யாரும் அறியாமல் எடுக்க வேண்டும் எனவும், மேலும் கன்னிமனூருக்குள் புகுந்து, ஆதாரங்களை திரட்டவும் உத்தரவிட்டிருந்தாள்.

அதன் மூலம், அவர்கள் திறமையாக அவன் வீட்டில் புகுந்து வேலையை முடித்து விட்டு, இங்கு வர, இப்போதோ குமரனிடம் சிக்கிக்கொண்டனர்.

அவனோ உடனடியாக ஆட்களை அழைத்து, இருவரையும் சுற்றி வளைத்து முறைத்து, “ஏன்டா… இப்ப தான் செத்து பொழைச்ச… அதுக்குள்ள மறுபடியும் பெட்ல படுக்க ஆசையா?” என்று பரத்திடம் கடிந்து விட்டு, அர்ச்சனாவை நோக்கி, “பெரிய விஜயசாந்தி… வந்துட்டா ஊருக்குள்ள” என அவளையும் முறைக்க,
பரத்திற்கு விழி பிதுங்கியது.

அர்ச்சனாவோ, “நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் விஜயசாந்தி தான்” என சிலுப்பிக்கொள்ள,

“ஓ… அப்படிங்களா? டேய்… இந்த விஜயசாந்தியை முதல்ல போட்டு தள்ளுங்க” என அவனது ஆட்களிடம் அடக்கப்பட்ட சிரிப்புடன் உத்தரவிட்டான்.

அதில் மிரண்டவள், “பரத் சார்…” என பரத்தை விழிக்க, அவனோ “நீ வேற வாயை வைச்சுக்கிட்டு சும்மா இரும்மா…” என நொந்து, “இங்க பாருங்க. நாங்க சும்மா ஊரை சுத்தி பார்க்க தான் வந்தோம்.” என்றான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

“ஊரை தான சுத்தி பார்க்கணும். வா… நம்ம அந்த மலை உச்சிக்கு போய் அங்க இருந்து ஊரை பாக்கலாம்” என குமரன் அழைக்க, “எதே… வேணாம் வேணாம். இங்க இருந்தே நல்லா தான் தெரியுது” என்று மருண்டான்.

“இல்ல ராசா! நீ வா. நம்ம அங்க போயே பாக்கலாம். உங்க வக்கீலும் மேல தான போயிருக்காங்க…” என வலுக்கட்டாயமாக இருவரையும் பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.

“ஊஃப்…! ஊஃப்!” என பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டபடி, தளர்ந்த நடையுடன் முன்னேறினான் ஜிஷ்ணு தர்மன்.

அவனது கரங்கள் வசுந்தராவின் தோள்பட்டையை அழுந்தி பற்றி இருக்க, “ப்ச்… இன்னும் எவ்ளோ நேரம் தான் ஆகும்.” என்றாள் கடுப்பாக.

ஆனால், இப்போது அந்த கிராமத்தில் இருந்து வந்த வெளிச்சம் அருகில் தெரிய, “இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கும்” எனக் கேட்டாள்.

“இங்க ஹாஸ்பிடல் இருக்குமான்னே தெரியல…” அவன் சோர்வுடன் கூற, “வாட்?” என அதிர்ந்து திரும்பியவள், நொடியில் தன்னதிர்வை மறைத்துக்கொண்டு, “அப்போ நீ சாகுறது கன்பார்ம் ஆ?” என்றாள் குரலில் வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட துள்ளலுடன்.

“மவளே… நான் பொழைச்சு மட்டும் வந்தேன். இதே மலைக்குள்ள உன்ன ஓட ஓட…” என்று ஏதோ கூற வந்தவன், கூறாமல் நிறுத்த, “மொதோ பொழைச்சு வா.” என்றவளின் அசட்டுப் பேச்சில், “லிப்ஸ் ட்ரை ஆகிடுச்சு” என அவளது இதழ்களை சிறைபிடித்துக் கொண்டான்.

தாகம் அதிகரித்து, உதடுகள் காய்ந்து போக, அவளிடம் இருந்து சிறிது உயிரை கடன் வாங்க எத்தனித்தான். அவளும் அவனது முயற்சிக்கு ஒத்துழைத்து, அவ்வப்பொழுது அவனின் இதழ்களை ஈரம் செய்து ஒருவழியாக அக்கிராமத்திற்கு அழைத்து வந்தாள்.

இயல்பாக இருப்பது போல காட்டியபடியே, படபடப்புடன் அங்கு தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்த ஒரு பெரியவரைப் பிடித்து, மருத்துவமனை பற்றி விசாரிக்க, அங்கிருந்து மருத்துவமனை ஐந்து  கிலோமீட்டர் செல்ல வேண்டும் எனக் கூறியதில், “என்ன? இங்க ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையா?” எனக் கடுப்பானவள், “இங்க டாக்டர்ஸ், இல்ல அட்லீஸ்ட் மெடிக்கல் ஆவது இருக்கா?” எனக் கேட்டாள் அவசரமாக.

அப்பெரியவரோ, “இங்க பக்கத்துல ஆரம்ப சுகாதார நிலையம் தான் இருக்கு. ஆனா, இவருக்கு இருக்குற காயத்தை பார்த்தா அங்க மருந்து கூட இருக்குமான்னு தெரியலம்மா.” என யோசிக்க,

அருகில் நின்றிருந்த மற்றொரு பெரியவர் தான், “என் பேத்தி நர்சா தான்மா இருக்கு. அதுகிட்ட வெவரம் கேக்கலாம்.” என்றதில், “மொதோ அதை செய்ங்க…” என்றவள், பத்தடி தூரம் தள்ளி இருக்கும் அவரின் ஓட்டு வீட்டிற்கே சென்றாள் அவனையும் அழைத்துக் கொண்டு.

அதற்குள் அவன் பாதி மயங்கி, அவ்வீட்டு திண்ணையிலேயே அமர்ந்து விட, பெரியவரின் பேத்தியான திலகா வெளியில் எட்டிப்பார்த்தாள். இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தவள், “ஐயோ என்ன இவ்ளோ ரத்தம் போயிருக்கு. காயம் வேற பெருசா இருக்கு.” என திகைத்ததில்,

வசுந்தரா, “அது எங்களுக்கு தெரியாதா? உன்னால ட்ரீட் பண்ண முடிஞ்ச அளவு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணு…” என அதட்டி உதவி கேட்டவளுக்கு, அவன் சுயம் இழந்து செல்ல செல்ல, படபடப்பு கூடிக்கொண்டே சென்றது.

அதில் அவளும் வேகமாக செயல்பட்டு, அருகில் இருந்த சுகாதார நிலையத்தில் இருந்த மருந்துகளையே எடுத்து வரக்கூறி, காயத்தை சுத்தம் செய்து, தையலும் போட்டாள்.

அந்த வலியில், அவன் மீண்டும் சுயம் பெற்று, “ஆஆ…” என அதரங்களை அழுத்திக் கடிக்க, அதுவரை நடுங்கிய கரங்களுடன் அவனைப் பிடித்திருந்தவள், பட்டென நகர்ந்து தள்ளி நின்று அசட்டையாக ஏறிட்டாள்.

பின், அவனை அங்கேயே உணவு உண்ண செய்து, வலி குறைய மாத்திரையையும் கொடுத்த திலகா, வசுந்தராவின் புறம் திரும்பி, “இப்போதைக்கு என்னால முடிஞ்ச அளவு மருந்து குடுத்து இருக்கேன் கா. ஆனா, கத்தி ரொம்ப ஆழமா படாததுனால இவ்ளோ நேரம் தாக்கு பிடிச்சு இருக்காரு. இல்லன்னா, ரொம்ப கஷ்டம். இருந்தாலும் விடிஞ்சதும் மொதோ வேலையா பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காட்டிடுங்க.” என்றதில்,

“இப்போ இங்க வண்டி எதுவும் வராதா? இப்பவே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.” என்றாள் புருவம் சுருக்கி.

“இல்லக்கா… இந்த நேரத்துல எந்த வண்டியும் இருக்காது. இதுக்கு மேல அண்ணனால நடக்கவும் முடியாது. அது இன்னும் காயத்தை பெருசாக்கிடும். இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் சமாளிச்சுட்டா, காலைல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்டலாம்…” என்றவளுக்கும், ஒரே பயம். மேலோட்டமாக தையலை போட்டு கட்டிட்டு வைத்திருக்கிறோமே. ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று.

அவளின் பயத்தை உணர்ந்தவள் போல, “நீ இதை பண்ணதே பெரிய விஷயம். கவலைப்படாத தங்கச்சி. இவன் செத்தாலும் உன்னை ஒண்ணும் கேட்க மாட்டேன். இவனுக்கு இதுவே ஜாஸ்தி…” என ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஜிஷ்ணுவை பார்த்து கூற, அவன் அப்போது தான் சற்றே தெளிந்து முறைத்தான்.

திலகாவோ, திருதிருவென விழித்து நெளிய, அப்பெரியவரும் விழித்து விட்டு பின், “இங்க நானும் என் பேத்தியும் தான் இருக்கோம். இருக்க பெருசா வசதி எல்லாம் இல்ல.” என இழுத்தவரிடம்,

“அட… நீங்க ஃபீல் பண்ற அளவுலாம் இவன் ஒர்த் இல்ல தாத்தா. அவன் அவன் சொந்த ஊருலயே சொந்த மக்களை இருக்க விடாம, அடிச்சு துரத்துறான். எங்களை யாருன்னு கூட உங்களுக்கு தெரியாது. அப்படி இருந்தும் இவ்ளோ பண்றீங்களே…” என அவரை பெருமையாய் பேசவது போல ஜிஷ்ணுவை மட்டம் தட்ட, இன்னும் அவன் முறைப்பு அதிகமானது.

பின் அவளே, “நீங்க உள்ள போய் தூங்குங்க. நாங்க திண்ணைல படுத்துட்டு காலைல கிளம்புறோம்” என்றாள் மென்புன்னகையுடன்.

திலகா தான் ஏதோ வெகு நேரம் யோசித்து விட்டு, “அண்ணே… நீங்க எம். எல். ஏ தர்மன் தான?” எனக் கேட்க, அவன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

அதில் பெரியவரும், “தம்பி நீங்களா? இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல” என வியப்படைய, வசுந்தராவோ, “ஏன் சொல்லிருந்தா, சோத்துல விஷம் வச்சுருப்பீங்களா?” என்றாள் கிண்டலாக.

அவள் கூற்றில் கன்னத்தில் அடித்துக்கொண்ட பெரியவர், “என்னமா நீ இப்படி சொல்லிட்ட. மொதோ எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாம, காய்ச்சலுக்கு கூட மருந்து மாத்திரை இல்லாம என் ஊரு சனம் ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. முன்னாடி இருந்த எம். எல். ஏ கிட்ட எவ்ளோவோ மனு கொடுத்தும் இந்த குக்கிராமத்துக்கு செஞ்சு ஆக போகுதுன்னு கண்டுக்கவே இல்ல. ஆனா, தர்மா தம்பி தான் எம். எல். ஏ வா பொறுப்பேத்துகிட்டதுல இருந்து, இங்க அத்தியாவசியமான தேவை எல்லாம் செஞ்சுக்கிட்டே வர்றாரு. கூடிய சீக்கிரம் பெரிய ஆஸ்பத்திரியும் வரப்போகுது. எனக்கும் இருட்டுல அவரை அடையாளம் தெரியல…” என வாயார அவனை புகழ்ந்து தள்ளினார்.

திலகாவும் அவள் பங்கிற்கு அவனின் அருமை பெருமைகளை கூற, வசுந்தரா தான், ‘அவன் இதெல்லாம் பண்ணிட்டு எவ்ளோ கொள்ளையடிச்சானோ. நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்க…’ என முணுமுணுத்துக் கொள்ள, அதன் பிறகு அவனுக்கு மரியாதை எல்லாம் அமோகமாக இருந்ததில் சற்றே கடுப்பானாள்.

அவள் கடுப்பில் குளிர் காய்ந்த ஜிஷ்ணு அவளை அமர்த்தலாக பார்க்க, ‘இவனை மலைக்கு நடுவுலயே விட்டுட்டு வந்துருக்கணும்…’ என வாய்க்குள் புலம்பினாள்.

அப்பெரியவரின் புகழ்ச்சி பேச்சை அவளால் காது கொடுத்து கேட்க இயலவில்லை.

பின் அவரே, “நீங்க ரெண்டு பேரும் உள்ள படுத்துக்கங்க. நான் திண்ணைல இருக்கேன்…” என்றவர் திலகாவை பக்கத்து வீட்டில் படுக்க சொல்ல, ஜிஷ்ணு மறுத்தும் அவர் கேட்கவே இல்லை.

பின், அந்த ஓட்டு வீட்டினுள் இருவரும் நுழைந்திட, அதுவோ ஒரே ஒரு அடுக்களையைக் கொண்ட அறையாக மட்டுமே காட்சியளித்தது.

“வீடு தான் சிறுசா இருக்குன்னு பார்த்தா, அந்த தாத்தா மூளையும் சிறுசா தான் இருக்குடா அடியாளு. போயும் போயும் உன்ன புகழ்ந்து தள்ளுறாரு…” என்று காதை குடைந்து கொண்டாள்.

“உனக்கு பொறாமை வக்கீலு!” என கேலி புரிந்தவன், இடுப்பை பிடித்தபடி சுவற்றில் சாய்ந்து கீழே அமர, அங்கு ஒரு பாய், தலையணை தவிர வேறு பொருட்களும் பெரியதாக இல்லை.

அவனின் சட்டையும், அவளின் துப்பட்டாவும் உதிரம் நிறைந்திருக்க, உள் பனியனோடு இருந்தவனின் புஜங்கள் அவள் கண்ணில் பட்டதில், சட்டென விழிகளை திருப்பிக் கொண்டாள்.

அவனோ நக்கல் நகையுடன், “லிப்ஸ் ட்ரை ஆகிடுச்சு வக்கீலு…” என இதழ்களை நாவால் ஈரப்படுத்தியபடி கண்ணடிக்க, அவளோ “ட்ரை ஆகிடுச்சுன்னா நீயும் டை ஆகிடு” என்று தீயாக சுட்டாள்.

பின், இருந்த பாயை விரித்து தலையணையையும் போட்டு படுத்துக்கொண்டவளின் அருகிலேயே அவனும் படுத்துக்கொள்ள, கழுத்தை திருப்பி அவனை முறைத்தவள், அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள்.

அவனுக்கு கொடுத்த முத்தத்தை எண்ணி, தன்னை தானே திட்டியவள், ‘சே… இவனை போட்டு தள்ள சான்ஸ் கிடைச்சும் பைத்தியம் மாதிரி மிஸ் பண்ணிட்டேன்…’ என்று எரிச்சலானாள்.

மாத்திரையின் விளைவால் ஜிஷ்ணு கண்ணயர்ந்து விட, இரு முறை அவன் உறங்குவதை உறுதி படுத்திக்கொண்டவள், அவன் முகத்தையே சலனமின்றி வெறித்திருந்தாள்.

மலை அடிவாரமும், தளர்ந்திருந்த தேகமும் ஆடவனுக்கு குளிரைக் கொடுக்க, இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, உடலை சுருக்கி படுக்க முயன்றான். ஆனால், இடுப்பில் ஏற்பட்ட காயம் அவனை சுருள விடாமல் சுருக்கென தைக்க, மீண்டும் நேராக படுத்தவன் உறக்கத்திலேயே முகத்தை சுளித்தான்.

பின், வசுந்தராவின் புறம் திரும்பி படுத்து சில முறை சுருள முயன்ற அவன் முயற்சியையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்த வசுந்தரா, உணர்ச்சி துடைத்த விழிகளுடன் எழுந்து, தன்னுடைய சுடிதார் டாப்ஸை கழற்றி அவனுக்கு போர்த்தி விட்டு, அவன் கையிலேயே தலையை வைத்து படுத்து, அவன் நெஞ்சில் கரங்களை படரவிட்டு, சூடேற்றினாள்.

மேனி பழகிய பெண்ணவளின் தீண்டல் என்பதாலேயோ என்னவோ, அவன் உதடுகள் “வசு பேப்…” என்று முணுமுணுத்திட, அவ்வழைப்பில் தடுமாறித் தான் போனாள்.

கலங்கி நின்ற கண்களை அடக்கவும் பிடிக்காமல், நீர் வழியவும் இடம் கொடுக்காமல், அவளையும் அதே டாப்ஸில் மறைத்துக் கொண்டு உறங்க முயன்றதில், சிறிது சிறிதாக அவனது குளிரும் அடங்கியது.

கதிரவனின் வெளிச்சம் கண்ணில் அடிக்க, விழிகளை சுருக்கியபடி கண் விழித்தான் ஜிஷ்ணு தர்மன். கிட்டத்தட்ட அவளை இறுக்கி அணைத்து, அவளது சுடிதார் டாப்ஸை இருவரும் போர்வையாக உபயோகித்து உறங்கி இருப்பதை அப்போது தான் உணர்ந்தவன், நெஞ்சில் உணர்ந்த அவளது சூடான மூச்சில் பொசுங்கினான்.

ஒரு கரம் தன்னிச்சையாக அவளது கூந்தலை மெல்ல கோதி விட, மற்றொரு கரமோ அவளது வெற்றிடையின் மென்மையில் சிதைந்தது. அவளை போன்றே உணர்வுகளை இழந்த முகத்துடன் ஜிஷ்ணு அவளையே பார்த்திருந்தான். அப்போது தான் விழிப்பு தட்டியதில் அவளும் சோர்வாக கண்களை திறந்தாள்.

மிக அருகில் தெரிந்த ஜிஷ்ணுவின் முகத்தைக் கண்டு துணுக்குற்றவள், சில நொடிகளில் நடந்தவற்றை உள்வாங்கிக்கொண்டு, வெடுக்கென எழுந்தாள்.

கூடவே, அவளின் சுடி டாப்சையும் எடுத்து அவளை மறைத்துக்கொண்டவள், அவன் விழிகளை அசைவற்று ஒரு நொடி பார்த்து விட்டு, மறுபுறம் திரும்பி உடையை அணிந்தாள்.

அவனும் கண்ணை திருப்பவில்லை. அதே நேரம் அவள் மீது மோகமாக படியவும் இல்லை அவனது பார்வை.

அதே பார்வையுடன் அவளை நெருங்கியவன், பின்னிருந்த படியே, கழுத்தில் அவன் ஏற்படுத்திய காயத்தில் அதரம் கொண்டு மருந்திட்டான்.

முதலில் தள்ள முயன்றவள், இப்போது வலியில் “ஸ்ஸ்…” எனக்  கத்திட, நொடிகள் நிமிடங்களாக அவளின் கழுத்திலேயே புதைந்து உமிழ்நீர் கொண்டு அவன் ஏற்படுத்திய காயத்தை சரி செய்ய முயன்றான் ஆடவன்.

‘எல்லா காயத்தையும் இப்படி சரி செய்ய முடியாது ஜிஷு…’ அவளை மீறி எண்ணங்கள் வலியுடன் சிதறியது.

சிறிது நேரத்தில்

சுயம் பெற்று இருவருமே ஒரே நேரத்தில் விலகிட, “கிளம்பலாமா?” என மீண்டும் தன் கம்பீரத்தை மீட்டுக் கேட்டாள் வசுந்தரா.

“கிளம்பலாம்… உன் அப்பனை பாக்க.” என்று அவனும் பழைய நக்கல் தொனியை மீட்டிருக்க, அதிர்ச்சிப் படலத்தின் முதல் படியை கடக்கப் போவதை அறியாத பாவையோ, ‘மவனே… அப்பாவை கண்ணால பார்த்ததுக்கு அப்பறம் இருக்கு உனக்கு!’ என சபதம் விடுத்துக் கொண்டாள். 

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
104
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்