Loading

கயல் ஜீவாவை கட்டி அணைத்ததில் தன்னிலை மறந்து அவளின் அணைப்பை ரசித்த அவனும் அவள் மேனியில் கைகளை பரப்ப, பூவரசி தான் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்.

பின், தரையில் வலியில் சுருண்டிருந்த சிக்கண்ணனிடம் வந்தவள், அவனை ஓங்கி ஒரு மிதி மிதித்து அவன் கையில் சுருட்டி வைத்திருந்த அவளின் தாவணியை எடுக்க,

அவன் கோபத்தில், “என் காட்டுக்கு வந்துட்டு என்னையவே அடிக்கிறியா” என்று அங்கிருந்த மர கட்டையை எடுத்து ஜீவாவை நோக்கி செல்ல, சரியாக அப்போது ஜீவாவை குறி பார்த்திருந்த துப்பாக்கி முனை சிக்கனன்னன் தோள் பட்டை  மேல் பாய்ந்தது.

இந்த புல்லட் சத்தத்தில் தான், தன்னிலைக்கு வந்த ஜீவா, கயலை விலக்கி, குண்டு வந்த திசையை பார்த்தவன், யாரோ அங்கிருந்து ஓடுவது போல் இருக்க அவனை துரத்தி பிடிக்க போனான். ஆனால் அவன் தப்பித்து விட்டதில் பூவரசியின் அழு குரலில் சிக்கண்ணனை வந்து பார்க்க, அவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தான்.

பூவரசி “மாமா மாமா” என்று அழுக, ஜீவா வேகமாக “இவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.” என்று சொல்ல,

பூவரசி, “ஆஸ்பத்திரி எல்லாம் போவ முடியாது. இவனை குடிலுக்கு தூக்கிட்டு போலாம்…” என்றதும், ஜீவா அவனை தூக்கி கொண்டு குடிலுக்கு விரைய அங்கிருந்தவர்கள் பதறி, உடனே அவர்களுக்கு தெரிந்த கை வைத்தியங்கள் செய்து, குண்டை வெளியில் எடுக்க போராடினர்.

ஆனால் குண்டு உள்ளே நன்கு சிக்கிக்கொண்டதால் எடுக்க முடியாமல் அனைவரும் கண்ணீரில் கரைய, கயலோ அவன் ஜீவாவுக்கு முன் தான் நின்றிருந்தான். அப்படி என்றால் சிக்கண்ணன் அங்கு நிற்கவில்லை என்றால் இந்நேரம் அந்த குண்டு ஜீவாவின் மேல் பாய்ந்திருக்கும் என்று நடுக்கத்துடன் நினைத்தவள், பேயறைந்ததை போல் இருந்தாள்.

வெளியில் அழுகுரல்கள் கேட்டதில், உறக்கத்தில் இருந்து விழித்த கார்த்தி, “என்ன ஆச்சு இவ்ளோ சத்தமா இருக்கு…” என்று எழுந்திருக்க முடியாமல் எழுந்து, வலியையும் பொறுத்துக் கொண்டு, அங்கிருந்த வீல் சேரை இழுத்து, ஐந்து நிமிட போராட்டத்திற்கு பின் அதில் அமர்ந்து வெளியில் சென்றவன், கயலின் நெற்றியில் வழிந்த இரத்தத்தை கண்டு அதிர்ந்து “கயல் என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்க, 

அவள் “அது கீழ விழுந்துட்டேன்” என்று பொய் சொல்ல, அதில் அவளை முறைத்த ஜீவாவை பார்த்தவள், எதுவும் சொல்ல வேணாம் என்று கண்ணால் கெஞ்சியதில்,  பின் அவனே வந்து அவளுக்கு மருந்து போட்டு கட்டு போட்டு விட்டான்.

அதன் பிறகே நடந்ததை அறிந்து கொண்ட கார்த்தி, பூவரசியை பார்க்க, அவளோ என்ன தான் தவறாக நடந்து கொண்டாலும், அவன் தன் தாயின் தமையன் ஆயிற்றே, என்று கண்ணீருடன் நிற்க,மேலும்  அவளின் கிழிந்த சட்டையை அவள் அவ்வப்பொழுது மறைத்து கொண்டு நிற்பதையும் கண்டவன், என்ன ஆகியிருக்கும் என்று புரியாமல் யோசிக்க,

அப்போது முத்தாயி, அவளை தள்ளி விட்டு,” உன்னால தான் அவனுக்கு இப்படி ஆகிருச்சு… நீ அவனை கலியாணம் பண்ணாம இருந்ததனால தான் சாமி குத்தம் ஆகி, அவன் சாக போறான். இப்போ சந்தோசமா உனக்கு…” என்று அடிக்க, கயல் வேகமாக முத்தாயியை தடுக்க, அவர் விடாமல் பூவரசியை பார்த்து வாய் வந்த போக்கில் திட்ட. பூவரசிக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.

கார்த்திக்கு தான் எப்போதும் அடி வாங்குவதை ஜாலியாக என்ஜாய் செய்பவள் இன்று அமைதியாய் கண்ணீருடன் நிற்பதை பார்த்து என்னவோ போல் இருந்தது.

முத்தாயி மேலும் நிற்காமல், “இனிமே படிக்க போறேன் கழுசடைக்கு போறேன்னு எதாவது சொல்லு… உன்ன கொன்னு போட்டுடுறேன்” என்று மிரட்ட, மற்ற மூவரும் படிக்கவா? என்று ஆச்சர்யமாய் பூவரசியை பார்த்தனர்.

 இதில், முத்தாயி “இப்போ கூட ஒன்னும் இல்ல. இப்போவே அவன் கையால பாசி மணி போட்டுவிட்டா தெய்வ குத்தம் சரி ஆகி, அவன் பொழைச்சுக்குவான்” என்று சொல்ல, பூவரசி அமைதியாய் நிற்கவும் கயல் அதிர்ந்து, ஜீவாவை பார்த்து எதாவது பண்ணுங்க என்று கண்ணால் கேட்க, அவனுக்கு என்ன செய்வதென்று புரியவே இல்லை.

கார்த்தியோ ‘இதென்ன முட்டாள்தனம்…’ என்று கடுப்பாக பார்க்க, ஜீவா “கொஞ்சம் நிறுத்துறீங்களா? முதல்ல  குண்டை எப்படி எடுக்குறதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லும்போதே, பெரியசாமி ஏதோ மூலிகை செடியை எடுத்து அவனுக்கு கொடுத்து, கையை நன்றாக கீறி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குண்டை எடுத்திருந்தார். அதில் அவன் மயங்கியே இருந்தான். அவனை ஒரு இடத்தில் படுக்க வைத்து, அவ்வப்போது அவன் வாயில் ஏதோ ஒரு மருந்தை கொடுத்தபடி இருந்தனர்.

ஜீவா தான், ‘யாரு அவன்…? எதுக்கு துப்பாக்கியோட உள்ள வந்தான்? எதுக்கு என்னை கொலை பண்ண பார்த்தான்’ என்று தீவிர சிந்தனையில் இருக்க, பூவரசிக்கு விழுந்த திட்டு மட்டும் குறைந்த பாடில்லை. அவன் கண் விழித்ததும் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று பிடிவாதமாய் நின்றார் முத்தாயி.

கார்த்தி அவளை தனியாக அழைத்து “பூவரசி, உனக்கு படிக்கணும்னு ஆசையா?” என்று கேட்க, அவள் ஏமாற்றமாய் அவனைப்பார்த்து, “இல்ல நான் படிச்சு மட்டும் என்ன போறேன்… இப்போ என்னால தான் அவனும் அடிபட்டு கிடக்கிறான். அவன் முழிச்சதும் எப்படியும் எனக்கு கலியாணம் பண்ணி வச்சுடுவாக” என்று சொன்னதும்,

“ப்ச் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, உனக்கு படிக்கணும்ன்னு ஆசை இருக்கா இல்லையா” என்று கேட்க,

அவள் சிறிது அமைதியாய் இருந்துவிட்டு, “ம்ம்” என்று தலையாட்டி, “நான் பன்னெண்டாவது வர படுச்சேன். காட்டுக்கு வெளிய இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல…” என்றாள்.

அவன் விழி விரித்து, “நீ ’12’த் வரை படிச்சுருக்கியா../”” என்று ஆச்சர்யமாக கேட்க. அதன் பின் அவளின் மதிப்பெண்ணை கேட்டு வியப்பின் உச்சிக்கே சென்று விட்டான். எப்போதும், அந்த காட்டு வாசிகளை விட இவள் சற்று மாறுபட்டு இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அது கல்வி தந்த ஞானம் என்று இப்போது தான் புரிந்தது.

பின், “நீ கவலைப்படாத உன்னை காலேஜ்ல படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொல்ல, அவள் அவனை ஆர்வமாக பார்த்து “நிசமாவா” என்று கேட்டு விட்டு, உடனே முகம் சுருங்கி, “எப்புடியா முடியும்? என் அம்மை கண்டிப்பா ஒத்துக்காது. அதுவும் இல்லாம, என்னை காலேஸ்ல சேக்க நிறைய காசு, அப்பறம் ஏதோ சான்றிதழ்லாம் கேக்குறாக அப்படியே அதை குடுத்தாலும் என்னை சேர்த்துக்க மாட்டுறாக “என்று சொன்னதும்,

கார்த்தி கூலாக “நீ அதை பத்தி எல்லாம் யோசிக்காத, நீ படிக்கத்தான் போற டாட். இப்போவே உன் திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ…” என்றதும், அவள் பேச்சில் நம்பிக்கை வந்து, கண்ணில் ஒளியுடன் சென்றாள்.

பின், கார்த்தி வேகமாக கயலை அழைத்து, நடந்ததை கூறி விட்டு, “வாசு அண்ணாகிட்ட இதை பத்தி சொல்லி, அவளை படிக்க வைக்க ஏற்பாடு பண்ணு கயல்” என்று சொல்ல, அவ்வளவு நேரம் ஆச்சர்யமாய் கேட்டு கொண்டிருந்தவள், சட்டென்று அதிர்ச்சியாகி “என்னாது நானா… நீயே சொல்லு உன் அண்ணாகிட்ட” என்று தயக்கமாக சொல்ல,

அவன் “ஹ்ம்ம் இப்போல்லாம் சொல்ல வேண்டியவங்க சொன்னாதான் என் அண்ணா கேட்குறாரு… நான் சொன்னா ஜஸ்ட் ட்ரை பண்ணிட்டு அவங்க ஒத்துக்கலைன்னா விட்ருவாரு. அதே நீ சொன்னா இங்க இருக்குறவங்களையும் அவளை காலேஜ்ல சேர்க்க மாட்டேன்னு சொல்ற காலேஜ் மேனேஜ்மெண்டையும் நோண்டி நொங்கெடுத்து ஒரு வழி ஆக்கிடுவாரு” என்றான் கிண்டலாக.

அதில் அவனை முறைத்தவள், “சும்மா எதாவது உளறாத. நான் சொல்றதை விட நீ சொல்றதை தான் உன் அண்ணா கேட்பாரு” என்று அலட்சியமாக சொன்னதும், கார்த்தி, “ம்ம்ஹும்” என்று தலையாட்டி “நான் வேணும்னா உனக்கு ஒரு சாம்பிள் காட்ட்டட்டுமா?” என்று சொல்லி விட்டு, அவளை வெளியே நிற்க சொல்லி விட்டு ஜீவாவை அழைத்து பூவரசியை படிக்க வைக்கும் படி கூற, அவனும் அவளின் ஆர்வத்தையும் லட்சியத்தையும் கேட்டு வியந்து, “நான் கண்டிப்பா அவளை படிக்க வைக்கிறேன்” என்று சொல்லி விட்டு, உடனே பூவரசியின் அப்பாவிடம் சென்று பேசினான்.

ஆனால், அவளின் அம்மாவோ அவளை படிக்க அனுமதிக்கவே மாட்டேன் என்று முரண்டு பிடிக்க, பின், அவனுக்கு தெரிந்த காலேஜ் நிர்வாகத்திடமும் பேசியதில் அவர்களும் அவளை சேர்க்க ஒப்புக்கொள்ளவில்லை.

இங்கு கயல் கார்த்தியிடம், “பார்த்தியா, உன் அண்ணா நீ சொன்னதும் எவ்ளோ தூரம் அவங்ககிட்ட இறங்கி போய் பேசுறாருன்னு. இதே நான் சொன்னா கோபம் தான் படுவாரு.” என்று சொல்லும்போதே, ஜீவா அங்கு வந்து, “கார்த்தி, இவனுங்க என்ன சொன்னாலும் கேட்கவே மாட்றானுங்க. காலேஜ்  பேசுனா அவங்களும் ஒத்துக்கவே மாட்றானுங்க. முடிஞ்ச வரை பேசி பார்க்குறேன்” என்று சொல்லி விட்டு, கயலை பார்த்து,

“நீ டேப்லெட் போட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. தலை வலிக்க போகுது வா” என்று அவளை குடிலுக்கு கூட்டிக்கொண்டு போக, கார்த்தி அவளிடம் “நீ பேசு” என்று சைகை காட்டினான். அவளுக்கு ஒரு பெயின் கில்லரை கொடுத்து விட்டு, “கொஞ்ச நேரம் தூங்கு கயல்” என்று சொல்லிவிட்டு வெளியில் செல்ல போக, கயல் “ஜீவா” என்று அழைத்தாள்.

ஆர்வமாய் அவள் புறம் திரும்பியவன் “என்ன கயல் எதாவது வேணுமா?” என்று கேட்க, அவள், “ம்ம்.. பூவரசியை படிக்க வைக்க முடியாதா… அவள் படிச்சா இந்த ஜனங்களே படிச்ச மாதிரி.” என்றவள் தயங்கி கொண்டு, “எனக்காக அவளை எப்படியாவது படிக்க வைங்க ப்ளீஸ்” என்று திக்கி திணறி சொல்ல,

ஜீவா அழுத்தமாக, “அவள் படிப்பா ஸ்வீட் ஹார்ட்” என்று சொல்லி விட்டு, வெளியில் சென்றவன், வெகு நேரம் அவள் கண்ணிலேயே படவில்லை. கயல் கார்த்தியின் குடிலில் சென்று அவனுடன் பேசிக்கொண்டிருக்க, அன்று மாலையே அங்கு வந்த ஜீவா கயலிடம் “பூவரசி ஊட்டியிலேயே படிக்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. காலேஜ்ல சீட் ரெடி. அவள் நம்ம வீட்லயே தங்கி படிக்கட்டும். நம்ம ஊருக்கு போகும்போது அவளையும் கூட்டிட்டு போய்டலாம்” என்று சொல்ல,

கயல் அதிர்ந்து ஜீவாவை பார்த்து “எ… எப்படிங்க. இங்க தான் யாரும் ஒத்துக்கவே இல்லைன்னு சொன்னீங்க.” என்றாள் புரியாமல்.

அவன், “ம்ம் மிரட்டி தான்… பூவரசி அம்மாவை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினேன்.” என்று சாதாரணமாக சொல்ல, அதில் பயந்து திருதிருவென விழித்தவள் “காலேஜ்ல எப்படி சீட் கிடைச்சது” என்று கேட்க, “அவங்களையும் மிரட்டி தான் சீட் வாங்கினேன்” என்று சொல்ல, அவள் கார்த்தியை பார்த்தாள்.

அவன் சிரிப்பை அடக்கி கொண்டு, ‘பார்த்தியா நீ சொன்னதும் தான் அண்ணா ஃபுல் ஃபோர்சா இறங்கி, கொலை பண்ற ரேன்ஜ்க்கு போயிருக்காரு’ என்று சிறு சிரிப்புடன் பார்க்க,

‘என்னக்காகவா பண்ணுனாரு’ என்று நினைத்து, உள்ளம் சில்லென்று ஆக, ஜீவாவை பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டாள்.

பூவரசி மூச்சு வாங்க ஓடி வந்து, ஜீவாவிடம் “சாறு சும்மா சொல்ல கூடாது நீங்க மிரட்டுன மிரட்டுல என் அம்மை மிரண்ட்ருச்சு… அப்போ நான் நிசமாவே படிக்க போறேனா…” என்று குதித்து கொண்டு கேட்க, அதில் சிரித்த ஜீவா, ம்ம் என்று தலையாட்ட,

கயல் அவளும் தங்களுடன் தான் இருக்க போகிறாள் என்றதில், தயங்கிய பூவரசி “இல்லக்கா நான் நான் இங்க இருந்தே போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்ல, கார்த்தி, “நீ படிக்கிறதை பத்தி மட்டும் யோசி… இங்க இருந்து போயிட்டு வர்றதுலாம் நடக்குற காரியமா.” என்று  முறைக்க, மேலும் தயங்கியவளை கார்த்தியும், கயலும் தான் சரி செய்தனர்.  

அதோ இதோ வென்று, ஒருவழியாக திருவிழா சடங்குகளும் ஒரு முடிவுக்கு வந்து, அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. முத்தாயி தான் முகத்தை திருப்பி கொண்டிருந்தார் அவளிடம் பேசவே இல்லை. சிக்கண்ணனோ அன்று அவன் போட்ட அத்தனை திட்டமும் பாழடைந்து விட்டதே என்று அவள் செல்வதை நினைத்து கடுங்கோபத்தில் இருந்தான்.

பெரியசாமி தான் “உன் அம்மைய நினைச்சு விசனப்படாத தாயி. நீ ஆசைப்பட்ட மாறி படுச்சு இங்க இருக்குற பயலுவலையும் படிக்க வை.” என்று சொல்ல, அவர்களை இதுவரை பிரிந்திராத பூவரசிக்கு கண்ணெல்லாம் கலங்கியது.

அங்கிருந்தவர்கள்அவளை விடாமல் பிடித்து அழுக, கார்த்தி தான் கயலிடம் “ஏன் கயல்… என்னம்மோ அவள் கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு போற மாதிரி இவ்ளோ பில்டப் கொடுக்குறாங்க” என்று நக்கலடிக்க, அவனை முறைத்தவள், பூவரசியை சமாதானம் செய்து, அங்கிருந்தவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு, அங்கிருந்த செல்ல ஜீப்பில் ஏறினர்.

ஜீவா ட்ரைவர் சீட்டில் சென்று அமர, பின்னால் கார்த்தியை அமர வைத்து விட்டு, அவன் அருகில் அமர போன கயலை பார்த்து “முன்னாடி வந்து உக்காரு” என்று சொல்ல, அவள் முன்னால்அமர்ந்ததும், பூவரசி கார்த்தியின் அருகில் அமர்ந்தாள்.

காட்டை விட்டு வெளியில் வந்ததில் அப்போது தான் கார்த்திக்கு ஏதோ சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் இருக்க, மூச்சை நன்கு இழுத்து விட்டவன்,” ஹப்பா ஏதோ ஜெயில்ல இருந்து வெளிய வந்த மாதிரி இருக்கு” என்று சொல்ல,

பூவரசி, “யோவ் உனக்கு எங்க காடு, செயிலு மாதிரி இருக்கா…” என்று கேட்க,

அவன் “ஆமா” என்றான் தோளை குலுக்கி.

“யோவ் உன்னை எல்லாம் நாய் நாரி தின்னுட்டு போயிருக்கணும்னு விட்டுருக்கணும். உன்னை போய் காப்பாத்துனோம்ல நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ” என்று சண்டைக்கு வர, அவளிடம் வார்த்தை சண்டை போடுவது கார்த்திக்கு வெகுவாய் பிடித்திருந்தது.

மேலும் அவளிடம் நக்கலாக பேச, கயல் “ப்ச் கார்த்தி எதுக்கு அவளை வம்புக்கு இழுக்கிற…” என்று கேட்க, அவன் “கயல் இவ்வளவு நாள் நம்மளை காட்டில அடைச்சு வச்சிருந்த மாதிரி, நம்ம இவளை வீட்டுல அடைச்சு வச்சுருவோம் அப்போ தான் தெரியும் இவளுக்கு” என்று சொன்னதும், பூவரசி அவனை பார்த்து அழகு காட்ட, கார்த்தி அங்கு வந்த ஒவ்வொரு இடத்தையும் பற்றி கயலிடம் சொல்லிக்கொண்டே வந்தான்.

“கயலு நான் இங்கதான் டியூஷன் படிச்சேன். இங்க தான், என் ஸ்கூல் பிரெண்ட் வீடு இருக்கு. இந்த தியேட்டர்ல தான் நான் படம் பார்ப்பேன்” என்று வரிசையாக அடுக்கி அங்கிருந்த மலையை கை காட்ட,

பூவரசி, “என்ன இங்க தான் நீ மலைல இருந்து தான் குதிச்சு விளையாண்டியா” என்று அவன் விழுந்ததை நக்கலடித்து கூற, அதில் கார்த்தி அவளை முறைக்க, கயல் “ஹா ஹா தொப்பி தொப்பி” என்று கார்த்தியை நகைத்தாள்.

“யூ டூ ப்ரூட்டஸ். பிசாசே…” என்று கார்த்தி அவளை திட்ட, கண்ணாடி வழியே ஜீவா கார்த்தியை ஒரு பார்வை தான் பார்த்தான். அதில் அவனுக்கு சர்வமும் அடங்கியது. மீண்டும் “கயல்” என்று அவளிடம் ஏதோ பேச வர, அதில் ஜீவாவின் பார்வையின் தீவிரம் அதிகமாவதை தெரிந்து, “அ அ அண்ணி” என்று அழைக்க, அதன் பிறகே அவன் இலகுவாக சாலையை பார்த்து ஓட்டினான்.

கயலும் ஜீவாவை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.. கார்த்தி அவளை அண்ணி என்று அழைத்ததும், “கார்த்தி முதல்ல நான் உனக்கு பிரெண்ட்அப்பறம் தான் இந்த உறவு முறை எல்லாம். நீ என்னை எப்பவும் போல கூப்பிடு. அண்ணி எல்லாம் வேணாம்” என்று திட்டவட்டமாக சொல்ல, கார்த்தி ஜீவாவை சங்கடமாக பார்க்க, அவனோ கயலை முறைத்துக்கொண்டிருந்தான்.

கயல் அவன் புறம் திரும்பவே இல்லையே. உன்னை பார்த்தா தான பயமா இருக்கும். என்று நினைத்து வெளியே வேடிக்கை பார்த்து, வேண்டும் என்றே கார்த்தியிடம் பேசிக்கொண்டு வர கார்த்தி, ஜீவாவின் மேல் இருந்த பயத்தில், அவளிடம் பேசாமல் தூங்குவது போல் ஆக்ஷன் செய்து உண்மையில் தூங்கியும் விட்டான்.

பின், கயலும் அசதியில் உறங்கி விட, ஜன்னல் கண்ணாடியில் அவள் நெற்றி முட்டியதில், ஜீவா அவளை இழுத்து தன் தோளில் சாய்த்து கொண்டான்.

வீட்டு வாசலில், ஜீப் நிற்க, அப்பொழுதும் கயல் உறக்கம் கலையாமல் இருக்க, கார்த்தி, அவளை பின் சீட்டில் இருந்து எழுப்ப போனான்.

ஜீவா அவனை தடுத்து “ஷ்” என்று சத்தம் போடாதே என்று வாயில் கை வைத்து அமைதியாக்கி ஓசைப்படாமல், இவர்களை வெளியவே நிற்க வைத்து விட்டு, அவள் உறக்கம் கலையாமல் அப்படியே கையில் அள்ளி கொண்டு, கயலை அறையில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி நெற்றியில் முத்தம் இட்டு விட்டு வந்தான்.

கார்த்தி தான், “நம்ம அண்ணா இவ்ளோ பொறுமையானவரா.” என்று அவனின் அக்கறையில் வியந்திருந்தவன், பூவரசியை பார்க்க, அவளோ அந்த வீட்டையும் தோட்டத்தையும் சற்று மிரண்ட பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜீவா வந்து, கார்த்தியை ஜீப்பை விட்டு இறக்கி, உள்ளே வந்து அவன் அறையில் விட்டு விட்டு, பூவரசிக்கும் ஒரு அறையை கட்ட, அந்த அறை மட்டும் அவள் காட்டில் நான்கைந்து குடிலை சேர்த்தது போல் இருப்பதை பார்த்து, திணறிக்கொண்டிருந்தாள்.

ஜீவா, கயலை வந்து பார்க்க, அவள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டதும், மென்மையாய் அவள் இதழில் முத்திரையை பதித்து விட்டு, அவளுக்கு வெளிச்சம் அடிக்காதவாறு, ஜன்னலை எல்லாம் மூடி, அறையை இருட்டாக்கி விட்டு, “வேலை இருக்கு ஸ்வீட் ஹார்ட் நான் போயிட்டு வரேன்… ம்ம்” என்று உறங்கி கொண்டிருந்தவளிடம் சொல்லி விட்டு, வெளியில் சென்றவன், நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.

அங்கு அஸ்வின் சேரில் அமர்ந்து டேபிளில் காலை நீட்டி ஜீவாவை பார்க்க, அவன் “கில் மீ…” என்று சொன்னதும் அஸ்வின் அவனை அசராமல் பார்த்து முறைத்தான்.

ஜீவா “என்னை கொலை பண்ண தான காட்டுக்கு வந்த… இப்போ உன் முன்னாடியே நிக்கிறேன். ஷூட் பண்ணு” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்று அவனைக் கூர்மையாக பார்க்க, அஸ்வின் துப்பாக்கியை எடுத்து, அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினான்.

நேசம் தொடரும்..
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
70
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்