Loading

15 – காற்றிலாடும் காதல்கள் 

 

“கீதன். என்ன பண்ற நீ?” மாலா கோபமாகக் கேட்டார். வெள்ளைச்சாமி தாத்தா பேத்தியிடம் வேகமாகச் சென்று அவளை என்னவென விசாரித்தார். 

“என் கன்னத்தப்பிடிச்சி கிள்ளிட்டான் தாத்தா இவன். பாருங்க ரத்தமே கட்டிரிச்சி.“ என அவளது கன்னத்தைக் காட்டினாள். 

மாலா அவளின் அருகே வந்து அவளது கன்னத்தை மெல்ல தொடும்போதே முகத்தை வலியில் சுழித்தாள். ஐஸ் வைத்திருப்பது கன்னத்தைத் தொட்டதும் தெரிந்தது. கயல்விழி தான் ஐஸ் வைத்திருக்க வேண்டும். அவள் வெளியே சென்றதும் இவன் மீண்டும் இவள் கன்னத்தைக் கிள்ள வந்திருக்கிறான் என்று புரிந்தது. 

“நீ என்ன சின்ன பையனாடா? கல்யாணம் பண்ற வயசாச்சி. இன்னும் கன்னத்தை பிடிச்சி கிள்ளிட்டு இருக்க. புத்தி வேலை செய்யுதா இல்லயா உனக்கு?”கடுமையாக முறைத்தபடிக் கேட்டார். 

“விடு மாலா. தம்பிக்கு இந்த பழக்கம் இன்னும் விட்டு போகல. எப்ப போகுமோ தெர்ல. இனிமே வயசு புள்ளகிட்ட இப்படி நடந்துக்காதீங்க தம்பி.” என அவனிடம் நேரிடையாகக் கூறினார். 

“வீட்ல நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இப்ப உங்ககிட்டயும்  சொல்றேன். மிருவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். உங்க பேத்திய தவிர நான் யார்கிட்டயும் இவ்ளோ உரிமை எடுத்துகிட்டது இல்ல. இப்ப நான் கிள்ளினது அந்த உரிமையோட சேர்த்து நல்லா கொலுகொழுன்னு இருக்க கன்னத்தை எப்படி நான் கிள்ளாம இருக்கமுடியும். உங்க பேத்திக்கு நல்லா நெய்யும் வெண்ணையும் குடுத்து வளத்தீங்களா தாத்தா? இவளையோ இவக்கூட பொறந்தவளையோ நான் பாத்த ஞாபகமே இல்ல எனக்கு. சின்ன வயசுலையும் இப்படியா இருக்கும் இவ கன்னம்?” என அவன் கேட்டவிதத்தில் மாலா தலையில் அடித்துக் கொள்ள, வெள்ளைச்சாமி தாத்தா விழித்தார். 

“ஹாஹாஹா  அடேய் பேராண்டி நாங்க பேச முன்ன நீயே சம்பந்தம் பேசற அளவுக்கு பெரிய மனுஷன் ஆகிட்டியோ?” எனக் கேட்டபடி விஸ்வநாதன் அங்கே வந்தார். உடன் இந்திரனும் அவரைப் படிக்கட்டில் ஏற கைப்பிடிப்பக்கமாக செல்லக் கூறி பின்னாலேயே சென்றான். 

“அப்பா. இவனோட பைத்தியக்கார தனத்துக்கு எல்லாம் நீங்க ஒத்து ஊதாதீங்க. இது ரொம்பவே கெட்டப்பழக்கம். நம்ம வீட்டு பொண்ண ஒருத்தன் இப்டி பண்ணா நம்ம சும்மா விடுவோமா?” என நியாயமாகப் பேசினார். 

“எல்லாம் சரிதான் கண்ணு.  சுமார் அஞ்சி வருஷமா இல்லாம இன்னிக்கி ஏன் இவன் இப்படி பண்ணான்? அதுக்கும், அவன் காரணத்த சொல்லிட்டான்.”

“ஆனா அந்த பொண்ணு சம்மதம் சொல்லவே இல்ல.  ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம இப்படி பேசறதும், நடந்துக்கறதும் ரொம்ப தப்பு.“ மாலா கணீரென்ற குரலில் கூறி மகனை முறைத்தார்.

“அப்பா கீதா அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேளு. உங்கம்மா சொல்றது சரி தான்.” என விஸ்வநாதன் கூறியதும் வெள்ளைச்சாமி மறுத்தார்.  

“கண்ணு கீதன நான் பொறந்ததுல இருந்து பாக்கறேன்.  எந்த தப்பான எண்ணத்துலையும் அவன் கிள்ளல. விஸ்வநாதன் பேரன் தப்பு பண்ணமாட்டான்.”என பேத்தியிடம் பேசினார். 

“மாமா.. யாரோட பையனோ பேரனோ அதுலாம் நம்ம பேசக்கூடாது.. அவன் பண்ணது தப்பு. அதுக்கு அவன் மன்னிப்பு கேட்டு தான் ஆகணும். இதுல பெரியவங்களுக்குள்ள சங்கடம் ஒண்ணுமில்ல. அவன் மன்னிப்பு கேக்கலன்னா தான் புள்ளைக்கு நம்ம மேல இருக்க நம்பிக்கை குறையும். இதுமாதிரி விஷயத்துல ஒரு பொட்ட புள்ளையோட மனசுல நம்பிக்கையும், தைரியமும் நாம விதைக்கணும். நாமலே அதை பொதச்சிற  கூடாது.“

“அம்மா… நான் அவள காதலிக்கறேன்…“

“இருக்கலாம். ஆனா அவ இன்னும் உன் உறவா ஆகல. சம்பிரதாய ரீதியாவும், மனரீதியாவும். அவள பொறுத்தவரை நீ மூணாவது மனுஷன் தான். அந்த எல்லைல மட்டும் தான் நீ நிக்கணும். புரிஞ்சதா?” எனக் காட்டமாக அவனைப் பார்த்துக் கேட்டார். 

“புரியுதும்மா… மன்னிச்சிடுங்க. இனிமே இப்படி பண்ணமாட்டேன்.” தலைக் கவிழ்ந்துக் கூறினான். 

“அத அவகிட்ட கேளு. உன் காதல சொல்லிட்ட அத அவ ஏத்துக்கறதும், நிராகரிக்கறதும் அவளோட இஷ்டம். இதுல நாங்க யாருமே தலையிடமுடியாது. வரம்பு மீராம உன்னோட மதிப்பையும், அன்பையும் உணரவை. அது தான் நீ உன் காதலுக்கு குடுக்கற மரியாதை.“ எனப் பேசிவிட்டு அவளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே சென்றார். 

கீதன் தாயின் கோபத்தைக் கண்டு வருந்தினாலும், தான் செய்ததுச் சற்று அதிகப்படி தான் என்ற உணர்தல் வந்ததும் மிருணாளினி அருகில் சென்று நின்றான். 

“உன் அனுமதி இல்லாம உன் கன்னத்த நான் பிடிச்சது தப்பு தான். ஆனா என் மனசுல நீ இருக்க. உன்ன பாத்த நொடில இருந்து எனக்குள்ள உன்மேல அன்பும், அக்கறையும் காதலும் பெருகிக்கிட்டே இருக்கு. இனிமே உன்னை சங்கடப்பட வைக்கமாட்டேன். ஆனா உனக்கு என் காதல உணரவைப்பேன். சாப்பிட வீட்டுக்கு போ.” எனக் கூறிவிட்டு வெளிய செல்லத் திரும்பினான். 

“ஒரு நிமிஷம்..”எனக் கூறி மாலா அருகே வெளியே சென்று நின்று அவனையும் வரச் சொன்னாள். 

“உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருந்தது அத்த.  பொதுவா ஆம்பள பையன் பண்றதுக்கு எல்லாம் ஒத்து ஊதர பெத்தவங்களுக்கு மத்தில, ஒரு பொண்ணோட உணர்வுகள புரிஞ்சி நீங்க பேசினீங்க. காதலுக்கும், உரிமை மீறலுக்கும் இருக்கற வித்தியாசத்தை ரொம்ப அழகா சொன்னீங்க. உங்க பையனும் அதை புரிஞ்சிக்கிட்டாருன்னு நெனைக்கறேன். நான் கிளம்பி வரேன் ஒண்ணாவே நம்ம போய் சாப்பிடலாம். நீங்க சொன்னமாதிரி ராத்திரி வரைக்கும் உங்க வீட்ல நானும், தாத்தாவும் இருக்கோம். சரி தானே தாத்தா?” என வெள்ளைச்சாமியைப் பார்த்துக் கேட்டாள்.  

“சந்தோஷம் கண்ணு.“ என வெள்ளைச்சாமி கூறி பெருமூச்சை விட்டார். 

அவரின் மனதில் நொடிகளில் பயமும், பதட்டமும், அறுபதாண்டு கால நட்பும், மனதிலிருந்த எதிர்கால கனவும் தோன்றிவெகுவாக அலைக்கழித்திருந்தது. இச்சம்பவத்தால் பேத்தியும் தன்னைவிட்டுக் கிளம்பிவிடுவாளோ என்ற எண்ணம் தான் அவரை மிகவும் வாட்டியது.  

அவரின் அத்தனை அழுத்ததையும் ஒரே வார்த்தையில் அவள் வெளியேற்றிய விதத்தில், அவளின் முதிர்ச்சியை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். 

 

காளையரின் கண்கண்டு நாணும் 

பருவ மங்கையல்ல இவள்.. 

ஆழ்ந்த ஞானமும், பண்பும் நிறைந்த 

குமரியிவள் மனதினில் .. 

கீதனவன் தான் .. 

காதல் கீதம் தோற்றுவித்திருவானா ???

 

“சரி டா கிளம்பி வா நம்ம முன்ன போலாம். இவங்க வேலைய முடிச்சிட்டு வரட்டும்” எனக் கூறி திண்ணையில் அமர்ந்துக் கொண்டார். 

மிருணாளினி இருளாயியை அழைத்து ஏதோ கூறிவிட்டு, உடை மாற்ற தன்னறைக்குச் சென்றாள். சில நிமிடங்களில் இருளாயி அனைவருக்கும் இளநீர் கொண்டு வந்துக் கொடுக்க, அதைப் பருகிய நொடி அனைவரின் மனமும் அமைதியானது. 

“டேய் வெள்ளையா.. பேத்தி சாதாரணமான ஆளு இல்லடா.. ஒரே வார்த்தைல நம்ம மனச லேசாக்கிட்டா. இந்த புள்ளைய கட்டி காப்பாத்தற அளவுக்கு இவனுக்கு தகுதியும், தெரமும் இருக்கான்னு தெரியணும்.  நம்ம காலம் போல இல்ல, நம்ம புள்ளைங்க காலம் போலவும் இல்ல. இது ரெண்டு ஆளுங்களும் சரிசமமா நடந்துக்க வேண்டிய காலம். புள்ளைக்கு இஷ்டமில்லாம நம்ம எதுவும் அவகிட்ட கல்யாண விஷயமா சொல்லிக்க வேணாம். புரியுதா?” விஸ்வநாதன் நண்பனிடம் கூறினார். 

“அதெப்புடி விஸ்வம் எதுவும் சொல்லாம பேசாம இருக்கறது?” லேசாக முகம் வாடக் கேட்டார். 

“நம்ம அன்புக்கு மரியாதையும், மதிப்பும் குடுத்து அந்த புள்ள இப்ப நடந்தத மனசுல வச்சிக்காம வீட்டுக்கு வரேன்னு சொல்லுது. அவசரப்படவேணாம்ன்னு தான் சொல்றேன். என் பேராண்டி தான் காதல் செய்யறானாமே. அவன் என்ன பண்றான்னு பாக்கலாம். எப்படியும் புள்ள மூணு நாலு மாசம் இங்க தானே இருக்கும். அடுத்த மாசம் நம்ம கோவில் திருவிழா வருது. அதுல இந்த பையன் பொறுப்பும், அக்கறையும் பாத்து நல்ல அபிப்ராயம் வரலாம். அவன்கிட்ட பேசி பழகறப்ப அன்பும், நேசமும் கூட வரலாம்ல.” நண்பனுக்கு எடுத்துக் கூறி சமாதானம் செய்துக்கொண்டிருந்தார். 

அனைத்தையும் இந்திரன் அமைதியாக நின்றுக் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர, ஒரு வார்த்தையும் வாயைத் திறந்து பேசவில்லை. 

சற்று நேரத்தில் மிருணாளினி தயாராகி வர, அனைவரும் விஸ்வநாதன் இல்லம் கிளம்பிச் சென்றனர். 

அங்கே அனைவரும் ஒன்றாக உண்டுவிட்டு, பெரியவர்கள் ஒரு பக்கம் ஓய்வெடுக்க ஒதுங்க, சிறியவர்கள் எல்லாம் மாடிக்குச் சென்றனர். 

“இங்க கன்னத்த காட்டுங்க அண்ணி. இன்னும் கொஞ்சம் ஐஸ் கொண்டு வரவா?” எனக் கேட்டாள் கயல்விழி. 

“வேண்டாம் கயல், நான் நைட் படுக்க முன்ன வச்சிக்கறேன். நீ ஏன் உடனே கிளம்பிட்ட வீட்ல இருந்து? நான் டிரஸ் மாத்திட்டு வரப்போவே நீ இல்ல.”

“அவரு டிரஸ் குடுத்து விட சொன்னாரு அதான் உடனே.” என அவளும் அசடு வழிந்தபடிக் கூறினாள். 

“அவளோ லவ்ஸ் அஹ் மேடம்க்கு?“ எனக் கேட்டு கிண்டல் செய்தாள். 

“அவருன்னா பிடிக்கும்.. காதலான்னு கேட்டா எனக்கு சரியா தெரியல.. ஆனா கட்டிக்க போறவருங்கற அன்பும் மதிப்பும் இருக்கு.”

“ஏன் காதலிக்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா? சொல்லப்போன நீ இப்ப காதலிச்சா யாரும் எதுவும் சொல்லப் போறதும் இல்லயே. உன் காதல் சக்ஸஸ் தான்.”

“ஹாஹாஹா இதென்ன எக்ஸாமா அண்ணி காதல் கல்யாணத்துல முடிஞ்சா பாஸ் ஆகிட்ட மாறி பேசறீங்க. வாழ்றதுல தானே காதல் ஜீவனோட இருக்கா இல்லையான்னு தெரியும். சொல்லப்போனா காதல்ல வெற்றி தோல்வின்னு எதுவுமே இல்ல. காதல் இன்னும் ஜீவனோட இருக்கா இல்லையான்னு தான் நம்ம கேக்கணும்.”

இதே வார்த்தைகளைக் கிருபாலினியும் கூறுவாள். அவளுக்கு காதல், குடும்பம் மீதெல்லாம் அதீதப் பற்றுண்டு. தங்கைக்காகவும், காதலனுக்காகவும் தன் உயிரையே பலியாகக் கொடுத்தவள் ஆயிற்றே. அவளின் காதல் உண்மையோடு ஜீவித்திருந்தால் அவளும் ஜீவனோடு இன்று இருந்திருக்கலாமோ? அவள் காதலின் ஜீவன் மடிந்த நொடி இவளும் அல்லவா இறந்துவிட்டாள். 

இன்றும் அவளின் கண்களில் வழிந்த நீருக்கு மிருணாளினியால் பதிலடி கொடுக்க முடியவில்லை என்ற எண்ணமும், பகையும் உள்ளுக்குள் எரிந்துக் கொண்டேயிருந்தது. 

“அண்ணி.. அண்ணி.. என்ன எங்கயோ போய்ட்டீங்க போலவே? நான் பேசி பேசி போர் அடிக்கறேனா?” எனக் கேட்டாள். 

“இல்ல கயல், உன் பேச்சு எல்லாம் என் கிருபாவ ஞாபகப்படுத்துது. அவளும் உன்னமாதிரி தான் பேசுவா. எனக்கு இந்த காதல் கல்யாணம் மேல எல்லாம் நம்பிக்கையும் இல்ல, ஆர்வமும் இல்ல. என் தமிழும் நானும்ன்னு  வாழ்ந்தா போதும்.“ எனக் கால்களைக் குறுக்கே கட்டிக்கொண்டு அவள் கூறும்போது கீதன் அங்கே வந்தான். 

“தமிழோட கீதமும் சேர்ந்தா தான் முழுமை வரும் கயல். மனுஷங்க காட்டற அன்பை கண்ணால தேடிப்பாக்காம, மனசால உணர்ந்து பாக்க சொல்லு. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், முழுமையும் வேணும். வெறும் சுவடிய பிடிச்சிட்டு சுத்திட்டு இருந்தா நிஜமான நேசம், பாசம், அன்பு எல்லாம் எப்படி தெரியும் புரியும்? நாளைல இருந்து வயல்ல வந்து வேலைய கவனிக்க வரச்சொல்லு. இயற்கையான வாழ்வியல்ல இருக்க வாழ்க்கையோட ஜீவன் புரியுதா பாப்போம்.” எனக் கூறிவிட்டு அவன் குகைப் பற்றிச் சேகரித்து வைத்திருந்த அத்தனை விளக்க உரைகளையும் ஒரு பையில் போட்டு ஒரு வேலையாளிடம், அவள் அறையில் வைத்துவிடும்படி அவளின் முன்னே சொல்லிக் கொடுத்தனுப்பினான்.

மிருணாளினி ஒரு புருவம் உயற்றி, உதட்டினைச் சுழித்துவிட்டுத் தோளைக் குலுக்கிவிட்டுத் திரும்பிக்கொண்டாள். அவளின் செயலில் அவன் தான் அவள்மீதிருந்துக் கண்ணை எடுக்க முடியாமல் திணறி நின்றான். 

“சரியான உடும்பியா இருப்பா போலவே.” அவளுக்கு கேட்கும்படிக் கூறிவிட்டுச் சென்றான். அதைக் கேட்டு கயல்விழிச் சிரிக்க, மிருணாளினி கயலை  முறைத்தாள்.  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்