399 views

அத்தியாயம் 15

” அம்மா நான் நல்லா யோசிச்சுட்டு தான் சொல்றேன். கல்யாணத்துக்கு சம்மதம் மா. “

என்று சொல்லி விட , சிவசங்கரியும் தயக்கம் களைந்து, தரகரிடம் பேசி, மாப்பிள்ளை வீட்டாருக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார்.

சகோதரிகள் இருவரும் அறையில் பேசிக் கொண்டு இருந்த போது,
இளந்தளிர்,
” சுபா! பேசாம அன்னைக்கு உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது கோவர்த்தனன்ற ஒருத்தர், பொண்ணு இல்லன்னு சொல்லிடலாமா? “

இந்த நினைப்பு வந்ததற்கு காரணமே,
தங்களது அன்னை முழு சுதந்திரமும், எதையும் தயங்காமல் பேசலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள சொல்லி இருந்த போதும் அப்போதைய சூழலில் இவர்களால் உண்மையை சொல்ல முடியவில்லை. ஆனால், அதற்குப் பிறகான நாட்களிலும் சொல்லாமல் தவறு செய்கிறோம் என்பது உறுத்த ஆரம்பித்து விட , உடன் பிறந்தவளிடமும் இதைக் கேட்டு விட்டாள்.

” சொன்னா ரொம்ப கோபப்படுவாங்க க்கா “

” அதனால இதை மறைச்சுட்டே இருக்க முடியாதே சுபா! உனக்குமே உறுத்தி இருக்கும் தான? “

அவள் கூறுவதும் வாஸ்தவம் தான்! இவளுக்கும் உறுத்தத் தான் செய்தது. இத்தனைத் தாமதமாக கூறினால், அம்மாவிற்கு நிச்சயம் கோபம் அல்லது வருத்தம் ஏற்படுமே!

” ஆமா க்கா ” தலை கவிழ்ந்து இருந்தாள் சுபா.

அவளால் தானே அத்தனையும் நிகழ்ந்தது. அது மட்டுமின்றி, முந்திக் கொண்டு தமக்கையையும் அறிமுகப்படுத்தி வைத்து…! எல்லாம் தன்னால் என்ற ஞானோதயம் தற்போது தான் தோனறியதோ அவளுக்கு.

கண்களில்  கூட மெலிதாக கண்ணீர் உருவாகி விட,

“எப்ப சொல்லலாம் க்கா? “

” சுபா  நம்ம அம்மா  தானே! பொய் சொன்னோம். அதை மறைச்சதுக்குத் திட்டுவாங்க.இதுக்கு ஏன் அழுகுற? “

அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

” அம்மா திட்டுறது கரெக்ட் க்கா. ஆனா என்னால் எவ்ளோ சங்கடமான சுவிட்சுவேஷன் உருவாகுது பாரு. அப்போவே ஒழுங்கா சாப்பிட்டு இருக்கனும். எல்லாத்துலயும் விளையாட்டுத்தனம் “

உண்மையாகவே பெருத்த வருத்தம் சுபாஷினிக்கு.

” கூல் சுபா! இதெல்லாம் நினைச்சு இன்னும் ஃபீல் பண்ணாத. இப்படி நாம அலட்சியமாக இருக்கிற விஷயங்கள் தான் பிற்காலத்தில் இடையூறா வரும்.”

பிறகு,

“டின்னர் அப்போவே சொல்லிடலாம். மாடில தான சாப்பிடப் போறோம் ”
அப்போது சொல்ல முடிவெடுத்து விட,

அதற்கு சுபாஷினியும் ஒப்புதல் அளித்தாள்.

🌺🌺🌺🌺

நாளாக நாளாக தன்னைக் காட்டிலும் தன் மகன் அதிக சோர்விலும், முகச் சுருக்கத்துடனும் காணப்படுவதை சுமதி கண்ணுற்றார்.

” கோவர்த்தனா! நான் உங்கிட்ட அவசரப்பட்டு, கல்யாணப் பேச்சை எடுத்துட்டேனோ? “

என்று தளர்ந்த குரலுடன் கேட்டார்.

” அப்படி நான் எதுவும் சொல்லலையே -ம்மா! நீங்க ஏன் டயர்ட் ஆக பேசறீங்க? “

என்று அருகினில் அமர்ந்தான்.

” உன் முகமே களையா இல்லையே? “

அப்பா தங்களை விட்டுப் போன துக்கம் தாளாமல் இருந்தவருக்குத் , தான் மேலும் கஷ்டம் கொடுப்பது போல் தோன்ற,

” அம்மா! அதை விடுங்க. நான் நார்மல் ஆக இருக்கேன். நீங்க வழக்கம் போல சந்தோஷமா இருக்கனும். அப்போ தான் நானும் சந்தோஷமா இருக்க முடியும். அப்போ என்ன செய்யனும் ? நீங்க ஹேப்பி ஆக இருக்கனும் “

என்று அவரிடம் கூற,

” எனக்கு என்ன ப்பா ? நான் ஹேப்பி ஆகத் தான் இருக்கேன் “

” இல்ல ம்மா. நீங்க இன்னுமே கொஞ்சம் வாடிப் போய் தான் இருக்கீங்க. நான் தான் பாக்குறேனே! “

” உங்கள் அப்பாவோட நினைவுகள் தான் என்னை எப்பவும் சுத்திக்கிட்டே இருக்கு கோவர்த்தனா! “

அவரது விழிகள் தென்னவனின் புகைப்படத்தில் நிலைத்து நிற்க,

” அவரோட நினைவுகளால தான் நமக்கு மன உறுதியைக் குடுக்கும் மா “

” ஆக மொத்தத்தில் நீ ஏன் இப்படி இருக்க -ன்னு நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம , பேச்சை மாத்திட்ட “

மெல்லிய சிரிப்புடன் கூறினார்.

” எனக்கு எதுவும் ஆகல ம்மா. நீங்க சோர்வாக இருக்கிறதால என்னைப் பார்க்கும் போதும், உங்களுக்கு அப்படித் தோணுது ”

” அப்படியும் இருக்கும் ப்பா. நீயும் என்னைப் பத்தி நினைச்சுக் கவலைப்படாத ”

அவரும், மகனும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகப் பேசிக் கொண்டனர்.

🌺🌺🌺🌺🌺🌺

இரவில் கடைசிச் சப்பாத்தியைப் போட்டு முடித்துக் குரல் கொடுத்தாள் இளந்தளிர்.

” சுபா லாஸ்ட் சப்பாத்தி போட்டாச்சு. அம்மாகிட்ட சொல்லிட்டு அவங்களை மாடிக்குக் கூப்பிட்டுப் போ. நான் இதையெல்லாம் எடுத்துட்டு வர்றேன் “

சப்பாத்திகள் அடுக்கி வைத்தப் பாத்திரத்துடனும், தட்டுகளுடனும் மாடிக்குச் சென்றாள்.

” குருமாவும்  , தேங்காய்ச் சட்னியும் இருக்கு. சுபா நீ தேங்காய்ச் சட்னி தான சாப்பிடுவ. இளா நீ குருமா ஊத்திக்கோ “

சிவசங்கரி தனது தட்டிலும் உணவை எடுத்துக் கொள்ள,

இளந்தளிரும், சுபாஷினியும் வேகவேகமாக உணவுண்டு முடித்திருந்தனர்.

சிவசங்கரி உண்டு முடிக்கும் வரை காத்திருந்தவர்கள்,

” அம்மா! இவ மயக்கம் போட்டு விழுந்தால்ல ! “

என்று இளந்தளிர் சொல்ல,

” ஆமா. மறுபடியும் காலேஜில் மயங்கி விழுந்துட்டாளா? “

” இல்லை! இல்லம்மா! ஒரு தடவை தான் வேற எங்கயும், எப்பவும் அந்த மாதிரி நடக்கல ” என்று சுபாஷினிக் கூறிட,

” அப்பறம் என்ன? “

” அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்தது பொண்ணு – ன்னு சொன்னேன். அவங்க பொண்ணு இல்லை, பையன் மா “

பேரைத் தவிர்த்து விட்டு, ஆண் என்று மட்டும் கூறினாள்.

” என்னது! ” கோபத்துடன் சின்ன மகளைபார்த்தார் முறைத்துப் பார்த்தார்.

அந்தப் பார்வைக்குக் கட்டுப்பட்டு, அவரிடம் மன்னிப்பைக் கண்களாலேயே யாசித்தாள் சுபாஷினி.

” இளா உண்மையாவா? ரெண்டு பேரும் இதை இவ்ளோ நாளா மறைச்சுருக்கீங்க. லேட் ஆனதே மனசுப் பதறிடுச்சு. இப்போ இப்படி வேற நடந்திருக்கு “

மனம் கொதித்துப் போய் விடும் தானே அவருக்கு. அவர்களது பாதுகாப்பைப் பற்றி அத்தனை யோசிப்பவர், இதைக் கேட்டதும் உடைந்து போகக் கூடும் என்று மூத்தவளும் சிந்தித்தாளே!

” அந்தப் பையன்….”

” அவர் ரொம்ப நல்லவர் ம்மா. இவளை அப்படியே விட்டுடாம , ஹாஸ்பிடல்ல சேர்த்ததும் இல்லாமல், பில் பணமும் குடுத்துட்டாரு “

இளந்தளிர் கூற, இப்போதும் சுபாஷினி அழுகையை நிறுத்தவில்லை. தன்னிச்சையாக கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

” அந்தப் பையன் நல்ல மாதிரியா இருக்கப் போய், இவளையும் ஹாஸ்பிடல்ல சேர்த்து, உனக்கும் இன்ஃபார்ம் பண்ணி இருக்கான். இல்லன்னா!!!! சுபா!!!!! “

அதற்குப் பிறகு அவராலும் பேச இயலவில்லை.

பதைபதைக்கும் உள்ளத்துடனும், வேதனை மிகுந்த விழிகளுடனும் தாயைப் பார்க்கத் தனக்கும் அவ்வேதனைத் தொற்றிக் கொள்ள,

இளந்தளிருக்கும், சுபாஷினிக்கும் மனது உடைந்து போயிற்று.

சுபாஷினியின் அழுகை குறையாதிருக்க,

” நீ முடிஞ்சு போன விஷயம்! நீயும் நல்லா இருக்க! ஆனா இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும்.”

இளந்தளிரிடம்,

” நீ உடந்தையாக இருப்ப – ன்னு நினைக்கல ” 

” ம்மா ! அவ மயங்கினதைக் கேட்டே பதறிட்டீங்க. இதையும் சொன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்கன்னு தான் சொல்லல ம்மா “

என்று மன்றாட,

” மன்னிச்சுருங்க ம்மா! ” அவரின் மடியில் முகம் புதைத்து அழுது விட்டாள் சுபாஷினி.

பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள் என்று பெருமிதம் கொண்டால், இந்த செயல் அவரை ஏமாற்றி விட்டதாகவே கருதினார்.

போகப் போக சரியாகி விடும் ! இப்படி யோசித்து, விட்டு விட வேண்டுமோ!எளிதாக கடக்க, மன்னிக்க!!! அதெப்படி அவரால் முடியும் ?

சிவசங்கரிக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாயிற்றே!

மடியில் புதைந்து அழும் மகளின் தலையில் கை வைத்து,

” பொறுப்பாய் இரு. இனிமே இப்படி ஒரு காரியத்தை நான் கேள்விப்படக் கூடாது! “

” இளா! நீயும் மறைக்க முயற்சிப் பண்ணாத.இதுனால வீட்டுக்குள்ளயே அடைச்சு வைக்கப் போறதும் இல்லை,

அடிக்கப் போறதும் இல்லை.கவனமாக இருங்க ன்னு தான் இப்பவும் சொல்றேன்”

சுபாஷினி மெல்ல நிமிர்ந்து தாயைப் பார்க்க,

” இதையே மறுபடியும் செஞ்சிடாத. போய் தூங்குங்க “

அவரின் வார்த்தைகளின் படி, தங்கள் அறைக்குச் சென்றனர்.

” அழாதே சுபா ! அம்மா சொன்னதைக் கேட்ட தான? அவங்க மன்னிச்சு, மறக்கறது கஷ்டம் , ஆனா நாம நடந்துக்கிறதுல தான் இருக்கு. கோபப்படுவாங்க – ன்னு தெரிஞ்சு தானே விஷயத்தைச் சொன்னோம். ஆனால் உண்மையை சொல்லிட்டோம்ன்னு ஒரு நிம்மதி வருதுல்ல “

” நமக்கு நிம்மதி வரும் க்கா. அம்மா அவங்களோட நிலையை யோசிச்சா…! “

அழுகையினூடே திக்கித் திக்கித் தான் பேசினாள்.

” ம்ம்…! அவங்களை நாம நல்லபடியாக நடந்து தான் திடமாக வைக்கனும் சுபா! நீ தூங்கு “

அழுது அழுது தொண்டைத் தண்ணீர் வற்றிப் போயிருந்தவளுக்குக் குடிக்க நீர் கொடுத்து, உறங்கவும் வைத்தாள் இளந்தளிர்.

கூடத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த சிவசங்கரியைப் பெரியவளின் திருமணப் பொறுப்பு உறங்க விடவில்லை.

‘ எப்படி கல்யாணத்தைச் செய்து வைக்குப் போகிறோம்? ‘

முதல் முறையாக அதை நினைத்துத் தடுமாறிக் கலங்கிப் போனார்.

கோவர்த்தனன் தான் சின்ன மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளான் என்பதை அறியாத சிவசங்கரி,
அவனைத் தன் மூத்த மகளிற்கு மாப்பிள்ளையாகப் பார்த்துள்ளார்.

– தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்