2,028 views

 

தரணீஸ்வரனை பகல் பொழுதில் அடக்கும் வித்தையை கற்றுக் கொண்டாள் அகல்யா. இப்பொழுது எல்லாம் தனியாக அலுவலகம் அனுப்பி வைக்கிறாள். அவனால் தாக்குப் பிடிக்க முடியாத நேரம் வரும்பொழுது ஜீபூம்பாவோடு நிற்கிறாள் எதிரில். கடந்த மூன்று நாட்களாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தம்பியின் பாசத்தில் மறக்க ஆரம்பித்தான் அனைத்தையும்.

மாலை வேளை மட்டும்தான் அவனை கட்டி போடுவது கடினமாக இருந்தது. அதற்கும் இன்று ஒரு வழியை கண்டுபிடித்து விட்டாள். அறைக்குள் சுருண்டு படித்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். அவன் செவியில் ஓயாமல் மனைவியின் குரலும் செல்லப்பிராணியின் குரலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த மூன்று நாட்களில் நன்றாக பழகி விட்டார்கள் இருவரும்.

“அந்த மண்ண அங்க கொட்டாதடா குரங்கு பயலே!” என்று வாயில்லா ஜீவனை திட்ட, அதுவோ பாவமாக முகத்தை வைத்தது.

அந்த பாவனையில் திட்டிக் கொண்டிருந்தவள் சிரித்து விட, ” சினிமால நடிக்க வைக்கலாம் நீ பண்ற ஆக்டிங்க்கு. மண்ண தூக்கிட்டு வாடான்னு சொன்னா பாதி வழியில கொட்டி ஒன்னுக்கு ரெண்டு வேலையா வைக்கிற. போ ஒழுங்கா எடுத்துட்டு வா.” என்று வாயில் கூடையை திணிக்க,

‘இப்படி அப்பாவியா  இவகிட்ட சிக்கிட்டோமே!’ என்ற மனநிலையில் மெதுவாக நடந்து சென்றது ஜீபூம்பா.

அதன் நடையை பார்த்தவள் சிரித்துக்கொண்டே, “வேகமா வரல அங்க இருக்க மொத்த மண்ணையும் உன்ன தான் தூக்கிட்டு வர வைப்பேன்.” என்றதும் வாலை ஆட்டிக்கொண்டு வேகமாக ஓடியது.

“அந்த குழாயை கொஞ்சம் எடுத்துட்டு வா.”

“அந்த கோடாரி எடுத்துட்டு வா.”

“அந்த செடி எல்லாம் கொஞ்சம் தள்ளிவிடு.”

“டேய்! அந்தச் செடிய இல்லடா இந்த செடிய.”

“பூந்தோட்டிய தூக்கிட்டு வா.” என்று  பாவம் அதைப் போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் அகல்யா. அடுத்தடுத்து அவள்  வேலைகளை கட்டளையிட்டு கொண்டிருக்க,

“லொள்!” என விடாமல் கத்திக்கொண்டு அங்கிருக்கும் மணல், செடி அத்தனையும் கலைத்துப் போட்டு  பொங்கி விட்டது ஜீபூம்பா. அப்போது கூட அகல்யா அடங்குவதாக தெரியவில்லை.

“கொல்ல போறேன் பாரு உன்ன. கொண்டு போய் பழைய வீட்ல விட போறேன்.” என்றதும் அவள் அருகில் வந்தது அவளை விட உயரமாக தலையை தூக்கி பல்லை வெளிகாட்டி “உர்ர்ர்ர்” என்று கண்களை விரித்தது.

அதில் பயந்தவள் இப்பொழுது பாவமாக முகத்தை வைத்து அதன் மனதை மாற்ற முயற்சித்தாள். ஜீபூம்பா கோபம் குறைவதாக இல்லை. இவர்களின் அலப்பறைகளை பார்த்துக் கொண்டிருந்தவன் சத்தமாக சிரித்தான். உடனே ஜீபூம்பா ஓடியது அண்ணனிடம். தன்னிடம் வந்து செல்ல பிராணியை தடவி கொடுக்க, புகார் வாசித்தது.

“என்னடா உன்ன கொடுமை பண்றாளா? வாடா ரெண்டு பேரும் என்னன்னு கேட்போம்.” அதனோடு கீழ் இறங்கினான்.

தம்பியின் புகாரை அண்ணன் விசாரிப்பதற்குள், “இங்க பாருங்க இந்த ஜீபூம்பாவ. நான் வேலை சொன்னா செய்ய மாட்டேங்கிறான். என் பேச்சை கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கிறான். அன்னைக்கு நீங்க என்ன சொன்னீங்க? நான் என்ன சொன்னாலும் செய்யணும்னு சொன்னீங்களா இல்லையா. இவன கொண்டு போய் அங்கயே விட்டுட்டு வாங்க…போங்க.” என்றதும் ஒரு ஆட்டம் போட்டு விட்டான் ஜீபூம்பா.

கணவனின் முதுகை தொற்றிக் கொண்டவள் விடாமல் கத்திக் கொண்டிருக்க, அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு முரண்டு பிடித்தது ஜீபூம்பா. இருவரையும் அடக்காமல் அவன் சிரித்துக் கொண்டிருக்க, “டேய் குடிகார! காப்பாத்துடா…என்னை.” என மிரட்டினாள்.

அதில் சிரிப்பை விட்டு முறைப்பை எடுத்துக் கொண்டவன், “கடிடா ஜீபூம்பா இவளை.” என ஏத்தி விட்டான் செல்ல பிராணியை.

உடனே அது பாய்ந்து கொண்டு கடிக்க செல்ல, முன்னாள் வந்து கழுத்தை கட்டிக் கொண்டவள், “என்னங்க விட சொல்லுங்க அவனை. கடிச்சிட போறான் பயமா இருக்கு .” என்று கெஞ்சினாள்.

ஆடையைப் பிடித்து இழுக்கும் மனைவியை தன்னோடு சேர்த்துக் கொண்டவன், “யாரடி குடிகாரன்னு சொன்ன? என் தம்பி உன் வாய கடிச்சு கொதராம விடமாட்டேன்.” என்றான்.

அந்த பயத்திலும் அவனை முறைத்தவள், “ரெண்டு பேரையும் அடி வெளுக்க போறேன்.” என்றாள்.

“அதுக்கு உன் கை இருக்கணுமே. என் தம்பி கடிச்சு கொத்து பரோட்டா போட போறேன்.”

“விட சொல்லுங்க தரணி ப்ளீஸ்.”

“இந்த மாதிரி மரியாதையா கெஞ்சு.”

“எனக்கு நேரம் வரட்டும் இதுக்கெல்லாம் சேர்த்து பதில் கொடுக்கிறேன் பாருங்க.” என்றவளை ‘அப்படியா!’ என்பது போல் பார்த்தவன், “ஜீபூம்பா இன்னுமா கடிக்காம இருக்க?” மீண்டும் உசுப்பி விட்டான்.

வேகமாக ஆடையை பிடித்து இழுக்க ஆரம்பித்தது செல்லப்பிராணி. முந்தானை லேசாக கிழிய ஆரம்பித்தது அதன் பலத்தில். தோள்பட்டையில் கை வைத்துக் கொண்டு அவள் கெஞ்சி கொண்டிருக்க, தன்னோடு சேர்த்திருந்தவன் அவள் கெஞ்சலை ரசித்துக் கொண்டிருந்தான்.

இருவரின் விளையாட்டு புரியாமல் தீவிரமாக முந்தானையின் முனையை கிழித்தது. அதில் உண்மையாகவே அவளுக்கு பயம் வந்துவிட, “இப்ப மட்டும் நீங்க நிறுத்த சொல்லல…உங்களை விட்டு எங்கயாது ஓடிப் போயிடுவேன்.” என்ற நொடி, “ஏய்!” அவனின் சத்தத்தில் ஜீபூம்பா விலகி நின்றது.

காதின் அருகில் கேட்ட சத்தத்தில் அவள் மிரண்டு கணவன் முகத்தை பார்க்க, அவனது பார்வை பதப்படுத்தப்படும் தார் போல் சூடாக இருந்தது. வெகு நாட்கள் கழித்து அவனின் பார்வையை இப்படி காண்கிறாள். ஒரு மனிதன் கண்ணால் மட்டும் இவ்வளவு கோபத்தை காட்ட முடியுமா என எண்ணும் அளவிற்கு அவன் கண்கள் பிரதிபலித்தது கோபத்தை. இடுப்பை பதமாக பிடித்திருந்த கைகள் விழிகளுக்கு இணையாக வதைத்தது.

இருவரையும் ஜீபூம்பா புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, கணவனின் முகத்தில் தெரியும் கோபத்தில் பதட்டம் அதிகமானது அகல்யாவிற்கு.  மனதிற்குள் திக்கென்று ஓசை கேட்டுக் கொண்டே இருக்க, “த..தரணி” என்றாள்.

அடுத்த அரை நொடியில் விழுந்தாள் நிலத்தில். வேக நடை போட்டு அவன் வீட்டிற்குள் செல்ல, ஜீபூம்பாவும் பின் தொடர்ந்தது. தன் செல்லப்பிராணிக்கும் கோபத்தை காட்டினான் அறை கதவை பெரும் சத்தத்தோடு சாத்தி.  பாவம் அது அங்கேயே அமர்ந்துக் கொள்ள, கதவை தட்டினாள் அகல்யா.

தொண்டை வற்றும் அளவிற்கு  அழைத்துப் பார்த்து விட்டாள் அவனை. அவள் அழைப்பதை பார்த்து ஜீபூம்பா கூட குரைக்க, கதவை திறக்காமல் வீம்பு பிடித்துக் கொண்டிருந்தான். உள்ளே என்ன நிலைமையில் இருக்கிறானோ என்று தான் அவளின் எண்ணங்கள் அதிகமாக கவலை கொண்டது. உள்ளே செல்ல வேறு வழி இல்லாததால் கதவை மட்டுமே தட்டிக் கொண்டிருந்தாள்.

அழைத்தும், தட்டியும் அவள் கையும் வாயும் ஓய்ந்து போனது. உள்ளே இருந்தவனின் மனம் இறங்கவில்லை. மாலை வேளை ஆரம்பித்த சம்பவம் இரவு நேரம் வரை தொடர்ந்து கொண்டிருந்தது. பாவம் ஜீபூம்பா பசியோடு படுத்திருக்க, அதற்கு உணவை கொடுத்தாள்.

ஐந்தறிவு ஜீவனுக்கா புரியாது நடப்பவை! சாப்பிட மறுத்து படுத்துக்கொண்டது. அதன் தலையை வருடிவிட்டவள், “நீ சரியா சாப்பிடாம இருக்கிறதால தான் தரணி கோவமா இருக்காங்க. ஒழுங்கா சாப்பிடலன்னா உன்கிட்ட பேச மாட்டாங்க.” என்றாள்.

அறை கதவை முகத்தால் தட்டி சத்தமிட்ட ஜீபூம்பா மொழி புரியவில்லை என்றாலும் புன்னகைத்தாள். சமத்தாக சாப்பிட்ட ஜீபூம்பா அப்படியே ஓரமாக படுத்துக்கொள்ள,

“சாரி’ங்க. நான் தப்பான அர்த்தத்துல சொல்லல. பேசிட்டே இருக்கும் போது வார்த்தையோட வார்த்தையா அப்படி வந்துடுச்சு. உங்க மனசுல இருக்க கோபம் மொத்தத்தையும் என்கிட்ட காட்டிடுங்க. தயவுசெஞ்சு உங்கள தண்டிக்காம இருங்க தரணி ப்ளீஸ்!. இந்த அளவுக்கு மன அழுத்தத்தோட இருந்தா உடம்புக்கு ஒத்து வராது. மதியமே சரியா சாப்பிடல கொஞ்சம் சாப்பிட்டாது போங்க.” என்று கதவின் மீது சாய்ந்து கொண்டு வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

எதற்கும் அசைந்து கொடுக்காமல் சாற்றிய கதவு சாற்றியபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் அகல்யாவிற்கு சோர்வில் தூக்கம் வந்துவிட்டது. கதவில் சாய்ந்த படி அமர்ந்தவள் தூங்கிப் போனாள். திடீரென்று கதவு திறக்க, தூக்கத்திலிருந்து அடித்துப் பிடித்து எழுந்தாள். முழு ஃபார்மல் உடையில் அவளுக்கு தரிசனம் கொடுத்தான் தரணீஸ்வரன்.

அவன் கோலத்தை பார்த்த பின்பு தான் காலை வந்துவிட்டது என்பதே புரிந்தது. அவனிடம் பேச்சு கொடுக்க முயல, வேகமாக சென்றுவிட்டான் கம்பெனிக்கு. பெருமூச்சு விட்டவள் அறைக்குள் நுழைய அலங்கோலமாக இருந்தது அனைத்தும். அதையெல்லாம் பார்த்து கோபம் கொண்டவள் ஒன்றை பார்த்து நிதானம் கொண்டாள்.

வழக்கமாக அவள் தரையில் படுக்கும் இடத்தில் தலைகாணி வைத்து அவளின் புடவையை போர்த்தி இருந்தான். பக்கத்தில் மற்றொரு தலைகாணியும் அவனின் போர்வையும் இருப்பதை வைத்து உணர்ந்து கொண்டாள் தான் இல்லாமல் தூங்க கடினப்பட்டவன் தன் உடையோடு தூங்கி இருக்கிறான் என்று.

கலைந்திருந்த பொருட்களை அடுக்கி வைத்தவள் வேலைகளை கவனித்தாள். மருத்துவமனைக்கு சென்றவள் அவர்களுக்கான உணவை கொடுக்க, “தரணி சாப்பிட்டானா?” என மாமியார் விசாரித்தார்.

நடந்ததைச் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்த விரும்பாதவள் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள். மதியம் வரை அங்கு இருந்தவள் கணவனின் நிலை மாறுவதற்குள் கம்பெனிக்கு விரைந்தாள். எப்பொழுதும் அந்த நேரம் உடலை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பவன் இன்று தோரணையாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அதைக் கண்டு வாசலில் அப்படியே நின்றாள் அகல்யா. இந்த மாற்றம் மிகவும் பிடித்தது அவளுக்கு. அதிலும் வாசலில் நிற்கும் அவளை ஒரு முறை அவன் முறைத்து விட்டு வேலையை கவனிக்க, கூர்ப்பார்வையில் கோபம் துள்ளியது. ஜீபூம்பா  அண்ணனின் மடியில் தாவிக்கொள்ள, அதை மட்டும் கொஞ்சினான். அகல்யா எத்தனை முறை பேச முயற்சித்தாலும் இடம் கொடுக்கவில்லை தரணீஸ்வரன்.

மதியம் போல் வீடு திரும்புபவன் அவள் மீது உள்ள கோபத்தில் வீம்பாக அன்று ஒரு நாள் முழுவதும் கம்பெனியில் பொழுதை கழித்தான். அவளால் சிறிதும் நம்ப முடியவில்லை மாலை ஆறு மணி வரை கணவன் கம்பெனியில் இருப்பதை. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என மகிழ்ச்சி கொண்டவள் பேசாத அவனோடு வீடு வந்து சேர்ந்தாள்.

தம்பியோடு மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தான். நேற்றிலிருந்து கெஞ்சிக் கொண்டிருப்பதால் அதை நிறுத்தினாள் அகல்யா. தன்னோடு சுற்றிக் கொண்டிருந்தவள் நெருங்காமல் இருக்க, அவள் இருக்கும் இடத்திற்கு ஜீபூம்பாவோடு நகர்ந்தான். இருவர் செய்யும் சேட்டைகள் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அன்று போல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. கணவனுக்கு இரவு உணவை கொடுத்தவள் டிவி பார்த்துக் கொண்டிருக்க, பூனை போல் நடந்து கொண்டிருந்தான் அவளை எட்டிப் பார்த்துக் கொண்டு. தன்னை பார்க்கும் உருவத்தை ஒரு முறை பார்த்து முறைத்தவள் முகத்தை காட்டாமல் திருப்பிக் கொண்டாள்.

****

மழையின் வேகம் அதிகரிப்பது போல் இரவின் நேரமும் அதிகரித்தது. வீம்பை விட்டு அவளிடம் பேச தயாராக இல்லை தரணீஸ்வரன். தவறு செய்யாமல் போதுமென்ற அளவு இறங்கி விட்டதால் அவளும் பேச தயாராக இல்லை.

தொலைக்காட்சியில் காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க அதை பார்ப்பது போல் பாவனை செய்தவள் எண்ணம் அவனை சுற்றி இருந்தது. அவனுக்கும் அதே நிலை  தொடர்ந்து கொண்டிருக்க இரவு பத்து ஆனது.

தரணியின் மனம் நேற்று அவள் இல்லாமல் தவித்தது. அதைக் கோபம் என்ற போர்வையில் கட்டுப்படுத்தியவன் இன்று செய்ய முடியாமல் தவித்தான். பூனை போல் நடந்து கொண்டிருந்த கால்கள் அவளை நோக்கி நகர்ந்தது. அகல்யாவை கண்டு கொள்ளாதது போல் சமையலறை சென்றவன் தண்ணீர் குடித்துவிட்டு சாதாரணமாக டிவி பார்க்க அமர்ந்தான். மனைவியோ கண்டு கொள்ளாமல் சேனலை மாற்றிக் கொண்டிருக்க, ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.

அகல்யா கண்டு கொண்டது போல் தெரியவில்லை. மாட்டிக்கொண்ட எலி போல் துடித்தவன் நெருங்கி அமர்ந்தான் அவளை. உடனே விலகி அமர்ந்து தன் எதிர்ப்பை தெரிவித்தாள். பக்கத்தில் அமர்ந்து மனைவியை முறைத்தவன் மீண்டும் நெருங்கி அமர, இடம் கொடுக்கவில்லை அகல்யா.

முகத்தை சுருக்கி கொண்டு விலகி அமர்ந்தான். அதையும் அவள் கண்டு கொள்ளாமல் தீவிரமாக தொலைக்காட்சி பெட்டியில் கண்களை வைத்திருக்க, கோபத்தோடு அறைக்கு செல்ல நகர்ந்தான். ஓர விழியில் அதை கவனித்துக் கொண்டிருந்தவள் பார்வையை மாற்றினாள் அவன் திரும்புவதை கண்டு.

மனைவி தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதில் அப்படி ஒரு கோபம் உண்டானது அவனுக்கு. முழு படிக்கட்டையும் ஏற நினைத்தவன் கால்கள் மறுத்து விட வேகமாக ஓடி வந்து அவள் மடியில் விழுந்தான். அகல்யா தள்ளிவிட்டு நகர்ந்து அமர, அவனின் வேகம் அதிகரித்தது. தனக்கான இடம் தனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தவன் வெற்றியும் கண்டான்.

மடியில் இடம் கொடுத்தவள் மன்னிக்க தயாராக இல்லை. கண்டுகொள்ளாமல் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். படுத்தவாறு அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். பார்வை ஊடுறுவதை உள்ளம் உணர்த்தினாலும் உணர்வுகளை கொடுக்க தயாராக இல்லை. அந்த நிலையில் இருவரும் அப்படியே இருந்தார்கள் ஒரு அரை மணி நேரம்.

படுத்தவாறு திரும்பி குப்புற படுத்தவன் அவள் கால்களை மெதுவாக பிடித்தான். ரிமோட் கொண்டு தலையில் அடித்தவள் முறைத்துக் கொண்டே தன் வேலையை கவனிக்க, “சாரி!” என்று அவள் வயிற்றோடு முகத்தை புதைத்தவன் இரு கைகளால் சிறை பிடித்துக் கொண்டான்.

“ப்ளீஸ்!”

“கோபத்துல பண்ணிட்டேன்.”

“இந்த ஒரு தடவை மன்னிச்சுடு.”

“என்னமோ மாதிரி இருக்கு அகல் இப்படி நடந்துக்காத.” முன்பு சொன்ன வார்த்தைகளுக்கெல்லாம் பதில் கொடுக்காதவள் இந்த வார்த்தைக்கு கொடுத்தாள் முறைப்பை. வாயை மூடிக் கொண்டான் அதில்.

“மன்னிக்க மாட்டியா?” என பாவமாக அவளை பார்க்க, “நான் யாரு உங்கள மன்னிக்க?” என்றாள்.

“யாருன்னு உனக்கு தெரியாதா?”

“தெரியாது”

“தெரியாதுன்னு நடிக்கிற உனக்கு என் பதில் புரிய வைச்சிடாது.”

“புரிய வைக்கவும் நீங்க முயற்சி பண்ண மாட்டீங்க. இத்தனை வருஷமா பெத்து வளர்த்த அவங்களையே நீங்க புரிஞ்சுக்கல என்னையா புரிஞ்சுக்க போறீங்க. அந்த வார்த்தைய எந்த சூழ்நிலையில சொன்னன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்து இருந்தா நேத்து அப்படி நடந்து இருப்பீங்களா.

ஒரு மனுஷனுக்கு இவ்ளோ நேரமா கோபம் இருக்குறது. நேத்து நைட்டு இருந்தீங்க சரி. காலையில மூஞ்ச தூக்கிட்டு போனீங்க சரி. ஆபீஸ்க்கு வந்தனே அப்ப கூட பேசணும்னு தோணலல. நாள் முழுக்க கூட இருந்திருக்கேன் யாரோ மாதிரி கண்டுக்காம இருந்துட்டு இப்ப வந்து மடில படுத்த உடனே இறங்கி வந்துடனும்.”

மடியிலிருந்து எழுந்துக் கொண்டான் தரணி. தலையை குனிந்தவாறு அவளிடம் மன்னிப்பு கேட்க, “அன்னைக்கே சொல்லிட்டேன் பண்றது எதுவா இருந்தாலும் நிமிர்ந்து பாருங்கன்னு.” என கண்டித்தாள்.

“உன்கிட்ட எப்படி இருக்குறதுல தப்பு இல்ல.”

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.”

“சாரி அகல்!”

“எதுக்கு இந்த சாரி?”

….

“கேட்டதுக்கு இன்னும் பதில் வரல தரணி. எதுக்கு இந்த சாரி? என்றதுக்கும் அவன் பதில் கொடுக்காமல் இருக்க,

“எங்கிட்ட கோவமா பேசுனதுக்கா?” என அவளே கேட்டாள்.

அதற்கு இல்லை என்று அவன் தலையசைக்க, “ராத்திரி முழுக்க வெளிய இருக்க வைச்சதுக்கா?” என்றதற்கும் இல்லை என்ற பதிலை வாங்கிக் கொண்டாள்.

“காலையில பேசாம போனதுக்கா?”

….

“ஆபீஸ்ல பேசாம இருந்ததுக்கா?”  அவன் மறுத்து தலையசைக்க, “என்னன்னு சொல்லுங்க.” முடிவாக கேட்டாள்.

“உன்ன ஒரு நாள் முழுக்க தனியா இருக்கோம்னு பீல் பண்ண வச்சதுக்கு. எனக்கு தெரியும் அந்த உணர்வு வந்தா மனசு எவ்ளோ வலிக்கும்னு.  என்னால நீ சொன்ன வார்த்தைய ஏத்துக்க முடியல. உன்கிட்ட கோபத்தை காட்டி கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் விலகி இருந்தேன்.”

“நான் சொன்ன வார்த்தைல எதை  ஏத்துக்க முடியல? உங்கள விட்டு ஓடிடுவன்னு நினைச்சீங்களா இல்ல வேற ஒருத்தன் கூட ஓடிடுவன்னு  நினைச்சீங்களா.” என்றதும் கடுமையாக முறைத்தான் மனைவியை.

“இந்த பேச்ச இத்தோட விடு அகல். இனிமே இந்த மாதிரி சண்டை வராம பார்த்துக்கலாம்.”

“அப்போ என்னை நீங்க சந்தேகப்பட்டு இருக்கீங்க. நானும் அவளை மாதிரி யார் கூடயாது…” அவர்களுக்கு எதிரில் இருக்கும் சிறிய டேபிள் அவன் கால் உதைத்து பெரும் சத்தத்தோடு நகர்ந்து நின்றது.

பேச்சை நிறுத்தியவள் திகைப்போடு அவனைப் பார்க்க, நகர்ந்த மேஜையை
வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். காதில் இருந்து வாய் வரை இருக்கும் தாடை துடித்துக் கொண்டிருந்தது. இமைகள் விடாமல் படபடத்துக் கொண்டிருக்க, அவன் தொடை மீது கை வைத்தாள்.

வெடுக்கென்று கையை தட்டி விட்டவன், “என்னை விட்டு போய்டுவன்னு தான் நினைச்சேன். உன்ன அந்த மாதிரி நான் என்னைக்கும் நினைக்க மாட்டேன். எவளோ ஒருத்தி போனா நீயும் அப்படியே போவன்னு அர்த்தமா? இன்னொரு தடவை இந்த மாதிரி ஒரு வார்த்தை சொன்ன என்னை பார்த்துக்க ஆள் இல்லனாலும் பரவால்லன்னு கொன்னுடுவேன்டி.” என்றவன் அவள் பார்வையில் இருந்து மறைந்தான்.

தரணீஸ்வரன் பேசி விட்டு சென்ற வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கொள்ள நேரம் தேவைப்பட்டது அகல்யாவிற்கு. இதற்கு மகிழ்வதா அல்லது தன்னுடன் இவ்வளவு தூரம் ஆழமான உறவை நெஞ்சுக்குள் வளர்த்திருக்கிறான் என்று வருத்தம் கொள்வதா என தனி ஒரு யோசனை கூட எழுந்தது. யோசனைகளுக்கு நடுவில் மாமியாரிடம் போட்ட ஒப்பந்தம் ஞாபகத்திற்கு வர,

‘இந்த அளவுக்கு நெருக்கமா இருக்க தரணி நான் இல்லாம எப்படி இருப்பாரு. கொஞ்ச நாள் பழக்கத்துல என் மேல இப்படி ஒரு நம்பிக்கை எப்படி வந்துச்சு. ஒருவேளை நான் போய்ட்டா இப்ப இருக்குறதை விட மோசமான நிலைமைக்கு போவாரோ?’ திருத்துவதாக நினைத்து தானே இன்னும் அவனை மோசமான நிலைக்கு தள்ளி விட்டதாக உணர்ந்தாள்‌.

அறையில் கேட்கும் சத்தத்தில் நினைவை கலைத்தவள் அங்கு விரைந்தாள். காலையில் அவள் எடுத்து வைத்த பொருட்களை தூக்கி வீசிக் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து அதை எல்லாம் காப்பாற்றியவள், “இந்த மாதிரி கோபப்படுறதை முதல்ல நிறுத்துங்க.” என்று அவன் தோள் மீது கை வைக்க, வேகமாக தட்டி விட்டான்.

முன்பு அவன் கெஞ்சியது போல் இவள் கெஞ்ச, அவள் மிஞ்சியது போல் இவன் மிஞ்சினான். மனைவிக்கு தன் முகத்தை காட்டாமல் சுவற்றின் அருகில் நின்று கொண்டான் திரும்பியவாறு. பின்னால் நின்று பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தவள் பலன் இல்லாததால் சுவற்றை ஒட்டி நின்றாள்.

தாழ்ந்த தலையோடு இருந்தவன் முகத்தை நிமிர்த்த, தட்டிவிட்டான் வேகமாக. வலிப்பது போல் கையை அவள் தேய்க்க, வேகமாக அதை பற்றியவன் மிருதுவாக தேய்த்து விட்டான். லேசான புன்னகையோடு இப்பொழுது அவன் முகத்தை நிமிர்த்த, இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டது முதல் முறை.

செல்லமாக குற்றம் சாற்றி கோபித்துக் கொண்டவன் நகர, அதை தடை போட்டு நிறுத்தினாள். மீண்டும் இருவரின் விழிகளும் பேசிக்கொண்டது. வெளியில் பெய்யும் மழை  சத்தம் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, காற்றாடியின் உதவியால் அதிக அளவு குளிரை சந்தித்தார்கள். பேசாமல் மௌனம் காக்கும் அந்த நொடியில் அவற்றை நன்றாக உணர்ந்து கொள்ள, விழிகள் ஒன்றோடு ஒன்று நடந்ததற்கும் பேசியதற்கும் மன்னிப்பு கேட்டது.

கணவனின் முகத்தில் தெரியும் வருத்தத்தில் “நான் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டங்க. அப்படியே நான் போனாலும் விடாதீங்க.” என்றவளை கட்டிக் கொண்டான். அவளும் அணைத்துக் கொள்ள,  நிமிடங்கள் ஓடியது. மனைவியை பிரிந்தவன் முகத்தோடு தன் முகத்தை வைத்துக்கொண்டு,

“நீ இல்லாம நேத்து ஒரு நாளை கடத்த ரொம்ப கஷ்டப்பட்டேன் அகல். தெரிஞ்சே அதை அனுபவிக்க நான் தயாரா இல்ல. எனக்கு உன்கிட்ட பெருசா எதுவும் வேணாம். என் கூடவே இரு எப்பவும் எனக்காக. ராத்திரி ஆனா உன்னை கட்டி பிடிக்கனும்.

நான் எப்போ சாப்பிடணும், எப்ப தூங்கணும், எப்போ என்ன பண்ணனும்னு எல்லாமே ஒரு குழந்தைக்கு அம்மா ஞாபகப்படுத்துற மாதிரி சொல்லிக்கிட்டே இரு. நான் முடியலன்னு சொல்லும்போதெல்லாம் என்னை உனக்குள்ள வச்சுக்கோ.

அம்மா கருவறை எப்படி இருக்கும்னு நீ வந்ததுக்கப்புறம் தான் உணர்ந்தேன். என்னை வெளியே எங்கயும் விடாத‌ அகல். உனக்குள்ள பத்திரமா வச்சுக்கோ. அங்க தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்ற தரணீஸ்வரன் விழிகளில் ஒரு சொட்டு நீர் பட்டென்று விழ, அவனுக்கு அடுத்ததாக அகல்யாவின் கண்ணில் இருந்தும் சொட்டு நீர் வெளியேறியது.

இருவரும் தலையை முட்டிக்கொள்ள அடுத்தடுத்து வந்த கண்ணீர் ஒன்றாக சங்கமித்து தரையில் விழுந்தது. மனைவியின் முகத்தை முழுவதுமாக கைக்கு விருந்தாக்கியவன் முன்பு பேசிய வார்த்தையின் மொத்த கனத்தையும் சேர்த்து இரு இதழில் காட்டினான் நெற்றியில் முத்தமிட்டு. அதில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது.

முத்தத்தை மெல்ல கீழ் இறக்கினான். மூக்கின் மத்தியில் முத்தமிட்டு மீண்டும் வெற்றிக்கு சென்று முத்தமிட்டவன் வலது கன்னத்தை நிறைத்தான். அகல்யாவின் கைகள் தன் கன்னத்தை பற்றி இருக்கும் கைகளைப் பிடித்துக் கொள்ள, இடது கன்னமும் முத்த அனுபவத்தை அனுபவித்தது.

இதழை பிரிக்காமல் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டு இருந்தான். முத்தம் லேசாக பதிய, முகம் மொத்தமும் அவனின் இதழ்கள் வாசம் தான். மூடிய கண்கள் அப்படியே இருக்க, உதட்டுக்கு குறி வைத்தது அவன் விழிகள். அடுத்து தன்னுடைய இதழை  அவன் இதழ் சுவைக்க போகிறது என்பது தெரியாமல்  அகல்யா தன் நிலையில் அப்படியே இருக்க… நெருக்கமாக நெருங்கினான். இருவரின் இதழ்களும் ஒட்டாமல் ஒட்டிக் கொண்டிருந்தது.

அதில் விழித்துக் கொண்டது பெண்ணின் கண்கள். ஒருவித அதிர்வோடு அவன் முகத்தை ஏறிட்டாள். புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாத தரணீஸ்வரன் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டு இதழை வருட, “இன்னொருத்தி வேணான்னு தூக்கிப்போட்ட ஒன்ன நான் யூஸ் பண்ண போறதை நினைச்சா அசிங்கமா இருக்கு.” என்ற மனைவியின் வாசகம் பட்டென்று மூளையில் உதயமாக அவளை விட்டு விலகி நின்றான் வேகமாக.

அகல்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் முத்தம் தொடராமல் இருந்ததில் சற்று நிம்மதி. அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தவன், “சாரி, நீ மேல படுத்துக்கோ நான் கீழ படுத்துகிறேன்.”  என அரைகுறையாக போர்வையை விரித்தவன் படுத்துக்கொண்டான்.

‘அவளோட இருந்துட்டு என்னோட இருக்க சங்கடப்படுறாரா? இல்ல அவ இடத்துல என்னை வைக்க முடியாம சங்கடப்படுறாரா?’ என்ற சிந்தனையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே அவள் இல்லாமல் தூங்க கடினப்படுபவன் இந்த சூழ்நிலையில் தவித்துப் போனான். வெகு நேரங்கள் கழித்து தான் அவனின் உணர்வுகள் புரிந்தது அகல்யாவிற்கு. துணைவனின் அருகில் படுக்க, சங்கடத்தோடு பார்த்தான்.

தன் மார்போடு சேர்த்துக் கொண்டவள், “எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாங்க. நிம்மதியா தூங்குங்க.” என்றிட, அவளுக்குள் புதையாத குறையாக ஒட்டிக்கொண்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
74
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *