பிரஷாந்திற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்த மைதிலிக்கு, அவன் நகர்வதை போல தெரியவில்லை என்றதும், அவனை அவளாகவே விலக்கியவள் “இந்த சோக கீதத்தை கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என்று முறைத்தாள்.
“நானே சோகமா இருக்கேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஹக்கி குடுத்து ஆறுதல் சொன்னா தான் என்னவாம், கஞ்சம்” என பிரஷாந்த் சிலுப்பிட,
“அடப்பாவி, அப்ப வேணும்னு தான் ஹக் பண்ணுனியா?” என வாயில் கை வைத்தாள்.
“அப்படி இல்ல. உன் தோள்ல சாஞ்சுகிகிட்டா மனசு லேசாகிடும்னு தோணுச்சு. அப்பறம்…” என்று இழுத்தவன், “சரி விடு வா கிளம்பலாம்” என்று மழுப்பி, “அப்பறம் என்ன சொல்லிடுங்க…” என்று புருவம் சுருக்கினாள்.
“ஒன்னும் இல்ல விடேன். சொன்னா இன்னும் கொஞ்சம் என்னை முறைப்ப” என உதட்டைச் சுளித்தான்.
“பரவாயில்லை சொல்லுங்க”
“சொல்லிடுவேன்”
“யோவ் சொல்லுயா” இப்போது மரியாதை மீண்டும் தேய்ந்ததில் அவனுக்கு புன்முறுவல் பூத்தது.
“அது லைட்டா உன் தோள்ல சாஞ்சுட்டு விலகிடலாம்னு தான் நினைச்சேன். பட் உன் வாசம் என்னை இழுத்துடுச்சா அதான் நகர முடியல. விட்டுருந்தா அங்கேயே செட்டில் ஆகி இருப்பேன். நீ லக்ஸ் சோப் தான யூஸ் பண்ற. அது இவ்ளோ வாசமா இருக்குமா என்ன?” யோசிக்கும் தொனியில் குறும்பு கொப்பளிக்க கேட்டதில், மைதிலியின் கை ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துப் போனது.
தான் சிவக்கிறோமெனப் புரிந்து பெருவிரலை நிலத்தில் அழுத்தி தன்னை அடக்கியவளுக்கு தன் மீதே பெருங்கோபம் எழுந்தது.
‘நான் என்ன அவ்ளோ வீக்கா? லேசா உருகிப் பேசுனாலும் இப்படி வெட்கங்கெட்டுப் போய் சிலிர்க்குறது கேவலமா இல்ல.’ என தன்னைத் தானே நிந்தித்துக்கொண்டவளுக்கு, தேவையற்று ரகுவின் வாசகமும் காதில் எதிரொலித்தது.
‘அவ்ளோ கஷ்டமா இருந்தா ரெட்லைட் ஏரியாவுக்குப் போய் முந்தானையைக் காட்டு…’ சுருக்கென தைத்த வாசகத்தை விட்டு வெளியில் வர இயலாதவளாய், “வீட்டைப் பூட்டிட்டு வாங்க…” என்று விருட்டென வெளியில் சென்று விட்டாள்.
அவளது முக மாற்றத்தில் அவனது முகமும் சுண்டிப் போக, இருவரும் வில்லா கமியூனிட்டியை நோக்கி பயணம் செய்தனர். அங்கு திவ்யஸ்ரீயின் பர்த்டே பார்ட்டிக்காக அவளது வீடே கலர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததது.
இவர்களைக் கண்டதும் ஓடி வந்த மகிழினி, “அங்கிள்” என பிரஷாந்தைக் கட்டிக்கொள்ள, மைதிலி முறைத்தாள்.
அதில் சட்டென அவளிடம் நகன்று “அம்மா…” எனத் தூக்கச் சொல்ல, “நடிக்காத. உன் அங்கிள்கிட்டயே போ!” எனப் பொய்க்கோபம் காட்டினாள்.
ஆனாலும் கரங்கள் தானாக மகளைத் தூக்கிக் கொண்டது.
பிரஷாந்த் மகிழினியை கையில் வாங்கி கொண்டு, “என் பேபி என்னை தான் பர்ஸ்ட் தேடுவா…” என்று நாக்கை துருக்கி மைதிலியின் பொறாமையை இன்னும் தூண்டி விட, அவள் அவனது முதுகிலேயே அடித்தாள்.
தயானந்தன் இருவரையும் வரவேற்று பின் “என்னடா உன்னை அடிச்சுப் பேசுற அளவு முன்னேறிட்டாளா?” என நண்பனின் காதில் கிசுகிசுத்தான்.
“நீ செத்த வாயை மூடு. அவள் கேட்டா கண்டமேனிக்கு முறைப்பா…” என்று முணுமுணுத்து அடக்கியதில்,
“எப்படி இருந்தவன், இப்ப பொண்டாட்டிக்கு பயப்படுற மாதிரி விதி கொண்டு வந்துடுச்சு பார்த்தியா” என தயா வார, “அங்க மட்டும் என்ன வாழுதாம்… அங்க பாரு மிரு உன்னை முறைக்கிறா” என்றதும் தயா அட்டென்ஷன் மோடுக்கு வந்ததில் பிரஷாந்த் சத்தமாக சிரித்தான்.
மிருணாளினி தீக்ஷாவுடன் வெளியில் வந்து, “என்ன ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் பேசுறீங்க?” என்றபோதே தீக்ஷா பிரஷாந்திடம் தாவினாள்.
மைதிலி, “மாமாவும் அத்தையும் எங்க மிரு?” எனக் கேட்க, “தரமங்கலம்ல ஒரு விஷேஷம்னு அம்மா, அப்பா, அத்தை மாமா எல்லாரும் நேத்து நைட்டே கிளம்பிட்டாங்க மைதிலி” என்றாள்.
“தேவாவும் அமரும் எங்க?” என பிரஷாந்த் கேட்டதில்,
தயானந்தன் “அதை ஏன் கேட்குற… என் ட்வின்னு அவள் ஆளோட ஹனிமூன் போறாளாம் இன்னைக்கு ஈவ்னிங். அதுக்கு அவள் பண்ற அலப்பறை தாங்கல. காலைல இருந்து பேக்கிங் போயிட்டு இருக்கு…” எனும் போதே, “என்னடா என்னை பத்தி கிசுகிசு” என்று கேட்டபடி உள்ளே வந்தாள் தேவஸ்மிதா.
“ஏதோ ஹனிமூனாமே” என நக்கலாகப் பார்த்த பிரஷாந்திடம், “எஸ் காண்டாமிருகம்… வீ ஆர் கோயிங் கூர்க் மேன்… கூர்க் ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு” என்று அவனைப் போலவே கலாய்த்தாள்.
அமர மகரந்தன் தான் அவள் தலையில் தட்டி, “அவனை ஏன் வம்புக்கு இழுக்குற” என்றிட,
“பின்ன என்ன, என்னமோ கல்கத்தாக்கு போறதுக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டி அவள் கூட ரொமான்ஸ் பண்ணப் போறது மாதிரி இவன் குடுத்த பில்டப்ப நீங்க பார்த்து இருக்கணுமே… அதான் பழிக்குப் பழி” என்று அழகு காட்ட, பிரஷாந்த் முறைத்தான் என்றால், மைதிலிக்கு தர்ம சங்கடம் ஆகி விட்டது.
எதற்காக செல்கிறோமென்று தெரிந்தும் தன்னுடன் விரும்பி கல்கத்தாவிற்கு பயணித்து இருக்கிறான் என்ற உண்மை சுட, உள்ளுக்குள் மீண்டும் ஒரு குறுகுறுப்பு.
தேவஸ்மிதா பிரஷாந்த்தின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு “அது இருக்கட்டும். நீ ஏன் டல்லா இருக்க. கண்ணு சிவந்து இருக்கு” என்று அவனை ஆராய, பிரஷாந்த் சமாளிக்கும் விதமாக, “இல்லையே… ஹீட்டுக்கு சிவந்து இருக்கும். அது சரி பார்ட்டின்னு சொன்னீங்க. எங்க ஒரு கேக்கை கூட காணோம்” என்று பேச்சை மாற்ற தேவஸ்மிதாவும் தயானந்தனும் அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர்.
தயா, “பச்சையா சமாளிக்காத…” என்றதில், மைதிலிக்கும் வியப்பு தான்.
அவன் ஒன்றும் சொல்லாமலேயே முகத்தை வைத்தே அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று கண்டுகொண்ட நண்பர்கள் கிடைப்பது வரம் தானே!
அதனால் தானோ என்னவோ இவன் மிகவும் ‘எமோஷனல் ஃப்ரீக்’காக இந்த வில்லாவுடன் பிணைந்து விட்டான் என்ற யோசனையில் இருந்த மைதிலியை பார்த்த அமர், “என்ன ஆச்சு மைதிலி. உங்க ரெண்டு பேருக்கும் பெர்சனல் பிராப்ளம் தவிர வேற எதுவும் பிரச்சனையா?” எனக் கணித்துக் கேட்டு விட, அவள் புருவம் உயர்த்தினாள்.
கூடவே பிரஷாந்தையும் பார்க்க, அவன் சொல்ல வேண்டாமென கண்ணை அசைத்ததை நொடியில் உள்வாங்கிக்கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் அமர். நான் வேற ஏதோ கேஸ் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். ஆமா, திவா அண்ணி எங்க… நான் போய் பாக்குறேன்” என்று எழுந்து கொள்ள,
“அடடா புருஷன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்ட பொண்டாட்டியா மாறிட்டு வர்ற போல” எனக் கிண்டலடித்தான் அமர்.
“அதெல்லாம் இல்ல” என வீம்பாக முறைத்த மைதிலியைக் கண்டு எழுந்த சிரிப்புடன், “மேனேஜ் பண்ண முடியாத பிரச்சனை வந்தா வாயைத் திறந்து சொல்லுங்க ரெண்டு பேரும். வி ஆர் ஆல்வேஸ் வித் யூ கைஸ்” என்றதற்கும் இருவரிடமும் கடும் அமைதி.
தேவாவிற்கு அவர்கள் அமைதியே சற்று பயத்தைக் கொடுக்க, “அமர் ஏதோ பெரிய ப்ராப்ளம் போல இருக்கு. நம்ம ட்ரிப்பை கேன்சல் பண்ணிடலாம்” என்றதில் அமரும் தலையசைத்தான்.
பிரஷாந்த் தான். “லூசா நீ. இவ்ளோ ஆசையா ரெடி பண்ணிட்டு கேன்சல் பண்றேன்னு சொல்ற. இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நீங்க முதல்ல போயிட்டு வாங்க. அப்படி பிரச்சனை வந்தா உங்ககிட்ட வராம வேற யார்கிட்ட போகப் போறோம். எங்க ரெண்டு பேருக்கும் உங்களைத் தவிர வேற யாரும் கிடையாது” என்று முறைக்க,
மைதிலியும், “அமர் அவள் சொல்றான்னு நீயும் தலையை ஆட்டாத. அப்படி ஒன்னும் தலைமுழுகுற பிரச்சனை ஒன்னும் வந்துடாது. வந்தாலும் நாங்க பாத்துப்போம்…” என்று தீர்மானமாகக் கூறினாள்.
‘நாங்க பாத்துக்குவோம்’ என்ற அவளது உறுதியில் சற்றே திருப்தியுற்றான்.
பின் பிறந்தநாள் கொண்டாட்டம் நன்முறையில் நடைபெற, பிரஷாந்த் அவனது வில்லாவிற்கு சென்றான்.
வாசலிலேயே கொரியர் இருப்பதைப் பார்த்து பிரித்தவனை ஏமாற்றாமல் வக்கீல் நோட்டீஸ் இருந்தது.
அந்த முகவரிக்கும் அனுப்பி உள்ளனர் எனப் புரிந்து அவனுக்கு ஆற்றாமை தாளவில்லை.
சரியாக அப்போது அமரும் வந்து விட்டவன், “என்ன அது” எனப் பின் நின்று கேட்க, சட்டென திரும்பி அந்த கொரியரை மறைத்து விட்ட பிரஷாந்த், “ஒன்னும் இல்ல. ஜஸ்ட் கொரியர். அமேசான்ல ஆர்டர் பண்ணிருந்தேன்” என்று விட்டு விறுவிறுவென வில்லாவினுள் சென்று விட, அமர் தான் அவனை யோசனையுடன் பார்த்தான்.
பின் மாலை நேரமே, அமரும் தேவாவும் தேனிலவிற்காக கிளம்பி விட,
இங்கு தீக்ஷாவிற்கு விளையாட்டுக்கு காட்டிக் கொண்டிருந்த மைதிலி மிருணாளினியின் அறையில் அமர்ந்திருந்தாள். திவ்யஸ்ரீ மகேஷ் பிரஷாந்த் தயானந்தன் நால்வரும் குழந்தைகளுடன் கீழே அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
மிருணாளினி துணி மடித்துக் கொண்டே, “வேலைக்கும் போயிட்டு வீட்டையும் மேனேஜ் பண்ண முடியுதா மைதிலி. முதல்லயாவது அம்மா இருந்தாங்க…” எனக் கேட்க,
அதற்கு இயல்பாகத் தலையாட்டியவள், “ம்ம் பிரஷாந்த் இருக்காருல்ல. அவரே முக்கால்வாசி வேலை பாத்துடுவாரு” என்று விட்டு தீக்ஷாவிடம் “பட்டுக்குட்டி சித்தி பாருங்க…” எனச் சொடுக்கிட, மிருணாளினி நமுட்டு நகை புரிந்தாள்.
“ஓஹோ… மகிக்குட்டியை ஸ்கூல்ல டிராப் பண்ண பிக் அப் பண்ண சிரமமா இருக்கும்ல… முதல்ல அம்மா பார்த்துப்பாங்க அதை” என்று போட்டு வாங்க,
அதில் நிமிர்ந்த மைதிலி, “மேடம் இப்போ அங்கிள் புராணம் தான் மிரு. அவரே ஸ்கூல்ல டிராப் பண்ணிடுவாரு. ஸ்கூல் விடுற டைம்ல எவ்ளோ வேலை இருந்தாலும் அவளை பிக்கப் பண்ண ரெண்டு பேருமே போயிடுவோம். அவளை இங்க விட்டுட்டு அகைன் வேலையைப் பார்க்க போறதால கொஞ்சம் சமாளிக்க முடியுது. எனக்கு கோர்ட்டும் என் ஆபீஸும் ஓரளவு பக்கம் தான். ஆனா பிரஷாந்த்துக்கு தான் ஆபிஸ் ரொம்ப டிஸ்டன்ஸ். ஆனாலும் வந்துடுவாரு கரெக்ட் டைம்க்கு” என்றபோதே அவனது கேரியரை இப்படி ஸ்பாயில் செய்து கொண்டானே எந்த கவலையும் எழுந்தது.
அவளைக் கிண்டல் செய்ய வாய் வந்தாலும் முயன்று அடக்கிக்கொண்டாள் மிருணாளினி. அவளே அறியாமல், அவனுடன் குடும்ப அமைப்பில் இணைந்து விட்டவளை எதையும் பேசி ஈகோவைக் கிளறக் கூடாதென்பதில் அலெர்ட்டாக இருந்த மிருணாளினி, “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?” எனப் பீடிகையுடன் கேட்டாள்.
“என்ன?”
“அதில்ல, இப்ப நீயும் அண்ணாவும் அழகா பேமிலியை ரன் பண்றீங்க. அதை இங்க இருந்தே பண்ணலாம்ல. அண்ணாவுக்கும் ஆபிஸ் இங்க இருந்து கொஞ்சம் பக்கம். உனக்கும் கோர்ட்டும் ஆபிஸும் இங்க இருந்து அவ்ளோ தூரம் கிடையாது தான. மகிக்கு மட்டும் பக்கத்துலேயே வேற ஸ்கூல்ல மாத்திட்டா, அண்ணா மகியை பிக் அப் பண்ணவும் இங்க விடவும் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகும். அவங்க இருக்குறதுக்காக வாங்குன வீட்டுல கொஞ்ச நாள் கூட இருக்கல. அங்கேயும் வாடகை குடுக்கணும் வீண் செலவும் தான…” என்றிட, மைதிலிக்கும் அதே எண்ணம் தான்.
பிரஷாந்திற்கு வார நாள் முழுக்க அலைச்சல் அதிகமாகவே இருக்கும். காரை ஓட்டி ஓட்டி கழுத்து வலியில் அவ்வப்பொழுது கழுத்தைப் பிடித்துக் கொள்வான். அப்படியும் ஒரு நாள் கூட மகிழினியிடமோ அவளிடமோ முகம் சுளித்தது கிடையாது. அவனுக்காக நான் ஏன் வர வேண்டும் என்ற பிடிவாதம் மெல்லத் தலை தூக்கினாலும் கூட, தனக்காக அவன் வேலையிலும் பெரிய பின்னடைவைக் கண்டு தன்னுடன் இருக்கிறான் அவனுக்காக இதைக் கூட செய்ய வேண்டாமா என ஒரு மனம் அவனுக்காக வாதிட்டது.
நானா செய்ய சொன்னேன்? என்ற கேள்வியை மனசாட்சி துளைத்தாலும், அதற்கு பதில் அவளிடம் இல்லை.
வெகு நேர அமைதிக்குப் பின், “நானும் அதை யோசிச்சேன் மிரு. இங்க வர பாக்குறேன்” என்று விட்டதில், மிருணாளினியின் முகம் மலர்ந்தது.
“சூப்பர் மைதிலி… இப்ப தான் நீ சரியா யோசிக்கிற” என்று மகிழ,
“ஓ! உன் அண்ணனுக்காக யோசிச்சா சரியா யோசிக்கிறேன்னு அர்த்தம். இதே, நான் எனக்காக யோசிச்சா அது தப்பா?” புருவம் உயர்த்தி வினவியதில் பதறி விட்டாள்.
“அய்யயோ நான் அப்படி எல்லாம் சொல்லல மைதிலி. உங்க ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணம் ஏதோ ஒரு விதத்துல நிம்மதியை தரணும் அவ்ளோ தான்” என்றவள் வெளியில் செல்லப் போக, மைதிலி தடுத்தாள்.
“மிரு உன்கிட்ட ஒன்னு கேட்கணும். ஆனா கேட்குறது சரியான்னு தெரியல. கேட்குற சூழ்நிலைல நான் இருக்கேன்…” என்று அவளும் பீடிகையுடன் ஆரம்பிக்க, மிருணாளினி புருவம் சுருக்கினாள்.
ஒரு கண்ணை மூடித் திறந்த மைதிலி, “எனக்குத் தெரியும் நான் கேக்கறது உன்னை ஹர்ட் பண்ணும்னு… சாரி ஃபார் தட்! அகரன் வச்சு இருந்த ப்ராப்பர்டீஸ் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்றதும் மிருணாளினியின் முகம் சுண்டியது.
“இப்ப எதுக்கு அது?”
“காரணமா தான் கேக்குறேன் மிரு! ப்ளீஸ் டோன்ட் ஹெசிடேட்” என்றதில், குழம்பிய முகத்துடன் “எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியல மைதிலி” என்றாள்.
“அகரனோட மேரேஜ்க்கு பிரஷாந்த் ஹைதராபாத்ல ப்ராப்பர்டி வாங்கிக் குடுத்து இருக்காரு மிரு… அதை பத்தி ஏதாவது தெரிஞ்சா யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று மைதிலி துருவ, “ஜஸ்ட் ஸ்டாப் திஸ் மைதிலி. எல்லாம் முடிஞ்சு போனதுக்கு அப்பறம் ஏன் எப்படி பழசை கிளறுற” என்றவளுக்கு காரணமின்றி கண்ணீரும் சுரந்தது.
“எதுவும் முடிஞ்சு போகல மிரு…” கண்டிப்பாக குரலை உயரத்திய மைதிலி, காலையில் நடந்த விஷயங்களை எல்லாம் கூற, மிருணாளினி அதிர்ந்தாள்.
“அடக்கடவுளே! வெளில வந்தும் நிம்மதியா இருக்க விட மாட்டுறாங்களே… சம்பாரிச்சத எல்லாம் அவங்ககிட்ட குடுத்துட்டு அண்ணா நடுரோட்டுலயா நிக்க முடியும்” என்ற மிருணாவிற்கு கோபம் கொப்பளித்தது.
“அதனால தான் உங்கிட்ட கேட்குறேன் மிரு. அவரோட அப்பா, அண்ணா சம்பாரிச்ச சொத்து எல்லாம் வேணாம். ஆனா, இவர் உழைச்சத எதுக்கு தகுதியில்லாதவங்களுக்கு விட்டுக்கொடுக்கணும். இந்த விஷயத்துல நீ தான் ஹெல்ப் பண்ண முடியும். நீ டைரக்டா இதுல இன்வால்வ் ஆகலைன்னாலும் பரவாயில்ல. எனக்கு கொஞ்சம் டீடெய்ல்ஸ் மட்டும் குடு போதும்” என்றாள் அவளது இயல்பை விட்டு கெஞ்சலாக.
“என்ன மைதிலி… இதுனால அண்ணாவுக்குப் பிரச்சனை வருதுன்னா நான் டைரக்டாவே என்ன ஹெல்ப் வேணாலும் பண்றேன்” என தனது வருத்தங்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு அவனுக்காக யோசித்தவளைக் கண்டு மெல்ல புன்னகைத்தாள்.
சில நிமிட யோசனைக்குப் பிறகு, “நீ சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது மைதிலி. பிரஷாந்த் அண்ணா, எங்க கல்யாணத்துக்கு வரல. எங்க எங்கேஜ்மெண்ட்க்கு தான் வந்துருந்தாங்க. அப்பவே கல்யாண கிப்ட்னு அகரன்க்கு லேண்ட் பத்திரத்தை ப்ரசண்ட் பண்ணுனாங்க. அதுக்கு கூட அகரன், ‘வெறும் இடம் வாங்கி குடுத்து என்ன செய்ய, யார் வீடு கட்டித் தருவா’ன்னு கேட்டான். அதுக்கு பிரஷாந்த் அண்ணா, ‘நானே கட்டித் தரேன்’னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, கல்யாணத்துக்கு அப்பறம் நானும் அதை பத்தி கேட்கல. அவனும் சொல்லல!” என்றாள்.
“இப்போ அது அகரன் பேர்ல தான இருக்கும்?” சிந்தனையுடன் மைதிலி கேட்க, “இருக்கலாம் மைதிலி. அதை வச்சு என்ன செய்ய” எனக் கேட்டாள் புரியாமல்.
“அவன் பேர்ல இருக்குன்னா ஆப்வியஸ்லி அது உனக்கு சொந்தமான ப்ராபர்ட்டி தான. அண்ட் மோர் ஓவர் அவங்க செஞ்ச தப்புக்கு மான நஷ்ட வழக்கு அவங்க மேல இருக்கு. உனக்கும் குழந்தைக்குமான ஜீவானம்சத்தை அவங்க குடுத்து தான் ஆகணும். ஆனா அமர் அதை வேணாம்னு சொல்லிட்டான். இப்போ அதை வாங்கணும்” என்றிட, மிருணாளினிக்கு இந்தப் பேச்சு ஒப்பவே இல்லை.
தீக்ஷா தயாவின் குழந்தையாகவே வளர்கிறாள். அவர்கள் கொடுக்கும் காசை வாங்கி தானம் செய்யக் கூட அவளுக்கு முற்றிலும் விருப்பமில்லை. அதில் அவள் முகம் கசங்கி விட,
“மைதிலி!” என்ற பிரஷாந்தின் கண்டனக்குரல் வாசலில் கேட்டது.
வேகமாக உள்ளே வந்தவன், மிருவை சங்கடத்துடன் பார்த்து விட்டு, “உனக்கு என்ன பைத்தியமா என்ன பேசிட்டு இருக்க. வா போலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க,
“நான் பேச வேண்டியதை தான் பேசிட்டு இருக்கேன் பிரஷாந்த்…” என்றவளை தரதரவென வெளியில் இழுத்துச் சென்றான்.
மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் பார்க்க, அவளை காருக்கு அருகில் இழுத்துச் சென்ற பிரஷாந்த், “அறிவிருக்கா மைதிலி. என்ன பேசிட்டு இருக்க அவள்கிட்ட போய்…” என்று கோபத்தில் கண் சிவக்க கத்தினான்.
முதன்முறை அவனது கோபத்தைக் காண்பதாலோ என்னவோ ஒரு கணம் பேச்சிழந்து நின்றவள், “உங்களுக்கு இந்த வில்லா வேணுமா வேணாமா?” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“ஒன்னும் புடுங்க தேவையில்ல. போய் கார்ல உட்காரு கிளம்பலாம். இன்னொரு தடவை அவள்கிட்ட கண்டதை பேசுனது தெரிஞ்சுது அறைஞ்சு பல்லைக் கழட்டிடுவேன்” என சின மிகுதியில் அதட்டிட,
கோபம் கொழுந்து விட்டு எரிவதற்கு பதிலாக, கண்கள் கரித்தது அவளுக்கு.
“எனக்கு என்ன தேவை… நீ எப்டியோ போய் தொலைன்னு விட்டுட்டு என் வேலையைப் பார்த்துருக்கணும். யூ ஆர் ஜஸ்ட் ஆன் எமோஷனல் ஃப்ரீக் பிரஷாந்த். உன் எமோஷனலை வச்சு ஒன்னும் புடுங்க முடியாது. இப்ப அவளைக் கஷ்டப்படுத்த எதுவும் கேட்க வேணாம், எதுவுமே பண்ண வேணாம்…
ஆனா உன் அப்பா அம்மாவுக்கு நீ தூக்கி குடுத்துருக்குற காசையும் சொத்தையும் வச்சு, உன் தலைலயும் மிளகா அரைச்சு, சட்டத்தையும் விலைக்கு வாங்கி அவளை இன்னும் கொஞ்சம் அசிங்கப்படுத்துவாங்க. அதை உட்காந்து வேடிக்கை பாரு. நாளைக்கு தீக்ஷாவயும் அவங்க பேத்தின்னு உரிமை கொண்டாடிட்டு வந்தாலும் வருவாங்க. சீனியர் சிட்டிசன் அவங்க… அதுங்க விஷம்னு நம்ம நிரூபிக்கிறது அவ்ளோ ஈஸி இல்ல. அவ்ளோ ஆதாரம் இருந்தே வெளில சுத்திட்டு இருக்காங்க. ஸ்லோ பாய்சன் மாதிரி உங்களை கொட்டிக்கிட்டே இருப்பாங்க. வாங்கிக்கிட்டே இருங்க… எனக்கு என்ன வந்துச்சு. உனக்காக நான் ஏன் யோசிக்கணும். கெட் லாஸ்ட்…” என மூச்சு வாங்கிப் பேசியவளின் குரல் அனல் தெறிப்பதற்கு பதிலாக கம்மியது.
ஏனென்று தெரியாமல் எழுந்த அழுகையை அடக்கியதில், வார்த்தைகளும் நடுங்கியது.
அதில் அவனைப் பாராமல், வேக நடையுடன் வில்லா கமியூனிட்டியை விட்டே வெளியில் சென்று விட்டாள்.
அவள் பேசியதைக் கேட்ட இரு ஜோடிகளும் திகைத்து நின்றது. பிரஷாந்தும் தான்.
“ஐயோ!” எனத் தலையில் கை வைத்தவன், அவள் பின்னே திடுதிடுவென ஓடினான்.
அதற்குள் அவள் அந்த தெருவையே கடந்திருக்க, “மைலி மைலி நில்லு மைலி…” என்றவனின் அழைப்பு காதில் கேட்டும் கேளாதது போல நடந்தவள், “ஒழுங்கா போய்டு மைலி கைலின்னு பின்னாடி வந்த மனுஷியாவே இருக்க மாட்டேன்!” என்று திரும்பி குதறி விட்டு மீண்டும் நடந்தாள்.
“சாரி மைலி… தப்பு தான்… மைலி நில்லேன்…” என அவளைத் தாண்டி வந்தவன், அவளது வேகத்திற்கு ஈடு கொடுத்து ரிவர்ஸிலேயே நடந்தான்.
“ப்ச் வழியை விடு பிரஷாந்த்!” விழிகளை உருட்டி அவள் முறைக்க,
“முடியாது. நடந்தே எங்க பாத யாத்திரை போற. வாடி என் செல்லம்ல…” என்று கெஞ்ச,
“ஒரு டேஷும் இல்ல. நீ மகிக்கு அப்பான்ற பொசிஷன்ல இருக்க அவ்ளோ தான். மத்தபடி எனக்கு என்ன ஆனாலும் உனக்கு என்ன ஆனாலும் ரெண்டு பேரும் பெருசா எடுக்க தேவை இல்ல” என்று தீர்மானமாக கூற,
“ஹே! என்னடி எல்லாரும் ரிலேஷன்ஷிப்ல முன்னோக்கி போனா நீ பின்னோக்கி போற. மைலி மைலி நான் உன் பாவப்பட்ட தார்னி டெவில் தான என்னை மன்னிக்க மாட்டியா. நீ காரணம் இல்லாம அதெல்லாம் கேட்க மாட்டன்னு தெரியும். ஆனா எனக்காக செய்றேன்னு அவள் கஷ்டப்படுறதை பார்க்க முடியாதுனு தான் உன்ன திட்டினேன்டி. அப்பறம் தான் நீ சொல்ற வியூ புரிஞ்சுது. பட்டூ… பட்டூ” இவன் பேசியதை காதிலேயே வாங்காமல் தூரத்தில் நின்ற ஆட்டோவை அழைத்தாள்.
பின் , “டேய் தார்னி டெவில் பட்டூ குட்டூன்னு உளறிட்டு இருந்த செம்ம காண்டாகிடுவேன்…” என விரல் நீட்டி எச்சரிக்க, அதனை இலாவகமாகப் பிடித்தவன், அவன் நெஞ்சில் வைத்துக்கொண்டு
“இந்த அடியேனை மன்னித்து விடு மைலி. ப்ளீஸ்டி… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!” என்று ஒரு கையால் அவள் கன்னம் பற்றி கொஞ்ச, அதனை கோபத்துடன் தள்ளி விட்டு நகர்ந்து நின்றாள்.
ஆனால், அவன் பின்னால் வந்த போதே கோபம் எங்கோ விடைபெற்றுச் சென்று விட்டது. ஆனாலும் அந்த தாக்கத்தை விட அவளுக்கு பிரியமில்லை. அவனுக்காக செய்வதாக எண்ணிக்கொள்ள இடம் கொடுக்க வேண்டாமென எவ்வளவோ முயற்சித்தும், அவனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சல் அவளுக்கு ஏற்கனவே வந்து விட்டது. அதனை முழுதாய் உணரும் நாளும் வெகு அருகிலேயே இருக்கிறதென்று புரியாமல் உதட்டைச் சுளித்து நொடித்தாள்.
அதற்குள் ஆட்டோ அவர்கள் அருகில் வந்திருக்க, “எங்கம்மா போகணும்” எனக் கேட்ட ஆட்டோ ஓட்டுனரிடம், பிரஷாந்த்தே “அண்ணே அவள் தான் கூப்ட்டான்னா நீங்களும் காக்கியை மாட்டிட்டு வந்துட்டீங்க. புருஷன் குத்துக்கல்லு மாதிரி இருக்கேன் பக்கத்துல. நான் தூக்கிட்டு கூட போவேன். நீங்க போங்கண்ணே…” என்று அவரை அனுப்ப முயல,
“பேமாளி வந்த சவாரியையும் கெடுத்து விடுது” என்று திட்டி விட்டு ஆட்டோ நகர்ந்தது.
“எதே பேமாளியா?” என பேந்த பேந்த விழித்த பிரஷாந்தைக் கண்டு இப்போது புன்னகையில் உதடு துடித்தது. இதழ்களை மடித்து சிரிப்பை அடக்கியவளிடம், “நடுரோட்டுல கண்டவன் எல்லாம் என்னை திட்டிட்டுப் போறான் மைலி. கொஞ்சம் கருணை கேட்டேன். சாரிடி” என்று காதைப் பிடித்து மன்னிப்பு வேண்ட,
“ம்ம்…” என்றவள், “நான் ஒன்னும் உனக்காக எதுவும் பண்ணல. இது எனக்கு பத்தோட பதினொன்னா ஒரு கேஸ் அவ்ளோ தான். உன்னை க்ளையண்ட்டா நினைச்சு தான் மிருக்கிட்ட பேசுனேன். எனக்கு பீஸ் வந்துருக்கணும்…” என்று கட் அண்ட் ரைட்டாக பேசிட,
கண்ணோரம் சுருங்கப் புன்னகைத்தவன், “சரிங்க லாயர் மேடம். பீஸ் கண்டிப்பா கொடுத்துடுவேன். இப்ப அட்வான்ஸ் எதுவும் வேணுமா?” என்று பேண்ட் பாக்கெட்டினுள் கையை விட்டான்.
“குடு…” என்று அவள் கையை நீட்டி கறாராக பீஸ் கேட்க, குறும்பு நகை வீசியவன், அந்த கையைப் பிடித்து அழுந்த முத்தமிட்டு, “இது ஸ்பெஷல் பீஸ் பார் மை ஸ்பெஷல் லாயர் மைலி…” என்று கண் சிமிட்டிட, மைதிலி அவன் கொடுத்த முத்தத்தில் உறைந்து நின்றாள்.
உயிர் வளரும்
மேகா