Loading

அத்தியாயம் 15

 

இதோ மயூரனும் துவாரகாவும் மயூரனின் ஊருக்கு, அதாவது துவாரகாவின் புகுந்த வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

எப்போது இந்த முடிவை மயூரன் கூறினானோ, அப்போதிலிருந்தே துவாரகாவின் மனதிற்குள் குழப்பங்கள் கும்மியடிக்க ஆரம்பித்து விட்டன.

 

முதல் சந்தேகம், அவன் மட்டும் செல்கிறானா, இல்லை அவளையும் உடனழைத்து செல்கிறானா என்பது.

 

அதற்காக அவள் கணவனின் முகம் நோக்க, “வரா, சாப்பிட்டுட்டு உன் திங்ஸ் பேக் பண்ண ஸ்டார்ட் பண்ணு. ரொம்ப எல்லாம் வேண்டாம். வேணும்னா, திரும்ப வந்து கூட எடுத்துக்கலாம்.” என்று கூறிவிட, “அப்போ நானும் வரணுமா?” என்று கேட்டு வைத்தாள் அவள்.

 

அவன் காட்டியிருந்த புகைப்படம் அத்தகைய பயத்தை அவளுக்கு உண்டாக்கி இருந்தது.

 

பிறந்ததிலிருந்தே தனித்து வளர்ந்தவளுக்கு, அத்தகைய கூட்டத்தை பார்த்து பயம் வருவது இயல்பு தானே.

 

அதை உணராத மயூரனோ, அவனின் சிந்தனையில் மூழ்கியபடி, “அஃப்கோர்ஸ் வரா… சீக்கிரம் பேக் பண்ணிடு. மதியம் கிளம்புனா தான் அங்க போய் ரீச்சாக சரியா இருக்கும்.” என்றான்.

 

அவளோ, மனதிற்குள் பேசியபடி உணவை உண்ண, அடுத்த சந்தேகத்திற்கான விதையை அவளின் தந்தை தூவி இருந்தார்.

 

“இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு மயூரன். உங்க வேர், உங்க குடும்பம் தான்! அதை விட்டு தள்ளி இருக்குறது எனக்கு சரியா படல. இப்போ நீங்க எடுத்த முடிவு சரி தான்.” என்று கோபிநாத் கூற, தன்னை விட தன் கணவனையும் அவனின் குடும்பத்தையும் பற்றி, தன் தந்தைக்கு தெரிந்திருப்பதை எண்ணி சிறு பொறாமை உணர்வு எட்டிப் பார்த்தது துவாரகாவிற்கு.

 

அதன் காரணமாக, “மயூவோட குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரியுமாப்பா?” என்று தந்தையிடம் கேள்வி எழுப்பினாள் அவரின் மகள்.

 

அதில் கோபிநாத் விழிக்க, அவருக்கு கண்களால் சைகை காட்டிய மயூரனோ, “பொண்ணை கல்யாணம் பண்ணி தரதுன்னா சும்மாவா? மாப்பிள்ளையோட குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிக்காம இருப்பாங்களா?” என்று மயூரன் வினவ, “க்கும், அப்போ பொண்ணுக்கு மாப்பிள்ளையோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று சரியாக பேசினாள் துவாரகா.

 

“நான் அப்போ சொல்ல வந்தேன். நீதான் இவ்ளோ பெரிய குடும்பமான்னு வாயை பிளந்த.” என்று மொத்த பழியையும் அவள் மீது போட்டு விட்டான் அந்த கள்ளன்.

 

‘ஆமாவா?’ என்று அவளே யோசிக்க, “ஆமாவே தான். நமக்கு டிராவல் டைம் நிறைய இருக்கு. அப்போ நம்ம குடும்பத்தை பத்தி விளக்கமா ஃபேமிலி ட்ரீ போட்டு சொல்றேன். இப்போ போய் எடுத்து வைம்மா.” என்று மயூரன் தன்மையாக கூற, அதற்கு மேல் எங்கிருந்து வாதாடுவது?

 

சாப்பிட்டு முடித்த துவாரகா அறைக்கு செல்ல முற்பட, அப்போதும் மாமனாரும் மருமகனும் அவர்களுக்குள் ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டனர்.

 

‘ஏதோ தப்பா இருக்கே!’ என்று எண்ணி குழம்பியவள், அதே மனநிலையில் கைக்கு அகப்பட்டதை எடுத்து பயணப்பையில் திணித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் பின்னே வந்த மயூரனோ, அவள் எடுத்து வைத்திருந்ததை பார்த்து தலையில் கைவைத்து விட்டான். ஏனெனில், அவள் எடுத்து வைத்த உடைகள் அப்படி!

 

ஷார்ட்ஸ், கேப்ரி, மினி ஸ்கர்ட், ஆங்கிள் லெந்த் டாப் என்று அவள் எடுத்து வைத்திருக்க, “வரா, இதையா அங்க போடப் போற?” என்று அவன் வினவ, அப்போது தான் அவள் எடுத்து வைத்தவைகளை கண்டாள் பெண்ணவள்.

 

‘ஹையோ!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாலும், மாமனாரும் மருமகனும் சேர்ந்து தன்னை குழப்பி விடுவதில் கடுப்பனாவளோ, அவளுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக இதை எண்ணி, “ஏன், இதுக்கு என்ன குறைச்சல்? கல்யாணமானா, இந்த டிரெஸ் எல்லாம் போடக் கூடாதா?” என்று ஆரம்பித்தவள், ‘ஆடை சுதந்திரத்தில்’ வந்து நிறுத்த, அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவனோ,

 

“இப்படி மூச்சு பிடிச்சு பேசுற அளவுக்கு  நான் இப்போ என்ன கேட்டுட்டேன்? லுக், நீ இந்த டிரெஸ் எல்லாம் போடுறதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. மத்தவங்க சொல்லுவாங்கன்னும் உன்னை கண்ட்ரோல் பண்ண நினைக்கல. ஆனா, இந்த டிரெஸ் போட்டு அங்க நீ கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவியான்னு யோசி. அங்க தாத்தா, பெரியப்பா ஃபேமிலி, சித்தப்பா ஃபேமிலி, அத்தைங்க ஃபேமிலின்னு எல்லாரும் ஒண்ணா இருக்கோம். நீ இப்படி டிரெஸ் பண்ணா, எல்லாரும் உன்னை வித்தியாசமா தான் பார்ப்பாங்க. அது உனக்கு ஓகேவான்னு யோசிச்சுக்கோ. மத்தபடி, நீ எந்த டிரெஸ் போட்டாலும் எனக்கு ஒன்னுமில்ல.” என்று தோளை குலுக்கியவன், அவளருகே வந்து, “டிரெஸ் போடாட்டியும்…” என்று கூற வர, சுதாரித்த துவாரகா, அவன் வாயை அவசரமாக மூடி,

 

“மயூ… நம்ம இன்னும் ஃபிரெண்ட்ஷிப் ஸோன்ல தான் இருக்கோம்.” என்று கூறினாள். அதற்கே அவளின் முகம் குப்பென்று சிவந்து விட்டது.

 

அதை ரசித்துக் கொண்டே, அவன் உதட்டின் மீதிருந்த அவளின் கரத்தை பிரித்தவன், “நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? இந்த மாதிரி டிரெஸ் போடாட்டியும் எனக்கு ஒன்னுமில்லன்னு தான் சொல்ல வந்தேன். ஆக்சுவலி, என்னை சொல்லி சொல்லி நீதான் அதே திங்கிங்ல இருக்க போல!” என்று அவன் கூறினான்.

 

“மய்யூ…” என்று வெளியே  சிணுங்கினாலும், ‘ஹ்ம்ம், மயூ இப்பவும் ஜென்டில்மேன் தான்!’ என்று உள்ளுக்குள் பாராட்டினாள்.

 

எடுத்து வைத்தவைகளை மீண்டும் அலமாரிக்குள் வைத்தவள், அவளிடமிருந்த குர்தி, சுடிதார் வகைகளை தேடி எடுத்து வைத்தபடி, “ஊரு ஊருன்னு சொல்றீங்களே, அது எந்த ஊருன்னாவது சொல்வீங்களா? இல்ல கண்ணை கட்டி தான் கூட்டிட்டு போவீங்களா?” என்றாள் கேலியாக.

 

“நம்ம ஊரு மதுரை. இப்போதைக்கு இது போதும். சீக்கிரம் எடுத்து வை.” என்று அவசரப்படுத்தியவன், அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, சில நொடிகள் பொறுத்து பார்த்தவள், “ஹலோ மிஸ்டர். மய்யூ…ரன், இங் என்ன வாக்கிங் காம்பெட்டிஷனா நடந்துட்டு இருக்கு? எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருக்கீங்க? உங்களுக்கு எடுத்து வைக்க எதுவுமில்லன்னா, வெளிய போய் வெயிட் பண்ணுங்க.” என்றாள்.

 

அவனோ சற்று தயக்கத்துடன், “வரா… நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணனும்.” என்று கூற, முதலில் அவன் குரலை மட்டும் கேட்டவள், “இதென்ன புது விதமான அக்ரீமெண்ட்டா?” என்று கேலியாக அவனை நோக்க, அப்போது தான் அவன் முகபாவனையை கண்டாள்.

 

“என்னாச்சு?” என்று புருவச் சுழிப்புடன் அவள் வினவ, “நத்திங்.” என்று லேசாக புன்னகைத்தவன், “அங்க உனக்கு என்ன பிராப்ளம் வந்தாலும் என்கிட்ட சொல்லணும். எதுவா இருந்தாலும் நம்ம பேசி சார்ட்டவுட் பண்ணிடலாம். ஓகே?” என்று தீவிரமான குரலில் அவன் கூறினான்.

 

அதுவே துவாரகாவின் பதற்றத்தை அதிகரிக்க செய்தது.

 

“என்ன… என்ன பிராப்ளம் வரும்? உங்க வீட்டுக்கு தான போறோம்? எனகென்னமோ வேற மாதிரி ஃபீலாகுது!” என்று அவள் கூற, அவளின் கரத்தை பற்றிக் கொண்டவன், ஒரு பெருமூச்சுடன், “எனக்கே அது என் வீடுன்னு ஃபீலாகாது வரா. அதை விடு, ஃபர்ஸ்ட் பிராமிஸ் பண்ணு.” என்றான்.

 

“ப்ச், இப்படி மொட்டையா சொல்லி பிராமிஸ் பண்ணுன்னா எப்படி? சரி சரி, உடனே ஏன் மூஞ்சி இப்படி போகுது. பிராமிஸ், எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்.” என்றவள், அவனை சற்று இலகுவாக்க, “அடிக்க எல்லாம் மாட்டேன். என்னை நம்பலாம்.” என்று கண்ணடித்தாள்.

 

அவனும் சிரித்துக் கொண்டே, “அடிக்கிறதெல்லாம் எனக்கு பிராப்ளம் இல்ல, அடி குடுக்குற இடமும் வாங்குற இடமும் வேறயா இருக்கும் பட்சத்துல!” என்று கூற, “ஷப்பா, உங்க ஃபிளர்ட்டுக்கு ஒரு அளவே இல்லையா?” என்று மீண்டும் எடுத்து வைப்பதில் கவனமானாள்.

 

“அவ்ளோ தானா உன் ரியாக்ஷன்?” என்று அவன் ஆச்சரியப்பட, “ஹ்ம்ம் பழகிடுச்சு!” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் அவள்.

 

வாக்கு கொடுத்தவளுக்கும் சரி, அதை பெற்றுக் கொண்டவனுக்கும் சரி, உணர்வுகளின் குவியலுக்குள் சிக்கித் தவிக்கும் வேளையில், சத்தியம் என்ன சர்வமும் மறந்து விடும் என்பது தெரியவில்லை போலும்!

 

*****

 

மயூரன் கிளம்ப எண்ணிய நேரத்தில் சரியாக அங்கு வந்து நின்றது அந்த வாகனம். அதற்குள்ளிருந்து வெளியே வந்த நபரோ மயூரனிடம், “தம்பி, சரியான டைத்துக்கு வந்துட்டேன் தான?” என்றார்.

 

“நீங்க லேட்டா வந்ததா சரித்திரமே இல்லையே சாமிண்ணா.” என்று மகிழ்வுடன் கூறிய மயூரனோ, “நீங்க இங்க வந்தது…” என்று இழுக்க, அவன் ‘எள் என்னும் முன் எண்ணெய்’யாக வந்து நிற்பது போல, “யாருக்கும் தெரியாது தம்பி.” என்றார் அவர்.

 

இருவருக்கும் நடக்கும் உரையாடலை கவனித்தவாறே அங்கு வந்த துவாரகாவிடம், “வரா, இவரு பேரு கந்தசாமி. சாமிண்ணான்னு கூப்பிடுவேன். சின்ன வயசுல இருந்தே, என்னை வெளிய கூட்டிட்டு போறது இவரு தான்.” என்றான் மயூரன்.

 

அவன் அவருக்கு தரும் மரியாதையும், எந்தவொரு இடத்திலும் அவரை ‘டிரைவர்’ என்று குறிப்பிடவில்லை என்பதையும் உணர்ந்த துவாரகாவிற்கு நன்கு புரிந்தது, அவருக்கு மயூரனிடம் இருக்கும் மதிப்பு என்ன என்பது.

 

“இவங்க தான் உங்க சம்சாரமா தம்பி?” என்று மயூரனிடம் கேட்ட கந்தசாமி, “வணக்கம்மா…” என்று துவாரகாவிடம் சிரிப்புடன் கூற, “ஹாய் அண்ணா. என் பேரு துவாரகா. நான் உங்க தம்பியோட ஒய்ஃப்பே தான்.” என்று கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டவள், “உள்ள வாங்கண்ணா…” என்று அவரை உபசரிக்கவும் மறக்கவில்லை.

 

தனியே கிடைத்த சந்தர்ப்பத்தில், “ரொம்ப நல்ல பொண்ணா இருக்கு தம்பி. உங்களுக்கு ஏத்த ஜோடி தான்.” என்று மயூரனிடம் மனம் நிறைந்து பாராட்டவும் செய்தார் கந்தசாமி.

 

அப்போது அவர்களை நெருங்கிய மனைவியை பார்த்தபடி, “ம்ம்ம், நல்ல பொண்ணு தான். அப்பப்போ கொஞ்சம் வாலு மட்டும் முளைச்சுடும்.” என்று கேலி செய்தாலும், அந்த கணவனின் முகம் முழுக்க பெருமிதமும் கர்வமும் மட்டுமே காட்சியளித்தது.

 

அதில் அவனுக்கு இலவச முறைப்பை பரிசாக கொடுத்தவளின் வதனம், சட்டென்று கூம்பிப் போனது. காரணம், அவளின் தந்தையை பிரிந்து செல்ல போகும் வருத்தம் தான்.

 

இயல்பான குடும்பத்தில், அன்னை மற்றும் தந்தையின் பாசத்திலும் பாதுகாப்பிலும் வளர்ந்த பெண்களுக்கே அந்த நொடியை கடப்பது மிகுந்த சிரமம் என்னும் போது, தாயை இழந்து தந்தையை மட்டுமே இத்தனை வருடங்களாக சொந்தமாக எண்ணி வளர்ந்த துவாரகாவிற்கு அந்த நொடியை கடப்பது என்பது முடியவே முடியாத காரியமாக தான் தோன்றியது.

 

அத்தனை நேரம், மகளுக்கு தேவையானவற்றை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கோபிநாத்திற்கும் மனமெங்கும் மகளை பிரியப்போகும் சோகம் பரவ, அதை அவளுக்கு காட்டி விடாமல் கவனாமாக தவிர்த்து வந்தார்.

 

எத்தனையாக கண்ணாமூச்சி ஆடினாலும், கிளம்பும் சமயம் இருவராலும் அவர்களின் உணர்வுகளை மறைத்து வைக்க முடியவில்லை.

 

“அப்பா…” என்று கதறலுடன் தந்தையின் தோளில் அடைக்கலம் புக, “துவாம்மா… கிளம்பும் போது அழக்கூடாதும்மா. இப்படி அழுதா, போற சமயம் காய்ச்சல் ஏதாவது வந்துடப் போகுது.” என்றவரும் அழுது கொண்டு தான் இருந்தார் என்பதை மறந்து விட்டார் போலும்.

 

இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தில் பங்கு கொள்ள முயலாமல் அவர்களுக்கான இடைவெளி விட்டே தள்ளி இருந்தான் மயூரன்.

 

அவனுக்கும் தந்தை மற்றும் மகளின் அழுகை கண்டு கண்கள் லேசாக கலங்க, அதை மறைக்கும் பொருட்டு, பயணப்பொதிகளை எல்லாம் வாகனத்தில் அடுக்க ஆரம்பித்தான்.

 

“அப்பா… நான் இங்கேயே… உங்க கூடவே இருக்கேனே.” என்று துவாரகா அழுகையுடன் வினவ, அவளை தன்னிலிருந்து பிரித்த கோபிநாத், “இல்லடா துவாம்மா… நீ பெரிய பொண்ணு… உனக்கே தெரியும். எத்தனை நாள் அப்பா கூட இருப்ப நீ?” என்றவர் மகளின் கண்ணீரை துடைத்தபடி, அவளை வெளியே அழைத்து வந்தார்.

 

“நீ என்னை பார்க்கணும்னு நினைச்சா, மயூரன் கிட்ட சொல்லு. அவருக்கு ஃப்ரீயா இருக்கும் போது உன்னை கூட்டிட்டு வருவார். இல்லன்னா, அப்பா கிட்ட சொல்லு… நான் வந்து பார்ப்பேன்.” என்று கோபிநாத் ஆறுதல் கூற, அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவளோ, “அப்போ கூட, அவரு ஃப்ரீயா இருக்கும் போது… அவரு கூட்டிட்டு வந்தா தான்ல?” என்று மூக்கை உறிஞ்சினாள் துவாரகா.

 

குதர்க்கமாக பேசும் மகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்த கோப்பிநாத்திடம் தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்த மயூரனோ, அவளின் தோளை சுற்றி கையை போட்டவாறு, “ச்சே, அப்படி இல்ல வரா. நான் ஃப்ரீயா இருக்கும் போது, உன்னை கூட்டிட்டு வரேன். நீ ஃப்ரீயா இருக்கும் போது என்னை கூட்டிட்டு வா. ரெண்டு பேரும் ஃப்ரீயா இல்லன்னா, மாமா வரட்டும்.” என்றான்.

 

அவனை முறைத்தவள், ‘இதெல்லாம் ஒரு சமாளிப்பா?’ என்பது போல பார்த்து வைக்க, “சரிங்க மேடம். உங்களை எப்படி சமாதானப்படுத்தன்னு எங்களுக்கு தெரியல. நீங்களே சொல்லிடுங்க.” என்று போலி பணிவுடன் கூறினான் மயூரன்.

 

“இது கூட தெரியலன்னா நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணீங்க?” என்று உதட்டை சுழித்து வினவியவளின் கண்ணீர் தடத்தை மட்டும் மிச்சம் வைத்து காணாமல் போயிருந்தது.

 

“அடிப்பாவி!” என்றவன், “ஆமா, இது மாமாக்கும் பொருந்தும் தான?” என்று மயூரன் கூட்டுக்கு ஆள் சேர்க்க முயற்சிக்க, “ஆமா…” என்றவள் தந்தையையும் சேர்த்து முறைத்து விட்டு வாகனத்தில் ஏறினாள்.

 

முறைத்து விட்டு செல்லும் மகளை வாஞ்சையுடன் பார்த்த கோபிநாத்தோ மயூரனின் கரங்களை பற்றிக் கொண்டு, “உங்களுக்கு சொல்லணும்னு இல்ல… ஆனாலும், பார்த்துக்கோங்க மயூரன்.” என்றார்.

 

அவருக்கு புன்சிரிப்பை பரிசாக கொடுத்தவன், “கண்டிப்பா மாமா. அத்தை கிட்ட வேற பிராமிஸ் பண்ணியிருக்கேனே. உங்க பொண்ணை பத்திரமா பார்த்துப்பேன்.” என்றான் மயூரன்.

 

இருவரும் பேசுவதை சிறிதே உண்டான பொறாமையுடன் கண்ட துவாரகாவோ, “இன்னும் எவ்ளோ நேரம் இப்படி பாசப்பயிரை வளர்த்துட்டு நிக்கிறதா உத்தேசம்?” என்று கண்ணாடியை இறக்கி விட்டு வினவ, அதில் இருவரும் சிரித்தனர்.

 

“அப்படியே உங்க பொண்ணு கிட்டயும் என்னை பத்திரமா பார்த்துக்க சொல்லுங்க மாமா. ஏற்கனவே, மேடம் வாயிலயிருந்து அடிகிடின்னு எல்லாம் பேச்சு வந்துச்சு.” என்று நேரம் பார்த்து போட்டுக் கொடுத்தான் துவாரகாவின் மயூரன்.

 

அதில் உதட்டை சுழித்தவளோ, “சீக்கிரம் சீக்கிரம்…” என்று கூற, சிரிப்புடன் மாமனாரிடம் விடைபெற்றவன், மறுபக்கம் வந்து அமர்ந்து கொள்ள, வாகனத்தை கிளப்பினார் கந்தசாமி.

 

என்னதான் தைரியமாக கிளம்பி விட்டாலும், முதல் முறை தந்தையை பிரிந்து செல்வது, புது சூழல், புது குடும்பம் என்பவையே துவாரகாவை பயமுறுத்த போதுமானதாக இருக்க, அவளின் மனநிலையை புரிந்து கொண்ட மயூரன், “கொஞ்ச நேரம் கால் நீட்டி படுத்துக்கோ வரா.” என்று அவளை மடியில் தாங்கினான்.

 

முதலில் மறுக்க வந்தவளிடம், “இப்போ தான் உனக்கு சான்ஸ். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் நான் படுத்துப்பேன்.” என்று வம்பு செய்தே வழிக்கு கொண்டு வந்தான்.

 

பதற்றமான மனநிலையில் இருந்தவள் கணவனின் மடியில் படுத்த சில நொடிகளில் கண்ணயர்ந்து விட, அவளை ஒரு பெருமூச்சுடன் கண்டவனின் மனமோ துடித்து அடங்கியது.

 

அதோடு, ‘அங்க உனக்கு எந்த கஷ்டமும் இல்லாம பார்த்துக்கணும்… பார்த்துப்பேன் குட்டிம்மா.’ என்று எண்ணிக் கொண்டான்.

 

அப்போது அவனின் அலைபேசி ஒலியெழுப்ப, மனைவியின் உறக்கம் கலையாமல் அதை ஏற்றவன், “சொல்லு பாஸ்கி.” என்றான்.

 

“என்னத்தடா சொல்ல சொல்ற? ஊருக்கு கிளம்பிட்டியாமே… அதுவும் எங்க கிட்ட கூட சொல்லாம…” என்று பாஸ்கர் வினவ, “ஷ்… மெதுவா டா…” என்று மற்றவனை அடக்கிய மயூரனோ, “ஆமா பாஸ்கி, திடீர் பிளான்.” என்றான்.

 

“திடீர் பிளானா? எதுக்கு இப்போ அங்க? எத்தனை நாள் தங்கப் போற? துவாக்கு அங்க செட்டாகுமா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான் பாஸ்கர்.

 

“ரிலாக்ஸ் பாஸ்கி. எவ்ளோ நாளுன்னு எல்லாம் நான் பிளான் பண்ணல. அவளுக்கு… அதான் நான் இருக்கேன்ல, பார்த்துக்கலாம்.” என்று கவனமாக முதல் கேள்வியை தவிர்த்து விட்டு மயூரன் பதில் கூற, அதிலேயே அதற்கான பதிலை அறிந்து கொண்டான் பாஸ்கர்.

 

“அப்போ திரும்ப அவங்க பிசினஸுக்குள்ள போகப் போற… அதான?” என்று பாஸ்கர் வினவ, “பாஸ்கி…” என்று சிறு இடைவெளி விட்டவன், “ஆமாடா. ஆனா, இது நிரந்தரம் இல்ல. எனக்கு முடிக்க வேண்டிய சில விஷயங்கள் பாக்கி இருக்கு. அதுக்கப்பறம் அவங்க குடும்பத்துக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு இங்க வந்துடுவேன்.” என்று சாதாரணமாக கூறியவனுக்கும் தெரியும், அது அத்தனை எளிதல்ல என்பது.

 

“ஏதோ சொல்ற… ஆனா, பத்திரம் மச்சான். துவாவை கூட்டிட்டு போற… அங்க இருக்கவங்க எல்லாம் நார்மல் பீப்பிலே இல்ல.” என்ற பாஸ்கர், சிறு இடைவெளி விட்டு, “கேட்க கஷ்டமா இருந்தாலும், அது தான் உண்மை.” என்றான்.

 

“புரியுது பாஸ்கி. நான் பார்த்துக்குறேன்.” என்ற மயூரன், “அப்பறம் கிஷோர் எங்க?” என்று பேச்சை மாற்ற, “அவன் வேலைக்கு போயிட்டான்.” என்று பதில் கொடுத்தான் பாஸ்கர்.

 

“ஓகே பாஸ்கி. அவனை இப்போ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். வேலை முடிஞ்சு வந்ததும், நாங்க ஊருக்கு கிளம்புன விஷயத்தை சொல்லிடு. அப்பறமே, நான் அவன் கிட்ட பேசிடுறேன்.” என்றபடி அழைப்பை துண்டித்த மயூரனுக்கு இப்போதே கண்களை கட்டுவது போலிருந்தது.

 

அவை எல்லாம் மடியினில் படுத்து துயில் கொண்டிருந்த அவனின் துவாரகையை பார்க்கும் வரை தான்!

 

“உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு குட்டிம்மா. அதே மேஜிக், அங்கேயும் எனக்கு துணையா இருக்கும்னு நம்புறேன். இருப்ப தான?” என்று முணுமுணுத்துக் கொண்டான், அவளிடம் பதிலை எதிர்பார்க்காதவனாக!

 

அந்த வாகனமோ, இருவரையும் சுமந்தபடி அவர்களின் இல்லத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. குட்டிம்மா சூப்பர்