15 – விடா ரதி…
அடுத்த இரண்டு நாட்களும் தோழிகளுடன் கலகலப்பாகச் சென்றது.
`
“ஸ்வே … குணா குகை போகணும்னு சொன்னல்ல? இப்போ போலாமா?”
“அவரு வெளிய போய் இருக்காரு ரதி…. இரு அவரும் வராரான்னு கேக்கறேன்….”
“சவி…. என்னாச்சி? ஏன் படுத்து இருக்க….?”, அறையில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள்.
“ஃபீவர் வரமாதிரி இருக்கு…. குளிருது….”
“எங்க முகம் திருப்பு….”, லேசாக காய்ச்சல் அடித்தது.
“தொண்டை வலிக்குதா சவி?”
“இல்ல…”
“சரி.. நீ இரு உனக்கு நான் சூப் கொண்டு வர்றேன்… நல்லா ரெஸ்ட் எடு…”
“நான் ஊருக்கு போறேன் டி… அங்க பையன் தேடறான்னு அவர் காலைல தான் சொன்னாரு….”
“இப்படி ஃபீவர் வச்சிட்டு எப்படி போவ? இரு… நாளைக்கு போய்க்கலாம் … “
“இல்ல டி… நைட் ட்ரெயின் ஏற்கனவே புக் பண்ணிட்டேன்…. மதியம் கிளம்பி மதுரை போயிட்டா அங்க இருந்து போயிடுவேன்…. “
“சரி… இப்போ சாப்பிட்டு நல்லா தூங்கு…. ஃபீவர் கொறஞ்சா தான் ஊருக்கு விடுவேன்…”
“ரதி….”
“சொல்றத கேளு சவி…. இந்தா சுடுதண்ணி…. நான் சிக்கன் சூப் செஞ்சி கொண்டு வரேன்…. குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும். சாப்பாடு ரெடி ஆனதும் கூப்பிடறேன், சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தூங்கி எந்திரி…”,
“என்னாச்சி ரதி?”
“அவளுக்கு லேசா காய்ச்சல் அடிக்குது ஸ்வே…”
“அட…. சரி நான் பாத்துட்டு வரேன்…”
“என்ன செய்யற ரதி ?”, ஸ்வே சவியைப் பார்த்து பேசிவிட்டு வந்தாள்.
“அவளுக்கு தான் சிக்கன் சூப் செஞ்சிட்டு இருக்கேன்.. நல்லெண்ணெய் விட்டு நல்லா தாளிச்சு வேக வச்சி குடுத்தா உடம்புக்கு தெம்பா இருக்கும்… ஃபீவர் உடனே குறையும்….”, எனப் பேசியபடியே சமையல் வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ நமக்கு இன்னிக்கி வீட்ல தான் பிளான்…”, எனக் கூறியபடி இருவரும் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து முடித்துவிட்டு, சவிக்கு சாப்பிடக் கொடுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு வெளியே வந்தனர்.
“அவ எந்திரிக்கறதுக்குள்ள நம்ம குணா குகை போயிட்டு வந்துடலாமா?”, ரதி கேட்டாள்.
“இப்போவே மணி 2 டி.. இதுக்கு மேல போயிட்டு வரதுக்குள்ள பனி வந்துரும்.. நாளைக்கு போயிக்கலாம்… இங்க வந்ததுல இருந்து உன்கூட தனியா பேசவே நேரம் கிடைக்கல…. இப்போ நம்ம பேசலாம்….. “, எனக் கூறிவிட்டு அவளோடு டீயுடன் வெளியே வந்து அமர்ந்தாள்.
“அண்ணா சாப்பிட எப்ப வராங்க?”, ரதி கேட்டாள்.
“இன்னும் 1 மணி நேரம் ஆகும்… ரகு அண்ணா எப்ப வருவாரு?”
“அவரு இன்னிக்கி வரலைன்னு சொல்லிட்டாரு… கடைல ஸ்டாக் செக் பண்ற வேலை நடக்குதாம்…. அதான் அவருக்கு கேரியர்ல போட்டு வச்சிட்டேன்…. ஆளு வந்ததும் கொடுத்து அனுப்பிக்கலாம்…”, எனக் கூறியபடி மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“ சரி சொல்லு எப்படி இருக்க?”, என ஸ்வே அவளைப் பார்த்துக் கேட்டாள்.
“நீயே பாக்கறல்ல.. நல்லா இருக்கேன்….”, சிரிப்புடன் கூறினாள்.
“நிஜமா சந்தோசமா இருக்கியா ரதி? “, அழுத்தமாகக் கேட்டாள்.
ஒரு நொடி ஸ்வே முகத்தைப் பார்த்துவிட்டு, “நான் இன்னும் தெளிவாகலன்னு நெனைக்கறியா ஸ்வே?”
“ஆனாலும் நீ இன்னும் குழப்பத்தை விட்டும் முழுசா வெளிய வரலைன்னு நினைக்கறேன்.. இன்னும் உனக்குள்ள ஒரு தயக்கம் இருந்துட்டு இருக்கு.. அண்ணாகிட்ட நீ இன்னும் நெருங்கல தான், விலகளுக்கும் நெருக்கத்துக்கும் மத்தில போராடிட்டு இருக்க…. ஏன் இந்த போராட்டம்? உன் காதல் உன் கை சேர்ந்துரிச்சு ரதி…. அதுக்கு நீ சந்தோசப்படலாம்ல?”, ஸ்வே அமைதியாகவே கேட்டாள்.
“உண்மை தான் ஸ்வே… எனக்குள்ள சில குழப்பங்கள் இருக்கு தான்… அதுல முதல் குழப்பம் அவரு என்னை காதலிச்சாரா இல்லயாங்கறது? காதல் இல்லனா அன்னிக்கி சாயங்காலம் அவரு என்னை பாத்து காதலிக்கலன்னு தவிப்போட சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவரோட அப்போ இருந்த ஒரு ப்ரெண்ட் அதுக்கப்பறம் எங்கேயும் கண்ல படல…. சதீஷ், பிரியா, சுகன்யா இவங்க செஞ்ச கொளருபடி எல்லாம் விட அவருக்கு அப்போ என்மேல காதல் இருந்ததா இல்லையான்னு தான் எனக்கு பெரிய கேள்வியா இருக்கு…. நானா தான் அப்படி நினைச்சிட்டு இருந்தேனான்னு எனக்கு என்மேல, என் உள்ளுணர்வு மேல சந்தேகம் வருது ஸ்வே….”, மனதில் இருக்கும் குழப்பங்களை வெளிக்காட்டினாள்.
“இதுலாம் அண்ணாகிட்டயே கேட்டு தெளிவு பண்ணிக்கலாம்ல?”
“எங்க டி… அவர நான் ஏதாவது கேட்டாலே.. அப்படியா ? எனக்கு ஞாபகமே இல்ல… இதுலாம் 10 வருஷம் முன்ன நடந்த கதை இப்போ கேக்கறியேன்னு சொல்றாரு…. காதல் இருந்துச்சா இல்லையான்னு சொல்லவே மாட்டேங்கறாரு…. ஆனா நீயின்னா பிடிக்கும்… நீ என்னை தினம் தேடி பாக்கறது எல்லாம் தெரியும்ன்னு மட்டும் தான் சொல்றாரு.. அப்போ உங்களுக்கு என்மேல எந்த ஃபீலிங்ஸும் வரலியான்னு கேட்டா பதிலே இல்ல டி…. ”
“சரி இதுலாம் விடு… இப்போ உன்னை காதலிக்காறாரு தானே?”
“இப்போ அவரோட காதல் என்னால உணர முடியுது ஸ்வே… எங்க வாழ்க்கை சரியா கொண்டு போகனும்னு அவர் மெனக்கெட்டு பண்றது எல்லாமே எனக்கு தெரியுது… என்னை தனியா விடல இந்த 2 வாரமா…. இனிமே ரெண்டு பேரும் அவங்கவங்க இயல்பு வாழ்க்கைக்குள்ள போறப்போ தான் வித்தியாசம் வரும்… “
“இப்போ அவர் உன்ன காதலிக்கறாரு.. அது உனக்கும் புரியுது.. அப்பறம் என்ன குழப்பம் இன்னும் உனக்கு?”
“உண்மை தான் ஸ்வே…. அவர் தான் என்னோட முதல் காதல்… அவரும் என்னை கண்ணோட கண் கலந்து பல தடவை பார்த்து இருக்காரு… சில தடவை ஆர்வம் தெரியும், சில தடவை தவிப்பு தெரியும், சில தடவை அமைதியான சிரிப்பு தெரியும், சில தடவை சின்ன கோவம் தெரியும்…. அவர் என்னை தான் கவனிக்கறாரான்னு தெரிஞ்சிக்க நான் பல பைத்தியக்காரத்தனமான வேலை எல்லாம் கூட பாத்து இருக்கேன்… அதுல எல்லாமே எனக்கு அவர் ரொம்ப நெருக்கமா தான் இருந்தாரு… பேசல தான் ஆனா சின்ன சின்ன புரிதல் இருக்கும் … கூட்டமா ஆம்பளைங்க நின்னா நான் தயங்கி நடக்கிறது பாத்து அங்கிருக்கறவங்கள நகர சொல்லுவாரு… அவர கடந்து போரவரைக்கும் அங்க தான் நிப்பாரு….. நாலு வண்டி நடக்கற பக்கம் இருந்தா, நான் நடந்து போறப்போ, அவர் மத்த வண்டிய நகத்த சொல்லிட்டு, தானும் நகர்ந்து நின்னு சின்னதா சிரிப்பாரு.. அவர் சிரிப்பு எப்பவும் உதட்டுல ஆரம்பிச்சி கண்ல தெரியும்.. அந்த சிரிப்புக்காகவே நான் அவர பாக்க அவர் கடைக்கு போவேன்… அவ்ளோ பைத்தியக்காரத்தனமான காதல் அவர்மேல… அதுல பாதியாவது அவருக்கும் இருக்குன்னு நான் அப்போ கணிச்சது மொத்தமா பொய்ன்னு என்னால ஏத்துக்க முடியல ஸ்வே … காதல்ல உள்ளுணர்வு தானே பிரதானம்.. அதுவே பொய்-ன்னு சொன்னா நான் எப்படி நெனைக்கறது? இது என் தனிப்பட்ட மனக்குழப்பமா காலத்துக்கும் மனசுல தங்கிட்டா, நான் எந்த விஷயத்தையும் உள்ளுணர்வு வச்சி முடிவெடுக்க முடியாம தவிச்சிட்டே தான் இருக்கணும்….”
“ம்ம்….. அண்ணா அதப்பத்தி ஏன் பேசாம இருக்காருன்னு உனக்கு காரணம் ஏதாவது தோணுதா?”
“இல்ல…. இப்போ அவர் என்மேல காட்டற அன்பு கூட முன்ன காட்டின சின்ன அக்கறை மாதிரி தான் தாக்கம் குடுக்குது… இதுலாம் விட்டுட்டு நீ சொல்றமாதிரி நிகழ்காலத்தை மட்டும் மனசுல வச்சி வாழ்ந்தாலும், இந்த உறுத்தல் மனசுல இருந்துட்டு தான் இருக்கும் காலத்துக்கும்…. இத எப்படி நான் போக்கறது?”
“இது அண்ணா மட்டும் தான் தீர்க்க முடியும். அதுக்காக நீ ஏன் குழப்பத்தோடவே இருக்கணும்? அத ஒரு ஓரமா ஒதுக்கி வை… காலம் போக போக எல்லாத்துக்கும் ஒரு தெளிவு வரும்… இதே குழப்பத்தோட நீ இருந்தா, தேவை இல்லாத பிரச்சினை எல்லாம் தான் வரும். அதனால அத மறந்துட்டு புதுசா காதலிங்க ரெண்டு பேரும்….இப்போ தெய்வாதீனமா உங்களுக்கே கல்யாணமும் ஆனதால உன் காதலுக்கு புது எனர்ஜி குடுத்து காதலி…. அப்போ அவர் காதலிச்சு இருந்தாலும் இல்லைனாலும் இப்போ நீ அவர் பக்கத்துல இருக்கறதால இன்னமும் அன்பு அதிகமாகும்… அவரும் வாழ்க்கைல நிறைய அடிப்பட்டு வந்திருக்காரு… “
“ஆமா ஸ்வே…. அவரோட கண்ல முன்ன இருந்த சிரிப்பு இப்போ இல்ல.. அத நான் மிஸ் பண்றேன்…”
“அந்த சிரிப்ப நீ திரும்ப கொண்டு வரமுடியும்…. இந்த குழப்பத்தை எல்லாம் விட்டுட்டு, நாங்க ஊருக்கு கிளம்பினதும் நீங்க மொத ஹனிமூன் போயிட்டு வாங்க….”
“ஆமா போகணும் தான்.. ஆனா என் பிராஜக்ட் 3 மாசத்துல முடிக்கணும்… இப்போ 18 நாள் லீவ் ஆகிரிச்சி… என் மாமியார் வேற வேலைக்கு போகாதன்னு சொல்றாங்க…. “
“அண்ணா என்ன சொல்றாரு?”
“அவரு என் விருப்பம்ன்னு சொல்லிட்டாரு…. நான் தான் இப்போ இருக்க பிராஜக்ட் முடிச்சிட்டு யோசிக்கலாம்ன்னு இருக்கேன்… “
“வேலைய விடப் போறியா?”
“அப்படி தான் யோசிக்கிறேன்… முன்ன நெனைச்சமாதிரி ரகு கூட பிஸினஸ் கத்துக்கிட்டு அங்கேயே வேலை பாக்கலாம்னு…”
“உனக்கும் பிசினஸ் பண்ண தானே ஆசை… அதுவும் நல்லது தான்.. MBA கரெஸ்ல போட்டியா?”
“இல்ல டி… லாங்குவேஜ் கோர்ஸ் படிக்கவே நேரம் சரியா இருந்தது.. இனிமே பாப்போம்.. இல்லையா அனுபவ பாடமா இனிமே கடைக்கு போயே படிச்சிக்கலாம்…”, எனச் சிரிப்புடன் கூறியபடித் திரும்ப வாசலில் யாரோ நிற்பது போல் தெரிந்தது.
“ஆளு வந்துட்டாங்க போல இரு சாப்பாடு குடுத்து அனுப்பிட்டு வரேன்…..”
ஸ்வேதா ரதி கூறியவற்றை எல்லாம் அசை போட்டபடி அமர்ந்து இருந்தாள். ரதியின் குழப்பம் தீர்க்கும் ஒரே மார்க்கம் ரகு தான். அவன் அவளது குழப்பம் தீர்ப்பானா?
ஆண்டவன் மட்டுமே அறிவான் …..
சிறிது நேரத்தில் ஸ்வேதாவின் கணவர் வந்துவிட மூவரும் உணவருந்திவிட்டு, சைனீஸ் செக்கர்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சவிதாவிற்கு காய்ச்சல் விட்டிருந்தது, அதனால் அவளை மதுரைக்கு டாக்ஸியில் அனுப்பலாமா, உடன் செல்லலாமா என்ற வாக்குவாதம் ஆரம்பமானது…
“நான் போய் விட்டுட்டு வரேன் ரகு ….”
“நைட் டைம் இன்னும் நீ இங்க ட்ரைவ் பண்ணது இல்ல.. அந்த ரிஸ்க் வேணாம்…”
“அப்போ அவள எப்படி கொண்டு போய் விட்றதாம்?”
“நான் வண்டி பேசிட்டேன்… பாதுகாப்பா கொண்டு போய் டிரெயின் ஏத்தி விட்ருவாங்க… சோ அமைதியா இரு… “
“கூட நான் போலாம்ல?”
ரகு முறைக்கவும், “நானும் ஸ்வேவும் போயிட்டு வரோம் ..”
“நீங்க ரெண்டு பேரும் போனா எங்கள கழட்டி விட்ருவீங்கன்னு நல்லா தெரியும்.. உங்க கேர்ள்ஸ் டிரிப்க்கு எல்லாம் இப்போ பிளான் போடாதீங்க…. வண்டி 5 மணிக்கு வந்துடும்.. அவங்களுக்கு 10 மணிக்கு தான் டிரெயின்.. போய் பத்திரமா அவங்க டிரெயின் ஏறிடுவாங்க… அமைதியா நீ இங்க இரு…”, எனக் கூறிவிட்டு அவன் வெளியே சென்று பூ வாங்கி வந்துக் கொடுத்தான். கூடவே சில தின்பண்டங்களும் அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும்…
அனைத்தையும் அவளுக்கு பையில் வைத்து, அவளுக்கு காய்ச்சல் போக மாத்திரை கொடுத்து, இரவு உணவு பேக் செய்துக் கொடுத்து அனுப்பினாள்.
“சவி மதுரை போனதும் கால் பண்ணு.. ட்ரெயின் ஏறினதும் போன் செய், ஊருக்கு போய் சேர்ந்ததும் மறக்காம கால் பண்ணு.. தூங்கிட்டே ஸ்டேஷன் விட்டுறாத…”
“சரி டி…. நீ சந்தோசமா இரு… சீக்கிரம் நல்ல சேதி சொல்லு…. ஸ்வே …. நீயும் சீக்கிரம் சொல்லு… வீட்டுக்கு வா…. “
“கண்டிப்பா…. நீ பத்திரமா போயிட்டு வா….. “
தோழிகளின் பிரியாவிடை முடிந்து ஒருவழியாக சவிதா மதுரைக் கிளம்பினாள்.