1,023 views

அலுவலகம் வந்த அக்னி அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டான். அங்கிருந்த பணியாட்களுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அக்னி தான் இனி நிர்வாகம் பண்ணப் போகிறான் என்பதில் மகிழ்ச்சியே. அங்கு வேலை செய்யும் ஜீவா என்பவனை தன்னுடைய பிஏ வாக மாற்றிக் கொண்டான். அலுவலகத்தில் இருந்த சிலர் திருமணத்திற்கு வந்திருந்ததால்  அரசல் புருசலாக அன்று முழுவதும் பேசப்பட்டது அக்னி அன்பினியின் திருமணம்.

மகேஷ் விடிந்ததும் செல்வகுமார் முன்பு நின்றான் ஒரு வழக்கறிஞரோடு. ஏமாற்றி கையெழுத்து வாங்கி  நிர்வாகம் அவன் பெயருக்கு மாற்றப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள் மூவரும்.

“என்ன நடக்குது இங்க?” ஆராய்ச்சியோடு விக்ரம் கேட்க,

“அக்னிக்கு எதிரா கேஸ் போட போறோம்.” என்றான் மகேஷ்.

“எதுக்கு?” என்றவன் தந்தையை பார்க்க,

“இது என்ன கேள்வி நம்ம கம்பெனியை திரும்ப வாங்க தான்.” பதில் அளித்தார் செல்வகுமார்.

“அது அவன் கம்பெனி. முதல்ல கேஸ் போடுறதா இருந்தா உங்க மேல தான் போடணும். இவன் பேச்சைக் கேட்டு தேவையில்லாம பண்ணாதீங்க. குடும்பத்தோட உட்கார்ந்து பேசி முடிக்க வேண்டிய பிரச்சனை இது.” அலட்சியமாக பதில் சொன்னான் விக்ரம்.

“ஏமாத்தி வாங்கிட்டான்னு ஒரு சின்ன கோபம் கூட இல்லையா உனக்கு.” என்ற மகேஷிற்கு,

“அது ஒன்னும் எங்க அப்பா சுயமா உழைச்சி வாங்கின கம்பெனி இல்லயே. அவரே ஏமாத்தி தான வாங்கினாரு.” என்றான்.

“ஒரு வேலைக்காரன் பண்ணுத நியாயம்னு பேசுற வெக்கமா இல்ல.” என்ற மகேஷை அடிக்க கை ஓங்கியவன் அதை செய்யாமல் நிறுத்திவிட்டு,

“இப்போ அவன் என் தங்கச்சி புருஷன் இந்த வீட்டோட மருமகன். மரியாதையா பேசு!” என்றான்.

“நேத்து வரைக்கும் அவன பிடிக்காம தான இருந்துச்சு இப்ப என்ன புதுசா உறவு முறை சொல்லி கொண்டாடுற. என்னை இத்தனை வருஷம் ஏமாத்துனதுக்கு சும்மா விடமாட்டேன் அவனை”

“இத்தனை நாளா நீங்க தான ப்பா தலையில தூக்கி வைத்து கொண்டாடிட்டு இருந்தீங்க. மருமகன் தான நிர்வாகம் பண்றான் சந்தோஷமா விலகி இருங்களேன். எப்படியா இருந்தாலும் அந்த கம்பெனி இப்பவும் நம்ம கிட்ட தான் இருக்கு.” என்ற மகனை கடும் கோபத்தோடு முறைத்தார் செல்வகுமார்.

இருவருக்குமான பேச்சுக்கள் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்க, அதில் குளிர்காய துவங்கினான் மகேஷ். முடிந்த அளவிற்கு செல்வகுமாரை நன்றாக கொம்பு சீவி விட்டான். விக்ரமிற்கு பிடிக்கவில்லை குடும்ப விஷயத்தில் மகேஷ் தலையிடுவது. அக்னியை பிடிக்கவில்லை என்றாலும் ஒழுக்கத்தில் குறைவில்லாத ஒருவன். ஆனால் மகேஷ் அப்படி இல்லை. அதனாலேயே இந்த விஷயத்தில் அவன் தலையிடுவதை தடுத்தான். மகனை எதிர்த்து நின்றவர் மகேஷோடு கைகோர்த்தார். வெளியில் இருந்த நந்தினி, அன்னபூரணி இருவருக்கும் இவர்களின் சம்பாஷனைகள் விழ,

“என்ன அத்த இது இவ்ளோ நாளா அமைதியா இருந்த மனுஷன் இப்ப திரும்பவும் இப்படி மாறிட்டாரு.” என்று கணவனை எண்ணி நந்தினி வருத்தப்பட,

“இனிமே இவன் என்ன பண்ணாலும் என் பேரன் கிட்ட செல்லாது, சாமர்த்தியசாலி அவன்.  இப்போ அவனோட சேர்ந்து என் பேத்தியும் இருக்கா . உன் புருஷன் மண்ண கவ்வுவான் கண்டிப்பா.” எதிர்காலத்தை அழகாக கணித்துக் கூறினார் அன்னபூரணி.

“என்னமோ அத்தை! மனசுக்கு வருத்தமாவே இருக்கு.”

“எதுக்கு நந்தினி “

“நேத்து வரைக்கும் சந்திரா அவ்ளோ பாசமா பேசினான். இன்னைக்கு இவரை விட மோசமா நடந்துக்கிறான். என் பொண்ணு வேற பிடிவாதக்காரி. ரெண்டு பேருக்கும் எப்படி ஒத்து வரப்போதுன்னு  பயமா இருக்கு.” மனதில் இருந்த குறைகள் வார்த்தைகளாக வெளிப்பட,

“நீ நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது நந்தினி. உன் பொண்ணு அவனை விரும்புறா. என் பேரனும் கண்டிப்பா விரும்புவான். இந்த ரெண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்கப் போறதே அவங்க தான்.”

நேற்று வரை இருந்த மாமியாருக்கும் இன்று பேசும் மாமியாருக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்ந்தவர், “என்ன அத்த  இப்படி மாறிட்டிங்க.” என்றார்.

அழகாக சிரித்தவர் பதில் சொன்னார், “எல்லாம் என் பேத்தி பண்ண மேஜிக் தான்.” என்று.

அன்னபூரணி தன் பேத்தியை பற்றி பேசிக் கொண்டிருக்க, புதிதாக அவள் நுழைந்த மாமியார் வீட்டிலும் பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருந்தது.

“என்ன பரமு நீ… வீடு தேடி வந்தவங்க கிட்ட இப்படி நடந்துக்கிட்ட. என்ன இருந்தாலும் அவங்க உன் அம்மா.” மணிவண்ணன் வருத்தத்தோடு மனைவியிடம் பேசிக்கொண்டிருக்க, அவரோ பதில் சொல்லவில்லை.

“பாட்டி ரொம்ப பாவம் அவங்க முகமே வாடி போச்சு.” திவ்யா முதன் முதலாக பார்த்த பாட்டின் முகம் சுருங்கி விட்டதை நினைத்து வருத்தப்பட்டாள்.

மகள் வார்த்தையில் பரமேஸ்வரியின் முகமும் சுருங்கி விட்டது. அதை கவனித்த அன்பினி, “அத்தை உங்க கோபம் நியாயமானது ஆனா காட்டுற ஆள் தப்பு. உங்க திருமணத்துக்கு பிறகு பாட்டி ரொம்பவே பாதிக்கப்பட்டுட்டாங்க. அப்பா உங்களுக்கு செஞ்ச டார்ச்சர் எதுவும் பாட்டிக்கு தெரியாது. அவங்களை பொறுத்த வரைக்கும் கல்யாணம் பண்ணிட்டு ஒரு தடவை கூட நீங்க வந்து பார்க்கலைன்னு கோபம்.  இத்தனை வருஷம் கழிச்சு இப்ப தான் வெளி உலகத்தையே பார்க்கிறாங்க.” என்று அன்னபூரணி நிலையை முழுமையாக உணர்த்தினாள்.

பரமேஸ்வரி அழ துவங்க, “பெத்தவங்க மனச கஷ்டப்படுத்திட்டு நிம்மதியா இருக்க முடியாது அத்தை. ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்கிறதுக்கு பதில் மனச விட்டு பேசுங்க சரியாகிடும்.” என்றாள் அவர் பக்கத்தில் அமர்ந்து.

“இவ்ளோ பேசுற நீ எதுக்குமா எங்களை கஷ்டப்படுத்தி எங்க மகனை கல்யாணம் பண்ணிக்கிட்ட. அதுவும் உன் வீட்டுக்கு தெரியும்னு பொய் சொல்லி” என்ற நியாயமான ஆதங்கத்தை மணிவண்ணன் கேட்டு விட்டார்.

மனதுக்குள் அவ்வார்த்தையைக் கேட்டு புழுங்கியவள், “என்னால அக்னிய வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது மாமா.” என்றாள்.

“அதுக்காக அவனை அசிங்கப்படுத்தி தான் கல்யாணம் பண்ணுவியா. அத்தனை பேருக்கு முன்னாடி அந்த போட்டோவை காட்டி என் மகனை எவ்ளோ கேவலப்படுத்தினாங்க பார்த்த தான.  எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இவ்ளோ தூரம் நடந்திருக்காதே. என் மகன அசிங்கப்படுத்தி, எங்க வளர்ப்ப அசிங்கப்படுத்தி எதுக்கு இதெல்லாம்.” என்றவரின் கையில் அழுத்தம் கொடுத்து மேற்கொண்டு பேசாதவாறு தடுத்தார் பரமேஸ்வரி.

“உங்க மகனை உண்மையா காதலிக்கிறேன். அக்னியும் என்னை காதலிக்கிறான்னு மனப்பூர்வமா நம்புறேன். அதனாலதான் என்ன நடந்தாலும் பரவால்லன்னு பண்ணேன்.” என்றவள் சென்று விட்டாள் .

திவ்யா அமைதியாக அமர்ந்திருக்க, தம்பதிகள் இருவரும் கடந்த காலங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தனர். பரமேஸ்வரியின் மனம் ஓரளவுக்கு இறங்கி இருக்க, உள்ளே இருந்த மருமகள் கதவை திறந்தாள். அந்த சத்தத்தில் மூவரும் அவளை பார்க்க,

“இந்த கல்யாணத்துல நீங்க பாதிக்கப்பட்ட மாதிரி தான் உங்களோட கல்யாணத்துல சில பேர் பாதிக்கப்பட்டு இருப்பாங்க. குத்தி காட்டணும்னு சொல்லல மாமா உங்களோட சந்தர்ப்பமும் என்னோட சந்தர்ப்பமும் சூழ்நிலை தான் தீர்மானித்தது. கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க.” என்று விட்டு கதவை அடைத்துக் கொண்டாள்.

***
அலுவலகத்தில் இருந்த அக்னி  வேலையில் மும்முரமாக சுழன்றான்‌.
அதைக் கலைப்பது போல் தொலைபேசி அழைப்பு வர, பேச எடுத்தவன் அன்பினி நம்பராக இருக்க அப்படியே வைத்து விட்டான்.

பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை அவன். இருந்தும் மனம் தளராதவள் அங்கு வேலை செய்யும் ஜீவாவை அழைத்தாள்.

அவனும் புது நம்பராக இருப்பதால் எடுத்து விசாரிக்க, ” நான் உங்க எம் டி  பொண்டாட்டி பேசுறேன். அவருக்கு ஃபோன் பண்ணா எடுக்கல. உங்க நம்பருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன். அதை என் புருஷனுக்கு போட்டு காட்டுங்க” என்று உத்தரவிட்டாள்.

நேற்று நடந்தது ஜீவாவுக்கும் தெரியும் என்பதால் “மேடம் சார் திட்டுவாங்க.” என்றவனை இடைவெட்டி,
“இங்க பாரு நான் சொல்ற வேலைய மட்டும் நீ செய்யலன்னா இனிமே உனக்கு அங்க வேலை இருக்காது. பார்க்குறியா..! ” என்று பயமுறுத்தினாள்.

அதில் பதறிய ஜீவா “இப்பவே போறேன் மேடம்.” என்று அக்னியின் அறைக்கு சென்றவன்,
” சார்” என்றழைத்தான்.

” என்ன விஷயம்”  .

“உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருக்கு சார் .”  என்றவன் அக்னியின் பதிலைக் கூட கேட்காமல் ஃபோனில் இருக்கும் குரல் பதிவை ஓட விட்டான். அதில்,

“ஆங்கிரி பேர்ட் மாமா சாயந்திரம் வரும்போது மல்லிகைப்பூ அல்வா வாங்கிட்டு வாங்க. உங்களுக்காக உங்க பொண்டாட்டி வாசல்ல காத்துகிட்டு இருப்பா. நேத்து விட்ட ஃபர்ஸ்ட் நைட்க்கும் சேர்த்து இன்னைக்கு செலிப்ரேட் பண்ணிடலாம். ” என்று ரசனையோடு சொல்லிக் கொண்டிருந்தாள்.

கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது அக்னிக்கு.
அதை உணர்ந்த ஜீவா தன்னை அடிக்கும் முன் அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தான். சில நிமிடங்கள் கடந்தும் கோபம் அடங்காமல்  நுனி விரல்களை மேசையில் தட்டிக் கொண்டிருந்த அக்னிக்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, தன் வீட்டு காவலாளியை அழைத்தான்.

“அண்ணா! வேகமா என் ரூமுக்கு போங்க சீக்கிரம்.”

அவ்வார்த்தையின் அவசரத்தை உணர்ந்த காவலாளி வேகமாக அவன் அறைக்கு செல்ல,

“சார்! கதவு பூட்டி இருக்கு.”என்றார்.

“தட்டுங்க அண்ணா ரொம்ப அவசரம்.”

அக்னியின் வார்த்தையில் பதட்டம் கூட, வேகமாக அறை கதவை தட்ட ஆரம்பித்தார் காவலாளி. அவரின் சத்தத்தில் கதவைத் திறந்த அன்பினி என்னவென கேட்க,

“அண்ணா  அவ கையில மொபைல் இருக்கா” என்றவனுக்கு,
பதட்டமான குரலில் “இருக்கு சார்” என்றார்.

“அதை வேகமா புடிங்கிட்டு மேல மொட்டைமாடிக்கு ஓடுங்க.‌ சீக்கிரம்… சீக்கிரம்.”

என்னவென யோசிக்கக்கூட நேரம் தராமல் அவரை பதட்டத்துடனே வேலை வாங்க, அக்னியின் சொல்படி ஃபோனை வாங்கி கொண்டு வேக வேகமாக மாடிக்கு ஓடியவர் மூச்சு வாங்கியபடி ” சா…சார் வந்துட்டேன் சார்.” என்றிட,

“சூப்பர் அண்ணா! ” என உற்சாகமாகியவன் , “அதை அப்படியே கீழ தரையைப் பார்த்து தூக்கி போடுங்க.” என்றான்.

புரியாத பதட்டத்துடன் அதை தூக்கி கீழே எறிய, அந்நேரம் காவலாளியின் செயலால்  பதட்டத்துடன்  பின்னே ஓடி வந்த அன்பினி பார்வையில் சரியாக இக்காட்சி விழுந்தது.

கீழே விழுந்து நொறுங்கிய ஃபோனை பார்த்த காவலாளி,  ” சார் தூக்கிப் போட்டுட்டேன் சார். ஃபோன் மொத்தமா நொறுங்கிப் போச்சு.” என்றுவிட்டு அதன்பின்னே பொறுமையாக, “என்ன சார் ஆச்சு” என  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி கேட்க,

“அது ஒன்னும் இல்ல அண்ணா. அந்த ஃபோன் என்னை ரொம்ப வெறுப்பு ஏத்துற மாதிரி ஒரு வேலை பண்ணுச்சு. அதான் எனக்கு தொந்தரவு தர எதுவும் நல்லபடியா இருக்க கூடாதுன்னு தூக்கி போட சொன்னேன். இனி ஒன்னும் பிரச்சனை இல்ல ண்ணா நீங்க உங்க வேலையை பாருங்க.” என்றவனின் கூற்றில் இன்றைய  பலியாடு அவர் தான் என்பதை தாமதமாக  உணர்ந்த காவலாளி தன்னை முறைக்கும் அன்பினியை பார்க்காதவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

***

எப்போதும் அக்னி வந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் பொங்கி வழியும் வீடு இன்று அமைதியாக இருந்தது. உள்ளே வந்ததும் அக்னியின் கண்கள் தாயைத் தேட, அவரோ அங்கு இல்லை. அறைக்கு சென்றவன், “அம்மா” என்றழைக்க, விரும்பாமல் படுத்திருந்தார்.

கோபம் எல்லாம் அன்பினிசித்திரை மீது திரும்பியது அன்னையின் நடவடிக்கையில். கோபத்தோடு தன் அறைக்கு செல்ல முயன்றவனின் காதில் அழகாக ஒலித்தது அன்பினி சித்திரையின் சிரிப்பு சத்தம். கோபம் பன்மடங்காக பெறுக சத்தம் வரும் திசை நோக்கி சென்றான்.

“அடியே நாத்தனாரே! உன்னைய கட்டிக்கிட்டு எவன் மல்லு கட்ட போறானோ. உங்க அண்ண மூச்சுக்கு முன்னூறு தடவை என்னை கிண்டல் பண்ணுவான். இங்க வந்தா உன் லட்சணம் இப்படி இருக்கு. இன்னைக்கு வரட்டும் உங்க அண்ணனுக்கு இருக்கு.”

“அய்ய… அண்ணி என்ன கிண்டல் பண்றீங்க குழந்தைய” என்று கையில் இருக்கும் சப்பாத்தி மாவை தட்டில் தூக்கி அடித்து விட்டு பாவமாக கூறினாள்.

“ஞாயமா உன்ன கொமட்டுல குத்தி இருக்கணும். சப்பாத்தி உருட்ட சொன்னா என்ன இதெல்லாம்?”என்றவளின் கை தட்டை காட்டியது. அதில் பலவித உருண்டைகள் இருந்தது.

முகத்தை பச்சிளம் குழந்தை போல் மாற்றிய திவ்யா, “அண்ணி உங்களுக்கு ரசனையே இல்லை. இங்க பாருங்க எவ்ளோ அழகா டால் மாதிரி பண்ணியிருக்கேன்.” என்று ஒரு உருண்டையை எடுத்து காட்டினாள்.

அவை செய்வினைக்கு செய்து வைத்த பொம்மை போல் இருக்க முகத்தை சுழித்தாள் அன்பினி. அதையெல்லாம் கண்டு கொள்ளாத திவ்யா அடுத்த உருண்டையை எடுத்து, “இதை பார்த்தீங்களா பூனைக்குட்டி. இதை அப்படியே உருட்டி எண்ணெயில பொரிச்சு எடுத்தா பூனை சப்பாத்தி ரெடி.” என்று அதை உருட்டி பக்கத்தில் இருந்த சூடான எண்ணெய் கடாயில் போட்டாள்.

போடத் தெரியாமல் தொப்பென்று தூக்கிப் போட, எண்ணெய் அன்பினி கையில் பட்டு தெறித்தது. எரிச்சலில் கத்தியவள் கையை துடைக்க, “சாரி அண்ணி” என்று மன்னிப்பு கூறினாள் திவ்யா.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.” என்றவள் திவ்யாவை ஓரமாக நிற்க வைத்தாள்.

“அண்ணி நீங்க ஒரு வருங்கால சமையல் வல்லுநர தள்ளி நிற்க வைச்சி அசிங்கப்படுத்துறீங்க.” என்றவளை கண்டு கொள்ளாது அவள் அலங்கோலம் செய்து வைத்திருந்த அனைத்து உருண்டுகளையும் எடுத்து மீண்டும் பிசைய ஆரம்பித்தாள்.

அண்ணி சமையல் செய்யும் அழகை ரசித்தவள், “எப்போ அண்ணி சமைக்க கத்துக்கிட்டீங்க.” என்று கேட்க,

“நானும் அண்ணனும் படிக்கும் போது தனியா வீடு எடுத்து தங்கி இருந்தோம். ஒரு மாசம் அங்க இருக்க எல்லா சாப்பாட்டையும் டேஸ்ட் பண்ணோம். அதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. களத்துல இறங்கிட்டேன். ஆனா என்னை விட எங்க அண்ணன் சூப்பரா சமைப்பான்.” என்றதும் வாயைப் பிளந்தாள் திவ்யா.

காலை இட்டிலியால் அடைத்த வாயை இந்த முறை கோதுமை உருண்டையால் அடைத்தாள் அன்பினி. “உவய்க்!” என்று குமட்டிய அக்னியின் தங்கை, “அண்ணி இந்த மாதிரி எல்லாம் பண்ணிங்க அப்புறம் நாத்தனார் கொடுமையை காட்ட வேண்டியதா இருக்கும்.” என்று முறைத்தாள்.

“இந்த மாதிரி நீ முறைச்சின்னா அண்ணி கொடுமையை காட்ட வேண்டியதா இருக்கும்.” என்று அவளும் மிரட்டினாள்.

இருவரின் சம்பாசனைகளை கேட்ட அக்னியின் கோபம் காணாமல் போனது. அமைதியாக நகர்ந்து விட்டான் அங்கிருந்து. அவன் சென்ற பின் தலையை திருப்பிய அன்பினி, “நல்லவேளை நீ இருந்ததால ஆங்கிரி பேர்ட் அமைதியா போயிடுச்சு.” என்று சிரித்தாள்.

திவ்யாவிற்கு அவன் வருகை தெரியாததால் என்னவென்று விசாரித்து, “அண்ணி நீங்க செம கேடி அண்ணன் இருந்தத காட்டிக்கவே இல்லை.” என்று புகழ்ந்தாள்.

இரவு உணவை தயாரித்தவள் வேண்டாம் என்றவர்களையும்  சாப்பிட வைத்தாள். முதல்முறையாக மருமகளின் கைப்பக்குவத்தை ருசிக்கிறார்கள். செய்து கொண்டிருக்கும்போதே திவ்யா ருசி பார்த்ததால் தலையை நிமிர்த்தாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க,

“மாமா உங்க மருமக சமையலுக்கு எத்தனை மார்க் போடுவீங்க.” என்று ஆர்வமாக பார்த்தாள் மணிவண்ணனை.

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “அத்த நீங்க?” என்று அவரைப் பார்த்தாள்.

“திவ்யா  உங்க அண்ணன வர சொல்லு.”  என்ற மாமியாரை பார்த்தவள்,

“எங்க முகத்தை பார்த்து சொன்னா என்னவாம்.” என்று சிலுப்பிக் கொண்டு விரைந்தாள் கணவனை அழைக்க.

உடற்பயிற்சி செய்து முடித்தவன் வேர்வையோடு பால்கனியில் அமர்ந்திருந்தான். உடையில்லா முதுகு அம்சமாக தெரிய உரிமையோடு ரசித்தாள்.

இவன் எனக்கானவன் என்ற மகிழ்வில் அவள் கண்கள் உடல் எங்கும் மேயத் தொடங்க, ரசாயன மாற்றங்கள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. மனதினுள் பல எண்ணங்கள். பின்னால் நின்றவாறு கட்டியணைக்க துடித்தாள். உடலில் வழியும் வேர்வை துளிகளை  துடைத்து, வேர்த்த நெற்றியில் முத்தமிட பெரும் ஆவல் எழுந்தது.

இன்னும் எண்ணற்ற ஆசைகள் பெண்ணுக்குள் பிறக்க, பழக்க தோஷத்தில் வேறு யாராவது அவனை பார்க்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தவள் சிரித்துக் கொண்டாள் தனக்குள். அன்பினி திமிருக்கு இந்த காதல் எத்தனை நாள் ஒத்து வருமோ என்ற பெரும் எண்ணமும் அவளுக்குள் எழுந்தது. தீராத மோகம்,  முடிவில்லா காதல், இடை நிறுத்தா சண்டை, காதல் பார்வை, கட்டுக்கடங்காத முத்தம்,  என அனைத்தையும்  அவனிடத்தில் கொடுத்து விட வேண்டும் பிரிவு என்று ஒன்று வருவதற்குள் என்பது தான் அவளின்  ஆசைகள்.

அவளைப் போல் திரும்பாமல் கண்டு கொண்டான் பின்னால் அன்பினி நிற்பதை. ஆசைகள் போட்டி போட  அவளின் தயக்கங்கள் பின்னோக்கி சென்றது. தன் கணவன் என்ற உரிமையில்   அவள் ஆசைகளில் ஒன்றான அணைப்பை நிறைவேற்றினாள்.

வெடுக்கென்று தள்ளி விட்டவன், “திரும்பத் திரும்ப என் கோபத்தை தூண்டிக்கிட்டு இருக்க. என்னைக்காவது ஒரு நாள் தூக்கி போட்டு மிதிக்க போறேன்.” என்றவனின் கத்தல் கீழே இருந்த மூவருக்கும் கேட்டது.

பதில் பேசாமல் அன்பினி அமைதியாக நிற்க, “என்னை சீண்டி பார்க்காத.” என்று வெளியேறினான்.

அவன் பின்பு அமைதியாக சென்றவள்  இருக்கையில் அமர்ந்தவனுக்கு பரிமாற துவங்கினாள். பெற்றோர்கள் முன்பு எதையும் பேச விரும்பாதவன் அவள் வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

” திவ்யா தினமும் எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து சாப்பிடுறது தான் இந்த வீட்டு பழக்கம்.” என்ற பரமேஸ்வரி அன்பினியை கண்ணை காட்டி “உட்கார்ந்து சாப்பிட சொல்லு”. என்றார்.

அவனுக்கு பக்கத்தில் அமர்ந்த அன்பினி தனக்கான உணவை தட்டில் நிரப்ப, சாப்பிடாமல் எழுந்து விட்டான் அக்னி.

“என்ன அண்ணா சாப்பிடலையா.” என்ற தங்கைக்கு பதில் சொல்வது போல்,

“நம்ம குடும்பத்துல இவளுக்கு என்னைக்கும் இடமில்லை. இவ சாப்பிட்டா நான் சாப்பிட மாட்டேன்.” என்றான் பிடிவாதமாக.

“அவ இந்த குடும்பத்து பொண்ணாகி முழுசா ஒரு நாள் முடிய போகுது. பேசாம உக்கார்ந்து சாப்பிடு.” என்றார் மணிவண்ணன்.

அப்போதும் அமராமல் வீம்பாக நின்றிருந்தான். திவ்யா கெஞ்சியும் சாப்பிடவில்லை. பொறுத்திருந்த பரமேஸ்வரி, “ரெண்டு பேரும்  சாப்பிடுங்க.” என்றார் கட்டளையாக.

அக்னியின் வீம்பு குறைவதாக இல்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அன்பினி சாப்பிடாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். மருமகள் சென்றதும் மகனை திட்ட ஆரம்பித்தார் மணிவண்ணன்.

“ரொம்ப பண்ணாத அண்ணா. அம்மாவ சமைக்க வேணாம்னு சொல்லி அவங்களே எல்லாத்தையும் பண்ணி அழகா சாப்பிட வச்சாங்க. அண்ணி பாவம் சாப்பிட கூப்பிடு.” என்றும்,
காதில் வாங்காதவன் அமர்ந்து சாப்பிட்டான். இரண்டு வாய் கூட செல்லவில்லை மனம் கனத்தது.

முதல் வாயே சொல்லியது மனைவியின் கை பக்குவத்தை. அலுவலகத்தில் பார்த்த அன்பினிக்கும், இதை சமைத்த அன்பினிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் தெரிந்தது. அவளுக்குள் இந்த திறமை எங்கிருந்தது என்ற ஆராய்ச்சிக்கு நடுவில் அவள் சாப்பிடாமல் சென்றது நெருடலாகவே இருந்தது. சாப்பிடாமல் யோசித்துக் கொண்டிருக்கும் மகனை பார்த்த பரமேஸ்வரி அமைதியாக கடந்து விட, மணிவண்ணன் தான் மிகவும் வருத்தப்பட்டார்.

அக்னிக்கு பொறுமையாக சாப்பிடும் பழக்கம். அதுவரை வீட்டில் இருக்கும் மூவரும் ஏதாவது பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இன்று தனக்கு முன்னால் மூவரும் சென்று விட்டதை ஏற்றுக் கொள்ள மறுத்தது அவனின் மனம். இவற்றுக்கு காரணம் அன்பினி என்பதால் கோபமும், அவள் சாப்பிடாமல் இருக்கிறாள் என்ற வருத்தமும் சரி பாதியாக அவனை ஆட்கொண்டது.

சாப்பிடாமல் தட்டை மூடி வைத்தவன் உணவு மேஜையை சுத்தம் செய்தான். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவியவன் தட்டில் இரவு உணவை எடுத்து வைத்தான் அன்பினிக்கு. தன் அறைக்குச் சென்றவன் அவளைத் தேட, “அழகா இருக்க மாமா.” என்று அவளின் சத்தம் கேட்டது.

வலது புறமாக திரும்ப, அக்னியின் குழந்தை புகைப்படத்தை கையில் ஏந்தியவள் அதற்கு முத்தம் கொடுத்து ரசிக்க ஆரம்பித்தாள்.
“ம்க்கும்!” என்ற ஓசை அவளை இயல்புக்கு திருப்பியது.

அக்னியை பார்த்தவள் அந்த புகைப்படத்தை இருந்த இடத்தில் வைத்து விட்டாள். “சாப்பிடு.” என்றவன் சாப்பாட்டை அங்கிருக்கும் டேபிளில் வைத்து விட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்.

அவள் சாப்பிடுவதை பார்ப்பதற்காக விழி மூடாமல் அக்னி இருக்க, தன் முன் இருக்கும் உணவை கண்டு கொள்ளாது வெளிச்சம் தரும் விளக்கை நிறுத்தினாள்.

“சாப்பிடலையா” அவள் செய்கையை பார்த்து அக்னி கேட்க, பால்கனிக்கு நகர்ந்தாள். அவள் பின்னே கணவனின் பார்வையும் சென்றது.

நேற்றைப் போல் எந்த வீம்பும் செய்யாதவள் அமைதியாக படித்துக் கொண்டாள் அங்கு. அன்பினியின் செயலை பார்த்தவன் ஒரு மாதிரியான உணர்வுக்கு ஆட்கொள்ளப்பட்டான்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மேலும் நொந்து போனான் பால்கனி கதவை சாற்றியதில். தூக்கம் வர மறுத்து போராட்டம் செய்ய கட்டுப்படுத்திக் கொண்டு கண் மூடினான். நினைவுகளில் அவள் “மாமா” என்று அழைத்த ஓசை கேட்டது.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
39
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *